10 – ஈடில்லா எனதுயிரே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 10

“என் காதலை பிரிச்சுட்டு அவர் மட்டும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பாரோ? விடமாட்டேன். அடுத்து நீ தான். உன்னையும் கூடச் சும்மா விட மாட்டேன்…” என்று பைரவி பேசியதை ராகவர்தினியின் போன் வழியாகக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் தன் எதிரே இருந்தவளை முறைத்துப் பார்த்தார்.

அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தாள் பைரவி.

அவள் அருகில் நின்றிருந்த அவளின் தந்தை, சப்பென்று மகளின் கன்னத்தில் அறைந்தார்.

தன் தந்தை அடித்ததை நம்ப முடியாமல். கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்தாள்.

“சார், கொஞ்ச நேரம் அமைதியா இருங்க…” என்று அவரை அடக்கிய இன்ஸ்பெக்டர்,

“எங்களை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்கன்னு நினைச்சியா பைரவி? நீ சொன்னதும் நாங்க உடனே உங்க சாரை அரெஸ்ட் பண்ண என்ன காரணம் தெரியுமா?

பல பொண்ணுங்க உண்மையிலேயே அவங்க வாத்தியாரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகுறாங்க. ஆனால் வெளியே சொல்ல பயந்துட்டு உள்ளுக்குள்ளே பல சித்திரவதை அனுபவிக்கிறாங்க.

அப்படியே அந்தப் பொண்ணுங்க சொல்ல முயன்றாலும், மானம், மரியாதை, பொண்ணு பேர் கெட்டுப்போகும்னு பெத்தவங்க வெளியே சொல்ல முயலுவதில்லை.

அதனால் அந்த வாத்தியாருங்க மட்டும் இல்ல, பல ஆண்கள் மேலும் மேலும் பொண்ணுங்களுக்குத் தொந்தரவு தர்றாங்க. ஆனால் நீ துணிந்து எங்ககிட்ட கம்பளைண்ட் கொடுக்கவும், இனி உன் வாத்தியாரால் உனக்கு மட்டுமில்ல, மத்தப் பொண்ணுங்களும் பாதிக்கப்படக் கூடாதுன்னு தான் உடனே ஆக்ஷ்ன் எடுத்தோம். ஆனா நீ என்ன பண்ணிருக்க?

உன் கிளாஸ் பிள்ளைங்க அத்தனை பேர் திரண்டு வந்து போராட்டம் பண்ணும் போதும் நாங்க உன்னை நம்பினோம். ஆனா நீ உன் சுயநலத்துக்கு எங்க நேரத்தை எல்லாம் வேஸ்ட் செய்து எங்களை ஏமாத்தியிருக்க. அதுவும் உன் சாரோட கல்யாணமே நின்னு போயிருச்சு. அப்படி என்ன வன்மம் உனக்கு?

படிக்கும் வயதில் அப்படி என்ன காதல்? நீ காதல் செய், என்னவோ செய்! அது உன் சொந்த விஷயம். ஆனால் அதுக்கு உன் வாத்தியார் மேல பழி போட்டு எங்க வேலையைக் கெடுத்துன்னு எத்தனை வேலை பார்த்து வச்சுருக்க? நீ செய்த வேலைக்கு இப்ப நாங்க உன் மேல் ஆக்ஷ்ன் கூட எடுக்கலாம்…” என்று மிரட்டி அவளைக் காய்ச்சி எடுத்து விட்டார் இன்ஸ்பெக்டர்.

அவர் சொன்னதைக் கேட்டு, தன் மீது ஆக்ஷ்ன் எடுத்து விடுவார்களோ? என்பது போல் அவரைத் திகைத்துப் பார்த்தாள் பைரவி.

அவளைப் பொருட்படுத்தாத இன்ஸ்பெக்டர், “நீங்க சொல்லுங்க சார். இந்தப் பொண்ணு உங்க மேல பொய் புகார் கொடுத்ததுன்னு நீங்க கம்பளைன்ட் கொடுத்தால் நாங்க ஆக்ஷ்ன் எடுக்கிறோம்…” என்று அவரின் எதிரே அமர்ந்திருந்த பிரபஞ்சனிடம் சொன்னார்.

இப்போது பிரபஞ்சனை ‘என்ன சொல்வானோ?’ என்ற பயத்துடன் பார்த்தாள் பைரவி.

அவள் புறம் திரும்பக் கூட இல்லை அவன்.

“நான் இப்பவும் அதே வாத்தியார் தான் மேடம். அந்தப் பொண்ணு இப்பவும் ஸ்டூடண்ட் தான். ஒரு ஸ்டூடண்ட் எதிர்காலம் கெட்டுப்போகக் கண்டிப்பாக நான் காரணமாக இருக்க மாட்டேன்.

தப்புக்குத் தண்டனை என்னைக்கும் தீர்வாகாது மேடம். அந்தப் பொண்ணே உணர்ந்து திருந்தணும். அதைச் செய்ய வேண்டியது இப்போ அந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ் கடமை…” என்றான் பிரபஞ்சன்.

பைரவி குற்ற குறுகுறுப்புடன் தலை குனிந்தாள்.

“ஸாரி சார். நீங்க இவ்வளவு பெருந்தன்மையா இருக்கீங்க. ஆனா நாங்க நீங்க அந்தப் பொண்ணுக்கு நல்லது தான் பண்ணிருக்கீங்கன்னு தெரியாமல் உங்களை அரெஸ்ட் செய்து உங்க கல்யாணத்தில் பெரிய குழப்பமே செய்துட்டோம்…” என்று பிரபஞ்சனிடம் மன்னிப்புக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“உங்க கடமையை நீங்க செய்தீங்க மேடம்…” என்றதுடன் தன் பேச்சை முடித்துக் கொண்டான் பிரபஞ்சன்.

“ஒரு நிரபராதிக்கு என்னால் தண்டனை கிடைக்க விடாமல், ஆதாரத்தைக் கொண்டு வந்து கொடுத்ததுக்குத் தேங்க்ஸ் மா. யாருமே பிரபஞ்சனை நம்பாத போது நீ ஆரம்பத்திலிருந்தே நம்பி அவருக்காகப் பேசியது எல்லாம் இன்னும் எனக்கு வியப்பா இருக்கு…” என்று அவன் அருகில் அமர்ந்திருந்த ராகவர்தினியை பாராட்டினார் இன்ஸ்பெக்டர்.

“என் அத்தானை பற்றி எனக்கு நல்லா தெரியும் மேடம். நான் கொண்டு வந்த ஆதாரத்தைக் கேட்டு, உடனே இந்தப் பொண்ணை வர வைச்சு, நீங்க ஆக்ஷ்ன் எடுத்ததற்கு நான் தான் நன்றி சொல்லணும் மேடம்…” என்றாள் ராகவர்தினி.

“இதுவும் என் கடமை தான் மா…” என்றார் இன்ஸ்பெக்டர்.

பைரவியும், தீபக்கும் பேசியதை முழுமையாகத் தன் போனில் ரெக்கார்டு செய்து கொண்டு, அதனை உடனே போலீசில் வந்து ஒப்படைத்தாள் ராகவர்தினி.

அவர்களும் கேட்டு விட்டு உடனே பைரவியையும், அவளின் தந்தையையும் காவல் நிலையத்துக்கு அழைத்தனர்.

அவளின் முன் மீண்டும் போட்டுக் காட்டியதில் பைரவியின் முகம் வெளுத்துப் போனது. உண்மையை அறிந்து கொண்ட பைரவியின் தந்தையும் கோபமாக மகளை முறைத்தார்.

கூடவே தீபக்கையும் வரவைத்து என்ன நடந்தது என்று தீர விசாரித்தார் இன்ஸ்பெக்டர்.

அதோடு பைரவியின் தோழி மற்றும் அவள் அருகில் அமர்ந்திருக்கும் சில மாணவிகள் என்று சிலரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் பிரபஞ்சன் மீது எந்தக் குற்றமும் இல்லை நிரூபணமானது.

“உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததற்கு ஸாரி சார். இனி நீங்க கிளம்பலாம்…” என்று பிரபஞ்சனிடம் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

“நன்றி மேடம்…” என்று சொல்லிவிட்டு எழுந்த பிரபஞ்சன் அங்கே நின்றிருந்த பைரவியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் வாயிலை நோக்கி நடந்தான்.

“சார், ஒரு நிமிஷம்…!” என்று அவனை நிறுத்தினார் பைரவியின் தந்தை.

“ஸாரி சார். என் பொண்ணு நல்லா வாழணும்னு நீங்க நினைச்சு இருக்கீங்க. ஆனா நீங்க நல்லா வாழக் கூடாதுன்னு என் பொண்ணு என்னென்னமோ செய்து விட்டாள். அவள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்…” என்றார்.

அவரைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தான் பிரபஞ்சன்.

அந்தப் பார்வை அவரைக் குற்றம் சாட்டியது. கூடவே அவன் அப்போது சொன்னது ஞாபகத்தில் வர, “இனி என் பொண்ணுக்கு நல்லது, கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோம் சார்…” என்று வேகமாகச் சொன்னார் பைரவியின் தந்தை.

அவ்வளவுதான்! அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே நிற்கவில்லை அவன். அவனின் பின் ராகவர்தினியும், மாதவனும் சென்றனர்.

வெளியே இன்னும் அவனின் மாணவ மாணவிகள் குழு குழுவாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அவனைப் பார்த்ததும் அனைவரும் அருகில் வந்து, “வெளியே விட்டுட்டாங்களா சார்?” என்று ஆர்வமாக விசாரித்தனர்.

“விட்டுட்டாங்க…” என்றதும்,

“ஹேய்…” என்று கூச்சலிட்டுத் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

“அதுக்கு நீங்களும் ஒரு காரணம். எனக்காக வந்ததுக்கு எல்லோருக்கும் நன்றி…” என்றான் பிரபஞ்சன்.

“என்ன சார், எங்களுக்குப் போய்த் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கீங்க?” என்றனர் மாணவர்கள்.

“சரி, அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு என்ன எல்லோரும் கிளாஸை கட் பண்ணிட்டீங்களா? படிப்பு என்னத்துக்கு ஆகிறது? பெரிய கிளாஸ் படிக்கிறீங்க. அந்த அக்கறை வேண்டாமா?” என்று வாத்தியாராக அவர்களைக் கடிந்தும் கொண்டான்.

‘என் வாத்தியார் அத்தான் மீண்டும் வந்துவிட்டார்’ என்று சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டாள் ராகவர்தினி.

மாணவர்களிடம் பேசி அனுப்பி விட்டு, அவனுக்காக வந்திருந்த சில ஆசிரியர்களிடம் உரையாடி முடித்ததும் அவர்களும் கிளம்பினர்.

அனைவரும் கிளம்பியதும், “ராகா…” என்றழைத்தான்.

“அத்தான்?” என்று கேட்டதும் அவள் சற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தான் பிரபஞ்சன்.

கையை எடுத்து அவளைக் கும்பிட்டவன், “தேங்க்ஸ் ராகா…” என்று அவன் சொல்லும் போது அவனின் குரலும் கரகரத்துப் போனது.

“அத்தான், என்ன காரியம் பண்றீங்க?” என்று வேகமாக அவன் கையைக் கீழே இறக்கி விட்டாள்.

“என் மீதான உன் நம்பிக்கை தான் இப்போ இங்கே நான் வெளியே நிற்பதற்கான காரணம் ராகா…” என்றான் நெகிழ்ந்த மனதுடன்.

“இல்ல அத்தான். உங்க நல்ல குணம் தான் உங்களை வெளியே கொண்டு வந்திருக்கு. நான் இதில் சிறு துரும்பு. அவ்வளவு தான்!” என்றாள்.

“ஆனாலும்…” என்று அவன் மேலும் ஏதோ சொல்ல வர,

“போதும் அத்தான். என்னோட கலகலப்பான அட்வைஸ் வாத்தி தான் எனக்கு வேணும். இந்தச் சீரியஸ் உங்களுக்குச் செட் ஆகலை விட்டுடுங்க…” என்று கிண்டலாகச் சொன்னாள்.

இதழ் பிரியாமல் லேசாகப் புன்முறுவல் பூத்தான் பிரபஞ்சன்.

அவர்களைப் பார்த்து தானும் புன்னகை புரிந்த மாதவன், “வீட்டுக்குக் கிளம்பலாமா பிரபா?” என்று கேட்டார்.

“எந்த வீட்டுக்கு மாமா?” புன்முறுவல் இருந்த இடத்தில் இப்போது இறுக்கம் வந்து அமர்ந்து கொள்ள, அழுத்தமாகக் கேட்டான்.

“உன்னோட வீட்டுக்குத்தான் பிரபா…” என்றான்.

“எனக்குன்னு வீடு இல்லை மாமா. இனி தான் பார்க்கணும்…” என்றான்.

“பிரபா, என்ன சொல்ற?” என்று மாதவன் கேட்க,

“அத்தையும், மாமாவும் தெரியாமல் உங்களைத் தவறா நினைச்சுட்டாங்க அத்தான். நாம இங்கே நடந்த உண்மையைச் சொன்னால் புரிந்து கொள்வாங்க. இதுக்குப் போய்க் கோபித்துக் கொண்டு வீட்டுக்கு வர மாட்டீங்களா?” என்று கேட்டாள் ராகவர்தினி.

“ஆமா பிரபா, இதுக்குப் போய்க் கோபித்துக் கொள்ளலாமா?” என்று மாதவனும் கேட்க,

“என் மேல் நம்பிக்கை இல்லாத இடத்தில் நான் இருக்கத் தயாரா இல்லை மாமா…” என்றான் உறுதியாக.

“அத்தான்…” என்றழைத்த ராகவர்தினி ஏதோ சொல்ல வர, நிறுத்த சொல்லி கையைக் காட்டினான் பிரபஞ்சன்.

“இத்தனை வருஷமா அவங்க கண் முன்னாடி வளர்ந்தும் அவங்களுக்கு என்னால் என் மீதான நம்பிக்கையைக் கூடத் தர முடியாத அளவுக்குத்தான் நான் வாழ்ந்திருக்கேன்னு நினைக்கும் போது இதுவரை நான் வாழ்ந்த என் வாழ்க்கையே வேஸ்ட்ன்னு தோனுது. இதுக்கு மேல இதைப் பற்றி நாம பேச வேண்டாம் ராகா. நீங்க இரண்டு பேரும் உங்க வீட்டுக்கு கிளம்புங்க….” என்றான்.

“உங்களை விட்டுட்டு அப்படி எங்கே போகச் சொல்றீங்க அத்தான்? அதெல்லாம் போக முடியாது. உங்க வீட்டுக்குத் தானே போக மாட்டீங்க? எங்க வீட்டுக்கு வாங்க…” என்று அழைத்தாள்.

“சரிதான், எங்க வீட்டுக்கு வா பிரபா. அப்புறம் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு பார்க்கலாம்…” என்றார் மாதவன்.

“இல்லை மாமா நான் மறுக்கிறேன்னு என்னைத் தவறா எடுத்துக்காதீங்க. எனக்கு இப்ப தேவை தனிமை தான். அத்தையும் என் மேல் கோபமா இருப்பாங்க. என்னால் உங்களுக்குச் சங்கடம் வர வேண்டாம். இப்போதைக்கு நான் ஒரு ஹோட்டலில் தங்கிக்கிறேன். அப்புறமா ஒரு வீடு பார்த்து அங்கே போயிடுவேன்…” என்றான்.

“என்னப்பா, அத்தான் இப்படிப் பேசிட்டு இருக்கார்?” என்று தந்தையிடம் முறையிட்டாள் ராகவர்தினி.

“இருமா, நான் பேசிக்கிறேன்…” என்று மகளிடம் சொன்னவர்,

“நீ ஹோட்டல் எல்லாம் போக வேண்டாம் பிரபா. ஒரு நிமிஷம் இரு. நான் இதோ வர்றேன்…” என்ற மாதவன் சற்று தள்ளி நின்று யாரிடமோ கைபேசியில் பேச ஆரம்பித்தார்.

“என்ன அத்தான் இவ்வளவு பிடிவாதம்? எங்க வீட்டுக்கு வரலாம் தானே…” என்று ராகவர்தினி அவனிடம் கேட்க,

“விட்டுடு ராகா. நான் தனியாகத்தான் இருக்கணும்…” என்று முடித்துக் கொண்டான்.

அவனிடம் மேலும் எதுவும் பேச முடியாமல் அமைதியாகிப் போனாள் ராகவர்தினி.

அவர்கள் அருகில் வந்த மாதவன், “உனக்கு வீடு ரெடி பிரபா. வா அங்கே போகலாம்…” என்றழைத்தார்.

“என்ன மாமா, அதுக்குள்ள வீடு ரெடியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“என் ஃப்ரண்டு ஒருத்தன் வேலை விஷயமா வடநாட்டில் போய்ச் செட்டில் ஆகிட்டான். அவனுக்கு ஒரு ப்ளாட் இங்கே இருக்கு. வந்து போகும் போது தங்க வேணும்னு விற்காமல் வைச்சிருந்தான். இப்ப கொஞ்ச நாளா அந்த ப்ளாட்டை வாடகைக்கு விடணும்னு அவனுக்கு ஒரு ஐடியா.

என்கிட்டத்தான் வீடு வாடகைக்குக் கேட்டு வந்தால் அவங்களைப் பற்றி விசாரித்து வாடகைக்கு விடச் சொல்லியிருந்தான். அந்த வீட்டை இப்ப உனக்கு விடலாமான்னு கேட்டதும் உடனே சரின்னு சொல்லிட்டான். அந்த வீட்டுச் சாவி என்கிட்டத்தான் இருக்கு. இப்ப அங்கே தான் போறோம்…” என்றார் மாதவன்.

ஒரு ஆட்டோவை பிடித்துப் பிரபஞ்சனும், ராகவர்தினியும் அதில் ஏறிக் கொள்ள, ஆட்டோவிற்கு முன் தன் பைக்கில் சென்றார் மாதவன்.

முன்னால் சென்ற மாதவன் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன் நிற்க, ஆட்டோவும் நின்றது.

ஆட்டோவிலிருந்து இறங்கிப் பார்த்தான் பிரபஞ்சன்.

இரண்டடுக்கு மாடி கட்டிடம் தான் அது. சில ப்ளாட் மட்டுமே அங்கே இருக்கும் என்று புரிந்தது.

ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றனர்.

“இங்கே இரண்டாவது மாடியில் தான் ப்ளாட் இருக்கு பிரபா. வா, போய்ப் பார்க்கலாம்…” என்று மாதவன் அழைத்துச் சென்றார்.

அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மொத்தமே ஆறு ப்ளாட் தான் இருந்தது.

தரைத்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் இரண்டு, மேல் தளத்தில் இரண்டு என்று இருந்த ப்ளாட்களில் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு பிளாட்டின் கதவைத் திறந்தார் மாதவன்.

“ஒன் பெட்ரூம் ப்ளாட் தான் பிரபா. ஆனா எல்லாமே பெருசா தான் இருக்கும்…” என்றார்.

அவர் சொன்னபடி தான் வீடு இருந்தது.

வரவேற்பறை மட்டுமே பெரிய அளவில் இருக்க, அதனை ஒட்டி பாதிச் சுவர் மறைத்துச் சமையலறை இருக்க, அருகிலேயே டைனிங் ஹால் இருந்தது. அதற்கு எதிரே அட்டாச் பாத்ரூமுடன் பெரிய பெட்ரூம் இருந்தது.

“என் ஒருத்தனுக்கு இந்த வீடு பெருசு தான் மாமா…” என்றான்.

“ரொம்ப நல்லா இருக்குப்பா…” என்றாள் ராகவர்தினி.

“அட்வான்ஸ், வாடகை எல்லாம் எவ்வளவு மாமா?” என்று விசாரித்தான்.

“நீ என் அக்கா பையன்னு சொன்னதும் அட்வான்ஸ் எல்லாம் அப்புறம் பார்க்கலாம்னு சொல்லிட்டான் பிரபா. வாடகை மெயின்டென்ஸ் எல்லாம் சேர்த்து எட்டாயிரம். அவன் அக்கொண்ட் நம்பர் வாங்கிக் கொடுக்கிறேன். அதுக்கு அனுப்பி வச்சுடு…” என்றார்.

“சரி மாமா, ரொம்பத் தேங்க்ஸ். இனி நான் பார்த்துக்கிறேன் மாமா. நீங்க ராகாவை கூட்டிட்டு கிளம்புங்க…” என்றான்.

“என்ன அத்தான் சொல்றீங்க? வீட்டில் ஒரு பொருளும் இல்லை. நீங்க தனியா என்ன சமாளிப்பீங்க? நாங்க எல்லாம் வாங்கி வைக்க ஹெல்ப் செய்துட்டு தான் போவோம்…” என்றாள்.

“அத்தை உங்களைத் தேட போறாங்க ராகா. எனக்காக நீங்க இவ்வளவு தூரம் செய்ததே பெருசு. நான் பொருட்களும் பெருசா எதுவும் வாங்க போறது இல்லை. மாத்து ட்ரெஸ் இரண்டு வாங்கிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டுக்குவேன். அவ்வளவு தான்!” என்றான்.

“என்ன அத்தான் இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க. ட்ரெஸ் மட்டும் போதுமா? வீட்டில் உட்கார ஒரு சோபா இல்லை, கட்டில் இல்லை, இன்னும் சில அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் வாங்கணும் அத்தான். ஒன்னுமே இல்லாம வெறும் வீட்டில் எப்படி இருப்பீங்க?” என்று படபடவென்று கேட்டாள் ராகவர்தினி.

“அதெல்லாம் மெதுவா வாங்கிக்கலாம் ராகா…” என்றான்.

“மெதுவானா எப்போ அத்தான்? நீங்க நைட் எல்லாம் தூங்கின மாதிரி கூடத் தெரியலை. படுக்கப் பாய் கூட இல்லை. ஏதாவது மறுப்பு சொல்லிட்டே இருக்காம பேசாம இருங்க அத்தான். அம்மா எங்களைத் தேடுவதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீங்க. நாங்க எல்லாம் வாங்கி வச்சுட்டுத்தான் போவோம்…” என்றாள் பிடிவாதமாக.

“என்ன ராகா நீ?” என்று அவன் சலித்துக் கொள்ள,

“அப்பா, அத்தான் அப்படித்தான் சொல்லிட்டு இருப்பார். வாங்க நாம போய் வாங்கிட்டு வருவோம்…” என்று தந்தையை இழுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.

“நான் வர வேண்டாமா?” என்று கேட்டான்.

“நீங்க அலைய வேண்டாம் அத்தான். நாங்க முதலில் உங்களுக்குச் சாப்பாடும், ட்ரெஸும் எடுத்து வர்றோம். நீங்க குளிச்சுட்டு, சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க…” என்றாள்.

“சரி, மாமா இந்தாங்க என் கார்ட், பின் நம்பர் இது. என்ன வாங்குவதாக இருந்தாலும் இதில் வாங்குங்க…” என்று அவனின் ஏடிஎம் கார்டை கொடுத்தான்.

அவனின் மனநிலை புரிந்து மறுப்புச் சொல்லாமல் வாங்கிக் கொண்டு மகளுடன் கிளம்பினார் மாதவன்.

அரைமணி நேரத்திலேயே ஆளுக்கு ஒரு கடையாகச் சென்று மாற்று துணியும், துவாலை, சோப், வாளி, துடைப்பம் என வாங்கி வந்தார்கள்.

அவனைக் குளிக்க அனுப்பி விட்டு, சாப்பாடு வாங்கி வந்தார் மாதவன். மூவருமே சாப்பிட்டிருக்கவில்லை என்பதால் அவனுடன் சேர்ந்தே சாப்பிட்டு முடிந்தனர்.

துணிக்கடையிலேயே ஒரு போர்வையும் வாங்கி வந்திருக்க, பெட்ரூமை கூட்டி விட்டு அதை விரித்துக் கொடுத்த ராகவர்தினி, “இதில் படுத்து தூங்குங்க அத்தான். நாங்க போய் மீதி திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வர்றோம். வெளியே கதவை மூடி சாவியை எடுத்துட்டுப் போறோம்…” என்றாள்.

“ரொம்பத் திங்க்ஸ் வாங்காதீங்க ராகா. எனக்குத் தேவைப்படும் போது நானே அப்பப்போ வாங்கிக்கிறேன்…” என்றான்.

“சரி அத்தான்…” என்றவள் தந்தையுடன் கிளம்பினாள்.

“இங்கே இறக்கி வைங்க. சத்தம் இல்லாம ப்ளீஸ்…” என்று அறைக்கு வெளியே ராகவர்தினி குரல் மென்மையாகக் கேட்க, அந்தச் சத்தமும் பொருட்கள் இல்லாத வீட்டில் பெரிதாகக் கேட்கவும் நன்றாகத் தூங்கி கொண்டிருந்த பிரபஞ்சன் கண் விழித்தான்.

அறை வெளிச்சம் இல்லாமல் இருட்டியிருந்தது. தன் கைபேசியை எடுத்து மணியைப் பார்த்தான். இரவு ஏழு ஆகியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நன்றாகத் தூங்கிவிட்டான் என்று புரிந்தது.

வெளியே வந்து பார்க்க, பாதி வரவேற்பறையை அடைத்தது போல் பொருட்கள் இருந்ததைப் பார்த்து வியந்து போனான்.

நாற்காலிகள், கட்டில், மெத்தை தலையணை, போர்வை, இன்னும் சில சமையலறைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் என்று வாங்கியிருந்தார்கள்.

“என்ன மாமா இது? எதுக்கு ஒரே நாளில் இத்தனையும் வாங்கினீங்க?” என்று கேட்டான்.

“எல்லாம் அவளைக் கேளு…” என்று மகளைக் கையைக் காட்டினார் மாதவன்.

அவரும் அவளிடம் சொல்லிப் பார்த்தார்.

“பிரபா இப்ப ஏதோ கோபத்தில் வீட்டுக்கு போக மாட்டேன்னு தனியா இருக்கான்மா. அவன் மனசு கஷ்டப்பட வேண்டாம்னு நானும் சரின்னு சொல்லியிருக்கேன். கோபம் குறைந்ததும் அவன் வீட்டுக்குப் போயிடுவான். அப்புறம் ஏன் இத்தனை சாமான் வாங்கணும்னு அடம் பிடிக்கிற?” என்று கேட்டார்.

“அத்தான் பத்தி நீங்க புரிந்து கொண்டது அவ்வளவு தானாப்பா? தனியாகப் போகணும்னு அவர் சொன்ன போது இருந்த தீவிரம் அவர் இனி அந்த வீட்டுக்கு போகமாட்டார்னு உறுதியா சொல்ற போல இருந்ததுப்பா. அப்படியே மனசு மாறி அத்தான் திரும்ப வீட்டுக்கு போனாலும் சந்தோசம் தான்.

ஆனால் அது வரை இந்தப் பொருட்கள் கூட இல்லாமல் வெறும் வீட்டில் இருக்க முடியாதுப்பா. இப்போதைக்கு வாங்குவோம். அத்தான் அவர் வீட்டுக்கு கிளம்பிட்டால் அங்கே இந்தப் பொருட்களை எல்லாம் கொண்டு போகட்டும்…” என்றாள்.

அவள் சொன்னதும் சரியாகப் பட, வாங்கி வந்துவிட்டார் மாதவன்.

எதற்கு இவ்வளவு பொருட்கள் என்று கேட்ட பிரபஞ்சனிடமும் அதையே சொல்லி வாயை அடைத்து விட்டாள் ராகவர்தினி.

வாங்கிய பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து விட்டே அவர்கள் வீட்டிற்குக் கிளம்பினார்கள் மாதவனும், ராகவர்தினியும்.

அவர்கள் கிளம்பும் போது, “எனக்கு இன்னும் ஒரே ஒரு உதவி மாமா…” என்று தயக்கத்துடன் கேட்டான் பிரபஞ்சன்.

“என்னன்னு தயங்காமல் சொல்லு பிரபா…” மாதவன் சொல்ல,

“நாளைக்கு என் பைக் மட்டும் எடுத்துட்டு வந்து கொடுக்க முடியுமா மாமா?” என்று கேட்டான்.

“பைக் போதுமா பிரபா? இல்ல கார் எடுத்துட்டு வரவா?”

“கார் வேண்டாம் மாமா. அது அவங்க வெளியே போய் அலைய கஷ்டப்படுறாங்கன்னு வாங்கியது. அது அங்கேயே இருக்கட்டும். எனக்குப் பைக் மட்டும் போதும்…” என்றான்.

“சரி பிரபா, காலையில் எடுத்துட்டு வர்றேன். வேற எதுவும் அங்கே இருந்து எடுத்துட்டு வரணுமா?”

“இல்லை மாமா, வேற எதுவும் வேண்டாம்…” என்றான்.

“நாங்க கிளம்புறோம் அத்தான். கவனமா இருங்க. எதுவும் வேணும்னா அப்பாவுக்கோ, எனக்கோ கால் பண்ணுங்க…” என்றாள் ராகவர்தினி.

“சரிங்க பெரிய மனுஷி…” என்றான் மென்மையாகச் சிரித்துக் கொண்டே.

அவன் முகத்தில் மலர்ந்த சிரிப்பை பார்த்த நிம்மதியுடன் வீட்டிற்குத் தந்தையுடன் கிளம்பினாள் ராகவர்தினி.

அவர்கள் சென்றதும் தனிமை அவனைச் சூழ்ந்து கொள்ள, பிரபஞ்சனின் தனிமை வாசம் அந்த நொடி முதல் ஆரம்பமானது.