12 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 12
காலையில் எழுந்து தயாராகிக் கீழே இறங்கி வந்த போது வீட்டின் வரவேற்பறையில் பத்து, பதினைந்து பேர் அமர்ந்திருப்பதைப் பார்த்து விழிகளை உயர்த்திப் பார்த்தாள் சக்தி.
வெள்ளை வேஷ்டியும், சட்டையுமாக ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு நடுநாயகமாகக் கம்பீரமாக அமர்ந்திருந்தான் சர்வேஸ்வரன்.
“சரிங்கய்யா. அப்போ பொழுது சாய ஆறு மணிக்குப் பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம். பிராது கொடுத்தவங்களையும், பிராதுக்கு உட்பட்டவர்களையும் பஞ்சாயத்துக்கு வர சொல்லி சேதி சொல்லி விட்டுருங்க…” என்று கணவனின் குரல் கணீரெனக் கேட்க, சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் சக்தி.
‘இன்னைக்குப் பஞ்சாயத்து கூடப் போகுதா? சூப்பர்! இதுக்குத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன்…’ என்று உள்ளுக்குள் குதூகலித்துக் கொண்டாள்.
“பிராது கொடுக்கப் போறவக இங்கன தானே இருக்காக. இங்கனயே சேதியை சொல்லிப் போடுவோம்…” என்ற ஒருவர்,
“ஏப்பா ராமசாமி, நாட்டாமை உன் பிராதை ஏத்துக்கிட்டார். பொழுது சாய உன் குடும்பத்தோட பஞ்சாயத்துக்கு வந்து சேர்…” என்று அந்த ராமசாமியிடம் சொல்ல,
“அப்படியே ஆகட்டும்ங்க அய்யா. அப்ப நான் கிளம்புறேன்…” என்ற ராமசாமி அனைவரிடமும் விடைப்பெற்று அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும் கூடியிருந்த பெரியவர்களிடம் சில விஷயங்களைப் பேசினான் சர்வேஸ்வரன்.
அவர்களிடம் பேசி முடித்ததும் அவர்களும் கிளம்பி விட, அனைவரையும் வாசல்வரை சென்று வழி அனுப்பி விட்டு மீண்டும் வீட்டிற்குள் வரும் போது ஆர்வத்துடன் அவனைப் பார்த்தாள் சக்தி.
அவளின் ஆர்வத்தைக் கண்ட சர்வேஸ்வரன் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டான்.
“இன்னைக்குப் பஞ்சாயத்து கூடப் போகுதா சர்வேஸ்? என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.
“ம்கூம்…” தலையை மட்டுமில்லாது சுட்டுவிரலையும் மறுப்பாக அசைத்தவன் “அந்த விவரம் எல்லாம் கேட்க கூடாது சக்தியாரே. உனக்கு விவரம் தெரியணும்னா இன்னைக்குப் பஞ்சாயத்தில் வந்து பார்த்துக்கோ…” என்றான்.
முகத்தைச் சுருக்கி கணவனைப் பார்த்தவள், “தெரிஞ்சிக்கிறேன்… தெரிஞ்சிக்கிறேன்…” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.
அவளின் குரல் வேறுபாட்டைக் கணித்தவன், “சக்தி…” என்று அதட்டலாக அழைத்தான்.
“இந்தப் பிராதுக்கும் நீ நினைக்கிறதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் நீ தலையிடக் கூடாது…” என்று உத்தரவாகச் சொன்னான்.
“நான் இந்த ஊருக்கு வந்திருக்கிறதே அதுக்குத் தானே சர்வேஸ்வரா. அப்புறம் எப்படி நான் தலையிடாம இருப்பேன்?” என்று நக்கலாகக் கேட்டாள் சக்தி.
“சக்தி…” என்று அவளைக் கடுமையாக அழைத்தவன் சுற்றிலும் பார்வையை ஓட விட்டான்.
வீட்டில் வேலை செய்பவர்கள் ஆங்காங்கே நின்றிருக்க, சட்டென்று அவளின் கையைப் பிடித்து அங்கிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“பஞ்சாயத்து ஒன்னும் விளையாட்டு விஷயம் இல்லை சக்தி. இதில் நீ விளையாட நானும் அனுமதிக்க மாட்டேன்…” என்றான்.
“நான் கூட்டிய பஞ்சாயத்தை நீங்க உங்களுக்கு ஆதாயமா மாத்திக்கிட்ட மாதிரி, இப்ப தானா கூடிய ஒரு பஞ்சாயத்தை எனக்குச் சாதகமாக மாத்திக்கிறதில் என்ன தப்பு?” என்று கேட்டவளை கூர்மையாகப் பார்த்தான்.
“என்ன பார்க்கிறீங்க? பிரேமும், நானும் காதல் ஜோடிகள் போல வேணும்னே ஒரு பிம்பத்தை இந்த ஊர் மக்களுக்குத் தெரியும் படி உருவாக்கினேன். நாங்க கஷ்டப்பட்டு நடிச்சு, ஊர்மக்களையே எங்க மேல பிராது கொடுக்கும் படியா கொண்டு வந்தேன்.
பஞ்சாயத்தும் கூடுச்சு. நான் நினைச்சபடியே பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கும் போது குறுக்கே புகுந்து என் ஆட்டத்தைக் கலைச்சு, அதை நீங்க உங்க ஆட்டமா மாத்திக்கிட்டீங்க.
நீங்க மட்டும் அன்னைக்கு என் ஆட்டத்தைக் கலைக்காம விட்டுருந்தால்…” என்று அவள் சொல்லும் போதே,
“தெரியும் சக்தி. நீ வேணும்னே தான் பஞ்சாயத்தைக் கூட்டும் படியா செய்தன்னு எனக்கும் நல்லாவே தெரியும். தெரிஞ்சும் நான் ஏன் அமைதியா இருந்தேன்னு தெரியுமா? நம்ம கல்யாணம் நடக்கணும்னு தான் அமைதியா இருந்தேன்…” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.
“ச்சே, சுயநலம்! எல்லாம் உங்களால் தான். நீங்க மட்டும் அன்னைக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைனா என் அப்பாவுக்கு நியாயம் கொடுக்காத இந்த ஊர்மக்களிடம் நாக்கை புடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டுருப்பேன். ஆனா அது நடக்காம செய்துட்டீங்கல?” என்றவளுக்கு ஆத்திரமாக வந்தது.
“அவசரப்பட்டு வார்த்தையை விடாதே சக்தி. உங்க அப்பாவுக்கு நியாயம் கிடைக்காம போனதுக்குக் காரணம் ஊர் மக்களோ, என் அப்பாவோ இல்லை. சூழ்நிலை மட்டுமே காரணம். அது புரியாம பேசாதே…” என்றான்.
“எல்லாம் புரிஞ்சி தான் பேசுறேன். நீங்க என்ன தான் சமாதானம் சொன்னாலும் என்னால் அதை ஏத்துக்க முடியாது. இன்னைக்குப் பஞ்சாயத்தில் நான் ஏதாவது செய்றேனா இல்லையான்னு பாருங்க…” என்றாள் சவாலாக.
சர்வேஸ்வரன் அதிரவில்லை, அசரவில்லை. அமைதியாகச் சில நொடிகள் அவளைப் பார்த்தான்.
பின் தலையை அழுந்த கோதிக் கொண்டு ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன், “இப்ப நான் என்ன சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் நீ இல்லை சக்தி. இன்னைக்குப் பஞ்சாயத்துக்குத் தாராளமாக வா. ஆனா ஒரே ஒரு ரெக்வெஸ்ட்…” என்றவன் நிறுத்த,
‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
“பஞ்சாயத்தில் அவசரப்பட்டு எதுவும் பேசாதே. அங்கே நடக்கப் போகும் வழக்கு ஒரு பெண்ணோட வாழ்க்கை பிரச்சனை சம்பந்தப்பட்டது. அதை ஞாபகத்தில் வச்சுக்கிட்டு அங்கே நடக்கப் போவதை கவனி. அதுக்குப் பிறகு உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதைச் செய்…” என்றான்.
ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்று கேட்டதுமே உடனே சரியென்று தலையை அசைத்தாள் சக்தி.
‘ஆனாலும் தனக்கும் உள்ளே புக ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அதை விட்டு விடக் கூடாது’ என்ற உறுதியையும் உள்ளுக்குள் எடுத்துக் கொண்டாள்.
அவள் மனதை படித்தவன் போல் சில நொடிகள் மனைவியின் முகம் பார்த்தவன் அவளின் தலையில் லேசாக முட்டி, “வர வர நீ வில்லியாவே மாறிட்ட டி என் சக்தி…” என்று புன்னகைத்தான்.
“யாரு நான் வில்லியா? நீங்க தான் சரியான வில்லன். எந்த நேரமும் விறைப்பா சுத்துறீங்க. சென்னையில் பார்த்த என் ஈஸ்வர் எங்கே போனார்னு தேட வேண்டியதா இருக்கு…” என்றாள் சலிப்பாக.
“அந்த ஈஸ்வர் இதோ இங்கே இருக்கான்…” என்று தன் நெஞ்சை தட்டிக் காட்டியவன்,
“அவனை இங்கே தேடாம நீ தான் வெளி தோற்றத்தை மட்டும் பார்த்துட்டு இருக்க. இங்கே இருக்குற ஈஸ்வர் என்னைக்கும் என் சக்தியோட ஈஸ்வர் மட்டுமே…” என்றவன் குரலில் காதல் கரைபுரண்டு ஓடியது.
கணவனின் காதல் சொட்டிய காந்த குரலில் சக்தியின் மனம் பூவை தேடும் வண்டாக அவனின் பக்கம் ஓடியது.
கண்களில் காதல் பிரதிபலிக்க அவனைப் பார்த்தாள்.
அவளின் காதலை கண்ணுற்றவன் “வந்திடு சக்தி. என்கிட்டேயே வந்துடு…” என்று அவளின் மிருதுவான கையைப் பிடித்து இழுத்தவன் தன் மார்பில் அவளின் தலையைச் சாய்த்துக் கொண்டான்.
அவள் இருந்த மனநிலையில் அவளும் எந்த மறுப்பும் சொல்லாமல் சாய்ந்து கொண்டாள்.
“அன்னைக்கு நீ ஒரு கேள்வி என்னைக் கேட்டியே, உன்னோட அப்பாவை ஊரை விட்டு ஒதுக்கி வச்சுருக்கும் நிலையில் நான் எப்படி உன்னைக் கல்யாணம் பண்ணினேன்னு? என்னோட, நம்மளோட காதல் மட்டுமே அதுக்குக் காரணம்.
எனக்குத் தெரியும். நான் செய்தது இந்த ஊரு கட்டுப்பாடுகளுக்கு மீறிய ஒண்ணுன்னு. அதுவும் இந்த ஊர் நாட்டாமையா இருந்து கொண்டு நான் செய்தது பெரும் குற்றம். ஆனா காதல்! அதுக்குக் கட்டுப்பாடு போட முடியுமா? முடியவே முடியாது சக்தி.
என் காதல் கட்டுப்பாடு இல்லாம போனதால் மட்டுமே இந்த ஊர் கட்டுப்பாட்டை மீறியிருக்கேன்…” என்றவன் வார்த்தையில் லேசான குற்றவுணர்ச்சியும் இருந்தது.
அவனின் மார்பில் இருந்து தலையைத் தூக்கி அவன் முகம் பார்த்தவள்,
“நீங்க கட்டுப்பாட்டை மீறிய விஷயம் இந்த ஊர் மக்களுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? அதை நீங்க யோசிக்கவே இல்லையே?” என்று கேட்டாள்.
“அதை இப்ப யோசிக்கும் நிலையில் நான் இல்லை சக்தி…” என்றவன் அவளை விட்டு மெல்ல விலகி, “நான் வயல் வரை போய்ட்டு வர்றேன்…” என்று உடனே வெளியே கிளம்பி விட்டான்.
‘எத்தனை நாள் நீங்க இப்படி ஓட முடியும் ஈஸ்வர்?’ என்று வலியுடன் நினைத்துக் கொண்டவள் அறையை விட்டு வெளியே சென்றாள்.
மாலை ஆறு மணி.
அந்தக் கருங்கல் மண்டப கட்டிடத்தில் விளக்குகள் ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருக்க, அந்த மண்டப திண்ணையில் ஊர் பெரிய தலைகளும், அவர்களுக்கு நடுநாயகமாகச் சர்வேஸ்வரனும் அமர்ந்திருந்தனர்.
ஊர் மக்கள் அனைவரும் இரவு உணவை மாலையே தயார் செய்து வைத்து விட்டு அந்த மண்டபத்தின் முன் கூடியிருந்தனர்.
சக்தி, மீனாம்பிகையின் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஊர்மக்கள் கூடியிருந்த கூட்டத்தை விட்டு சற்று முன் வந்து இரண்டு ஆண் மக்களுடன் ஒரு தம்பதியர் நின்று கொண்டிருந்தனர்.
“சொல்லு ராமசாமி, உன் பிராது என்ன?” என்று கேட்டு ஒரு பெரியவர் பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்தார்.
“அய்யா, இந்த ஊருக்கே தெரியும் என் பெரிய பையனுக்கு என் மச்சினன் வீட்டில் பொண்ணு பேசி முடிவு பண்ணிட்டேன்னு. ஆனா அதில் இப்ப ஒரு சிக்கலுங்க அய்யா…” என்றார் ராமசாமி.
“என்ன சிக்கல்?” என்று கேட்டார் இன்னொரு பெரியவர்.
“என் மச்சினன் பொண்ணு என் பெரிய பையனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுதுங்க…”
“ஏன்? என்ன காரணம்?”
“அதைத்தான் சொல்ல மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குதுங்க. என் மச்சினன் என் பொண்ணு உன் பையனுக்குத்தான்னு வாக்கு கொடுக்கவும் நானும் கல்யாணம் பேசி பத்திரிகை அடிக்கவெல்லாம் சொல்லிட்டேங்க. ஆனா இந்த நேரத்தில் பொண்ணு இடும்பு பண்ணுது.
நாங்க பேசிப் பார்த்தும் எங்ககிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேன்னு சொல்லுதுங்க. நாளைக்குப் பத்திரிகை வந்திரும். இந்த நேரத்தில் வேற என்ன செய்றதுன்னு தெரியலைங்கயா. அதான் பஞ்சாயத்தைக் கூட்டிட்டேன். இந்த ஊர் பெரியவங்க தான் என்ன ஏதுன்னு விசாரிச்சு ஒரு முடிவு சொல்லணும்ங்கயா…” என்றார்.
“சம்பந்தப்பட்ட பொண்ணு எங்க?” என்று கேட்க,
ராமசாமி குடும்பத்திற்கு எதிர்ப்பக்கமாகக் கூட்டத்தை ஒட்டி நின்றிருந்த அவரின் மச்சினன் சற்று முன்னால் வந்து நிற்க, அவருக்குப் பின் நின்றிருந்தாள் அவரின் பெண் மலர்.
“இப்படி முன்னாடி வந்து நில்லுமா…” என்று சொல்ல, தந்தையை விட்டுத் தனியாக முன் வந்து நின்றாள்.
“உன் அய்யன் உனக்குக் கல்யாணம் பேசியது முன்னாடியே தெரியுமா?”
“தெரியும்ங்கயா…” தலையை நிமிர்த்தாமல் மெல்லிய குரலில் சொன்னாள் அவள்.
“முன்னாடியே தெரியும்னா, அப்பவே கல்யாணத்தை மறுக்காம நாளைக்குப் பத்திரிக்கை வைக்கப் போற நேரத்தில் ஏன் மறுப்பு சொல்ற?” என்று கேட்டனர்.
அந்தப் பெண் மலர் மேடையில் அமர்ந்திருந்த பெரியவர்களைத் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
பின் தன் எதிரே நின்றிருந்த ராமசாமியின் குடும்பத்தைப் பார்த்தாள்.
“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுமா. நீ சொன்னால் தானே என்ன பிரச்சனைன்னு தெரியும்…” என்று பெரியவர் ஊக்கம் கொடுக்க,
“என் மனசுல ஒருத்தர் இருக்காருங்கய்யா…” என்றாள்.
“அடிப்பாவி!” என்று பின்னால் இருந்து அவளின் அன்னை கூவ,
“உன் மனசுல இருக்குற பையன் யாருமா?” என்று கேட்டார் பெரியவர்.
“அதுங்கய்யா…” என்று தயங்கிய மலர் தன் பின்னால் நின்றிருந்த தன் அன்னையையும், தந்தையையும் தயக்கத்துடன் பார்த்தாள்.
பின் மெல்ல திரும்பி ராமசாமியின் குடும்பத்தைத் தாண்டி அவளின் பார்வை பின்னால் போனது.
“எனக்கு என் அத்தை மகன் வரதன் மச்சானைத்தான் பிடிச்சிருக்கு. அவரைத்தான் கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுறேன்ங்கய்யா…” என்று சொன்ன நிமிஷத்தில்,
“குடியைக் கெடுத்தியேடி பாவி…” என்று மகளின் முதுகில் ஓங்கி அடித்திருந்தார் அவளின் அன்னை சரஸ்வதி.
“அடி அவளை. இங்கே விடு இவளை அடிச்சு கொல்றேன்…” என்று அவளின் தந்தையும் மகளை அடிக்கப் பாய்ந்து வந்தார்.
“போயும் போயும் உனக்கு ஓடுகாலி மவன் தான் கண்ணுக்குத் தெரிஞ்சானா? உனக்கு அந்த ஓடுகாலி தான் சொல்லிக் கொடுத்தாளா?” என்று சொல்லிக் கொண்டே அவளை அடிக்க ஆரம்பித்தனர்.
சக்தி பதட்டத்துடன் அவர்களைப் பார்த்தவள், அவர்கள் அடிப்பதை தடுக்க ஓர் எட்டு முன்னால் எடுத்து வைக்க, அதற்குள் “ரங்கா நிறுத்துங்க…” என்று ஓங்கி குரல் கொடுத்திருந்தான் சர்வேஸ்வரன்.
அவனின் குரலில் மலரின் தந்தை ரங்காவின் கைகளும், தாய் சரஸ்வதியின் கைகளும் அசைவற்று நின்று போயின.
“உங்க வழக்கு இப்ப பஞ்சாயத்துக்கு வந்துருச்சு. இந்த ஊர் பஞ்சாயத்து முன்னாடி உங்க பொண்ணு அது மனசுல என்ன இருக்குன்னு சொல்லியிருக்கு. இப்ப பேச வேண்டியது உங்க கை இல்லை. இரண்டு பேரும் தள்ளி நில்லுங்க…” என்ற சர்வேஸ்வரனின் கடுமையில் மகளை விட்டு இரண்டு பேரும் தள்ளி நின்றனர்.
அவனின் வார்த்தையில் சக்தியும் நின்று மேலே நடக்கப் போவதை கவனிக்க ஆரம்பித்தாள்.
“உறவுகாரன் மேல தானே அந்தப் புள்ள மலர் ஆசைப் பட்டுருக்கு. அப்புறம் ஏன் அதை இந்த அடி அடிக்கணும் ரங்கா?” என்று சர்வேஸ்வரனின் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் கேட்டார்.
“அய்யா… உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தங்கச்சி கூடப் பேச்சு வார்த்தையை விட்டு பல வருஷம் காலம் ஆகுது. அப்படி இருக்கும் போது எப்படிங்கயா?” என்று ரங்கன் சொல்ல,
“இது மட்டும் தான் காரணமா ரங்கா?” என்று உயர்ந்த குரலில் கேட்டான் சர்வேஸ்வரன்.
அவனின் கேள்வியில் லேசாகத் தலை குனிந்தார் ரங்கன்.
அவர் சொன்னது மட்டுமே காரணம் அல்ல என்று அந்த ஊர்மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.
ரங்கனின் தங்கை ராதா அதே ஊரை சேர்ந்த வேற்று ஜாதிகாரர் ஒருவரை காதலித்தார். அதற்கு அவளின் குடும்பத்தில் இருந்து பலமான எதிர்ப்பு வர, விஷயம் வீட்டை தாண்டி பஞ்சாயத்து வரை வந்து சேர்ந்தது.
அப்போது நாட்டாமையாக இருந்த சர்வேஸ்வரனின் தந்தை ஜாதி வேற்றுமை பாராது, மனம் ஒன்றுபட்ட பிறகு ஜாதி வேற்றுமை எல்லாம் பார்க்க கூடாது என்று தீர்ப்பு சொன்னவர் ஊராரின் முன் காதலித்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
நாட்டாமையின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டாலும், ரங்கனின் குடும்பத்தார் ராதாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டனர்.
தங்கை வேறு ஜாதிகாரனை திருமணம் செய்ததை இப்போது வரை அவர்களால் ஏற்க முடியாமல் போனது.
இப்போது மகள் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொண்டிருந்த தங்கையின் மகனை விரும்புவதை ஏற்க முடியாமல் கோபத்தில் கொதித்துப் போயினர்.
பெற்றோர் மறுப்பு தெரிந்தே அன்னையின் அண்ணன் மகனை திருமணத்திற்குப் பேசி முடித்த போது அவளால் துணிந்து பேச முடியவில்லை.
இப்போது திருமணநாள் நெருங்க நெருங்க மனவுளச்சலில் தவித்தவள் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்க, அது பஞ்சாயத்து வரை வந்துவிட்டிருந்தது.
“உங்க தங்கச்சி ராதாவுக்கு இந்த ஊர் நாட்டாமை தான் திருமணம் முடித்து வைத்தார் ரங்கா. ஆனாலும் நீங்க அவங்க கூடப் பேச்சு வார்த்தையை நிறுத்திட்டீங்க. அது உங்க தனிப்பட்ட உணர்வுகளின் விருப்பம். ஆனா அதுக்காக ஜாதி விட்டு ஜாதியில் உங்க தங்கை கல்யாணம் செய்ததாலேயே அவங்க வீட்டில் உங்க பொண்ணைக் கொடுக்கத் தயங்குவது நியாயம் இல்லை ரங்கா…” என்றான் சர்வேஸ்வரன்.
“அய்யா, பெரிய நாட்டாமை தான் என் தங்கச்சிக்குக் கல்யாணம் முடிச்சு வச்சார். அதையும் நாங்க ஏத்துக்கிட்டோம். ஆனா இப்ப என் மகள் முடிவை நான் எடுக்க விரும்புறேங்க அய்யா. அவளுக்கு என் மச்சினன் மவன் சரவணன் கூடத்தான் கல்யாணம் நடக்கணும்…” என்றார் ரங்கா.
அவரைச் சில நொடிகள் பார்த்தவன், “வரதன் குடும்பம் முன்னாடி வாங்க…” என்று அழைத்தான்.
வரதன் தன் பெற்றோருடன் முன் வந்து நிற்க, “மலர் பொண்ணு மனசில் என்ன இருக்குன்னு இந்த ஊர் முன்னாடி சொல்லிருச்சு. இப்ப நீ சொல்லு வரதன். உனக்கு மலர் மேல் விருப்பம் இருக்கா?” என்று கேட்டான்.
வரதன் நேராக மலரின் முகத்தைப் பார்த்தான்.
அன்னை தந்தையின் அடியில் வலித்த உடம்பையும், மனதையும் அடக்கி கண்களில் கண்ணீர் தேங்க அவனை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தாள் மலர்.
“எனக்கும் மலரை ரொம்பப் பிடிக்கும்ங்க அய்யா. மாமாவுக்கு எங்களைப் பிடிக்காதுன்னு தான் என்னால் ஒன்னும் செய்ய முடியலைங்கயா. இப்ப உங்க முன்னிலையில் கேட்குறேன்யா…” என்றவன்,
“மலரு தான் என் உசுரு மாமா. அவளை என்கிட்டே கொடுத்திருங்க…” என்று தன் மாமனிடம் நேராகக் கேட்டான்.
“இல்லங்கய்யா. என் மச்சினனுக்கு நான் வாக்குக் கொடுத்துட்டேன். என்னால் என் வாக்கை மீற முடியாது…” என்று வரதனை பார்க்காமல் நாட்டாமையிடம் பிடிவாதம் பிடித்தார்.
அதில் மலர் உடைந்து அழ, வரதன் வலியுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பொண்ணோட வாழ்க்கை முக்கியமா? உங்க வாக்கு முக்கியமா ரங்கா?” என்று சர்வேஸ்வரன் கேட்க,
“எனக்கு என் வாக்கு தான் முக்கியம்ங்க அய்யா…” என்று அவர் பிடிவாதத்தில் இருந்து சிறிதும் தளரவில்லை.
“நீ என்ன சொல்ற சரவணா?” என்று மலருக்கு பேசி முடித்த மணமகனிடம் நேரடியாகக் கேட்டான்.
“அய்யா, எனக்கும் மலரை பிடிக்கும்ங்கயா. ஆனா…” என்று சரவணன் நிறுத்த,
அனைவரும் அவனைப் பார்த்தனர்.
“இரண்டு பேர் மனசு சேர்ந்து வாழ்ந்தா தாங்க அந்த வாழ்க்கையே இனிக்கும். மலர் மனசு வரதன் மேல இருக்குன்னு தெரிஞ்சும் நான் என் மாமா வாக்குக்காக அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா காலம் முழுவதும் எங்க வாழ்க்கை கசப்பாத்தான் போகும்ங்கயா…” என்றான் சரவணன்.
“கேட்டுக்கோங்க ரங்கா. சரவணனே சொன்ன பிறகு வாக்கு பத்தி இனி நீங்க கவலைப்படத் தேவையில்லை…” என்றான் சர்வேஸ்வரன்.
“ஆனா சரவணன் இல்லனாலும் பரவாயில்லைங்கயா. நான் என் பொண்ணை என் ஜாதியில் தான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்யா…” என்று ரங்கா சொல்ல,
கோபம் துளிர்க்க அவரைப் பார்த்தான் சர்வேஸ்வரன்.
“அப்போ உங்களுக்கு ஜாதி தான் முக்கியம்?” என்று கேட்டான்.
அவர் ‘ஆமாம்’ என்பது போல அமைதியாக இருந்தார்.
“எங்க அப்பாவே ஜாதிக்கு முக்கியம் கொடுக்காமல் இரண்டு பேர் மனசுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அப்போ அவர் மகன் நான் மட்டும் எப்படி இருப்பேன்? இப்போ இந்த ஊர் நாட்டாமையா என் தீர்ப்பை சொல்றேன்…” என்று உயர்ந்து குரல் கொடுத்தவன்,
“இந்த ஊர் காதலுக்கு எப்பவும் எதிரியா இருந்தது இல்லை. காதலுக்கு ஜாதியோ, மதமோ தெரியாது. ஒரு தாம்பத்திய வாழ்க்கை சிறந்து விளங்க தேவை பாசமும், நேசமும் மட்டும் தான். இங்கே இரண்டு பேரு மனசும் ஒன்னு சேர்ந்துடுச்சு.
இணைந்த மனசை பிரிச்சு வச்சு மனசை கொல்றதை விடப் பெரிய பாவம் எதுவும் இல்லை. அதனால் மனதால் ஒன்றுபட்ட மலருக்கும், வரதனுக்கும் இந்த ஊர் முன்னிலையில் நாளைக்குக் காலையில் கல்யாணம் நடக்கும். இது தான் என் தீர்ப்பு…” என்றவன் மேடையை விட்டு இறங்கினான்.
அவனின் தீர்ப்பை ஏற்று அனைவரும் மெல்ல களைய ஆரம்பித்தனர்.
சக்தி தீர்ப்பை கேட்டு நிறைவுடன் கணவனைப் பார்த்தாலும், அவளின் புருவங்கள் யோசனையுடன் சுருங்கின.