10 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 10
“நீங்க இப்படிச் சொல்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை அப்பா…” என்றாள் சக்தி.
“சொல்ல வேண்டிய அவசியம் வந்தால் சொல்லித்தானே ஆகணும் சக்திமா…” என்றார் தாமோதரன்.
“ஏன் பா? ஏன் அப்படிச் சொன்னீங்க? எனக்கு ஈஸ்வரை தவிர வேற யாரையும் பிடிக்காதுன்னு இந்த நேரம் உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும். அப்படி இருந்தும் உங்களால் எப்படிப்பா அப்படிச் சொல்ல முடிந்தது?” என்று கேட்டவளின் குரலில் வருத்தம் வழிந்தோடியது.
“பிடித்தம் இந்த வயதில் எல்லாருக்கும் வருவது தான் சக்தி. ஆனா வாழ்க்கை நம்ம காலம் முழுவதும் தொடர்ந்து வரப்போவது. நீ ஈஸியா அந்தப் பட்டிக்காட்டில் போய் வாழ்ந்து விடுவேன்னு சொல்லலாம். ஆனால் நடைமுறைன்னு ஒன்னு இருக்கே? அது சாத்தியமே இல்லை. உன்னால் அந்த ஊரில் இருக்கவே முடியாது…” என்று உறுதியாகப் பேசினார் தாமோதரன்.
“ஈஸ்வர் இருக்கும் எந்த ஊராக இருந்தாலும் என்னால் அங்கே வாழ முடியும் பா…” சக்தியின் குரல் அதை விட உறுதியாக வந்தது.
தந்தையும், மகளும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க, இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு இருவரையும் வெறித்த பார்வை பார்த்த படி நின்றிருந்தான் சர்வேஸ்வரன்.
தந்தையின் பிடிவாதத்தில் சலித்துப் போன சக்தி தேவியிடம் ஓடினாள்.
“அத்தை நீங்களாவது அப்பாவுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா? நானே கிராமத்தில் இருக்கச் சரின்னு சொல்லும் போதும் அப்பா ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறார்?” என்று கேட்டாள்.
தேவியோ அவளுக்கு என்ன சொல்வது என்று அறியாமல் கைகளைப் பிசைந்தார். அவரின் பார்வை தாமோதரனை தழுவ, அவரோ தேவியைக் கூர்மையாகப் பார்த்தார்.
அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவர் போல் சக்தியின் புறம் திரும்பியவர், “அப்பா சொல்றதை கேளுடா தங்கம். அப்பா உனக்கு நல்லது தான் செய்வார்…” என்றார்.
அவரை நிராசையுடன் பார்த்த சக்தி அடுத்ததாக மோகனின் பக்கம் திரும்பினாள்.
“தாமு என்ன முடிவு எடுத்தாலும் அது சரியா இருக்கும் சக்திமா…” என்று முடித்துக் கொண்டார் மோகன்.
இருவரும் கை விரித்து விட, இனி தன் வாழ்க்கைக்குத் தான் தான் பேச வேண்டும் என்ற முடிவுடன் தந்தையின் அருகில் சென்றாள்.
“இப்ப முடிவா என்னதான் சொல்றீங்கபா?” என்று கேட்டாள்.
“என் முடிவை நான் ஏற்கனவே சொல்லிட்டேன் சக்திமா…” என்றார்.
“அப்போ என் முடிவை நான் சொல்றேன் கேட்டுக்கோங்கப்பா. இப்ப ஒருத்தரை லவ் பண்ணிட்டு, உங்களுக்குப் பிடிக்கலை என்று வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் என்னால் முடியாதுப்பா.
என் மனசு ஒன்னு தான். என்னுடையவனும் ஒருத்தன் தான். அது என் சர்வேஸ்வரன் தான். எந்த ஊரில் வாழப் போறேனோன்னு நினைச்சோ, பெத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைச்சோ என் மனசு ஈஸ்வர் பக்கம் போகலைப்பா. அதனால் என் மனசை மாத்திடலாம்னு நீங்க நினைச்சா அது நடக்காது…” என்று சக்தி சொல்ல, சர்வேஸ்வரனின் உதடுகள் புன்னகையுடன் விரிந்தன.
“எனக்கு என்ன தேவையோ அது கிடைச்சிருச்சு சக்தியாரே. நான் கிளம்புறேன்…” என்றவன் அதற்கு மேல் அங்கே நின்று கொண்டிருக்காமல் கிளம்பியும் விட்டான்.
அதன் பிறகு வீடே அமைதியாகி போனது. அன்று மட்டுமில்லாமல் தாமோதரனும், சக்தியும் சகஜமாகக் கூடப் பேசிக் கொள்ளாமல் வீட்டிற்குள் வலம் வந்தனர்.
சில நாட்கள் அமைதியாகச் செல்ல, மீண்டும் மகளிடம் ஒரு நாள் பேசிப் பார்த்தார் தாமோதரன். அவளுக்காகத் தான் சொல்வதாக அவர் சொன்னதை அவள் காது கேட்க தயாராக இல்லை.
தாமோதரனும் தன் நிலையிலிருந்து இறங்கி வராமல் இருக்க, சக்தியும் தன் காதலில் உறுதியாக இருக்க, சர்வேஸ்வரனோ முடிவான ஒரு முடிவை எடுத்து விட்டிருந்தான்.
“சக்தி…” அலைபேசியின் வழியாக ஒலித்த சர்வேஸ்வரனின் குரலில் படுத்துக் கொண்டே அழைப்பை ஏற்ற சக்தி படுக்கையில் எழுந்து அமர்ந்தாள்.
“சொல்லுங்க ஈஸ்வர்…” என்றாள்.
“நாம நாளைக்குக் காலையில் ஒரு இடத்துக்குப் போறோம். வரும் போது சேலை கட்டிட்டு வந்திரு…” என்றான்.
“எங்கே ஈஸ்வர்?” என்ற கேட்டதும் அந்தப் பக்கம் சில நொடிகள் மௌனத்தில் ஆழ்ந்தான்.
பின் லேசாக அவன் தொண்டையைச் செருமி கொள்ளும் சப்தம் கேட்டது.
“நாளைக்கு நமக்கு ரிஜிஸ்டர் மேரேஜுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன் சக்தி…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“வாட்!” என்று அதிர்ந்து படுக்கையை விட்டு துள்ளி எழுந்தாள் சக்தி.
“உன் அப்பா நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்வார்னு எனக்குத் தோணலை சக்தி. அதே மாதிரி எங்க வீட்டிலும் என்ன மாதிரி பதில் வரப்போகுதா தெரியலை. இரண்டு வீட்டில் ஏதாவது ஒரு வீட்டில் சப்போர்ட் இருந்தாலும் பரவாயில்லை. ஆனா நம்ம இரண்டு வீட்டு பக்கமும் சம்மதம் கிடைக்காது போல இருக்கு. அப்படி இருக்கும் போது நாம ஏன் இன்னும் காத்திருக்கணும்?” என்று கேட்டான்.
“ஏன் இவ்வளவு அவசரமான முடிவு ஈஸ்வர்? நீங்க இன்னும் உங்க வீட்டில் பேசவே இல்லையே. பேசிட்டு அப்புறம் முடிவு பண்ணலாமே?” என்று கேட்டாள்.
“பேசினால் மட்டும் என்ன நடக்கப் போகுது சக்தி? உன் அப்பா போல அவங்களும் ஏதாவது காரணம் சொன்னால் அப்போ நமக்கு இன்னும் கஷ்டம் தானே? நீ சொன்னதே தான் சக்தி. உன்னைக் காதலிச்சதோட விட்டுட்டு போக நான் லவ் பண்ணலை.
என் மூச்சு உள்ள வரை உன் கூட வாழும் ஆசையில் தான் லவ் பண்ணினேன். நான் கேட்டு எங்க வீட்டில் அவங்க மறுத்து நாங்க முட்டிக்கிட்டு நிற்கிறதை விட, கல்யாணம் முடிஞ்சிட்டா மருமகள்னு உன்னை ஏத்துக்க வாய்ப்பு அதிகம்…” என்றான்.
“ஆனா உங்க ஊர் கட்டுப்பாடு?” அப்போதும் தயக்கத்துடன் கேட்டாள் சக்தி.
“எனக்கும் அந்தத் தயக்கம் இருக்கு சக்தி. ஆனால் நீ என்று வரும் போது என்னால் அதுக்கு மேல யோசிக்க முடியலை…” என்றான்.
“எதுக்கும் ஒரு முறை பேசிப் பார்த்துடலாமா ஈஸ்வர்? இல்லனா இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்த்துட்டு…” என்று இழுத்தாள்.
“உன் அப்பாகிட்ட உனக்குச் சம்மதம் வாங்க முடியும்னு உறுதி இருந்தால் வெயிட் பண்ணலாம் சக்தி. என்ன சம்மதம் வாங்குறியா?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனாள் சக்தி.
அவளும் அவளின் தந்தையிடம் மனம் தாங்காமல் இத்தனை நாட்களில் பேசிப் பார்த்திருந்தாள்.
ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் மட்டுமே.
தாமோதரன் அவரின் பிடிவாதத்தில் இருந்து சிறிதும் இறங்கி வருவதாக இல்லை.
‘உன் நல்லதுக்காக மட்டுமே அப்பா சொல்கிறேன்’ என்ற வார்த்தைகளையும் அவர் மாற்றுவதாக இல்லை.
அவளும் ‘ஊர் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை’ என்று சொன்னதையும் அவர் ஏற்றுக் கொள்வதாக இல்லை.
“என்ன சக்தி, திரும்ப உன் அப்பாக்கிட்ட பேசப் போறீயா? இல்லை…?” என்று அவன் நிறுத்த,
“நாளைக்குக் காலையில் நான் ரிஜிஸ்டர் ஆபீஸ் வர்றேன் ஈஸ்வர்…” என்றாள் சக்தி.
“லவ் யூ சக்தியாரே. அப்போ நாளையிலிருந்து நீங்க திருமதி சக்தி சர்வேஸ்வரன். அப்புறம்…?” என்றவன் இழுவையாக நிறுத்த,
“அப்புறம் என்ன? அலைபாயுதே மாதிரி நீங்க ஒரு இடத்திலும் நான் ஒரு இடத்திலும் இருக்கப் போறோம்…” என்றவள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“ஹோய் சக்தியாரே, என்ன நக்கலா? அதெல்லாம் படத்துக்கு மட்டும் தான் சரியா வரும். அடுத்துக் கல்யாணம் முடிந்ததும் நேரா உன் அப்பா முன்னாடி போய் நின்னு, உங்க பொண்ணை இப்ப என் ஊருக்கு கூட்டிட்டுப் போகப் போறேன்னு அவர்கிட்ட சொல்ல போறேன்.
அவர் வாயடைத்து நிற்க போறார். அடுத்து நேரா எங்க ஊருக்கு கிளம்பி போய் எங்க அப்பா, அம்மாகிட்ட நம்ம கல்யாணம் விஷயம் சொல்லி அவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க போறோம்…” என்றான்.
சர்வேஸ்வரன் திட்டம் போட்டது போல் ஆரம்பத்தில் எல்லாமே சரியாக நடந்தது.
அவனின் நண்பர்களின் சாட்சி கையெழுத்துடன் இனிதாக அவர்களின் பதிவு திருமணம் நடந்தது. தாலி கட்டும் முறை மட்டும் வீட்டு பெரியவர்களின் முன்னிலையில் செய்ய ஆசை இருக்க, சக்தி அதற்கு மட்டும் சரி சொல்லி விடவில்லை.
சர்வேஸ்வரனும் தன் அன்னை தந்தையிடம் சொல்லிவிட்டு தாலி கட்டிக் கொள்ளலாம் என்று தள்ளி போட சம்மதம் சொல்லியிருந்தான்.
பதிவு திருமணம் முடிந்ததும் அவனின் எண்ணப்படி சக்தியின் வீட்டிற்குக் கிளம்பி கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வர, அதை எடுத்துப் பேசியவன் கைகள் நடுங்க ஆரம்பித்தன.
“என்னாச்சு ஈஸ்வர், போனில் யார்?” என்று விசாரித்தாள் சக்தி.
“சக்தி…” என்று அழைத்தவன் குரல் கலக்கத்தை வெளிப்படுத்தியது.
“என்னாச்சுப்பா?” என்று ஆதரவாக அவனின் தோளை தொட்டுக் கேட்டாள்.
“அப்பா… அப்பா இறந்துட்டாராம்…” என்றவன் கண்களில் தண்ணீர் ததும்பி நின்றது.
“ஓ!” என்று அதிர்ந்தவள், அவனுக்கு ஆறுதல் கூடச் சொல்ல முடியாமல் குரலடைத்துப் போனாள்.
“நான் உடனே ஊருக்கு கிளம்பணும் சக்தி…” என்றான்.
“போயிட்டு வாங்க ஈஸ்வர்…” என்றாள்.
“நீ?” என்றவனுக்கு அந்த நேரம் அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் வந்தது.
அன்றே அவளைத் தன் ஊருக்கு அழைத்துச் செல்வது தான் அவனின் திட்டமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத தந்தையின் இழப்பு அவனின் புத்தியை மழுங்கடிக்க, அவளை இந்தச் சூழ்நிலையில் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்று குழப்பத்தைத் தந்தது.
சில நொடிகள் யோசித்தான். ஏற்கனவே தந்தையின் எதிர்பாராத இழப்பு அன்னையை முடக்கியிருக்கும். இந்த நிலையில் தானும் அவருக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.
சிறிது நாட்கள் கழித்து அன்னையிடம் விஷயத்தைச் சொல்லி, சக்தியை அங்கே அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுடன் அவளிடம் தன் யோசனையைச் சொன்னான்.
அவளுக்கும் அதுவே சரியெனத் தோன்ற, அவனை மட்டும் கிளம்பச் சொன்னாள்.
அவன் கிளம்பியதும் தனியாக வீடு வந்து சேர்ந்தாள் சக்தி.
சக்தி வீட்டிற்குள் நுழைந்த போது வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்தார் தாமோதரன்.
அன்று காலையில் சீக்கிரமே ஒரு வேலையாகக் கடைக்குச் சென்று விட்டதால் சக்தி சேலையில் வெளியே கிளம்பியது அவருக்குத் தெரியாமல் போனது.
அவர் வீட்டிற்கு வந்த போது அவள் வீட்டில் இல்லாததால் வேலைக்குச் சென்று இருப்பாள் என்று நினைத்துக் கொண்டார்.
அவள் இப்போது வேலை நேரத்தில் வீட்டிற்கு வரவும் ஆச்சரியமாக மகளைப் பார்த்தார்.
“என்னம்மா சக்தி, உடம்பு எதுவும் சரியில்லையா? இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்க?” என்று கேட்டாலும் அவரின் பார்வை மகளை ஆராய்ச்சியாகத் தழுவியது.
சக்தியின் முகத்தில் சர்வேஸ்வரனின் தந்தையின் இழப்பை நினைத்துச் சோகம் இருந்தாலும், அதையும் தாண்டி அவள் அன்றைய திருமணத்திற்கு எனப் பளிச்சென்று கிளம்பி சென்றதால் இருந்த பளபளப்பு, அவளை விட்டு நீங்காமல் இருந்ததால் அவரின் பார்வை கூர்மை பெற்று ஆராய்ந்தது.
சக்தி சில நொடிகள் யோசித்தாள். பின் எப்படி இருந்தாலும் தங்கள் திருமண விஷயத்தை இன்று சொல்வதாகத் தானே இருந்தோம்? அதை இனி தள்ளிப் போட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தவள் தந்தையிடம் தனக்குப் பதிவு திருமணம் நடந்து விட்டதைத் தெரிவித்தாள்.
மகள் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து அவளைப் பார்த்தவர் தளர்ந்து சோஃபாவில் சாய்ந்தார்.
அப்போது அவரின் உதடுகள் மெல்லிய வார்த்தைகளைக் கசிய விட்டது.
“அவசரப்பட்டுட்டியே சக்திமா…” என்பது தான் அது.
அதன் பிறகு தந்தை, மகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் சக்திக்கு பல உண்மைகளைப் புரிய வைக்க, உடைந்தே போனாள்.
அதுவரை தந்தை தான் தன் விஷயத்தில் வீண் பிடிவாதம் பிடித்ததாக நினைத்தவளுக்கு உண்மை உறைத்து அவளுக்கு உணர வைக்க, இப்போது தவறு செய்தது தந்தை இல்லை. தான் தான் என்று நினைத்தவளுக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
“முன்னாடியே தெளிவா சொல்லியிருக்கலாமே பா?” என்று கேட்டாள்.
“நான் அவமானப்பட்டதைச் சொல்லி உன்னையும் வருந்த வைக்க வேண்டாம்னு நினைச்சேன். நீ இப்படி அவசர முடிவு எடுப்பன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. கொஞ்ச கொஞ்சமா உன் மனசை மாத்த முயற்சி செய்யலாம்னு நினைச்சேன்…” என்றார்.
கேட்ட சக்திக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. இனி தான் என்ன செய்ய வேண்டும் என்றும் புரியவில்லை.
நாட்கள் அதன் வேகத்தில் செல்ல, ஊருக்கு சென்று ஒரு வாரத்திற்குப் பிறகு சக்திக்கு அலைபேசியில் அழைத்தான் சர்வேஸ்வரன்.
அவனின் அழைப்பை பார்த்ததுமே எடுக்காமல் யோசனையுடன் தொடுதிரையில் தெரிந்த அவனின் பெயரை வெறித்துப் பார்த்தாள்.
சில நொடிகளில் அழைப்பு நின்று மீண்டும் உடனே அழைப்பு மணி ஒலித்தது.
இந்த முறை சில ரிங்டோனிற்குப் பிறகு அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“ஹலோ சக்தி” என்ற சர்வேஸ்வரனின் குரல் கேட்டதும் விழிகளை மூடி தன் மனகலக்கத்தை மறைக்க முயன்றாள்.
தன் குரல் கேட்டதும் ஆவலாகப் பேசுவாள், தனக்கு ஆறுதல் சொல்லுவாள், தன்னைப் பற்றி விசாரிப்பாள் என்ற சர்வேஸ்வரனின் எதிர்பார்ப்பு பொய்யாகி போக, “சக்தி?” என்று கேள்வியுடன் அழைத்தான்.
“சொல்லுங்க ஈஸ்வர்…” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
“என்னாச்சு உன் குரலே சரியில்லை. எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டான்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை ஈஸ்வர். நீங்க சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?”
“நான் இருக்கேன் சக்தி. அம்மா தான் ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. அவங்களைத் தேற்றுவது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அம்மா கொஞ்சம் தேறியதும் நம்ம விஷயத்தைச் சொல்லலாம்னு இருக்கேன் சக்தி…” என்றான்.
“இல்லை, வேண்டாம் ஈஸ்வர்…” என்று உடனே மறுத்தாள் சக்தி.
“என்ன வேண்டாம்?” அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.
“நம்ம கல்யாண விஷயத்தை உங்க அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன்…” சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்திற்கு வந்தாள்.
“வாட்! என்ன சொல்ற சக்தி? ஏன் சொல்ல வேண்டாம்னு சொல்ற? அம்மா கஷ்டப்படுவாங்கன்னு நினைக்கிறயா?” என்று கேட்டான்.
“இல்லை, அதுக்கில்லை. எங்க அப்பா சொன்னது ரொம்பச் சரின்னு எனக்கு இப்ப தோணுது. உங்க ஊரில் என்னால் வந்து இருக்க முடியாது. அதனால் நீங்க இப்போ உங்க அம்மாகிட்ட நம்ம விஷயத்தைச் சொன்னாலும் என்னால் அங்கே வந்து இருக்க முடியாது. அதனால் உங்க அம்மாகிட்ட நம்ம விஷயத்தைச் சொல்ல தேவையில்லைன்னு சொல்றேன்…” என்றாள்.
“ஏய் சக்தி, என்ன சொல்ற நீ?” தான் ஊருக்கு சென்ற ஒரு வாரத்தில் சக்தியிடம் இந்த மாற்றத்தை எதிர்பாராதவன் அதிர்ந்து கேட்டான்.
“இனி நம்ம இரண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு சொல்றேன் சர்வேஸ்வரன். நாம பிரிஞ்சிடலாம்…” என்று கலங்க ஆரம்பித்த தன் கண்களைக் கட்டுப்படுத்திச் சொன்ன சக்தி உடனே அழைப்பை துண்டித்தும் விட்டாள்.
அதன் பிறகு சர்வேஸ்வரன் அழைத்த போதும் ஏற்க மறுத்து விட்டாள்.
“எந்த விளக்கமும் சொல்லாமல் எப்படி நீ பிரியும் முடிவை எடுக்கலாம்?” என்று மீண்டும் மீண்டும் அவன் அழைத்து, அவள் எடுத்த போது ஒரு நாள் கேட்டான்.
ஆனால் அவனின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மறுத்துவிட்டாள் சக்தி.
அதன் பிறகு அவனுக்குத் தந்தை இடத்தில் தான் நாட்டாமையாகப் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலையும், விவசாயத்தில் காலடி எடுத்து வைத்ததும் அவனை உள்ளே இழுத்துக் கொண்டது. அதோடு சக்தியின் பிடிவாதத்தில் அலுத்துப் போனவன், கொஞ்ச கொஞ்சமாக அவளுக்கு அழைப்பதையும் நிறுத்தியிருந்தான்.
இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி அதிகமாகியிருந்தது.
அதன் பிறகு இப்போது சக்தியாக அவனின் ஊருக்கு வர, முதலில் இந்தக் கிராமத்தில் இருக்க முடியாது, தன்னுடன் வர மாட்டேன் என்றவள், இப்போது அவளாக வந்திருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்?
அப்போ தன்னுடன் வர மறுத்ததற்கு வேறு காரணம் இருக்குமோ? என்று யோசித்தவன் உடனே சில தகவல்களைத் திரட்டி அவள் தன் ஊருக்கு வந்த உண்மை காரணத்தை அறிந்து கொண்டான்.
இப்போது கிணற்றடியில் அமர்ந்து தன் அருகில் அமர்ந்திருந்த சக்தியை யோசனையுடன் பார்த்தான்.
அவளும் அப்போது தான் பழைய நிகழ்விலிருந்து வெளியே வந்திருந்தாள்.
“அப்போ என் மேல காதல் இருந்தாலும், இப்ப உன்னோட அப்பா தான் உனக்கு முக்கியம். அதனால் தான் என் மேல் உள்ள காதலை மறைச்சு வச்சுக்கிட்டு என் கூட வாழணும் என்பதையே யோசிக்க மறுக்குற? அப்படித்தானே?” என்று கேட்டான்.
பெருமூச்சை இழுத்து விட்டவள், “என் அப்பா தான் எனக்கு முக்கியம் சர்வேஸ். அதைத் தாண்டி யோசிக்கிற நிலையில் நான் இல்லை…” என்று முடிவாகச் சொல்லிட்டு எழுந்தவள், “நான் வீட்டுக்குப் போறேன்…” என்று அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வரப்பில் இறங்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சக்தி.