11 – இதயத்திரை விலகிடாதோ?
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 11
“என்ன மதினி இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? அதெல்லாம் என் மருமகளுக்கு ஒரு குறையும் இருக்காது…” மருமகளுக்கு ஆதரவாக நின்றார் சித்ரா.
“நடக்காததை ஒன்னும் நான் சொல்லலையே மதினி? இப்ப காலம் அப்படித்தான் இருக்கு. விதவிதமா குறைகள் வருது. அதான் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டால் நல்லதுன்னு சொல்றேன். இரண்டு, மூனு வருஷத்துக்குப் பிறகு பார்த்து, அப்புறம் டாக்டர்கிட்ட போய், ஏன் லோல் படணும்? இப்பவே பார்த்தால் பின்னாடி கஷ்டப்பட வேண்டியது இருக்காதுல?” அவளுக்கு இப்போது குறையே உள்ளது போல் இருந்தது அவர் பேச்சு.
கேட்டுக் கொண்டிருந்த யுவஸ்ரீயின் கண்கள் கலங்கிப் போயின.
‘எனக்கு ஒரு குறையும் இல்லை. இப்படிப் பேசாதீங்க!’ என்று சொல்ல கூட அவளுக்கு வாய் வரவில்லை.
மாமனாரின் ஒன்றுவிட்ட சகோதரி அவர்.
தான் எதுவும் பேசினால் பிரச்சினை ஆகிவிடுமோ என்று வாயை பூட்டிக் கொண்டாள்.
ஆனால் கண்களுக்கு அப்படிப் பூட்டு போட முடியவில்லை. கண்களில் ததும்பி நின்ற கண்ணீரை முயன்று அடக்கிக் கொண்டிருந்தாள்.
கண்ணீரை அடக்க அடக்க மனம் கனத்துப் போனது. நெஞ்சத்தில் பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் இருந்தது.
மருமகளின் நிலை புரிந்து சித்ரா ஏதோ அவளுக்கு ஆதரவாகப் பேச முயல, அதற்கு முன் அங்கே வந்தான் சூர்யா.
“என்ன அத்தை என் பொண்டாட்டியை ராகிங் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று மனைவியின் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே கேள்வியை வீசினான்.
“ராக்கா? அப்படினா?” என்று அப்பாவி போல் கேட்டார் அவர்.
“ராகிங்னா என்னன்னு கூடத் தெரியலை. அப்புறம் என்னவோ பெரிய டாக்டர் போல என் பொண்டாட்டிக்கு வைத்தியம் சொல்லிட்டு இருக்கீங்க?” என்று நக்கலாகக் கேட்டான்.
“என்ன மருமவனே பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு? உங்க நல்லதுக்குத் தானே சொன்னேன். என் அண்ணன் குடும்பம் தழைக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
“அது சரி, எங்க குடும்பத்து மேல உங்களுக்கு ரொம்ப அக்கறை தான்…” நையாண்டியுடன் சொன்னான்.
“பின்ன, இருக்காதா மருமவனே? என் அண்ணன் குடும்பம்னா எனக்கு உசுரு ஆச்சே. நாங்க பொம்பளைங்களா ஏதோ பேசிட்டு இருக்கோம். பொம்பளைங்க விஷயம் உங்களுக்கு எதுக்கு? நீங்க போங்க மருமவனே…”
“என்ன பொம்பளைங்க விஷயமா? இது நானும், என் பொண்டாட்டியும் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம். எங்க கல்யாணம் நடந்து ஆறு மாசம் தான் ஆகுது. ஆறு வருஷம் இல்லை… அப்படியே ஆறு வருஷத்துக்குப் பிறகும் குழந்தை இல்லனா அதைப் பற்றிப் பேச வேண்டியது நாங்க தானே தவிர, நீங்க இல்லை.
எங்க விஷயத்தைப் பேச உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை. ரைட்ஸ்னா என்னன்னு தெரியும்ல? தெரியாதுனா நானே சொல்றேன். எந்த உரிமையும் இல்லை…” என்றான், முகத்தில் அடித்தது போல்.
அந்தப் பெண்மணியின் முகம் அவமானத்தால் சுருங்கிப் போனது.
“என்ன மதினி கூப்பிட்டு வந்து அவமானப்படுத்துறீங்களா?” என்று சித்ராவிடம் சீறினார் அவர்.
“ஐயோ! இல்லை மதனி…” என்று பதறினார் சித்ரா.
மகன் இப்படி முகத்தில் அடித்தது போல் பேசுவான் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை.
அந்தப் பெண்மணி பேச்சு அவருக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால் மேலும் பிரச்சினையை வளர்க்காமல் அவரே அவரின் வாயை நாசுக்காக அடக்கியிருப்பார்.
ஆனால் அதற்குள் மகன் அங்கே வந்து அவரிடம் நேரடியாகப் பேசிவிடுவான் என்று அவர் நினைக்கவில்லை.
சில உறவுகளை நாசுக்காகத்தான் கையாள வேண்டும். அதுவும் கணவனின் வழி சொந்தம் என்னும் போது அந்தப் பெண்மணியிடம் தானே பேசி சரி கட்டிவிடலாம் என்று நினைத்தார்.
ஆனால் அவரின் மகன் அந்தச் சந்தர்ப்பத்தையே அவருக்குத் தரவில்லை.
யுவஸ்ரீயும் தனக்கு ஆதரவாகக் கணவன் பேசுவான் என எதிர்பார்க்கவே இல்லை. அவள் விஷயத்தில் எதிலும் ஒட்டாமல் விலகியே தான் இருப்பான். அப்படிப்பட்டவன் தனக்காகப் பேசியதை இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.
அவள் அணைகட்ட முடியாமல் தடுக்க முயன்ற அவளின் கண்ணீர் கூட இப்போது அடங்கிப் போனது.
உதடுகளைப் பிளந்து கணவனை வியப்பாகப் பார்த்து கொண்டிருந்தாள்.
“கண்ணா, பெரியவங்க டா. இப்படிப் பேசாதே!” என்று சித்ரா மகனிடம் சொல்ல, அவனோ உக்கிரமாக அன்னையை முறைத்துப் பார்த்தான்.
“அவங்க என்ன பேசினாங்கன்னு கேட்டீங்க தானே? என் பொண்டாட்டியை அழ வைக்கவா ஊருக்கு வந்தே ஆகணும்னு அடம்பிடிச்சீங்க?” என்று கோபமாகக் கேட்டான்.
“என்ன கண்ணா இப்படியெல்லாம் பேசுற? நான் என் மருமகளை அழ வைக்க நினைப்பேனா?” கலக்கமாகக் கேட்டார்.
“அப்புறம் அவங்களுக்கு ஆதரவா பேசிட்டு இருக்கீங்க?” அவனின் கோபம் சிறிதும் குறையவில்லை.
“ஆதரவா பேசலை கண்ணா. என்ன இருந்தாலும் உங்க அப்பாவுக்குச் சொந்தம். அப்பாவுக்குத் தெரிந்தால் தேவையில்லாத பிரச்சினை. நானே மதினிகிட்ட எடுத்து சொல்லியிருப்பேன்…” என்றார்.
“அப்படி என்னத்தை எடுத்து சொல்லியிருப்பீங்க? அப்பாவுக்குத் தெரிந்தால் தான் என்ன? இப்ப மட்டும் என்ன புதுசா அவருக்குச் சொந்தபந்தம்?” என்று கடுமையாகக் கேட்டுக் கொண்டே கண்களைச் சுழல விட்டு தந்தை எங்கே என்பது போல் தேடினான்.
குமரகுரு கோவிலுக்குள் இல்லை. வெளியே யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
“நானே என்னோட அண்ணன்கிட்ட நியாயம் கேட்கிறேன்…” என்றார் அந்தப் பெண்மணி.
“என்னோட அப்பாகிட்ட நீங்களே கேளுங்க. எனக்கு என்ன பயமா?” என்னோட அப்பா என்றதில் அழுத்தம் கொடுத்து, அலட்சியமாகத் தலையைச் சிலுப்பினான்.
“ஏங்க, பிரச்சினை வேண்டாம். விடுங்க…” என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த யுவஸ்ரீ வாயைத் திறந்தாள்.
அவளுக்குத் தன்னால் பிரச்சினை நீளுவதில் விருப்பமில்லை. அதனால் கணவனை அடக்க முயன்றாள்.
“இப்ப மட்டும் வாயைத் திறடி. இவ்வளவு நேரம் வாயிக்கு திண்டுக்கல் பூட்டா போட்டிருந்த? அவங்க அவ்வளவு பேசுறாங்க திரும்பப் பேசாம கண்ணில் டேங்கை திறந்து விட்டுட்டு இருக்க? என்கிட்ட மட்டும் ஒன்றரை முழத்துக்கு வாய் பேச தெரியுதுல?” என்று கடுப்பாக மனைவியின் மேல் பாய்ந்தான் சூர்யா.
“அவங்க உங்களுக்கு அத்தை. பிரச்சினை வேண்டாமெனப் பார்த்தேன்…” என்றாள்.
“அத்தையா இருந்தால் என்ன? சொத்தையா இருந்தால் என்ன? சும்மா பேசி விடு!” என்றான் அலட்சியமாக.
‘ஆ!’ என்று வாயைப் பிளந்து தான் கணவனைப் பார்த்தாள் யுவஸ்ரீ.
கணவனின் உறவினருடன் பிரச்சினை வேண்டாம் என்று நினைத்து தான் அமைதியாக இருந்தாள்.
ஆனால் கணவனே சொந்தம் எனப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டாம் என்கிறான் என்ற வியப்பு தான் அவளுக்கு வந்தது.
“என்ன மதினி உங்க மகன் இப்படிப் பேசிட்டு இருக்காப்புல. அத்தைன்னு மட்டு மரியாதை இல்லை. இது எல்லாம் சரியில்லை…” அந்தப் பெண்மணி சண்டைக்குத் தயாராக நின்றார்.
“நீங்க பேசியதும் தப்பு தானே மதினி? என்னோட மருமகளுக்குக் குறை இருக்கும் என்பது போல் பேசுறீங்க. நீங்க இப்படிப் பேசியது உங்க அண்ணனுக்குத் தெரிந்தால் அவரே உங்களை நிக்க வச்சுக் கேள்வி கேட்பார். அவன் பொண்டாட்டியைப் பேசுவதை என் மகன் கேட்டுட்டு சும்மாவா இருப்பான்?
நீங்களும் அதிகம் பேசிட்டீங்க மதினி. என் மகன் அதுக்குப் பதில் பேசியிருக்கான். இரண்டுக்கும் சரியா போயிருச்சு. இந்தப் பேச்சை இத்தோட விடுங்க. இல்லனா உங்க அண்ணனை கூப்பிட்டே நியாயத்தைக் கேட்போம்…” என்றார் சித்ரா.
கப்பென்று வாயை மூடிக் கொண்டார் அந்தப் பெண்மணி.
குமரகுரு வந்தால் தன்னைத்தான் குறை சொல்வார் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
ஒன்றுவிட்ட அண்ணனாக இருந்தாலும், விட்டுப் போகும் சொந்தமல்ல. அவர்கள் சொந்தத்தில் குமரகுரு சற்று பெரிய ஆள் தான். அவர் தயவு தனக்கு வேண்டும் என்று வாயை அடக்கி கொண்டார் அந்தப் பெண்மணி.
ஆனாலும் சித்ராவையும், சூர்யாவையும் முறைக்க மறக்கவில்லை அவர்.
முறைத்துக் கொண்டே வேறு உறவின பெண்ணிடம் பேச சென்று விட்டார்.
“இப்படி அவங்க வாயை நான் அடக்கி இருப்பேன். அவசரப்பட்டுப் பிரச்சினையைப் பெருசு பண்ண இருந்த கண்ணா நீ…” என்று மகனை கடிந்து கொண்டார் சித்ரா.
“போங்கம்மா, உங்களைப் போல எனக்குப் பூசி மொழுகி பேச தெரியாது. எனக்குத் தோன்றுவதைத் தான் பேச முடியும்…” என்று தலையைச் சிலுப்பிக் கொண்டு போனான் சூர்யா.
“நீ எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாதமா. அவங்க கிராமத்து மனுஷி. பேச தெரியாமல் பேசிட்டாங்க…” என்று மருமகளுக்கு ஆறுதல் சொன்னார் சித்ரா.
“சரிங்க அத்தை. நீங்களும், அதை விட அவரும் இருக்கும் போது எனக்கு என்ன கவலை?” என்ற யுவஸ்ரீயின் கண்களோ தூரத்தில் நின்றிருந்த கணவனைக் காதலுடன் தழுவியது.
முதல் முறையாகக் கணவன் தனக்காக ஒன்றை செய்திருக்கிறான் என்ற எண்ணமே அவளின் மனதை தித்திக்க வைத்தது.
அவனிடம் அவள் எதிர்பார்ப்பதும் அதைத் தானே? திருமணத்திற்குப் பிறகு என்றுமில்லாமல் முதல்முறையாகக் கணவன் மீது காதல் பொங்கியது.
உடலில் இல்லாமல் உள்ளத்தில் உவகைக் கொண்ட நாளாக இன்று அவளை உற்சாகக் கடலில் தள்ளியது.
அனைவரும் பொங்கல் உண்டு முடித்ததும், மீண்டும் ஒரு முறை கடவுளை தொழுது விட்டு வேனில் ஏறி வீட்டிற்குக் கிளம்பினர்.
கிளம்பும் போதும் சூர்யா மனைவியின் அருகில் அமரவில்லை.
அதனால் மாமியார் அருகிலேயே இப்போதும் அமர்ந்து கொண்டாள் யுவஸ்ரீ.
ஆனாலும் அவளின் கண்கள் கணவனையே வட்டமிட்டு வந்து கொண்டிருந்தது.
“கண்ணாவுக்கு ஏன் சொந்தகாரங்களைப் பிடிக்க மாட்டிங்குதுன்னு அப்போ கேட்டியே…” என்ற மாமியாரின் மெல்லிய குரல் கேட்க,
“ஹான், சொல்லுங்க அத்தை…” என்று முகத்தைச் சித்ராவின் புறம் திருப்பினாள்.
“இன்னைக்கு நடந்ததே ஒரு உதாரணம் தான். கல்யாணம் முடிந்த ஆறு மாதத்திலேயே குழந்தையைப் பற்றிப் பேச வேண்டுமா என்ன? ஆனா பேசினாங்க தானே? இது போல் தான் கண்ணா சின்ன வயதில் இருந்து நிறையப் பேச்சை கேட்டுட்டான். அதனாலே அவனுக்குச் சொந்தகாரங்கன்னு சொன்னாலே பிடிக்கிறது இல்லை…” என்றார்.
“ஏன் அத்தை, அவரைப் பேச என்ன இருக்கு?” என்று புரியாமல் கேட்டாள்.
“இதுக்குக் காரணமும் உன் மாமாவோட ஹோட்டல் தொழில் தான்…” என்றார்.
“என்ன அத்தை சொல்றீங்க?”
“உன்னோட மாமா இப்பத்தான் இப்படிப் பொங்கல் வைக்கக் கூடச் சொந்தங்களைக் கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறார். முன்னாடி எல்லாம் அப்படி இல்லை.
ஹோட்டல் நடத்துவதால் கடையை மூடக் கூடாதுன்னு முன்னாடி எல்லாம் சொந்தக்கார வீட்டு விஷேசம் எதுக்கும் அவர் வர மாட்டார். எங்கே போகணும் என்றாலும் நானும், கண்ணாவும் தான் போவோம்.
எல்லா விஷேசத்துக்கும் குடும்பத் தலைவர் வரலைனா சொந்தக்காரங்க சும்மா விடுவாங்களா? இதுக்குக் கூட வர முடியாதான்னு ஏதேதோ பேசுவாங்க. என்கிட்ட பேசுவதோடு நிறுத்த மாட்டாங்க.
உங்க அப்பா அப்படிச் சம்பாதிச்சு என்னடா பண்ண போறார்? எங்க வீட்டு விஷேசத்துக்கு எல்லாம் வர மாட்டாரோன்னு ஏட்டிக்குப் போட்டியா கண்ணாகிட்ட கேள்வி கேட்பாங்க. ஒவ்வொரு முறையும் இப்படி நடக்க, அவனுக்கு எந்தச் சொந்தக்காரங்க வீட்டுக்கும் போகப் பிடிக்காமல் போயிருச்சு. நான் இனி அவங்க வீட்டுக்கு எல்லாம் வர மாட்டேன்னு புறக்கணிக்க ஆரம்பிச்சான்.
நானும் அவன் மனசை மாத்த எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன், முடியலை. சின்ன வயதில் ஆரம்பித்த அவனோட பிடிவாதத்தை இப்ப வரைக்கும் மாத்திக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.
சொந்தக்காரங்கனா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க. அதுக்காக மொத்தமாகச் சொந்தக்காரங்களையே ஒதுக்கி வைக்க முடியாதேன்னு சொன்னால் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான்.
கண்ணா இப்படி மாறிப் போக, அவனோட அப்பாவோ இப்பத்தான் சொந்தக்காரங்களும் வேணும்னு நினைக்க ஆரம்பிச்சுருக்கார். சொந்தக்காரங்க யார் வீட்டுக்குப் போனாலும் இப்ப என் கூட அவரும் வர்றார்…” என்று சொல்லி பெருமூச்சு விட்டார் சித்ரா.
“இப்ப மட்டும் கடையைப் பூட்டலாமா அத்தை?” என்று கேட்டாள்.
“இப்பவும் கடையை எல்லாம் பூட்டுவது இல்லை. நம்பிக்கையான ஆளுங்களை வேலைக்கு வச்சுருக்கார். அவர் கடைக்குப் போகலை என்றாலும் எல்லா வேலையும் சரியா நடக்க ஏற்பாடு செய்திருக்கார்…” என்றார்.
“முன்னாடியும் அதையே செய்திருக்கலாமே அத்தை?”
“முன்னாடி நம்ம கடை பேமஸ் இல்லை யுவா. சின்னக் கடையாகத்தான் இருந்தது. உன்னோட மாமா தான் ஒவ்வொரு நாளையும் வேஸ்ட் பண்ணாம உழைத்து இப்ப பெரிய கடையா மாத்தியிருக்கார். இப்ப மதுரையில் நம்ம கடை பற்றித் தெரியாத ஆள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு உயர்ந்து இருக்கார்னா அதுக்கு அவர் உழைப்புத்தான் காரணம்.
இப்ப பேசினாளே அவரோட ஒன்னுவிட்ட தங்கச்சி. அவள் எல்லாம் முன்னாடி அவரை மதிக்கக் கூட மாட்டாள். இப்ப அவர் கையில் காசு புழங்கவும் அவர் பேர் எடுத்தாலே கப்சிப்ன்னு ஆகிடுவாள்.
இதுதான் மனுஷங்க. காசு இல்லாம இருக்கும் போது எட்ட நிற்பதும், காசு இருக்கும் போது ஒட்டிக்கிறதும். இவங்க இப்படி நடந்துகிறதாலத்தான் கண்ணாவுக்குச் சொந்தக்காரங்கனாலே அழற்சி ஆகிடுச்சு…” என்றார்.
“ஓ!” என்று கேட்டுக் கொண்ட யுவஸ்ரீயின் முகம் யோசனையில் சுருங்கியது. அதனால் தான் என்னிடம் கூட ஒட்டாமல் தள்ளியே இருக்கிறாரோ? என்ற கேள்வி தோன்றியது.
‘மற்ற சொந்தங்களும் நீயும் ஒன்றா?’ என்ற கேள்வியை மனம் எழுப்ப, ‘அதானே! நான் அவன் மனைவி அல்லவா? அவர்களும் நானும் எப்படி ஒன்றாக முடியும்? அப்படிப் பார்த்தால் சற்று முன் கூடத் தனக்கு ஆதரவாகப் பேசினானே. அதெல்லாம் என்ன? தன்னை அவனுக்கு நெருக்கமாக நினைக்கிறான் என்று தானே அர்த்தம் ஆகிறது?’ என்று நினைக்கும் போதே முன்பை விட இப்போது மனம் தித்திப்பில் தத்தளித்தது.
தன் மீது கணவனுக்குச் சிறிதாவது அன்பே இல்லையோ என்ற அவளின் எண்ணம் இன்று தவிடுபொடி ஆகியிருந்தது.
அன்பெல்லாம் இருக்கிறது. ஆனால் அதைக் காட்டத்தான் மாட்டேங்கிறான் என்ற முடிவுக்கு வந்தாள் யுவஸ்ரீ.
அந்த முடிவு அவளை அன்று முழுவதும் உல்லாசமாக வைத்திருந்தது.
தன் உல்லாசத்தை அன்று இரவு படுத்துக் கொண்டே செல்லும் சொகுசு பேருந்தில் செல்லும் போது காட்ட ஆரம்பித்தாள் யுவஸ்ரீ.
கோவிலுக்குப் போய்விட்டு வந்ததும், சில சொந்தங்கள் வீட்டில் இருக்க, அவர்களுடன் அன்றைய பொழுது நகர்ந்தது. இரவு பத்து மணிக்கு பேருந்து என்பதால் வீட்டிலேயே உணவை முடித்துக் கொண்டு, குமரகுரு சித்ராவிடம் விடைபெற்று, இருவரும் பேருந்து நிலையம் வந்து, அவர்கள் சென்னை செல்லும் பேருந்தில் ஏறினர்.
“ட்ரைனில் ஏன் டிக்கெட் எடுக்கலை?” என்று மனைவியைக் கடிந்து கொண்டே பேருந்தில் ஏறினான் சூர்யா.
“சீட் கிடைக்கலை. நான் என்ன பண்ண? தட்கலில் எடுப்போம்னு நினைத்து அசால்டாவும் இருக்க முடியாது. போன முறை அப்படி நினைத்து, தட்கலில் எடுக்கும் போது நெட் கட் ஆகி மொத்தமும் சொதப்பிடுச்சு. அதான் ஸ்லீப்பர் பஸ்ஸில் எடுத்துட்டேன்…” என்றாள்.
“சரி விடு, நம்ம சீட் இது தானே?” என்று கேட்டுக் கொண்டே அவள் எடுத்த டிக்கெட்டில் சீட் நம்பரை பார்த்து அதில் அமர்ந்தான்.
இரண்டு படுக்கை இருக்கும் சீட் அது. ஜன்னல் பக்கமாக அமர்ந்த யுவஸ்ரீ கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டாள். சூர்யாவும் அவள் அருகில் சாய்ந்து அமர்ந்தவன் தன் கைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.
‘இவனுக்குப் பொண்டாட்டின்னு ஒருத்தி பக்கத்தில் இருப்பதே மறந்து போயிடும். எப்போ பார் போனை நோண்டிக்கிட்டு…’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவள், ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
பேருந்து கிளம்ப ஆரம்பித்ததும், ஜன்னல் ஸ்கிரீனை இழுத்து விட்டு மூடினாள்.
சூர்யாவின் பக்கம் ஏற்கெனவே அவன் மூடியிருந்தான் என்பதால் அந்தப் பக்கம் இருந்து அவர்களைப் பார்க்க முடியாது.
“படுப்போமாங்க? உட்கார்ந்து வருவது ரொம்பக் குலுங்குது…” என்றாள்.
“நீ படு! நான் என் ஃபிரண்ட்ஸ் கூடச் சேட் பண்ணிட்டு இருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாதே!” என்றான்.
அவனை முறைத்துப் பார்த்தவள், ‘உன்னை இன்னைக்கு என்ன பண்றேன் பார். இப்ப உன்னை என் பக்கம் திரும்ப வைக்கிறேன்!’ என்று நினைத்துக் கொண்டவள் படுத்துக் கொண்டாள்.
“ஏய்! என்னடி?” என்று வியப்பாகக் கேட்டான்.
பின்னே அவன் மடியில் அல்லவா தலை வைத்து படுத்திருந்தாள். அதோடு இல்லாமல் அவன் வயிற்றில் முகத்தை வைத்து அழுத்தி அவன் இடுப்பை சுற்றி கையையும் போட்டு அணைத்து கொண்டாள்.
எப்போதும் அவளாக அப்படிப் படுத்ததே இல்லை. அவன் தான் தன் தேவைக்கு அவளிடம் நெருக்கத்தைக் காட்டுவான்.
அவன் அதற்கு மட்டும் தன்னிடம் வருகிறானோ? என்ற நினைப்பில் அவளால் கணவனிடம் இயல்பாக ஒன்ற முடியாது. ஆனால் இன்றோ கோவிலில் நடந்தது அவனிடம் இணக்கமாக இருக்கச் சொல்லி அவளைத் தூண்டி விட்டது.
“என்னடி, என்னைக்கும் இல்லாத அதிசயமா இருக்கு?” என்று கேட்டான்.
“ஒரு அதிசயமும் இல்லை. நான் ஒன்னும் உங்களை டிஸ்டெப் பண்ணலை. நீங்க உங்க ஃபிரண்ட்ஸ் கூடச் சேட் பண்ணுங்க…” அவனின் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டே முனங்கினாள்.
அவள் அப்படிப் பேசியது அவனுக்கு வயிற்றில் குறுகுறுப்பூட்டியது.
“கூசுதுடி…” என்றவன் மேனி சிலிர்த்துப் போனது.
கணவனின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பது அவளுக்கும் இதமாக இருக்க, அவளின் மேனியும் புதுவித உணர்வில் சிலிர்த்துக் கொண்டு தான் இருந்தது.