1 – மின்னல் பூவே!

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 1

அந்தக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருக்க, ஒரு மரத்தடியில் மட்டும் சிறு கூட்டமே கூடியிருந்தது.

அந்தக் கூட்டத்தின் நடுவே அக்னியாய் சுட்டெரிக்கும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள் உத்ரா.

“என்னடா பெரிய இவன் மாதிரி துள்ற? நீ என்ன செய்தாலும் பொறுத்துக்கிட்டுப் போகப் பொண்ணுங்க என்ன கிள்ளுக்கீரைன்னு நினைச்சீயா? என்ன திமிர் இருந்தா என் ஃபிரண்ட்டை சீண்டி பார்த்திருப்ப?

அவ தான் அமைதியான பொண்ணு. உன் அடாவடியைப் பார்த்துப் பயந்து போவா. ஆனா நான் அப்படி இல்லை. பிளந்து கட்டிடுவேன் ராஸ்கல்!” என்று நாக்கை மடித்துக் கடித்துச் சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள் உத்ரா.

அவளின் கண்டிப்பில் இருந்த கடுமையைக் கண்டு கொள்ளாமல், அவளின் எதிரே கொம்பு சீவிய காளையாகத் தன் நண்பனின் பிடியில் திமிறிக் கொண்டு நின்றிருந்தான் குரு.

“ஏய்! ஒரு சீனியர்னு கூடப் பார்க்காம என் மேலே கை வச்சுட்டீல? ஒரு பொட்டைக் கழுதை நீ. என்னைப் பிளந்துருவியா டி? நீ எப்படி இருந்தா எனக்கு என்னடி? என் விஷயத்தில் நீ ஏன் தலையிடுற?

நான் அவளைக் காதலிக்கிறேன். நான் அப்படித் தான் அவளைத் தொட்டுப் பேசுவேன். அதைக் கேட்க உனக்கு ரைட்ஸ் இல்லை, புரிஞ்சுதா?” என ஆங்காரமாகக் கத்தியவனை அலட்டலே இல்லாமல் அமைதியாகப் பார்த்தாள்.

“சீனியர்னா உனக்குக் கொம்பா முளைச்சிருக்கு? இந்தப் பொட்டைக் கழுதை எட்டி உதைச்சா எட்டுக் குட்டிக்கரணம் போடுவ. பார்க்கிறியாடா? லவ் பண்றானாம் லவ். இரண்டு பேரும் சேர்ந்து பண்ணினா தான்டா அந்த லவ்வுக்கே மதிப்பு.

“உன்னைப் பார்த்தாலே இந்தப் புவனா கழுதை தலைதெறிக்க ஓடி ஒளியுறா. பிடிக்கலைன்னு சொல்றவளை வழிய வந்து வம்பு இழுத்துத் தொட்டு சீண்டி விளையாட நினைச்ச உன்னை எல்லாம் இன்னும் இரண்டு அறை போடணும் டா…” என்று தோழிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துக் ஆவேசமாகப் பொங்கி கொண்டிருந்தாள்.

“அடிச்சிருவியாடி? எங்கே அடி பார்க்கலாம். நான் அசந்த நேரம் என்னை ஏற்கனவே நீ அடிச்சதுக்கே நான் உன்னைச் சும்மா விடப் போறதில்லை. இதில் நீ இன்னமும் அடிப்பியாடி?” என்று நண்பனின் பிடியில் இருந்து மீறிக் கொண்டு வர முயன்றான்.

“டேய் குரு, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு? அந்தப் பொண்ணு கூடப் போய்ச் சரிக்கு சரியா மல்லுக்கட்டிட்டு இருக்க. காலேஜே நம்மளை தான் வேடிக்கை பார்க்குது. பேசாம வா! இப்படியே இன்னும் சண்டை போட்டுட்டு இருந்தா விஷயம் பிரின்ஸ்பால் வரை போயிரும்…” என்று நண்பனை அடக்க முயன்றான் அவன்.

தன்னை அடிக்கத் துடித்துக் கொண்டிருந்தவனை ‘எங்கே முடிந்தால் அடிடா பார்க்கலாம்’ என்று கண்ணாலேயே சவால் விட்டுக் கொண்டிருந்தாள் உத்ரா.

“உங்க ஃபிரண்டை பார்த்துப் பத்திரமா கூட்டிட்டுப் போயிருங்க முகில்வண்ணன். இல்லனா திரும்ப என்கிட்ட அடி வாங்கி அவமானப் படப்போறான். முதலில் அடிச்சப்ப அதை நீங்க மட்டும் தான் பார்த்தீங்க. இப்போ மொத்த காலேஜே பார்க்கும்…” என்று நக்கலாகச் சொல்லி குருவை பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

“உத்ரா, நீ கொஞ்சம் அடக்க ஒடுக்கமா பேசினா பரவாயில்லைனு நினைக்கிறேன். ஆண்பிள்ளைக்குச் சமமா சண்டைக்கு எக்கிக்கிட்டு நிக்கிறது சரியில்லை…” என்று சத்தமாகச் சொன்ன முகில்வண்ணன்,

‘ச்சே! கொஞ்சனாலும் பொண்ணு மாதிரி நடக்கத் தெரியுதா? எப்ப பார் ஆண்பிள்ளை மாதிரி துள்ளிக்கிட்டு’ என்று அவளுக்குக் கேட்கும் வகையில் முணுமுணுத்தான்.

அது காதில் விழுந்ததும் “ஹலோ, உங்க அகராதியில் பொண்ணுனா எப்படி இருக்கணும் சார்? பிடிக்கலைனு சொல்ற பொண்ணுகிட்ட வம்பு பண்ணினாலும் இதோ இவ மாதிரி கண்ணீர் மழை பொழிஞ்சுகிட்டு நிக்கணுமா?” என்று தன் பின்னால் நின்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த தோழியைப் பார்த்துச் சொன்னவள்,

“இல்லை வெளி உலகம் என்ன சொல்லுமோனு பயந்துட்டு உள்ளுக்குள்ளேயே பயந்து சாகணுமா? அதைச் செய்தால் தான் ஒருத்தி உங்களுக்குப் பொண்ணா தெரிவாளா? தப்பை ஏன் செய்தன்னு தட்டி கேட்டா அவ பொண்ணா இருக்கக் கூடாதா?” என்று கொதித்துப் போய் ஆத்திரமாகக் கேட்டவளுக்குப் பதில் சொல்ல தெரியாமல் அமைதியானான் முகில்வண்ணன்.

அவனின் அமைதியை பார்த்து “பதில் சொல்லுங்க மிஸ்டர்.முகில்வண்ணன். அப்படி இருந்தா தான் பொண்ணா? சரி நான் உங்க அகராதியில் பெண்ணாக இல்லாமல் போனாலும் பரவாயில்லை. அந்த மேட்டரை விட்டுருவோம். நீங்க ஆண்பிள்ளை தானே?

“உங்க ஃபிரண்ட் விருப்பமில்லாத பெண்ணைத் தொட முயற்சி பண்ணி தப்புச் செய்துருக்கார். ஒரு ஆண்பிள்ளையா உங்க ஃபிரண்டை தட்டிக் கேட்கலாமே? அதை ஏன் நீங்க செய்யலை?” என்று புருவம் உயர்த்திக் கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டவளைக் கண்டு அயர்ந்து போனான்.

அவளிடம் தெரிந்த கம்பீரத்தைப் பார்த்து, ‘என்ன கெத்துடா!’ என்று தோன்றுவதற்குப் பதில் ‘என்ன திமிர்டா இவளுக்கு!’ என்று தான் அவனுக்குத் தோன்றியது.

“ஏய்! என்னடி… என் ஃபிரண்டயே எனக்கு எதிரா திருப்ப பார்க்கிறயா?” என்று முகிலின் பிடியில் இருந்து விடுபட்டு உத்ராவை அடிக்கக் கையை ஓங்கினான் குரு.

ஆனால் அதற்குள் சுதாரித்த முகில் நண்பனை பிடித்து நிறுத்தி அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

அதைக் கண்டு “சபாஷ்!” என்று உற்சாகமாகக் கைத்தட்டினாள் உத்ரா.

புவனாவோ “ஆ!” என அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

நண்பன் அறைந்ததை நம்ப முடியாமல் கன்னத்தில் கை வைத்தபடி திகைத்து நின்றிருந்த குரு “டேய் முகில்… என்னை ஏண்டா அடிச்ச?” என்று நம்பமுடியாமல் கேட்டான்.

“அடிக்காம? நீ செய்ததே தப்பு! இதில் அந்தப் பொண்ணுகிட்ட சரிக்கு சரியா சண்டை போட்டதும் இல்லாம என்னைப் பார்த்து நீயும் ஆண்பிள்ளையானு கேட்க காரணம் நீ தானே? ஒழுங்கா செய்த தப்புக்கு மன்னிப்பு கேளுடா…” என்றான் கோபமாக.

“மன்னிப்பா? நானா? நான் ஏன் கேட்கணும்? கேட்க முடியாது போடா! நான் எந்தத் தப்பும் செய்யலை. உன்னை ஆம்பளையானு கேட்டா அவகிட்ட ஆம்பிள்ளைனு எப்படிக் காட்டணுமோ அப்படிக் காட்டு. பொண்ணுகிட்ட எப்படிக் காட்டணும்னு உனக்குத் தெரியாதா என்ன? தெரியலைனா சொல்லு நான் எக்ஸ்பிளைன் பண்றேன்…” என்று வக்கிரத்தனமாகச் சொல்ல,

“டேய்!” என்று மீண்டும் அவனை அடிக்கக் கை ஓங்கிய படியே “அசிங்கமா பேசாதேடா!” என்று அதட்டினான்.

“அசிங்கமா…” என்று மேலும் குரு ஏதோ சொல்ல போக,

“சரியான சாக்கடை புத்தி சாக்கடையா தானே யோசிக்கும். ஒரு பொண்ணு ஆண்பிள்ளையானு கேட்டா உடனே உடல் ரீதியா தான் உனக்கு எல்லாம் ஆண்பிள்ளை தனத்தைக் காட்ட தெரியும்னா… நீயெல்லாம் ஆண்பிள்ளையே இல்லை. வந்துட்டான் ஈனத்தனமா பேச…” என்று குருவைப் பார்த்துச் சீறினாள் உத்ரா.

அவளின் பேச்சில் முகிலை விட்டுவிட்டு அவள் புறம் திரும்பிய குரு “உன்னைப் போலப் பொட்டச்சிக்கிட்ட அப்படித் தாண்டி ஆம்பிளை தனத்தைக் காட்டணும்…” என்று ஆத்திரத்துடன் சொல்ல, உத்ரா அவனை அறைய போனாள்.

ஆனால் அதற்குள் இருவருக்கும் குறுக்கே வந்த முகில்வண்ணன், “ப்ளீஸ் உத்ரா, நீ கிளம்பு! பேச்சு எங்க எங்கயோ திசை மாறிப் போகுது. அவனும் நிதானத்தில் இல்லை. நீயும் நிதானத்தில் இல்லை.

இதுக்கு மேல இந்தப் பேச்சை வளர விடுவது யாருக்குமே நல்லது இல்லை. இவன் தப்பா பேசினதுக்கு இவன் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கிறேன். ப்ளீஸ்! இதை இத்தோடு விட்டுறலாம்…” என்று சமாதானமாகப் பேசினான்.

“நீ எதுக்குடா மன்னிப்பு கேட்குற?” குரு விடாமல் குதிக்க, அவனைக் கண்டு கொள்ளாமல் உத்ராவை இறைஞ்சல் பார்வை பார்த்தான்.

அவன் பார்வையில் மனம் இறங்கிய உத்ரா “உங்களுக்காகத் தான் நான் இப்போ அமைதியா போறேன் முகில்வண்ணன்…” என்று சொல்லிவிட்டு தோழியையும் அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

அவர்கள் போய்க் கொண்டிருக்கும் போதே, குரு இன்னும் கத்திக் கொண்டிருப்பதும், முகில் அவனை அதட்டிப் பேசுவதும் காதில் விழுந்தது.

உத்ரா மெல்ல திரும்பி பார்க்க, அவள் நின்றதை உணர்ந்தவன், அவள் புறம் திரும்பி போகச் சொல்லி தலையை அசைத்தவன், விடாமல் கத்தி கொண்டிருந்த குருவை பார்த்து “இப்போ நீ பேச்சை நிறுத்த போறியா இல்லையா குரு? இதுக்கு மேல பேசினா இன்னொரு அறை வாங்குவ…” என்று கத்தினான்.

“அறைவியாடா? எங்க அறை பார்க்கலாம். அந்தப் பொட்டச்சிக்காக ஃபிரண்ட்னு கூடப் பார்க்காம என்னை அடிச்சிட்டில? இதுக்காகவே அவளை ஏதாவது செய்றேன் பார்…” என்று சவால் விட்டான்.

அவனின் தொடர்ந்த பேச்சில் கடுப்படைந்த முகில் ‘பளார்’ என மீண்டும் ஒரு அறை விட்டவன் “நானும் அப்ப இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன் பொண்ணுங்கன்னு கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்காம பெரிய இவன் மாதிரி பேசிட்டே போற. நீ என் ஃபிரண்டா இருந்தா நீ செய்ற எல்லாத்தையும் பொறுத்துட்டுப் போவேன்னு நினைச்சியா? தொலைச்சுப்புடுவேன்!

செய்ற தப்பை எல்லாம் நீ செய்துட்டு ரொம்ப நல்லவனாட்டம் என்ன பேச்சு பேசுற. இனியும் நின்னு இப்படிப் பேசிட்டே போனினா நானே போய்ப் பிரின்ஸ்பால்கிட்ட கம்ளைண்ட் கொடுத்துருவேன்…” என்று விரலை நீட்டி எச்சரித்தவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

தன்னை அடித்தது மட்டும் இல்லாமல் தன்னையே மிரட்டி விட்டுப் போகும் நண்பனை கோபத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் குரு.

முகில்வண்ணன் பேசியதையும், அடித்ததையும் காதில் வாங்கிக் கொண்டே புன்சிரிப்புடனும், திருப்தியுடன் சென்றாள் உத்ரா.

கல்லூரி உணவகத்தில் கலங்கிய கண்களுடன் கைகளைப் பதட்டத்துடன் பிசைந்து கொண்டிருந்த புவனாவை கண்டு கொள்ளாமல் பப்ஸை தன் வாயினுள் தள்ளி ரசித்து, ருசித்து உண்டு கொண்டிருந்தாள் உத்ரா.

தன்னைக் கண்டு கொள்ளாமல் சாப்பிடுவதில் மட்டும் கவனத்தை வைத்திருந்த தோழியைக் கண்டு புவனாவிற்குக் கோபம் வந்தது.

அவள் கோபத்துடன் தன்னை முறைப்பதையும் பொருட்படுத்தாமல் வாங்கி வைத்திருந்த சூடான காஃபியையும் சப்பு கொட்டி ரசித்துக் குடித்தவள் “எத்தனை இடத்தில் காஃபிக் குடிச்சாலும் நம்ம காலேஜ் கேன்டீன் காஃபியோட டேஸ்ட்டே தனித் தான்” என்று ரசனையுடன் சொன்னவள் “உன் காஃபியை நீ குடிக்கலையா?” என்று ஆடை விழ ஆரம்பித்திருந்த புவனாவின் காஃபியைப் பார்த்துக் கை காட்டினாள்.

“இப்ப காஃபி தான் ரொம்ப முக்கியமாக்கும்?” கோபத்துடன் கேட்டாள் புவனா.

“பின்ன, வேற என்ன முக்கியம்?” புருவம் உயர்த்திக் கேட்டாள் உத்ரா.

“விளையாடாதே உத்ரா! நான் சொல்லச் சொல்ல கேட்காம அந்தக் குருக்கிட்ட ஏன் சண்டை போட்ட? அவன் வேற அசிங்கமா பேசுறான். அடிக்க வர்றான். ரவுடி மாதிரி பிகேவ் பண்றான். அவனைப் போய்க் கை நீட்டி வேற அடிச்சிருக்க.

உன்கிட்ட மட்டும் நான் சொன்ன விஷயத்தைக் காலேஜ்ல பாதிப் பேருக்குத் தெரியுற மாதிரி பிரச்சனையைப் பெரிசாக்கி விட்டுட்டு, இங்கே வந்து நிதானமா பப்ஸையும், காஃபியையும் மொக்குற…” எனப் படபடவெனக் கோபமாகப் பொறிந்தவளைச் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் உத்ரா.

அவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல் “எதுக்கு என்னை இப்படிப் பார்க்கிற?” என்று புவனா கேட்க,

“பாதிக் காலேஜுக்கு உன் விஷயத்தைத் தெரியப்படுத்திட்டேன்னு குதிக்கிறியே, நான் எப்பவாவது அவன் உனக்கு முத்தம் கொடுத்ததைச் சொன்னேனா? வம்பு இழுத்தான்னு மட்டும் தானே சொன்னேன்.

இப்போ இப்படி என்கிட்ட படபடவெனப் பொறியுற உன் வாயும், இப்படி என் முன்னாடி கையை நீட்டி, நீட்டி பேசுற உன் கையும் அந்தக் குரு உன் கன்னத்தில் முத்தம் கொடுத்த போது எங்கே போச்சு?

இதே வாயை வச்சு அவனை நல்லா திட்டி விட்டுருக்கலாம். இந்தக் கையை வச்சு ஒரு அறை போட்டுருக்கலாம். அது எதையும் செய்யாம ஊழு, ஊழுன்னு அழுதுட்டு இப்ப வந்து வியாக்கியானம் பேசுற உன்னை எல்லாம் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன்…” என்றாள் கடுப்புடன்.

“ஹான்…! அவன் ஆண்பிள்ளை! அவனை எப்படி நான் கைநீட்டி அடிக்க? நான் அடிச்சு ஒருவேளை அவன் இன்னும் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா என்ன செய்றது?” என்று பதறியபடி கேட்டவளை ‘இவளை இரண்டு அடி அடித்தால் என்ன?’ என்பது போல் பார்த்தாள் உத்ரா.

“ஏன்டி முறைக்கிற?”

“ஆண்பிள்ளைனா அவனுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? அவனும் நம்மைப் போலப் பிறந்த ஒரு மனிதப் பிறப்பு தானே? ஆண்பிள்ளை என்னவோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரியும், பொண்ணுங்க என்னமோ அலுங்காம பூமியில் பிறந்த மாதிரியும் உன்னை மாதிரி பொண்ணுங்க ஏன் அவங்களை நீங்களே உயரத்தில் தூக்கி வச்சு அவனுக்கு இப்படிக் கர்வத்தையும், திமிரையும் வர வைக்கிறீங்க?

ஆண்பிள்ளையும் நம்மைப் போல ஒரு சாதாரண மனுஷன்னு மட்டும் நினைச்சா ஏன் இந்தக் குரு போல ஆளுங்களுக்குத் திமிர் ஏறிப் போகப் போகுது? அவன் காதலை உணர வைக்கிறேன்னு இவளை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பானாம். இவ திருப்பி நாலு சாத்துச் சாத்தாமல் தனியா உட்கார்ந்து கண்ணீரை ஊத்துவாளாம். அதைப் பார்த்துட்டு நான் அமைதியா போகணுமாம். எந்தக் காலத்தில் இருக்க டீ நீ எல்லாம்?

ஒருத்தன் நம்மகிட்ட தப்பா நடக்க வந்தா அவன் கை நம்ம மேல படும் முன்பே நம்ம எதிர்ப்பை எந்த விதத்திலாவது காட்டணும். நம்ம எதிர்ப்பு ஒரு நொடியாவது அவனைத் தேங்க வைக்கும். அந்தத் தேக்கம் தான் நமக்கான டைம். அந்த டைம்ல அவனை அடிக்க முடியுதா அடி! இல்ல தப்பிக்க வழியிருந்தா தப்பிக்க முயற்சி பண்ணு!

அதை விட்டுட்டு, அச்சோ! அவன் நம்மை எதுவும் செய்துருவானோன்னு நீ பயந்தா அந்தப் பயம் தான் அவனுக்கு வெற்றி தரும் தூண்டுகோள். இவ நமக்குப் பயப்படுறா. நாம இவளை என்னவும் செய்யலாம்கிற எண்ணத்தை உன் பயம் தான் தருது.

முதலில் உன் பயத்தைத் தூக்கி தூர போடு! இன்னும் ஒன்னையும் நல்லா புரிஞ்சுக்கோ! ஒருத்தன் உன் மன உணர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் உன் உடல் உணர்ச்சியைத் தூண்டி விட்டு உன்னைக் காதலிக்கிறேன்னு சொன்னா அப்படிப்பட்ட காதல், காதல் தானான்னு முதலில் யோசி!

என்னைப் பொறுத்தவரை ஒரு பொண்ணோட மனசை பற்றிக் கவலைப்படாம உடல் உணர்ச்சியில் குளிர்காய நினைக்கிறவன் சொல்ற காதல், காதலே இல்லைனு தான் சொல்லுவேன்…” என்றவளை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா.

“என்னடி வாயை பிளக்கிற? நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா, இல்லையா?” என்று சிறு அதட்டலுடனே கேட்டாள் உத்ரா.

“புரிஞ்சதுடி! ரொம்ப நல்லாவே புரிஞ்சது! ஆமா, நீ மட்டும் எப்படிடீ இப்படித் தெளிவா பேசி தைரியமா இருக்க. எனக்கு எல்லாம் சுட்டுப் போட்டாலும் உன் அளவு தைரியம் வராது…”

“என் தைரியத்திற்குக் காரணம் என் அப்பா தி கிரேட் மேஜர் வீரபத்ரன். அவர் தான் என்னைப் பொண்ணுன்னு ஒதுக்கி வைக்காம, இந்த உலகத்தில் வாழ பொண்ணுக்குத் தான் அதிகம் தைரியம் தேவைன்னு என்னை இவ்வளவு தெளிவா சிந்திக்கிற மாதிரி வளர்த்தார்.

சிலம்பம், கராத்தேனு நான் தற்காப்பு கலையைக் கத்துக்கிட்டதுக்குக் காரணமும் அவர்தான். அதான் அவரைப் பார்த்து பேச ஒரு நாள் எங்க வீட்டுக்கு உன்னை வான்னு கூப்பிடுறேன் நீ தான் வர மாட்டேன்னு அடம் பிடிக்கிற. அவரைப் பார்த்துப் பேசினா உன் பயம் எல்லாம் காணாம போய்டும்…” என்று உத்ரா சொல்ல,

“ஹேய், போடி. உங்க அப்பா அந்தப் பெரிய மீசையை முறுக்கி விட்டு ஒரு பார்வை பார்த்தாலே நான் பயந்து மயக்கம் போட்டு விழுந்துடுவேன். உன்னைப் பார்க்கணும்னு ஒரு நாள் காலேஜ் வந்தாரே?

அன்னைக்கு அவரைப் பார்த்துட்டு சிலையா இருந்த அய்யனார் தான் எழுந்து வந்துட்டாரோனு பயந்தே போனேன். இதில் அவர்கிட்ட நான் நேரில் பேசவா? அம்மாடியோ! அதுக்கு வேற ஆளை பாருடி…” என்று பயந்து அலறலாகச் சொன்ன புவனாவைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள் உத்ரா.

“சிரிக்காதேடி உத்ரா! அது சரி காதல் எப்படிப்பட்டதுன்னு கண்டுபிடிக்க டிப்ஸ் எல்லாம் சொல்றியே… அது எப்படிடீ காதல் செய்யாமையே காதல் எப்படிப்பட்டதுன்னு உனக்குத் தெரியும்?” என்று வியந்து கேட்டாள் புவனா.

“இது என்னடி வம்பா இருக்கு? ஒரு விஷயத்தைச் சொல்லணும்னா அந்த விஷயத்தைப் பற்றி ph.d முடிச்சுட்டு வந்தா சொல்ல முடியும்? இதுக்கு எல்லாம் சில பொது அறிவும், நாம கேள்விபடும் சில விஷயங்களே போதும்…” என்ற உத்ராவின் பதிலைக் கேட்டு,

“நீ சொல்றதும் சரிதான்!” என்று புவனா சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

“அதோட நான் யாரையும் காதலிக்கலைனு எப்போ உன்கிட்ட சொன்னேன்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள் உத்ரா.