10 – சிந்தையில் பதிந்த சித்திரமே

அத்தியாயம் – 10

காலையில் எழும் போதே இன்ப படபடப்பும், இனிய நினைவுகளுமாகக் கண்விழித்தாள் நயனிகா.

அவளின் மனம் இனம் புரியா உணர்வில் உவகைக் கொண்டது.

அவளுள் எழுந்த உணர்வுகளுக்குக் காதல் என்று பெயர் சூட்டிக் கொண்ட கன்னியவள் கண்விழித்த பிறகும் கனவில் மிதந்தாள்.

கதிர்நிலவனின் முகமே அவள் மனம் முழுவதும் ஆட்கொண்டு அவளை ஆட்டுவிக்க ஆரம்பித்தது.

அவளை ஆட்டுவித்த காதல் உணர்வுகள் உடனே எழுந்து உடையவனைச் சென்று பார் என்று ஆணையிட, படுக்கையை விட்டு உற்சாகமாக எழுந்தாள்.

குளியலறைக்குள் நுழைந்து காலை வேலைகளை முடித்து விட்டு, தலைக்குக் குளித்துவிட்டு வெளியே வந்தாள்.

அவனுக்கு என்ன நிறம் பிடிக்கும் என்று கண்ணாடியின் முன் நின்று யோசித்தாள்.

அவன் அடிக்கடி கடல் நீலநிறத்தில் சட்டை அணிவதை நினைவிற்குக் கொண்டு வந்தவள், அலமாரியில் இருந்து அதே வண்ணத்தில் ஒரு சல்வாரை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.

உடையை மாற்றி விட்டு, ஈரம் சொட்டிய தலையைத் துண்டால் உலர்த்தி விட்டு, தளர்வாகப் பின்னி கொண்டாள்.

கண்ணாடியின் முன் அப்படியும், இப்படியுமாகத் திருப்பித் தன்னைப் பார்த்துக் கொண்டவள் ஏதோ குறைந்தது போல் உணர்ந்தாள்.

முகத்திற்கு லேசாகப் பவுடர் போட்டுக் கொண்டவள், ஒரு சிறிய பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிக் கொண்டாள்.

ஒரு டாலர் வைத்த மெல்லிய செயினைக் கழுத்தில் மாட்டி விட்டு இப்போது கண்ணாடியை பார்த்தவளுக்குத் திருப்தியாக இருந்தது.

இதற்கு முன்பும் இது போல் லேசான அலங்காரம் செய்து கொள்வாள் தான்.

ஆனால் இன்றோ தன் மனம் கவர்ந்தவனைப் பார்க்க போகிறோம் என்ற மெலிதான படபடப்புடன் அலங்காரம் செய்து கொண்டவளுக்கு உள்ளுக்குள் ஒருவித இன்ப அவஸ்தை உண்டானது.

தனக்குள் தோன்றிய அந்த இன்ப உணர்வை தன்னாலேயே தாங்க முடியாதவள் போல் கீழ் உதட்டை மென்மையாகக் கடித்துக் கொண்டாள்.

காதல் உணர்வுகளும், கனவுகளில் மிதந்த விழிகளுமாக அறையை விட்டு வெளியே சென்றாள்.

“என்னடி இது அதிசயமா இருக்கு. லீவ் நாளில் ஒன்பது மணி வரை எழ மாட்டேன்னு அடம் பிடிப்ப. இன்னைக்கு என்ன ஒன்பது மணிக்குள்ள குளிச்சி தயாராகியே வந்துட்ட? எங்கயாவது வெளியே போறீயா என்ன?” என்று கேட்டார் அபிராமி.

“வெளியில் எல்லாம் எங்கேயும் போகலைமா. சும்மா தான் தலைக்கு ஊத்தணும் போல இருந்தது ஊத்திட்டேன்…” என்றவள் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தாள்.

அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவள் மனமெல்லாம் கதிர்நிலவன் தான் இருந்தான்.

அவனை உடனே சென்று பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு கிளர்ந்து எழுந்தாலும் காரணம் இல்லாமல் சென்று பார்க்க முடியாதே என்ற தவிப்பையும் உண்டாக்கியது.

யோசனையுடன் நகத்தைக் கடித்தபடி அமர்ந்துவிட்டாள்.

“என்னடி யோசனை? இந்தா இட்லி சூடா இருக்கு சாப்பிடு…” என்று காலை உணவை வைத்தார் அபிராமி.

“தயாவை எங்கம்மா காணோம்?”

“அவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கிரிக்கெட் விளையாட போறேன்னு போனான்…”

“சாப்டானா?”

“சாப்பிட்டு தான் போனான். இனி மதியம் சாப்பிடும் நேரத்துக்குத் தான் வருவான். லீவ் விட்டாலே அவனை வீட்டில் பிடிச்சு வைக்க முடிய மாட்டேங்குது…” என்று புலம்பி கொண்டார்.

அன்னையிடம் பேசிக்கொண்டே உண்டு முடித்தவள், “அம்மா, நான் அடுத்து என்ன படிக்கிறதுன்னு கதிர் சார்க்கிட்ட ஒரு ஐடியா கேட்கலாம்னு இருக்கேன். போயிட்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

“நீ தான் அடுத்து எம்எஸ்ஸி பண்ணிட்டு பேங்க் எக்ஸாம் எழுத போறேன்னு சொன்னியே?” என்று கேட்டார்.

“இப்ப எனக்கு அது கொஞ்சம் குழப்பமா இருக்குமா. அதான் அவர்கிட்ட கேட்டால் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்னு நினைக்கிறேன்…” என்றாள்.

“ம்ம் சரி, போய்க் கேட்டுட்டு வா…” என்று அன்னை அனுமதி கொடுத்ததும் உள்ளுக்குள் கொண்டாட்டமாக உணர்ந்தாள்.

சற்று நேரத்தில் மகிழ்ச்சி பொங்கிய உள்ளத்துடன் கதிர்நிலவனின் வீட்டின் அழைப்புமணியை அழுத்தினாள்.

கதவை திறந்தவன் காலையிலேயே தன் வீட்டின் முன் வந்து நின்றவளை கேள்வியாகப் பார்த்தான்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று அவன் கண்களை நேராகப் பார்க்க தயங்கி, லேசாகக் குனிந்தபடி கேட்டாள்.

“என்ன நயனிகா?”

“உள்ளே போய்ப் பேசலாமே…” என்றாள்.

“ம்ம், உள்ளே வா. உட்கார்…” என்று சோஃபாவை காட்டினான்.

டீப்பாய் மீது சில பேப்பரும், புத்தகங்களுமாகக் கிடக்க, அதைப் பார்த்துக் கொண்டே சென்று அமர்ந்தாள்.

“சொல்லு நயனிகா, என்ன பேசணும்?” என்றவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் டீப்பாய் மீதிருந்த புத்தகத்தை எடுத்தவள், “இது நீங்க படிக்கிற புக்கா?” என்று கேட்டாள்.

“ம்ம் ஆமா, பிஹைச்டி பண்ணிட்டு இருக்கேன். அதுக்கான புக் தான். எக்ஸாம் வருது, படிக்கணும்…” என்றான்.

“ஓ, சூப்பர்! வாழ்த்துகள்!” என்றாள்.

“தேங்க்யூ. சரி சொல்லு நயனிகா, என்ன விஷயம்?”

“நான் அடுத்து படிக்கிறதை பத்தி ஐடியா கேட்க வந்தேன்…”

“நீ என்ன படிக்க ஆசைப்படுற?”

“நான் முதலில் யூஜி முடிச்சுட்டு பேங்க் எக்ஸாம் எழுதலாம்னு இருந்தேன். ஆனா…”

“ம்ம், நல்ல ஐடியா தான். அதில் இப்ப என்ன சந்தேகம் உனக்கு?”

“ஆனா எனக்கு இப்ப உங்க கூடவே வேலை பார்க்கணும்னு ஆசையா இருக்கு…” என்றாள் கனவுகளுடன்.

“வாட்!” என்ற அவனின் அதிர்வில் சுதாரித்தவள்,

“ஐ மீன் உங்களை மாதிரி லெக்சரர் ஆகணும்னு ஆசை வருது…” என்று தடுமாறிய படி சொன்னவளை வித்தியாசமாகப் பார்த்தான்.

அவளோ அவனைப் பார்க்க வேண்டும் என்று வந்துவிட்டாலும் புதிதாக மனதில் புகுந்த கள்ளம் அவளை இயல்பாக இருக்க விடாமல் தடுமாற வைக்க, அவன் கண்களை நேராகச் சந்திக்காமலேயே பேசினாள்.

“ஏன் திடீர்ன்னு ஆசை மாறிடுச்சு?” என்று கேட்டான்.

“திடீர்னு எல்லாம் இல்லை. கொஞ்ச நாளாவே அந்த ஆசை இருக்கு…” என்றாள்.

தனக்கு நேற்று இரவு தான் அந்த ஆசை தோன்றியதை சொன்னால் அவனின் கேள்விகள் நீளும் என்று நினைத்தவள் மாற்றிச் சொன்னாள்.

“உனக்கு அது தான் ஆசைனா அதுவே படி. ஆனா வெறும் யூஜி மட்டுமா? அதுக்கு மேல என்ன படிக்கப் போற? பிஹைச்டி எதுவும் பண்ண போறீயா?” என்று கேட்டான்.

அவளோ அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென முழித்தாள். அது எல்லாம் அவள் யோசிக்கவே இல்லாத போது அவனுக்கு என்னவென்று பதில் சொல்லுவாள்.

அவன் கேள்வியிலிருந்து தப்பிக்கும் மார்க்கமாக அப்போது அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிர்பக்கமாக இருந்த ஒன்றை பார்த்து வேகமாக எழுந்தவள், “வாவ்! நீங்க படம் எல்லாம் வரைவீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அங்கே நிறுத்தி வைத்திருந்த பலகையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தின் அருகில் சென்று நின்றாள்.

அதில் ஒரு இயற்கை காட்சி படம் முக்கால்பாகம் வரையப்பட்டிருந்தது.

பலகையின் அருகில் பெயிண்ட்டும், பிரசும் ஒரு ஸ்டூலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

“இன்னும் வரைஞ்சு முடிக்கலையா? இதுவரை வரைஞ்சதே ரொம்ப அருமையா இருக்கு…” என்று குதூகலத்துடன் சொன்னாள்.

“ம்ம், இன்னும் வரையணும். படிக்கும் போது ரொம்ப ஸ்ட்ரெஸா இருந்தால் மீதியை வரைவேன்…” என்றான்.

“ஆசம்! உங்களுக்குள் இப்படி ஒரு திறமை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இயற்கை காட்சிகள் மட்டும் தான் வரைவீங்களா? இல்ல மனித உருவங்களும் வரைவீங்களா?” என்று கேட்டாள்.

“அதோ அங்கே பார்…” என்று கதிர்நிலவன் ஒரு ஓவிய புகைப்படத்தைக் காட்ட, அதில் கண்களில் சாந்தமும், முகத்தில் தெய்வீக களையும் தாண்டவமாட ஒரு பெண்மணி சிரித்துக் கொண்டிருந்தார்.

“வாவ்! இதுவும் நீங்க வரைஞ்சது தானா? ஆமா, யார் இவங்க?” என்று கேட்டாள்.

“அம்மா…” என்றான் அன்பு மிதந்த குரலில்.

“இவங்க தான் உங்க அம்மாவா? ரொம்ப அழகா இருக்காங்க…” என்றவள் கண்ணாடி சட்டம் மாட்டியிருந்த அந்த ஓவிய புகைப்படத்தை ஒற்றை விரலால் லேசாக வருடினாள்.

“ம்ம், அவங்க மனசும் ரொம்ப அழகு…” என்றான் கதிர்நிலவன்.

அவனின் அம்மாவின் மீது அவனுக்கு இருக்கும் அதீத அன்பை நேற்றே புரிந்து கொண்டவளுக்கு அவன் தன் அம்மாவைப் பற்றிப் பேசும் போது அவனிடம் தெரியும் நெகிழ்வையும் புரிந்து கொள்ள முடிந்தது.

“அம்மாவோட இந்த ஓவியம் எப்போ வரைஞ்சீங்க?”

“போன மாதம் அம்மாவோட நினைவு நாள் வந்தது. அப்போ வரைஞ்சேன்…” என்றான்.

“ஓ! ஒருத்தரை நேரில் பார்க்காமலேயே வரைவீங்களா?” ஆச்சரியம் பொங்க கேட்டாள்.

“எல்லாரையும் வரைய முடியாது. அவங்க முகம் நம்ம மனதில் பதியணும். அப்போ தான் வரைய முடியும். எனக்கு அம்மாவோட உருவம் இதோ இங்க இருக்கு…” என்று தன் நெஞ்சத்தைத் தொட்டுக் காட்டினான்.

“அப்போ என்னையும் வரைஞ்சு தாங்களேன்…” என்று பட்டென்று ஆசையாகக் கேட்டாள்.

“உன் போட்டோ ஏதாவது கொடு. நேரம் இருக்கும் போது வரைய ட்ரை பண்றேன்…” என்று அவன் சொன்னதும் அவளின் முகம் சுருங்கிப் போனது.

அவர் மனதில் தான் இருந்திருந்தால் தன்னிடம் புகைப்படம் கேட்டுருக்க மாட்டாரே. அவரின் மனதில் விரைவில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

“ம்ம்…” என்று அவனுக்கு மறுமொழியாக முனங்கினாளே தவிர, புகைப்படம் தருகிறேன் என்று சொல்லவில்லை.

“சரி வேற?” என்று கேட்டான்.

“ஓகே, நான் வர்றேன்…” என்று கிளம்பிவிட்டாள்.

வீட்டிற்குச் சென்றவளின் மனது சுணங்கி போனது.

தன்னைப் பார்த்து தான் வரைய முடியும் என்று சொல்லிவிட்டாரே என்று அதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

தன் மனதை கவர்ந்தவனின் மனதை தான் இன்னும் கவரவில்லை என்று புத்திக்குப் புரிந்தாலும் அதை அவளின் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

அன்று முழுவதும் ஏதாவது ஒரு வழியில் அவனைப் பார்க்க துடித்துக் கொண்டே இருந்தாள்.

காலையில் பார்த்தது மட்டும் அவளுக்குப் போதவே இல்லை. மீண்டும் மீண்டும் அவன் வீட்டிற்கும் செல்ல முடியாது என்பதால் அவன் வீட்டை விட்டு வெளியே வருவானா என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அடிக்கடி தன் வீட்டுக் கதவை திறந்து எதிர் வீட்டுக் கதவை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதிர்நிலவன் அன்று முழுவதும் படிப்பதில் மூழ்கி இருந்ததால் வெளியே வரவே இல்லை.

அதில் ஏமாற்றத்துடன் காலை உதைத்துக் கொண்டாள்.

அவளுக்கு உதவுவது போல் அன்று மதியம் போல் போன மின்சாரம் மாலை வரையில் வரவில்லை.

அதனால் தன் படுக்கையறை ஜன்னல் அருகே இருந்த மேஜையின் மீது அமர்ந்து காற்றுக்காக ஜன்னலின் கண்ணாடி கதவையும் திறந்து வைத்துப் படிக்க ஆரம்பித்தான் கதிர்நிலவன்.

அவனை அங்கே கண்டதும் அவளின் மனது குதூகலித்தது. அவனை ஓரப்பார்வையாகப் பார்த்தவண்ணமே அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாக நடைபயின்றாள்.

“ஒரு இடத்தில் உட்காரேன்டி?” என்று அபிராமி அதட்டவே ஆரம்பிக்க,

“வீட்டுக்குள்ள ஒரே புழுக்கமா இருக்குமா…” என்றவள் தன் நடையை மட்டும் நிறுத்தவே இல்லை.

தான் செய்வது எல்லாம் கிறுக்குத்தனமாகவே தோன்றினாலும் அதிலும் அவளின் மனம் உல்லாசமாக மாறுவதை உணர்ந்தவள் தன் கிறுக்குத்தனத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவளை ஜன்னல் வழியாகப் பார்த்தாலும் கதிர்நிலவன் அதைப் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல் படிப்பில் மூழ்கி போனான்.

‘பெரிய படிப்ஷா இருக்காரே. இவரின் கவனத்தை என் பக்கம் திருப்புவது கஷ்டம் தானோ?’ என்று கவலைப்பட்டுக் கொண்டாள் நயனிகா.

‘இப்போது தானே நானே காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவர் தன்னைக் காதலிக்க இன்னும் நாட்கள் ஆகத்தான் செய்யும்’ என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.

அன்று இரவு கதிர்நிலவன் மொட்டை மாடிக்குச் செல்லும் நேரத்திற்காகக் காத்திருந்தவள் அவன் ஏறி சென்ற பின் சிறிது இடைவெளி விட்டு தானும் சென்றாள்.

நடைபயின்று கொண்டிருந்தவன், அவளைக் கண்டதும் சட்டென்று நடையை நிறுத்தினான்.

“என்ன நயனிகா?” என்று கேட்டான்.

“நானும் நடக்க வந்தேன்…” என்று அவள் சொல்ல, அவனோ சங்கடமாக நின்றான்.

எப்போதும் அவள் மாடிக்கு வந்து விட்டால் அவன் கீழே இறங்கி சென்று விடுவான்.

வயது பெண் என்பதால் அவளுடன் தனியாக அங்கே நிற்க மாட்டான்.

அவள் தன் வீட்டிற்கு வந்தால் கூட அவள் செல்லும் வரை அவன் வீட்டு கதவை திறந்து தான் வைத்திருப்பான்.

அதோடு அன்று மாடியில் அவள் அழுததால் மட்டுமே அவளிடம் தனியாக வந்து பேச்சுக் கொடுத்தான்.

ஆனால் இன்றோ எந்தக் காரணமும் இல்லாமல் அவனும் அங்கே நடைபயில விரும்பவில்லை.

“ஓகே, நட!” என்றவன் தான் கீழே செல்ல படியின் பக்கம் சென்றான்.

“நீங்க ஏன் போறீங்க? ஏன் நான் இருந்தால் நீங்க நடக்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

“அப்படி இல்லை நயனிகா. நாம இரண்டு பேரும் தனியா இங்கே இருப்பது சரியில்லை. தேவையில்லாத பேச்சுக்கள் எழும். நீ இரு. நான் இன்னைக்குக் கீழே போய் நடந்துகிறேன்…” என்றான்.

“அட! என்ன நீங்க இப்படிப் பண்றீங்க? அப்படி யார் என்ன பேசிடுவாங்கன்னு பயப்படுறீங்க? அதெல்லாம் யாரும் எதுவும் பேசமாட்டாங்க. நீங்களும் இங்கேயே நடக்கலாம். இப்ப மேலே தயா வருவான். அதனால் கவலைப்படாமல் நடங்க…” என்றாள்.

அவளிடம் மறுப்பாக ஏதோ சொல்ல வாயை திறந்த கதிர்நிலவன் அப்போது தான் அவளின் பேச்சில் இருந்த வேறுபாட்டைக் கவனித்தான்.

அவளின் குரலில் ஒருவித உரிமை தொனித்ததை உணர்ந்தான். அதனுடன் எப்போதும் சார்… சார்… என்று அழைத்துப் பேசுபவள் இப்போதோ சார் என்று சொல்லவே இல்லை. இப்போது மட்டுமா? இன்று முழுவதுமா? என்று காலையிலிருந்து அவளுடன் நடந்த உரையாடலை எல்லாம் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தான்.

அவனின் நினைவில் காலையிலிருந்தே அவள் தன்னைச் சார் என்று அழைக்கவில்லை என்பது புரிந்து போனது.

அதனுடன் தன் கண் பார்த்தும் அவள் பேச தயங்கியதை நினைத்தவனின் முகம் மெல்ல மாற ஆரம்பித்தது.

இப்போதும் அவளைக் கவனிக்க, அவனின் முகத்தில் அவளின் பார்வை இருந்தாலும், தன் கண்களை அவள் விழிகள் சந்திக்கவே இல்லை என்பது புரிந்து போக, அவனின் முக மாற்றம் இப்போது கோபமாக மாற்றம் கொண்டது.

“எப்பவும் நான் இறங்கி போகும் போது தானே நீ மேலே வருவ. இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்ட?” என்று தன் கோபத்தை அடக்கிக் கொண்டு ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.

அவனின் குரல் மாறுபாட்டை உணராமல் அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்ற யோசனையில் தடுமாறி நின்றாள்.

“ம்ம் சொல் நயனிகா. எதுக்குச் சீக்கிரம் வந்த?” சொல்லாமல் விடமாட்டேன் என்ற பிடிவாதம் அவனிடம்.

“அது… அது… நீங்க மேல வந்ததை நான் கவனிக்கலை…” என்று சொன்ன போது அவளிடம் தெரிந்த திணறலே அவள் பொய் சொல்கிறாள் என்பதை அவனுக்கு எடுத்துரைக்கப் போதுமானதாக இருந்தது.

இத்தனை நாள் தன்னிடம் பழகிய நயனிகாவிற்கும், இன்று தன்னிடம் வேறு மாதிரி பழக விரும்பும் நயனிகாவிற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு விவரமற்றவன் அல்லவே?

அவளின் மாற்றமும், அவளின் வயது கோளாறும் நொடியில் பிடிப்பட்டுப் போக, அவனின் முகம் முற்றிலுமாக மாறி இறுகி போனது.

அதற்கு மேல் அவளிடம் நின்று பேச விருப்பம் இல்லாமல் அதிவேகமாக அங்கிருந்து நகர்ந்தான் கதிர்நிலவன்.