11 – சிந்தையில் பதிந்த சித்திரமே

அத்தியாயம் – 11

தன் ஸ்கூட்டியை வழக்கம் போலக் கதிர்நிலவன் இடத்தில் நிறுத்திய நயனிகா, அங்கே நின்றிருந்த அவனின் காரை ஏக்கமாகப் பார்த்தாள்.

அவளின் கண்களில் வலியின் சாயல் இழைந்தோடியது.

அவனை நேருக்கு நேராகப் பார்த்து இன்றுடன் ஒரு வாரம் கடந்து விட்டது.

அதிலும் கடந்த வாரம் அவள் வீட்டுக் கதவை திறந்த அதே நேரத்தில் தான், அவனும் தன் வீட்டுக் கதவை திறந்தான் என்பதால் மட்டுமே அது சாத்தியமாகிற்று.

ஆனாலும் அவளைப் பார்த்தவுடன் விறுவிறுவென்று படிக்கட்டை நோக்கி வேகமாக அவன் நடந்து சென்று விட, அவனின் முதுகை தான் வெறித்துக் கொண்டு நின்றாள். அவனின் நிராகரிப்பு அவளின் முகத்தில் அறைந்தது.

அன்று மொட்டை மாடியில் அவளிடம் தெரிந்த வேறுபாட்டை எப்பொழுது கண்டு கொண்டானோ அப்பொழுதிலிருந்து அவனின் நிராகரிப்பு ஆரம்பித்து விட்டிருந்தது.

தன் வீட்டிற்கு வந்தால் உள்ளே விடாமல் வாசலில் வைத்தே இரண்டொரு வார்த்தை மட்டும் பேசி அவளை விரட்டாத குறையாகப் பேச்சை முடித்துக் கொண்டான்.

அவள் எதிரில் வந்தால் அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கடந்து சென்றான்.

அபிராமியிடமும் முன் போல் பேசாமல் ஆரம்பத்தில் இருந்தது போல் விலகலை கடைப்பிடித்தான்.

“அந்தத் தம்பிக்கு என்னடி ஆச்சு? முன்னாடி தான் நம்மளை தெரியாது, விலகி போவார். இப்போ இவ்வளவு பழகின பிறகு இப்ப எதுக்குத் திரும்பக் கண்டுக்காமல் போறார்?” என்று மகளிடம் கேட்டு வருத்தப்பட்டார் அபிராமி.

“எனக்கு என்னமா தெரியும்? திடீர்ன்னு அவருக்கு என்ன ஆச்சோ?” என்று எரிந்து விழுவாள் நயனிகா.

“நீ ஏன்டி சிடுசிடுன்னு இருக்க?”

“நான் எப்பவும் போல் தான்மா இருக்கேன். உங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சா நான் என்ன பண்றது?” என்று சொல்லிவிட்டு மேலும் அன்னையிடம் பேச்சுக் கொடுக்காமல் நழுவினாள்.

நயனிகாவின் மனது சோர்ந்து போயிருந்தது. அவனின் விலகல் அவளை வாட்டி வதைத்தது.

அவன் விலகல் ஏற்படுத்திய வலி உடல் முழுவதும் பரவி அவளைத் தகிக்க வைத்தது. இரவுகளில் யாரும் அறியாமல் கண்ணீர் சிந்தினாள்.

அதே நேரம் அவன் விலக விலகத்தான் அவளின் மனம் காந்தமாக அவனை நோக்கி ஈர்த்துக் கொண்டு போனது.

இன்னும் இன்னும் அவன் தன் அருகில் வேண்டும் என்ற உணர்வில் தவித்துப் போனாள்.

அவளின் தவிப்பை அடக்கும் வல்லமை வாய்ந்த காளையவனோ முற்றும் துறந்த முனிவன் போன்றொரு பாவனையில் பார்வையாலேயே அவளை விலக்கி நிறுத்தினான்.

அவனின் பார்வை வெறுமையாகத் தன் மீது தழுவி விலகும் போது அனலில் இட்ட புழுவாய் துடித்துப் போனாள்.

காதல் வலி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? அது எப்படித் துடிக்க வைக்கும்? எப்படித் தகிக்க வைக்கும்? என்பதனை அனுதினமும், ஒவ்வொரு நொடியும், தன் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தாள் நயனிகா.

அந்த வலி ஏற்படுத்திய தாக்கம், அவன் தனக்கு வேண்டும், தனக்கே தனக்கு மட்டுமே வேண்டும் என்று அவளை வெறித்தனமாக நினைக்க வைத்தது.

கடைசித் தேர்வில் கோல்ட் மெடல் வாங்கியும், அந்தச் சந்தோசம் கூட அவளை ஆட்கொள்ளவில்லை.

அவனிடம் கோல்ட் மெடல் வாங்கிய செய்தியை சொல்ல ஆசையாகச் சென்ற போது, “ஓ, அப்படியா? வாழ்த்துகள்” என்று சாதாரணமாகச் சொல்லி முடித்துக் கொண்டான்.

அதில் அவளுக்குச் சப்பென்று போக, அந்தச் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்கவே முடியவில்லை.

விடுமுறை நாட்களும் முடிந்து முதுகலைப் படிப்பிலும் சேர்ந்து கல்லூரிக்கும் செல்ல ஆரம்பித்தாள் நயனிகா.

தயா பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தான்.

கதிர்நிலவன் சிறப்புப் பேராசிரியராக மட்டுமே நயனிகாவின் கல்லூரிக்கு வேலைக்கு வந்தான் என்பதால் இப்போது வேறு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

அதனால் கல்லூரியிலும் அவளால் அவனைப் பார்க்க முடியாமல் போகத் தவித்துப் போனாள்.

முன்பு அவளிடமிருந்த கலகலப்பு குறைந்து போக, வீட்டினரின் பார்வை கேள்வியுடன் அவளின் மீது படிந்தது.

“என்னாச்சுமா? திரும்ப யாரும் வழியில் தொந்தரவு பண்றாங்களா?” என்று அவளின் தந்தையே கேட்க ஆரம்பித்தார்.

“அப்படி எந்தப் பிரச்சனையும் இல்லையே பா…”

“அப்புறம் ஏன்மா ஒரு மாதிரி இருக்க?”

“நான் எப்பவும் போல் தான் இருக்கேன் பா. அப்படியே பிரச்சனை இருந்தாலும் உங்ககிட்ட மறைக்காமல் சொல்றேன்னு சொன்னேனேப்பா? இப்ப எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைப்பா. அதே கல்லூரினாலும் பழைய ஃபிரண்ட்ஸ் சிலர் எம்எஸ்ஸி படிக்கலைபா. அதுவும் என் ஃபிரண்ட் பானுக்குக் கல்யாணம் பிக்ஸ் பண்ணிடாங்கன்னு வரலையா… அதான் கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்ப் ஆகுது. வேற ஒன்னுமில்லைபா…” என்று சொல்லி சமாளித்தாள்.

“பரவாயில்லை விடுமா. இனி உனக்கு வேற ஃபிரண்ட்ஸ் கிடைப்பாங்க. கவலைப்படாதே…” என்றார் ஞானசேகரன்.

“சரிப்பா…” என்று அதையும் அமைதியாகவே சொல்லி சென்றாள் நயனிகா.

அன்று தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவள் மேலே செல்ல படியின் அருகில் சென்ற போது மேலிருந்து கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தான் கதிர்நிலவன்.

அவனைக் கண்டதும் அவளின் முகம் பூவாக மலர்ந்து விகசித்தது.

அவனை இப்படி இடையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன் இப்பொழுது எல்லாம் அவளும் மின்தூக்கியை பயன்படுத்தாமல் படிகளைத் தான் பயன்படுத்தினாள்.

என்றாவது ஒரு நாள் மட்டுமே அவனைப் படிகளில் எதிரே சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கும்.

அந்த ஒரு நாளுக்காகத் தினமும் ஒவ்வொரு படி ஏறும் போதும் அவளிடம் எதிர்பார்ப்பு மிகுந்து வழியும். ஆனால் பல நாட்கள் அவளுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும் போது சோர்ந்து போன முகத்துடன் வீடு சென்று சேர்வாள்.

இன்று அவனைப் பார்த்ததும் தாமரையாக அவள் முகம் மலர, அவன் முகமோ அவளைப் பார்த்ததும் கடுமையாக மாறிப் போனது.

அவனின் வழக்கம் போல ஒரு கை பேன்ட் பாக்கெட்டுக்குள் இருக்க, இன்னொரு கையில் ஏதோ பையை வைத்துக் கொண்டு இறங்கி வந்து கொண்டிருந்தான்.

அலையலையாகப் பறந்த கேசத்திலிருந்து, அவனின் பாதம் வரை அவளின் பார்வை அவனைக் காதலுடன் வருடிப் போனது.

விழுங்குவது போலான அவளின் பார்வையில் லேசாக முகத்தைச் சுளித்துக் கொண்டே அவளைக் கடந்து கீழே இறங்கி சென்றான்.

அவன் தன்னைக் கடக்கும் போது அவள் உணர்ந்த அவனின் வாசம் அவளின் மூக்கை துளைத்துக் கொண்டு அவளுள் ஆழமாகச் சென்று இறங்க, இழுத்து சுவாசித்து அவனின் வாசத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டாள்.

அவன் இறங்கியதும் வீட்டிற்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டு தானும் அவன் பின் மெல்ல இறங்கினாள்.

வீட்டின் அருகில் அவனிடம் பேச முடியாததால் வெளியே வைத்தாவது அவனிடம் பேச முயற்சி செய்யலாம் என்று நினைத்து மெல்ல அவனைப் பின் தொடர்ந்தாள்.

கீழே இறங்கி தன் காரை எடுத்துக் கொண்டு அவன் கேட்டை தாண்டியதும், தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக அவனின் பின் செல்ல ஆரம்பித்தாள் நயனிகா.

கதிர்நிலவன் தன் காரை நிறுத்திய இடம் ஒரு சூப்பர் மார்க்கெட். காரை நிறுத்திவிட்டு அவன் கடைக்குள் செல்ல, நயனிகாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.

ஆட்கள் அதிகம் இல்லாத பொருட்கள் இருக்கும் பகுதியில் அவன் இருப்பதைப் பார்த்தவள் வேகமாக அவன் முன் சென்று நின்றாள்.

கையில் எடுத்த பொருளின் விலையைப் பார்த்துக் கொண்டே நிமிர்ந்த கதிர்நிலவனின் விழிகளில் அவள் விழ, சட்டென்று அதிர்ந்து அனல் கக்கும் விழிகளால் அவளைச் சுட்டெரிக்க ஆரம்பித்தான்.

“நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னைப் பார்த்தாலே இப்படி வெறுத்து ஒதுக்குறீங்க?” என்று கேட்டவளுக்குப் பதில் சொல்லாமல் அவளைத் தாண்டி செல்ல போனான்.

ஆனால் அவனின் கையை வேகமாகப் பிடித்து நிறுத்தியவள், “ஏன் ஏன் என் மேல் உங்களுக்கு இந்த வெறுப்பு?” என்ற நயனிகாவின் நயனவிழிகள் கலங்கி சிவக்க ஆரம்பித்தன.

“என்ன பண்ற நீ? என் கையை விடு?” என்றான் கடிந்த பற்களுக்கு இடையே.

ஆனால் இன்னும் அழுத்தமாக அவனின் கையைப் பற்றிக் கொண்டவள், “இன்னைக்கு நான் உங்ககிட்ட பேசியே ஆகணும்…” என்றாள் பிடிவாதமாக.

“இதோ பார் நயனிகா, தேவையில்லாம சீன் கிரியேட் பண்ணாதே. இப்ப நீ என் கையை விடலைனா நானே விட வைக்க வேண்டியதாக இருக்கும். என்னை முரட்டுத்தனமா பிகேவ் பண்ண வச்சுடாதே…” என்றான்.

அதில் அவளின் கண்கள் சட்டென்று கலங்கி போக, பட்டென்று அவன் கையை விட்டவள், “நான் பேசணும்…” என்றாள்.

“உன்கிட்ட நின்னு பேச எனக்கு நேரமில்லை. என்னைத் தொந்தரவு பண்ணாதே!” என்றான் பட்டென்று.

“நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கேட்டாள்.

“நீ எந்தத் தப்பும் செய்யலை. எல்லாத் தப்பும் என் மேல தான். நான் ஆரம்பத்தில் இருந்தது போலவே உங்க வீட்டில் நான் யார் கூடவும் பேசியிருக்கக் கூடாது. என் கூட்டை விட்டு வெளியே வந்து உங்ககிட்ட எல்லாம் பேசினேன் பார்த்தியா? அது தான் நான் செய்த பெரிய தப்பு. அந்தத் தப்பை திரும்பத் தொடர எனக்கு விருப்பம் இல்லை. அதனால் இனி என்கிட்ட நீ பேச முயற்சி பண்ணாதே…” என்றவன் அவளை விட்டு விலகி வேறு பக்கம் நகர்ந்தான்.

அந்தப் பக்கம் ஆட்கள் இருக்க, அவனைத் தொடர்ந்து சென்றவளுக்கு அவனிடம் பேச முடியாமல் போனது.

இன்று எப்படியாவது அவனிடம் தன் மனதை சொல்லிவிட நினைத்தாள்.

ஆனால் அவன் அதற்குச் சற்றும் பிடி கொடுக்காமல் போக அவளால் சொல்ல முடியாமல் போனது.

கடையில் அதன் பிறகு அவன் நின்ற இடம் எல்லாம் ஆட்கள் அருகில் இருக்க, அவளால் ஒன்றுமே பேச முடியாமல் தவித்துப் போய் அவன் பின்னாலேயே அலைந்தாள்.

அவள் தன் பின்னால் வருகிறாள் என்று தெரிந்தும் கதிர்நிலவன் சற்றும் திரும்பி கூடப் பார்க்கவில்லை.

அதுவே அவளை இன்னும் உடைந்து போக வைத்தது. அதேநேரம் இன்றே தன் காதலை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியையும் கூட்டியது.

பில் போட்டு விட்டு கடையை விட்டு அவன் வெளியேற, அவளும் வேறு வழியில்லாமல் வீடு சென்றாள்.

அவன் தன் கதவை திறந்து உள்ளே சென்று கொண்டிருக்கும் போது தன் வீட்டிற்குச் செல்லாமல் தானும் பின்னால் சென்று அவனின் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“ஏய், என்ன பண்ற நீ?” அவன் அதிர,

“ப்ளீஸ், ப்ளீஸ்… நான் இன்னைக்கு உங்ககிட்ட பேசியே ஆகணும். இல்லைனா எனக்குப் பைத்தியமே பிடிச்சுப் போயிடும்…” என்றாள் இறைஞ்சுதலாக.

“நீ பண்றது எதுவும் சரியில்லை நயனிகா…” என்றான் கண்டிப்புடன்.

“எனக்கு வேற சாய்ஸ் நீங்க கொடுக்கலை. நான் வேற என்ன தான் பண்றது?” என்றவள், வீட்டு கதவை லேசாகச் சாற்றி வைத்தாள்.

“வேண்டாம் நயனிகா. நீ போய்டு. தேவையில்லாம உன் பேரு தான் கெட்டு போகும்…” என்றான்.

அவனின் கடுமையோ, கோபமோ அவளைச் சிறிதும் அசைத்துப் பார்க்கவில்லை.

தன் காதலை சொல்லி விடும் வேகம் மட்டுமே அவளிடம் இருந்தது.

“என் மனசு உங்களுக்குப் புரியவே இல்லையா?” என்று கண்களில் ஏக்கம் வழிய கேட்டாள்.

அவனுக்குப் புரியாமல் என்ன? நன்றாகப் புரிந்ததினால் தானே அவளை விட்டு விலகிச் செல்கிறான்.

ஆனாலும் அவளுக்குப் பதில் சொல்லாமல் அழுத்தமாக நின்றான்.

“எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்…” என்று சுற்றி வளைக்காமல் தன் மனதை சொன்னாள் நயனிகா.

எந்த வார்த்தைகளைத் தன்னிடம் அவள் சொல்லிவிடக் கூடாது என்று விலகி விலகிப் போனானோ அதே வார்த்தைகளைச் சொல்லியே விட்டிருந்தாள் நயனிகா.

அந்த வார்த்தைகளைக் கேட்க பிடிக்காதவன் போல் கண்களை இறுக மூடி திறந்தான். அவன் தாடையின் இறுக்கம் மட்டும் சற்றும் தளரவில்லை.

“நான் உன் லெக்சரர் நயனிகா? அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” எனக் கடுமையாகக் கேட்டான்.

“சின்னத் திருத்தம். நீங்க என் லெக்சரரா இருந்தீங்க. ஆனா இப்ப இல்லையே? ஏதோ ஒரு காலேஜ் லெக்சரரை கல்யாணம் செய்து கொள்வது அவ்வளவு ஒன்னும் தப்பில்லையே?” என்றாள்.

“ம்ப்ச்…” என்று சலித்துக் கொண்டவன், “உனக்குச் சொன்னால் புரியாது நயனிகா. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையில் இல்லை. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காம ஒழுங்கா படிக்கிற வழியை மட்டும் பார்…” என்றான்.

“நான் நல்லாத்தான் படிக்கிறேன். ஆனா நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க? ஒருவேளை நீங்க கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நான் அழகா இல்லையா?” என்று கேட்டாள்.

“நான் சொன்னதைக் காதில் வாங்கினயா இல்லையா? உன்னை மட்டும் இல்லை நான் யாரையுமே கல்யாணம் பண்ணிக்கிறதாக இல்லை. என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் எதுக்கும் இடமில்லை…” என்றான் உறுதியுடன்.

“ஏன்?” என்று அதிர்வுடன் கேட்டாள்.

“ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க எனக்கு விருப்பமில்லை…” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

“புரியாத மாதிரி நடிக்காதே நயனிகா. உனக்கே காரணம் தெரியும். போதும்! இதுக்கு மேல நான் எதுவும் பேச தயாராக இல்லை. இடத்தைக் காலி பண்ணு…” என்று விரட்டினான்.

அவனைக் குழப்பத்துடன் பார்த்தவள், “நிஜமா எனக்கு என்ன காரணம்னு தெரியலை. சொல்லுங்க, ப்ளீஸ்…” என்று கேட்டாள்.

அவளைக் கோபத்துடன் பார்த்தவன் தன் கோபத்தை அடக்கும் பொருட்டுத் தனது இடது கையால் தலையைக் கோதி அழுந்த பிடித்து விட்டுக் கொண்டான்.

ஆனாலும் அவனின் கோபம் மட்டுப்படாமல் திமிறிக் கொண்டு வெளியே வந்தது.

“என்னடி… என்னடி உனக்குத் தெரியாது? எனக்கு ஒரு கை இல்லைன்னு உனக்குத் தெரியாது? தெரியாதுன்னு மட்டும் பொய் சொல்லாதே. உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். வேண்டாம்! என்னை இன்னும் பேச வைக்காதே. போ… என் வீட்டை விட்டு போ…” என்று ஆத்திரமாகக் கத்தினான் கதிர்நிலவன்.

அவனின் கோபத்தில் அரண்டு கதவோடு போய் ஒட்டிக் கொண்டாள் நயனிகா.

அவளின் இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

அவனுக்கோ கோபத்தில் முகதசைகள் மட்டுமில்லாது தோள்களும் லேசாக ஆடி சிலிர்த்துக் கொண்டு நின்றன.

அவனின் அதீத கோபத்தைப் பயத்துடன் பார்த்த படி அப்படியே நின்று விட்டிருந்தாள்.

சில நொடிகளில் தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்தவள், “உங்களுக்குத் தான் இரண்டு கையும் இருக்கே? அப்புறம் என்ன?” என்று மெல்ல கேட்க,

அவனின் கோபம் உச்சத்திற்கு ஏற ஆரம்பித்தது.

“என்ன என்னைக் கேலி பண்றீயா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

“நிஜமாத்தான் சொல்றேன். நான் ஏன் உங்களைக் கேலி பண்ணனும்? உங்களைக் கேலி செய்தால் அது நான் என்னையே கேலி செய்வது போல் தான்…” இப்போதும் அமைதியாகவே வந்தது அவளின் பதில்.

முன்பு அவனின் கண்களைப் பார்க்க தயங்குபவள், இப்போது நேருக்கு நேராக அவன் கண்களைக் காதலுடன் பார்த்துக் கொண்டே தான் பேசினாள் நயனிகா.

அவளின் காதல் பார்வையை ஏற்க முடியாமல் இப்போது முகத்தைத் திருப்பிக் கொண்டவன் என்னவோ கதிர்நிலவன் தான்.

அவளின் பின்பாதி பேச்சை காதில் வாங்காமல், “நீ பண்றதுக்குப் பேரு கேலி இல்லாம வேற என்ன? இது… இதுவா என் கை? நல்லா பார்த்து சொல்லுடி… இதுவா என் கை?” என்று கோபத்துடன் கேட்டவன், தன் வலதுகையை மறைத்துக் கொண்டிருந்த முழு நீள கை சட்டை துணியை மடக்கி விட்டான்.

“இது மரக்கட்டை டி. வெறும் மரக்கட்டை. இந்த மரக்கட்டைக்கு உயிர் கிடையாது. உணர்வுகள் கிடையாது. ரத்தம், சதை, நரம்பு எதுவுமே கிடையாது…” என்று அவனின் முழங்கையிலிருந்து மாட்டப்பட்டிருந்த செயற்கை கையை அவளின் முகத்திற்கு நேராகத் தூக்கி காட்டி ஆத்திரத்துடன் சொன்னான் கதிர்நிலவன்.