11 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 11
“உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நீங்க எப்படிப்பட்ட ஆள்னு எனக்கு இப்பத்தான் புரியுது. அப்போ இதுதான் உங்க திட்டம் இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டாள் துர்கா.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் தடுமாறி நின்றான் நித்திலன்.
“என்னமா, என்னாச்சு? எதுக்குத் தம்பியைச் சத்தம் போட்டுட்டு இருக்க?” கழிவறையிலிருந்து வந்த சபரிநாதன் புரியாமல் கேட்டார்.
“நீங்களே இவரை என்னன்னு கேளுங்கபா. இவரை நீங்களும், நானும் எவ்வளவு நல்லவர்னு நினைச்சோம். ஆனா இவர் என்ன செய்துருக்கார் பாருங்க…” கோபத்துடன் தந்தையிடம் முறையிட்டாள்.
என்ன விஷயம் என்று புரியாமல் நித்திலனை பார்த்தார் சபரிநாதன்.
அவனோ முகம் வெளுத்துப் போய் நின்றிருந்தான்.
தன் மனது அவளுக்குத் தெரிந்து விட்டதோ என்று நடுங்கிப் போனான்.
அவன் சொல்லாமல் அவளுக்கு எப்படித் தெரியும் என்றெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை.
அவனின் முகத்தை யோசனையாகப் பார்த்து விட்டு மகளைக் கேள்வியாகப் பார்த்தார்.
“என்னமா செய்தார்? ஏன் இவ்வளவு கோபப்படுற?” மகளிடம் விசாரித்தார்.
“நம்ம வருணா கூட அவர் சாதாரணமா பழகுறார்னு தானே நினைச்சோம்… ஆனா அப்படி இல்லப்பா. ஏதோ உள்நோக்கத்தோடு தான் பழகியிருக்கார்…” என்றாள்.
அவள் அப்படிச் சொன்னதும் இப்போது நித்திலனுமே புரியாமல் நின்றான்.
அவள் தன் மனதை அறிந்திருக்கவில்லை என்ற ஆசுவாசம் அவனிடம்!
அதே நேரம் வருணாவை வைத்துத் தன்னை என்ன குற்றம் சொல்கிறாள் என்று அவனுக்கு விளங்கவில்லை.
“என்னமா சொல்ற? உள்நோக்கமா? தம்பி அப்படி இல்லமா. நீ தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்ட போல…” என்றார் சபரிநாதன்.
“ஆமாபா. தப்பாத்தான் புரிஞ்சிக்கிட்டேன். இன்னைக்கு இல்ல, இதுக்கு முன்னாடி. அதனால் தான் வருணா அவரோட ஒட்டிக்கிட்டதைப் பெருசா எடுத்துக்கலை. ஆனா இன்னைக்கு… இப்ப, இந்த நிமிசம்…” என்றவள் நித்திலனை கோபமாக முறைத்தாள்.
அவனுக்கு அப்போது தான் குழந்தை தன்னை ‘அப்பா’ என்று அழைத்ததில் கோபம் கொண்டிருக்கிறாள் என்பதே புத்தியில் உறைத்தது.
அவனைப் பொறுத்தவரை குழந்தை தன்னை ‘அப்பா’ என்று அழைத்தது பரவசநிலை! ஆனால் அவளுக்கு அப்படி இருக்க முடியாதே! என்று நினைத்தவனுக்கு நிதர்சனம் புரிந்தது.
அவன் நினைத்ததையே தான் துர்காவும் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“வருணா இப்ப இவரை அப்பான்னு கூப்பிட்டாள்பா…” என்று சொல்ல,
சபரிநாதன், “என்ன?” அதிர்ச்சியா? வியப்பா? எந்த உணர்வு என்று புரியாத வகையில் கேட்டு வைத்தார்.
“ஆமாப்பா, இவர் தான் அப்பான்னு கூப்பிட சொல்லிக் கொடுத்திருக்கணும். குழந்தையை அப்பான்னு கூப்பிட வைத்து என்னை நெருங்க பிளான் போட்டிருக்கிறாரா இவர்? அப்போ எல்லா ஆம்பிளைங்க போலவும் இவரும் என்னை நெருங்கத்தான் நினைச்சாரா?” என்று ஆத்திரத்துடன் துர்கா அவனைப் பார்த்து கேட்க, அதிர்ந்து போனான் நித்திலன்.
இப்படி ஒரு குற்றச்சாட்டை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
சொல்ல போனால் அவளின் மீது தனக்குச் சலனம் வந்தும் தன் மனதை அடக்கி வைத்து மறைத்துக் கொண்டிருக்கிறான்.
அப்படியிருக்கும் போது குழந்தையைக் காரணமாக வைத்து அவளை நெருங்க நினைத்தான் எனச் சொல்வது அபாண்டமான பழி என்று நினைத்தான்.
அதுவும் குழந்தையிடமிருந்தும் அவன் விலகித்தான் போனான். குழந்தை எப்படித் தன்னை ‘அப்பா’ என்றழைத்தாள் என அவனுக்குமே தெரியவில்லை.
அப்படி இருக்கும் போது துர்கா தன்னைத் தவறாக நினைத்து விட்டாளே என்று பதறிப் போனான்.
“அய்யோ! இல்லங்க, குழந்தையாகத்தான் கூப்பிட்டாள். நான் எந்த எண்ணத்தோடும் பழகலை…” என்றான்.
“இல்லை, என்னால் நம்ப முடியலை. நான் அவள் அப்பா பத்தி அவகிட்ட பேசியதே இல்லை. அப்படி இருக்கும் போது அவ எப்படி அப்பாகிற வார்த்தையைச் சொன்னாள்? ஒருத்தர் சொல்லிக் கொடுக்காம எப்படிச் சொல்ல முடியும்?
இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவள் அப்பான்னு சொன்னதும், நீங்க ஏன் அவ்வளவு உணர்ச்சி வசப்படணும்? அப்படி எமோஷனலா நடந்து கொள்ள என்ன காரணம்? இதெல்லாம் சாதாரணமா என்னால எடுத்துக்க முடியலை.
ஏற்கனவே உங்களால் எனக்குக் கெட்டப் பேர், கண்டவங்க எல்லாம் கண்டமேனிக்கு என் மேல பழி சொல்லிட்டு இருக்காங்க இதில் இவள் உங்களை அப்பான்னு கூப்பிட்டது தெரிஞ்சதுனா அது எனக்குத் தானே கேவலம்? என் பேரைத்தானே நாரடிப்பாங்க?” என்று அவள் கோபமாகக் கத்த,
அந்தக் காம்பவுண்டில் இருந்த மற்ற குடித்தனக்காரர்கள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தனர்.
அவள் பேச்சில் அவனுக்கு முகம் சுருங்கியது! மனம் சிணுங்கியது!
தன்னால் தான் அவளுக்குக் கெட்டப் பெயர் வருகிறது என்று சொன்னது அவனின் மனதை சுருக்கென்று தைத்தது.
அவளுக்கு அந்தப் பெயர் வரக்கூடாது என்று தானே விலகி விலகிச் செல்கிறான். அப்படி இருக்கும் போது தன்னை இப்படிச் சொல்லிவிட்டாளே என்று வருத்தப்பட்டான்.
அதே நேரம் மற்றவர்களும் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, அவனுக்கு அவமானமாக இருந்தது.
அதிலும் அந்த வித்யா அவள் வீட்டு வாசலில் நின்று இங்கே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனம் வலிக்கத் துர்காவைப் பார்த்தான்.
“தம்பி அப்படி எல்லாம் இருக்காதுமா. குழந்தை ஏதோ தவறுதலா கூப்பிட்டிருப்பா. விடு! எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க…” என்றார் சபரிநாதன்.
“நாம சொல்லிக் கொடுக்காம தவறுதலா எப்படிப்பா கூப்பிட முடியும்? அதுவுமில்லாம அவள் அப்பான்னு கூப்பிட்டதும் அவர் ரொம்பச் சந்தோஷப்பட்டார்பா. இதெல்லாம் எனக்குச் சரியாப்படலை…” என்று துர்கா தந்தையிடம் கோபமாகச் சொல்லி கொண்டிருக்கும் போதே, நித்திலன் வேதனையுடன் தன் வீட்டுப்பக்கம் திரும்பினான்.
உடனே அவன் பக்கம் திரும்பிய துர்கா, “நில்லுங்க…” என்றாள்.
நித்திலன் அவள் பக்கம் திரும்பாமல் அப்படியே நிற்க, “இனி என் பொண்ணைப் பார்க்காதீங்க, தூக்காதீங்க! அப்பா ஆப்ரேஷனுக்குக் கொடுத்த பணத்தை நாளைக்கே உங்களுக்கு முழுசா செட்டில் பண்ணிடுவேன். இப்ப நினைச்சு பார்த்தால் நீங்க நான் கொடுத்த நகையையே வாங்காமல் இருந்தது கூட இன்னும் எங்க கூட இப்படிப் பழகணும்னு தானோன்னு தோணது.
நான் தான் ஆரம்பத்திலேயே உங்களைத் தள்ளி நிறுத்தாம தப்பு பண்ணிட்டேன. இனியும் அந்தத் தப்பை செய்ய நான் தயாராக இல்லை. இனி உங்க பார்வை கூட எங்க பக்கம் திரும்ப வேண்டாம். விலகிப் போயிடுங்க…” என்று துர்கா கண்டிப்புடன் சொன்னதும் வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டான்.
அவனின் மனம் வருத்தத்திலும், வேதனையிலும் கசந்து வழிந்தது.
அப்போது “நித்திலா… என்னப்பா என்ன பிரச்சனை? எதுக்கு இந்தப் பொண்ணு உன்னைத் திட்டுது?” என்ற குரல் அவனின் முதுகிற்குப் பின் கேட்க, விலுக்கென்று விழிகளைத் திறந்து, வேகமாகத் திரும்பினான்.
“அம்மா…” அங்கே நின்றிருந்த செவ்வந்தியைப் பார்த்தவன், வேகமாக அவரின் அருகில் சென்றான்.
“அம்மா, நீங்களா? நீங்க எப்படி இங்கே? எப்படி வந்தீங்க? தனியாவா?” என்று கேள்விக்களைப் படபடவென்று அடுக்கினான்.
‘அம்மாவா? இவருக்குச் சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்களா?’ என்பது போல் அவர்களைப் பார்த்தாள் துர்கா.
அவன் இந்த வீட்டிற்குக் குடிவந்ததிலிருந்து அவனும் வெளியூர் எங்கும் சென்றதில்லை. அவன் வீட்டிற்கும் யாரும் வந்ததில்லை என்பதால் அந்த நினைப்பு வந்தது அவளுக்கு!
“நான் வந்தது இருக்கட்டும். இங்கே என்ன பிரச்சனை? இந்தப் பொண்ணு ஏன் உன்னைச் சத்தம் போட்டுட்டு இருக்கு?” என்று துர்காவைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.
துர்கா நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது போல் தயங்காமல் அவரைப் பார்த்தாள்.
சபரிநாதனுக்குத் தான் சங்கடமாக இருந்தது. அவருக்கு மகள் சொன்னது போல் நித்திலன் தவறு செய்திருப்பான் என்று தோன்றவில்லை.
அதிலும் என்றும் இல்லாமல் அவனின் அம்மா வந்திருக்கும் சமயம் இப்படி நடந்தது அவருக்குச் சங்கடத்தைக் கொடுத்தது.
“அது ஒண்ணுமில்லமா. நீங்க வாங்க…” என்று அன்னையை அழைத்தவன், அவர் கையிலிருக்கும் பையை வாங்க கை நீட்டினான்.
“நித்திலா, என்ன இது?” அவனின் கையைப் பார்த்த செவ்வந்தி அதிர்ந்து கத்தினார்.
சபரிநாதனும், துர்காவும் கூட என்னவோ என்று பார்த்தவர்கள், அவன் கை இருந்த நிலையைப் பார்த்து திடுக்கிட்டனர்.
அவனின் உள்ளங்கை சிவந்திருக்க, கையின் பின் பக்கம் வீங்கியிருந்தது.
அவன் உணர்ச்சி வேகத்தில் தரையில் அடித்துக் கொண்டது தன் வேலையைக் காட்டியிருக்க, கை வீங்கியிருந்தது.
அதற்கு அலட்டிக் கொள்ளாதவன், “இது ஒண்ணுமில்லமா… நீங்க பையைக் கொடுங்க…” என்று பையைத் தன் இடது கையால் வாங்க போக, அதற்குள் அந்தப் பையை இன்னொரு கை பெற்றுக் கொண்டது.
“நான் தான் பையைத் தூக்கிக்கிறேன்னு சொன்னேன்ல? அதுக்குள்ளே உங்களை யாருமா பையைத் தூக்கிட்டு வர சொன்னது?” என்று கடிந்து கொண்டவனை, “அண்ணா?” என்று வியப்பாக அழைத்தான் நித்திலன்.
“இந்த அண்ணா உயிரோடு இருப்பது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று இடக்காகக் கேட்டான் அவனின் அண்ணன் நிரஞ்சன்.
“என்ன அண்ணா இது, இப்படிக் கேட்டுட்டு இருக்க?” என்று நித்திலன் வருத்தமாகக் கேட்க,
“பின்னே என்னடா?” என்று கோபமாக ஏதோ சொல்ல வந்தவன் அனைவரும் தங்களை வேடிக்கை பார்ப்பதை பார்த்து அமைதியானான்.
நித்திலனும் புரிந்து கொண்டு, அன்னையையும், அண்ணனையும் “வாங்க, வீட்டில் போய்ப் பேசுவோம்…” என்று அவர்களை அழைத்துப் போனான்.
துர்காவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார் செவ்வந்தி.
நிரஞ்சன் காம்பவுண்டுக்கு வெளியே ஆட்டோவிற்குக் காசு கொடுத்துக் கொண்டிருந்ததால் உள்ளே நடந்த பிரச்சனை அவனுக்குத் தெரியவில்லை
துர்காவும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
“என்னடா, இவ்வளவு சின்ன வீட்டில் இருக்க? வேற நல்ல வீடா வாடகைக்கு எடுத்திருக்கலாமே?” தம்பி இருந்த வீட்டை பார்த்து வருத்தத்துடன் கேட்டான் நிரஞ்சன்.
“என் ஒருத்தனுக்கு இந்த வீடே பெருசு தான் ணா…” என்றான் நித்திலன்.
“அதெல்லாம் அப்புறம் பேசலாம் பா. உன் கை என்னாச்சு?” என்று செவ்வந்தி மகனின் கையைப் பிடித்துக் கேட்க,
“என்னடா இது? எப்படி ஆச்சு?” என்று நிரஞ்சனும் பதற,
“ஒண்ணுமில்லமா, சுவரில் இடிச்சுக்கிட்டேன்…” என்றவனை இருவரும் நம்பாமல் பார்த்தனர்.
“இது கொஞ்ச நேரத்தில் சரியாகிடும். சரி, அதை விடுங்க. என்னமா சொல்லாம திடீர்ன்னு வந்துட்டீங்க? அண்ணி எப்படி உங்களை விட்டாங்க. அதுவும் அண்ணனே உங்களை அழைச்சுட்டு வந்திருக்கான். அதிசயம் தான்…” என்றான்.
“ஏன்டா, நான் அம்மாவை அழைச்சுட்டு வருவதில் என்ன அதிசயம்?” என்று நிரஞ்சன் கேட்க,
‘ஏன் உனக்குத் தெரியாதாக்கும்?’ என்ற பார்வை பார்த்தான் நித்திலன்.
அவனின் பார்வைக்குப் பதில் சொல்ல முடியாமல் போனது என்னவோ நிரஞ்சன் தான்.
செவ்வந்தியோ மகன்களின் பேச்சை கண்டு கொள்ளாமல் தன் பையைத் திறந்து, தனக்கெனக் கொண்டு வந்திருந்த ஒரு தைலத்தை எடுத்து வந்து இளைய மகனின் கையில் தேய்க்க ஆரம்பித்தார்.
“ஷ்ஷ்… ஆஆ…” என்று முனங்கினான் நித்திலன்.
அவனின் கை அப்போதே பயங்கரமாக வலிக்க ஆரம்பித்திருந்தது. ஆனால் துர்காவின் குற்றச்சாட்டால் உண்டான வலியை விட அவனுக்குக் கை வலி பொருட்டாகவே இல்லை.
இனி குழந்தையைத் தான் தூக்கவே முடியாதா என்ற ஏக்கம் அவனின் உயிரையே ஆட்டம் காண வைத்தது என்னவோ உண்மை! இதில் கை வலி எல்லாம் எம்மாத்திரம்?
“இவ்வளவு கை வலி வச்சுக்கிட்டு ஒண்ணுமில்லன்னு சொல்ற?” என்று மகனை கடிந்து கொண்டே வீங்கிய இடத்தில் எல்லாம் பரபரவென்று தைலத்தைத் தேய்க்க ஆரம்பித்தார்.
பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டான்.
“இப்ப சொல்லு பக்கத்து வீட்டோட என்ன பிரச்சனை நித்திலன்? அந்தப் பொண்ணு ஏன் உன்கிட்ட கோபமா பேசினாள்?” என்று தைலத்தைத் தேய்த்து முடித்ததும் கேட்டார்.
“என்ன, கோபமா திட்டுச்சா? எப்போ?” நிரஞ்சன் கேட்க,
“நான் ஆட்டோ விட்டு இறங்கி வந்தப்ப, இனி என் குழந்தையைப் பார்க்காதீங்க, உங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை நாளைக்கே கொடுக்கிறேன்னு… அந்தப் பொண்ணு சொல்லிட்டு இருந்தது நிரஞ்சா. என்னன்னு கேட்டால் இவன் சொல்ல மாட்டேங்கிறான். நீயே என்னன்னு கேளு…” என்று பெரிய மகனிடம் முறையிட்டார் அவர்.
“என்னடா இதெல்லாம்? அந்தப் பொண்ணுக்கு நீ பணம் கொடுத்தியா? என்ன விஷயம்?” என்று நிரஞ்சன் கேட்க,
சபரிநாதன் சிகிச்சைக்குப் பணம் கொடுத்து உதவியதை சொன்னான்.
“சரி, நீ அவங்களுக்கு உதவி தானே செய்த? பின்ன ஏன் திட்டணும்?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
“பதில் சொல்லாம அமைதியா இருந்தால் என்ன அர்த்தம் நித்திலா? போன வாரம் பேசும் போதே உன் குரலே சரியில்லை. அதுக்குப் பிறகு நான் போன் போட்ட போதும் நீ எடுக்கலை. நீ எப்படி இருக்கியோன்னு தவிச்சுப் போய் வந்து பார்த்தால் இங்கே பக்கத்து வீடு கூடச் சண்டையா இருக்கு. இதெல்லாம் என்னப்பா?” என்று செவ்வந்தி வருத்தத்துடன் கேட்டார்.
நித்திலன் தன் அமைதியை நீடித்தவனாகத் தளர்ந்து தரையில் சுவற்றில் சாய்ந்து அப்படியே அமர்ந்தான்.
அவனின் கண்களில் ஓர் விரக்தி, உதட்டோரம் வலியின் துடிப்பு, முகத்தில் கவிழ்ந்து கிடந்த வேதனை, தன் வலியை விழுங்க துடிக்கும் தவிப்பின் துடிப்பு அவனின் ஏறி இறங்கிய மார்பில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
மகனை அப்படிப் பார்த்த செவ்வந்தி துடித்துத் தான் போனார்.
இதற்கு முன் ஒரு வருடத்திற்கு முன்பு தான் மகனை இப்படிப் பார்த்திருக்கிறார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவனை இந்த நிலையில் பார்த்துத் தாயாக அவரின் உள்ளம் பதறித் தான் போனது.
அவரும் மகனின் அருகில் அமர்ந்தார்.
“என்னப்பா ஆச்சு? ஏன் இப்படித் தவிக்கிற? அம்மாகிட்ட சொல்லு ராஜா…” என்று பரிவாகக் கேட்டார்.
“அம்மா…” தீனமான குரலில் அழைத்தவன், அப்படியே அவரின் மடியில் தலை வைத்து சாய்ந்து படுத்தான்.
மகனை மடி தாங்கிக் கொண்டார் செவ்வந்தி.
தம்பியை அவ்வளவு தவிப்புடன் பார்த்து நிரஞ்சனும் அவனின் அருகில் அமர்ந்து தம்பியின் முதுகை தடவி கொடுக்க, செவ்வந்தி மகனின் தலையைப் பரிவாகக் கோதி விட்டார்.
நீண்ட மாதங்களுக்குப் பிறகு கிடைத்த அன்னை, தமையனின் அருகாமை அரவணைப்பில் குழந்தையாக உடைந்து தான் போனான் அந்த வளர்ந்த குழந்தை.
சற்று நேரம் அவனிடம் ஒன்றும் கேட்காமல் இருவரும் ஆதரவாக அமர்ந்திருந்தனர்.
நேரம் செல்ல, “நீ இப்படித் தவிச்சு போற அளவுக்கு என்ன நடந்ததுபா?” என்று மெல்ல மகனிடம் கேட்டார் செவ்வந்தி.
“அம்மா, இன்னைக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நடந்துச்சு மா…” என்று அவ்வளவு நேரமிருந்த வேதனையைப் புறம் தள்ளி அன்னையின் முகம் பார்த்து மகிழ்ச்சியுடன் சொன்னான் நித்திலன்.
‘சந்தோஷமான விஷயம் நடந்தால் ஏன் நீ இவ்வளவு வருத்தப்பட வேண்டும்?’ என்று மகனிடம் கேட்க துடித்த கேள்வியைத் தனக்குள் அடக்கிக் கொண்டார் செவ்வந்தி.
ஆனால் அவரின் பெரிய மகன் அடக்கி வைத்திருக்கவில்லை.
“சந்தோஷமான விஷயம் நடந்ததா? என்னடா சொல்ற? ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் முகத்தைப் பார்த்தால் அப்படி இல்லையே?” என்றான் நிரஞ்சன்.
“அது வேற அண்ணா, ஆனா அதுக்கு முன்னாடி நான் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன் ணா…” என்றவனின் முகம் மகிழ்ச்சியில் விகசித்து இருந்தது.
“என்ன நடந்துச்சுன்னு சொன்னால் தானே தெரியும்?” நிரஞ்சன் கேட்க,
“நான் அப்பாவாகிட்டேன் அண்ணா…” என்று நித்திலன் சொல்ல, தாய், தமையனின் முகங்கள் வெளிறிப் போயின.