11 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 11

“ஆமா உன்னோட அப்பா, அம்மா உம்மைத் தலை முழுகிட்டாங்களோ? கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரம் ஆகிப் போச்சு. ஆனா இன்னும் நீ உன் அய்யன், ஆத்தாளை பத்தி பேச மாட்டீங்கிற. அவுகளும் புள்ளயை காணோம்னு தேடி வரக் காணோம்…” என்று கேட்டார் மீனாம்பிகை.

“உங்களுக்கு என்ன சீர் செனத்தி வேணுமா? அதுதான் என்னோட அப்பா, அம்மாவை தேடுறீங்களா?” என்று நக்கலாகக் கேட்டாள் சக்தி.

அவளின் கேள்வியில் சுறுசுறுவென ஏறிய கோபத்துடன் மருமகளை முறைத்தார்.

“உம்ம அய்யன் ஆத்தாளுக்கே சீர் செனத்தி செய்ற அளவுக்கு எங்ககிட்ட நிலன் புலன் கிடக்கு. நீ கொண்டு வந்து தான் இங்கே நிறையப் போறது இல்லை. சொத்துப் பத்தை விடச் சொந்தம் வேணும்னு நினைக்கிறவ நான்.

எனக்கு நீ ஆகாத மருமவளா இருந்தாலும் உம்ம பக்க சொந்தப்பந்தத்தையும் தெரிஞ்சிக்கணும்னு கேட்டா, நீ என்ன ரொம்ப வாய் பேசுற?” என்று ஆத்திரமாகக் கேட்டார்.

அவரின் நியாயமான ஆத்திரத்தில் சக்தியின் நக்கல் அடங்கிப் போனது.

“என்னோட அம்மா உயிரோட இல்லை. நான் பத்து வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க…” என்றாள்.

“ஆத்தி! தாயில்லா பிள்ளையா நீ?” சட்டென்று சக்தியின் மீது அவருக்கு இரக்கம் வந்தது.

“உன் அய்யன்?” என்று கேட்டார்.

“ம்ம், இருக்கார்…”

“அவருக்கு உம்ம கல்யாண சேதி தெரியுமா?”

“தெரியும்…”

“தெரிஞ்சியுமா உன்னை வந்து இன்னும் பார்க்காம இருக்கார்?” என்று யோசனையுடன் கேட்டார்.

“அவரால் இப்ப வர முடியாத சூழ்நிலை. ஆனால் கூடிய சீக்கிரம் வருவார்…” என்று சக்தி உறுதியுடன் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கே வந்தான் சர்வேஸ்வரன்.

காலை உணவை உண்டு கொண்டிருந்த மருமகளிடம் மீனாம்பிகை அவளின் குடும்பத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவள் தன் தந்தை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் சரியாக அங்கே சர்வேஸ்வரன் வந்து விட அவனைச் சீண்டிப் பார்க்கும் ஆர்வம் தலை தூக்க, கணவனைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள் சக்தி.

அதிலேயே அவள் தன் அன்னையிடம் அடுத்து என்ன பேச போகிறாள் என்று அனுமானித்தவன் ‘வேண்டாம்’ எனத் தலையசைத்து மறுத்தான்.

மாமியார் அறியாத வகையில் மெலிதாகத் தலையைச் சிலுப்பிக் கொண்டவள், “என்னோட அப்பா யாருன்னு…” என்று அவள் ஆரம்பித்ததும், “அம்மா…” உரக்க அழைத்த படி அருகே வந்தான் சர்வேஸ்வரன்.

“ரொம்பப் பசிக்குது மா. எனக்குச் சாப்பாடு எடுத்து வைங்க. நான் போய்க் குளிச்சிட்டு வர்றேன்…” என்று அன்னையிடம் சொன்னவன், “சக்தி, வா வந்து என் டிரெஸ் எல்லாம் எடுத்துக் கொடு…” சாப்பிட்டு முடித்த மனைவியைக் கண்களால் மிரட்டி ‘என் பின்னால் வா’ என்பதாக அழைத்தான்.

‘போயா… போயா…’ அவனுக்கு மட்டும் தெரியும் வண்ணம் உதட்டசைத்தாள்.

அவளின் அசையும் உதடுகள் அவனை உன்மத்தம் கொள்ளச் செய்தது. அன்னை அருகில் இருந்ததால் தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான்.

“இப்போ நான் அவசரமா மதுரைக்குக் கிளம்பணும் சக்தி. வா, வந்து எனக்குத் தேவையானது எல்லாம் எடுத்துக் கொடு…” என்று அவளை மேலும் அமரவிடாமல் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“மதுரைக்குக் கிளம்பணும்னா நீங்க கிளம்ப வேண்டியது தானே? என்னை ஏன் இழுத்துட்டு வர்றீங்க? நான் எவ்வளவு சுவாரசியமா என் மாமியார்கிட்ட பேசிட்டு இருந்தேன் தெரியுமா?”

அறைக்குள் சென்றதும் சக்தி கடுகாகப் பொரிய, சர்வேஸ்வரனோ நிதானமாகக் கதவை தாழிட்டு வந்தான்.

“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன். இப்ப எதுக்குக் கதவை சாத்துறீங்க? நீங்க போய்க் குளிங்க. நான் போய் என் மாமியார்கிட்ட என் அப்பாவை பத்தி விவரம் சொல்லணும்…” என்று படபடவெனப் பொரிந்தவள் அடுத்த நொடி தனக்கு என்ன நடந்தது என்றே புரியாமல் விழிகளைப் பெரிதாக விரித்து மிரட்சியுடன் கணவனைப் பார்த்தாள்.

ஓயாமல் பேசிய அவளின் மெல்லிய இதழ்களைத் தன் அழுத்தமான உதடுகளால் சிறைப் பிடித்து மனைவியைத் திகைக்க வைத்திருந்தான் சர்வேஸ்வரன்.

தந்தையைப் பற்றிச் சொல்லிவிடுவேன் என்று அவள் காட்டிய மிரட்டலினால் உண்டான கோபமா? இல்லை உதட்டை அசைத்து அவனைப் பித்தம் கொள்ளச் செய்த அவளின் செயலா? ஏதோ ஒன்று. அவனுக்கு அவளின் இதழ்களின் ஸ்பரிசம் தேவையாக இருக்க, அவளின் சம்மதம் இல்லாமலேயே கவர்ந்திருந்தான்.

அவன் திடீரென அப்படிச் செய்வான் என்று எதிர்பாராமல் முதலில் திகைத்து விழித்த சக்தி, பின் ஒரு நொடி மயங்கித்தான் போனாள்.

அந்த மயக்கமும் அடுத்த நொடி அவளை விட்டு விரைந்தோடி விட, பட்டென்று தன் இதழ்களை அவனின் அதரங்களிடமிருந்து பிரித்துக் கொண்டாள்.

அவளை மீண்டும் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன், “நீ வேணும் வேணும்னு என் ஒவ்வொரு அணுவும் துடிக்குது சக்தி. இன்னும் எத்தனை நாள் என்னைக் காக்க வைப்ப?” என்று கேட்டவன் அவளை அணைத்து கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்து அங்கேயே தன் அதரங்களை அழுத்தமாகப் பதித்தான்.

அவனின் கைகளுக்குள் சக்தியின் மனம் மட்டுமில்லாது உடலும் நெகிழ தொடங்கியது.

தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதே அவளுக்குப் பெரும்பாடாக இருந்தது.

உணர்வுகள் காதல் மயக்கத்தில் சிக்கிய அதே நேரத்தில், மனம் விழித்துக் கொள்ள ஆரம்பித்தது.

“என் வைராக்கியத்தை உடைக்கவே இப்படி எல்லாம் நீங்க செய்றீங்களோன்னு எனக்குச் சந்தேகமாக இருக்குச் சர்வேஸ். இப்போ நீங்க என்னை விடலைனா என் உடம்பு வேணும்னா உங்களுக்குக் கீழ் படியும். ஆனா என் மனசு என்னை உயிரோட சாகடிச்சுடும். அது தான் உங்களுக்கு வேணுமா?” என்று கடுமையாகக் கேட்டாள் சக்தி.

அடுத்த நொடி அவளை வேகமாகத் தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான் சர்வேஸ்வரன்.

“ஏன்டி, ஏன்டி இப்படிப் பேசி என்னை உயிரோட சாகடிக்கிற? அப்படி என்ன உனக்கு வீம்பு, கோபம்?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.

“பேசு சக்தி. நமக்குள் என்ன பிரச்சனை சக்தி? நம்ம காதலிச்ச போதும் சரி, பிரியும் போதும் கூடச் சரி நமக்குள் பெருசா எந்தப் பிரச்சனையும் வந்தது இல்லை. அப்போ என் அப்பா இறந்த சூழ்நிலையில் என் வாழ்க்கை முறை சட்டுன்னு மாறியது.

இந்தக் கிராமத்துக்கு வந்து விவசாயம் தான் பண்ண போறேன்னு ஏற்கனவே நான் முடிவு எடுத்திருந்தேன் தான். ஆனால் அதுக்கு இன்னும் டைம் இருக்குன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்த காலக் கட்டம் அது.

ஆனா அப்பா இறந்ததால் உடனே நான் பொறுப்பு ஏற்க வேண்டியதாகப் போயிருச்சு. அந்த நேரத்தில் எதுவுமே சுலபமா என் கை வந்து சேரலை. விவசாயம் ஆளை வச்சுச் செய்தாலும் நானும் அங்கே வேலை பார்த்தே தான் ஆகணும். கூட இறங்கி வேலை பார்த்தால் தான் வேலைக்கு வருகிறவர்களும் நல்லா வேலை செய்வாங்க.

அரையும் குறையுமா தெரிஞ்ச விவசாயத்தை முழுசா கத்துக்கணும். ஊருக்கு நாட்டாமை பொறுப்பில் இருந்து என்ன செய்யணும்னு பார்க்கணும். மில்லை கவனிச்சிக்கணும்னு உட்கார கூட நேரம் இல்லாம சுத்திட்டு இருந்தேன். அந்த நேரத்தில் நீயும் உங்க அப்பா சொன்னது தான் சரி, இந்தக் கிராமத்தில் உன்னால் இருக்க முடியாதுன்னு சொல்லவும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?

நேரில் வந்து உன்னைக் கையோட அழைச்சுட்டு வந்து இந்த ஊரில் இருந்து பாருடின்னு விடணும்னு தோணும். ஆனால் அந்த நேரத்தில் அம்மா மனநிலையையும் நான் பார்க்க வேண்டியதாக இருந்தது.

நீ மட்டும் அப்போ ஒத்துழைச்சு இருந்தால் அம்மாவை கூட எப்படியோ சரி பண்ணி நம்ம கல்யாணத்தை நடத்தியிருப்பேன். ஆனா அந்த நேரம் என் மனசும் கொஞ்சம் பலவீனமாத்தான் இருந்தது. புதுத் தொழில், அம்மா, நீன்னு என்னால் மூணு விஷயத்திலும் போராட தெம்பு இல்லாம தான் கொஞ்ச நாள் நம்ம விஷயத்தை ஆறப் போடுவோம்னு பொறுமையா இருந்தேன்.

ஆனா அது தப்போன்னு இப்ப ஒவ்வொரு நிமிஷமும் நீ நினைக்க வைக்கிற சக்தி. அப்பவே எப்படியாவது உன்னை அழைச்சுட்டு வந்திருக்கணும். சாதாரணமா நான் கொஞ்ச நாள் தள்ளி போட நினைச்சது இப்போ உன்னையே என்னை விட்டு தள்ளி போகும் நிலைக்கு வந்துட்டதை நினைச்சு வலிக்குது சக்தி. மனசு எல்லாம் துடிதுடிச்சு வலிக்குது…” என்றவன் வார்த்தையில் வலி அப்பட்டமாக வெளிப்பட்டது.

அவனின் வலி சக்தியையும் தாக்க வாயடைத்துப் போய் நின்றிருந்தாள்.

அன்றைக்கும் இன்றைக்கும் அவனிடம் இருந்த மாறுதலை கண்டாளே தவிர, அந்த மாற்றத்திற்கு நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறான் என்று இன்று தான் அவளுக்குப் புரிந்தது.

ஒரு விஷயத்தை வாயால் சொல்வதை விட அதைச் செயல்படுத்தும் போது தான் அதனுள் இருக்கும் கஷ்டங்கள் முழுமையாகத் தெரியவரும்.

கிராமத்தில் செட்டில் ஆவது தான் அவனின் எண்ணமாக இருந்தாலும் படித்து இன்னொரு இடத்தில் வேலை பார்த்துவிட்டு, பின் கிராமத்திலேயே இருக்க வேண்டிய நடைமுறைகளைச் செயல்படுத்தும் போது வரும் இன்னல்கள் அதிகம் தான். அதிலும் கிராமத்திற்குத் தலைமை பொறுப்பும் உண்டு என்னும் போது இன்னும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

தெரியாத ஒன்றை கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் என்பதும் சவாலான ஒன்றே. அந்தச் சவாலில் தன் கணவன் ஜெயித்து வந்திருக்கிறான் என்பதில் சக்திக்கு உள்ளுக்குள் சிறு கர்வத்தையும் கொடுத்தது.

“நம்ம விஷயத்தைத் தள்ளிப் போட்டதைத் தவிர நான் எந்தத் தப்பும் செய்யலையே சக்தி? தப்பே செய்யாம எனக்கு ஏன் இந்தத் தண்டனை சக்தி?” என்று கேட்டான்.

என்ன சொல்வாள் சக்தி? அவன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவளுக்கும் நன்றாகத் தெரியும் தான். ஆனால்?

அதற்கு மேல் அவளால் நினைக்க முடியவில்லை.

சூழ்நிலையும் தன்னைக் கட்டிப் போட்டுள்ளதே! என்று நினைத்துக் கொண்டாள்.

“பேசு சக்தி. நான் என்ன தப்பு செய்தேன்னு சொல்லு. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி மனசுக்குப் பிடிச்ச மனைவியைப் பக்கத்தில் வச்சுக்கிட்டே வேடிக்கை பார்க்கணும் சொல்லு…” என்றவன் கேள்விக்கும் சக்தியின் பதில் மௌனமே.

“பேச மாட்டியா சக்தி?” என்று கேட்டான்.

“என்ன பேச?” என்று கேட்ட சக்தியின் குரல் தயங்கியது.

“உன் மனசில் என்ன இருக்குன்னு தெளிவா சொல்லு. என் மேல் என்ன தப்புன்னு நீ நினைக்கிறயோ அதையும் மனசு விட்டு சொல்லு. முக்கியமா என் மேலான உன்னோட காதல் எங்கே போச்சு? அதைக் காட்டக் கூடாதுன்னு ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கன்னு சொல்லு…” என்றான்.

“சொல்லலாம். நிறையச் சொல்லலாம். ஆனா சொன்ன பிறகு என்ன நடக்கும்? எனக்கு இதுக்கான பதில் தான் தெரியலை…” என்றாள்.

“என்ன நடக்கும்? உன் மனசை தெரிஞ்சிக்கிட்டு உனக்கு என் மேல் இருக்கும் குறையை நிவர்த்திச் செய்தால் நம்ம வாழ்க்கை ஆரம்பம் ஆகும். நீயும் நானும் பழைய காதலர்களாக, சிறந்த தம்பதிகளாக வாழ்வோம். எனக்கு அந்த வாழ்க்கை வாழத்தான் ஆசை சக்தி…” என்றான்.

“இல்லை சர்வேஸ், எனக்கு அந்த ஆசை இப்போதைக்கு இல்லை. என்னோட ஆசையே வேற. அந்த ஆசை நிறைவேறுமா சொல்லுங்க. நிறைவேறினால் கண்டிப்பா உங்க ஆசையும் நிறைவேறும்…” என்றாள்.

அவ்வளவு நேரம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த சர்வேஸ்வரனின் வதனங்கள் கோபத்துடன் இறுகின.

“நீ ஆசை பட்டது நடந்தால் என் அப்பாவோட கௌரவமும், வாக்கும் அடிப்பட்டுப் போகும் சக்தி. ஒரு மகனாக என்னால் அதை அனுமதிக்க முடியாது…” என்றான்.

‘இல்லை…’ என்று உடனே மறுப்பாகத் தலையை அசைத்தாள்.

“நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க சர்வேஸ். உங்க அப்பாவோட வாக்கை ஏற்கனவே நீங்க அடிப்பட்டுப் போக வச்சுட்டீங்க. அந்த முதல் அடி அடிச்சதே நீங்க தான்…” என்று சக்தி சொல்ல,

“என்ன சொல்ல வர்ற நீ?” என்று அதிர்வாகக் கேட்டான்.

“நடந்த உண்மையைச் சொல்றேன். நீங்க இந்த ஊருக்கு நாட்டாமையா இருந்து என்ன பண்ண? அந்தப் பதவிக்கு மட்டும் இல்லாம, முன்னாடி நாட்டாமையா இருந்த உங்க அப்பா சொன்ன வாக்கையும் மீறியது நீங்க தான்…” என்றாள்.

“தெளிவா சொல் சக்தி…”

“உங்க ஊர் கட்டுப்பாடு படி ஊரை விட்டு ஒருவரை ஒதுக்கி வைத்தால் அந்த ஒருவரை மட்டும் இல்லாமல் அவரோட மனைவி மக்களுக்கும் தானே அந்தத் தீர்ப்பு செல்லும்?” என்று கேட்டாள்.

“ஆமாம்…” என்றான்.

“அப்படி நடைமுறை இருக்கும் போது நீங்க என்னைக் கல்யாணம் பண்ணியதே பெரும் தவறு தானே சர்வேஸ்? அது ஏன் உங்களுக்குத் தோணாம போச்சு?” என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் அதிர்ந்து விடாமல் நிதானமாகவே அவளைப் பார்த்தான்.

“எனக்குத் தோணாம இருக்குமா சக்தி? அதுவும் ஊருக்கே தீர்ப்பு சொல்லும் பதவியில் இருந்துக்கிட்டு இதைக் கூட நான் யோசிக்க மாட்டேனா? தெரியும், எனக்கும் நல்லாவே தெரியும்.

உங்க அப்பாவை என் அப்பா ஊரை விட்டு ஒதுக்கி வச்சார். ஆனா அவர் பொண்ணான உன்னை நான் கல்யாணம் பண்ணிருக்கேன்.

இது தவறுன்னு இந்த ஊர் கட்டுப்பாடு படி எனக்கு நல்லாவே தெரியும். ஆனால்?” என்று அவன் நிறுத்த,

“ஆனால்?” என்று கேட்டாள்.

“ஆனால் உன் அப்பாவை ஊரை விட்டு ஒதுக்கி வச்ச எந்த விவரமும் தெரியாம இருந்த போதே நம்ம கல்யாணம் சட்டப்படி நடந்துருச்சு சக்தி. அதை இல்லைன்னு மறுக்க முடியுமா?

தெரிந்தே செய்தால் அது தவறு. நம்ம திருமணம் அந்த விவரம் தெரியும் முன்பே நடந்து விட்டதே சக்தி. அதனால் அதைப் பத்தி பெருசா நினைக்க ஒண்ணுமில்லை…” என்றான்.

“இது உங்க நியாயம் சர்வேஸ். இந்த ஊரோட நியாயம்னு ஒன்னு இருக்கே. அது படி பார்த்தால் நீங்க செய்தது பெரும் தவறு. இவ்வளவு பெரிய தவறை பண்ணிட்டு கூலா நீங்க குடும்ப வாழ்க்கையை வாழ துவங்கலாம் வான்னு கூப்பிடுறீங்க. உங்க அப்பாவின் வாக்கு பெருசுன்னு சொல்றீங்க.

உங்க பேச்சு மட்டும் இல்லை. இப்ப நம்ம வாழ்க்கையே முன்னுக்குப் பின் முரணான ஒரு நிலையில் தான் மாட்டிக்கிட்டு இருக்கு. இந்த நிலையில் எப்படி என் கூட வாழணும்னு ஆசை வருது சர்வேஸ்?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.

சர்வேஸ்வரன் உடனே அவளின் கேள்விக்குப் பதில் சொல்லிவிடவில்லை.

சில நொடிகள் அமைதியாக நின்றவன் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து குளியலறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

‘நீங்க பதில் சொல்ல மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும் ஈஸ்வர். ஏன்னா, நீங்க இப்ப நம்ம காதலுக்கும், உங்க அப்பாவோட கௌரவத்துக்கும் இடையில் ஊசல் ஆடிட்டு இருக்கீங்க. அந்த ஆட்டம் நிக்குமா? அப்படி நின்னால் மட்டுமே நம்ம வாழ்க்கைக்கு விடை கிடைக்கும் ஈஸ்வர்…’ என்று நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள் சக்தி.