10 – மின்னல் பூவே

அத்தியாயம் – 10

“அம்மா, சாப்பாடு எடுத்து வைங்க. நேரமாச்சு…” தன் முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டே வந்து சாப்பாட்டு மேஜையின் முன் அமர்ந்தான் முகில்வண்ணன்.

“இதோ வந்துட்டேன்…” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்த அவனின் அன்னை வளர்மதி, சில நொடிகளில் சமைத்ததை எடுத்து வந்து சாப்பாட்டு மேஜையின் மீது வைத்தார்.

“ஒன்பது மணிக்குப் போக வேண்டிய ஆபிஸுக்கு தினமும் ஏழு மணிக்கே கிளம்பி நிற்கிற. அதுக்குள்ள வேலையை முடிக்க வேண்டியதா இருக்கு. என்னைக்குத் தான் இந்தப் பரபரப்புக் குறையுமோ?” என்று சொல்லிக் கொண்டே மகனுக்கு இட்லியைப் பரிமாற ஆரம்பித்தார்.

“என்னம்மா செய்றது? நம்ம வீட்டிலிருந்து ஆபிஸ் போக ஒரு மணி நேரம் ஆகுது. இதில் டிராபிக் வேற ஆனா கூட அரைமணி நேரம் ஆகிடுது. அதுக்கு இந்த டைம் கிளம்பினால் தான் ஒன்பது மணிக்கு ஆபிஸ் போக சரியா இருக்கும்…” என்ற முகில், அன்னை வைத்த தோசையை உண்ண ஆரம்பித்தான்.

“இதுக்குத் தான் உன் கல்யாணத்துக்குப் பின்னாடி ஆபிஸ் பக்கத்துலேயே வீடு பார்த்து இருந்துகோன்னு நானும் அப்பாவும் சொல்லிட்டு இருக்கோம். நீ தான் அலைச்சல் இருந்தாலும் பரவாயில்லைன்னு வேணாம்னு சொல்லிட்டு இருக்க…” என்றார்.

“கமலி ஆபிஸ் நம்ம வீட்டிலிருந்து அவளுக்குப் பக்கம் மா. என் ஆபிஸ் பக்கத்தில் போனா அவளுக்குத் தூரம் ஆகிடும்…” என்றான்.

கமலினி சமீபத்தில் தான் ஓர் தொழில் நுட்ப அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.

“அதுவும் சரிதான். இனி நாம அவ வசதியையும் பார்க்கணுமே? அவளுக்குப் பக்கமா வீடு இருப்பது தான் நல்லது. அது சரி, கமலிகிட்ட பேசுறயா? உன்கிட்ட எப்படிப் பேசுறா?”

அன்னை கமலினியைப் பற்றி விசாரித்ததும் முகிலின் உதட்டோரம் லேசான புன்னகை அரும்பியது.

“ம்ம்.. பேசினேன் மா…” என்று மட்டும் சின்னச் சிரிப்புடன் சொன்னான்.

மகனின் உதட்டோர சிரிப்பும், அவன் கண்களில் மின்னிய கனவையும் கண்ட வளர்மதி திருப்தியுடன் அதற்கு மேல் எதையும் அவனிடம் கேட்கவில்லை.

கமலினி இன்னும் வெட்கத்துடன் தான் அவனுடன் பேசினாள்.

அதுவும் அவனாகத் தான் போன் போடுவான். அவள் ஏன் போடுவதில்லை என்று ஒரு முறை கேட்க, ‘அப்பா, அம்மா பக்கத்தில் இருக்காங்க. சங்கடமா இருக்கு’ என்றாள்.

பட்டப்படிப்பு முடிந்து வேலை பார்க்க ஆரம்பித்த பின்னும் இன்னும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட தன்னுடன் பேச நாணம் காட்டுவது முகிலுக்கு வியப்பாகவே இருந்தாலும் அவளின் அந்த நாணமும் அவனுக்குப் பிடித்தே இருந்தது.

“காலையில் அக்கா வந்திடுவா. நீ ரயில்வே ஸ்டேஷன் போய் அழைச்சுட்டு வந்திடுவ தானே?” என்று கேட்டு மகனின் கனவைச் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்க வைத்தார் வளர்மதி.

“ஆமா மா, போய்க் கூட்டிட்டு வர்றேன்…” என்றான்.

அவனின் அக்கா இலக்கியாவிற்கு அவன் கல்லூரி இறுதி வருடம் படிக்கும் போது திருமணம் முடிந்திருந்தது.

மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள்.

கார்த்திக், இலக்கியா தம்பதியினருக்கு அபிரூபா என்று பெயர் சூட்டப்பட்ட எட்டு மாதங்களான மகள் இருந்தாள்.

தம்பியின் திருமணத்திற்கு நாளை மறுநாள் முகூர்த்த புடவை எடுக்கப் போவதாக இருக்க, அதற்குக் கணவன் குழந்தையுடன் மதுரையிலிருந்து வருகை தருகிறாள் இலக்கியா.

“கிளம்பிட்டீயா முகிலா?” என்று கேட்டப் படி அப்போது உள்ளே வந்தார் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்த அவனின் தந்தை ரகுநாதன்.

“ஆமாப்பா…” என்றவன் சாப்பிட்டு எழுந்து கை கழுவி விட்டுத் தந்தையின் அருகே வந்தான்.

“காஃபி கொடு வளர்…” என்று மனைவியிடம் கேட்டவர் சோஃபாவில் அமர்ந்தார்.

முகில் தந்தையின் அருகில் அமர, “இன்னைக்குப் பத்திரிகை ரெடியாகியிருக்கும்னு சொன்னான். நீ வாங்கிட்டு வர்றீயா? நான் பேங்கில் இருந்து வரும் போது வாங்கிட்டு வரட்டுமா?” என்று மகனிடம் கேட்டார்.

“நானே வாங்கிட்டு வர்றேன் பா. உங்களுக்கு அலைச்சல் வேண்டாம்…” என்றான்.

“கல்யாணம் முடியுற வரை அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அதுக்கு என்ன செய்றது முகிலா? இனி பத்திரிகை வந்ததும் எல்லாருக்கும் வைக்க ஆரம்பிக்கணும்…”

“யார் யாருக்கு அனுப்பணும்னு முதலில் ஒரு லிஸ்ட் எடுப்போம் பா. கொரியர்ல அனுப்ப வேண்டியவங்களுக்கு முதலில் அனுப்பி வச்சுடுவோம். அதுக்குப் பிறகு நேரில் கொடுக்க வேண்டியவங்க லிஸ்ட் தனியா எடுக்கலாம்…” என்றான்.

“நாளைக்கு இலக்கியா வீட்டில் இருப்பாள். அப்போ நாம எல்லாருமே சேர்ந்து லிஸ்ட் போடலாம்…” என்றார் ரகுநாதன்.

“ஆமாப்பா. நானும் அதுதான் நினைச்சேன்…” என்றான்.

வளர்மதியும் கணவனுக்குக் காஃபியைக் கொடுத்து விட்டுக் கல்யாண வேலைகளைப் பற்றிப் பேசி ஆரம்பித்தார்.

அன்னை தந்தையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அலுவலகம் கிளம்பினான் முகில்வண்ணன்.

கல்யாண வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அலுவலக வேலையைப் பற்றியும் முகிலின் சிந்தனை அதிகம் இருந்தது.

கடந்த இரண்டு வருடங்கள் சிறப்பாக வேலை செய்ததற்குப் பலனாக லீடராகப் பதவி உயர்வு பெற்றிருந்தான்.

லீடர் பதவி கிடைத்த பிறகு அவன் செய்யப் போகும் முதல் புராஜெக்ட் கைவசம் வந்திருந்தது.

அதைச் சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற முனைப்பு அவனிடம் இருந்தது.

அனுபவம் வாய்ந்த இரண்டு பேருடன், கேம்பஸில் வேலை கிடைத்து வந்த இரண்டு பேரும் அவனின் டீமில் உண்டு என்று மேனேஜர் சொல்லியிருந்தார்.

அவர்களிடம் நல்ல முறையில் வேலை வாங்கிப் புராஜெக்டை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவன் பொறுப்பு.

தன் பொறுப்பைச் சரியாகச் செய்யவேண்டும் என்ற உறுதியுடன் அலுவலகம் சென்று கொண்டிருந்தான்.

கேம்பஸில் வேலை கிடைத்து வந்தவர்களைப் பற்றி நினைத்ததுமே அவனின் மூளையில் மின்னி மறைந்தாள் உத்ரா.

அவள் நினைவு வந்ததும் அவனையும் மீறி ஒர் ஒவ்வாமையும் அவனின் மனதில் கலந்தே வந்தது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் ஆரம்பத்திலிருந்து அவளின் மீது ஏற்பட்ட தப்பு அபிப்பிராயம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

அதை அவனும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றிக் கொள்ள விருப்பமும் இல்லை.

ஆனாலும் அவ்வப்போது அவளின் நினைவு அவனையும் மீறி வெளிப்படத்தான் செய்தது.

முதல் முதலாக அவனிடம் காதல் சொன்னவள் அல்லவா?

இன்றுவரை முடிவாகக் காதல் சொன்னவளும் அவளே!

உத்ராவைத் தவிர அவனிடம் காதல் சொன்னது யாருமில்லை. கமலினி உட்பட!

வீட்டில் பேசி முடிவு செய்த திருமணம்.

பெரியவர்களின் விருப்பத்தைத் தன் விருப்பமாக முகிலும், கமலினியும் மாற்றிக் கொண்டார்களே தவிர, காதல், விருப்பம் என்று அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்தது இல்லை.

முகில்வண்ணனிற்குக் கமலினியை நினைத்ததும் வரும் மயக்கம் கூடத் திருமணம் நிச்சயத்த ஒரு ஆண்மகனின் பூரிப்பில் வந்த வெளிப்பாடுகள் தானே தவிர, அவளின் மீது காதலா என்ற கேள்விக்கு இன்னும் விடை அறியப்படவில்லை.

தன் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவள் என்று எப்படிக் கமலினி மீது அவனுக்கு மயக்கம் வந்ததோ, அதே போல் தான் நினைத்துக் கூடப் பார்க்க விரும்பாத பெண் என்று உத்ராவின் மீது வெறுப்பு வந்தது.

அவளை நினைக்கக் கூடக் கூடாது என்று நினைப்பவன் அவன்.

ஆனால் அவன் ஒன்றை உணரவே இல்லை.

ஒருவரை நினைக்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டே அந்நபரைத் தான் அதிகம் நினைப்போம் என்று உணர மறந்து போனான்.

வெறுப்பில் கூட அவனின் நினைவை அதிகம் ஆக்கிரமித்தவள் உத்ரா மட்டுமே. ஆனால் அதை அவனே அறியவில்லை.

இப்போது கூட ‘உத்ரா மட்டும் தன் டீம் வந்து விடக் கூடாது கடவுளே’ என்று அவசரமாகக் கடவுளிடம் ஒரு வேண்டுதல் வைத்துக் கொண்டே தான் அலுவலகம் சென்று சேர்ந்தான்.

ஆனால் கடவுளின் கணக்குத்தான் வேறாக இருந்ததே! அவனின் வேண்டுதல் நிறைவேறாமல் போனதை சற்று நேரத்திலேயே அறிந்து கொண்டான்.

முகில் அலுவலகத்திற்குள் நுழைந்து தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்த போது இரண்டு வண்டிகள் தள்ளி தன் ஸ்கூட்டியை நிறுத்திக் கொண்டிருந்த உத்ரா அவனின் கண்களில் விழுந்தாள்.

அவளும் அவனின் அதே ஏரியா தானே. அவளும் விரைவிலேயே அங்கிருந்து கிளம்பி வந்திருந்தாள்.

அவனை அவளும் பார்த்தாள் தான். ஆனால் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாமல் சென்றாள்.

‘வந்ததுமே இவளின் முகத்திலா முழிக்க வேண்டும்?’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டே தான் அலுவலகத்திற்குள் சென்றான்.

அவர்களின் அலுவலகம் ஏழாவது மாடியில் இருந்தது. அவளுடன் ஒரே மின்தூக்கியுனுள் செல்ல தயங்கி லேசாகப் பின் தங்கினான் முகில்வண்ணன்.

ஆனால் அப்போது அவனுடன் வேலை பார்க்கும் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்து லிப்ட்டிற்குள் அழைக்க, வேறு வழியில்லாமல் அவருடன் சென்றான்.

அவருடன் பேசிக் கொண்டே உத்ராவை ஓரப்பார்வையாகப் பார்க்க, அவளோ தன் கைபேசியைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

அவள் தன் பக்கமே திரும்புவதில்லை என்பதில் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவள் இங்கே வேலைக்கு வந்ததில் இருந்து அவனுக்குள் ஒரு சிறு பயம் இருந்தது. எங்கே மீண்டும் காதல் கீதல் என்று சொல்லிக் கொண்டு வந்துவிடுவாளோ என்று.

ஆனால் அவள் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விலகிச் சென்றதில் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அதோடு தான் அவள் காதல் சொல்லிக் கொண்டு வந்த போது சரியாகப் பேசியிருக்கிறோம் என்று இப்போதும் திருப்தி பட்டுக் கொண்டான்.

அவன் பேசிய விதத்தில் அவளின் மனம் காயப்பட்டுப் போனது எல்லாம் அவனுக்குத் தெரியவே இல்லை. தெரிந்தாலும் இப்போது அவன் கவலைப்பட்டிருக்கவும் மாட்டான் என்பதும் முற்றிலும் உண்மை.

மின்தூக்கியிலிருந்து வெளி வந்து முகில் அவன் இருக்கைக்குச் செல்ல, உத்ரா வழக்கம் போல ட்ரெயினிங் நடந்த இடத்திற்குச் சென்றாள்.

அங்கே அவர்கள் அவளின் புது டீம் பற்றிய விவரம் சொல்லி அங்கே போகச் சொல்ல, புவனாவுடன் அவளும் சென்றாள்.

“என்னடி இது நமக்கு லீடர் முகில் தான் போல?” என்று புவனா ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டே தோழியுடன் நடந்தாள்.

“ம்ம், அதான் தெளிவா சொன்னாங்களே முகில்வண்ணன் தான் உங்க டீம் லீடர்னு. அப்புறமும் ஏன் சந்தேகமா கேட்குற?” என்று சாதாரணமாகக் கேட்டாள் உத்ரா.

“உனக்குத் தயக்கமா இல்லையா?” புவனா கேட்க,

“இதில் தயங்குறதுக்கு என்ன இருக்கு? டீம் லீடர் சொன்ன வேலையை முடிச்சுக் கொடுக்க வேண்டியது நம்ம வேலை. வந்தோமா, வேலையைப் பார்த்தோமா, போனோமா என்று இருக்க வேண்டியது தான்…”

இதை அவள் தோழியிடம் சொன்னாளா இல்லை தனக்குத் தானே சொல்லி தன்னைத் திடப்படுத்திக் கொண்டாளா? என்று அவள் மனம் மட்டுமே அறிந்ததாக இருந்தது.

அப்போது தான் மேனேஜர் சொன்ன தகவலை கேட்டு எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் முகில்வண்ணன்.

அவளுடன் லிப்டில் போகக் கூட அவன் தயங்க, இங்கே என்னடா என்றால் அவளுடனே வேலை பார்க்கும் சூழ்நிலை வந்து விட்டதே! என்று நினைத்து மனம் முழுவதும் எரிச்சலில் மண்டிக் கிடந்தது.

அப்போது உத்ராவும், புவனாவும் அவனின் இருப்பிடம் அருகில் வர, தன் எரிச்சலை காட்டாமல் அடக்கிக் கொண்டவன், அவர்களைச் சாதாரணமாகப் பார்த்து வைத்து தலையசைத்து வரவேற்றான்.

அப்போது வருண், மாதவன் என்ற அலுவலக வேலையில் ஒரு வருடம் அனுபவம் மிக்க இரண்டு ஆண்கள் அவனின் கீழ் வேலை பார்க்க வர, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அவர்களை வரவேற்று, நான்கு பேரையும் அமர சொல்லி, தாங்கள் செய்யப் போகும் பிராஜெக்ட் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான் முகில்வண்ணன்.

அப்படிப் பேசும் போது முடிந்த வரை உத்ராவைப் பார்த்து பேசுவதைத் தவிர்த்துக் கொண்டான்.

உத்ராவிற்கோ முகில் அவளுக்கு உயரதிகாரியாக இருக்க, அவன் சொல்வதை அவனின் முகம் பார்த்துக் கேட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதனால் அவள் அவனின் முகத்திலிருந்து பார்வையை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

விவரங்களைச் சொல்லி முடித்தவன், “லீடரா என்னோட ஃபர்ஸ்ட் பிராஜெக்ட் கைஸ். இதில் எந்தப் பிளாக் மார்க்கும் என் மேல விழாம நல்லபடியா முடிச்சுக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு உங்க ஒத்துழைப்பும் வேண்டும்…” என்று ஆங்கிலத்தில் பேசி முடித்தான்.

“ட்ரை அவர் பெஸ்ட் முகில்!” என்று அந்த இரண்டு ஆண்களும் சொல்ல, புவனாவையும், உத்ராவையும் கேள்வியாகப் பார்த்தான்.

புவனா அவனுக்குப் பதிலாகத் தலையசைக்க, அவளுடன் சேர்ந்து உத்ராவும் லேசாகப் புன்னகைத்துத் தங்கள் ஆதரவை தெரிவித்தாள்.

அவளின் புன்னகையை உணர்ச்சிகளற்றுப் பார்த்தவன், பின் முகத்தை மெல்ல திருப்பி, யார்யார் என்னென்ன வேலைகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று விவரம் சொன்னான்.

“நீங்களும், உத்ராவும் வேலைக்குப் புதுசு என்பதால் உங்களுக்கு அதிகம் சந்தேகம் வரலாம் புவனா. எதுவும் சந்தேகம் வந்தால் வருண் கிட்ட கேளுங்க. வருண் நீங்க இவங்களுக்குக் கொஞ்சம் கைட் பண்ணிடுங்க…” என்று புவனாவிடம் ஆரம்பித்து, வருணிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.

கவனமாக உத்ராவிடம் நேரடியாகப் பேசுவதைத் தவிர்த்தான்.

அதை உத்ராவும் புரிந்து கொண்டாள். அவன் தன்னிடம் பேசினால் தான் அதிசயம் என்று நினைத்துக் கொண்டாள்.

அவர்கள் எழுந்து சென்றதும் தலையை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டான் முகில்வண்ணன்.

உத்ரா தன் டீமில் இருப்பதைச் சகித்துக் கொண்டே வேலை பார்க்க வேண்டுமா? என்று சலித்துக் கொண்டான்.

எழுந்து சென்ற உத்ராவோ அவ்வளவு நேரம் அடைத்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள் போல் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

புவனா அவளை இரக்கத்துடன் பார்க்க, அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி சிரித்தாள் உத்ரா.

“ஆரம்பம் தானே? பழகிடும்! அதுவுமில்லாம இனி என் சொந்தக்காரரா வேற முகில் மாறப் போறார். சோ, எப்பவும் ஓடி ஒளிய முடியாதே? இப்ப இருந்தே ட்ரைனிங் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்…” என்றாள்.

“கமலினிக்கு நீ சொந்தம்னு முகிலுக்குத் தெரியுமா?” என்று புவனா கேட்க,

“இன்னும் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா அவங்க கல்யாணத்தப்ப எப்படியும் தெரிஞ்சிடும்…” என்றாள்.

அவர்களின் திருமணம் வரை தங்கள் சொந்தம் பற்றித் தெரியவராது என்று உத்ரா நினைத்துக் கொண்டிருக்க, அது அப்படி இல்லை. நாளை மறுநாளே முகிலுக்குத் தெரிய வரப் போகிறது என்று அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

நிச்சயதார்த்தத்திற்கு உத்ரா வராததில் கோபமாக இருந்த விமலா, ‘அதெப்படி அவளை அழைத்துக் கொண்டு வராமல் இருக்கலாம்?’ என்று அஜந்தாவை ஏற்கனவே ஒரு வழி ஆக்கியிருந்தார்.

இப்போது கல்யாண வேலை ஆரம்பிக்கவும் உத்ராவை அவர் விடுவதாக இல்லை. மகளுக்கு முகூர்த்த புடவை எடுக்க அவளும் வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.

அஜந்தாவாலும் ஓர் அளவுக்கு மேல் மறுக்க முடியவில்லை.

உத்ரா இரவு வீட்டிற்குச் சென்ற போது விஷயத்தைச் சொல்லி மகளுக்காகக் கவலைப்பட, “பார்த்துக்கலாம் மா. ஒன்னும் பிரச்சனை இல்லை. நாமும் புடவை எடுக்கப் போய்ட்டு வந்திடலாம்…” என்றாள்.

‘எப்போது இருந்தாலும் எதிர்கொண்டு தானே ஆகவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

முன்பை விட முகிலின் வெறுப்பை இன்னும் அதிகம் சம்பாதிக்கப் போகிறோம் என்பதை அறியாமல் சம்மதம் சொல்லியிருந்தாள் உத்ரா.