1 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 1

ஆண்டு 2019.

ஓங்கி உயர்ந்து கண்ணாடிச் சுவர்களால் பளபளத்துக் கொண்டிருந்தது அந்தக் கணினி தொழில்நுட்ப அலுவலகம்.

மொழி, இனம் பாகுபாடு இல்லாமல் விதவிதமான மனிதர்களைக் கொண்டுள்ள அலுவலகம் அது.

உலகமே கணினிமயமாகிவிட்ட நிலையில் கணினி படிப்பும், வேலையும் அளவில்லாமல் பெருகியிருந்த காலமதில் நாங்கள் சாப்ட்வெர் இன்ஜினியர்களாக்கும் என்ற பெருமையை முகத்தில் தாங்கி, அந்த அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர் பல மென்பொருளாளர்கள்.

அதில் தானும் ஒருவனாக ஒரு ஆங்கிலப் பாடலை வாயில் முணுமுணுத்துக் கொண்டே தன் இருசக்கர வாகனத்தை ஏதோ விமானத்தை ஓட்டும் பெருமையுடன் ஓட்டி கொண்டு வந்து அதன் தருப்பிடத்தில் நிறுத்தி விட்டு இறங்கினான் அவன்.

அதுவரை அவன் கண்களின் பாதுகாப்பிற்காய் மாட்டப்பட்டிருந்த குளிர் கண்ணாடியை, வண்டியை விட்டு இறங்கியதும் சட்டையில் மாட்டிக் கொண்டான்.

வாயில் ஆங்கிலப் பாடலுடன் சூயிங்கமும் அரைப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜீன்ஸ், டீசர்ட் அணிந்திருந்தான். தலையில் கத்தி பட்டே மாதக்கணக்கில் ஆகியிருக்கும் என்பது போல், செழித்து வளர்ந்து பின் கழுத்து முழுவதையும் மறைத்து அதையும் தாண்டி சென்றிருந்த கேசத்தை லேசாகக் குலுக்கி விட்டுக் கொண்டான்.

முன் முடியைக் கையால் நீவி விட்டுக் கொண்டு ஸ்டைல் காட்டினான்.

தோளில் தொங்கிய மடிக்கணினி பையைத் தோள்களை அழுத்தாமல் இழுத்து விட்டுக் கொண்டு சீரான வேகத்தில் அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

அவன் மின்தூக்கியில் ஏறி சென்ற அதே நேரத்தில் தன் ஸ்கூட்டியில் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தாள் அவள்.

சுடிதார் அணிந்து, தலையைப் பின்னி பின்னால் மல்லிகையும் சூடி, நெற்றியில் பொட்டு அதற்கு மேல் திருநீர் கீற்று, அதற்கு மேல் குங்குமம் வைத்து மங்கலகரமாக வந்திறங்கினாள்.

அவள் வாய் காலையில் வேலைக்கு நேரமானதால் சொல்லாமல் விடுபட்டுப்போன காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது.

இன்று வெள்ளிக்கிழமை என்று தலைக்கு ஊற்றியதால் எண்ணெய் வைக்காமல் பறந்த முன் முடிகளைக் காதோரம் நாசுக்காக ஒதுக்கி விட்டுக் கொண்டாள்.

அவளின் மடிக்கணினி பையை ஒருபக்க தோளில் மட்டும் மாட்டி, அலுவலக வாயிலுக்கு முன் இருந்த செயற்கை நீரூற்றை ரசித்துக் கொண்டே நிதானமான நடையுடன் மின்தூக்கியில் ஏறி ஐந்தாம் தளத்தில் இருந்த தன் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அதே அலுவலகத்திற்குள் தான் அவனும் இருந்தான். அவன் ஒரு கேபினில் அமர்ந்திருக்க, அவனைத் தாண்டி நடக்கும் போது விழுந்த வார்த்தைகளில் முகத்தை லேசாகச் சுளித்துக் கொண்டாள்.

“டேய் தினேஷ், இன்னைக்கு வெள்ளிக்கிழமை வார கடைசி நாள். சாயந்திரம் பப்பிற்கு நீயும் வர்ற தானே?” என்று தன் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

“இதென்னடா கேள்வி? வழக்கம் போலப் போறோம், கலக்குறோம்…” என்றான் தினேஷ்.

“போன வாரம் கேட்டப்ப வீட்டில் திட்டுறாங்க, வர மாட்டேன்னு பிகு செய்த?”

“அது தப்புன்னு அப்புறம் தானே புரிந்தது. வாரவாரம் நல்லா ஊத்திட்டு, போன வாரம் குடிக்காமல் தூக்கமே வரலை. திட்டினால் திட்டிட்டுப் போகட்டும். நாம வாங்காத திட்டா? அதை நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்…” என்றான் தினேஷ்.

“அப்படி வாடா வழிக்கு…” நண்பனின் தோளை தட்டி உற்சாகப்படுத்தினான் அவன்.

“டேய் சூர்யா…” என்று அவனின் பின் இருந்து யாரோ அழைக்க, தன் நீள முடியை சிலுப்பிக் கொண்டு தன்னை அழைத்தவன் புறம் திரும்பினான்.

“சொல்லு விஷ்வா…”

“இன்னைக்கு நைட் எனக்கும் சேர்த்து ட்ரீட் வைக்க முடியுமா?” என்று பல்லை இளித்துக் கொண்டே கேட்டான் அந்த விஷ்வா.

“இவன் ஒரு ஓசி கிராக்கி…” என்று தினேஷ், சூர்யா காதில் முணுமுணுக்க,

“இப்ப பார் பிட்டை…” என்று நண்பனைப் பார்த்து கண்ணடித்தவன், “வைக்கிறேன் விஷ்வா. ஆனா அடுத்த வாரம் நம்ம டீம் எல்லாருக்கும் நீ தான் ட்ரீட் வைக்கணும். அதுக்கு ஓகேனா சொல்லு. இந்த வாரம் என் ட்ரீட்…” என்றான்.

அதைக் கேட்டதும் விஷ்வாவின் முகம், இஞ்சி தின்ற குரங்காக மாறியது.

கை நிறையச் சம்பாதித்தாலும் வாரவாரம் நண்பர்களாகச் செல்லும் பப் கொண்டாட்டத்திற்கு உடன் செல்பவன் ஒரு பைசா செலவு செய்ய மாட்டான்.

யார் செலவிலாவது கொண்டாட்டமாக இருந்துவிட்டு வருவான்.

அப்படிப்பட்டவனை டீம் மொத்தத்திற்கும் செலவு செய்யச் சொன்னால் செய்வானா என்ன?

“இன்னைக்கு நைட் அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாங்க சூர்யா. அதை மறந்துட்டு இன்னைக்கு நானும் கூட வர்றேன்னு சொல்லிட்டேன். நீங்க போயிட்டு வாங்க…” என்று மெல்ல நழுவினான் விஷ்வா.

சூர்யாவும், தினேஷும் ஹைபை கொடுத்துக் கொண்டனர்.

“ஆனாலும் இவனை நம்ப முடியாது. நாம கிளம்பும் போது ஒட்டிக்குவான்…” என்றான் தினேஷ்.

“வரட்டும். எல்லாச் செலவும் அவன் தலையில் கட்டுறேன்…” என்ற சூர்யா, சூயிங்கத்தை மென்று கொண்டான்.

அவர்கள் பேச்சை காதில் வாங்கிக் கொண்டே அவர்களுக்கு அடுத்து இருந்த கேபினில் நுழைந்தாள் அவள்.

“ஹாய் யுவா, என்ன இன்னைக்கு வெள்ளிக்கிழமையா? நீ மங்கலகரமா வரும்போதே மறந்து போன கிழமை எல்லாம் கூட ஞாபகம் வந்திடும்…” என்று கேலியாகத் தோழியை வரவேற்றாள் நந்தினி.

“என்னவோ இன்னைக்கு மட்டும் தான் நான் இப்படி வந்த மாதிரியும், மத்த நாள் எல்லாம் பக்கி மாதிரி வந்த மாதிரியும் சொல்ற?” என்று கேட்டுக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள் யுவஶ்ரீ.

“மற்ற நாளிலும் நல்லாத்தான் வருவ. ஆனா வெள்ளிக்கிழமை இன்னும் ஸ்பெஷலாத்தான் வருவ…” என்றாள் நந்தினி.

தோழிகளுக்குள் பேச்சுச் சரளமாக ஓட, அதோடு வேலையையும் ஆரம்பித்தனர்.

மணி பதினொன்று ஆக, “ஹாய் நந்து, காஃபி குடிக்கப் போறேன். நீயும் வர்றியா?” என்று கேட்டுக் கொண்டு அங்கே வந்தான் தினேஷ்.

“போகலாமா யுவா?” என்று உடனே தோழியிடம் கேட்டாள் நந்தினி.

“நீங்க போயிட்டு வாங்க நந்தினி. நான் அப்புறம் போய்க்கிறேன்…” யுவஶ்ரீ சொல்ல,

“சும்மா வா யுவா. எனக்குக் கம்பெனி கொடு…”

“உங்க இரண்டு பேருக்கு இடையில் நான் எதுக்கு நந்தி மாதிரி? நீ போ நந்தினி… தினேஷ் வெயிட் பண்றாங்க பார்…”

யுவஶ்ரீ சொல்லியும் நந்தினி நீ வந்தால் தான் போவேன் என்பது போல் அமர்ந்திருந்தாள்.

“நீங்களும் பேசாம கிளம்பி வாங்க. இல்லைனா உங்க ஃபிரண்ட் இந்த இடத்தை விட்டு நகர மாட்டாங்க. லவ் பண்றோம்னு தான் பேர். இங்கே இருக்கும் கஃபடேரியாவுக்குப் போகக் கூட என்னை நம்பி வர மாட்டாங்க…” என்று நந்தினியை முறைத்துக் கொண்டு சொன்னான் தினேஷ்.

“நம்பிக்கை எல்லாம் இருக்கு மேன். யுவாவை விட்டுட்டுப் போனால் அவள் தனியா எல்லாம் போக மாட்டாள். அதான் நம்ம கூடக் கூட்டிட்டுப் போகலாம்னு பார்த்தேன்…” என்றாள்.

“ஏய், எனக்காகவா பார்க்கிற? நான் தனியா போய்க்குவேன்…” யுவஶ்ரீ சொல்ல,

“நீ பேசாம இரு யுவா. தினு கை இப்ப எல்லாம் சும்மா இருக்க மாட்டீங்குது. நான் தடுத்தால் கோவிச்சுக்கிறார். எதுக்கு எங்களுக்குள் தேவையில்லாத பிரச்சினைன்னு பார்க்கிறேன். நீ வந்தால் அடக்கி வாசிப்பார்…” என்று தோழியின் காதில் மெல்ல முணுமுணுத்தாள் நந்தினி.

கேட்ட யுவஶ்ரீக்குச் சங்கடமாக இருந்தது.

ஆனாலும் தோழி அவ்வளவு தூரம் சொல்லும் போது மறுக்க முடியாமல் வருவதாகச் சொன்னாள்.

“டேய் சூர்யா, நீயும் வா…” அவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் கேபினை தாண்டும் போது, நண்பனையும் அழைத்தான் தினேஷ்.

அவனை அழைக்கவும் யுவஶ்ரீயின் முகம் மாறியது.

“நீ முன்னால் போ தினேஷ், வர்றேன்…” என்று சூர்யா சொன்னதும், அவர்கள் மட்டும் முன்னால் சென்றனர்.

நந்தினியுடன் சென்றவளை வெறித்தன சூர்யாவின் கண்கள்.

பின் அலட்சியமாகத் தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

“காஃபி வித் சமோசா தினு. வாங்கிட்டு வாங்க. நாங்க இங்கே உட்கார்ந்திருக்கோம்…” என்ற நந்தினி இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

“என் காஃபி நான் வாங்கிட்டு வர்றேன்…” யுவஶ்ரீ சொல்ல,

“நீ இரு, தினு வாங்கிட்டு வருவாங்க…” என்றாள் நந்தினி.

“உனக்கு அவங்க வாங்கட்டும். எனக்கு நான் பார்த்துக்கிறேன்…” என்றவள், தானே வாங்க சென்றுவிட்டாள்.

தனக்கு வாங்கி விட்டு வந்த யுவஶ்ரீ, நாசுக்காக நந்தினியின் எதிரே அமர்ந்து கொண்டாள்.

அவளுக்குப் பின் வாங்கி வந்த தினேஷ், நந்தினியின் அருகே அமர்ந்து கொண்டான்.

இருவரும் பேசிக் கொண்டே சமோசாவையும் காஃபியையும் சுவைக்க, அவர்களின் பேச்சில் யுவஶ்ரீ கலந்து கொள்ளவில்லை.

ஆனால் அவளை அப்படியே விடாமல் நந்தினி தங்கள் பேச்சிற்குள் இழுத்தாள்.

யுவஶ்ரீ அவளிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்த போது, அவளின் அருகில் இருந்த இருக்கையில் வந்தமர்ந்தான் சூர்யா.

அவன் கையில் ஒரு குளிர்பான பாட்டில் இருந்தது.

அவன் வந்ததும் சட்டென்று தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள் யுவஶ்ரீ.

“அப்புறம் உங்க லவ் ட்ரெயின் எந்த ஊரு வரை ஓடியிருக்கு? வீட்டில் சொல்லியாச்சா?” என்று நண்பனிடம் பேச்சுக் கொடுத்தான் சூர்யா.

“அதெல்லாம் டெல்லி தாண்டி ஓடிட்டு இருக்கு. அதுக்கு மேல நகர மேடம் தான் விட மாட்டிங்கிறாங்க…” என்று சலித்துக் கொண்டான் தினேஷ்.

“அப்போ அப்படியே தப்பிச்சு ஓடி வந்திடுடா தினேஷ். கல்யாண பந்தத்தில் எல்லாம் மாட்டிக்காதே! தலைவலி பிடித்த கழுதை அது…” சூர்யா நண்பனுக்கு ஐடியா சொல்ல,

நந்தினி சூடாக அவனை முறைத்தாள்.

“ஹலோ, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டால் அது உங்க ஃபிரண்டுக்கு தலைவலி பிடித்ததா?” மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க கேட்டாள்.

“நான் எங்கே அப்படிச் சொன்னேன்? கல்யாணத்தைத் தான் சொன்னேன்…” என்ற சூர்யா, அலட்சியமாகத் தன் வழக்கம் போல் தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

“என்னைத்தானே கல்யாணம் பண்ணிக்கப் போறார்? அப்ப என்னைச் சொன்னதாகத் தானே அர்த்தம்…” என்று சீறினாள் நந்தினி.

“நீங்க அப்படி அர்த்தம் எடுத்துகிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை…” சூர்யாவிடம் அதே அலட்சியம்.

நந்தினி இப்போது அவனை முறைப்பதை விட்டுவிட்டு, தினேஷை முறைத்தாள்.

“எப்பா, சாமி! என் வாழ்க்கையில் பத்த வைக்காதே! ஏற்கெனவே மேடம் என்கிட்ட தனியா பேசவே யோசிக்கிறாங்க. அப்புறம் மொத்தமா பேசாம போயிடுவாங்க…” என்று அலறினான் தினேஷ்.

“உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். கேட்காட்டி போ!” என்றான் சூர்யா.

அதில் இன்னும் கோபம் கொண்டு நந்தினி இருக்கையை விட்டு எழ, அவளின் கையை வேகமாக பற்றித் தடுத்தான் தினேஷ்.

“கல்யாணம் தலைவலியா மாறுச்சுனா தலைவலி தைலத்தைத் தேய்ச்சுச் சமாளிச்சுப்பேன். நீ என்னை ஆளை விடுடா சாமி…” என்று நண்பனிடம் சொன்னவன்,

“அவன் தானே நந்து சொன்னான். நானா சொன்னேன்? அதுக்கு எதுக்கு என் மேல் கோவிச்சுட்டு போற?” என்று கேட்டான்.

“உங்க ஃபிரண்டு புத்தி தானே உங்களுக்கும் இருக்கும்? உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு நான் என்ன பாடு படணுமோன்னு நான் தான் பயப்படணும். அதை விட்டு நீங்க எங்களைத் தலைவலினு சொல்லுவீங்களோ?” என்று தினேஷிடம் பாய்ந்தாள்.

‘பத்த வச்சுட்டயே பரட்டை!’ என்பது போல் நண்பனை பார்த்து விட்டு, நந்தினியை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

“அவனைப் போல எல்லாம் நான் இல்லைமா…” என்று தினேஷ் சொல்ல, நந்தினி அதற்கும் சீற, கோலாகலமாக அவர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டு, ஒன்றுமே அறியாதவன் போல் கூலாகக் குளிர்பானத்தை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

‘நாரதர் வேலை பார்த்துட்டு கூலா இருப்பதைப் பார்!’ என்று உள்ளுக்குள் ஏற்பட்ட கடுப்புடன் அருகில் அமர்ந்திருந்தவனை முறைத்தாள் யுவஶ்ரீ.

அவளின் புறம் நிதானமாகத் திரும்பியவன், ‘வேணுமா?’ என்பது போல் கையில் இருந்த குளிர்பானத்தைக் காட்டிக் கேட்டான்.

சட்டென்று தன் தலையைத் திருப்பிக் கொண்டாள் யுவஶ்ரீ.

‘வேணாம்னா போ!’ என்று அலட்சியமாகத் தோளை குலுக்கி கொண்டு, தினேஷ், நந்தினி சண்டையைச் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தான் சூர்யா.

“நந்தினி, வா போகலாம். ஒருத்தர் ரசிக்கிறதுக்கு இப்போ நீ சண்டை போட்டுட்டு இருக்க…” தோழியை அடக்கி, அங்கிருந்து அழைத்துச் சென்றாள் யுவஶ்ரீ.

“ஏன்டா உனக்கு இந்த வேலை? இனி அவளை மலையிறக்க எனக்கு இரண்டு நாள் ஆகும்…” என்று சலித்துக் கொண்டான் தினேஷ்.

“அனுபவசாலியா நண்பனுக்கு நல்லது சொன்னேன். அதுக்கு அவங்களுக்குக் குத்துச்சுனா அது என் தப்பில்லை…” என்றான்.

“நீ ஏன் சொல்ல மாட்ட? உன்னை எல்லாம்…” என்ற தினேஷால் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.

“கூல் மச்சி! ஈவ்னிங் இன்னைக்குப் பப்ல என்ன வேணும்னு சொல்லு, சமாய்ச்சுடலாம்…” என்று அவனின் மனதை திசை திருப்பினான்.

மாலை ஆறு மணி ஆனதும், சூர்யா முதல் ஆளாகத் தனது பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்ப, அவனுடன் தினேஷும் மற்ற சில நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

“வெள்ளிக்கிழமை ஆறு மணியானால் போதும் இதுங்களைக் கையில் பிடிக்க முடியாது. கல்யாணம் மட்டும் முடியட்டும். தினேஷை இந்தப் பழக்கத்தைத் தான் முதலில் நிறுத்த வைப்பேன்…” என்ற தோழியை ‘அட பாவமே!’ என்பது போல் பார்த்து வைத்தாள் யுவஶ்ரீ.

“என்ன யுவா அப்படிப் பார்க்கிற?” நந்தினி கேட்க,

“முயற்சி செய்!” என்றதுடன் முடித்துக் கொண்டாள்.

“சரி வா, நாமும் கிளம்புவோம்…” என்று இருவரும் கிளம்பினார்கள்.

வண்டியை எடுக்கச் செல்லும் போது வழியில் சூர்யா தன் வண்டியில் எதிரே வர, அவனை முறைத்துக் கொண்டே அவனைத் தாண்டி சென்றாள் யுவஶ்ரீ.

அவளின் முறைப்பை அவனும் கண்டான் தான்.

ஆனால் அவளின் பார்வைக்கு ‘சரிதான் போடி!’ என்ற அலட்சியப் பார்வையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டுச் சென்றான்.

நேராகப் பப்பிற்குச் சென்று மூச்சு முட்ட குடித்து விட்டு ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தான் சூர்யா.

யுவஶ்ரீ வீட்டிற்குச் சென்ற போது நன்றாக இருட்டியிருந்தது.

தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் அலுப்புடன் நுழைந்தாள்.

ஐந்தாவது மாடியில் இருந்த பிளாட் அது. வீடு இருளாக இருக்க, விளக்கை போட்டு விட்டு அக்கடா என்று சோஃபாவில் சாய்ந்தாள்.

காலையிலிருந்து அமர்ந்தே இருந்ததில் முதுகு கொஞ்ச நேரம் படேன் என்று கெஞ்சியது.

ஆனால் படுத்தால் இன்னும் சோர்வு தான் வருமே தவிர, இரவு உணவு செய்ய முடியாது என்று நினைத்தவள், எழுந்து படுக்கையறைக்குள் சென்றாள்.

அலமாரியில் இருந்து ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

லேசாகக் குளித்துவிட்டு நைட்டிக்கு மாறி சமையலறைக்குச் சென்றாள்.

காலையில் நேரம் ஆகிவிட்டதால் ஒதுங்க வைக்க முடியாமல் போன கிச்சனை பார்த்து அலுப்பு தான் வந்தது.

அதை உடனே ஒதுங்க வைக்காமல், இரவு உணவுக்குச் சப்பாத்தி மாவை எடுத்து முதலில் பிசைந்தவள், தொட்டுக் கொள்ளப் பன்னீர் குருமாவை வைக்க ஆரம்பித்தாள்.

அந்த வேலை முடிந்ததும், அனைத்தையும் ஒதுங்க வைத்துப் பாத்திரங்களைக் கழுவி எடுத்து வைத்த பிறகு தான், சாப்பாத்தியைச் சுட ஆரம்பித்தாள்.

தனக்கு இரண்டு சப்பாத்திகளைச் சுட்டு எடுத்தவள், பன்னீர் குருமாவை வைத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றாள்.

அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்து கொண்டே சப்பாத்தியை உண்ண ஆரம்பித்தாள்.

சாலையில் செல்லும் வாகனங்களையும், வண்ண விளக்குகளையும் பார்த்துக் கொண்டே உணவை உண்டு முடித்தாள்.

சமையலறைக்குச் சென்று கை கழுவும் போதே தட்டையும் கழுவி வைத்து விட்டு, தொலைக்காட்சியைப் போட்டு விட்டுச் சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.

ஒரு பாடல் சேனலை ஓட விட்டவள், அப்படியே சோஃபாவில் பின்னால் தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாள்.

நேரம் எவ்வளவு விரைவாக ஓடியதோ அவள் அறியாள்!

பாடல் கேட்டுக் கொண்டே கண்ணசந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அவளின் உறக்கம் கலைந்து போனது, கதவு தட்டப்பட்ட ஒலியில்!

அந்தச் சத்தத்தைக் கேட்டதும், ‘ம்ப்ச்!’ என்று சலிப்பு தான் ஏற்பட்டது.

கதவு தட்டும் ஒலியுடன் கேட்ட குரலும் அவளின் எரிச்சலை அதிகரித்தது.

“ஏய் பொண்டாட்டி! என் பொண்டாட்டி! கதவை திறடி பொண்டாட்டி!” என்று குழறலான குரல் கேட்க, கடுப்புடன் போய்க் கதவை திறந்தாள்.

“ஹாய் பொண்டாட்டி! சாக்கு சுத்திய பொண்டாட்டி! என்னை உள்ளே கூப்பிட்டுப் போ போண்டா டீ!” என்று போதையில் குழறிய கணவனை முறைத்துப் பார்த்தாள் யுவஶ்ரீ.

“என்னடி லுக்கு? என் லோலாக்கு…!” என்று உதட்டை சுளித்துக் கிண்டலாகச் சொன்ன படி, நிற்க முடியாமல் அப்படியே அவளின் மீது சாய்ந்தான் சூர்யா.