12 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 12
பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்து உடையை மாற்றினான் பிரபஞ்சன். வாஷ்பேஷனில் தண்ணீரை திறந்து முகத்தைக் கழுவி விட்டு வந்து துவாலையால் முகத்தைத் துடைத்தான்.
தன்போக்கில் வேலை செய்து கொண்டிருந்த போதே, மனம் அன்று பள்ளியில் நடந்ததை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தது.
நேற்று நடந்த பிரச்சனைக்குப் பின் பள்ளியில் அவனை எப்படிப் பார்ப்பார்களோ என்ற யோசனையுடன் தான் சென்றான்.
ஆனால் அவனைப் பார்த்ததும் அவனின் மாணவர்கள் அவனை உற்சாகமாகவே வரவேற்றனர்.
மற்ற ஆசிரியர்களும் அவர்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டாலும் அவனிடம் எதுவும் கேள்வி கேட்டு குடையவும் இல்லை, அவன் காதில் விழுவது போல் எதுவும் ஜாடை பேசவும் இல்லை.
அதுவே அவனுக்கு அங்கே இயல்பாக இருக்க முடிந்தது.
அன்று திருமணத்திற்காக விடுமுறை எடுத்திருந்தான். ஆனால் இப்போது அந்த விடுமுறைக்கு அவசியம் இல்லாமல் போனதால் வேலையைத் தொடர ஆரம்பித்து விட்டான்.
அன்று பைரவி பள்ளிக்கு வரவில்லை. அதைப் பற்றிக் கவலையில்லை என்று அவனால் விட்டுவிட முடியவில்லை.
இடைவேளையின் போது முதல்வர் அறைக்குச் சென்றவன், “சார் அந்தப் பொண்ணு பைரவி இன்னைக்கு ஸ்கூல் வரலை. அவள் அப்பாவுக்குப் போன் போட்டு, ஸ்கூல் அனுப்பி வைக்கச் சொல்லுங்க. அந்தப் பொண்ணு அவசரப்பட்டுச் செய்த தப்புக்கு அவங்க பாட்டுக்குப் படிப்பை நிறுத்திட போறாங்க. அப்படி எதுவும் நடந்தால் என்னால் நடந்ததாகதான் இருக்கும். என்னால் ஒரு மாணவியோட படிப்பு நின்னதாக இருக்க வேண்டாம்…” என்றான்.
அவனை ஆச்சரியமாகத் தான் பார்த்தார் முதல்வர்.
“என்ன சார் அப்படிப் பார்க்குறீங்க?” பிரபஞ்சன் கேட்க,
“உங்களைப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கு பிரபஞ்சன். நேத்து தான் அவ்வளவு பிரச்சனை நடந்தது. ஆனால் இன்னைக்கு அந்தப் பிள்ளை ஸ்கூல் வராததைப் பத்தி கவலைப்படுறீங்க. பைரவி மேல உங்களுக்குக் கோபமே வரலையா?” என்று கேட்டார்.
“என் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி, என் கல்யாணத்தை நிறுத்தி, இப்போ என் வாழ்க்கையையே திசை மாற்றி விட்டதை நினைத்து எனக்குப் பைரவி மேல கோபம் இருக்கத்தான் செய்யுது சார். இல்லைன்னு நான் பொய் சொல்ல மாட்டேன்…”
“அப்புறம் எப்படிப் பிரபஞ்சன் அந்தப் பொண்ணு படிப்பு நின்னுட கூடாதுன்னு இவ்வளவு அக்கறை?”
“ஒரு தனி மனுசனா அந்தக் கோபம் அப்படியே தான் இருக்கு சார். ஆனால் ஒரு ஆசிரியரா என்னால் ஒரு மாணவியோட படிப்பு கெடுவதை நான் விரும்பவில்லை. இப்ப நான் ஒரு ஆசிரியராத்தான் பேசுறேன்…” என்றான்.
“உங்களைப் போல் ஒரு டீச்சர் கிடைக்க இந்த ஸ்கூல் கொடுத்து வச்சுருக்கணும் பிரபஞ்சன். நீங்களே பைரவியை ஸ்கூலுக்கு வரச் சொன்னால் அந்தப் பொண்ணோட அப்பா உடனே அனுப்ப வாய்ப்பு உண்டே பிரபஞ்சன். நீங்க சொல்றீங்களா?” என்று கேட்டார்.
“இல்லை சார், நான் இப்படிச் சொல்வதற்கு ஸாரி சார். நீங்களே பேசுங்க. இல்லைனா நம்ம ஸ்கூல் டீச்சர்ஸ் யாரையாவது பேச சொல்லுங்க…” என்றான்.
“சரி பிரபஞ்சன். உங்களைச் சங்கடப்படுத்த விரும்பலை. நானே பேசுறேன்…” என்றார் முதல்வர்.
அதை இப்போது நினைத்துப் பார்த்தான். கூடவே அவனின் அன்னை, தந்தையின் ஞாபகமும் வந்தது.
பைரவியின் படிப்பு பற்றி அக்கறை காட்டிய தன்னால் தன் பெற்றவர்களை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.
பைரவியை மாணவி என்று பிரித்துப் பார்க்க முடிந்தது. ஆனால், பெற்றவர்கள் அவனின் ரத்தமும் சதையுமாகக் கலந்தவர்கள் அல்லவா?
அவர்கள் ஏன் என்னைப் புரிந்து கொள்ளாமல் போனார்கள் என்று இன்னும் கோபம் தான் அதிகரித்தது.
அவனை மேலும் அவனுக்குள் உழன்று கொண்டிருக்க விடாமல் வீட்டின் அழைப்பு மணி அழைத்தது.
கதவை திறந்ததும், “ஹாய் அத்தான், ஸ்கூல் போயிட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே வீட்டுற்குள் நுழைந்தாள் ராகவர்தினி.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன் ராகா…” என்றான் பிரபஞ்சன்.
அவளின் பின் மாதவனும் வர, “வாங்க மாமா…” என்று வரவேற்றான்.
“அழைப்பு உங்க மாமாவுக்கு மட்டும் தானா? இந்த மாமா பெத்த பொண்ணுக்கு இல்லையா?” என்று இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டு கேட்டாள் ராகவர்தினி.
கதவை மூடி விட்டு வந்தவன், “இப்ப நான் உன்னை வரவேற்கலைனா அப்படியே கிளம்பி போயிட போறீயா என்ன?” என்று பிரபஞ்சன் நக்கலாகக் கேட்க,
“அதெப்படி போக முடியும்? நான் உங்ககிட்ட பேசத்தான் வந்தேன். பேசி முடிச்சுட்டுத்தான் கிளம்புவேன்…” என்று வீராவேசமாகச் சொன்னவள் அங்கிருந்த நாற்காலியில் சட்டமாக அமர்ந்து கொண்டாள்.
அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவன், “நீங்க உட்காருங்க மாமா. டீ போடுறேன், குடிக்கிறீங்களா?” என்று கேட்டான்.
“டீயா? உங்களுக்குப் போட தெரியுமா என்ன?” வியந்து கேட்டாள் ராகவர்தினி.
“இனி ஒவ்வொன்னா பழகிக்க வேண்டியது தான். அதான் வரும் போதே பால் வாங்கிட்டு வந்தேன். எத்தனை நாளைக்குத்தான் நான் ஹோட்டலிலேயே சாப்பிட முடியும்? இப்போதைக்கு டீயில் இருந்து ஆரம்பிச்சுருக்கேன்…” என்று அவன் சொன்னதும் தன் விளையாட்டுப் பேச்சை விட்டுவிட்டுத் தீவிரமாக அவனைப் பார்த்தாள்.
“ஏன் அத்தான் நீங்க இப்படித் தனியா கஷ்டப்படணும்?” ஆதங்கமாகக் கேட்டாள்.
அவள் எதைச் சொல்கிறாள் என்று உடனே புரிந்து கொண்டவன், “கூடவே இருந்து மனக்கஷ்டம் படுவதை விட, இப்படித் தனியாக இருப்பது ஒன்றும் எனக்குக் கஷ்டமேயில்லை ராகா…” என்றான் அழுத்தமாக.
“அத்தான்…” என்றழைத்து அவள் ஏதோ சொல்ல வர, மகளின் கையைப் பிடித்துத் தட்டிக்கொடுத்த மாதவன் அவளைச் சொல்ல விடாமல் தடுத்தார்.
ஆனாலும் “அத்தான்…” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க, “இந்தப் பேச்சு தேவையில்லை ராகா…” என்றான். அவன் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.
“அட! என்னைச் சொல்ல விடுங்கய்யா…” என்று அலுத்துக் கொண்டவள், “உங்க புதுச் சமையல் பரீட்சைக்குச் சோதனை எலியா எங்களை ஏன் யூஸ் பண்ண பார்க்கிறீங்க அத்தான்?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“எலி தானே வந்தே வலையில் மாட்டினால் பிடிச்சுச் சோதனை செய்யாம விட முடியுமா என்ன? முதல் முறையா டீ போட போறேன். முதல் டீ உனக்குத்தான். அதைக் குடிச்சுட்டு உனக்கு ஒன்னும் ஆகலைனா அடுத்து மாமாவும், நானும் குடிக்கிறோம்…” சிரிக்காமல் சொன்னான்.
“சரிதானே மாமா?” என்று அவன் மாதவனிடமும் கேட்டு வைக்க, அவர் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினார்.
“நோ, இந்த எக்ஸாமுக்கு நான் வரலை…” என்று அலறி அடித்துக் கொண்டு சமையலறைக்கு ஓடினாள்.
“என்ன இது? அலறி அடிச்சு வீட்டுக்கு வெளியே ஓடுவன்னு பார்த்தால் கிச்சனுக்கு ஓடுற?” புரியாமல் கேட்டுக் கொண்டே தானும் பின்னால் சென்றான்.
அவளோ அவன் வாங்கி வந்திருந்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மின்சார அடுப்பின் மீது வைத்தாள்.
“என்ன செய்ற நீ? நீ போய் உட்கார் ராகா, நான் செய்றேன்…” என்றான்.
“இன்னைக்கு நான் செய்றேன் அத்தான்…” என்றாள்.
“ஹய்யோ! அப்போ இன்னைக்குச் சோதனை எலி நானும், மாமாவுமா?” என்று போலியாக அலறினான் பிரபஞ்சன்.
“ம்க்கும். நீங்க இனிதான் பழகணும். ஆனா நான் ஏற்கனவே டீ போடுவதில் எக்ஸ்பெர்ட் ஆக்கும்…” என்று நொடித்துக் கொண்டாள்.
“உனக்கு உங்க வீட்டில் கிச்சன் எந்தப் பக்கம் இருக்குன்னாவது தெரியுமா?” கேலியாகக் கேட்க,
“சும்மா கிண்டல் பண்ணாதீங்க அத்தான். அதெல்லாம் எங்க அம்மா சமையல் செய்ய வச்சுப் பென்டை நிமிர்த்திடுவாங்க. நான் நல்லாவே சமைப்பேன். எங்க அப்பாகிட்ட கேளுங்க…” என்றாள்.
“அப்படியா நம்ம முடியலையே? உனக்கு வெறும் வாயில் வடை சுடத்தான் தெரியும்னு தானே இத்தனை நாளும் நினைச்சுட்டு இருக்கேன்…”
“உங்களுக்குச் சமைச்சு கொடுக்க வாய்ப்பு கிடைக்கலை. இப்ப நான் போடுற டீ குடிச்சு பார்த்துட்டு சொல்லுங்க…” என்றவள் தேநீரை போட்டு அவனிடம் நீட்டினாள்.
வாங்கி ஒரு மிடறு விழுங்கியவன் மெச்சுதலாக அவளைப் பார்த்தான்.
“எப்படி இருக்கு அத்தான்?” என்று ஆவலாகக் கேட்டாள்.
‘சூப்பர்!’ என்று விரல்களால் அபிநயம் காட்டினான்.
தான் போட்டிருந்த சுடிதாரின் காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் ராகவர்தினி.
“அத்தை உன்னை நல்லாத்தான் ட்ரைன் பண்ணிருக்காங்க…” என்றான்.
“அதில் எல்லாம் அவங்க விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க. ஏதோ ஒரு அவசரத்துக்காவது உதவும்னு சமைக்க வச்சுருவாங்க…”
“அத்தை நல்லது தான் செய்திருக்காங்க. இதோ நான் ஒன்னும் தெரியாம இப்போ ஹோட்டலில் சாப்பிட்டுட்டு இருக்கேனே…” என்று அவன் சாதாரணமாகச் சொல்வது போல் இருந்தாலும் அதில் அவனின் வேதனையும் கலந்தே இருந்தது.
“கவலைப்படாதீங்க அத்தான், நான் நேரம் இருக்கும் போது இங்கே வந்து சமைச்சு வச்சுட்டு போறேன்…” என்றாள்.
“வேண்டாம் ராகா. நீ உன் படிப்பை பார்! நான் இங்கே சமாளிச்சுப்பேன். இப்பத்தான் இருக்கவே இருக்கு யூட்டூப். அதைப் பார்த்து ஏதாவது செய்து சாப்பிட்டுக்குவேன்…” என்றான்.
“நான் என்ன தினமுமா சமைக்க வர்றேன்னு சொன்னேன்? என்னால் முடியும் போது வருவேன். நீங்க எல்லாத்துக்கும் மறுப்பு சொல்லிட்டே இருக்காமல் இருங்க…” என்றாள்.
“உன்கிட்ட பேச முடியுமா? அது சரி, அத்தை இன்னும் என் மேல கோபமா இருக்காங்களா?” மாதவனுக்குக் கேட்டுவிடாமல் இருக்க ரகசிய குரலில் கேட்டான்.
“கோபமா? அதெல்லாம் இல்லை. உங்களை இங்கே விட்டுட்டு நாங்க வீட்டுக்குப் போனதும் அப்பா அம்மாவை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டாங்க. அதுக்குப் பிறகு அவசரப்பட்டு உங்களைத் திட்டிட்டதாக அம்மா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க…” என்றாள்.
“ஓ!” என்றவன் அமைதியானான்.
மாதவனுக்குத் தேநீரை கொடுத்து விட்டு, மீண்டும் சமையலறைக்கு வந்தவள், “நேத்துக் கொஞ்சம் அரிசியும், கொஞ்சம் மளிகை சாமானும் வாங்கி வச்சுட்டுப் போனேன் அத்தான். நைட்டுக்குச் சாதம் வச்சு ரசம், துவையல் வைக்கட்டுமா? இல்லை டிபன் மாதிரி ஏதாவது வேணுமா?” என்று கேட்டாள்.
“இப்ப சமைக்கப் போறீயா? வீட்டுக்கு கிளம்பலையா?”
“சமைச்சு வச்சுட்டு போறேன் அத்தான்…” என்று அவனிடம் சொன்னவள், “அப்பா நைட்டுக்கு அத்தானுக்கு ஏதாவது சமைச்சு வச்சுட்டு வீட்டுக்கு கிளம்புவோமா?” என்று கேட்டாள்.
“சரிம்மா, செய்!” என்றார் மாதவன்.
“அப்போ சாதமே வை ராகா. நான் ஏதாவது ஹெல்ப் செய்யவா?” என்று கேட்டான் பிரபஞ்சன்.
“நான் பார்த்துக்கிறேன் அத்தான். நீங்க சும்மா பேசிட்டு இருங்க…” என்றவள் ரசம் வைக்கப் புளியை ஊற வைத்தாள்.
அப்போது சமையலறை வாயிலில் வந்து நின்ற மாதவன், “எனக்குப் பக்கத்தில் இங்கே ஒரு வேலை இருக்கு பிரபா. நான் போயிட்டு வர்றேன்…” என்றார்.
“சரி மாமா…” என்றதும், மகளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
சிறிது நேரம் இருவரும் பொதுவாகப் பேசிக் கொண்டே வேலையைத் தொடர்ந்தனர்.
வேலை செய்து கொண்டிருந்தாலும், ராகவர்தினியின் கண்கள் அவ்வப்போது பிரபஞ்சனின் விரலில் இருந்த மோதிரத்தையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன.
காலையில் மாதவன் வந்து விட்டுப் போனதும் மோதிரத்தை கழற்ற மறந்து அப்படியே பள்ளிக்குக் கிளம்பியிருந்தான்.
இப்போது வீடு வந்த சிறிது நேரத்திலேயே இருவரும் வந்து விட்டதால் மோதிரம் இன்னும் அவனின் விரலில் தான் இருந்தது.
“அத்தான், நான் ஒன்னு கேட்கலாமா?” என்று மெல்ல ஆரம்பித்தாள் ராகவர்தினி.
“கேள் ராகா…”
“உங்க மேல தான் எந்தத் தப்பும் இல்லைன்னு நிரூபணம் ஆகிருச்சே. அப்போ நின்னு போன கல்யாணத்தைப் பத்தி மேல பேசி நடத்தலாமே அத்தான்?” என்று மெல்ல கேட்டாள்.
அவளின் கேள்வியை உள்வாங்கியவன் முகம் அடுத்த நொடி இறுக்கத்தைச் சுமந்தது.
“அதைப் பற்றிப் பேச வேண்டாம் ராகா…” என்றான் அழுத்தமாக.
“ஏன் அத்தான்?”
“வேண்டாம், விடு!”
கையில் இன்னும் இருக்கும் மோதிரம் ‘விடு!’ என்று சொல்வது போல் இல்லையே என்று நினைத்துக் கொண்டாள்.
“நீங்க நந்திதா அக்காவிடம் பேசினீங்களா அத்தான்?” என்று அடுத்தக் கேள்வியை முன் வைத்தாள்.
“நான் ஏன் பேசணும்? என்னை யார் வேண்டாம்னு நினைச்சாங்களோ… அப்பவே எனக்கும் அவங்க வேண்டாம்!” என்றான் உறுதியாக.
“அந்த நேரத்தில் அப்படி அவசர முடிவு எடுத்திருக்கலாம் அத்தான். இப்ப நீங்க வெளியே வந்தது தெரிந்த பிறகு மனசு மாறியிருக்கலாமே?”
அவளுக்கு ஏனோ அவனை அப்படியே விட்டுவிட மனதில்லை.
அவனின் மீது எந்தத் தவறும் இல்லை என்று தான் பெண் வீட்டினருக்கும் இப்போது தெரிந்திருக்குமே… அப்புறம் ஏன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யவில்லை? என்று தந்தையிடமும் கேட்டாள்.
பிரபஞ்சன் தனியாக வந்ததால் அதைப் பற்றிய கவலையில் அத்தானும், அக்காவும் அவனின் திருமணப் பேச்சை எடுக்கவில்லை என்றார் மாதவன்.
அதோடு பிரபஞ்சனும் என்ன நினைவில் இருக்கிறான் என்று புரியவில்லை என்றார்.
அதைப் பற்றிப் பேசலாம் என்று நினைத்தே இருவரும் அவனைப் பார்க்க வந்திருந்தனர்.
தாங்கள் வந்ததும் பிரபஞ்சன் நல்ல மனநிலையில் இருந்ததால் அவனின் மனநிலையை மாற்ற வேண்டாம் என்று நினைத்து மாதவன் அமைதியாகிவிட்டார்.
அவர் வெளியே இருக்கும் வேலையை முடித்து விட்டு வந்து கேட்கலாம் என்று நினைத்தே சென்றிருந்தார்.
ஆனால் அதற்குள் ராகவர்தினி மோதிரத்தை பார்த்ததும் பேச்சை ஆரம்பித்து விட்டாள்.
“அவங்க மனசு மாறினால் என்ன? மாறலைனா என்ன? முடிந்து போனது போனதாகவே இருக்கட்டும்…” என்றான்.
வெளியே அப்படிச் சொல்லிவிட்டான் தான். ஆனால் அவனுக்கும் ஏமாற்றமாகத் தான் இருந்தது.
மனைவியாக வரப்போகிறவள் என்று நந்திதாவை நினைத்து விட்டு அதிலிருந்து மீண்டு வருவது அவனுக்கு வேதனையாகவும், கடினமாகவும் தான் இருந்தது.
அதேநேரம் அவனை அருவருப்பாகப் பார்த்து விட்டு அவள் விலகிச் சென்றது இன்னும் ரணமாக உள்ளே வலித்துக் கொண்டிருந்தது. அதில் இருந்தும் அவனால் மீள முடியவில்லை.
இருவேறு மனநிலையில் தவித்துக் கொண்டிருந்தான் என்பதே உண்மை.
வார்த்தையில் தான் வேண்டாம் என்கிறான். உள்ளுக்குள் தவித்துக் கொண்டு தான் இருக்கிறான் என்று அவனிடம் பேசிய சில வார்த்தைகளிலேயே ராகவர்தினிக்கு புரிந்து போனது.
பெற்றவர்களிடமிருந்து பிரிந்திருக்கும் நிலையில் அவனின் திருமணத்தைப் பற்றி மேற்கொண்டு பேசுவார்களா இல்லையா என்றும் தெரியவில்லை.
தன் தந்தையின் மூலம் பேச சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
“சமையல் முடிந்தது அத்தான். அப்பா வந்ததும் நான் கிளம்புறேன்…” என்றவள் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டாள்.
“தேங்க்ஸ் ராகா…” என்றவன் அவனும் ஒரு இருக்கையில் அமர,
“தேங்க்ஸ் சொன்னா உப்பை நிறைய அள்ளி ரசத்துல போட்டு விட்டு போயிடுவேன்…” என்று மிரட்டினாள்.
“ஹாஹாஹா… சொல்லலை தாயே சொல்லலை. ஆளை விடு. இன்னைக்கு வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்னு ஆசைப்பட்டுட்டேன். அதில் உப்பை அள்ளி போட்டுடாதே!” என்றான் பயந்தவன் போல்.
“தனிமை வாசம் எப்படி இருக்கு அத்தான்?” என்று கேட்டாள்.
“தனிமை எப்படி இருக்குமோ அப்படி இருக்கு ராகா…” என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னான்.
இதற்கும் அவன் இன்னும் முழுமையாகத் தனிமையை அனுபவிக்கவில்லை என்பதே உண்மை. அதற்குள் அவனிடம் வேறுபாடு வந்திருந்தது அவளுக்குப் புரிந்தது.
‘அவனின் தனிமையைப் போக்கவாவது நந்திதா அவன் வாழ்க்கையில் வர வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவனிடம் பேசிக் கொண்டே தனது கைபேசியில் வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தாள்.
நெட் இல்லாமல் அது ஆப்லைனில் இருந்தது.
“ச்சே, இன்னைக்கு ரீசார்ச் செய்யணும்னு நினைச்சு மறந்தே போயிட்டேன் அத்தான். உங்க நெட் கொஞ்சம் கொடுங்களேன்…” என்று கேட்டாள்.
“இந்தா என் போன், நீயே நெட் ஆன் பண்ணிக்கோ. நான் இதோ வர்றேன்…” என்று அவளிடம் கைபேசியைக் கொடுத்து விட்டு படுக்கையறைக்குச் சென்றான்.
அவனின் இணையத்தைத் தனது கைபேசிக்கும் பகிர்ந்து கொண்டவள், தற்செயலாக அவன் போனின் ஸ்கிரீன் சேவரை பார்த்தாள்.
இயற்கை காட்சி படம் ஒன்றை தான் வைத்திருந்தான். ஆனால் அதிலும் ஒரு ஓரத்தில் ஒரு பெண் முகம் சிறியதாகத் தெரிய யார் என்று பார்த்தாள்.
நந்திதாவின் முகம் தான் அது. அதுவும் பார்த்ததும் சட்டென்று தெரிந்து விடாத படி செட் செய்து வைத்திருந்தான்.
மோதிரத்திற்கு அடுத்து அந்தப் புகைப்படமும் அவனின் மனதை சொல்வது போல் இருந்தது.
அடுத்ததாக, அவனின் அம்மா, அப்பாவின் அலைபேசி எண்ணை பிளாக் செய்து விட்டான் போல என்று தந்தை சொன்னது ஞாபகம் வர, நந்திதா எண் என்னானது? என்று தேடிப் பார்த்தாள்.
நந்திதாவின் அலைபேசி எண் இன்னும் பிளாக் செய்யப்படாமல் தான் இருந்தது.
அன்னை, தந்தையைப் பிளாக் செய்தவன், நந்திதாவை மட்டும் விட்டு வைத்திருக்கிறான் என்றால், அவனின் கோபம் தான் நினைத்தது போல் வீம்பான கோபம் மட்டுமே. மனதார இன்னும் நந்திதாவை அவன் வெறுக்கவில்லை என்பதை உறுதி செய்தாள் ராகவர்தினி.