10 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 10

“எம் பேரன் நல்லவன். எந்தத் தப்பும் செய்ய மாட்டான்னு இறுமாப்பா திரிஞ்சேனே. அதுக்கு இம்புட்டு பெரிய இடியை எம் மேல இறக்கிப்புட்டானே. நா ஒரு பாதகத்தி அவன் மொத தடவ குடிச்சுப் போட்டு வந்த போதே, கன்னத்துல நாலு அப்பு அப்பியிருக்கணும். இப்ப அந்தக் குடி ஏ குடியையே கெடுத்துப் போடுச்சே. இதை நா எங்கன போயி சொல்லுவேன்…” என்று அப்பத்தாவின் புலம்பல் கேட்டு மெல்ல கண்விழித்தான் வைரவேல்.

அவனிடம் இன்னும் போதையின் அறிகுறித் தெரிந்தது. அப்பத்தா ஏதோ புலம்புகிறார் என்று புரிந்தாலும் என்ன புலம்புகிறார் என்று கூர்ந்து கவனிக்க முடியாத அளவிற்குப் புத்தி மழுங்கியிருந்தது.

தலை வேறு விண்ணென்று தெறிக்க, அவஸ்தையுடன் அந்தக் கயிற்றுக் கட்டிலில் புரண்டு படுத்தான்.

மூக்கை அழுத்தி சீந்தி முந்தானையில் துடைத்துக் கொண்ட அப்பத்தா தன் புலம்பலை தொடர்ந்தார்.

“வூரு பய மொத்தமும் கூத்து பார்க்குற மாதிரி பார்க்க வச்சுப்புட்டானே. இனி ஒவ்வொரு சிறுக்கியும் வூருக்குள்ளார நாக்குல நரம்பு இல்லாம பேசுவாளே. இவன் இப்படியா அவன் வாழ்க்கையை அவனே அழிச்சுக்குவான்? ஆத்தா, மகமாயி… என்னைய ஏன் இன்னும் உசுரோட வச்சுருக்க? இதை எல்லாம் என்னால கண் கொண்டு பார்க்க முடியலையே…” என்று அழுது ஒப்பாரி வைத்தார்.

“ம்ப்ச்… என்னாத்துக்கு இந்த அப்பத்தா இந்தப் புலம்பு புலம்புது?” என்று அவரின் புலம்பலில் தலைவலி கூடுவது போல் இருக்க, எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டான் வைரவேல்.

“பாரு ராவுல செய்து போட்டு வந்த காரியத்தோட வீரியம் கூடத் தெரியாம இப்படிப் போதைல உருண்டுக்கிட்டு கிடக்கானே…” என்று அப்பத்தாவின் சத்தம் உயர்ந்து ஒலித்தது.

“அப்படி என்னத்தைச் செய்தேன்? அன்னைக்கு போலச் சகதில கிடந்து உருண்டு போட்டு வந்தேனோ?” என்று நினைத்தவன், கனத்த தலையைச் சிரமமாகத் தூக்கி தன்னைத் தானே பார்த்துக் கொண்டான்.

அவனின் உடையில் கசங்கல் அதிகமாக இருந்தது. தேன்மலர் மீது தான் அவன் விழுந்தான் என்பதால் அவனின் உடையில் அவ்வளவாக மண் ஒட்டவில்லை.

அது அவனுக்கு ஞாபகத்தில் இல்லாததால், ‘சகதி ஒன்னும் இல்லையே. அப்புறம் என்னாத்துக்கு இந்த அப்பத்தா இந்தப் புலம்பு புலம்பணும்?’ என்று நினைத்துக் கொண்டான்.

“பொழுது விடிஞ்சிருச்சே. இப்ப இவன் மாமனார் வந்து போடுவாரே. அவருக்கு நா என்ன பதில் சொல்லுவேன்? அன்னைக்குப் பெரிய இவ மாதிரி இனி நா பார்த்துக்கிறேன்னு சவடால் விட்டேனே. இப்ப நீர் என்னத்தைப் பார்த்து கிழிச்சீர்னு நாக்கை புடுங்கிக்கிற மாதிரி கேட்பாரே…” என்று அப்பத்தாவின் குரலில் இப்போது பரிதவிப்பை உணர்ந்தவன் அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல் பட்டென்று எழுந்து அமர்ந்தான்.

‘எம் மாமனாரு வந்து கேள்வி கேட்பாரா? ஏன்? திரும்ப அந்தப் புள்ள வயலுல விழுந்து கிடந்து அவ கொண்டு வந்து விட்டுப்போட்டாளா?’ என்று அதிர்வுடன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

அப்படி நடந்து விடக்கூடாது என்று தான் சில நாட்கள் குடிக்காமல் இருந்தான். நேற்று தன்னுடைய திருமணத் தேதியை நாட்காட்டியில் பார்த்ததும் மனைவியின் நினைவு நெஞ்சை அரிக்க, அவளுக்குத் தான் கட்டிய தாலியை நெஞ்சோடு இருந்த சட்டைப்பையில் வைத்துக் கொண்டு திரிந்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

இரவு ஆனதும் தன் மனைவியுடன் எப்படி எல்லாம் அந்தத் தேதியில் வாழ்ந்தான் என்பது அவன் நினைக்காமலேயே மனதில் ஊர்வலம் போக, அதற்கு மேலே அந்த எண்ண தவிப்பில் தகித்துச் சாம்பலாகப் போகும் தன் உணர்வுகளைத் தணிக்கப் போதையை நாடி சென்றான்.

அதுவரை மட்டுமே அவனின் நினைவில் இருந்தது. உள்ளத் தகிப்பில் அன்று வழக்கத்தை விட அதிகமாகவே குடித்திருந்ததால் அதன்பிறகு நடந்த எதுவுமே அவனின் ஞாபகத்தில் இல்லை.

தான் நேற்று எதற்குக் குடித்தோம் என்பது ஞாபகத்தில் வந்ததும், மனைவியின் நினைவில் தன் சட்டைப் பையைத் தடவி பார்த்தான்.

அவன் சட்டைப் பையில் இருந்த மனைவியின் தாலி கையில் தட்டுப்படவில்லை என்றதும் பதறிப் போனான்.

‘படுத்திருக்கும் போது படுக்கையில் விழுந்து விட்டதா?’ என்று கட்டிலை விட்டு எழுந்து தேடிப் பார்த்தான்.

ஆனால் அது சேரவேண்டிய இடத்தில் சேர்ந்த பிறகு அவனின் தேடலுக்கு எப்படிப் பலன் கிடைக்குமாம்?

கட்டில் முழுவதும் பரபரப்பாகத் தேடியவனுக்குத் தாலி கிடைக்காமல் போக, வேஷ்டியையும் சட்டையையும் உதறி பார்த்தான்.

தன் டவுசர் பையில் வைத்து விட்டோமோ என்று நினைத்து இரண்டு பையிலும் தடவி பார்த்தான்.

எங்கேயும் கிடைக்கவில்லை என்றதும், கட்டிலை சுற்றி வந்து பார்த்தான். கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தான்.

ம்கூம், எங்கேயும் கிடைக்காமல் தேடி ஓய்ந்து போனவனின் கண்கள் கலங்கித்தான் போயின. தன் மனைவியின் தாலியை எங்கேயோ தொலைத்து விட்டோம் என்று புத்தியில் ஏற, அவனின் போதை முற்றிலும் அவனை விட்டு அகன்றுவிட்டது.

தலைவலி எல்லாம் எங்கோ ஓடி ஒளிய, கட்டிலை சுற்றி ஓடி ஓடி ஓய்ந்து போனான்.

அவன் செய்வதை அப்போது தான் கவனித்து, திண்ணையில் அமர்ந்திருந்த அப்பத்தா தன் புலம்பலை நிறுத்தி பேரனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்தவன் அவரிடம் ஓடினான்.

“அப்பத்தா, தொலைச்சுப் போட்டேன் அப்பத்தா. ஏ பொஞ்சாதி தாலியை தொலைச்சுப் போட்டேன் அப்பத்தா. நீர் எங்கனயாவது பார்த்தீரா?” சிவந்த கண்களில் துளிர்த்த நீருடனும், கலங்கிப் போன இதயத்துடனும் கேட்டு வைத்த பேரனை அதிர்ந்து பார்த்தார் அப்பத்தா.

“நல்லா இருக்குடே உம்ம கதை? எம் மவ தாலியை அந்தச் சிறுக்கி கழுத்துல கட்டிக்போட்டு, இப்ப ஒன்னுமறியாத பச்சை புள்ள போலப் பாசாங்கு பண்றீரோ?” என்று ஆத்திரமாகச் சொல்லியபடி அங்கே வந்தார் கோவிந்தன்.

“என்ன? தாலி கட்டிப் போட்டேனா… யாருக்கு?” நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து கேட்டான் வைரவேல்.

“எய்யா, ராவுல நடந்தது உமக்குக் கொஞ்சம் கூட நினைப்புல இல்லையா?” என்று திகைப்புடன் கேட்டார் அப்பத்தா.

“என்ன அப்பத்தா? என்ன நடந்துச்சு? இவரு என்ன சொல்றாரு?” மனமும், குரலும் நடுங்க கேட்டான்.

“என்ன ஆத்தா… அப்பத்தாவும், பேரனும் சேர்ந்து பம்மாத்து வேலை காட்டுறீகளோ? அந்தச் சிறுக்கி மவ இவரை இங்கன கொண்டாந்து விட்ட போதே இப்படி எதுவும் நடந்துட கூடாதுன்னு தேன் ஏ வூருக்கும், இந்த வூருக்கும் நடையா நடந்தேன். ஆனா கடைசில நா பயந்த மாதிரியே ஆகிப்போச்சே. எம் மவ எடத்துல அந்தச் சிறுக்கியா?” என்று ஆத்திரமும், கோபமும், வெறுப்புமாகக் கேட்ட மாமனாரை திகைத்துப் பார்த்தான்.

“மாமா என்ன சொல்றீக? நா எதுவும் பண்ணலை…” என்றான் வைரவேல்.

“எதுவும் பண்ணலையா? அதுதேன் வூரு சனமே பார்க்குற மாதிரி அந்தத் தோப்புக்காரி மவ கழுத்தில தாலி கட்டிப்போட்டீரே. இதுக்கு மேல பண்ண என்ன இருக்கு?” என்றார் வெறுப்புடன்.

“என்ன?” என்று அதிர்ந்தவன், சட்டென்று திண்ணையில் தளர்ந்து அமர்ந்து தலையில் கைவைத்தான்.

இரவு நடந்ததை நினைவடுக்கில் தேடிப் பார்த்தான். ஆனால் போதையின் வீரியம் நன்றாகவே வேலை செய்திருக்க, நனவுகளெல்லாம் எங்கோ ஒரு மூலையில் ஓடி ஒளிந்துக் கண்ணாமூச்சி ஆட, அவனின் நினைவடுக்கில் வந்து சேரவே இல்லை.

ஒன்றும் ஞாபகத்திற்கு வராமல் தலையைப் பிடித்துக் கொண்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“என்ன அப்பத்தா நடந்துச்சு? நா எப்படி அந்தப் புள்ள கழுத்துல போயி…” என்று சற்று நேரம் கழித்து மெல்லிய குரலில் விசாரித்தான்.

அப்பத்தா ஊர்காரர்கள் பேசிக் கொண்டதையும், அவன் அவள் கழுத்தில் தாலிக்கட்டியதை தான் நேரில் பார்த்ததையும் சொல்ல, சுத்தமாக உடைந்தே போனான் வைரவேல்.

தான் இப்படி ஒரு காரியத்தைச் செய்வோம் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. இதயமே சுக்கல் சுக்கலாக உடைந்து போனது போல் கலங்கிப் போனான்.

தன் மனைவிக்குத் தான் துரோகம் செய்து விட்டதாகத் தோன்ற, சட்டென்று எழுந்து வீட்டிற்குள் ஓடி மனைவியின் புகைப்படத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“என்னைய மன்னிச்சுடு ராசாத்தி. நா இப்படிப் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை. ஒ நினைப்புல தேன் கண்ணு நா குடிச்சேன். ஆனா அதுவே இப்படி ஆக வைக்கும்னு நா கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை ராசாத்தி. என்னைய மன்னிச்சுப் போடு…” என்று கண்களின் நீர் கோர்க்க, சாந்தமாகச் சிரித்துக் கொண்டிருந்த மனைவியின் நிழல் படத்திடம் மன்னிப்பு கேட்டான்.

“சரிதேன், உமக்கே ஒசாரு இல்லாமத்தேன் தாலியை அவ கழுத்துல கட்டிப் போட்டீரு. அதுக்காக அவளை எல்லாம் எம் மவ இடத்துல கொண்டாந்து நிறுத்த முடியாது மாப்ள. இப்போ வூருல இருந்து ஏ அங்காளி, பங்காளிக எல்லாம் வந்துட்டு இருக்காக.

அவுக கூடப் போயி அந்தப் புள்ள கழுத்துல இருக்குற எம் மவ தாலியை வாங்கிட்டு, அவளை வூரை விட்டே விரட்டிப் போட்டு வந்துடலாம். அதுக்கும் மசியலனா ஒலகத்தை விட்டு விரட்டுறதுக்குக் கூட இந்தக் கோவிந்தன் தயங்க மாட்டான்…” என்று மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார்.

அவரின் பேச்சை கூடக் காதில் வாங்காமல் நிழல் படத்தில் இருந்த தன் மனைவியின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வைரவேல்.

மருமகனை அப்படிப் பார்த்த மாமனாருக்கு ‘தான் எடுத்த முடிவு சரி தான்!’ என்ற இறுமாப்பு தோன்ற, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியே சென்றார்.

அப்போது சரியாக அவரின் ஊரிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் பங்காளிகளும், சில உறவினர்களும் வர அவர்களுடன் தேன்மலரின் வீட்டை நோக்கி படை எடுத்தார் கோவிந்தன்.

வைரவேல் கட்டிய தாலியை கழுத்தில் தாங்கி, துக்கமா? அழுகையா? சந்தோஷமா? விரக்தியா? எந்த மனநிலையில் இருக்கிறாள் என்று அவளே புரியாத நிலையில் கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு அதில் தன் முகத்தைப் புதைத்து அமர்ந்து கொண்டிருந்தாள் தேன்மலர்.

அவளின் எதிரே அவளை நிமிர்ந்து பார்ப்பதும், பின் மீண்டும் தலையைச் சாய்த்து படுத்துக் கொள்வதுமாக இருந்தது ராசு.

இரவில் நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்த தேன்மலரின் மேனி சிலிர்த்து அடங்கியது.

ராமர் அவளைத் துரத்திக் கொண்டு வந்ததுமே அவளின் பலம் அனைத்தும் குறைந்து பலவீனமாகித்தான் போனாள் தேன்மலர்.

எதிர்பாராத விதமாக வைரவேலுவின் மீது மோதி கொண்டதும், தன்னைக் காப்பாற்ற ஒருவன் இருக்கிறான் என்று நொடியில் மகிழ்ந்து தான் போனாள்.

ஆனால் அவனிடமிருந்து வந்த சாராய நெடியில் அடுத்த நொடியே தன் மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு என்று அவளுக்குப் புரிந்து போனது.

அதற்குள் போதையில் இருந்தவன் தடுமாறி அவளையும் இழுத்துக் கொண்டு விழவும், அவளுக்கு முதலில் அவன் பிடியிலிருந்து விலகி செல்வதே பிரதானமாகத் தோன்றியது.

கிட்டத்தட்ட முழுவதுமாக அவளை ஆக்கிரமித்து அவள் மேல் விழுந்திருந்தான் வைரவேல். அந்நிலையில் பெண்ணாகப் பரிதவித்துத் தான் போனாள்.

அந்த நேரத்தில் ஊர்காரர்கள் மொத்தமும் அங்கே வரவும், ராமரை பற்றிச் சொல்லலாம் என்று அவள் நினைத்திருக்க, ராமரே அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்ததும் அவளின் பேச்சு அங்கே எடுபடாமல் போனது.

ஏற்கனவே ராமர் தன்னைப் பலாத்காரம் செய்ய வந்ததில் உள்ளுக்குள் உடைந்து போயிருந்தவள், வைரவேலுடன் தன்னைச் சேர்த்து வைத்து பேசி தன் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக ஊரார் மாற்றிய போது துடித்துத் தான் போனாள்.

அதிலும் ராமரை அவன் போடும் வேஷத்தை நம்பி, அனைவரும் அவனுக்குப் பக்கப்பலமாகப் பேசியதில் அவன் மேல் வந்த மொத்த கோபத்தைக் காட்ட வழியின்றி, தனக்காக அந்தப் போதையிலும் பரிந்து வந்த வைரவேலின் மீது காட்டியது தன் தவறு என்று இப்போது அவளுக்குப் புரிந்தது.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டோம் என்று தெரிந்ததும் உடைந்து போய்ப் பலவீனப்பட்டுத் தான் வைரவேலுவை திட்டியதும், தன் அழுகையைப் பார்த்து அவன் திடீரெனத் தாலி கட்டியதும், இன்னும் கூடக் கனவோ என்று தோன்றியது.

ஆனால் அது கனவு இல்லை, உண்மையாகவே நிகழ்ந்து விட்ட நிகழ்வு தான் என்று அவள் கழுத்தை புதிதாக உரசிக் கொண்டிருந்ததும், மார்பில் தவழ்ந்துமான தாலி கட்டியம் கூறிய போது, எங்கனம் அதைக் கனவு என்று புறம் தள்ள முடியும்?

தேன்மலரின் கழுத்தில் வைரவேல் தாலியை கட்டியதும், ஊரே அதிர்ந்து பார்க்க, ராமர் தன் தலையில் தீ கொட்டியது போல் தகிப்புடன் பார்த்தான்.

பேரன் செய்த காரியத்தில் பதறி போய் அவன் அருகில் வந்த அப்பத்தா, “என்ன காரியம்டா செய்து போட்ட?” என்று பளாரென்று ஒரு அறை விட்டார்.

எரிந்த கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டவன், “ஏன் அப்பத்தா என்னைய அடிச்சீரு? அந்தப் புள்ள பாவம் அப்பத்தா. என்னால தேன் அந்தப் புள்ளக்கு கெட்ட பேரு அப்பத்தா. அந்தப் புள்ள மேல என்னால களங்கம் சொல்லி, வூரை விட்டு தள்ளி வச்சுப் போட்டாகளாம். அந்தப் புள்ள தனியா எப்படி அப்பத்தா வாழும்? பாவம் தானே அப்பத்தா? என்னால அந்தப் புள்ள மேல வந்த களங்கத்தை நா தானே போக்கணும்?” என்று குழறலாகக் கேட்டான்.

“பாவி மவனே! நீரு செய்த காரியம் லேசுப்பட்டது இல்லடா. இப்ப போதைல இருக்குற உமக்கு அது எங்க புரிய போவுது? விடிஞ்சா நீரே வருத்தப்படுவியே. நா என்ன பண்ணுவேன். போதும் ராசா, இனி இங்கன நிக்காத வா…” என்று அவனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று விட்டார்.

தாலி கட்டியவனே சென்று விட மற்றவர்களுக்கு அங்கே என்ன வேலை? நடந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டே மற்றவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேறு வழி இல்லாமல் தேன்மலரை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூட்டத்தோடு சென்றான் ராமர்.

அனைவரும் சென்றதும் அவ்விடத்தை இருட்டு சூழ்ந்து கொள்ள, அவ்வயலில் கேட்பாரற்று நின்றிருந்தாள் தேன்மலர்.

பின் வெகுநேரம் கழித்து நடைப்பிணமாய்த் தன் வீடு வந்து சேர்ந்து அமர்ந்தவள் தான், விடிந்த பிறகும் அப்படியே அமர்ந்திருந்தாள். நடு இரவுக்கு மேல் மயக்கம் தெளிந்து வந்த ராசுவும் அவளின் எதிரே படுத்துக் கொண்டது.

ஏதோ மருந்தை ராசு மயக்கமடைய உபயோகப்படுத்தியிருந்தான் ராமர்.

காலில் முகம் புதைத்து தன் நிலையை நொந்து கொண்டிருந்த தேன்மலர், மெல்ல நிமிர்ந்து தன் கழுத்தில் கிடந்த தாலியை குனிந்து பார்த்தாள்.

‘இந்தத் தாலிக்கு என்ன அர்த்தம்?’ என்று கையில் தாலியை எடுத்து பார்த்துத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.

அப்போது வெளியே சலசலவென்று சத்தம் கேட்டது.

“அடியே, வேசி மவளே! யாரு வூட்டு தாலியை யாரு சுமக்குறது? எம் மாப்ள கையால தாலி வாங்கிட்டு வந்து பகுமானமா வூட்டுக்குள்ளார உட்கார்ந்து இருக்கியோ? வாடி வெளியே…” என்று வாசலில் இருந்து கத்தினார் கோவிந்தன்.

கொடூரமான அந்தச் சத்தத்தில் விதிர்த்துப் போனாள் தேன்மலர்.

இப்போது தான் என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

வெளியே கேட்ட சத்தத்தைப் பார்த்தால், பல பேர் தன் வீட்டின் முன் கூடி நிற்பது புரிந்து போனது.

இந்தச் சூழ்நிலையைத் தான் எப்படிக் கையாள போகிறோம் என்று புரியாமல் நடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் தேன்மலர்.

“இப்ப நீ வெளியே வரலை, வூட்டோட சேர்ந்து உம்மையும் கொளுத்திப் போடுவோம்…” என்ற ஆங்காரமான குரலில் அவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

ராசு கதவருகே ஓடி சென்று கதவில் கால் வைத்து நின்று கொண்டு குரைக்க ஆரம்பித்தது.

“அவளை ஏதாவது செய்து போடணும் மச்சான். எம் மாப்ள வாழ்க்கையையே கெடுக்க வந்த பாவி. அவ கழுத்துல இன்னும் செத்த நேரம் கூட எம் மாப்ள கட்டுன தாலி இருக்கக் கூடாது மச்சான்…” என்று கோவிந்தன் யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்க, தன் கழுத்தில் இருந்த தாலியை அழுந்த பிடித்துக் கொண்ட தேன்மலரின் கண்களிலிருந்து சாரை சாரையாகக் கண்ணீர் வடிந்தது.

“அம்மா, நா இப்ப என்னமா செய்யணும்? எமக்குத் தெரியலையே. ஒருத்தன் கூடத்தேன் வாழணும், அவன் கட்டுற தாலி மட்டுந்தேன் ஒ மார்பு சுமக்கணும்னு சொல்லி சொல்லி வளர்த்தீரேமா. இப்ப ஒருத்தன் ஏ கழுத்துல தாலி கட்டிப் போட்டான் மா. ஆனா, உடனே அந்தத் தாலியை ஏ கழுத்துல இருந்து இறக்க, இம்புட்டு பேரு வந்துருக்காகளே… நா என்னமா செய்வேன்? நா என்ன செய்யணும்னு சொல்லுமா…” என்று பரிதவிக்கும் குழந்தையாய் கதறினாள் தேன்மலர்.

“அவ கதவை திறக்க மாட்டா தம்பி. நாம தேன் உடைக்கணும்…” என்று ஒருவர் சொல்ல, அனைவரும் சேர்ந்து கதவை நெருங்கினர்.

அவர்கள் எப்படியும் தன்னைச் சும்மா விடமாட்டார்கள் என்று புரிந்து போக, சட்டென்று கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

அவிழ்ந்து விழுந்த கூந்தலை உதறி கொண்டையாக முடிந்தவள், நேராகக் கதவின் அருகில் சென்றாள்.

ராசு இப்போது அவளின் மீது தன் முன்னங்கால்களைத் தூக்கி நிறுத்த முயன்றது.

அதை விலக்கி விட்டவள் கதவை லேசாகத் திறந்தாள்.

வயதானவர்களும், இளையவர்களுமாகப் பத்து பேர் வெளியே நின்றிருந்தனர். அவர்களின் ஒருவனாக வஞ்சகத்துடன் நின்றிருந்தான் ராமர்.

அவர்களின் மீது பார்வையைச் செலுத்தியவளின் கண்கள் தனக்குத் தாலி கட்டியவனைத் தேடின. ஆனால் அக்கூட்டத்தில் அவன் இல்லையென்றதும் அவள் முகம் இறுகிப் போனது.

அவர்களை அமைதியாகப் பார்த்தவள், “என்ன விசயம்? ஏன் ஏ வூட்டு முன்னாடி நின்னு இப்படிக் கத்திக்கிட்டு கிடக்குரீரு?” என்று நிதானமாகக் கேட்டாள்.

“இவளுக்குக் கொழுப்பை பார்த்தீங்களா மாமா? எம்புட்டுத் தெனாவட்டா கேள்வி கேட்குறா… இவள சும்மாவா விடுறது?” என்று முதல் ஆளாக முன்னே வந்து கத்தினான் ராமர்.

“அவளைப் புடிச்சு வெளியே இழுத்துப் போட்டு அவ கழுத்துல இருக்குற தாலியை அறு ராமரு…” என்று ஆத்திரமாகக் கத்தினார் கோவிந்தன்.

“இதோ மாமா…” என்ற ராமர் முன்னேற, ராசு அவன் மேல் தாவி கடிக்க வந்தது.

ஆனால் அவனின் பின்னால் ஓங்கு தாங்காக நின்றிருந்த ஒருவன், ஓங்கி ராசுவின் வயிற்றிலேயே உதைக்க, தூர சென்று விழுந்தது ராசு.

“ராசு…” என்று தேன்மலர் பதறி கத்த,

“என்னடி ராசு?” என்று அவளின் தலைமுடியைப் பிடித்து வெளியே தரதரவென்று இழுத்துப் போனான் ராமர்.

ராசுவை வீட்டிற்குள் தள்ளி இன்னொருவன் கதவை மூடினான்.

“டேய், விடுடா என்னைய. ஏ கழுத்துல தாலி கட்டியவரை வர சொல்லும். அவரு வந்து கேட்கட்டும் தாலியை. அப்புறம் தர்றேன்…” என்று அவனின் பிடியிலிருந்து திமிறி ஆத்திரத்துடன் கத்தினாள் தேன்மலர்.

“சரிதேன், அவரு வரணுமோ அவரு? அவரு ஒ கழுத்துல தெரியாத்தனமா தாலி கட்டிப் போட்டோமேன்னு ஏ மககிட்ட மன்னிப்பு கேட்டு அழுதுகிட்டு கிடக்காரு. அவளைப் பிடிச்சு அமுக்கு ராமரு.

என்ன நெஞ்சழுத்தம் இருந்தா எம் மாப்ள கட்டுன தாலியை இந்த வேசி மவ தழைய தழைய தொங்கப் போட்டுக்கிட்டு எம் மாப்ளயையும் வர சொல்லுவா? அவ கழுத்துல கிடக்குற தாலியை அறுத்துப் போடு ராமரு…” ஆங்காரத்துடன் கத்தினார் கோவிந்தன்.

“வேணாம், அறுக்காதீக…” என்று தேன்மலர் கதறியதை எல்லாம் காதில் வாங்காமல் அவளின் தாலியைப் பிடித்து இழுத்தான் ராமர்.