13 – இதயத்திரை விலகிடாதோ?
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 13
“ஹாய் நந்தினி…” என்றபடி தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள் யுவஸ்ரீ.
“வா யுவா, ஊருக்குப் போய்ட்டு வந்தாச்சா?” நந்தினி விசாரிக்க,
“போயிட்டு வந்துட்டோம் நந்தினி. இந்தா, அத்தை செய்து கொடுத்துவிட்ட முறுக்கு, ரிப்பன் பக்கோடா…” என்று ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனிகளைத் தோழிக்கு கொடுத்தாள்.
“கொடு… கொடு…” என்று ஆவலாக வாங்கி உண்டாள் நந்தினி.
“எங்களுக்கு எல்லாம் இல்லையா?” என அவர்கள் டீமில் இருக்கும் மற்ற இரு ஆண்கள் கேட்க, அவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.
“இதைத் தினேஷுக்கு கொடுத்திடு நந்தினி. சூர்யா எடுத்துட்டு போகமாட்டேன்னு சொல்லிட்டார். அதான் தினேஷுக்கும் சேர்த்து எடுத்துட்டு வந்தேன்…” என்று ஒரு கவரை அவளிடம் கொடுத்தாள்.
“கொடு, நான் கொடுத்திடுறேன். தினுவுக்கு முறுக்குனா ரொம்பப் பிடிக்கும்…” என்று வாங்கி வைத்துக் கொண்டாள்.
“யுவா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்று நந்தினி ஆரம்பிக்க,
“சொல்லு நந்தினி…” என்றாள்.
“இன்னைக்கு மதியம் எனக்கு அடுத்தப் பிராஜெக்டுக்கு இன்டர்வியூ இருக்கு யுவா. இது இரண்டாவது ரவுண்ட். முதல் ரவுண்டில் செலக்ட் ஆகிட்டேன்…” என்றாள்.
“வாவ்! கங்கிராட்ஸ் நந்தினி…” மகிழ்ச்சியுடன் வாழ்த்தினாள்.
“இரண்டாவது ரவுண்டில் தான் செலக்ட் ஆவேனா, இல்லையான்னு தெரியும். செலக்ட் ஆகிட்டால், அப்புறம் சொல்லு உன் வாழ்த்தை, வாங்கிக்கிறேன்…” என்றாள்.
“கூல்! செலக்ட் ஆகிடுவ நந்தினி…” என்றாள் யுவஸ்ரீ.
“அப்படித்தான் நானும் நம்பிட்டு இருக்கேன். சரி, நான் இன்டர்வியூக்கு ப்ரீபேர் பண்றேன் யுவா…” என்றாள்.
“ஓகே, நானும் நாளைக்கு நடக்கப் போகும் என் இன்டர்வியூக்கு பார்க்கிறேன்…” என்ற யுவஸ்ரீ தன் கணினியை உயிர்ப்பித்தாள்.
முதலில் அவளின் சொந்த மின்னஞ்சலை திறந்தாள்.
சூர்யாவிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது.
அதைத் திறந்து பார்க்க, அவள் படிக்கத் தேவையான டாக்குமெண்ட் அனுப்பி வைத்திருந்தான்.
‘வேலை விஷயத்தில் மட்டும் என் புருஷன் கன் மாதிரி இருப்பார்’ என்று தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
‘இந்த வேலையில் மட்டும் தானா?’ என்று அவளின் மனக்கண்ணின் முன் கண்சிமிட்டி சிரித்தான் அவளின் சூரியக்கண்ணன்.
‘நீ அந்த விஷயத்தில் மட்டும் கண்ணன் தான்டா புருஷா’ என்று கண்டிப்புடன் கொஞ்சிக் கொண்டாள்.
“என்ன யுவா என்னைக்கும் இல்லாம உன் முகம் இன்னைக்குப் பிரைட்டா இருக்கு?” தற்செயலாக அவளின் புறம் திரும்பிய நந்தினி வியப்பாகக் கேட்டாள்.
“எப்பவும் போல் தான் இருக்கேன் நந்தினி…” என்றாள் புன்சிரிப்புடன்.
“பார்த்தால் அப்படித் தெரியலையே?” நந்தினி சந்தேகமாகக் கேட்க…
“ஏய், போப்பா… நான் என்ன ரகசியமாக ஒளிச்சு வச்சுருக்கேன்? போய்ப் படிக்கிற வேலையைப் பார்…” என்று குறும்புடன் தோழியை அதட்டி விட்டு திரும்பிக் கொண்டாள் யுவஸ்ரீ.
சூர்யா தான் படிப்பதற்காகக் குறிப்புகளுடன் தயார் செய்து வைத்திருப்பான் போல. அவளுக்கும் புரியும் வகையில் குறிப்புகள் இருக்க, கணவனை மனதிற்குள் மெச்சி கொண்டே படிக்க ஆரம்பித்தாள்.
அன்றைய பொழுது அதில் செல்ல, மாலை இருவருமே ஒரே நேரத்தில் வீட்டிற்குச் சென்று சேர்ந்தனர்.
“காஃபி குடிக்கிறீங்களா சூர்யா?” அவன் உடையை மாற்றி விட்டு வந்ததும் கேட்டாள் யுவஸ்ரீ.
“என்னடி கொழுப்பா? நான் காஃபி குடிக்க மாட்டேன்னு தெரியும்ல? தெரிஞ்சிக்கிட்டே என்ன கேள்வி?” என்று கேட்டான்.
“தப்பா சொல்லாதீங்க சூர்யா. தலைவலி வந்தால் மட்டும் தான் காஃபி குடிப்பீங்க. அதைச் சரியா சொல்லுங்க…” என்றாள் நக்கலாக.
“உனக்குத் திமிரு ஏறிப் போய்த் தான்டி இருக்கு…” என்றவன் ஒரு சுயிங்கத்தை எடுத்து வாயில் போட்டு மென்றபடி தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, ரிமோட்டால் ஒவ்வொரு சேனலாக மாற்ற ஆரம்பித்தான்.
‘இனி இந்த வீட்டில் தானும் ஒருத்தி இருக்கிறோம் என்பதையே மறந்து விடுவான்’ என்று நினைத்தவள், அலுப்பான பெருமூச்சுடன் தனக்கு மட்டும் காஃபியைப் போட்டுக் கொண்டு அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.
தான் அருகில் அமர்ந்தால் பார்ப்பான் என்று எதிர்பார்க்க, அவன் அவள் பக்கமே திரும்பாமல் ஒரு ஆங்கிலப் படத்தைப் போட்டுவிட்டு அதில் ஆழ்ந்து போனான்.
“இன்னைக்கு நீங்க அனுப்பிய டாக்குமென்ட் படிச்சுப் பார்த்தேன். அதில் சில டவுட்ஸ் இருக்கு. எனக்கு எக்ஸ்பிளைன் பண்றீங்களா?” என்று கேட்டாள்.
“டாக்மெண்ட்ல எல்லாம் விளக்கமா தானே இருந்தது?” அவள் பக்கம் திரும்பாமலேயே பதில் சொன்னான்.
“இருக்குத்தான். ஆனா கொஞ்சம் எக்ஸ்பிளைன் செய்தால் எனக்கு இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கும்…” என்றாள்.
“ம்ப்ச்…” சூயிங்கத்தை மென்று கொண்டே எரிச்சலுடன் உச்சுக் கொட்டினான்.
“நான் ரொம்ப நாளா இந்தப் படத்தைப் பார்க்கணும்னு நினைச்சேன். இன்னைக்குத்தான் அதுக்கு நேரம் கிடைச்சுருக்கு. இப்ப வந்து டிஸ்டெப் பண்ற?” என்றான் சிடுசிடுப்பாக.
அவனின் எரிச்சலும், சிடுசிடுப்பும் அவளின் முகத்தைச் சுருங்க வைத்தது.
அதற்கு மேல் அவன் அருகில் அமர்ந்திருக்காமல் காஃபி கப்புடன் எழுந்து பால்கனிக்கு சென்றாள்.
நேற்றிலிருந்து மனதிலிருந்த இதம் இப்போது தொலைந்து போனது போல் இருந்தது.
‘அதானே, நேற்று ஒரு முறை தனக்கு ஆதரவாகப் பேசினால் உடனே அவன் மாறிவிடுவானா என்ன? தான் எதிர்பார்த்தது அதிகம்’ என்று தன்னையே கடிந்து கொண்டு கூடை ஊஞ்சலில் அமர்ந்து காஃபியைப் பருக ஆரம்பித்தாள்.
காஃபியின் சூடு லேசாக ஆறிப் போயிருந்தது.
‘ஆறிப் போனது காஃபி மட்டுமில்லை. என் மனமும் தான்’ என்று நினைத்துக் கொண்டாள்.
‘எதற்கு இந்தக் கழிவிரக்கம்? உன் புருஷன் இன்னைக்கு நேற்றா இப்படி நடந்து கொள்கிறான்? புதிதாக நீ கவலை கொள்ள?’ என்று மனம் கேள்வி கேட்க,
‘அதானே?’ என்று மனதிற்குப் பதில் சொன்னவள், தனது சோர்வை தூக்கிப் போட்டு விட்டு சுறுசுறுப்பாக எழுந்தாள்.
தனது மடிக்கணினியை எடுத்துக் கொண்டு மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்தவள் படிக்க ஆரம்பித்தாள்.
படிக்கும் போதே தனக்குத் தோன்றும் சந்தேகங்களை நோட் பேடில் டைப் செய்து வைத்துக் கொண்டாள்.
நேரம் சென்றதே உணராமல் அவள் அதில் மூழ்கி போக, “இங்கே என்ன பண்ற?” என்று பால்கனி வாசலில் இருந்து கேட்டான் சூர்யா.
“படிச்சுட்டு இருக்கேன். ஏன்?” நிமிர்ந்து பார்க்காமலேயே ஏதோ டைப் செய்து கொண்டே கேட்டாள்.
“சாப்பாடு செய்யலையா? எனக்குப் பசிக்குது…” என்றான்.
“பசிக்குதா? அதுக்குள்ளயா?” என்று கேட்டவள் கணினியிலேயே மணியைப் பார்த்தாள். மணி எட்டரை ஆகியிருந்தது.
“அம்மாடியோவ்! இவ்வளவு நேரம் ஆகிருச்சா?” என்று ஊஞ்சலிலிருந்து துள்ளி இறங்கினாள்.
“சாரிங்க, படிச்சுட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலை. சாப்பாடு செய்ய மறந்துட்டேன்…” என்று மடிக்கணினியை சோஃபாவில் வைத்து விட்டு, குடுகுடுவெனச் சமையலறைக்கு ஓடினாள்.
“இனிமே சமைச்சு நான் எப்ப சாப்பிட? நான் ஹோட்டலில் ஆர்டர் செய்றேன்…” என்றவன் அவளின் பதிலுக்குக் காத்திருக்காமல் உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஆரம்பித்தான்.
“அது வர அரைமணி நேரம் ஆகும். அதே நேரத்துக்குள் நான் சமைச்சுடுவேன்…” என்று யுவஸ்ரீ பதில் சொல்லி கொண்டே சமையலறையிலிருந்து வரும் முன் ஆர்டர் செய்திருந்தான்.
“நான் ஆர்டர் செய்துட்டேன். நீ போய் உன் படிக்கிற வேலையைப் பார்…” என்றவன் மீண்டும் சூயிங்கத்தை எடுத்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்துக் கொண்டே தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தான்.
“என்ன பழக்கம் இது? எந்த நேரம் பார்த்தாலும் அதை எடுத்து வாயில் போட்டு மென்னுட்டு இருக்கீங்க?” அவன் செய்கை பிடிக்காமல் முகத்தைச் சுளித்தாள்.
“உனக்கு முன்னாடியே சொல்லிருக்கேன். நான் எப்படி இருக்கேனா அப்படித்தான் இருப்பேன்னு. என்னை மாத்த முயற்சி செய்யாதே!” என்று முகத்தில் அடித்தது போல் சொன்னான்.
‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்று முனங்கிக் கொண்டவள் கோபத்துடன் மீண்டும் லேப்டாப்புடன் பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவனுக்குப் பதிலடி கொடுக்க இப்போது அவளுக்கு நேரமில்லை.
இன்று படித்தால் தான் நாளை ஓரளவாவது நேர்முகத்தேர்வை சரியாகச் செய்ய முடியும் என்பதால் மீண்டும் படிப்பில் ஆழ்ந்து போனாள்.
“சாப்பாடு வந்துருச்சு…” என்று சூர்யா குரல் கொடுத்ததும் தான் எழுந்து வந்தாள்.
பார்சலை பிரித்துப் பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு, அவனுக்குப் பரிமாறிவிட்டு, தானும் எடுத்துக் கொண்டு, வேகவேகமாக உண்ண ஆரம்பித்தாள்.
அவள் அவசரமாகச் சாப்பிடுவதை நிமிர்ந்து பார்த்தாலும் ஒன்றும் கேட்காமல் தன் உணவை உண்டான் சூர்யா.
அவன் சாப்பிட்டு முடிக்கும் முன் சாப்பிட்டு விட்டு எழுந்தவள், படிக்கச் சென்று விட்டாள்.
“படுக்க வாடி பொண்டாட்டி. எவ்வளவு நேரம் தான் படிப்ப? நான் இன்னொரு படமே பார்த்து முடிச்சிட்டேன்…” என்று பதினொரு மணி போல் சூர்யா அழைக்க,
“நான் படிக்கணும் சூர்யா. இன்னும் பாதிக் கூடத் தாண்டலை…” என்றாள்.
“ஒரே நாளில் அந்த டாகுமெண்ட்டை முடிக்க முடியாது. அப்படி முடிச்சாலும் மண்டையில் ஏறாது. அதை எல்லாம் கொஞ்ச கொஞ்சமா தான் புரிஞ்சுக்க முடியும். எழுந்து வந்து படு…” என்றான்.
“நான் படிக்காததில் இருந்து நாளைக்குக் கேள்வி கேட்டால் என்ன செய்வது?” என்று சோகமாகக் கேட்டாள்.
“ஸ்கிப் செய்! வேறென்ன பண்ண முடியும்?”
“என்ன சூர்யா, இப்படிச் சொல்றீங்க? நீங்க சொல்லி தந்திருந்தால் நான் ஈஸியா படிச்சிருப்பேன். ஆனா நீங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க…” என்றவளை முறைத்தான்.
“எனக்கு எல்லாம் பாடம் நடத்த தெரியாது. உனக்குத் தேவையானதை நீ தான் படிச்சுக்கணும்…” என்றவனை இப்போது அவள் முறைத்தாள்.
“அப்புறம் நீங்க எதுக்குப் புருஷன்னு இருக்கீங்க?” என்று பட்டென்று கேட்டு விட்டாள்.
ஆனால் அதற்கு அலட்டிக் கொள்ளாமல் அவளைப் பார்த்தவன், “புருஷன் வேலையைப் பார்க்கத்தான்…” என்றவன், அவள் அருகில் வந்து ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளை அப்படியே தூக்கினான்.
“ஐயோ! என்ன செய்றீங்க? லேப்டாப்…” என்று அவள் மடியில் இருந்த மடிகணினியைச் சரிய விடாமல் பிடித்துக் கொண்டே அலறினாள்.
“நான் என்ன வேலை பார்ப்பேன்னு கேட்ட இல்ல? என்ன வேலைன்னு சொல்ல வேண்டாமா?” என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்து பால்கனி கதவை காலால் மூடியவன், அவளை அப்படியே கட்டிலில் சென்று விட்டான்.
“பெரிய மன்மதன்னு நினைப்பு…” என்று நொடித்துக் கொண்டவள், அதுவரை தன்னுடன் பிடித்திருந்த மடிகணினியை ஓரமாக எடுத்து வைத்தாள்.
“ஆமாடி, நான் மன்மதன் தான்! இல்லைனு சொல்லிடுவியா நீ?” என்று கேட்டான்.
“ஆமா, நீங்க மன்மதன் இல்லை!” என்று சட்டென்று திருப்பி அடித்தாள்.
“கொழுப்புடி உனக்கு!” என்று அவள் அருகில் விழுந்தவன், இடையைச் சுற்றி கையைப் போட்டு அணைத்துப் பிடித்துக் கொண்டான்.
“நான் சாப்பாடு செய்யலை என்றதும் நீங்க சமைச்சு எனக்குப் போட்டீங்களா என்ன? எனக்குக் கொழுப்பு கூட? ஹோட்டலில் தானே வாங்கிக் கொடுத்தீங்க? அதான் கொழுப்பாகிப் போச்சு…” என்றாள் அவனுக்குச் சளைக்காமல்.
“ஆமாடி, உனக்கு நான் சமைச்சு வேற போடுறேன். அதுக்கு வேற ஆளைப் பாரு…” என்றான்.
“புருஷன் நீங்களே எனக்குச் சமைச்சு கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்க. பின்ன வேற யாரு எனக்குச் சமைச்சுக் கொடுப்பா… தெருவுல போறவனா?” என்று பதிலுக்கு வாயடித்தவளின் பேச்சை காதில் வாங்காமல் அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்து வாசம் பிடித்தான்.
“ம்ப்ச், தள்ளுங்க…” என்று அவனின் பிடரி முடியைப் பிடித்துப் பின்னால் தள்ளி விட்டாள்.
“ஏன்டி?” என்று மீண்டும் வாசம் பிடிக்க முயன்றவனை முழு மூச்சாகத் தள்ளியவள்,
“எனக்கு வேலை இருக்கு…” என்றாள்.
“மணி என்ன தெரியுமா? நைட் பதினொன்னு ஆகிருச்சு. இப்ப என்ன வேலை?”
“இன்னும் கிச்சனை கிளீன் பண்ணலை, பண்ணனும்…”
“சமைக்காத கிச்சனில் என்ன கிளீன் பண்ண போற?”
“நாம சாப்பிட்ட பிறகு கிளீன் பண்ணவே இல்லை. அதை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு வர்றேன்…”
“காலையில் பண்ணலாம்…” என்றவன், அவளைச் சுற்றி வளைத்தான்.
“நாளைக்கும் என் வேலையை நான் தான் பார்க்கணும். நீங்க பார்க்கப் போறது இல்லை சூர்யா…” என்றாள் பட்டென்று.
“ஆமா, நீ தான் பார்க்கணும். அதை நாளைக்கே பார்…” என்றவனைக் கண்டு அவளுக்குச் சுறுசுறுவெனக் கோபம் ஏறியது.
அனைத்திற்கும் தான் வளைந்து கொடுத்து விட வேண்டும். ஆனால் அவன் சிறு துரும்பை கூட அசைக்க மாட்டான்.
‘ச்சே, என்ன வாழ்க்கை இது?’ என்று எப்போதும் போல் சலித்துக் கொண்டாள்.
அவன் பக்கமிருந்து எதுவும் சரியாக நடந்து கொள்ள மாட்டான். ஆனால் இரவு ஆனதும் எல்லாம் சரியாக நடக்க வேண்டுமா? என்ற எரிச்சல் என்றும் இல்லாமல் இன்று அதிகம் தோன்றியது.
இன்னும் படித்து முடிக்காதது, அதற்கு அவனும் உதவி செய்யாதது அவளை ஒருவித அழுத்தத்திற்குள் தள்ளியிருந்தது. அதோடு நாளைய நேர்முகத்தேர்விலும் தேர்வாகவில்லை என்றால் என்ன செய்வது என்ற கவலை மனம் நிறைய இருந்த நிலையில் அவனின் அருகாமையை இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“ரொம்பப் பண்ணாதேடி! என்னவோ எல்லாத்தையும் தலையில் தூக்கி வச்சு சுமக்கிறவளாட்டும் அலட்டிக்கிற?” என்றான்.
“இல்லையா பின்ன? நான் தான் வீட்டில் எல்லா வேலையும் பார்க்கிறேன். நீங்களா பார்க்கிறீங்க? நேரா நேரத்துக்குச் சாப்பிடுவதும், வேலைக்குப் போவதும், இதோ இப்படி இருப்பதும் மட்டும் தானே நீங்க பார்க்கிறீங்க…” என்று அவன் தன்னை ஒட்டிக் கொண்டு படுத்திருப்பதையும் சுட்டிக் காட்டி பட்டென்று சொல்லி விட்டாள்.
மனதின் பல நாள் உறுத்தலை சொல்லியே விட்டிருந்தாள்.
அதுவரை அவளின் இடையில் இருந்த அவனின் கை தன்னிச்சையாக விலகியது.
விடிவிளக்கின் ஒளியில் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
அவன் சொன்னதை அவனுக்கே திருப்பி அடித்தவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
“என்னடி இப்படிப் பேசுற?” எனக் கேட்டான்.
“உண்மையைத்தானே சொன்னேன்? அதோட என் புருஷன் தான் சொன்னார், அப்பப்போ திருப்பிக் கொடுத்திடணும்னு…” என்று கெத்தாகச் சொல்லிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்றாள்.
அவள் அப்படிச் சுட்டிக் காட்டியது அவன் முகப் பாவனையை மாற்றியிருந்தது.
எப்போதும் ‘ஆமாம், அப்படித்தான்!’ என்பவன் தான். ஆனால் இன்று அவனையும் அவள் பேச்சு ஏதோ ஒரு வகையில் தாக்கியிருந்தது. அதிலும் அடிக்கடி அவள் அப்படிச் சொல்லிக் காட்ட, எப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்பவனுக்கு இன்று அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ஆனால் அவனை நின்று கவனிக்காமல், சாப்பிட்ட தட்டை கூட எடுத்து வைக்காமல் அவன் விட்டுச் சென்றிருந்த தட்டை எடுத்து கழுவும் இடத்தில் போட்டாள்.
அவள் சாப்பிட்ட தட்டை கையைக் கழுவும் போதே கழுவி வைத்திருந்தாள். அவனும் அப்படிக் கழுவவில்லை என்றாலும் ‘கழுவும் இடத்தில் எடுத்து போட்டிருக்கலாமே? அதைக் கூட அவன் செய்யவில்லையே’ என்று முனங்கிக் கொண்டே டைனிங் டேபிளில் இருந்ததை ஒதுங்க வைத்தாள்.
சிங்கில் கிடந்த பாத்திரங்களைக் கழுவி முடித்து அவள் அறைக்குள் வந்த போது, கண்கள் மேல் கையை வைத்து மறைத்துக் கொண்டு படுத்திருந்தான் சூர்யா.
அவனுக்கு அந்தப் பக்கம் படுத்தவள், அவனைக் கண்டு கொள்ளாமல் அவனுக்கு முதுகு காட்டி திரும்பிப் படுத்தாள் யுவஸ்ரீ.
அடுத்த நிமிடம் அவள் தோளைப் பிடித்துப் பட்டென்று தன் பக்கம் திருப்பினான் சூர்யா.
“ஹேய், என்ன?” என்று பதறிப் போனாள் யுவஸ்ரீ.
“என்ன நொன்ன? என்னடி வாய் நீளுது. அப்ப என்ன சொல்லிட்டு போன, திரும்பச் சொல்லு…” என்றான் கோபத்துடன்.
“ஏன் அப்ப நான் சொல்லிட்டு போன போதே உங்க காதில் சரியா விழுந்ததால் தானே இப்ப கோபமா இருக்கீங்க? அப்புறம் என்ன ஒன்னும் கேட்காதது போல் திரும்பச் சொல்லுன்னு சொல்ல வேண்டி இருக்கு…” என்று கேட்டாள்.
“நீ ரொம்பப் பேசுற யுவா… நான் ஒரு வேலையும் செய்யாமல் உன் கூடப் படுக்கிறதுக்கு மட்டும் வர்றேன்னு குத்தி காட்டுறியா?” என்று கடுமையாகக் கேட்டான்.
யுவஸ்ரீ அமைதியானாள். அது தானே உண்மை! இல்லையென்று அவளால் எப்படிச் சொல்ல முடியும்?
கணவனாக நடந்து கொள்வது என்றால் இது மட்டும் தானா? என்று கேள்வி எழுந்து நாவு வரை துடித்தது.
ஆனால், ஆமாமென்று சொன்னால் இன்னும் தான் அவன் கோபம் ஏறும் என்று தெரியும்.
அவன் கோபத்தை ஏற்றிவிட்டுச் சண்டை போடும் மனநிலையில் அவள் இல்லை. நாளைய நேர்முகத் தேர்வை நினைத்து ஏற்கெனவே கவலையில் இருந்தாள்.
அதோடு இவரிடமும் மல்லுக்கட்டினால் நாளை மொத்தமாக ஊற்றிக் கொள்ளும் என்று நினைத்தவள் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
விளையாட்டு பேச்சு போல் அவள் பட்டென்று சொல்லிவிட்டிருந்தாலும், இத்தனை நாட்களும் அவள் மனதில் உறுத்தி கொண்டிருந்ததைத்தான் கேட்டாள். அதனால், தான் சொன்னதற்காக அவளுக்கு வருத்தமெல்லாம் இல்லை.
இனியாவது தன் மனதை கணவன் புரிந்து கொள்ளட்டுமே என்று தான் தோன்றியது.
ஆனாலும் இன்னும் இன்னும் சொல்லி அவனைக் குத்த மனதில்லாமல் வாயைத் திறக்கவே இல்லை அவள்.
அவளின் அமைதியே அவனுக்கான விடையைச் சொல்லிவிட, அவனின் முகம் இன்னும் இறுகியது.
“புருஷன் பொண்டாட்டினா இதெல்லாம் தான் இருக்கும். அது கூட உனக்குப் புரியாதா? என்னவோ பெரிய இவ மாதிரி பேசுற?” என்று கடுகாகப் பொரிந்தான்.
“நான் பெரிய இவள்னு நான் எப்ப சொன்னேன்? நான் பெரிய இவ எல்லாம் கிடையாதுங்க. ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனுஷி தான். அதோடு புருஷன் பொண்டாட்டினா படுக்கை மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் தாண்டி நிறைய இருக்கு.
ஆனா அதைப் புரிந்து கொள்ளும் தன்மை தான் உங்களுக்கு இல்லை. இதுக்கு மேல பேசுவதற்கு எனக்கு நேரமுமில்லை. நான் தூங்கணும். அப்போதுதான் காலையில் சீக்கிரம் எழுந்து கொஞ்சம் படிக்க முடியும்…” என்றவள், அவனுக்கு முதுகை காட்டிப் படுத்துக் கொண்டாள் யுவஸ்ரீ.
அவளின் முதுகையே வெறித்துப் பார்த்தான் சூர்யா.
விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு, எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து முடிந்திருந்தது.