10 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 10

“என்னங்க… என்னங்க…” என்று அயர்ந்து உறங்கும் கணவனின் தோளை உலுக்கி எழுப்பினாள் யுவஸ்ரீ.

“ம்ப்ச்… என்னடி?” என்று முனங்கினாலும் கண்களைத் திறந்து பார்க்கவில்லை சூர்யா.

“எழுந்திருங்க…” என்று மீண்டும் உலுக்கினாள்.

“ச்சே, மனுஷனை தூங்க விடாம என்ன இது?” சலித்துக் கொண்டவன் திரும்பிப் படுத்தான்.

ஆனால் அடுத்த நொடியே பட்டென்று திரும்பியவன், கட்டில் அருகில் குனிந்து நின்றிருந்தவளை சுண்டி இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

“ஏன்டி நேத்து இருந்து பக்கத்தில் வராம ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்க. இப்ப மாட்டினியா?” என்று அவளைச் சுற்றி கைகளைப் போட்டு இறுக்கிக் கொண்டான்.

“அச்சோ! விடுங்க…” என்று அவன் பிடியிலிருந்து வெளியே வர முயற்சி செய்தாள்.

அவனா அவ்வளவு இலகுவாக விட்டுவிடுவான்?

இங்கே வந்ததில் இருந்து அறைக்குள் கூட வராமல் அவனை அலைக்கழிக்க வைத்து விட்டாள்.

இரவும் அவள் வருவாள் என்று காத்திருக்க, அவ்வளவு சுலபமாக அறைக்குள் வரவில்லை.

காத்திருந்தவன் தன்னையறியாமல் உறங்கிய பின்னே மேலே வந்தாள்.

இப்போது அவளே வந்து மாட்டிக் கொள்ளவும் விடுவானா என்ன?

“ஒரு வாரமா வேலை வேலைன்னு ஓடி ஒன்னுமே செய்ய முடியலை. இங்கே வந்த பிறகு பார்த்துப்போம்னு பார்த்தால் பக்கத்திலேயே வர மாட்டிங்கிற. என்னடி ஆச்சு உனக்கு?” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தான்.

“வேண்டாம்ங்க… என்னை விடுங்க…” என்று அவனுக்கு ஈடு கொடுக்காமல் விலக முயன்றாள்.

“விட முடியாதுடி. எவ்வளவு வாசமா இருக்க. இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பார்!” என்றவன் கைகள் எங்கங்கோ அலைந்தன.

அவளை உணர்ந்தவன் கைகள் அந்த வித்தியாசத்தை உணர வைக்க, “வாரே வாவ்! ஏய், என்னடி இந்த நேரம் சேலை கட்டிருக்க?” என்று உற்சாகமும், யோசனையுமாகக் கேட்டான்.

“நான் குளிச்சுட்டேன். இப்ப எதுவும் வேண்டாம்…” என்று அவனின் கையை நகர விடாமல் பிடித்தாள்.

“குளிச்சுட்டியா? அதுக்குள்ளயா? மணி என்ன?” முகத்தை நிமிர்த்தி அவள் முகம் பார்த்தான்.

“நாலரை ஆகுது…” என்றாள்.

“நாலரையா? உனக்கு என்ன கிறுக்குப் பிடிச்சுப் போச்சா? நாலரைக்குப் பேய் கூடக் குளிக்காதுடி…”

“பேய் குளிக்காது. நான் குளிப்பேன். நான் மட்டுமில்ல இப்ப நீங்களும் குளிக்கப் போறீங்க. எழுந்திருங்க…”

“அடியேய்! அப்படியே கடிச்சு வச்சுருவேன். நாலரை மணிக்கு எவனாவது குளிப்பானா?” கடுப்புடன் கேட்டவன், அவள் கன்னத்தை லேசாகக் கடித்தும் வைத்தான்.

“அவுச்! என்ன பண்றீங்க?” என்றவள் பட்டென்று அவனை உதறி விட்டு, படுக்கையில் புரண்டு எழுந்து அமர்ந்தாள்.

“எரிச்சல் படுத்தாமல் வாடி என் பொண்டாட்டி…” என்று எட்டி அவளைத் தன்னிடம் இழுத்துக் கொள்ள முயன்றான்.

“நீங்க முதலில் எழுந்து குளிச்சுட்டு வாங்க…” கணவனின் கைகளுக்கு அகப்படாமல் அகன்று நின்று கொண்டாள்.

“இந்த நேரத்தில் எதுக்குக் குளிக்கச் சொல்ற?” மனைவியைச் சந்தேகத்துடன் பார்த்துக் கேட்டான்.

அவளோ பதில் சொல்லாமல் அமைதியாக அவனைப் பார்த்தாள்.

இப்போதே கோவிலுக்குப் போகும் விஷயத்தைச் சொன்னால் எங்கே குளிக்கச் செல்ல மாட்டானோ என்று நினைத்துச் சொல்ல தயங்கினாள்.

“என்ன முழிக்கிற? என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“அத்தை தான் குளிக்கச் சொல்ல சொன்னாங்க. என்னவா இருந்தாலும் நீங்க அவங்ககிட்டயே கேட்டுக்கோங்க…” என்றாள்.

“அம்மாவா? அம்மா எதுக்கு இந்த நேரம் குளிக்கச் சொன்னாங்க?” யோசனையுடன் கேட்டான்.

“எனக்குத் தெரியாது…” லேசாகத் தோளை குலுக்கினாள்.

“தெரியாமல் தான் இப்படி நடுசாமத்தில் குளிச்சு ரெடியாகி இருக்கியா?”

“அத்தை சொன்னதைச் செய்யணும்ல? அதான்… இப்ப நீங்க குளிக்கப் போறீங்களா, இல்லையா?” என்று கேட்டவளை முறைத்தவன், திரும்பிக் குப்புற படுத்துக் கொண்டான்.

“சூர்யா, பிளீஸ் எழுந்திருங்க…” என்றாள் கெஞ்சலாக.

“முதலில் என்ன விஷயம்னு சொல்லு…” என்றான் கவிழ்ந்து படுத்துக் கொண்டே பிடிவாதமாக.

அவளுக்குச் சலிப்பாக இருந்தது. உண்மையைச் சொன்னதும் அவன் அப்படியே எழுந்து கிளம்ப மாட்டான் என்றும் நன்றாகவே தெரியும்.

குளிக்க வைத்து விட்டால் பின் எப்படியாவது அவனை அழைத்துச் சென்று விடலாம் என்று நினைத்தாள். ஆனால் எங்கே அவன் குளிக்கவே இத்தனை கேள்வி கேட்டால் அவளும் தான் என்ன செய்வாள்?

இனி இவனைத் தன்னால் சமாளிக்க முடியாது என்று அறிந்து கொண்டவள் உடனே சென்று மாமியாரை அழைத்து வந்தாள்.

“கண்ணா, எழுந்து கிளம்பு. கோவிலுக்குப் போகணும்…” என்று மகனை அதட்டி அழைத்தார் சித்ரா.

“கோவிலுக்கா?” பட்டென்று திரும்பிப் படுத்துக் கேட்டான்.

“ஆமாம். ஐந்து மணிக்கு கிளம்பணும்…” என்றார்.

“எந்தக் கோவிலுக்கு?” அடுத்தக் கேள்வி மகனிடமிருந்து பறந்து வந்தது.

“நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய்ப் பொங்கல் வைக்கப் போறோம்…” என்றார்.

“என்ன விளையாடுறீங்களா? இதுக்குத் தான் ஊருக்கு வர சொல்லி நச்சு பண்ணினீங்களா? என்னால் வர முடியாது. இந்தச் சாமியாரிணியை வேணும்னா கூட்டிட்டுப் போங்க…” என்று மனைவியைச் சுட்டிக் காட்டி கோபமாகச் சொன்னான்.

அவளோ கணவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்னடி முறைப்பு? நீயும் உன் மாமியார் கூடக் கூட்டா? உனக்கு நாம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும் தானே? சொல்லாம மறைச்சுட்ட?” என்று கோபமாகக் கேட்டான்.

“அவளை ஏன்டா திட்டுற? நான் தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்…” மருமகளுக்காக ஆதரவு குரல் கொடுத்தார் மாமியார்.

“எல்லாம் உங்க பிளான் தானா?” என்றவன் கண்களை உருட்டி அன்னையைப் பார்த்தான்.

“ஆமா, என் பிளான் தான். முன்னாடியே சொன்னால் ஊருக்கு வர மாட்டேன்னு அடம் பிடிப்ப. அதான் யுவாவை சொல்ல வேண்டாம்னு சொன்னேன். கோவிலுக்குக் குடும்பத்தோட போறது தான் நல்லது. எழுந்து கிளம்பு…” என்றார்.

“என்னால் வர முடியாதும்மா. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க. நீங்க கூப்பிட்டுட்டே இருக்கீங்களேன்னு தான் ஊருக்கு வந்தேன். ஆனா நீங்க…” என்று கடுப்பாகச் சொன்னவன் மீண்டும் கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.

“விளையாடாதே கண்ணா! இப்ப கிளம்பினால் தான் சரியாக இருக்கும்…” என்றார்.

“முடியாதுனா முடியாது…” என்றான் பிடிவாதமாக.

சித்ரா அதட்டிப் பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார். எதற்கும் அவன் மசியவில்லை.

அவனின் பிடிவாதத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் மூச்சுமுட்டிப் போனது.

அரைமணி நேரமாக இருவரும் போராடிப் பார்த்தும் சூர்யா அசையவில்லை என்றதும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர்.

அப்போது அறைக்கு வெளியே, “சித்ரா, கோவிலுக்குப் போகணும்னு சொல்லிட்டு, கிளம்பாம இன்னும் என்ன செய்றீங்க?” என்று அதட்டலாகக் கேட்டார் குமரகுரு.

தந்தையின் குரல் கேட்டதும் சூர்யாவின் உடல் விறைத்தது.

அதனைக் கண்ட யுவஸ்ரீயின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

இனி கணவன் எழுந்து கிளம்பி விடுவான் என்று உறுதியாகத் தெரிந்து விட, அவனுக்குக் கிளம்ப உடையை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

“கண்ணா தான்…” என்று சித்ரா ஆரம்பிக்க, வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான் சூரியக்கண்ணன்.

அவனின் ஓட்டத்தைப் பார்த்து மாமியார், மருமகள் இருவருமே சிரித்துக் கொண்டனர்.

“இதை நாம முதலிலேயே மாமா காதுக்குக் கொண்டு போயிருக்கலாம் அத்தை…” அலுப்புடன் கூறினாள் யுவஸ்ரீ.

“காலையிலேயே அவன் அவர்கிட்ட பாட்டு வாங்க வேண்டாம்னு பார்த்தேன். ஆனா எங்கே, உன் புருஷன் அதுக்கு விட்டால் தானே?” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

“நானும் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன். இவர் ஏன் அத்தை மாமாவுக்கு மட்டும் பயப்படுறார்?” என்று கேட்டாள்.

“சொல்றேன் மா. ஆனா இப்ப அதுக்கு நேரமில்லை. வண்டியில் போகும் போது சொல்றேன்…” என்றார்.

“சரி அத்தை, கிளம்பும் வேலையைப் பார்ப்போம்…” என்று அந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

விருப்பமே இல்லாமல் கிளம்பி வாசலுக்கு வந்த சூர்யா அங்கே நின்ற வண்டியைப் பார்த்து வேகமாக அன்னையைத் தேடினான்.

அவர் பொங்கல் பானையுடன் வெளியே வர அவரைப் பார்வையாலேயே சுட்டெரிப்பது போல் பார்க்க ஆரம்பித்தான்.

அவரோ மகனின் பார்வையைக் கண்டும் காணாமல், வாசலில் நின்றிருந்த வேனில் ஏற ஆரம்பித்தார்.

“இந்த அம்மாவை…” பற்களைக் கடிக்க மட்டுமே அவனால் முடிந்தது.

“என்னங்க, வேனில் ஏறுங்க, நேரமாச்சு…” என்ற மனைவியின் பக்கம் தன் சுட்டெரிக்கும் பார்வையைத் திருப்பினான்.

“இதோ மாமா…” என்னவோ மாமனார் அழைப்பது போல் அவன் பார்வையைக் கண்டு வேகமாக முன்னால் சென்று விட்டாள்.

கூடவே, அந்த வேனில் சில நெருங்கிய உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் ஏற, சூர்யாவின் பற்கள் அவனின் வாயிற்குள் நரநரத்தன.

“கண்ணா, வேனில் ஏறு…” என்று அவனின் தந்தை ஒரு அதட்டல் போட, வேனில் ஏறியவன் இருந்த கோபத்தில் மனைவியின் அருகில் அமராமல் முன்னால் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அனைவரும் ஏறியதும் வேன் கிளம்பியது.

தன் மாமியாரின் அருகில் அமர்ந்து கொண்ட யுவஸ்ரீ தன் கணவன் மாமனாருக்குப் பயப்படும் காரணத்தைக் கேட்டாள்.

“உனக்கே தெரியுமே உன் மாமனார் ஹோட்டல் வச்சு நடத்துறார்னு?” சித்ரா கேட்க,

“ஆமா அத்தை, அதுக்கும் இவர் பயப்படுவதற்கும் என்ன சம்பந்தம்?” புரியாமல் கேட்டாள்.

“கண்ணாவுக்குப் படிச்ச படிப்புக்கு வேலை பார்க்கணும்னு ஆசை. ஆனா உங்க மாமா தன்னோட இருந்து ஹோட்டலை பார்த்துக்கச் சொன்னார். ஆனா அவனுக்கு அது பிடிக்கலை. படிச்சு அதுக்குத் தகுந்த வேலை பார்க்காம, ஹோட்டல் கல்லாவில் உட்கார்ந்து காசு வாங்கிப் போடும் வேலை மட்டும் பார்க்கணுமான்னு கோபம்.

அவன் படிச்சு முடிச்சப்ப இது சம்பந்தமா இரண்டு பேருக்கும் பயங்கர வாக்குவாதம். கண்ணா என் சப்போர்ட் எதிர்பார்க்க, எனக்கு யார் பக்கம் பேசுவதுன்னே தெரியலை. அப்படி இப்படிப் பேசி ஒரு வழியா அப்பாவும் மகனும் ஒரு முடிவுக்கு வந்தாங்க…” என்று சித்ரா சொல்ல,

“என்ன முடிவு அத்தை?” ஆவலாகக் கேட்டாள் யுவஸ்ரீ.

“சரி, உனக்குப் பிடிச்ச வேலையை நீ போய்ப் பார். ஆனா நான் எப்போ கூப்பிடுறேனோ அப்ப ஹோட்டல் பார்க்க கிளம்பி வந்திடணும்னு சொல்லிட்டார்…” என்றார்.

“ஓ!” என்ற யுவஸ்ரீக்கு இதில் என்ன அவன் பயப்படும் காரணம் இருக்கிறது என்று இன்னும் புரியவில்லை. அதை மாமியாரிடமே கேட்கவும் செய்தாள்.

“உன் புருஷனுக்குக் கம்ப்யூட்டர் வேலையை விட்டுட்டு வர முடியலை. ஆனா உன் மாமா அவன் எதுவும் சொல் பேச்சுக் கேட்காமல் நடந்து கொண்டால் உடனே ஹோட்டலுக்கு வந்திடணும்னு உறுதியா சொல்லிட்டார்.

அவர் ஆரம்பத்தில் சொன்ன சில விஷயங்களைக் கேட்காமல் அசால்டா தட்டிக் கழிச்சான். ஆனா உன் மாமா சும்மா இருக்கலை. அவன் இரண்டு தடவை தட்டிக் கழிக்கவும், இன்னொரு முறை இப்படிச் சொல் பேச்சு கேட்கலைனா அடுத்த நிமிஷம் வேலையை விட்டு ஹோட்டலை பார்க்க வந்திடணும்னு கண்டிப்பா சொல்லிட்டார்.

அவர் சொன்னதைச் சொன்ன மாதிரி செய்திடுவார். அதனால் எங்கே அப்பா பேச்சை தட்டி கழிச்சால் ஹோட்டலுக்குக் கூப்பிட்டுருவாரோன்னு பயந்து அவர் சொன்னதை எல்லாம் கேட்டுட்டு இருக்கான்…” என்றார்.

“ஓ, இதான் விஷயமா?” என்று கேட்டுக் கொண்ட யுவஸ்ரீ முன்னால் அமர்ந்திருந்த கணவனை யோசனையுடன் பார்த்தாள்.

அவனுக்கு அந்தளவிற்கா அவனின் வேலை பிடித்திருக்கிறது? என்ற யோசனை தான் அவளுக்கு.

யோசிப்பின் முடிவில் அது உண்மை என்றே அவளுக்கும் புரிந்தது.

ஜாலியாக, அசால்டாக வலம் வந்தாலும் வேலை விஷயத்தில் அயராது உழைப்பவன் தான்.

செய்யும் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு அவனிடம் எப்போதும் இருக்கும்.

கடந்த வாரம் கூடக் கண் கூடாகப் பார்த்தாளே? உணவு, உறக்கம் துறந்து வேலை பார்த்தானே… என்று நினைத்துப் பார்த்தாள்.

அப்போது சூர்யா அவள் புறம் திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையில் ஒரு பிடித்தமின்மை.

ஏன் என்று யோசித்தாள்.

அவனுக்கு இப்படி எல்லோருடனும் வெளியே செல்வதே பிடிக்காது. அதிலும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வதையும், அவர்களுடன் செல்வதையும் அறவே விரும்ப மாட்டான் என்று நினைவில் வந்தது.

அதன் காரணமும் அவளுக்கு ஏன் என்று தெரியவில்லை.

இன்றே அதையும் தன் அத்தையிடம் கேட்டு விடுவோம் என்று நினைத்து அவரிடம் கேட்டாள்.

“அதுக்கும் காரணம் இருக்கு…” என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோவில் வந்திருக்க, அனைவரும் வேனை விட்டு இறங்கினர்.

“அப்புறம் பேசுவோம்மா…” என்ற சித்ராவும் இறங்கி சென்றுவிட்டார்.

மதுரையைத் தாண்டி ஒரு சாலையிலிருந்து சற்று உள்ளடங்கி இருந்தது அந்தக் கோவில்.

கோவில் முன் ஒரு மரம் இருக்க, வேனை விட்டு இறங்கி அங்கே நின்றனர்.

பின் அனைவரும் சேர்ந்தே கோவிலுக்குள் சென்றனர்.

ஆனால் சூர்யா மட்டும் செல்லாமல் அந்த மரத்தடியிலயே நின்றான்.

“என்னங்க, வாங்க உள்ளே போவோம்…” என்று கணவனை அழைத்தாள் யுவஸ்ரீ.

“ம்ப்ச், எனக்கு எதுவுமே பிடிக்கலைன்னு சொன்னா நீ என்னைப் புரிஞ்சிக்கவா போற? நீ போ…” என்றான் கடுப்பாக.

“இதில் என்னங்க இருக்கு? நம்ம குடும்ப வேண்டுதலுக்காகத் தானே வந்திருக்கோம். நீங்க இப்படி நின்னா எப்படி?” என்று கேட்டாள்.

“நம்ம குடும்பத்துக்காகனா நாம மட்டும் வர வேண்டியது தானே? இப்ப எதுக்கு வேனை பிடிச்சு இத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக்காங்க?” கோபமாகக் கேட்டான்.

“எல்லாம் மாமா முடிவுங்க…” என்றாள்.

“ச்சே, இந்த அப்பாவை… இப்ப மட்டும் என்ன அவருக்குப் புதுசா சொந்தங்கள் வேண்டி கிடக்கு?” என்று பல்லை கடித்தான்.

ஏன் இந்தக் கோபம்? என்று கணவனைப் புரியாமல் பார்த்தாள்.

“கண்ணா, யுவா உள்ளே வாங்க…” என்று சித்ரா குரல் கொடுக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

அடுப்பை கூட்டி, சித்ரா பொங்கல் வைக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அவருக்கு உதவியாகச் சென்று நின்று கொண்டாள் யுவஸ்ரீ.

“என்ன சித்ரா, மாப்பிள்ளைக்கு மொட்டையும் போட போறீயா என்ன? நிறைய முடி வச்சுருக்காரே…” என்று ஒரு உறவுக்கார பெண்மணி கேட்க, யுவஸ்ரீக்கு பக்கென்று சிரிப்பு வர பார்க்க, அடக்கிக் கொண்டு நின்றாள்.

அவளுக்குத்தான் தெரியுமே அவன் எதற்கு முடி வளர்க்கிறான் என்று.

அவளும் அவன் முடி வளர்க்க ஆரம்பித்ததுமே வெட்ட சொல்லி பார்த்தாள். ஆனால் இது புது ஸ்டைல், பட்டிக்காடு உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று அவளைத்தான் மட்டம் தட்டினான்.

ஸ்டைலுக்காக மட்டுமே முடி வளர்ப்பவனைப் போய் மொட்டை போட்ட போகிறானா என்று கேட்டால் அவளும் சிரிக்காமல் என்ன செய்வாள்?

மொட்டையைப் பற்றி அவனிடம் பேசியிருக்க வேண்டும். அப்போது தெரியும் அவனின் ருத்ரதாண்டவம் எப்படி இருக்கும் என்று… என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

“அவன் சும்மா தான் அண்ணி முடி வளர்க்கிறான்…” என்று அந்தப் பெண்மணியைச் சமாளித்து அனுப்பி வைத்தார் சித்ரா.

“ஏன் அத்தை பேசாம அவருக்கு மொட்டை போட்டு விட்டால் என்ன?” என்று கிண்டலாக மாமியாரிடம் கேட்டாள் யுவஸ்ரீ.

“எதுக்கு? உன் புருஷன் எனக்கும், உனக்கும் மொட்டை அடிச்சு விடவா? அவன் தலையில் கைவச்சா நம்ம தலையில் மொட்டை அடிச்சு விட்டு போயிருவான்…” என்றார்.

“ஆனாலும் அவருக்கு முடி நல்லாவே இல்லை அத்தை. எங்க கல்யாணம் அப்போ எப்படி முடி வெட்டி நீட்டா இருந்தார். ஆனால் இப்ப பாருங்க, எப்படி இருக்கார்னு. இன்னும் கொஞ்ச நாள் போனால் சடையே பின்னிடலாம்…” என்றாள்.

“அய்யோ! அதை ஏன் கேட்குற. உங்க கல்யாணம் அப்போ தாடி பெருசா வளர்த்திருந்தான். சேவ் பண்ணிட்டு வர சொன்னதுக்குக் கேட்கவே இல்லை. அப்படியே தான் மேடைக்கு வருவேன்னு அடம் பிடிச்சான். தாடியோட நீ மேடை ஏறக் கூடாதுன்னு உன் மாமா கண்டிஷன் போட்டுட்டார். அப்புறம் தான் வளர்த்திருந்த தாடியை எடுத்துட்டு மேடை ஏறினான்…” என்றார் சித்ரா.

“ஓ, ஏன் அத்தை அப்படி முடி மீது ஆர்வம்?”

“என்ன ஆர்வமோ? ஏதோ புதுசு புதுசா ஸ்டைலுன்னு சொல்லிட்டு இப்படி முடி வெட்டாமல் திரியுறான்…” என்று சலித்துக் கொண்டார்.

மாமியாரும், மருமகளும் பேசிக் கொண்டே பொங்கலை வைத்து முடித்தனர்.

சாமிக்கு படைத்து விட்டு, வந்திருந்த உறவினர்களுக்குப் பொங்கல் கொடுக்க ஆரம்பித்தனர்.

உறவு பெண்கள் சிலருக்குப் பொங்கலை பரிமாறிக் கொண்டிருந்தாள் யுவஸ்ரீ.

அப்போது ஒரு உறவு பெண்மணிக்கு பொங்கலை பரிமாற, “ஏன்மா, எதுவும் விஷேசமா இருக்கியா?” என்று குரலை தாழ்த்தி கேட்டார்.

அவரின் கேள்வியில் முதலில் அதிர்ந்தவள், பின் சமாளித்துக் கொண்டே, “இல்லைங்க…” என்றாள்.

“ஏன் சித்ரா, உன் மருமக இன்னும் உண்டாகலையாமே… ஒரு டாக்டரை பார்க்க வேண்டியது தானே?” என்றார் சித்ரா.

அதில் இன்னும் அதிர்ந்து போனாள் யுவஸ்ரீ.

திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் தானே ஆகிறது. அப்படி இருக்க, இது என்ன பேச்சு? என்பது போல் அந்தப் பெண்மணியைப் பார்த்தாள்.

சித்ராவும் அதே தான் சொன்னார்.

“கல்யாணம் முடிந்து ஆறு மாதம் தானே ஆகுது மதினி. இப்ப என்ன அவசரம்?” என்றார்.

“என் பொண்ணு எல்லாம் கல்யாணம் முடிந்த அடுத்த மாதமே உண்டாகிட்டாள். ஆனா உன் மருமகளுக்கு ஆறு மாசம் ஆகியும் இன்னும் பிள்ளை தங்கலைனா என்ன ஏதுன்னு பார்க்க வேண்டாமா? இப்பவே பார்க்கிறது நல்லது சித்ரா. இப்ப எல்லாம் நீர் கட்டி, சரியா மாசாமாசம் தலைக்குக் குளிக்காததுன்னு நிறையக் குறை வருது. உன் மருமகளுக்கும் ஏதாவது குறை இருக்கப் போகுது…” என்று அந்தப் பெண்மணி சொல்ல,

‘குறை’ என்ற வார்த்தையில் அதிர்ந்து கண்கள் கலங்க நின்று விட்டாள் யுவஸ்ரீ.