11 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்- 11

தன் மனைவி பவ்யாவிடமிருந்து வந்த காணொளியில் கவின் தன் பிஞ்சு கரங்களினால் அவனின் விளையாட்டு பொம்மையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிந்தான். பின்பு எழுந்தவன் நடந்து சென்று அருகில் இருந்த இன்னொரு கார் பொம்மையை எடுத்து வைத்துத் தரையில் உருட்டி விளையாட ஆரம்பித்தான். இதே போல அவனின் விளையாட்டுகள் சிறிது நேரம் செல்ல காணொளியும் ஓடி முடிந்திருந்தது.

அது முடியும் வரை கண்ணெடுக்காமல் திரையை வெறித்த படி இருந்த வினய் காட்சி முடிந்து விடவும், ஏதோ சுழலில் இருந்து வெளியே வந்தவன் போலத் தலையை உலுக்கி விட்டுக் கொண்டான்.

அவனால் இன்னும் தன் மகனை இப்படிக் காண்போம் என்பதை நம்பக்கூட முடியவில்லை. அவனின் மனமும், உடலும் பரபரத்துப் போனது. ‘என் மகனா…? என் மகனா…?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன் மீண்டும் அதை ஓட விட்டான்.

துருதுருவென மகன் விளையாடும் அழகில் ஈர்க்கப்பட்டவன் மூளையில் ‘அப்போ பவி இதுவரை அனுப்பியது எல்லாமே மகனின் வீடியோவா என்ன?’ என்ற கேள்வி எழ மனம் பரபரக்க வேகமாகப் பவ்யாவின் மின்னஞ்சலை மட்டும் தேடுதல் நடத்த, மொத்தமாக வந்து குவிந்தன அவளின் மின்னஞ்சல்கள்.

மாதம் ஒரு மின்னஞ்சல் என்பதால் கவின் பிறந்ததில் இருந்து இரண்டரை வருடங்களாக வந்தவை அனைத்தும் அங்கே இருக்க, இப்போது தான் பார்த்தது போன மாதம் வந்த மின்னஞ்சல் என்பதால், முதல் முதலாக அவள் அனுப்பிய மின்னஞ்சலில் அப்போ என்ன இருக்கும் என்ற எண்ணத்துடன் முதலில் அதைத் திறந்தான்.

அதைப் பார்த்ததுமே அவனுக்குத் தெரிந்தது அந்த அறை மருத்துவமனை என்று. அங்கே இருந்த தொட்டிலில் மென்மையான துணியால் சுற்றப்பட்டுப் புத்தம் புது மலர் போலக் கண்களை மூடி தூங்கிக் கொண்டிருந்தான் அன்று தான் பிறந்த பிஞ்சு குழந்தை கவின்.

தான் நேரில் பார்க்காமல் போன குழந்தையின் பிஞ்சு முகத்தைக் காணொளியில் இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.

சில உணர்வுகளை வார்த்தையில் அடக்க முடியாது. அந்த வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளின் நிலையில் தான் இப்போது இருந்தான் அவன்.

குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் கைகள் தன்னையறியாமல் மெல்ல உயர்ந்து கணினி திரையின் வழியாகக் குழந்தையின் முகத்தைத் தடவிக் கொடுக்க முயன்றது. ஆனால் கண்ணாடி திரை அவனின் ஆசைக்கு அணைப்போட குழந்தையின் ஸ்பரிசத்தை உணர முடியாத தவிப்பில் திரையைச் சிறிது நேரம் தடவிக் கொடுத்தான்.

அந்தக் காணொளியும் சிறிது நேரத்தில் ஓடி முடிய, திரையைத் தொட்டுக் கொண்டிருந்தவனின் கைகள் மெல்ல நடுங்க ஆரம்பித்தன.

சில நாட்களாகக் குழந்தை பாடல்கள் மூலமாகத் தன் குழந்தையின் முகத்தை விதவிதமாகக் கற்பனையில் கண்டவன் இன்று நிஜமாகவே எதிர்பாராத விதமாகப் பார்க்க நேர்ந்ததில் வினய் உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தான்.

அவனின் இந்த நடுக்கம் எதனால் வந்தது என்று அவனே அறியான். ரிதேஷ் அடிக்கடி குழந்தையைப் பற்றிப் பேசும் போதே வினய்க்குள் நுழைந்திருந்த ஒரு தாக்கம், அவன் கண்ட பாடல்களில் எதிரொலித்தது என்றால், இப்போது தன் குழந்தையின் முகத்தைக் கண்டதில் தன் உதிர உறவு என்ற உரிமையில் உயிரும் உணர்வும் துடிக்க அடுத்து வந்த மணி துளிகள் பவ்யா அனுப்பி இருந்த அனைத்து காணொளிகளையும் பார்க்க ஆரம்பித்தான்.

அன்று இரவு உணவை கூட மறந்து இரவு முழுவதும் கணினி முன் அமர்ந்து திரும்பத் திரும்பக் காணொளியை ஓட விட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

எதிர்பாராத பொக்கிஷம் கை சேர்ந்தது போல எல்லாக் காணொளியையும் தனியாக எடுத்து மாதங்கள் படி வரிசைப் படுத்தி ஒரே கோர்வையாக்கி வைத்தான்.

அந்தக் காணொளி தான் அடுத்து வந்த பல நாட்களுக்கு வினய்யிடம் ஒருவித உற்சாகத்தைத் தந்திருந்தது.

சில மாதங்களாகத் தான் மட்டும் தனிமை தீவில் இருப்பது போல உணர்ந்திருக்கிறான். அது கோபமாகப் பவ்யாவின் மீதும் திரும்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவனின் கைக்கு வந்து சேர்ந்த கவினின் காணொளி பொக்கிஷமாகத் தோன்ற அதைப் பார்ப்பதில் ஒரு நிறைவை கண்டு, அவனின் தனிமை கொஞ்சம் குறைந்திருப்பதாக நினைக்க ஆரம்பித்தான்.

அந்த எண்ணம் அவனை உற்சாகமாக வைத்திருந்தது. அவன் வழக்கமாகச் செய்யும் வேலைகளுடன் கவினை கண்டுக்களிப்பதும் சேர்ந்துக் கொண்டாலும், மகனை நேரில் பார்க்க ஓர் ஆர்வம் வந்து அவனின் மனதில் அமர்ந்திருந்தாலும், அதைச் செயலில் காட்ட வினய் முயலவே இல்லை.

காரணம் முன்பை விட இப்போது அவனின் மனைவி மீது அவனுக்குக் கோபம் கூடியிருந்தது. அதற்குக் காரணமும் அந்தக் காணொளி என்றால் அது மிகையல்ல.

***

அங்கே கணவனின் கோபத்தை அதிகப்படுத்தி விட்டோம் என்று அறியாமலேயே தன் வழக்கமான அலுவலில் இருந்தாள் பவ்யா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு வேலையும் சேர்ந்திருந்தது. அது கண்காணிப்பு வேலை. கடந்த ஒரு மாதமாகவே அந்த வேலையும் அவளுடன் இணைந்திருந்தது.

இரண்டு நாட்கள் வேலைக்கு லீவ் போட்டு மாமனாரின் வீட்டில் இருந்த பவ்யா அவர் காலில் இருந்த ரத்தக் கட்டு குறைந்து கொஞ்சம் நடக்க ஆரம்பிக்கவும் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டாள்.

நாட்களும் ஓடி ஒரு மாதத்தைக் கடந்திருந்தது.

அன்று காலில் அடிபட்ட பிறகு இந்த ஒன்றை மாதத்தில் ரங்கநாதன் பவ்யாவின் வீட்டிற்கு வரவேயில்லை.

அதனாலோ என்னவோ சில தொந்தரவுகள் அவளுக்கு வர ஆரம்பித்தன. அந்தத் தொந்தரவு அவளுக்கு உள்ளுக்குள் பயத்தையும் தந்திருந்தது. வீட்டை விட்டு வெளியில் வந்தாலே அவளை ஒருவித பதட்டம் தொற்றிக் கொள்ளும். அதுவும் கடந்த இரண்டு நாட்கள் ஏதோ விபரீதம் தன்னை நெருங்க போவது போலயே உணர்ந்தாள்.

அந்த விபரீதம் அவளின் வீட்டின் அருகில் தான் இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் நாளும் வந்தது.

அன்று வேலை முடிந்து தன் அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்கு வந்து, பிளாட்டின் கதவை கவினை இடுப்பில் வைத்துக் கொண்டே திறக்க முயன்று கொண்டிருந்த பவ்யா தன் முதுகை துளைக்கும் பார்வையை உணர்ந்து, தன் பார்வையை மெதுவாகத் திருப்பிப் பார்க்க இன்னொரு பிளாட் வாசலில் வேகமாக யாரோ மறைவது போல் உணர்ந்து முகத்தைச் சுருக்கி யோசித்தாள். தான் பார்த்தது உண்மைதானா என்று நினைத்தபடி சில நொடிகள் அந்தப் பிளாட்டின் வாசலையே பார்க்க, மீண்டும் அங்கே இருந்து ஒரு அரவமும் தெரியாததால் தன் பார்வை திருப்பினாள்.

அதற்குள் அம்மா கதவை திறக்க ஏன் தாமதம் செய்கிறாள் என்று புரியாமல் பவ்யாவின் தோளில் கை வைத்து கவின் உலுக்க ஆரம்பித்தான். “சரி… சரி…! உள்ளே போவோம்” என்று அவனைச் சமாதானப்படுத்திய படி கதவை திறந்து உள்ளே சென்றவளுக்கு ‘யார் தன்னை அப்படி உறுத்துப் பார்ப்பது?’ என்ற சிந்தனை மட்டும் சற்றும் குறையவில்லை.

வீட்டிற்குள் வந்து வழக்கம் போலத் தன் வேலைகளைத் தொடர்ந்தாலும், அந்தப் பார்வை இன்னும் அவளைத் துரத்துவது போல இருந்தது. கடந்த ஒரு மாதமாக அப்பார்ட்மெண்ட் கேட் வாசலில் இருந்து தான் அந்தப் பார்வையை உணர்ந்திருக்கிறாள். அதுவும் சில நாட்கள் பள்ளி வரை அந்தப் பார்வை துரத்துவதும் தெரிய, வீட்டை விட்டு வெளியே சென்றாலே எப்போதும் இருப்பதை விடக் கூடுதல் கவனம் வந்து அமர்ந்து கொள்ளும். ஆனால் இன்று பிளாட்டின் எதிரேயே அந்தப் பார்வையைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கி தான் போனாள்.

அவள் இருந்த பிளாட் வளாகத்தில் மொத்தம் நான்கு பிளாட் வீடுகள் இருந்தன. அவள் பிளாட்டுக்கு எதிரே இருந்த பிளாட்டில் ஒரு புதுமணத் தம்பதியும், பக்கத்துப் பிளாட்டில் வயதான ஒரு தம்பதியும் இருந்தார்கள். அந்தத் தம்பதிகளின் பிளாட்க்கு எதிரே இருந்த பிளாட்க்கு சொந்தகாரர் வெளிநாட்டில் இருப்பதால் இங்கே இருக்கும் உறவுகளின் உதவியுடன் அதை அவர் வாடகைக்கு விட்டு விடுவார்.

ஆனால் அதிலும் ஒரு நான்கு மாதமாக யாரும் இல்லை என்றும் அறிந்திருந்தாள். இப்போது ஒரு மாதத்திற்கு முன் யாரோ குடிவந்ததை அறிந்துக் கொண்டாளே தவிர அங்கே வந்தது யார்? என்ற ஒரு தகவலும் அவளுக்குத் தெரியாது. அருகில் உள்ள பிளாட் ஆட்களுடன் அளவாகத் தான் பழகுவதால், அவர்கள் மூலமாகவும் அறிய வாய்ப்பில்லாமல் போனது.

இப்போது தன்னை உறுத்துப் பார்த்தது அந்தப் பிளாட் ஆள் தான் எனக் கண்டு கொண்டவள், அப்போது இத்தனை நாளும் தன்னைப் பின் தொடர்ந்தது அங்கே உள்ள ஆள் தானா? ஏன் என்னை அப்படிப் பின் தொடர வேண்டும்? யார் அது? என்ற கேள்வியுடன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தவளை அழைப்பு மணி அழைத்துக் கலைத்தது.

இந்நேரம் யார் வந்திருக்கிறது என்ற எண்ணத்துடன் ஹாலுக்கு வந்தவளை பார்த்து அங்கே விளையாடிக் கொண்டிருந்த கவின் “ம்மா… தத்தா… தத்தா…!” என்று சொல்லி வாசல் கதவை கை காட்டினான். அவனின் தாத்தா ரங்கநாதன் தான் வந்திருக்கிறார் என்று குதூகலித்தான்.

அவனின் சந்தோஷத்தைப் பார்த்துச் சிரித்த பவ்யா “இல்லடா குட்டியப்பா… தாத்தா தான் வேலையில் பிஸியா இருக்காரே? அவரா இருக்காது” என்று சொல்ல… கவினின் முகம் நொடியில் கூம்பிப் போனது. மகனின் முக வாடலை தாங்க முடியாமல் “நாம நாளைக்குத் தாத்தாவை பார்க்க போகலாம்” என்று சமாதானமாகச் சொன்னாள்.

ரங்கநாதன் கடந்த ஒன்றரை மாதமாகவே வராததற்குக் காரணம் அவர் கம்பெனியில் அவருக்குக் கிடைத்த புது ஆர்டர் தான். அது அவரை எங்கேயும் செல்ல விடாமல் கட்டிப்போட்டிருந்தது. அவருக்கு இங்கே வர நேரம் இல்லாமல் போனதால் பேரனை தன்னிடம் வந்து காட்டச் சொல்லி கேட்கும் போது, அலுவலகத்திலோ இல்லை வீட்டிற்கோ இவள் தான் சென்று காட்டி விட்டு வந்து கொண்டிருந்தாள். அதனால் தான் வந்தது உறுதியாக மாமனாராக இருக்க முடியாது என்று நினைத்தவள் கதவு லென்ஸ் வழியாகப் பார்க்க, யாரோ ஒரு புதியவனின் முகம் தெரிந்தது.

யாரது? என்ற யோசனையுடன் கதவை திறக்க அவள் தயங்க, அவன் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினான்.

யார்? எதற்காக வந்திருக்கிறார்கள்? என்று அறிந்து கொள்ள மெதுவாகக் கதவை திறந்த பவ்யா “யாருங்க?” என்று அந்த ஆடவனிடம் கேட்க…

“ஹலோ சிஸ்டர்… நான் கிரண்! இங்கே தான் புதுசா குடி வந்திருக்கேன்” என்று சற்று முன் பவ்யாவை பயமுறுத்திய பிளாட் நம்பரை சொல்ல, ஒரு நொடி அதிர்ந்து பார்த்தாள். ஆனால் உடனே தன் பார்வையை மாற்றிக் கொண்டு, “ஓ…! சரி சொல்லுங்க! என்ன விஷயம்?” என்று சாதாரணமாகக் கேட்டாள்.

அவனின் சிஸ்டர் என்ற அழைப்பு அவளைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருந்தது.

“பெரிசா ஒன்னும் இல்லை சிஸ்டர். இந்தப் பிளாட்டுக்கு நான் வந்து ஒரு மாசம் ஆகிருச்சு. இங்கே இருக்கிற இரண்டு பேமிலி கூடவும் இன்ரோ ஆகிட்டேன். உங்க கூடத் தான் இன்னும் இன்ரோ ஆகலை. பக்கத்தில், பக்கத்தில் இருக்கோம். ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு வச்சுகிறது நல்லது தானே? இப்போதான் நீங்க வந்ததை என் பிளாட் வாசலில் இருந்து பார்த்தேன்.

இன்னைக்காவது இன்ரோவை முடிச்சிருவோம்னு தான் உங்களுக்காக வாங்கி வச்சிருந்ததை எடுத்துட்டு வர்றேன்” என்று ஒரு புன்னகையுடன் கையில் இருந்த பையைக் காட்டி அவன் சொல்ல, அவனின் பாவனைகளை அதற்குள் ஆராய்ந்திருந்த பவ்யாவிற்கு அவனிடம் எதுவும் தவறாகத் தெரியவில்லை. பார்வை கூட விகல்பம் இல்லாமல் இருக்க… வீடு தேடி வந்தவனை அதற்கு மேல் உள்ளே அழைக்காமல் இருப்பது சரியாகப் படவில்லை என்பதால், அவனை வீட்டிற்குள் அழைத்தாள்.

உள்ளே வந்து அமர்ந்தவன் கையில் இருந்த பையை அவளிடம் நீட்ட பவ்யா தயங்கினாள். “ப்ரூட்ஸ் தான் சிஸ்டர். சின்னப் பிள்ளை இருக்கிற வீடு… வெறும் கையோட வர முடியாதே…?” என்று சொல்ல அரைமனதுடன் வாங்கிக்கொண்டவள், “உங்களுக்குக் காபி எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றாள்.

அந்நிய ஆள் உள்ளே இருப்பதால் வாசல் கதவை சிறிது திறந்து தான் வைத்திருந்தாள். கிரண் கவினை பார்த்துத் ‘தன்னிடம் வா!’ என்று அழைத்துக் கொண்டிருக்க, அவன் ‘நீ ஏன் என்னை அழைக்கிறாய்?’ என்ற பாவனையில் பெரியவனைத் தன் குட்டி கண்களால் முறைத்துக் கொண்டிருந்தான்.

அவன் முறைப்பை பார்த்துக் கிரண் சத்தமாகச் சிரிக்க, அவனுக்குக் காபி எடுத்துக் கொண்டு வந்த பவ்யா என்னவென்று கேட்டாள்.

கிரண் கவினின் முறைப்பை சொல்லவும், தானும் மெலிதாகச் சிரித்த பவ்யா “நீங்க புது ஆள் இல்லையா? அதான் அப்படி…” என்று விளக்கம் சொல்ல, “அப்படித்தான் இருக்கணும் சிஸ்டர்” என்றவன் தன்னைப் பற்றிய விவரத்தை சொன்னான்.

“எங்க அப்பா, அம்மா எல்லாம் பெங்களூர்ல இருக்காங்க சிஸ்டர். எனக்கு மட்டும் இங்கே உள்ள கம்பெனில சில மாச வேலை இருக்கு. அதுக்கு வந்திருக்கேன்” என்றவன் அவன் வேலை பார்க்கும் கம்பெனியின் பெயரையும் சொன்னான்.

அவனின் விவரம் அறிந்ததும், பவ்யாவிடம் அவனைப் பற்றிய கொஞ்ச நஞ்ச பயமும் போய் விட்டது.

தன்னைப் பின் தொடர்ந்தவன் இவனாக இருக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

கிரண் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி விட்டான். அவன் கிளம்பும் வரையிலும் கூடக் கவின் அவன் அமர்ந்திருந்த படுக்கையை விட்டு சிறிதும் அசையவில்லை. அவன் விளையாட்டில் மும்முரமாக இருந்தான்.

அதன் பிறகு எப்போதாவது எதிரில் சந்திக்க நேர்ந்தால் ஒரு சினேக சிரிப்பு மட்டும் பவ்யாவும், கிரணும் சிரிப்பார்கள். அநாவசிய பேச்சுக்கள் இருக்காது.

ஆனால் பவ்யாவை பின்தொடரும் அந்த அந்நிய ஆள் யார்? என்று மட்டும் இன்னும் பவ்யாவால் கண்டறிய முடியவில்லை. அப்பார்மென்ட் வாயிலை தாண்டியதும் தொடரும் பார்வை துரத்தல் பள்ளி வரை இன்னும் உணர்ந்துக் கொண்டுதான் இருந்தது

பவ்யா யார் என்று கவனிக்க முயன்றும் முடியாமல் போக, தான் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்ட உணர்வு அவளை இன்னும் அழுத்தமாக பற்றிக் கொண்டது.

தன்னைத் துரத்தும் ஆள் யார் என்று அவள் அறியும் நாளும் வந்தது. அறிந்த போது நம்ப முடியாத திகைப்பில் ஆழ்ந்தாள்.