13 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 13
மறுநாள் விடியும் முன்பே ஊருக்குக் கிளம்பியிருந்தான் நிரஞ்சன்.
அண்ணனை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு மீண்டும் படுத்திருந்த நித்திலன் லேசாகக் கண்ணசந்திருந்தான்.
அப்போது அவன் அவ்வப்போது மட்டும் எட்டிப் பார்க்கும் சமையலறையிலிருந்து பாத்திரங்களை உருட்டும் ஓசை கேட்டு லேசாக விழிகளைத் திறந்து பார்த்தான்.
செவ்வந்தி தான் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.
“என்னம்மா வேணும்?” என்று படுத்தபடியே கேட்டான்.
“பூரி செய்யலாம்னு இருக்கேன் நித்திலா. அதான் மாவு பிசைய ஏதுவான பாத்திரமா எடுக்கிறேன்…” என்றார்.
“இருக்கிறது நாலைந்து பாத்திரம். அதில் எதையாவது எடுத்து செய்ங்கமா…” என்றான்.
“இன்னும் கொஞ்சம் பாத்திரம் வாங்கி வச்சுருக்கலாம்ல நித்திலா? ஏன் எதுவுமே வாங்காம வச்சுருக்க? மளிகை சாமான், காய்கறிகளும் நேத்து நான் சொன்ன பிறகு தான் வாங்கியிருக்க. என்னவோ போ… வீட்டையே துடைச்சது போல வச்சுருக்க…” என்று சலித்துக் கொண்டார்.
“நான் வீட்டில் சமைக்கிறது இல்லையே மா? நீங்க வந்து போயிருந்தாலும் வாங்கி வச்சுருப்பேன். இந்த வீட்டுல ஒத்தை ஆளு நானு. எனக்கு எதுக்கு வீடு பூராமும் சாமான்? இப்பத்தான் நீங்க வந்துட்டீங்கல… இன்னைக்குப் போய்க் கொஞ்சம் பாத்திரம் வாங்கிட்டு வர்றேன்…” என்றான்.
“இன்னைக்கு வேலைக்குப் போகலையா பா?”
“மதியம் போனால் போதும்மா. பெர்மிஷன் போட்டுக்கிறேன். உங்களுக்கு வீட்டுக்கு என்னென்ன வாங்கணும்னு சொல்லுங்க. இன்னைக்கு வாங்கிடலாம்…”
அன்னையும் மகனுமாகப் பேசிக் கொண்டே ஆரம்பித்த அன்றைய விடியல் பொழுது நித்திலனுக்கு ரம்யமாக ஆரம்பித்தது.
ருசியாகச் சாப்பிட ஆசையில்லை என்று சொன்னாலும் சில மாதங்களுக்குப் பிறகு அன்னையின் கையால் செய்த பூரிக்கிழங்கை ஆசையுடன் உண்டான் நித்திலன்.
அதிலேயே மகன் தன் ஆசையை அடக்கி வைத்திருக்கிறானே தவிர அது அடங்கவில்லை. ஒளிந்து தான் இருக்கிறது என்று அந்த அன்னைக்குப் புரிந்து போனது.
மகனை வாஞ்சையுடன் பார்த்தவண்ணம் அவனுக்குப் பரிமாறினார் செவ்வந்தி.
“ரொம்ப நாள் பிறகு வீட்டு சாப்பாடு. அதுவும் உங்க கையால்… மனசுக்கும், வயிறுக்கும் திருப்தியா இருக்குமா…” என்றான் நித்திலன்.
“மதியத்துக்கும் உனக்குப் பிடிச்சதா செஞ்சிடலாம் பா…” என்று அவனின் தலையை லேசாகத் தடவி கொடுத்தார்.
சாப்பிட்டு முடித்ததும், அன்னை கேட்ட பொருட்களை எல்லாம் வாங்கி வந்து கொடுத்து அவர் கையால் மதிய உணவையும் உண்டு விட்டு அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது, “தம்பி…” என்ற அழைப்பு குரல் வாசலிருந்து கேட்டது.
“அங்கிள், வாங்க… உள்ளே வாங்க…” என்று வாசலில் நின்றிருந்த சபரிநாதனை வரவேற்றான்.
“இருக்கட்டும் தம்பி. இந்தாங்க உங்க மீதி பணம். துர்கா கொடுத்துட்டு வர சொன்னாள்…” என்று அவனுக்குத் தரவேண்டிய பணத்தை நீட்ட, நித்திலனின் முகம் மாறிப் போனது.
“நீங்களும் என்னைச் சங்கடப்படுத்தாதீங்க அங்கிள். ப்ளீஸ், உள்ளே வாங்க…” என்று அவன் அழைத்ததும் அதற்கு மேல் வாசலில் நிற்காமல் வீட்டிற்குள் வந்தார்.
“அம்மா, இவர் பக்கத்து வீட்டு அங்கிள். வருணாவோட தாத்தா…” என்று அவரை அன்னைக்கு அறிமுகப்படுத்தினான்.
செவ்வந்தி அவருக்கு வணக்கம் தெரிவிக்க, பதிலுக்குச் சபரிநாதனும் தெரிவித்தார் .
“பணத்தை வாங்கிக்கோங்க தம்பி…” என்று பணத்தை நீட்ட,
“மாசமாசம் கொடுத்திருக்கலாமே அங்கிள்? ஏன் இவ்வளவு அவசரமா?” என்றான்.
“தம்பி, நேத்து அவள் கோபத்தை நீங்களே பார்த்தீங்களே?” அவரும் அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார்.
“நான் எந்தத் தப்பும் செய்யலை அங்கிள். குட்டிம்மாக்கு நான் எதுவும் சொல்லிக் கொடுக்கலை. அவளா திடீர்ன்னு அப்படிக் கூப்பிடவும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். வேற எந்தத் தவறான எண்ணமும் இல்லை. அவங்க தான் புரிஞ்சுக்காம கோபப்பட்டுட்டாங்க…” என்றான் தவிப்புடன்.
எங்கே இவரும் தன்னைத் தவறாக நினைத்துவிட்டாரோ என்ற தவிப்பு அவன் குரலில்.
“உங்களை நான் நம்புறேன் தம்பி. ஆனா துர்கா கோபப்பட்டதையும் நீங்க தவறா எடுத்துக்கக் கூடாது. எல்லாரும் அவளைப் பத்தி தப்பா பேசுவதில் ஏற்கனவே உடைஞ்சி போயிருந்தாள். அதோட குழந்தையும் அப்பான்னு உங்களைக் கூப்பிடவும், எங்கே ஊர் இன்னும் தன்னைத் தவறா பேசுமோன்னு அவளுக்குப் பயம். அதான் அந்தக் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிட்டாள்…” என்றார் சங்கடமாக.
“அவங்க நினைப்பும் புரியுது அங்கிள். அதைத் தப்புன்னு சொல்ல முடியாது. ஊர் பேச்சுக்குப் பயந்து தான் நானுமே விலகிப் போனேன். அதில் குழந்தை ரொம்பத் தவிச்சுப் போயிட்டாள் போல. அதான் அப்படிக் கூப்பிட்டுட்டாள். ஆனா அதுக்காக இனி பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு…” என்றான் வருத்தமாக.
சபரிநாதனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மகளின் கோபத்தை மீறியும் அவரால் எதுவும் சொல்ல முடியாது. அதே நேரம் நித்திலனையும் தவறாக நினைக்கவில்லை.
அவர்கள் பேசியதை கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் செவ்வந்தி.
துர்காவை பற்றியும், வருணாவை பற்றியும் பேசும் போது மகனின் குரலில் ஒரு நெகிழ்வும் தவிப்பும் இருந்ததை மனதில் குறித்துக் கொண்டார்.
அவருக்கு ஏனோ துர்காதான் மகன் மனதில் இருப்பவளோ என்ற சந்தேகம் இன்றும் வந்தது.
“சரி தம்பி. ஏதேதோ நடந்திருச்சு. என்ன பண்றதுன்னு பார்ப்போம். கொஞ்ச நாளைக்கு ஆறப் போடுவோம்…” என்றவர் பணத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டார்.
தன் கையிலிருந்த பணத்தை வெறுமையாகப் பார்த்தான் நித்திலன்.
‘இந்தப் பணத்துடன் சிறிது ஒட்டிக் கொண்டிருந்த ஒட்டுதலும் இல்லாமலேயே போய்விட்டதா?’ என்று நினைத்தவனின் மனம் பாரமாகக் கனத்துப் போனது.
மனதின் பாரம் கண்களைக் கலங்க வைக்கும் போல் இருந்தது.
அன்னை தன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததால் கண்களை மூடி சமாளித்து விட்டு வேகமாக அறைக்குள் சென்றான்.
குழந்தை என்னதான் தன் வலியை மறைத்தாலும் தாய் அறியாமல் போவாரா என்ன? மகனின் தவிப்பு அவருக்குப் புரியத்தான் செய்தது.
அந்தக் குழந்தையின் மீது மகன் அதீத பாசம் வைத்து விட்டான் என்பதும் புரிந்தது.
குழந்தை மீது மட்டும் தானா? என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.
ஆனாலும் சரியாகத் தெரியாமல் ஒரு குழந்தையின் தாயுடன் மகனை இணைத்து அதற்கு மேல் அவரால் யோசிக்க முடியவில்லை.
அலுவலகம் கிளம்பும் சாக்கில் தன்னைச் சமாளித்துக் கொண்டு தயாராகி வந்த நித்திலன் அன்னையிடம் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினான்.
அன்னையுடன் இருந்தாலும் நித்திலன் முகத்தில் ஒருவித சோகம் இழையோடிக் கொண்டே இருந்தது.
துர்கா குழந்தையை அவன் பார்த்து விடக்கூடாது என்றே வழக்கமாக மகளைச் சிறிது நேரம் வெளியே விடுபவள் இப்போது விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.
அதில் நித்திலன் உடைந்து தான் போனான்.
தான் ஏதோ தீண்ட தகாதவன் போல் அவனை நினைக்க வைக்க, அவனின் மனதின் வலி மேலும் மேலும் கூடிப் போனது.
அவனாக விலகி இருந்த போது உண்டான வலியை விட, விலக்கி வைக்கப்பட்ட போது அதிக வலியை உணர்ந்தான்.
குழந்தை அவனைத் தூக்க சொன்ன போதெல்லாம் மனதை கல்லாக்கி கொண்டு கண்டு கொள்ளாமல் வந்தவனுக்கு, இப்போது அவளைப் பார்க்கவே முடியாது என்பது கொடூரமான தண்டனையாக அவனை உலுக்கி எடுத்தது.
அன்று இரவு கட்டிலில் உருண்டு கொண்டிருந்தவனை உறக்கம் சிறியதும் அண்டவில்லை.
அவனின் மனம் இரு பாகங்களாகப் பிரிந்து அவனைப் பிய்த்து தின்று கொண்டிருந்தது. ஒரு மனது குழந்தை வருணாவை நினைத்தும், இன்னொரு மனது துர்காவை நினைத்தும் துடியாய்த் துடித்தது.
விலகி இருக்கும் போது தான் விருப்பம் இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர ஆரம்பித்தான் நித்திலன்.
துர்காவிற்குத் தான் தகுதியானவன் இல்லை என்று அவளை நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும், அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவனின் மனதிற்குள் முதல் முதலாக நுழைந்த பெண்ணவள் ஆக்டொபஸாய் சுற்றி வளைத்து அவனை ஆக்கிரமித்தாள் என்றால் அது மிகையல்ல.
‘என் பிறப்பு ஏன் இப்படி ஆனது இறைவா? நான் எல்லாரையும் போலச் சாதாரண வாழ்க்கை தானே வாழ ஆசைப்பட்டேன். அந்தச் சாதாரண வாழ்க்கை கூட எனக்குக் கிடைக்காம நான் இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன செய்யப் போறேன்? ஏன் எனக்கு மட்டும் இந்தத் தண்டனை?’ வெகு நாட்களுக்குப் பின் கடவுளிடம் முறையிட்டான்.
தன்னிரக்கமும், கழிவிரக்கமும் போட்டி போட்டுக் கொண்டு அவனிடம் பிரதிபலித்தது.
ஏன் இந்த வாழ்க்கை வாழ்கிறோம் என்று தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டவன் அதற்கு மேலும் கட்டிலில் புரண்டு கொண்டிருக்க முடியாமல் எழுந்து அமர்ந்தான்.
இன்னொரு கட்டிலில் அவனின் அன்னை தூங்கிக் கொண்டிருக்க, விடி விளக்கின் ஒளியில் அவரைப் பார்த்து விட்டு, கட்டிலை விட்டு எழுந்து கதவை திறந்து வெளியே சென்றான்.
அவனுக்கு உடனே துர்காவையும் வருணாவையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால் பார்க்க முடியாதே! என்ற ஏக்கம் அவனைச் சூழ, வாசலை விட்டு இறங்கி நடந்தவன் துர்கா வீட்டுக் கதவை வெறித்துப் பார்த்தான்.
ஏனோ மூடிய கதவையும் தாண்டி உள்ளே இருக்கும் அவர்களைப் பார்க்க முயலுவது போல் அவன் கண்கள் ஊடுருவ தவித்தன.
அப்படிப் பார்க்க முடியாது என்று மூளை அறிவுறுத்தினாலும், மனம் அடங்க மறுத்து அவர்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்தது.
உள்ளே மகன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் போதே விழித்து விட்டிருந்தார் செவ்வந்தி.
அவன் தூங்க முடியாமல் தவிப்பதை யோசனையுடன் கண்களை மூடிக் கொண்டே கவனித்தவர், கதவை திறந்து வெளியே சென்றதும் எழுந்து அமர்ந்தார்.
சில நொடிகளில் வந்து விடுவான் என்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் நேரம் சென்று கொண்டே இருந்ததே தவிர, மகன் உள்ளே வரும் வழியைக் காணவில்லை என்றதும் எழுந்து கதவருகில் நின்று வெளியே எட்டிப் பார்த்தார்.
நித்திலன் கைகளைக் கட்டிக் கொண்டு கண்களில் ஏக்கத்தைச் சுமந்து துர்காவின் வீட்டுக் கதவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவருக்கு என்ன நினைப்பது என்றே தெரியவில்லை.
அர்த்தராத்திரியில் அந்த வீட்டுக் கதவை மகன் வெறித்துக் கொண்டிருப்பதைச் சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
மகனை அழைக்காமல் மீண்டும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டார்.
மேலும் சிறிது நேரம் கடந்த நிலையில் ஏமாற்றம் சுமந்த முகத்துடன் உள்ளே வந்த நித்திலன், கட்டிலில் அமர்ந்திருந்த அன்னையைப் பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டான்.
“என்னமா தூங்கலையா?” தன்னைச் சமாளித்துக் கொண்டு கேட்டான்.
“நீ எங்கேப்பா போன? ரொம்ப நேரமா காணோமே?” மகனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே கேட்டார்.
“அது… அது… ஹான்… பாத்ரூம் போனேன்மா…” என்று தடுமாறி பதில் சொன்ன மகனிடம் தான் பார்த்ததைக் கேட்டு விடலாமா என்று நினைத்தார்.
ஆனால் உடனே வேண்டாம் என்று முடிவு செய்தவர், “சரிப்பா… தூங்கு. திடீர்ன்னு முழிப்பு வந்து பார்த்தால் உன்னைக் காணோம். அதான் கேட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் படுத்துக் கொண்டார்.
அன்னை மேலும் எதுவும் கேட்கவில்லை என்றதும் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டு தானும் சென்று படுக்கையில் விழுந்து கண்களை மூடிக் கொண்டான்.
மறுநாள் நித்திலன் அலுவலகத்தில் வேலையாக இருந்த போது அவனின் அருகில் வந்தான் முரளி.
“இன்னைக்கு ஈவ்னிங் எதுவும் ப்ரோகிராம் வச்சுருக்கியா நித்திலன்?” என்று கேட்டான்.
“அப்படி எதுவும் இல்லையே முரளி. வீட்டில் தான் இருப்பேன்…”
“அப்ப சரி. அம்மா வந்திருக்கும் விஷயத்தை ஷாலினிகிட்ட சொல்லவும் அம்மாவை பார்க்கணும்னு சொன்னாள். இன்னைக்கு ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வரட்டுமா?”
“இதென்ன கேள்வி முரளி? தாராளமா வாங்க. அம்மாவும் இங்கே வந்ததில் இருந்து தனியா இருக்காங்க. சிஸ்டர் வந்தால் அம்மாவும் சந்தோஷப்படுவாங்க…” என்றான்.
“ஓகே நித்திலன், வீட்டுக்குப் போயிட்டு ஷாலினியை அழைச்சுட்டு வர்றேன்…” என்றான் முரளி.
நண்பனிடம் சொன்னபடி மாலை ஆறு மணியளவில் மனைவி குழந்தையுடன் நித்திலன் வீட்டிற்கு வந்தான் முரளி.
அவர்கள் வரும் விஷயத்தை அன்னையிடம் ஏற்கனவே நித்திலன் சொல்லியிருக்க, அவரும் அவர்களுக்கான சிற்றுண்டியைத் தயாரித்து வைத்து விட்டு ஆவலாக அவர்களை வரவேற்று உபசரித்தார்.
ஷாலினி அம்மா… அம்மா என்றழைத்து செவ்வந்தியுடன் நன்றாகப் பேச, அவரும் பாசத்துடன் அவளுடன் பேச ஆரம்பித்தார்.
முரளியும், நித்திலனும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
முரளியின் மடியில் அமர்ந்திருந்த அவனின் குழந்தை கீழே இறங்கி விளையாட ஆரம்பிக்க, “பேபி, மாமாகிட்ட வர்றீங்களா?” என்று குழந்தையை ஆசையுடன் தூக்கினான் நித்திலன்.
ஆனால் குழந்தையோ அவனின் கையில் இருக்காமல் புது ஆளை பார்த்தது போல் பிடிக்காமல் அழ ஆரம்பிக்க, “மாமாடா… உனக்கு என்ன வேணும்? பிஸ்கட் சாப்பிடுறியா? கடைக்குப் போவோமா?” என்று கொஞ்சினான்.
கடைக்கு என்றதும் குழந்தையின் அழுகை சட்டென்று நின்று போக, “கடைக்குப் போவாமான்னு கேட்டீங்கல? இனி உங்ககிட்ட ஒட்டிக்குவா அண்ணா. அது என்னவோ வீட்டில் இருப்பதை விட வெளியில் சுத்தினா எங்க பொண்ணு எவ்வளவு நேரம் வேணும்னாலும் சுத்திட்டே இருப்பா…” என்று ஷாலினி மகளைப் பற்றி அலுப்புடன் கூடிய பெருமையுடன் சொல்ல,
“அப்படியா பேபி? உனக்குக் கடைனா ரொம்பப் பிடிக்குமா? அப்போ போகலாம். நான் கூட்டிட்டு போயிட்டு வர்றேன் முரளி…” என்றான்.
“நானும் வர்றேன் நித்திலன். லேடிஸ் அவங்க பேசிட்டு இருக்கட்டும். நாம போயிட்டு வருவோம்…” என்று வெளியே செல்ல எழுந்த முரளி மனைவியிடம் ரகசியமாக ஏதோ ஜாடை காட்டினான்.
அவளும் புரிந்து கொண்ட பாவனையில் கண்சிமிட்டினாள்.
கணவன் மனைவி இருவரும் ஒரு முடிவுடன் தான் கிளம்பி வந்திருந்தனர்.
துர்கா திட்டிய மறுநாள் மதியத்திற்கு மேல் அலுவலகம் சென்ற நித்திலன் மறைக்க முயன்றும் அவனின் முகத்தில் மெல்லிய சோகம் இழைந்தோடியதை கண்டுகொண்ட முரளி என்னென்று விசாரித்தான்.
நித்திலனுக்கும் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருக்க, குழந்தை தன்னை அப்பா என்று அழைத்ததையும், துர்கா இனி குழந்தையைப் பார்க்க கூடாது என்று சொல்லியதையும், சற்று முன் தனக்குத் தர வேண்டிய பணத்தை முழுவதுமாகச் சபரிநாதன் தந்து விட்டுச் சென்றதையும் சொல்லி வருத்தப்பட்டான்.
மேலும் நித்திலனை பேச வைத்த முரளி குழந்தையின் மீது அவன் கொண்டுள்ள பற்றையும் தவிப்பையும் நன்றாகவே புரிந்து கொண்டான்.
கூடவே துர்கா என்னைப் போய்த் தப்பா நினைச்சுட்டாங்களே என்று புலம்பி தள்ளியிருந்தான்.
அன்றே மனைவியிடம் நித்திலனின் தவிப்பை பற்றிப் பேசியிருந்தான்.
முரளி கவனித்த வரை குழந்தைக்குச் சமமாகத் துர்கா பற்றியும் நித்திலன் பேசியதால் அவனுக்கும் நண்பன் துர்காவின் மீது விருப்பம் கொண்டுள்ளானோ என்று எண்ண வைத்தது.
அந்த எண்ணத்தை மனைவியிடமும் தெரிவித்து நித்திலனுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்றான்.
ஷாலினி தான் செவ்வந்தியிடம் பேசி பார்க்கலாம் என்ற ஐடியாவை சொல்ல, அதை நிறைவேற்ற இன்று கிளம்பி வந்து விட்டிருந்தனர்.
முரளியும், நித்திலனும் குழந்தையுடன் வெளியே கிளம்பியதும், “அண்ணாவுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கிறீங்களாமா?” என்று மெல்ல விசாரித்தாள் ஷாலினி.
அவளின் கேள்விக்குச் செவ்வந்தியிடம் முதலில் வந்தது தடுமாற்றம் மட்டுமே!
“அது… அது…” என்று இழுத்தவர், அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் தயங்கி நிறுத்தினார்.
அவரின் முகத்தில் சொல்ல முடியா விதமான தவிப்பு!
‘அது ஏன்?’ என்ற கேள்வியுடன், ‘தான் கேட்டது சாதாரணக் கேள்வி தானே? அப்படி என்ன கஷ்டமான கேள்வி கேட்டுவிட்டேன் என்று இவர் இவ்வளவு தடுமாறுகிறார்?’ என்று புரியாமல் செவ்வந்தியை வினோதமாகப் பார்த்தாள் ஷாலினி.