11 – ஈடில்லா எனதுயிரே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 11

காலை ஏழு மணி.

வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார் சுபேசன்.

அப்போது ஒரு பக்கத்தைத் திருப்பியவர் அங்கிருந்த செய்தியை படித்து விட்டு, அதிர்ந்து போனார்.

“கஸ்தூரி இந்தப் பேப்பரை பாரேன்…” என்று வேகமாகக் கத்திய கணவரின் குரலில் அடித்துப் பிடித்து வரவேற்பறைக்கு வந்தார் கஸ்தூரி.

“என்னங்க, என்னாச்சு?”

“இதைப் படிச்சுப் பார்…” என்று செய்தித்தாளை மனைவியிடம் கொடுத்துவிட்டுத் தலையில் கைவைத்து அமர்ந்தார் சுபேசன்.

செய்தித்தாளில் ஓர் ஓரத்தில் வந்திருந்த செய்தியைப் படித்து விட்டு, “என்னங்க, இவ்வளவு நடந்திருக்கு, நமக்கு ஒன்னுமே தெரியலை. அப்போ நம்ம பையன் ஒரு தப்பும் செய்யலையா?” என்று கேட்டார் கஸ்தூரி.

அந்தப் பக்கத்தில் பிரபஞ்சன் பற்றிய செய்தி போடப்பட்டிருந்தது.

“அதில் அப்படித்தான் போட்டிருக்கு பார். நாம எதையுமே தெரிந்து கொள்ள முயற்சி பண்ணாமல் கூட இருந்திருக்கோம். அதுவும் அவன்கிட்ட படிக்கிற பிள்ளைங்க எல்லாம் அவனை விடச் சொல்லி போராட்டம் செய்தாங்களாம். ஆனா நாம?” என்று தளர்ந்து கேட்டார் சுபேசன்.

“நாம இப்படி இருக்கும்னு நினைக்கலையேங்க. படிக்கிற வயசுலயே எப்படி எல்லாம் பொய் சொல்லி நம்ம பிள்ளையை ஜெயிலில் தள்ளியிருக்கா பாருங்க அந்தப் பொண்ணு. என்ன பொண்ணு அவள் எல்லாம்?” என்று கோபமாகக் கஸ்தூரி சொல்ல,

“இப்ப தப்பு செய்தது அந்தப் பொண்ணு இல்லை கஸ்தூரி. நாம தான்…” என்றார்.

“நாம என்னங்க தப்பு செய்தோம்?”

“இன்னுமா உனக்குப் புரியலை? நம்ம பிள்ளையை நாம நம்பலை கஸ்தூரி…”

“நாம என்ன இப்படி நடக்கும்னு கண்டோமாங்க? சின்னப் பிள்ளை இந்த விஷயத்தில் எல்லாம் பொய் சொல்ல மாட்டாள்னு நினைச்சோம். ஆனா இந்த வயசுலயே அந்தப் பொண்ணு எமகாதகியா இருந்திருக்கு…” என்று புலம்பினார் கஸ்தூரி.

“அதை விடு! நேத்தே பிரபாவை வெளியே விட்டுட்டாங்களாம். ஆனால் பிரபா இன்னும் வீட்டுக்கு வரலை…” என்றார்.

“அய்யோ! ஆமாங்க, அதை நான் யோசிக்கவே இல்லையே. பிரபா எங்கேங்க போயிருப்பான்? ஏன் வீட்டுக்கு வரலை?” என்று பதறி கேட்டார்.

“நேத்து வக்கீலை கூப்பிட்டுக்கிட்டு மாதவன் போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பதாக மீரா சொன்னாங்களே… மாதவன்கிட்ட கேளு. பிரபா எங்கன்னு தெரியும்…” என்று கணவர் சொன்னதும் உடனே தம்பிக்கு அழைத்தார் கஸ்தூரி.

மாதவனின் போன் ரிங் அவர்கள் வீட்டு வாசலிலேயே கேட்டது.

“மாதவன் இங்கே வந்திருக்கான் கஸ்தூரி. போனை வை…” என்ற சுபேசன் வாயிலை நோக்கி சென்றார்.

“வா… வா மாதவா…” என்று வேகமாக வரவேற்ற அத்தானை வியப்பாகப் பார்த்தார்.

“என்ன அத்தான், எனக்கு வரவேற்பு எல்லாம் பலமா இருக்கு?” மாதவன் கேட்க,

“மாதவா, பிரபாவை நேத்தே வெளியே விட்டுட்டாங்களாமே? அவன் இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை. நீ அவனைப் பார்த்தியா?” என்று தம்பியிடம் கேட்டார் கஸ்தூரி.

“ஓ, தெரிந்து விட்டதா? எப்படித் தெரியும்?” என்று கேட்டவரின் பார்வையில் அங்கிருந்த செய்தித்தாள் பட, எப்படி என்று அவருக்குப் புரிந்து போனது.

“உன் பிள்ளையோட விஷயத்தைப் பேப்பர் பார்த்துத்தான் நீ தெரிஞ்சிக்க வேண்டியதாக இருக்கு, இல்லக்கா?” என்று மாதவன் கேட்ட கேள்வியில் கஸ்தூரிக்குச் சுருக்கென்றது.

“நாங்க செய்தது தப்புத்தான் மாதவா. இப்ப பிரபா எங்கே?” என்று கேட்டார்.

“நான் சொன்னதும் என்ன செய்யப் போறீங்க?”

“எங்க இருந்தாலும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவோம் மாதவா…”

“நீங்க கூப்பிடுவீங்க. ஆனால் பிரபா வரணுமே?”

“ஏன்? வர மாட்டானா?” பெற்றவர்கள் இருவரும் அதிர்ந்து கேட்டனர்.

“அவன் வருவதாக இருந்தால் நேத்துப் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நேரா இங்கே தான் வந்திருக்கணும். ஆனா வரலை என்ற போதே புரிந்திருக்க வேண்டாமா?” என்று மாதவன் கேட்க,

“மாதவா… நீ என்ன சொல்ற? அப்போ பிரபா இங்கே வரவே மாட்டானா?” என்று பதறிப் போனார் கஸ்தூரி.

“வர மாட்டான்கா. சரி, எனக்கு அவன் பைக் சாவி வேணும். எங்கே இருக்கு?” என்று மாதவன் கேட்க,

“என்ன மாதவா இது? பிரபா இனி இங்கே வர மாட்டான்னு சொல்லிட்டு, இப்ப அவன் பைக் சாவி கேட்குற? பிரபா எங்கே? அவன் பைக் சாவி எதுக்கு?” என்று சுபேசன் கேட்க,

“அவன் தனி வீடு பார்த்து போயிட்டான் அத்தான். அவன் தான் பைக் கொண்டு வரச் சொன்னான்…” என்ற மாதவன், சாவி மாட்டும் இடத்தில் பைக் சாவியைத் தேடினார்.

அங்கே தான் மாட்டப்பட்டிருந்தது. அதை எடுத்துக் கொண்டு, “நான் கிளம்புறேன்…” என்று வெளியே சென்றார்.

‘தனி வீடா?’ என்று திகைத்து நின்றிருந்தவர்கள் தெளிந்து, “மாதவா, பிரபா எங்கே இருக்கான்னு சொல்லிட்டு போ…” என்று பின்னாலேயே சென்று கேட்டார் கஸ்தூரி.

“உன் பிள்ளைக்கே போன் போட்டு கேளுக்கா. அவன் வீட்டு அட்ரெஸ் சொன்னால் வாங்கிக்கோ…” என்ற மாதவன் நிற்காமல் பிரபஞ்சனின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

“என்னங்க மாதவன் இப்படிச் சொல்லிட்டு போறான்?” கணவனிடம் பதட்டமாகக் கேட்டார்.

“நீ பிரபாவுக்குப் போன் போடு கஸ்தூரி…” என்றார் சுபேசன்.

கஸ்தூரி உடனே மகனுக்கு அழைத்தார்.

ஆனால் அவரின் அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

தன் அன்னையிடமிருந்து வந்து கொண்டிருந்த அலைபேசி அழைப்பை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த தன் கைபேசியை வெறித்துப் பார்த்தான் பிரபஞ்சன்.

அன்னையிடமோ, தந்தையிடமோ பேச அவனுக்கு விருப்பமே இருக்கவில்லை.

பட்ட காயம் அவனை விலகலை காட்ட சொல்லி தூண்டிக் கொண்டிருந்தது.

ஊர் உலகத்தில் யார் அவனை நம்பாமல் போயிருந்தாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான்.

ஆனால் பெற்ற தாய், தகப்பனே அவனைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியது இன்னும் இதயத்தில் சுருக் சுருக்கெனக் குத்துவது போல் வலியைக் கொடுத்தது.

மீண்டும் மீண்டும் கஸ்தூரி அழைத்துக் கொண்டிருக்க, அழைப்பை துண்டித்தவன், கையோடு அவரின் நம்பரை பிளாக் செய்தான். அடுத்து தந்தையின் நம்பரையும் பிளாக் செய்தான்.

அப்போது அவனின் கண்ணில் பட்டது நந்திதாவின் அலைபேசி எண்.

நந்து என்று அவளின் பெயரை கைபேசியில் பார்த்ததும் அவனின் முகம் இறுகி போனது.

கூடவே இதுவரை தாங்கள் பேசிக் கொண்டது எல்லாம் நினைவில் ஓட, அந்த நினைவு கொடுத்த வலி தாங்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

இந்த நேரம் புது மாப்பிள்ளையாக மனைவியுடன் இருந்திருக்க வேண்டியவன் இப்போது அந்த வீட்டில் தன்னந்தனியாகத் தவித்துக் கொண்டிருந்தான்.

கைகளைக் கொண்டு அழுத்தமாக முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

அப்போது முகத்தில் ஏதோ உறுத்துவது போல் இருக்க, கண்களைத் திறந்து கையைப் பார்த்தான்.

புத்தம் புதிய மோதிரம் அவன் மோதிர விரலில் பளபளத்துக் கொண்டிருந்தது.

நந்திதா மாட்டி விட்ட நிச்சயதார்த்த மோதிரம் அது.

அதை மாட்டும் போது மண்டபத்தில் நடந்த கலாட்டாவும், நந்திதா முகத்தில் இருந்த வெட்கமும் இன்னும் கண் முன் வந்து நின்றது.

ஒரு நொடி! ஒரு நொடியில் தன் வாழ்க்கையில் அனைத்தும் மாறி விட்டதே, ஏன்? இரவில் இருந்து அவனுக்கு அவனே கேட்டுக் கொண்ட கேள்வி அது. பதில் தான் கிடைக்கவில்லை.

இரவெல்லாம் தனிமையில் ஏதேதோ யோசித்துக் குழம்பி தவித்துத் தான் போனான். ஏனோ தன் வாழ்க்கையே சூனியமாகி போனது போல் இருந்தது அவனுக்கு.

தான் குற்றமற்றவன் என்று நிரூபணம் ஆனதில் ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அடுத்து என்ன? என்ற கேள்வி அவனை நிம்மதியில்லாமல் துரத்தியது.

நேர்மையாக இருப்பவர்களுக்குத்தான் அடி விழும் என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வர, விரக்தியாகச் சிரித்துக் கொண்டான்.

தன் நேர்மைக்குப் பரிசு? போலீஸ் ஸ்டேஷன் வாயிலை மிதித்ததும், நடக்க இருந்த திருமணம் நின்றதும் தானா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

‘இல்லை… அது மட்டும் இல்லை… இதோ இந்தத் தனிமை! அன்னை, தந்தையைப் பிரிந்ததும் தான்!’ என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

கூடவே ‘இந்த மோதிரத்திற்கு இனி என்ன அர்த்தம்?’ என்ற கேள்வி தோன்ற அதை வெறித்துப் பார்த்தான்.

இனி இதற்கு எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. எப்போது அவனை அருவருப்பாகப் பார்த்து நந்திதா அவனை விட்டு விலகி நின்றாளோ அப்போதே அனைத்தும் முடிந்து போனது என்று நினைத்துக் கொண்டான்.

அர்த்தம் இல்லாமல் இது தன்னிடம் இருக்க வேண்டாம் என்று நினைத்தவன், உடனே மோதிரத்தை தன் விரலிலிருந்து கழற்றப் போனான்.

ஆனால் அதற்குள் வீட்டின் அழைப்பு மணி அழைக்க, கழற்றுவதை விட்டுவிட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தான்.

மாதவன் தான் வந்திருந்தார்.

“வாங்க மாமா…” வரவேற்றான்.

“வர்றேன் பிரபா. குளிச்சிட்டியா?” என்று கேட்டார்.

“குளிச்சிட்டேன் மாமா…”

“அப்ப சரி, இந்தா டிபன் வாங்கிட்டு வந்தேன், சாப்பிடு…” என்று கையோடு வாங்கி வந்த பார்சலை நீட்டினார்.

“நீங்க ஏன் மாமா வாங்கிட்டு வந்தீங்க? நான் கடையில் போய்ச் சாப்பிட்டுருப்பேனே?”

“வர்ற வழியில் ஒரு நல்ல ஹோட்டல் பார்த்தேன் பிரபா. அதான் வாங்கினேன். முதலில் சாப்பிடு. அப்புறம் பேசலாம்…” என்றார்.

“சரி மாமா, நீங்க சாப்பிட்டீங்களா?”

“நான் சாப்பிட்டு தான் உன் பைக்கை எடுத்துட்டு வந்தேன் பிரபா…”

“ஓ, நீங்க போன பிறகு தான் எனக்குப் போனா?” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.

“என்ன அக்கா போன் செய்தாளா?” கவனித்துக் கேட்டார் மாதவன்.

“ம்ம்…” என்று தலையை ஆட்டினான்.

“உன்னைப் பத்தி இன்னைக்குப் பேப்பரில் வந்திருக்கு. அதைப் பார்த்துட்டு என்கிட்ட நீ எங்கே? இன்னும் ஏன் வீட்டுக்கு வரலைன்னு அக்காவும், அத்தானும் கேட்டாங்க…” என்றார்.

“ஓ, பேப்பரிலேயே வந்துருச்சா?” என்று தளர்ந்து போய்க் கேட்டான்.

கூடவே செய்தியைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டு தான் அன்னை அவனுக்கு அழைத்திருக்கிறார் என்று தோன்றியதும் உள்ளுக்குள் கசப்பாக உணர்ந்தான் பிரபஞ்சன்.

செய்தித்தாளில் உண்மை வரவில்லை என்றால் அதுவும் நம்பியிருக்க மாட்டார் தானே என்ற எண்ணம் அவனை இன்னும் அவர்களை விட்டு விலகி போக நினைக்க வைத்தது.

அவன் தனக்குள் மூழ்கி இருந்த போது, மாதவனின் கைபேசி சிணுங்கியது.

எடுத்து யார் என்று பார்த்து விட்டு, பிரபஞ்சனைப் பார்த்தார்.

அதிலேயே அழைப்பது யார் என்று அவனுக்குப் புரிந்து போனது.

“நான் யார்கிட்டயும் பேச தயாரா இல்லை மாமா…” என்றவன் அவர் வாங்கி வந்த பார்சலை பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

அவனைப் பார்த்துக் கொண்டே, “சொல்லுக்கா…” என்று அழைப்பை ஏற்றுப் பேசினார் மாதவன்.

“மாதவா… பிரபா போனை எடுக்க மாட்டேங்கிறான். இப்ப போனே போகவும் மாட்டிங்குது. என்னாச்சுன்னு ஒன்னும் தெரியலை. அவனுக்கு என்னாச்சு மாதவா? எங்கே இருக்கான்? நீயாவது சொல்லு…” என்று பதட்டமாகக் கேட்டார் கஸ்தூரி.

“அவன் நல்லாத்தான் இருக்கான்கா. இதுக்கு மேலே என்னை எதுவும் கேட்காதே! என்னால் சொல்ல முடியாது. பிரபாவுக்கே உன்னை எப்ப பார்க்கணும்னு தோணுதோ அப்ப பேசுவான்…” என்றார் மாதவன்.

“என்ன மாதவா, நீயும் இப்படிச் சொல்ற? உனக்கு அவன் எங்கே இருக்கான்னு தெரியும் போது சொல்றதுக்கு என்ன? அப்படி என்ன நாங்க பெரிய பாவம் பண்ணினோம்? ஒரு பெண் பிள்ளைக்கு அநியாயம் நடந்திருச்சோன்னு பயந்து கத்திட்டோம். அதுக்காக எங்களை ஒதுக்கி வச்சுருவானா?” என்று ஆதங்கமாகக் கேட்டார்.

“ஏதோ ஒரு பெண் பிள்ளைக்காக நீங்க பதறியது தப்பு இல்லக்கா. ஆனால் நடந்தது உண்மையான்னு உன் பிள்ளைக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இப்ப அவன் மனசு ரொம்ப உடைந்து போயிருக்குக்கா. கொஞ்ச நாள் அவனை அவன் போக்கில் விடு. அவன் மனம் சமாதானம் ஆனதும் அவனே உங்ககிட்ட வருவான்…” என்றார் மாதவன்.

“அதான் எப்போ?” பொறுமை இல்லாமல் கேட்டார் கஸ்தூரி.

“பொறுக்கா. உடனே அவசரப்பட்டா நடக்குமா? காயத்தை ஏற்படுத்திட்டு உடனே மருந்து போட்டாலும் சில காயங்கள் ஆற நாள் ஆகத்தான் செய்யும்கா. காயம் ஆறும் வரை பொறுத்துத் தான் ஆகணும்…”

“எங்க பிள்ளையை அப்படி யாரோ போல எங்கயோ இருக்கட்டும்னு எப்படி விடமுடியும் மாதவா?” நியாயம் கேட்டார்.

“அப்படி ஏற்கனவே அவனை யாரோ போல விட்டதன் பலனையும் அனுபவிச்சுத்தானே ஆகணும் கா?” பதிலடி கொடுத்தார் மாதவன்.

“இப்ப நீ எங்கே இருக்கச் சொல்லு?” என்று கஸ்தூரி விடாமல் கேட்க,

“பிரபா வீட்டில் தான் இருக்கேன்…”

“அவன்கிட்ட போன் கொடு மாதவா, நான் பேசுறேன். நான் பேசினால் அவன் மனசு மாறி உடனே எங்ககிட்ட வந்திடுவான்…” என்று கஸ்தூரி சொன்ன போது போனை ஸ்பீக்கரில் போட்டார் மாதவன்.

அன்னையின் குரல் கேட்டதும் மாதவன் யாரிடம் பேசினால் என்ன என்பது போல் உணவை உண்டு கொண்டிருந்த பிரபஞ்சனின் கை அப்படியே நின்று போனது.

மாதவனை நிமிர்ந்து பார்க்காமலேயே ‘பேச மாட்டேன்’ என்பது போல் தலையை அசைத்தான் பிரபஞ்சன்.

“பிரபா இப்ப என்கிட்டயும், ராகாகிட்டயும் தான் பேசிட்டு இருக்கான்கா. நான் உன்கிட்ட பேச சொல்லி கட்டாயப்படுத்தினால் என்கிட்டயும் பேச மாட்டான். இப்ப நம்ம வீட்டு சார்பா யாராவது அவனுக்கு ஆறுதலா இருக்கணும்னு நினைக்கிறேன். அது வேண்டுமா? வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோக்கா…” என்று மாதவன் சொல்ல,

“என்ன மாதவா நீ?” என்று சோர்வாகச் சொன்னவர், “நான் அவனைக் கேட்டதாகச் சொல்லு…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார் கஸ்தூரி.

“தேங்க்ஸ் மாமா!” என்றான் பிரபஞ்சன்.

“உன் சார்பா அவங்ககிட்ட பேசிட்டேன் பிரபா. ஆனால் அக்காவையும், அத்தானையும் கொஞ்சம் யோசி. அவங்க ஏதோ இந்த விஷயத்தில் சறுக்கிட்டாங்க. அதுக்காக அவங்க கெட்டவங்க இல்லை…” என்றார் மாதவன்.

“ஆனால் ஒரு நொடியில் என்னைக் கெட்டவனா ஆக்கிட்டாங்களே மாமா?” என்று இயலாமையுடன் கேட்டான்.

“அது தப்பு தான். ஆனால் சூழ்நிலை தான் காரணமே தவிர, அவங்க வேணும்னே எந்தத் தவறும் செய்யலை…” என்று மாதவன் சொன்னதை, பிரபஞ்சனால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை.

மாதவன் சொன்னது போல் அவனின் காயம் ஆற நாளாகத்தான் செய்யும்.

அதற்கு மேல் சாப்பிடாமல் அவன் எழுந்து கொள்ளப் போக, “ம்ப்ச், உட்கார் பிரபா! இனி நான் அவங்களைப் பத்தி பேசலை. சாப்பிடு!” என்று அதட்டவும், மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

“இன்னைக்கு ஸ்கூல் போறீயா பிரபா?” அவன் சாப்பிட்டு முடித்து வந்ததும் விசாரித்தார் மாதவன்.

“காலையிலேயே ஹெட் மாஸ்டர் போன் செய்தார் மாமா. நடந்த தவறுக்கு ஸ்கூல் சார்பாக மன்னிப்புக் கேட்டார். வழக்கம் போல் ஸ்கூல் வர சொன்னார்…” என்றான்.

“நீ என்ன முடிவு எடுத்திருக்க?”

“ஸ்கூல் போறேன் மாமா. நான் என்ன தப்புச் செய்தேன், ஓடி ஒளிய? இந்த வேலை நான் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று மாமா. என் மேல் எத்தனை பேருக்கு என்ன விரோதம் வந்தாலும் என் தொழிலையும் விட மாட்டேன், வழி தவறிச் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்த தயங்கவும் மாட்டேன்!” என்று உறுதியாகச் சொன்னான் பிரபஞ்சன்.

“நல்ல முடிவு பிரபா. உன்னைப் பார்த்து உன் மாமாவா நான் பெருமைப்படுறேன். நல்லதே செய்! நல்லதே நடக்கும்!” என்று அவனின் தோளை தட்டிக் கொடுத்தார் மாதவன்.

நல்லவை காலம் முழுவதும் தொடர்ந்து வரத்தான் செய்யும்!