12 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 12
“என்ன நித்திலா சொல்ற?” என்று அதிர்ந்த குரலில் கேட்டான் நிரஞ்சன்.
“நீ… நீ… என்னபா? எப்படி?” என்று மேலும் கேட்க முடியாமல் தடுமாறி நிறுத்தினார் செவ்வந்தி.
“ஆமாம்மா… உண்மையாத்தான் சொல்றேன். என்னையும் ஒரு குழந்தை அப்பான்னு கூப்பிட்டுச்சுமா. அப்ப நான் எப்படி உணர்ந்தேன் தெரியுமா?” என்று லயித்துக் கூறிய மகனை கலக்கத்துடன் பார்த்தார் செவ்வந்தி.
“நித்திலா, என்ன சொல்ற நீ? எந்தக் குழந்தை அப்படிக் கூப்பிட்டுச்சு?” என்று நிரஞ்சன் விசாரித்தான்.
‘எங்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து, குழந்தையும் பிறந்து விட்டதா?’ என்று கோபம் கொள்ளவில்லை, குதிக்கவும் இல்லை.
நித்திலன் அப்படிச் செய்ய மாட்டான் என்று நன்கு அறிந்தவர்களாக நிதானமாகவே விசாரித்தனர்.
“வருணா கூப்பிட்டாள் ணா. என்னோட குட்டிம்மா அவள். என் மேல அவளுக்கு அவ்வளவு பிரியம்…” என்று அவன் ஆனந்தமாகக் கூற, செவ்வந்தியும், நிரஞ்சனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“யார் பொண்ணுபா அது?” என்று செவ்வந்தி விசாரிக்க,
“பக்கத்து வீட்டில் இருக்கும் துர்காவோட பொண்ணுமா…”
“ஓ! அந்தக் குழந்தையோட அப்பா எங்கே?” என்று யோசனையுடன் கேட்டார்.
“வருணா பாவம் மா. அவளுக்கு அப்பா இல்லை. அவள் பிறக்கும் முன்னாடியே ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டார்…” என்று அவன் சொன்னதுமே துர்கா ஏன் மகனை திட்டிக் கொண்டிருந்தாள் என்பதின் காரணம் அவருக்குப் புரிந்து போனது.
கணவன் உயிரோடு இல்லாத நிலையில் தன் குழந்தை பக்கத்து வீட்டுக்காரனை ‘அப்பா’ என்று அழைத்தால் அவள் திட்டாமல் என்ன செய்வாள் என்று தான் அவருக்குத் தோன்றியது.
“வருணான்னா எனக்கும் ரொம்பப் பிடிக்கும் மா. அவ்வளவு சுட்டி அவள். என்கிட்ட வந்தால் அவளோட அம்மாகிட்ட கூடப் போகமாட்டேன்னு அடம்பிடிப்பாள். நான் அவளுக்குச் சாப்பிட கொடுத்தால் என்கிட்ட சமத்தா சாப்பிடுவாள்…” என்று அவன் குழந்தையைப் பற்றிப் பேசிக் கொண்டே போக, மீண்டும் மூத்த மகனும், அன்னையும் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
“அவள் இன்னைக்கு என்னை அப்பான்னு கூப்பிடும் போது அப்படியே என் நாடி நரம்பெல்லாம் ஆடிப் போச்சுமா. இந்த வார்த்தையைக் கேட்கத்தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன் போல…” என்று குரல் கரகரக்க சொல்ல,
“நித்திலா…” என்று இருவரும் அதிர்ந்து குரல் கொடுத்தனர்.
“நான் சொன்னது உண்மை தான்மா? ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இந்த உயிர் போயிருக்க வேண்டியது. ஆனா என் உயிர் போவதை ஏன் அந்த ஆண்டவன் விரும்பலைன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட வருத்தப்பட்டிருக்கேன். ஆனா இன்னைக்குத் தான் அந்த ஆண்டவன் என்னை ஏன் உயிரோட வச்சுருக்கானே புரிந்தது…” என்று லேசாகக் கலங்கிய கண்களுடன் சொன்னான் நித்திலன்.
“என்னடா இது இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? என்னமோ வாழ்ந்து முடிச்ச கிழவன் போல…” என்று நிரஞ்சன் கடிந்து கொள்ள, செவ்வந்தியோ மகனின் பேச்சை கேட்டு வாய் விட்டே அழ ஆரம்பித்தார்.
“அம்மா, எதுக்கு இப்ப அழறீங்க? நான் இப்ப சந்தோஷமாத்தானே இருக்கேன். அழாதீங்க…” என்று அன்னையைத் தேற்றியவன்,
“வாழ்ந்து முடிச்ச கிழவன் சாவை பற்றிப் பேசுறது போல, வாழவே லாயிக்கில்லாத நானும் பேசலாம் ணா…” என்று நித்திலன் வரண்ட குரலில் கூற,
“டேய், என்ன பேச்சு பேசுற? இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு உன்கிட்ட சொல்லிருக்கேன்ல…” என்று நிரஞ்சன் அதட்ட,
விரக்தியான சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தான் நித்திலன்.
செவ்வந்தி இன்னும் அழுது கொண்டிருக்க,
“அம்மா, அம்மா… அழாதீங்க. இனி அப்படிப் பேச மாட்டேன்…” என்று ஏதேதோ சொல்லி அவரைத் தேற்ற முயன்றான்.
“இப்படி எல்லாம் பேசாதே பா. பெத்த வயிறு துடிக்கிது. நெஞ்செல்லாம் வலிக்குது. ஆசை ஆசையா இரண்டு ஆம்பளை பிள்ளை பெத்தேன். ஆனா இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கலை.
வீட்டுக்கு வந்த ஒரு மருமகளும் பிடிங்கி தின்கிறா. உன் வாழ்க்கை மலரவே இல்லை. என் வாழ்க்கையில் நிம்மதியும் இல்ல…” என்று புலம்பிக் கொண்டே அழுதார் செவ்வந்தி.
“அம்மா, என் வாழ்க்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை. என்ன அவ கொஞ்சம் வாய் அதிகமா பேசுறா. அது தவிர நான் நல்லாத்தான் இருக்கேன். நித்திலனுக்கும் ஏதாவது வழி கிடைக்கும்…” என்று நிரஞ்சன் அவரின் மனதை தேற்ற,
“அம்மா, எனக்கும் இப்ப எந்தக் குறையும் இல்லமா. என் மனசை நிறைச்ச ஒருத்தி, என்னை அப்பான்னு கூப்பிட்ட குட்டிம்மா. அவங்களை நினைச்சுட்டே வாழ்ந்து முடிச்சிருவேன். அதனால் கவலைப்படாதீங்க…” என்று அன்னையைத் தேற்றும் வேகத்தில் துர்காவை பற்றியும் உளறி வைத்தான் நித்திலன்.
அவன் ‘மனதை நிறைத்த ஒருத்தி!’ என்று சொன்னதுமே செவ்வந்தியின் அழுகை சட்டென்று அடங்கிப் போனது.
நிரஞ்சனும் தம்பியைக் கூர்மையாகப் பார்த்தான்.
அவர்களின் பார்வையில் தான் என்ன சொன்னோம் என்று யோசித்த நித்திலன் மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்.
“நித்திலா, இப்ப என்ன சொன்ன நீ?” என்று செவ்வந்தி ஆர்வமாகக் கேட்க,
“என்னமா? குழந்தை என்னை அப்பான்னு கூப்பிட்டது சந்தோசம்னு சொன்னேன் மா. வேற எதுவும் சொல்லலையே…” என்று மழுப்பலாகப் பதில் சொன்னவன்,
“நான் பாருங்க, ஊரில் இருந்து வந்தவங்களைக் கவனிக்காம பேசிட்டு இருக்கேன். நைட்க்கு என்ன சாப்பிடுறீங்க? நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு வந்தேன். உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னால் வாங்கிட்டு வர்றேன்…” என்று பேச்சை மாற்றினான் நித்திலன்.
அவன் பேச்சை மாற்றுகிறான் என்று தெரிந்தாலும் மேலும் செவ்வந்தி ஏதோ விசாரிக்கப் போக, அவரின் கையைப் பிடித்து அழுத்தி வேண்டாம் என்று லேசாகத் தலையை அசைத்தான் நிரஞ்சன்.
“எனக்கு ஒரு மசாலா தோசை வாங்கிக்கோ நித்திலா, அம்மா நைட் இட்லி தானே சாப்பிடுவாங்க. அதையே வாங்கிக்கோ…” என்றான்.
“ஆமாபா, எனக்கு இட்லி போதும். அப்படியே வீட்டில் சமைக்க எதுவும் இல்லைனா கொஞ்சம் காய்கறி எல்லாம் வாங்கிக்கோ. காலையில் சமைக்கத் தேவைப்படும்…” என்றார்.
“சரிமா, வாங்கிட்டு வர்றேன்…” என்றவன் உடனே வெளியே கிளம்பினான்.
துர்காவின் வீட்டை தாண்டும் போது அவனை அறியாமலேயே அவனின் கண்கள் அவள் வீட்டின் பக்கம் திரும்பியது.
கதவு லேசாகத் திறந்திருந்தது.
சமையலறையில் துர்கா எதையோ உருட்டிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. குழந்தையின் குரல் கேட்கவில்லை. தூங்கியிருப்பாள் என்று நினைத்த வண்ணம் வீட்டை கடந்து சென்றான்.
இனி குழந்தையைப் பார்க்க கூடாது, தூக்க கூடாது என்று சொல்லிவிட்டாளே என்று வருந்திய அதே நேரம், அவளையும் பார்க்க முடியாதோ என்று தவித்துத்தான் போனான்.
குழந்தை மட்டுமல்ல, அவளும் தன் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டாள் என்று அவனுக்குப் புரிந்தது.
அன்னை, மகள் இருவரின் நினைவையும் மனதில் சுமந்த வண்ணம் கடைக்குச் சென்றான்.
“என்ன நிரஞ்சா, நித்திலன் எந்தப் பொண்ணையோ மனசில் நினைச்சுட்டு இருக்கான் போலயே? ஆனா நம்மகிட்ட இருந்து மறைக்க நினைக்கிறானே… இப்ப என்னபா பண்றது?” என்று வீட்டில் பெரிய மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் செவ்வந்தி.
“எனக்கும் என்ன செய்வதுன்னு தெரியலை மா. முதலில் அவன் மனதில் இருக்கும் பொண்ணு யாருன்னு நமக்குத் தெரியணும். அதுக்குப் பிறகு தான் எதையும் யோசிக்க முடியும்…” என்றான்.
“ஒருவேளை இப்படி இருக்குமோ?”
“எப்படிமா?”
“பக்கத்து வீட்டு குழந்தை அப்பான்னு கூப்பிட்டதுக்குச் சந்தோஷப்பட்டானே… ஒருவேளை அந்தக் குழந்தையோட அம்மாவை மனசில் நினைச்சிருக்கானோ?” என்று சந்தேகமாகக் கேட்டார்.
“அதை நாமே கற்பனை பண்ணிக்க முடியாதேமா? ஒருவேளை அவன் கூட வேலை பார்க்கிற பொண்ணா கூட இருக்கலாமே?” என்று நிரஞ்சன் யோசனையுடன் கேட்க,
“ஓ!” என்ற செவ்வந்தி வருத்தத்துடன் முகத்தைச் சுருக்கினார்.
“அவன் மனசிலும் ஒருத்தி இருக்காள்னு தெரிந்ததும் ரொம்பச் சந்தோஷப்பட்டேன். ஆனா இப்ப அந்தப் பொண்ணு யாருன்னு கேட்டாலும் சொல்வானான்னு தெரியலை. அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையவே செய்யாதா நிரஞ்சா?” என்று வருத்தமாகக் கேட்டார்.
“அமையும் மா. அவனையும் புரிந்து கொண்ட ஒருத்தி வருவா…” என்றான்.
“வந்தால் சந்தோஷம் தான். ஆனா…” என்றவர் மேலும் அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நிறுத்தினார்.
“இப்ப நாம அதைப் பத்தி பேசி குழப்பிக்க வேண்டாம் மா. நீங்க கொஞ்ச நாள் அவன் கூட இருக்கப் போறீங்கல… அப்போ அவனைக் கவனிச்சு பாருங்க. மெல்ல மெல்ல பேச வச்சு அவன் மனசில் யார் இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கோங்க. பொண்ணு யாருன்னு தெரிய வந்த பிறகு என்ன செய்றதுன்னு யோசிப்போம்…” என்றான் நிரஞ்சன்.
“சரிப்பா. நீ சொன்ன மாதிரி செய்றேன்…” என்றார்.
அவர்கள் பேசி முடித்த நேரத்தில் கடைக்குச் சென்றிருந்த நித்திலன் திரும்பி வந்திருந்தான்.
அன்னைக்கும், தமையனுக்கும் உணவை எடுத்துக் கொடுத்தான். அவர்கள் உண்டதும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் படுக்கத் தயாராகினர்.
உள்ளறையில் ஒற்றை ஆள் படுக்கும் ஸ்டீல் கட்டில் இருந்தது. அதிலும் மெத்தை இல்லை. ஒரு போர்வையை விரித்து அதில் அண்ணனை படுக்கச் சொன்னான்.
“என்னடா, ஒரு மெத்தை வாங்கிப் போட்டுப் படுக்கக் கூடாது? ஏன்டா இப்படிச் சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்க?” என்று கேட்டான் நிரஞ்சன்.
“உனக்கு மெத்தை இல்லாம தூக்கம் வராதாண்ணா? நான் வேணும்னா இப்ப போய் மெத்தை கடை திறந்து இருக்கான்னு பார்த்துட்டு வரட்டுமா?” என்று கேட்ட தம்பியைக் கடுமையாக முறைத்தான்.
“என்னண்ணா?”
“நான் எனக்குப் படுக்கவா கேட்டேன்? தினமும் நீயும் இப்படி மெத்தை இல்லாம படுக்கிறயேன்னு உனக்காக நான் சொன்னால்… இன்னைக்கு ஒரு நாள் படுக்கிறதுக்கு நீ எனக்கு மெத்தை வாங்க போறீயாக்கும்?” கடுப்பாகக் கேட்டான்.
“எனக்கு இதே போதும் ணா. மெத்தை சுகம் எல்லாம் இப்ப எனக்குப் பிடிக்கிறது இல்லை…” என்ற தம்பியை இப்போது வேதனையுடன் பார்த்தான்.
“ஏன்டா இப்படியெல்லாம் பேசுற? வாழ்க்கையை அனுபவி நித்திலா. உன் பைக் ஊரில் கிடக்கு. அது வேண்டாம்னு சொல்லிட்டு, இங்கே தினமும் பஸ்ஸிலும், ஆட்டோவிலும் போயிட்டு இருக்க. ஒரு அட்டாச் பாத்ரூம் இருக்கிற மாதிரி வீடு பிடிக்காம, இப்படிக் காம்பவுண்டு வீடா பிடிச்சு கஷ்டப்பட்டுட்டு இருக்க. சமையல் செய்ய ஒரு ஆள் போட்டுருந்தால் அவங்க வந்து சமைச்சு கொடுத்துட்டுப் போயிருக்கப் போறாங்க.
அதை விட்டு தினமும், மூணு நேரமும் கடையில் சாப்பிட்டுட்டு இருக்க. இதெல்லாம் என்னடா? ஏன் இப்படிச் செய்ற? நான் தான் தப்புப் பண்ணிட்டேன். நடுவில் நான் வந்து உன்னைப் பார்த்திருக்கணும். முன்னாடியே பார்த்திருந்தால் உன்னை இப்படிச் சந்நியாசி மாதிரி வாழ விட்டுருக்க மாட்டேன்…” என்றான் வருத்தமாக.
“இதில் நீ வருத்தப்பட ஒண்ணுமில்லை ணா. நான் எல்லா வசதியோடும் வாழ்ந்து முடிச்சுட்டேன். எனக்கு இந்தப் புது வாழ்க்கை பிடிச்சுருக்கு. தனியா பயணம் பண்ணாம மக்களோடு மக்களாகப் பஸ்ல போகணும்னு தான் ஊரிலிருந்து பைக்கை எடுத்துட்டு வரலை. தனியா எல்லா வசதியோடும் வீடு பிடிச்சு தனியா வாழ்ந்து என்ன செய்யப் போறேன்?
இங்கேனா விதவிதமான குணத்தோட நாலு ஜனங்க சுத்தி இருக்காங்க. சாப்பாடும் வாய்க்கு ருசியா சாப்பிட்டு இந்த உடம்பை வளர்ந்து என்ன செய்யப் போறேன்? இருக்கிறது போதும் ணா. இதில் நான் சந்தோஷமா இருக்கேன்…” என்றான் நித்திலன்.
அவனின் பேச்சை கேட்ட நிரஞ்சனும், செவ்வந்தியும் வேதனையுடன் அவனைப் பார்த்தனர்.
இப்படி ஆகிவிட்டானே? என்ற துக்கம் அவர்கள் தொண்டையை அடைத்தது.
அவர்களின் வேதனையைப் பார்த்தவன், “நீங்க இவ்வளவு வருத்தப்படுற அளவுக்கு நான் எந்தக் கஷ்டமும் படலை. இப்ப வாழ்ற வாழ்க்கையை அனுபவிச்சுத்தான் வாழ்றேன். அதனால் என்னைப் பத்தி கவலையை விடுங்க…” என்று அவர்களைத் தேற்ற முயன்றான்.
ஆனால் அவர்களின் முகங்கள் தெளியவே இல்லை.
“சரி, அதை விடுங்க. அண்ணி எப்படி உங்களை விட்டாங்கமா? நீயும் வந்திருக்கியேணா… உன்னை எப்படி விட்டாங்க? அதிசயமா இருக்கே?” எனறான்.
“நீ என் தம்பிடா. உன்னைப் பார்க்க அவள்கிட்ட நான் அனுமதி கேட்கணுமா என்ன?” என்று கேட்ட தமையனை கிண்டலாகப் பார்த்தான் நித்திலன்.
“நீயே அம்மாகிட்ட கேளு. நான் அவள்கிட்ட அனுமதி கேட்காமல் தான் கிளம்பி வந்திருக்கேன்…” என்று நிரஞ்சன் சொல்ல, நித்திலன் அன்னையைக் கேள்வியாகப் பார்த்தான்.
“அவன் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்னாள் பா. அவளை அங்கே விட்டுட்டு நாங்க இங்கே கிளம்பி வந்தோம்…” என்றார் செவ்வந்தி.
“ஓ! அப்போ நீங்க இரண்டு பேரும் இங்கே வந்திருப்பது அவங்களுக்குத் தெரியாதா? இதுதான் நீ அவங்ககிட்ட அனுமதி கேட்காமல் வந்த ரகசியமா? சரிதான்…” என்று அண்ணனை பார்த்து கிண்டலாகச் சிரித்தான்.
“ஏய், போதும் டா. தூங்கு. அவள் வாயில் அரைபட வேண்டாம்னு தான் சொல்லலை. நான் காலையில் கிளம்பிப் போயிருவேன். அம்மா ஒரு வாரத்துக்கு இங்கே இருக்கட்டும். அவள் வர ஒரு வாரம் ஆகும். அதுக்குப் பிறகு அம்மாவை அனுப்பி வச்சுடு. குழந்தைகளுக்கு அம்மா இல்லனா கஷ்டம். அவ சரியா கவனிச்சுக்க மாட்டாள். ஸ்கூல் போகக் கூடக் குழந்தைங்க சிரமப்பட்டுப் போகும்…” என்றான்.
“அம்மா ஒரு வாரம் இருப்பதே எனக்கு ஹேப்பிண்ணா. அண்ணி வருவதற்கு முன்னாடி சொல்லு. அம்மாவை அனுப்பி வைக்கிறேன். சரி, இப்ப தூங்கலாம்…” என்றான்.
“ஓகே, குட் நைட்!” என்ற நிரஞ்சன் இரும்பு கட்டிலில் படுத்துக் கொள்ள, அன்னைக்கு மடக்கும் கட்டிலை கூடத்தில் விரித்துப் போட்டு அவருக்கு உறுத்தாத வண்ணம் கனமான போர்வையை விரித்துக் கொடுத்தான்.
“நான் கீழே படுத்துக்கிறேன்பா. நீ கட்டிலில் படு…” என்ற அன்னையின் பேச்சை தட்டிக் கழித்தவன், அவரை அதில் படுக்கச் சொல்லிவிட்டு, தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டான் நித்திலன்.
இரவின் சூழலில் அண்ணனும், அன்னையும் தூங்கியதும் நித்திலன் மனம் அவன் கேட்காமலேயே துர்காவையும், வருணாவையும் தேடி ஓடியது.
ஓடியதை இழுத்துப் பிடித்து வைக்க அவன் முயலவே இல்லை.
இங்கே நித்திலன் அவர்கள் நினைவில் மூழ்கிய அதே நேரம், பக்கத்து வீட்டில் துர்காவும் அவனைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
இன்று மகள் நித்திலனை அப்பா என்று அழைத்தது அவளுக்குப் பெரிய அதிர்ச்சி! அதை விட அதற்கு நித்திலன் காட்டிய உணர்ச்சி கொந்தளிப்புகள் அவளைப் பயமுறுத்தியிருந்தன.
மகள் சொன்னதும் அவன் அவ்வளவு உணர்ச்சிகள் காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி போட்டு அவளை உலுக்க, அவனையும் உலுக்கி எடுத்துவிட்டாள்.
இத்தனை நாட்களும் நல்ல மனிதன். ஒரு நல்ல நண்பன் போல… என்று அவள் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் இன்று ஒரே நாளில் உடைந்து போனது போல் இருந்தது.
அவன் தான் மகளுக்கு அப்பா என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினாள்.
அவனும் ஏதோ காரணத்தை உள்ளே வைத்துக் கொண்டு தான் இத்தனை நாட்களும் தன்னிடம் பழகி இருக்கிறான் என்று நினைத்ததுமே அவளுக்குக் கூசிப் போனது.
இப்படி ஏமாற்றுக்காரனாக இருந்திருக்கிறானே? என்று கசப்புடன் நினைத்துக் கொண்டாள்.
அவள் அப்படி நினைப்பதற்கு வலு கூட்டுவது போல் அமைந்து போனது அவனின் அன்னை, தமையனின் வருகை.
நித்திலன் அவர்களுடன் பேசி பழகிய ஒரு நாளில் கூட அவனின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லியதே இல்லை.
அவன் என்ன காரணத்திற்குச் சொல்லாமல் இருந்தானோ? ஆனால் அவளுக்கு அதை அவன் வேண்டுமென்றே மறைத்தது போல் தான் இன்று நினைக்க வைத்தது.
யாரும் இல்லாதவன் போல் வாழ்ந்தவனுக்கு இன்று அன்னை, அண்ணன் என்று வந்து இறங்கியிருக்கிறார்கள்.
தன்னிடம் வேறு மாதிரி நெருங்க முயன்றிருக்கிறான். இன்னும் என்னென்ன திட்டம் வைத்திருந்தானோ? என்ற கேள்வி தோன்றவுமே அவளுக்கு அவனின் மீது கோபம் தான் வந்தது.
‘இனி அவன் சவகாசமே வேண்டாம். அவனுக்குக் கொடுக்க வேண்டிய பாதிப் பணத்தைக் கொடுத்தாச்சு. நாளைக்கு நகையை அடகு வச்சு மீதியையும் கொடுத்து முடிச்சிடணும். இனி எந்த ஆம்பளைங்களையும் நம்பி பேசவே கூடாது’ என்று நினைத்துக் கொண்டவளுக்கு அனைத்து ஆண்களும் சுயநலம் நிறைந்தவர்களாகவே தெரிந்தனர்.
அதிலும் நித்திலனை இன்னொரு குணாவாக நினைத்து மனதார வெறுத்தாள் துர்கா.