12 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 12

“என்னடி பண்ற?” மனைவி வயிற்றில் குறுகுறுப்பூட்ட, சிலிர்ப்புடன் கேட்டான் சூர்யா.

“ஏன், நான் உங்க மடியில் படுக்கக் கூடாதா?” தலையைத் திருப்பி அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

அவள் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி வேறு கேட்க, அவளின் அழகில் அவன் மனம் தடம் புரண்டது.

“இப்படி எல்லாம் நீ படுக்க மாட்டியே?” யோசனையுடன் கேட்டாலும், அவள் தன் மடியில் படுத்திருப்பது பிடிக்கவே செய்தது.

“சும்மா இன்னைக்குப் படுக்கணும் போல் இருந்தது. வேண்டாமென்றால் சொல்லுங்க. எழுந்து விடுகிறேன்…” என்று அவள் வாய் தான் சொன்னதே தவிர அதைச் செயல்படுத்த சிறிதும் முயலவில்லை.

இன்னும் அழுத்தமாகத்தான் அவன் மடியில் தலையை வைத்துக் கொண்டாள்.

அதை உணராதவன், அவள் எழுந்து கொள்ளப் போகிறாளோ என்று நினைத்து, அவள் தோளில் கை வைத்து அழுத்தினான்.

“பேசாம படுடி! என்னவோ அதிசயமா இன்னைக்குத்தான் படுத்திருக்க. உடனே எழுந்து கொள்ளப் போற…” என்று கடிந்து கொண்டவன், நண்பர்களுடன் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததை அந்த நொடி மறந்து தான் போனான்.

கைபேசியைப் படுக்கையில் ஓரமாக வைத்துவிட்டு மனைவியின் முகத்தை ஆசையாகப் பார்த்தான்.

அவளும் காதலுடன் அவனின் முகம் பார்த்தாள்.

அவள் கண்களில் காதலை கண்டவனுக்கு உன்மத்தமானது.

“என்னடி பார்வை எல்லாம் ஒரு தினுசா இருக்கு?” என்று கேட்டவன் விரல்கள் அவளின் கன்னத்தை நிமிட்டியது.

“தினுசாவா? அப்படினா?” அறியாபிள்ளை போல் கேட்டு வைத்தாள்.

“இன்னைக்கு உன் பேச்சும் ஒரு தினுசா தான்டி இருக்கு…” என்றவன் விரல்கள் இப்போது அவளின் ஈரம் சுமந்த இதழ்களை வருட ஆரம்பித்தன.

அவ்வருடலில் அவளின் பேச்சும் நின்று போனது.

எதையோ எதிர்பார்ப்பவள் போல் அதுவரை திறந்திருந்த இமைகளை மூடிக்கொண்டாள்.

அவளின் இதழ்கள் லேசாகத் துடித்தன.

அவளின் எதிர்பார்ப்பு அவனுக்கும் புரிந்து போனதோ? அவள் முகம் நோக்கி குனிந்தான் சூர்யா.

அப்போது பேருந்து லேசாகத் தூக்கிப் போட, மென்மையாக முத்தம் பதிக்கக் குனிந்தவன் அப்படியே அவளின் முகத்தின் மீது விழுந்து வன்மையாக மனைவியின் இதழ்களைக் கவர்ந்து கொண்டான்.

“ம்ம்ம்…” கணவனின் வன்மையை எதிர்பார்க்காமல், அவனிடமிருந்து தன் இதழ்களைப் பறித்துக் கொள்ள முயன்றாள்.

ஆனால் அதே நேரம் அழுத்தமாக அவளின் இதழ்களில் இதழ் பதித்து விட்டு தானே முகத்தை விலக்கிக் கொண்டான் சூர்யா.

“என்ன இது இவ்வளவு முரட்டுத்தனம்?” தன் இதழ்களை நாவால் வருடிக் கொண்டே கேட்டாள்.

இப்போது அவன் மேல் அவளுக்குக் கோபப்பட முடியவில்லை. அவளே எதிர்பார்த்தாள் என்பதால் அந்த நேர அவளின் மனநிலைக்கு அவனின் முரட்டுத்தனம் தேவையாகவே இருந்தது.

“இப்ப என்னடி குறைந்து விட்டது? இதுக்கு முன்னாடி உனக்கு நான் இப்படி முத்தம் கொடுத்தது இல்லையா என்ன?” அவள் கோபத்துடன் கேட்கிறாளோ என்று நினைத்துச் சிடுசிடுப்பாகவே கேட்டான்.

“ஷ்ஷ்! நாம பஸ்ஸில் இருக்கோம். மெதுவா பேசுங்க…” என்று மென்மையாகக் கடிந்து கொண்டாள்.

“அப்போ இப்படித்தான் பேசணும்…” என்று அவள் காது அருகில் குனிந்து மெதுவான குரலில் பேசினான்.

பேசினானா? சீண்டினானா?

ஆம்! சீண்டல் தான். காது மடலில் முத்தமிட்டு முத்தமிட்டல்லவா ரகசியம் பேசினான்.

“ம்ம்… சூர்யா…” என்றாள் சிணுங்கலாக.

அவளின் சிணுங்கல் கூட அவனுக்கு அதிசயமாகத்தான் இருந்தது.

சீண்டலை விட்டு காது மடலில் அழுத்தி முத்தம் பதித்தான்.

“அச்சோ! என்ன இது?” என்றவள் அவன் மடியிலிருந்து தலையை விலக்கி படுக்கையில் நேராகப் படுத்துக் கொண்டாள்.

“ஏய், என்னடி? மடியில் படு!” ஏமாற்றத்துடன் அதட்டினான்.

“நீங்களும் படுங்க. அப்படியே பேசிட்டு இருக்கலாம்…” என்றாள் யுவஸ்ரீ.

“ஏன், அதை மடியில் படுத்துட்டே செய்ய முடியாதா?”

“பஸ் ரொம்பக் குலுங்குதுங்க. உங்களுக்கு முதுகு வலிக்கும். படுங்க…” என்றாள்.

தன் மடியிலிருந்து எழுந்து விட்டாள் என்ற கோபத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்.

“யோவ்! ரொம்பத்தான் பண்ணாத. இப்ப படுக்கிறயா இல்லையா?” என்றாள்.

“ஏய், என்னடி? புருஷனையே அதட்டுற?”

“ஏன்? புருஷன் மட்டும் தான் பொண்டாட்டியை அதட்டலாமோ? பொண்டாட்டி புருஷனை அதட்ட கூடாதோ?” உதட்டை சுளித்துக் கொண்டு கேட்டாள்.

“இன்னைக்கு உனக்கு என்னமோ ஆச்சுடி…” என்று அவளின் சுளித்த உதடுகளைச் சுண்டி விட்டான்.

அவளோ அவனின் கையைப் பிடித்து இழுக்க, அவளருகில் சரிந்து படுத்தான்.

அவன் படுத்ததும் அவனின் தோளில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

இதையும் அவன் எதிர்பார்க்கவில்லை.

எப்போதும் அவன் தான் அவளை ஒட்டி உரசிக் கொண்டு தன்னிடம் இழுப்பான்.

அதுவும் சமீபமாக அவன் அவள் அருகில் சென்றாலே மரக்கட்டை போல் தான் இருப்பாள்.

ஆனாலும் அவன் எதையும் பொருட்படுத்தாமல் அவளிடம் மூழ்கிப் போவான்.

இன்று அவளே இணக்கமாக இருப்பதில் அவன் மனம் மயங்கித்தான் போனது.

இன்று அவளுக்காக அவன் ஒன்றை செய்தான் என்பது தான் அவளின் மாற்றத்திற்குக் காரணம் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவனின் சிறு அனுசரணையான செய்கைக்குக் கூட அவள் மனதளவில் ஏங்கி தான் போயிருந்தாள்.

அது சிறிதாவது நிறைவேறிய மகிழ்ச்சியைத்தான் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள் என்று அவனுக்குப் புரியவே இல்லை.

புரிந்திருந்தால் அவள் மனதும் அவனுக்குப் புரிந்திருக்கும்.

ஆனால் உடலளவிலான உரசலை தான் அவன் பார்த்தானே தவிர, மனைவியின் மனதிற்கு நெருக்கமாக மாறுவதைப் பற்றிச் சூர்யா யோசிக்கவே இல்லை.

“நேத்து எல்லாம் பக்கத்தில் வராமல் ஆட்டம் காட்டின. இன்னைக்கு என்னடி பொண்டாட்டி ரொமான்ஸ் பொங்குது?”

அவளின் தலையில் நாடியை வைத்து அழுத்திக் கொண்டே கேட்டான்.

“இது ரொமான்ஸ்னு உங்களுக்கு யார் சொன்னா?” நமட்டு சிரிப்புடன் கேட்டாள்.

“இது அநியாயம் பொண்டாட்டி. அப்போ நீ எதைத்தான் ரொமான்ஸ்னு ஒப்புக் கொள்வ?” சலித்துக் கொண்டான்.

“அதெல்லாம் உங்களுக்குச் சொன்னால் புரியாது…”

“நீ சொல்லு, எனக்குப் புரியுதா இல்லையான்னு பார்ப்போம்…”

“அதெல்லாம் விளக்கி சொல்லாமலே விளங்கிக் கொள்ளணும்…”

“விளங்கின மாதிரி தான்…” நொடித்துக் கொண்டான்.

“ஹா…ஹா…” என்று அவனுக்கு மட்டும் கேட்பது போல் சிரிக்க ஆரம்பித்தாள்.

“உனக்குக் கொழுப்பு கூடிப் போயிருச்சுடி. உன் ரொமான்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் என் ரொமான்ஸ் இதுதான்…” என்றவன் அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் இதழ்களில் அழுத்தமாகத் தன் அதரங்களைப் பதித்தான்.

சில நொடிகள் அம்முத்தத்தில் மயங்கி தான் போனாள் பெண்ணவள்!

பின் இருக்கும் இடம் புத்தியில் உறைக்க, மெல்ல தன் இதழ்களை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள்.

“பக்கத்தில் வாடி பொண்டாட்டி…” என அவள் இடையைச் சுற்றி கையைப் போட்டு தனக்கு நெருக்கமாக இழுத்தான்.

அவனின் கைகள் அத்துமீறவும் ஆரம்பித்தன.

“இங்கே வேண்டாம் சூர்யா…” என்று அவனின் கைகளை அசையவிடாமல் பிடித்துக் கொண்டாள்.

“எனக்கு வேண்டும். ஒரு வாரமா காய்ந்து போய் இருக்கேன்…” என்றவன் மீண்டும் அவளின் இதழில் கதை எழுத முயன்றான்.

“ஏங்க, நாம பஸ்ஸில் இருக்கோம். அது ஞாபகம் இருக்கா இல்லையா?” அவனைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

“ஸ்கிரீன் எல்லாம் மூடித்தானே இருக்கு…” அவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டே முனங்கினான்.

“நோ சூர்யா, யாராவது லேசா ஸ்கிரீனை விலக்கினால் கூட மானம் போயிரும். இப்ப தூங்கலாம். காலையில் நாம வேலைக்கு வேற போகணும். காலையில் வீட்டுக்குப் போனதும் நீங்க கேட்காமயே கிடைக்கும்…” என்றாள் யுவஸ்ரீ.

“பொய் சொல்லாதேடி. வீட்டுக்குப் போனதும் வேலைக்குப் போகணும்னு பக்கத்தில் கூட வர மாட்ட…” என்றான் அவளை இந்த விஷயத்தில் நன்றாக அறிந்தவனாக.

“இல்ல, நான் பேச்சு மாற மாட்டேன். ப்ளீஸ் சூர்யா!” என்று கெஞ்சலாகச் சொன்னவளை நம்பாமல் பார்த்தான்.

“உன்னை எப்படி நம்புவது?”

“நான் பேச்சு மாற மாட்டேன் என்பதற்கு இது தான் சாட்சி…” என்றவள், கணவனின் அதரங்களின் மீது அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்து அவனை நம்ப வைக்கும் முயற்சியில் இறங்கினாள்.

மனைவியாக இட்ட முத்தத்தில் அவனின் பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கித்தான் போனது.

அழுத்தி விட்டு விலக முயன்றவளை விடாமல் பிடரியில் கை வைத்து தன்னுடன் அழுத்திக் கொண்டான்.

ஒட்டிக் கொண்ட இதழ்கள் பிரிய வெகு நேரமானது.

பிரிந்த போது இருவருமே பலமாக மூச்சு வாங்கினர்.

மீண்டும் மனைவியின் இதழ்களைக் கவர முயன்றவனை இருவரின் இதழ்களுக்கும் இடையே கையை வைத்து தடுத்து நிறுத்தினாள்.

“போதும் சூர்யா. காலையில் வீட்டுக்குப் போனதும்…” என்றாள்.

“போடி, காலையில் வரை நான் எப்படித் தாங்க போறேன்னு தெரியலை. சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டுட்டு, இப்ப தடுத்துட்டு இருக்க…” என்றான்.

தடுக்கின்றாளே என்ற ஏமாற்றம் இருந்ததே தவிர, கோபமோ, எரிச்சலோ அவனின் குரலில் இல்லாததை உணர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், கணவனின் தோளில் தலையை வைத்து அமைதியாகக் கண்களை மூடிக் கொண்டாள்.

அவனும் மனைவியை லேசாக அணைத்துக் கொண்டு நித்திரையைத் தழுவ முயற்சி செய்தான்.

காலை ஆறு மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்து கதவை மூடிய அடுத்த நொடி மனைவியை ஆசையுடன் தழுவி கொண்டான் சூர்யா.

யுவஸ்ரீயும் எந்த மறுப்பும் இல்லாமல் அவன் கைகளில் அடைக்கலமானாள்.

“என்னைத் தவிக்க விட்டு வேடிக்கை காட்டின இல்ல… இரு, உனக்குத் தண்டனை தர்றேன்…” என்றவன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.

“யாரு, நானா வேடிக்கை காட்டினேன்? நீங்க தான் பஸ்ஸில் இருக்கோம்னு கூட நினைக்காம இல்லாத சேட்டை எல்லாம் செய்ய நினைச்சீங்க…” என்று குறும்புடன் சொன்னவள், கணவனின் கழுத்தை சுற்றி கைகளைப் போட்டுக் கொண்டாள்.

“நீ தான்டி அதுக்குக் காரணம்…”

“நான் எல்லாம் நல்ல பிள்ளையாத்தான் இருந்தேன்…”

“யாரு? நீ நல்ல பிள்ளை?” கையில் இருந்தவளை முறைத்தான்.

“ஆமா. அது சரி… என்னை இப்ப எங்கே தூக்கிட்டு போறீங்க? எனக்கு வேலை இருக்கு. இறக்கி விடுங்க. வேலைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி சமைக்கணும்…” இதழோரம் துள்ளிக் கொண்டு வந்த நமட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டே சொன்னாள்.

“அடியேய்!” என்று பல்லை கடித்தவன், “முதலில் நான் உன்னைச் சமைக்கிறேன். அதுக்குப் பிறகு நீ என்ன வேணுமானாலும் போய்ச் செய்…” என்றவன் படுக்கையில் சென்று தான் அவளை விட்டான்.

அடுத்த நொடி அவளை ஒரு வார்த்தை கூடப் பேச விடாமல் ஆக்கிரமித்தான்.

கணவன், மனைவிக்கு இடையே இரவு பேருந்தில் ஆரம்பித்த கண்ணாமூச்சி ஆட்டம் வலுப்பெற்று ஒருவரை ஒருவர் கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருந்தனர்.

எட்டு மணி ஆன போது அப்படியே கண்ணயர்ந்திருந்த யுவஸ்ரீ கண்விழித்தாள்.

அவளை அசைய கூட விடாமல் அணைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் சூர்யா.

அவனின் முகத்தைப் பார்த்ததும் அவளின் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது.

‘நீங்க எப்பவும் நேத்து மாதிரியே இருந்தால் நான் ரொம்பச் சந்தோஷப்படுவேன் சூர்யா. நான் உங்ககிட்ட எதிர்பார்த்தது இது தான். எனக்கான சிறு செய்கை உங்க பக்கமிருந்து வரவே செய்யாதோன்னு நான் ரொம்பப் பயந்து போயிருந்தேன் சூர்யா.

ஆனால் நேத்து நீங்க என்னைத் திட்டினாலும், எனக்காகப் பேசினீங்க பார்த்தீங்களா… அந்த நொடி எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அந்த உணர்வை என்னால் வார்த்தையில் எல்லாம் சொல்ல முடியாது சூர்யா…’ என்று மனதிற்குள் கணவனிடம் உரையாடியவள், முகத்தில் விழுந்திருந்த அவனின் தலைமுடியை ஒதுக்கி விட்டு நெற்றியில் இதழ் பதித்தாள்.

அவளின் மனம் வெகுநாட்களுக்குப் பிறகு இறுக்கம் தளர்ந்து இதமாக உணர்ந்தது.

அந்த இதத்துடனே எழுந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

இருவருக்குமே பிரஜெக்ட் தற்போது இல்லாததால் பொறுமையாக வேலைக்குச் செல்லலாம் என்பதால் மெதுவாகவே வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

காலை உணவை மட்டும் அவள் தயாரித்து முடித்த போது தான் எழுந்து வந்தான் சூர்யா.

“என்னடி பொண்டாட்டி, கிச்சனை உருட்ட ஆரம்பிச்சிட்டியா?” என்று கேட்டான்.

“ம்ம், டிபன் செய்தேன் சூர்யா. குளிச்சுட்டு சாப்பிட்டுட்டு கிளம்ப வேண்டியது தான். நீங்க எத்தனை மணிக்கு ஆபிஸ் போகணும்?” என்று கேட்டாள்.

“பதினொரு மணி போலப் போனால் போதும்…” என்றான்.

“உங்களுக்கு அடுத்தப் பிராஜெக்ட் எப்போ ஆரம்பிக்கும் சூர்யா?” என்று விசாரித்தாள்.

“இன்னைக்கு மதியம் ஒரு மீட்டிங் இருக்கு. அதில் தான் தெரியும். உனக்கு வேற இன்டர்வியூ வந்ததா?”

“நாளைக்கு ஒரு இன்டர்வியூ சொல்லிருக்காங்க சூர்யா. ஆனா அது எனக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை…” என்றாள்.

“ஏன்டி?”

“ஜாவாவில் லேட்டஸ்ட் டெக்னாலஜி கேட்டுருக்காங்க. அதுக்கு நான் இன்னும் ப்ரிப்பேர் பண்ணலை…”

“என்கிட்ட ஒரு டாக்குமெண்ட் இருக்கு. அதை உன் மெயிலுக்கு அனுப்புறேன். அதைப் படிச்சு பாரு. அது யூஸ் ஆகும். சரி, நான் போய்க் குளிச்சுட்டு வர்றேன்…” என்றான்.

“சரிங்க…” என்றதும், உள்ளே சென்றான்.

அதன் பிறகு இருவருக்கும் நேரம் அமைதியாகச் சென்றது.

குளித்துத் தயாராகினர்.

காலை உணவு உண்ணும் போது “ம்ம்… சரி, பார்க்கலாம்…” என்று யாரிடமோ கைபேசியில் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சூர்யா.

‘சாப்பிடும் போதெல்லம் இவருக்குன்னு எங்கிருந்து தான் போன் வருமோ?’ என்று சலிப்பாக நினைத்தபடி தன் உணவை உண்டு கொண்டிருந்தாள் யுவஸ்ரீ.

சிறிது நேரத்தில் அவன் பேசி முடிக்க, “என்னங்க…” என்றழைத்தாள்.

“ம்ம், என்ன?” என்றான்.

“நேத்துக் கோவிலில் ஏங்க அவ்வளவு கோபம் வந்துச்சு?” என்று நேற்றிலிருந்து கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டாள்.

“கோபப்படாம நான் என்ன செய்திருக்கணும்னு எதிர்பார்க்கிற? உன்னைப் போலக் கண்ணில் தண்ணி விட்டுட்டு இருந்திருக்கணுமா?” கடுப்பாகக் கேட்டான்.

‘அட, போடா! நீயாவது தண்ணி விடுவதாவது…’ என்று மனதிற்குள் நக்கல் அடித்துக் கொண்டவள்,

“எனக்கு அப்போ என்ன பேசுவதுன்னு தெரியலை…” என்று பதில் சொன்னாள்.

“என்கிட்ட மட்டும் வாய்கிழிய பேச தெரியுது?”

“சும்மா சொல்லாதீங்க சூர்யா. பேசி பேசி என் வாய் கிழிந்தா இருக்கு. இங்கே நல்லா பாருங்க…” என்று உதடுகள் பிரியாமல் சிரித்து, கண்சிமிட்டினாள்.

“ஒரு பேச்சுக்குச் சொன்னால் உனக்கு நக்கலு? எனக்குத்தான் உன் வாய் கிழியலைன்னு நேத்து நைட் பஸ்ஸில் வைத்தே தெரிந்து விட்டதே…” என்று சொல்லி கண்ணடித்தான்.

‘அடப்பாவி மனுஷா! நீ என்னை என்னவெல்லாமோ செய்ற. அதையெல்லாம் நான் சொல்லிக் காட்டிக்கிட்டா இருக்கேன். நான் ஒரு முத்தம் கொடுத்ததுக்குப் போய்ச் சொல்லிக் காட்டுறயே…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், மூக்கை சுருக்கி, உதடுகளைச் சுளித்து அவனுக்கு அழகு காட்டினாள்.

“நீ நேற்றிலிருந்து ஒரு மார்க்கமாகத் தான் இருக்கிறடி…” என்று சொல்லிக் கொண்டே எதிரில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து சுளித்த அவளின் உதடுகளுக்குத் தண்டனை கொடுத்தான்.

“என்ன இது, சும்மா சும்மா உதட்டை கடிச்சுக்கிட்டு?” அவனிடமிருந்து உதடுகளை வலுக்கட்டாயமாகப் பிரித்தபடி கேட்டாள்.

“நீ ஏன்டி அந்த உதட்டை சும்மா சும்மா சுளிக்கிற? நீ சுளிச்ச… நான் கடிச்சேன்! இரண்டுக்கும் சரியா போயிருச்சு…” என்றான்.

“கடிப்பீங்க… கடிப்பீங்க… அது சரி, நான் என்ன கேட்டேன். அதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை…” என்றாள்.

“என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிற? அவங்க பேசியது சரியில்லை. அதுக்குப் பதிலடிக் கொடுத்தேன். குழந்தை எப்ப பெத்துக்கணும்னு நாம தான் முடிவு செய்யணும். அடுத்தவங்க நம்மைக் காயப்படுத்துவது போல் பேசினாங்க என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் திருப்பிக் கொடு. அவங்க யாரு, என்னன்னு பார்த்துட்டு தயங்கி நிற்காதே! நேத்து அந்த இடத்தில் நீ தான் பேசியிருக்கணும். ஆனால், நீ பேசலை. நீ பேசாதது உன் மேல எனக்குக் கோபம் தான்…” என்றவனை விநோதமாகப் பார்த்தாள்.

பின்னே, ‘நம்மைக் காயப்படுத்துவது போல் பேசினாங்க என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் திருப்பிக் கொடு. அவங்க யாரு, என்னன்னு பார்த்துட்டு தயங்கி நிற்காதே!’ என்றல்லவா சொல்கிறான்.

‘அப்படிப் பார்த்தால் நான் முதலில் திருப்பிக் கொடுக்க வேண்டியது இவனுக்குத் தான் அல்லவா?’ என்று எண்ணம் ஓடும் போதே தான் திருப்பிக் கொடுத்தால் இவன் என்ன செய்வான் என்று தோன்ற, அவளின் இதழ்களில் நமட்டுச் சிரிப்பு நெளிந்தது.

“ஓய்! நான் ஜோக்கா சொல்றேன்? என்னடி சிரிப்பு?” அவளின் சிரிப்பை கவனித்துக் கேட்டான்.

“இதுக்குப் பதில் சொல்ல இப்ப நேரம் வரலை. அப்புறம் சொல்றேன்…” என்றாள் அதே நமட்டுச் சிரிப்புடன்.

அவன் சொன்னதை அவனுக்கே திருப்பிக் கொடுக்கப் போகிறாள் என்பதை அறியாமல் என்னவோ சொல்கிறாள் என்பதாக, அவனின் வழக்கம் போல் தலையை அலட்சியமாகச் சிலுப்பிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான் சூர்யா.