1 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 1

கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய மண்டபத்தின் வெளியே வாசல் கதவிற்கு இருபுறமும் பெரிது பெரிதாக இரண்டு திண்ணைகள் இருந்தன.

அதில் வலது பக்கம் இருந்த திண்ணையில் பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டிருக்க, நாற்பது வயதிலிருந்து எம்பது வயதைத் தொட்டவர்கள் வரை பத்து ஆண்கள் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிந்து அரைவட்டமாக அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்கு நடுவில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைக்குள் தன் ஆஜானுபாகுவான உடலைப் புகுத்தி, மாநிறமாக இருந்த முகத்தில் கருகருவென்று இருந்த மீசையை இரண்டு பக்கமும் முறுக்கி விட்டு, கண்களில் கூர்மையையும், முகத்தில் இறுக்கத்தையும் சுமந்து சம்மணமிட்டு அமர்ந்திருந்தவன் மட்டும் முப்பது வயதைத் தொட்டவனாக இருந்தான்.

கூர்மையுடன் இருந்த அவனின் கண்கள் தன் எதிரே ஊரே கூடியிருந்த அந்தக் கூட்டத்திற்கு நடுவே ஜீன்ஸ் பேண்ட்டும், டீசர்ட்டும் அணிந்து கைகளைக் கட்டிக் கொண்டு, கண்களில் அலட்சியத்தைத் தாங்கி, முகத்தில் இறுக்கத்தைக் குடிபுக வைத்துக் கொண்டிருந்த அந்தக் கன்னிகையை மட்டுமே கண்டு கொண்டிருந்தன.

அவனின் கண்களிலிருந்த கூர்மையைச் சளைக்காமல் எதிர்கொண்டு நின்றிருந்தாள் கன்னிகை!

“இந்தப் புள்ளக்கு எம்புட்டுக் கொழுப்பு பாரேன். செய்றதும் செய்து போட்டு எம்புட்டு தைகிரியமா நம்ம நாட்டாமையையே முறைக்குது…” என்று அவளுக்குப் பக்கவாட்டில் நின்றிருந்த அந்த ஊர் பெண்ணொருத்தி இன்னொரு பெண்ணிடம் பகிரங்கமாகவே ரகசியம் பேசினாள்.

அந்தப் பெண்ணின் பேச்சு அங்கே கூடியிருந்த அத்தனை ஜனங்களின் காதிலும் விழுந்த போது நடுவில் நின்றிருந்த அவளின் காதில் விழாமல் இருக்குமா என்ன? மிக நன்றாகவே விழுந்தது.

ஆனாலும் அசராமல் அவனைப் பார்த்த படி தான் நின்றாள்.

“முறைக்காதே சக்தி…” கன்னிகையின் அருகில் நின்றிருந்த ஆடவன் அவளை எச்சரித்தான்.

“சும்மா பயந்து நடுங்காதே பிரேம். இவனுங்க நம்மளை என்ன செய்ய முடியும்?” சபை நடுவில் அமர்ந்திருந்த நாட்டாமை என்பவனைத் தெனாவெட்டாக ஒரு பார்வை பார்த்து விட்டுப் பக்கத்தில் எச்சரித்தவனிடம் அலட்சியமாகச் சொன்னாள்.

“இது ரொம்பவும் கட்டுப்பாடு பார்க்கும் ஊராம் சக்தி. தப்புச் செய்தவங்களுக்குத் தண்டனையைக் கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பாங்களாம்…” என்று லேசாக நடுங்கிய குரலில் சொன்னவனைத் திரும்பிப் பார்த்து இப்போது அவனை முறைத்தாள்.

“நீயும், நானும் என்ன தப்பு செய்தோம்?” என்று பல்லை கடித்த படி பிரேமிற்கு மட்டும் கேட்கும் குரலில் சீறினாள்.

“நாம தான் ஒரு தப்புமே செய்யலையே…” வேகமாகச் சொன்னவனின் குரலில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அப்போ வாயை மூடிக்கிட்டு கம்முன்னு இரு. இங்கே யார் என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் வாயை மூடிக்கிட்டு இருக்கணும். ஏதாவது உளறின…!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவள், கடைசி வார்த்தையைச் சொல்லாமல் நிறுத்தி, ‘நான் என்ன செய்வேன்னு உனக்கே தெரியும்’ என்று பார்வையாலேயே அவனுக்குப் பயத்தைக் காட்டினாள்.

‘சக்தி’ என்ற பெயர் கொண்ட அந்த ராட்சசி என்ன செய்வாள் என்று அவனுக்குத் தான் நன்றாகத் தெரியுமே!

அவளைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் இனி வாயைத் திறப்பானா என்ன?

பசை போட்டு வாயை ஒட்ட வைத்தது போல் இறுக மூடிக் கொண்டான்.

‘அது!’ என்ற பார்வையை அவனின் புறம் செலுத்தி விட்டு, மீண்டும் நாட்டாமை நாயகனின் புறம் தன் பார்வை திருப்பினாள்.

“ஏம்மா, உங்க ரெண்டு பேரு மேல தான் பிராது வந்திருக்கு. ஊரே கூடிவந்து நிக்குது. ஊருக்கு முன்னாடி நிறுத்தி வச்ச பிறகும் இரண்டு பேரும் ரகசியமா கொஞ்சி பேசிட்டு இருக்கீக…” என்று மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் அவளை அதட்டினார்.

‘யாரு நானும் இவளும் கொஞ்சிக்கிட்டோம்? அதை நீ பார்த்த?’ என்பது போல அந்தப் பெரியவரை பார்த்தான் பிரேம்.

‘இவளை பத்தி சரியா தெரியாம பஞ்சாயத்தில் நிறுத்தி வச்சுட்டீங்கய்யா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை மட்டும் தான் இவள் மிரட்டினாள். ஆனா இனி இந்த ஊரையே ஒத்த ஆளா நின்னு மிரட்ட போகிறாள்…” என்று நினைத்துக் கொண்டான்.

“பிராது என்னன்னு யாராவது சொல்லுங்கய்யா. விசயம் தெரியாதவங்களும் தெரிஞ்சுகிட்டும்…” என்று மேடையில் இருந்த ஒரு பெரியவர் குரல் கொடுத்து விசாரணையை ஆரம்பித்து வைத்தார்.

அப்போது கூட்டத்தின் ஓரத்தில் நின்றிருந்த ஒருவன் முன்னால் வந்து, “அய்யா, இந்தப் பொண்ணும், பையனும் இந்த ஊருக்கு வந்து பத்து நாள் ஆகுதுங்க.

இவுக ரெண்டு பேரும் இங்கிருந்து சென்னைக்கு வேலை பார்க்க போன நம்ம பரமசிவம் வீட்டுல தான் தங்கி இருக்காக. பரமசிவம் தான் இவுகளை இங்கன தங்கிக்கச் சொல்லி வீட்டு சாவியைக் கொடுத்து விட்டானாம்.

இவுக ரெண்டு பேரும் எதுக்கு இங்கன இருக்காங்கன்னு விசாரிச்சப்ப, அவுக பட்டணத்திலேயே பொறந்து வளர்ந்தவங்களாம். நம்ம ஊரை மாதிரி கிராமத்தை பார்க்க ஆசைன்னு இங்கன வந்திருக்கிறதா சொன்னாவுக. நம்ம ஊரு கோவில், குளம், வரப்பு, தோப்புன்னு பத்து நாளா சுத்தி வந்தாக.

ஆனா பாருங்கய்யா, இவுக ரெண்டு பேரையும் இந்த ஊரே புருசன், பொஞ்சாதியாத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தது. அப்படிச் சோடி போட்டுக்கிட்டு சுத்திட்டு இருப்பாக. ஆனா இப்போதாங்க அய்யா விசயம் தெரிஞ்சது. இவுக ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்காதவங்கன்னு. நம்ம ஊருல ஒரு ஆம்பிளையும், பொம்பளையும் தனியா சந்திச்சு பேசிப்புட்டாலே பெரிய பிரச்சனை ஆகிப் போகும்.

ஆனா இவுக ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்காமலேயே ஒரே வீட்டில் இருந்துருக்காக. இந்த விசயம் தெரிஞ்ச பிறகும் எப்படிங்க அய்யா சும்மா இருக்க முடியும்? அது தான் அவுக மேல ஊரோட சார்பா பிராது கொடுத்திருக்கோம் அய்யா. இதுக்கு நீங்க தான் நல்ல தீர்வா சொல்லோணும்…” என்றான் அவன்.

“ஏம்மா உன் மேல வச்சுருக்கிற பிராது உண்மையா?” நாட்டாமை நாயகனின் அருகில் அமர்ந்திருந்த எழுபது வயதில் இருந்து ஒரு பெரியவர் கேட்க,

“என்ன பிராதுங்க?” என்று நிதானமாகக் கேட்டாள் சக்தி.

“என்னது? என்ன பிராதா? இப்போ தானே எங்க ஊர் ஆளு விலாவாரியா சொன்னான். என்னமோ காது கேட்காதவக் கணக்கா நிதானமா திரும்பக் கேட்குற?” என்று இன்னொரு பெரியவர் குதித்தார்.

“அவர் நாங்க இந்த ஊருக்கு எதுக்கு வந்தோம். என்ன செய்தோம்னு தானுங்களே சொன்னார். அதில் எங்க மேல உள்ள பிராது என்னன்னு எனக்கு ஒன்னும் புரியலையே?. நான் சின்னப் பொண்ணு. பெரியவர் நீங்களே எனக்குப் புரியுற மாதிரி சொல்லலாமே…” என்று ஒன்றுமே அறியாதவள் போன்ற பாவனையில் கேட்டு வைத்தாள்.

‘அடிப்பாவி! பச்சை மண்ணைப் போலக் கேட்டு வைக்கிறாளே… பெரியவங்களே! தாய்மார்களே! இவ கொடுக்கிற இந்த எக்ஸ்பிரஷன்னுக்கு நீங்க எல்லாம் ஏமாறப் போறீங்கனு அர்த்தம். உஷாரா இருந்துக்கோங்க…’ என்று மனதிற்குள் கவுன்டர் கொடுத்துக் கொண்டான் பிரேம்.

“நீயும் உன் பக்கத்துல நிக்கிற தம்பியும் புருசன், பொஞ்சாதின்னு சொல்லி…”

“ஐயா, ஒரு நிமிஷம்! நானும் இவனும் புருஷன் பொண்டாட்டின்னு உங்ககிட்ட வந்து எப்ப சொன்னேன்னுங்க ஐயா?” என்று அவரின் பேச்சை இடைவெட்டி கேட்டாள் சக்தி.

“எங்க ஊரு ஆளுகிட்ட…”

“திரும்பவும் ஒரு நிமிஷமுங்க ஐயா. இந்த ஊருல யார்கிட்டயும் நாங்க ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டின்னு நானும் சொன்னது இல்லை. அவனும் சொன்னது இல்லை.

எங்களைப் பார்த்தவங்க அவங்களா நாங்க இரண்டு பேரும் புருஷன், பொண்டாட்டின்னு நினைச்சுக்கிட்டதுக்கு நாங்க என்னங்கய்யா பண்ண முடியும்?” என்று அழுத்தமாகக் கேட்டாள் சக்தி.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அதை நீங்க மறுக்கவும் இல்லையே?” என்று ஒருவர் கேட்டார்.

“அடுத்தவங்க என்ன நினைச்சாங்கனே தெரியாமல் அவங்ககிட்ட நாங்களா போய் எப்படிங்க ஐயா மறுப்பு தெரிவிக்க முடியும்?” என்று பட்டென்று திருப்பிக் கேட்டாள்.

அவள் பட்பட்டென்று பேச, நாட்டாமை நாயகனோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்னும் சுற்றி இருந்தவர்கள் தான் அவளிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார்களே தவிர அவன் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசினான் இல்லை.

ஊர் மொத்தமும் கூடி நிற்க, பெரிய பெரிய தலைகள் மேடையில் இருந்து கேள்விகணைகளை வீச, ஒற்றை ஆளாகச் சிறிதும் தடுமாறாமல், வார்த்தைகளில் பிசிறும் இல்லாமல் நிமிர்ந்து நின்று கேள்விகளை வீசியவர்களின் முகம் பார்த்து இதோ பதிலை வாங்கிக் கொள்ளுங்கள் என்பது போல் வார்த்தைகளை வீசினாள்.

“ஏப்பா, சுத்தி வளைச்சு பேசாம விசயத்துக்கு வாங்கப்பா…” என்று ஒரு பெரியவர் சப்தம் கொடுக்க,

“சரிமா, நீங்க புருஷன் பொஞ்சாதினு இந்த ஊரில் யார்கிட்டயும் நீங்களா சொல்லலை. நாங்களா தான் அப்படி நினைச்சுக்கிட்டோம். ஆனா அப்படி நினைக்கும் படி நடந்துகிட்டது நீங்க தானே?”

“நாங்க அப்படி என்னங்க ஐயா எங்களைப் புருஷன், பொண்டாட்டின்னு நீங்க நினைக்கும் படியா நடந்துகிட்டோம்?”

“ஒரு வயசுக்கு வந்த பொண்ணும், ஒரு இளந்தாரி பயலும் ஒரே வீட்டில் ஒண்ணா தங்கியிருந்தால் நாங்க அவங்களைப் புருசன் பொஞ்சாதின்னு தான் நினைப்போம்.

நீங்க ரெண்டு பேரும் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து பெரியவக யாரும் துணைக்கு இல்லாத வீட்டில் தனியா தங்கியிருக்கீக. அதுமட்டுமில்லாம சோடி போட்டுக்கிட்டு இந்த ஊருக்குள்ள சுத்தி வந்திருக்கீக. அப்பப்போ நீங்க தொட்டு பேசுவதைக் கூட எங்க ஊரு ஆளுங்க பார்த்திருக்காக…”

“நாங்க ஒரே வீட்டில் தங்கியிருந்தது உண்மை தானுங்க ஐயா. ஆனா ஒரே ரூமில் தங்கியிருக்கலை. அதோட எங்களுக்குள்ள நாங்க தொட்டுப் பேசிக்கிறது எல்லாம் பழக்கம் தான்…” என்றாள் சக்தி.

“பூட்டின வீட்டுக்குள்ளார ஒரே அறைக்குள்ள நீங்க இருக்கலைனு வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு எப்படிமா தெரியும்? நீ பொய்யும் சொல்லலாமே?

உங்களுக்குத் தொட்டுப் பேசுறது எல்லாம் பழக்கமா இருக்கலாம். ஆனா இந்த ஊருக்கு அது பழக்கம் இல்லை…” என்று வயதில் மூத்த ஒருவர் நாட்டாமையின் அருகில் இருந்து கண்டிப்புடன் சொன்னார்.

“எனக்குப் பொய் சொல்ல தெரியாதுங்க ஐயா. நீங்க எங்களைத் தப்பா புரிஞ்சுகிட்டா நாங்க என்னங்க ஐயா செய்ய முடியும்?” என்று அலட்சியமாகக் கேட்டாள் சக்தி.

“இதோ பாருமா, இந்தத் தெனாவெட்டான பேச்செல்லாம் இந்த ஊருக்குச் செல்லாது. நீங்க எந்த ஊரா இருந்தாலும் இப்போ நீங்க எங்க ஊரு கட்டுப்பாட்டுக்குள் வந்துட்டீக. இங்கன இருக்குற வரைக்கும் நீங்க இந்த ஊரு நடைமுறைக்குக் கட்டுப்பட்டுத் தான் ஆகணும்…” என்று இன்னொரு பெரியவர் அதட்டலாகச் சொன்னார்.

“என்ன விதமா நாங்க கட்டுப்படணும்னு நீங்க நினைக்கிறீங்க ஐயா?” என்று துணிச்சலாகவே கேட்டாள் சக்தி.

“சக்தி, போதும்! நீ ரொம்ப வாய் கொடுக்குற. இது நம்ம இரண்டு பேருக்குமே நல்லது இல்லை…” என்று அவ்வளவு நேரம் கடைபிடித்த மௌனத்தை உடைத்துப் பிரேம் அவளை அடைக்க முயன்றான்.

“உன்னை இங்கே என்ன நடந்தாலும் பேச கூடாதுன்னு சொல்லியிருக்கேன் பிரேம்…” என்று கண்டிப்புடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் சக்தி.

“ஆனா இவங்க பேச்சு போற திசை சரியில்லை சக்தி…” என்று அவளை எச்சரிக்க முயன்றான்.

“இந்த ஊருக்காரங்க பேச்சு எந்தத் திசையில் போகும்னு நமக்குத் தெரியாதா என்ன?” என்று அலட்சியமாகவே கேட்டவள், அவனின் கண்களை ஆழ்ந்து பார்த்தாள்.

‘தெரியும்…’ என்பது போல் அவனின் தலை தன்னால் ஆடியது.

“அப்போ வாயை மூடிட்டு இரு. அவங்க எங்க வர்றாங்களோ வரட்டும். அதை நமக்குச் சாதகமா எப்படி மாத்திக்கலாம்னு நான் பார்த்துக்கிறேன்…” என்று சொல்லி அவனை அடக்கி விட்டு மீண்டும் மேடையை நோக்கி நிதானமாகப் பார்வையைத் திருப்பினாள்.

அவளின் பார்வை இப்போது நாட்டாமையின் மீது தீர்க்கமாக விழுந்தது.

சுற்றி உள்ள பெரியவர்கள் விசாரணையை முடித்த பிறகு தான் அவன் அனைத்தையும் கிரகித்துத் தீர்ப்புச் சொல்லுவான் என்று அவள் அறிந்திருந்தாள்.

அந்த ஊர் நடைமுறை அது. அதனால் அவனைக் கூர்மையுடன் பார்வையால் அளந்தாள்.

அவளை விட அவன் தன் பார்வையால் அவளை ஊடுருவிப் பார்த்தான்.

அவளின் அருகில் இருந்த பிரேமையும் அடுத்ததாகப் பார்த்தான்.

இருவரையும் பார்வையால் ஆராய்ந்து விட்டு, தன் அருகில் இருந்த பெரியவர்களைப் பார்த்தான்.

“நம்ம ஊரு முறைப்படி அவங்களுக்கான தீர்ப்பு என்னன்னு சொல்லிப்போடுங்க தம்பி…” என்று அங்கிருந்ததிலேயே வயதில் மூத்தவர் சொல்ல, தன் பார்வையை மீண்டும் சக்தி, பிரேமின் புறம் திருப்பினான்.

“இந்த ஊரு பெரியவங்க எல்லாம் வந்த பிராதை பற்றி விசாரிச்சுட்டீங்க. இப்போ நான் என் தீர்ப்பை சொல்லும் நேரமிது. நம்ம ஊர் வழக்கப்படி ஒரு ஆணும், பெண்ணும் தனியா ஒரே வீட்டில் தங்கியிருந்தால் அவங்களுக்கு இந்தப் பஞ்சாயத்து முன்னிலையில் கல்யாணம் செய்து வைப்பது தான் காலம் காலமா இந்த ஊர் வழக்கம். அதன்படி அந்தப் பொண்ணுக்கும், பையனுக்கும் இப்போ இங்கே கல்யாணம் நடக்கணும்…” என்று கணீரென்ற குரலில் நாட்டாமை சொல்ல,

அவனின் தீர்ப்பை கேட்டு “நோ…” என்று பிரேம் அலற,

சக்தியோ சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

‘இந்தத் தீர்ப்பை தான் நீ சொல்லுவன்னு எனக்குத் தெரியும்டா…’ என்பது போல் நாட்டாமையை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

அவளின் அலட்சிய பாவனையை ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி பார்த்த நாட்டாமை, “தாலி எடுத்துட்டு வாங்க…” என்று கூட்டத்தினரை பார்த்து உத்தரவிட்டான்.

“இல்லை, இல்லை… எங்களுக்குள்ள கல்யாணம் எல்லாம் சரி வராது…” என்று வேகமாக மறுப்புத் தெரிவித்தான் பிரேம்.

“ச்சு… பதறாதே பிரேம்…” என்று அவனை அடக்கிய சக்தி.

“நானும், பிரேமும் நல்ல ப்ரெண்ட்ஸ். அதைத் தாண்டி எங்களுக்குள் ஒன்னும் இல்லை. அதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டுத் தப்பான தீர்ப்பு வழங்கினா அதுக்கு நாங்க கட்டுப்பட முடியாது…” என்று நாட்டாமையைப் பார்த்துத் தைரியமாக அறிவித்தாள்.

“ஏய் பொண்ணு, என்ன நீ எங்க ஊரு நாட்டாமையே எதிர்த்து பேசிட்டு இருக்குற?” என்று ஊருக்காரர்கள் அனைவரும் மொத்தமாகக் குரல் கொடுத்தனர்.

“ஷ்ஷ்… அமைதி!” என்று அவர்களை அடக்கிய நாட்டாமை, “இந்த ஊர் நாட்டாமையின் தீர்ப்புக்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத் தான் ஆகணும்…” என்று அழுத்தமாகச் சொன்னான் நாட்டாமை.

“கட்டுப்படலைனா?” என்று சாதாரணமாகக் கேட்டாள் சக்தி.

அவளிடம் சிறிதும் பதட்டம் இல்லை. பயம் இல்லை. ஆரம்பத்தில் அந்தக் கூட்டத்தில் வந்து நின்ற போது எப்படி நின்றாளோ, அந்தப் பாவனைச் சிறிதும் மாறவில்லை அவளிடம்.

அதை நாட்டாமையும் நன்றாகவே கண்ணுற்றான்.

“கட்டுப்படணும்… ஒன்னு உனக்கும், அந்தப் பையனுக்கும் கல்யாணம் நடக்கணும். இல்லைனா…” என்று அவன் சொல்ல,

“இல்லைனா…” என்று திருப்பிக் கேட்டாள் சக்தி.

“நான் கட்டும் தாலி உன் கழுத்தில் ஏறும்…” என்று இடி முழங்கியது போல ஓங்கி உயர்ந்து ஒலித்த அவனின் குரலில் ஒட்டு மொத்த ஊரே ஸ்தம்பித்துப் போனது என்றால், அதுவரை இருந்த அலட்சிய பாவனை முற்றிலும் தொலைந்து போக, தன் தலையில் நேரடியாக இடியை வாங்கியது போல் உறைந்து நின்றாள் சக்தி.