10 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 10

புதன்கிழமை மாலை நான்கு முப்பது மணியளவில் சத்யாவின் குடும்பமே தர்மாவின் ஓட்டுனர் பயிற்சி மையத்தின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

சிவா அவர்களுக்குக் குளிர்பானம் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருக்க, தர்மா அவர்களை வரவேற்று விட்டுத் திறப்பு விழாவிற்கான ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

தியாகராஜன் குடும்பத்தை மட்டும் இல்லாமல் அவரின் கடையின் அருகில் இருந்த சில கடைக்காரர்களையும் அழைத்திருந்தான். அவர்களில் சிலரும் வந்திருக்க, அவர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தான்.

“என்ன மச்சான் வேற எதுவும் வேலை இருக்கா?” என்று தங்கையின் கணவனான ஸ்ரீதர் கேட்க, “அவ்வளவு தான் மாப்பிள்ளை. இன்னும் கொஞ்ச நேரத்தில் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்து விடலாம். அனுவை வர சொல்லுங்க. ஒரு சின்ன வேலை இருக்கு…” என்றான்.

“அனு ரொம்பப் பிஸியா பேசிட்டு இருக்கா மச்சான். அங்கே பாருங்க…” என்று சிரித்தபடி சத்யா அமர்ந்திருந்த இடத்தைக் காட்ட, வெகு நாட்கள் பழகியவள் போலச் சத்யாவின் கையைப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தாள் தர்மாவின் தங்கை அனுசுயா. அவளின் மடியில் ஐந்து வயது பெண் குழந்தையான இனியா அமர்ந்திருந்தாள்.

இனியா அன்னையை இறுக பற்றிய படி சிறிதும் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள் சத்யா. இனியா தயங்கி, தயங்கி பேச அவளின் தயக்கம் புரிந்து பேசியே சகஜமாக்கி கொண்டிருந்தாள் சத்யா.

வசந்தாவின் அருகில் அமர்ந்து தர்மாவின் அன்னை சாவித்திரி பேசிக் கொண்டிருக்க, தியாகராஜனிடம் தர்மாவின் தந்தை நீலகண்டன் பேசிக் கொண்டிருந்தார்.

சத்யாவின் குடும்பம் வந்த சிறிது நேரத்திலேயே அவர்களுடன் தர்மாவின் குடும்பத்தார் நட்பாகப் பேச ஆரம்பித்து விட்டனர்.

பெரியவர்கள் ஆளுக்கு ஒரு பேச்சில் இருக்கக் கார்த்திகா, இனியாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்ணில் இரக்கம் தோன்றியது. ‘பாவம் பாப்பா’ என்று நினைத்துக் கொண்டாள்.

சத்யாவும் அதையே தான் உள்ளுக்குள் நினைத்த படி வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் அனுசுயாவிடமும், குழந்தையிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.

“உங்க ஸ்கூலில் தான் இனியாவிற்கு அட்மிஷன் போட்டுருக்கோம். எப்படிப் படிக்கப் போறாளோ? எப்படி அங்கே ஸ்கூலில் அவளுக்கு ஒத்துபோகுமோனு கொஞ்சம் கவலையா தான் இருக்கு…” என்று மடியில் அமர்ந்திருந்த பிறந்ததில் இருந்தே பார்வையற்று இருந்த மகளை நினைத்து கவலையுடன் பேசினாள் அனுசுயா.

அவளின் கையை இதமாகப் பிடித்துக் கொண்ட சத்யா, “கவலைபடாதீங்க மேடம். ஆரம்பத்தில் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். போக, போக அவளே எல்லாத்தையும் விரும்பி கத்துக்குவா. அங்கே டீச்சர்ஸ் எல்லாருமே நல்ல மாதிரி. பக்குவமா பார்த்துப்பாங்க…” என்று ஆறுதலாகச் சொன்னாள்.

“என்னை மேடம்னு எல்லாம் கூப்பிடாதீங்க சத்யா. சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க…” என்று உரிமையுடன் சொன்னாள் அனுசுயா.

“இல்லை நீங்க என்னை விட எப்படியும் பெரியவங்களா தான் இருப்பீங்க…” என்று சத்யா தயங்க, “என்ன ஒரு இரண்டு வயசு பெரியவளா இருப்பேன். பரவாயில்லை சத்யா அனுனே கூப்பிடுங்க. மேடம்னு கூப்பிட்டா வித்தியாசமா இருக்கு…” என்றாள்.

அவள் அப்படிச் சொன்ன பிறகும் சத்யாவிற்குத் தயக்கமாக இருக்க, “அது எப்படி?” என்றாள்.

“இந்தத் தயக்கமே தேவை இல்லை சத்யா. அக்கானு எல்லாம் கூப்பிட்டுறாதீங்க. பேர் சொல்லியே கூப்பிடுங்க…” என்றாள் அனு.

தயங்கினாலும் “சரி அனு…” என்று தன் சம்மதத்தைச் சொன்னாள் சத்யா.

“ஹ்ம்ம்…! இது ஓகே…” என்று அனு சொல்லிக் கொண்டிருக்கும் போது, “என்ன அனு உன் வயசை குறைக்க ஐடியா பண்ற போல?” என்று கேட்ட படி வந்த கணவனைப் பார்த்துச் செல்லமாக முறைத்தாள்.

“என் வயசை குறைச்சா மூக்குல வேர்த்த மாதிரி வந்துருவீங்களே…”

“மூக்கு இல்லமா… காதுல வேர்த்த மாதிரின்னு சொல்லு. நீ வயசை குறைக்கப் பேர் சொல்லி கூப்பிட சொன்னது காதில் விழவும் வந்துட்டேன்…” என்று சொல்லி சிரித்தான்.

அதில் இன்னும் அனு அவனை முறைக்க, அவர்களின் பேச்சை கேட்டு சிரித்தாள் சத்யா.

தந்தை அருகில் இருக்கவும் “அப்பா தூக்குங்க…” என்று தந்தையின் குரல் வந்த திசையை நோக்கி கையை நீட்டினாள் இனியா.

“வாடா குட்டிமா…” என்று அவனும் அவளைக் கைகளில் அள்ளிக் கொள்ள, தந்தையின் தோளில் சாய்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“அனு உன் அண்ணா கூப்பிட்டார் வா…!” என்று ஸ்ரீதர் அழைக்க, “இதோ வந்துடுறேன் சத்யா…” என்று அவளிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் அனுசுயா.

அவர்களுக்குள் ஏதோ பேசிய படி சென்ற தம்பதிகளைப் பார்த்த வசந்தாவின் பார்வையைக் கண்டு விட்டு, “இவரை மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாங்க கொடுத்து வச்சுருக்கணும். இனியாவுக்குப் பார்வை தெரியலைன்னு சொல்லவும், எங்க மனசே உடைஞ்சு போயிருச்சு. அதை ஜீரணிக்கிறதுக்கு முன்னாடி மாப்பிள்ளையோட அப்பா, அம்மா இப்படிக் குறை உள்ள பிள்ளை பெத்த உன் பொண்டாட்டி வேணாம். வெட்டி விட்டுட்டு வந்துரு, உனக்கு வேற கல்யாணம் முடிச்சு வைக்கிறேன்னு சொல்லிட்டாங்க.

“அய்யோ…! பொண்ணோட வாழ்க்கையும் போயிருச்சான்னு எங்களுக்கு உயிரே போன மாதிரி ஆகிடுச்சு. ஆனா மாப்பிள்ளை அப்படியெல்லாம் என் பொண்டாட்டியை விடமாட்டேன். வேற பொண்ணு மூலமா பிறக்குற குழந்தையும் ஊனமா பிறந்தா அவளையும் வெட்டி விடுவீங்களா? எனக்கு அனுசுயாவே போதும். இனி இப்படிப் பேசாதீங்கனு சொல்லிட்டார். ஆனா அவரோட பெத்தவங்களுக்கு மனசு ஆறலை.

“அப்போ பிள்ளையை எங்கயாவது விட்டுடு.. வேற ஒரு பிள்ளை பெத்துக்கோ. இந்த மாதிரி ஒரு பிள்ளை வேண்டாம்னு மகனை நச்சரிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா மாப்பிள்ளை கொஞ்சமும் அசைந்து கொடுக்கலை. குறையுள்ள பிள்ளையா இருந்தாலும் அது என் பிள்ளை. என் ரத்தம்! என் பிள்ளைக்கு அப்பா, அம்மா நாங்க உயிரோடு இருக்கும் போது நாங்க ஏன் எங்கயோ கொண்டு போய் விடணும்னு அப்பா, அம்மா கூடச் சண்டை போட்டார்.

“அதில் அவங்களுக்குச் செம கோபம். அதனால நீங்க இனி எங்க கூட இருக்க வேண்டாம், தனியா போயிருங்கனு சொல்லிட்டாங்க. மாப்பிள்ளையும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் மகளை நல்லபடியா கவனிப்போம்னு எங்க அனுவை கூட்டிக்கிட்டுத் தனிக் குடித்தனம் போய்ட்டார். இன்னும் அவங்க கோபம் தீரலை. பிள்ளையைப் பார்த்து ஆரம்பத்தில் ரொம்பக் கஷ்டமா இருந்தது. இப்போ கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு உள்ளதை ஏத்துக்கப் பழகிட்டோம்…” என்று சொல்லி பெருமூச்சு விட்டார் சாவித்திரி.

“உங்க மனநிலை புரியுதுங்க. நாங்களும் அந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டி தானே வந்திருக்கோம்…” என்று சத்யாவை பார்வையால் தழுவிக்கொண்டே சொன்னார் வசந்தா.

“சத்யாவை நல்லா வளர்த்திருக்கீங்க. எங்க தர்மா சத்யாவை பற்றி நிறையச் சொன்னான்…” என்று தானும் அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னார் சாவித்திரி.

அவர் சொன்னது சத்யாவின் காதிலும் விழ ‘என்னைப் பற்றி அப்படி என்ன சொல்லிருப்பார்?’ என்று அவளின் எண்ணம் ஓடியது.

அவளை மேலும் சிந்தனையில் ஆழ்த்த விடாமல், “வாங்க சத்யா ஆரம்பிச்சிடலாம். நீங்களும் வாங்க…” என்று தன் உறவுகளையும், அவளின் உறவுகளையும் அழைத்தான்.

“வாமா சத்யா…” என்று தானே கையைப் பிடித்து அவளை அழைத்துப் போனார் சாவித்திரி.

காரின் அருகில் போனதும் “தர்மா சார் பெரியவங்க அம்மா இருக்காங்க. அவங்களை…” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள் சத்யா. அவனின் பெற்றவர்களே அருகிலிருக்கும் போது தன்னைப் போய்ச் செய்யச் சொல்கிறானே என்று தயங்கினாள்.

“ஷ்ஷ்… சத்யா நீ தான் செய்யணும். வேற பேசாதே…!” சாவித்திரி உரிமையுடன் அதட்ட, “ஆமாமா சத்யா… பெத்தவங்களை வச்சுக்கிட்டு உன்னைச் செய்யச் சொல்றான்னு தயங்காதே. நீ தான் செய்யணும்னு நாங்க முடிவு பண்ணி தான் விழா ஏற்பாடு பண்ணினோம். தயங்காம செய்…!” என்று நீலகண்டனும் சொன்னார்.

“அம்மா, அப்பாவே சொல்லியாச்சு. இன்னும் தயங்குவியா சத்யா? இந்தா பிடி…! இங்க இருக்கு ரிப்பன். கட் பண்ணு…!” அவளின் அருகில் நின்றிருந்த தர்மா அவளின் கையைப் பிடித்துக் கத்தரிக்கோலை கொடுத்தான்.

அவனின் கை தீண்டலில் நொடி பொழுது உறைந்தாள் சத்யா. பின்பு சுதாரித்து இன்னொரு கையால் ரிப்பனை தேட, அந்தக் கையையும் தானே பிடித்து ரிப்பன் மேல் வைத்து பிடிக்க வைத்தவன், கையை எடுக்காமல் அவளின் கை மேலேயே தன் கையையும் வைத்துக்கொண்டான்.

அவனின் பிடியில் இருந்த அவளின் கையில் மெல்லிய சிலிர்ப்பு ஓடி மறைந்தது. அதை உணர்ந்த தர்மாவின் அதரங்களில் மென் புன்னகை பூத்தது.

அவள் தாமதிப்பதை கண்டு அவளின் கையில் சிறு அழுத்தம் கொடுக்க, காரை சுற்றிலும் கட்டியிருந்த ரிப்பனை வெட்டினாள்.

அனைவரும் கைதட்ட, தானும் அவளின் கையை விட்டுட்டுக் கை தட்டிய தர்மா அவளின் கையில் இருந்த கத்தரிக்கோலை வாங்கிச் சிவாவிடம் கொடுத்தான்.

அவனின் கை பட்ட இடமே இன்னும் துறுதுறுவென இருப்பது போல உணர்ந்தாள் சத்யா. ‘இத்தனை பேர் சுற்றி இருக்க எந்தத் தைரியத்தில் கையைப் பிடித்தான்? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? இல்ல அவன் சாதாரணமாக உதவும் நோக்கோடு பிடித்து அதைத் தாம் தான் தவறாக எடுத்துக் கொண்டோமா?’ மீண்டும் அவளின் குழம்பும் வேலையைக் கச்சிதமாக ஆரம்பித்தவளை நிறுத்த அமுதா பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள். அவள் தன் மகனுடன் வந்திருக்கக் குழந்தையுடன் பேச ஆரம்பிக்கவும் சத்யாவின் கவனம் திரும்பியது.

தர்மா ஏற்கனவே விளம்பரப்படுத்தி இருந்ததால் ஒருவர் ஆர்வமுடன் வகுப்பில் சேர முன் கூட்டியே விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். அவரை இன்று வர வைத்து முதல் வகுப்பு அவருக்கு எடுக்கத் தர்மா ஏற்பாடு செய்திருந்ததால் விழாவிற்கு வந்திருந்தவர்களைக் கவனிக்கும் பொறுப்பைத் தந்தையிடமும், ஸ்ரீதரிடமும் ஒப்படைத்து விட்டு தானே அவருக்குக் கற்றுக் கொடுக்கக் கிளம்பினான்.

கிளம்பும் முன் சத்யாவிடம் வந்தவன் “சத்யா பர்ஸ்ட் கிளாஸ் எடுக்கக் கிளம்புறேன். விழாவில் கலந்துகிட்டதுக்கு நன்றி எல்லாம் சொல்லி உன்னை அந்நிய ஆளா ஆக்க மாட்டேன். இன்னைக்கு உன் வருகையில் நான் ரொம்பச் சந்தோசமா இருக்கேன். அதே சந்தோஷத்தோடு கிளம்புறேன். வர்றேன் சத்யா…” என்றான்.

அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்யாவினுள் இனம் புரியாத பரவசத்தை உண்டு பண்ணியது. மலர்ந்த முகத்துடன் “போய்ட்டு வாங்க தர்மா சார்…” என்றாள்.

அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

ஓட்டுநர் பயிற்சி எடுக்க வந்த மாற்றுத் திறனாளிக்கு போலியாவால் இரண்டு கால்களும் செயலிழந்து இருக்க, தர்மாவின் வழிகாட்டுதலின் படி அவரின் உறவினர்கள் அவரைக் காரில் அமர வைக்க உதவினர்.

காரில் அமர்ந்ததும் அந்த நபரின் முகத்தில் வந்து போன கலவையான உணர்வுகள் அங்கிருந்தோரையும் நெகிழ்த்தியது.

கண்கள் லேசாகக் கலங்க காரின் ஸ்டேரிங்கை ஆசையுடன் தடவி விட்டார். அவர் மனம் புரிந்தவன் போல் அதை அமைதியான சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் தர்மா.

பின்பு காரை இயக்குவதற்கு முன் அவர் எப்படிக் காரை இயக்க வேண்டும். எந்தெந்த பார்ட்ஸ் எங்கே இருக்கின்றன. அதனின் தேவைகள் பயன்பாடுகள் என்ன என்று விளக்கி சொன்னவன் “இப்போ ஸ்டார்ட் பண்ணலாமா செந்தில்?” என்று கேட்டான்.

“பண்ணலாம் சார்…” என்று சந்தோஷத்துடன் செந்தில் சொல்ல, காரை இயக்க வைத்து எப்படி ஓட்ட வேண்டும் சொல்ல, செந்தில் அதைச் செய்யக் கார் மெல்ல நகர்ந்தது.

அதில் அங்கிருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்த முதல் வகுப்பு சிறப்பாக ஆரம்பம் ஆகியது.

“சார் ரொம்ப ஹேரிங் சத்யா. சின்னச் சின்ன விஷயத்தில் கூடக் கவனம் வைத்து நல்லா செய்றார். நல்ல இடமா வேலைக்குச் சேர்ந்துருக்கேன்னு திருப்தியா இருக்கு…” என்று அமுதா சொல்ல, அவனைப் பாராட்டியதில் தன்னையே பாராட்டியது போல மகிழ்ந்து போனாள் சத்யவேணி.

அப்போது அங்கே வந்த அனுசுயா “அண்ணா எப்பவும் அப்படித்தான். எதைச் செய்தாலும் பொறுப்பா செய்வான். வேலையில் மட்டும் இல்லை. குடும்பத்திலும் பார்த்து பார்த்து செய்வான்…” என்று தன் அண்ணனின் பெருமையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

மேலும் சிறிது நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருக்க, சத்யாவின் அருகில் வந்த வசந்தா “நாம கிளம்புவோமா சத்யா? அப்பா கடையைத் திறக்க போகணும்னு சொல்றார்…” என்றழைத்தார்.

“போகலாம் மா…” என்றவள் தர்மாவின் குடும்பத்தாரிடம் விடைப் பெற்று கிளம்பினாள்.

தியாகராஜன் அங்கிருந்தே கடையைத் திறக்க சென்று விட, சத்யா, வசந்தா, கார்த்திகா மூவரும் வீட்டிற்கு வந்தார்கள்.

வசந்தா மெழுகுவர்த்திச் செய்யும் வேலையை ஆரம்பிக்க, கார்த்திகா படிக்க அமர்ந்தாள். சத்யாவிற்குச் செய்ய எதுவும் இல்லாமல் போகத் தர்மாவின் நினைவில் மூழ்கினாள்.

அவளுக்கு அவன் கொடுத்த முக்கியத்துவம், தன் குடும்பத்தாரிடம் அவன் பண்புடன் நடந்து கொண்ட முறை எல்லாம் அவளுக்கு ஒருவித மன நிறைவை தந்து கொண்டிருந்தது.

அவன் மட்டும் இல்லாமல் அவனின் குடும்பத்தாரும் எப்படிப் பார்த்த சிறிது நேரத்திலேயே தங்களை ஏதோ வெகுநாட்கள் பழகியவர்கள் போல் ஏற்றுக் கொண்டார்கள்? தங்களை வைத்துத் திறப்பு நடத்தாமல் யாரோ ஒரு பெண்ணை வைத்துத் திறப்பு விழா நடத்துகிறான் என்று கோபம் கொள்ளாமல் மகனின் செயலை இயல்பாக ஏற்றுக் கொண்ட பாங்கு மகனின் வார்த்தைக்கு மரியாதை கொடுப்பவர்கள் என்பதைப் புரிய வைத்தது.

எல்லாவற்றையும் சுற்றி விட்டு இனியாவின் நினைவில் வந்து நின்றது அவளின் மனம். பாவம் குழந்தை அவளுக்கு ஏன் இந்தத் துன்பத்தைக் கடவுள் கொடுத்தார்?

தன்னைப் போலவே அவளுக்கும் ஒரு போராட்ட வாழ்க்கை காத்திருக்கின்றது என்று நினைக்கும் போது மனம் வலிக்க ஆரம்பித்தது. இனியாவைப் போல அன்றாடம் எத்தனையோ பிள்ளைகளைப் பார்ப்பவள் தான் என்றாலும் தர்மாவின் உறவு என்பதாலோ என்னவோ இனியாவை நினைத்து மிகவும் வருந்தினாள்.

‘இந்தத் தர்மா சார் இனியாவை பற்றி நம்மிடம் எதுவுமே சொல்லவில்லையே… ஏன்?’ என்ற கேள்வி வந்து அவளின் நினைவின் முடிவில் வந்து நின்றது.

அதைப் பற்றி அடுத்த முறை அவனைப் பார்க்கும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.