12 – உனதன்பில் உயிர்த்தேன்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 12
கதவிற்கு இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக வைரவேலும், தேன்மலரும் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தனர்.
அடுத்தது என்ன? இருவருக்கும் தெரியவில்லை.
முக்கியமாக வைரவேலுக்குத் தெரியவே இல்லை.
தனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று அவன் சிறிதும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
தேன்மலருக்காக அவ்வளவு நேரம் மாமனாரிடம் வாதாடினான் தான் என்றாலும் அவளின் கழுத்தில் தான் கட்டிய தாலிக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குப் புரியவேயில்லை.
தாலியை அவன் விளையாட்டு பொருளாக நினைக்கவில்லை என்ற காரணத்தால் மட்டுமே அவள் தாலியை தன் மாமனார் கழட்ட முயன்ற போது தடுத்தான்.
அதோடு தவறு தன் மேல் இருக்க, தேன்மலரை கொடுமைபடுத்த யாருக்கும் தகுதி இல்லை என்று நினைத்தான்.
மாமனாரிடம் தானும், அவளும் பேசி முடிவு செய்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டாலும், அவளிடம் என்ன பேச, எப்படிப் பேச என்று புரியாமல் தடுமாறிப் போனான்.
அதோடு மாமனாரிடம் பேசும் போது எந்த இடத்திலும் நான் தாலி கட்டிவிட்டதால் அவள் தன் மனைவி என்றோ, தான் அவள் கணவன் என்றோ பெயருக்கு கூட அவன் எங்கேயும் சொல்லவில்லை.
அதையே தான் வீட்டிற்குள் இருந்த தேன்மலரும் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவனின் குணத்திற்கு ஏற்றார்போல், சகமனிதனுக்குச் செய்யும் உதவியாகத் தான் தன் தாலியை கழட்ட விடாமல் காத்தான் என்று அவளுக்கும் நன்றாகப் புரிந்து தான் இருந்தது.
அதற்கு மேல் அந்தத் தாலிக்கு என்ன அர்த்தம் தருவது என்று அவளுக்கும் புரியவில்லை. அவனுக்கும் விளங்கவில்லை.
தலையை அழுந்த பிடித்துக் கொண்டான் வைரவேல்.
நேரம் சென்று கொண்டே இருக்க, அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலும் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
மனதிற்குள் வார்த்தைகளைக் கோர்த்துப் பார்த்தான். ஒரு வரி கூடக் கோர்வையாகத் தோன்றவில்லை.
தடுமாற்றம்! தடுமாற்றம்! மனம் முழுவதும் தடுமாற்றம்!
தன்னை ஆக்கிரமித்த தடுமாற்றத்திலிருந்து அவனால் மீள முடியவில்லை.
தலையுடன், மனமும் பாறையாகக் கனத்துப் போனது.
‘என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்? அவளுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன்?’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவனுக்குப் பாரம் ஏறியதே தவிரப் பதில் கிடைக்கவில்லை.
ஆழ்ந்த மூச்சிழுத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றான்.
முடியவில்லை தான்! ஆனாலும் முயற்சி செய்தான்.
அந்தப்பக்கம் தேன்மலரின் காலடியில் அதுவரை அமைதியாகப் படுத்திருந்த ராசு, எழுந்து வெளியே செல்ல மூடிய கதவை காலால் சுரண்ட ஆரம்பித்தது.
அவ்வொலி கேட்டதும் வாசல்படியிலிருந்து எழுந்தான் வைரவேல்.
எவ்வளவு நேரம் கடந்து சென்றாலும் எப்போது இருந்தாலும் பேசித்தான் ஆகவேண்டும் என்று நினைத்தவன், கதவை மெதுவாகத் தட்டினான்.
“உங்கிட்ட செத்த பேசணும் புள்ள…” என்றான்.
அவன் குரல் கேட்டதும் வேகமாக எழுந்து கதவை திறந்தாள் தேன்மலர்.
கதவை திறந்ததும் வெளியே நின்ற வைரவேலுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசலில் இறங்கி ஓடியது ராசு.
கதவை திறந்து விட்டவளின் விழிகளை ஏறெடுத்துப் பார்க்காமல் தயக்கத்துடன் நின்றிருந்தான் வைரவேல்.
“உள்ளார வாரும்…” என்று அழைத்தவள் கதவை விரிய திறந்து வைத்தாள்.
தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.
இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர். பேச வேண்டும் என்று சொன்னவனுக்குப் பேச்சை ஆரம்பிக்க முடியாமல் வாய் அடைத்துக் கொண்ட உணர்வு வந்தது.
லேசாகத் தொண்டையைச் செருமி கொண்டான்.
“என்னைய மன்னிச்சுடு புள்ள. நா வேணும்னு எதுவும் பண்ணலை. இப்படி நா பண்ணிப் போடுவேன்னு நானே எதிர்பார்க்கவும் இல்லை. ஒ வாழ்க்கையையே கெடுத்துப் போட்டேன். என்னைய மன்னிச்சுடு…” என்று வருந்தி மன்னிப்பு கேட்டான் வைரவேல்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அமைதியாக நின்றாள் தேன்மலர்.
‘என்ன சொல்ல முடியும்? பரவாயில்லை என்றா? மன்னிச்சுட்டேன் என்றா? நடந்ததை மறந்து விடுங்கள் என்றா?’ எதைச் சொன்னாலும் அது அபத்தமாகத் தான் இருக்கும்.
மௌனமே மொழியாக நின்றாள்.
பதில் சொல்ல வார்த்தைகள் இருக்காது என்று அவனுக்கும் புரிந்தது. அவளின் பதிலை அவன் எதிர்பார்க்கவும் இல்லை.
ஆனால் அதற்கு மேல் என்ன பேச என்று அவனுக்கும் தெரியவில்லை.
அவன் மனதளவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தான்.
மனைவியின் மறைவு ஏற்படுத்திய சுவடு கூட அழியாத நிலையில் இன்னொருத்தியின் கழுத்தில் தாலி கட்டியதை அவனாலேயே அவனை மன்னிக்க முடியாத போது, இன்னொருத்திக்கு புருஷனாக இருந்தவன், சுயநினைவு இல்லாமல் தாலி கட்டியவனை அவளால் மட்டும் எப்படி மன்னிக்க முடியும்? என்று அவனுக்குப் புரியத்தான் செய்தது.
“நடந்தது சரியா தப்பான்னு கூடத் தெரியலை. எம் மாமனார்கிட்ட நா செய்த தப்பை நாங்களே சரி பண்ணிக்கிடறோம்னு சொல்லிப் போட்டேன். ஆனா எப்படிச் சரி பண்ண போறேன்னு தெரியலை. எம் மனசுல இன்னும் எம் பொஞ்சாதி மட்டும்தேன் இருக்கா…” என்று அவன் சொல்லிய போது நிதானமாக அவனின் கண்களைக் கூர்ந்து பார்த்தாள்.
அவனின் கண்களில் அலைபாயுதல் தெரிந்தது. மனைவிக்குத் துரோகம் செய்த உணர்வு அக்கண்களில் வெளிப்பட்டதைக் கண்டு கொண்டாள்
மனைவி உயிருடன் இல்லாத போதும் அவளுக்குத் துரோகம் செய்து விட்டோம் என்ற அவனின் தவிப்பு அவளை இளக்கியது.
“இந்தத் தாலியை ஏ கழுத்துல போட்டதுல நீர் தவிச்சு போய் இருக்கிறீர்னு எமக்கு நல்லா புரியுதுயா. இந்தத் தாலி உமக்கு எப்படியோ, எமக்கு என்னைய காக்க வந்த வேலி. என்ன தேன் நானும், ஏ ஆத்தாளும் ஒழுக்கமா வாழ்ந்தாலும் எங்களை விட்டு வேசி பட்டம் போவ மாட்டீங்குது.
எங்களை இன்னும் வேசியா நினைச்சுத்தேன் நேத்து சட்டுனு என்னைய வூரை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவை எடுத்தாக. ஆனா நீர் அந்தப் போதையிலும் ஏ கண்ணீரை பார்த்து இரக்கப்பட்டீரு. உம்மாள எமக்கு வந்த களங்கத்தை நீரே போக்க நினைச்சீரு பாரும்… அதை விட உம்ம நல்ல மனசை சொல்ல என்னய்யா வேணும்?
அந்த நல்ல மனசை நா உடைக்க மாட்டேன். நீர் நீரா இரும். எமக்குத் தாலி கட்டிப் போட்டோமேன்னு உறுத்தல் இல்லாம நீர் உம்ம சோலியை பாரும். ஆனா தாலியை மட்டும் கேட்காதீரும். நீர் எமக்குக் கிடைக்கலைனாலும் நீர் போட்ட இந்த வேலி எமக்கு வேணும்…” என்றாள் தேன்மலர்.
அவளின் குரலில் இருந்த உறுதி அவனை அசைத்துப் பார்த்தது.
‘தாலி கட்டிவிட்டு ஒ மொத பொஞ்சாதி நினைப்புல தேன் இன்னும் இருக்கீருன்னு எப்படி எங்கிட்ட வந்து சொல்லலாம்?’ என்று குதிக்காமல் அவனின் மனம் அறிந்து அவள் பேசியது அவனுக்கு இதமாக இருந்தது.
“நா இப்படிச் சொல்றது சுயநலந்தேன். ஆனா எமக்கும் வேற வழி தெரியலை…” என்றாள்.
‘புரிந்தது’ என்னும் விதமாகத் தலையை ஆட்டினானே தவிர, அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
அதன் பிறகு அவளும் ஒன்றும் பேசவில்லை.
சிறிது நேரம் அவர்களின் இடையே மௌனக் காற்று தான் வீசியது.
அப்படியே எவ்வளவு நேரம் நின்றிருக்க முடியும்? தானே அந்த மௌனத்தைக் கலைத்தான்.
“எமக்கு டவுன்ல ஒரு சோலி கிடக்கு. நா இப்ப போயாகணும். ஏ மாமனாரு இனிமே வர மாட்டார்னு தேன் நினைக்கிறேன். அப்படியே வந்தாலும் நீ கதவை திறக்காத. உங்கிட்ட செல்போன் இருக்கா?” என்று கேட்டான்.
“எமக்கு என்ன சொந்தமா? பந்தமா? போன் போட்டு பேச? அதெல்லாம் இல்ல…” என்றாள்.
தன் டவுசர் பைக்குள் கைவிட்டுச் சின்னப் பட்டன் மாடல் போனை எடுத்தவன், “இது எம் போனு. இந்தா இதை நீ வச்சுக்கோ…” என்று கொடுத்தான்.
அதை வாங்காமல் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“இல்ல… வேணாம்…” என்றாள்.
“இது ஒ பாதுகாப்புக்குத்தேன். எம் மாமனாரு இப்ப போயிட்டாரு தேன். ஆனா இந்த விசயத்தை அவரு இப்படியே விட்டுப் போடுவாருன்னு எமக்கு நம்பிக்கை இல்ல. எந்த நேரமும் நானும் உமக்குக் காவலுக்கு நிக்க முடியாதே? இதை இப்ப வச்சுக்கோ.
ஆனா இப்போதைக்கு இதை வச்சு நீ எமக்குப் பேச முடியாது. இது ஒ கையில இருந்தா நா வெளியே இருந்து அப்பப்போ இதுக்குப் போன் பண்ணி இங்கன உள்ள நிலவரத்தை கேட்டுக்கிறேன். டவுன்ல இருந்து வரும் போது உமக்கு வேற போனு வாங்கியாறேன்…” என்றான்.
தயக்கத்துடன் மெல்ல வாங்கிக் கொண்டாள்.
“போனு வந்தா எப்படி எடுத்து பேசணும்னு தெரியுமா?” என்று கேட்டான்.
‘தெரியாது’ என்று அவள் தலையை ஆட்ட,
“போனு வந்தா அந்தப் பச்சை பட்டனை அமுக்கணும். போனை வைக்கும் போது சிவப்புப் பட்டனை அமுக்கணும். அம்புட்டுத்தேன். புதுப் போனு வாங்கியாந்த பொறவு போன் எப்படிப் போடணும்னு சொல்லித்தாறேன்…” என்றான்.
‘சரி’ என்று தலையை அசைத்தாள்.
“சூதானமா இரு. ஒ ராசுவ கூடவே வச்சுக்கோ. நா கிளம்புறேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவன் சென்றதும் கதவை அடைத்து தாழிட்டாள் தேன்மலர்.
தான் தாலி கட்டியவள் என்ற நினைப்பை விட, தன் உறவினரால் அவளுக்கு எந்தக் கெடுதலும் வந்து விடக்கூடாது என்பது மட்டுமே அவனின் குறிக்கோளாக இருந்தது.
அது தேன்மலருக்கும் புரிய, பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
வைரவேல் வெளியே சென்று அரைமணி நேரத்திற்குப் பிறகு போன் செய்தான்.
தடுமாற்றத்துடன் அழைப்பை எடுத்து பேசினாள் தேன்மலர்.
“யாரும் வந்தாகளா? அங்கன எதுவும் பிரச்சனையா?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்து விசாரித்தான்.
“இல்ல… யாரும் வரலை…” என்றாள்.
“சரி…” என்றவன் வேறு பேசாமல் வைத்து விட்டான்.
அதன் பிறகும் நடுவில் இரண்டு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.
புதிதாகக் கிடைத்த ஒருவனின் அக்கறையில் அவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.
அது உரிமையுடன் வந்த அக்கறை இல்லை என்று தெரிந்தாலும் அதில் உள்ளம் உவகைக் கொள்வதை அவளால் தடுக்க முடியவில்லை.
மாலையளவில் அவளின் வீட்டிற்கு வந்தான் வைரவேல்.
வாசலிலேயே அமர்ந்திருந்த ராசுவை பார்த்துவிட்டு கதவை தட்டினான்.
“யாரு…” என்று உள்ளிருந்து சத்தம் கொடுத்தாள் தேன்மலர்.
“நாந்தேன்…” என்று அவன் குரல் கொடுத்த பின்னே கதவை திறந்தாள்.
“இந்தா புதுப் போனு. புதுக் கார்ட் உள்ளார போட்டுருக்கேன். இதைக் கைலயே வச்சுக்கோ. போன் இப்படிப் போடணும்…” என்று அவளுக்குச் சிறிது நேரம் விளக்கம் கொடுத்தான்.
“இதுதேன் ஏ போன் நம்பரு. யாரும் உமக்குத் தொந்தரவு கொடுத்தா எமக்குப் போன் போடு…” என்றான்.
‘சரி’ என்று அவள் கேட்டுக் கொண்டதும் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
வந்தால் மாமனாரால் தான் பிரச்சனை வரும் என்று நினைத்தவன், வேறு எதையும் யோசிக்க மறந்து விட்டான்.
எதனால் நேற்று இரவு அவள் ஓடி வந்தாள்? எப்படி ஊரே அந்த நேரத்தில் அங்கே திரண்டு வந்தது? ஏன் இவ்வளவு நாளும் இல்லாமல் தன்னையும், அவளையும் இணைத்து ஊரே பேசியது? என்று அவன் சிறிதும் யோசித்துப் பார்க்கவில்லை.
அவனின் அப்பத்தா அவன் தாலி கட்டிய விஷயத்தை மட்டுமே பெரிதுபடுத்திச் சொல்லியதால், அவனும் தான் இன்னொருத்திக்கு இப்படித் தாலி கட்டிவிட்டோமே என்ற குற்றவுணர்வில் இருந்ததால் தீர விசாரிக்க வேண்டும் என்பதையே மறந்து போனான்.
காலையில் எழுந்ததும் உண்டான அதிர்ச்சி, அதைத் தொடர்ந்து மாமனார் பிரச்சனை எழுப்பியது, அவனைத் தொடர்ந்த வேலை… என்று இருந்தவனுக்கு வேறு சிந்திக்க நேரமும் இருக்கவில்லை.
போனை வாங்கிக் கொடுத்ததுடன் கடமை முடிந்தது என்ற உணர்வே அவனுக்கு இருந்தது.
எதுவும் பிரச்சனை என்றால் போன் செய்வாள் அப்போது பார்த்துக் கொள்வோம் என்றதுடன் அவளின் நினைவை தன் மனதை விட்டு தள்ளி வைத்து விட்டான் என்பதே உண்மை.
வைரவேல் யாரைப் பற்றி நினைக்க மறந்தானோ, அவன் பக்கத்து ஊரில் இருந்த அந்தத் தோப்பில் அமர்ந்து ஏற்கனவே அரைப் பாட்டில் சாராயத்தைக் காலி செய்து விட்டு மீதம் இருந்த சாராயத்தை எடுத்து இரண்டு பேப்பர் கப்பில் ஊற்றினான்.
சாராயம் நிரம்பிய ஒரு பேப்பர் கப்பை தான் எடுத்துக் கொண்டவன், இன்னொரு கப்பை எடுத்து, “இந்தா மாமா, குடி…” என்று எதிரே இருந்தவரிடம் நீட்டினான் ராமர்.
அவன் கொடுத்த கப்பை வாங்கிக் கொண்ட கோவிந்தன் வாயை திறந்து அப்படியே சாராயத்தை உள்ளே சரித்துக் கொண்டார்.
“என்ன மாமா அப்படியே கவுத்திட்ட?”
“இப்ப எமக்கு இருக்குற வெறிக்கு ரோட்டா ரோட்டாவா குடிச்சா எல்லாம் பத்தாது ராமரு…” என்று பல்லை கடித்துச் சொன்னவர், கையில் இருந்த பேப்பர் கப்பை கசக்கி தூக்கி எறிந்தார்.
உடைக்கப்படாமல் இருந்த இன்னொரு பாட்டிலை எடுத்தவர், திறந்த வேகத்தில் அப்படியே வாயில் கவிழ்த்து, மடக், மடக்கென்று குடிக்க ஆரம்பித்தார்.
“நா என்னவோ நினைச்சேன் மாமா. ஆனா அது எப்படியோ ஆகிபோயிருச்சு. என்னைய மன்னிச்சுப் போடு மாமா. என்னைய மன்னிச்சுப் போடு…” என்று போதையில் குழறிக் கொண்டே கவுந்து படுத்து ஒரு காலை நீட்டி அமர்ந்திருந்த கோவிந்தனின் காலை பற்றிக் கொண்டான் ராமர்.
“ம்ம்… விடும் ராமரு. நீர் என்ன பண்ணுவீர். எல்லாம் ஏ மாப்ளயை சொல்லணும். குடிப் போதையில் தாலி கட்டியவன் ஒசார் வந்ததும் அதை அவுத்து எறிவானா… அதை உட்டுப்போட்டு அந்த ……. மவளுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு வர்றார்.
எம் மாப்ள மட்டும் குறுக்க வரலைனா, அந்தச் சிறுக்கிய வூரை விட்டே விரட்டி விட்டுருப்பேன். அம்புட்டும் போச்சு. எம் மவ கழுத்துல தொங்குன அதே தாலி இப்ப அந்த வேசி மவ கழுத்துல தொங்குறத பார்த்தாலே எரியுது ராமரு.
ஏதாவது செய்யணும் ராமரு. ஏதாவது செய்து போட்டே ஆவனும். எம் மவ தாலி அந்தச் சிறுக்கி கழுத்துல இருக்கவே கூடாது ராமரு…” என்று போதையில் குழறிக் கொண்டே வெறியுடன் கத்தினார் கோவிந்தன்.
“செய்து போடலாம் மாமா. என்ன செய்யணும்னு சொல்லும். நான் முடிச்சு போடுறேன்…”
“போன தடவை மாதிரி அவசரப்படக் கூடாது ராமரு. மொதல விசயத்த ஆறப்போடணும். நா நினைக்கிறது சரினா எம் மருமவன் அவ கூட எல்லாம் வாழ மாட்டாரு. தள்ளி தேன் வச்சுருப்பாரு. ஏன்னா எம் மவ மேல அவருக்கு இருக்குற பித்து அப்படி.
நாம கொஞ்ச நாளு ஒதுங்கி இருந்தா என்னால அவளுக்கு ஒரு கெடுதலும் வராதுன்னு நம்பி காவ காக்க மாட்டாரு. அதனால அந்தச் சிறுக்கி தனியாதேன் அவ வூட்டுல கிடப்பா. தனியா கிடக்கிறவள தடம் தெரியாம ஆக்கிப் போடணும் ராமரு…” என்றார் கோவிந்தன்.
“சரி மாமா. செய்து போடுறேன் மாமா. மாமா… அவ மேல எமக்கு ஒரு கண்ணு. அவள தடம் தெரியாம ஆக்கிப்போடுறதுக்கு முன்னாடி அவளை நா ஒரு கை பார்க்கலாம்ல?” என்று கோணலாகச் சிரித்து, வக்கிரமாகக் கேட்டான்.
“ஹாஹாஹா… செய்! செய்! குஜாலா இரு. அவ மேல கை வைக்கிறது முன்னால எம் மவ தாலிய மட்டும் அவுத்துரு…” என்று கோவிந்தன் சொல்ல,
“சரி மாமா…” என்று வாயோரம் எச்சில் ஒழுக்க, கோணலாகச் சிரித்துக் கொண்டான் ராமர்.
இவர்களின் திட்டம் அறியாமல், புதிதாகக் கழுத்தில் உரசிய தாலியுடனும், அதைக் கட்டியவன் தனக்கு உதவ வருவான் என்ற நம்பிக்கையுடனும் அன்றிரவு நிம்மதியாகக் கண்ணுறங்கினாள் தேன்மலர்.