1 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 1
“ஹாய் அத்தை…” என்று உற்சாகமாக வீட்டிற்குள் நுழைந்தாள் ராகவர்தினி.
“வா ராகா… அம்மா வரலையா? சீக்கிரமே வரச் சொன்னேனே?” என்று விசாரித்தார் கஸ்தூரி.
“கொஞ்சம் வேலை இருக்காம் அத்தை. முடிச்சுட்டு வருவாங்க…” என்றவள், “ஆமா, நம்ம வாத்தி எழுந்தாச்சா?” என்று குரலை தாழ்த்தி விசாரித்தாள் ராகவர்தினி.
“ஏன் அத்தான்னு முறை சொன்னால் ஆகாதா? அவனை வாத்தின்னு சொல்லி ஏன் டென்சன் பண்ற?” என்று கேட்டார் கஸ்தூரி.
“வாத்தியை வாத்தின்னு சொல்லாம இருந்தால் தான் தப்பு அத்தை. அது சரி, நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை, வாத்தி எழுந்தாச்சா, இல்லையா?” என்று மீண்டும் கேட்டாள்.
“எழுந்திருப்பான்னு தான் நினைக்கிறேன். எதுக்கும் நீ போய் ஒரு எட்டு பார்த்துட்டு வா…” என்றார்.
“ஓகே அத்தை…” என்றவள் மாடிப்படியை நோக்கி நடக்க ஆரம்பிக்க, அவளின் எதிரே வந்தார் சுபேசன்.
“வாமா ராகா…” என்றார்.
“வர்றேன் மாமா. நீங்க சாப்பிட்டீங்களா? பிரஷர் மாத்திரை எல்லாம் சரியா போடுறீங்களா?” என்று விசாரித்தாள்.
“இனி தான் மா சாப்பிடணும். மாத்திரை எல்லாம் சாப்பிட்டதும் நேர நேரத்துக்கு சரியா போடுறேன்மா. நீ சாப்பிட்டியா? சாப்பிடலைனா வாயேன், ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம்…” என்றார்.
“நான் போய் அத்தான் என்ன செய்றாருன்னு பார்த்துட்டு அப்படியே அவரையும் சாப்பிட கூப்பிட்டு வர்றேன் மாமா…” என்றாள்.
“சரிமா…” என்று சுபேசன் சொன்னதும், மாடிப்படிகளில் வேகவேகமாக ஏறினாள்.
“ஹாய் வாத்தியாரே… என்னா செய்றீங்கோ…” என்று கோணலாக உதட்டை சுழித்து நக்கலாகக் கேட்டுக் கொண்டே அவனின் அறைக்குள் நுழைந்த ராகவர்தினியை கடுமையாகப் பார்த்தான் பிரபஞ்சன்.
“சட்… என்னா வாத்தியாரே இது? வாத்தியார்னா எப்பவும் விறைப்பா இருக்கணும்னு அர்த்தமில்லை. கொஞ்சம் கலகலன்னு சிரிக்கவும் செய்யலாம்…” என்றவளை பார்த்து அவனின் கடுமை மட்டும் குறையவே இல்லை.
அத்தான் என்னத்தான்
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி…
என்று ராகம் போட்டுக் கேலியாகப் பாடிக் கொண்டே, அவனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்.
“ஹோய் ராக்கம்மா, என்ன கொழுப்பு கூடி போயிருச்சா?” என்று கேட்டவன் கன்னத்தில் இருந்த அவளின் கையைத் தட்டிவிட்டான்.
“கொழுப்பு இல்லை அத்தான் மப்பு கூடிப் போச்சு…” என்று சொல்லிக் கண் சிமிட்டினாள்.
அவளை விநோதமாகப் பார்த்தவன், “காலையிலேயே டாஸ்மாக் போய்ட்டு வந்துட்டியா என்ன?” என்று நக்கலாகக் கேட்டான்.
“நோ வாத்தி… வீட்டிலேயே புல் மப்பு அடிச்சுட்டு வந்துட்டேன்…” என்றாள்.
“அடிப்பாவி! என் மாமா தங்கம், அவருக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லையே… அப்புறம் எப்படி வீட்டில்?” லேசாக வாயைப் பிளந்து கேட்டான்.
“அதான் உங்க மாமா கட்டிட்டு வந்த தகரடப்பா வீட்டிலேயே காய்ச்சுதே… அப்புறம் ஏன் நான் வெளியே போகணும்?” என்று கேட்டாள்.
“அடியேய்! தூக்கத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையில் எதுவும் அடிப்பட்டுருச்சா என்ன? காலையிலேயே இந்த உளறு உளறுர?” என்றான்.
“அட! என் மக்கு அத்தான்! காலையிலயே உங்க அத்தை போட்டுக் கொடுத்த காபி குடிச்சேன். அதைக் குடிச்சுட்டு மப்பு ஏறிப் போனது போல இருக்கு…” என்று வாயை கோணி அலட்சியமாகச் சொல்லியபடி அவனின் கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
“ஓய், ராக்கம்மா… என் கட்டிலில் உட்காராதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? எழுந்திரு. இப்படிச் சேரில் வந்து உட்காரு…” என்றான்.
“ஆமா, உங்க கட்டிலை அப்படியே நான் கடிச்சு தின்னுட போறேன் பாருங்க…” என்றவள் சட்டமாகக் கட்டிலில் இன்னும் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
“சொன்னா கேளு ராக்கம்மா… இங்கே வந்து உட்கார்…” இப்போது சற்று அதட்டலாகவே சொன்னான்.
“ஷப்பா! ஓவரா பண்றீங்க வாத்தி. ஏன் உங்க கட்டிலில் உட்கார்ந்தால் என்ன? ரொம்பத்தான் அலட்டிக்கிறீங்க?” என்று சலித்துக் கொண்டாள்.
“கட்டிலில் யார்யார் உட்காரணுமோ அவங்க தான் உட்காரணும். எழுந்திரு…” என்றான் பிடிவாதமாக.
“இது எல்லாம் ஓவர் அத்தான். கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படினா, உங்களுக்குக் கல்யாணம் முடிந்த பிறகு என்னை எல்லாம் யாருன்னு கேட்பீங்க போல?” என்று சலித்துக் கொண்டே கட்டிலிலிருந்து எழுந்து நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
“அதுக்கு எதுக்கு என் கல்யாணம் வரை வெயிட் செய்யணும்? இப்பவே கேட்கிறேன். ஆமா நீ யாரு? என் ரூமுக்குள்ள எப்படி வந்த?” என்று அவன் அலட்டாமல் கேட்டு வைக்க…
“என்ன வாத்தி நக்கலா?” முறைத்துக் கொண்டு கேட்டாள்.
“ஆமா ராக்கம்மா…” என்றான்.
“அத்தான் என்னை ராக்கம்மா சொல்லாதீங்க…” என்றாள் எரிச்சலாக.
“என்னை வாத்தின்னு கூப்பிடாதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். நீ கேட்டியா என்ன? நீ எத்தனை வாத்தி சொல்றியோ அத்தனை ராக்கம்மா வரும்…” என்றான்.
“நீங்க வாத்தியார் தானே? சொன்னால் என்ன?”
“அது என் தொழில்! என் பெயர் இல்லை…” என்றான் அழுத்தமாக.
“அப்போ பிரபஞ்சன்னு பெயர் சொல்லி கூப்பிடட்டுமா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“கூப்பிடேன், தாராளமாக! ஆனா உன் அம்மா முன்னாடி அப்படிக் கூப்பிடு…” என்றான் அவன் நக்கலாக.
“எதுக்கு, அந்தத் தகரடப்பா அட்வைஸ் செய்தே என் காதில் ஓட்டை போடவா?” என்று போலியாக அலறினாள்.
“உனக்கு வாய் கொழுப்பு கூடிப்போச்சு. சரி, நீ கீழே போ. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு…” என்றான்.
“என்ன வேலை அத்தான்? உங்களுக்குப் பார்க்க போற பொண்ணு பத்தி ட்ரீம் காண போறீங்களா?” கேலியாகக் கேட்டாள்.
“கழுதை, வயசுக்கு தகுந்த மாதிரி பேசு…” என்றான் முறைப்பாக.
“எம்.எஸ்.சி லாஸ்ட் இயர் படிக்கிறேன் அத்தான். இதுக்கு மேல என்ன வயசு வேணுமாம்? நான் அப்படித்தான் கேலி செய்வேன். அதுவும் உங்க கல்யாணத்துக்குப் பாருங்க. உங்களையும், எனக்குக் கிடைக்கப் போற புது அக்காவையும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுவேன்…” என்றாள்.
“நான் உதைப்பேன். நீ படிச்சு முடிக்கிற வரை சின்னப் பொண்ணு தான். சின்னப் பொண்ணு இப்படி எல்லாம் பேசக் கூடாது. இப்படிப் பேசிட்டே இருந்தேன்னு வை, இன்னைக்குப் பொண்ணு வீட்டுக்கு நீ வர வேண்டாம்னு சொல்லிடுவேன்…” என்றான் மிரட்டலாக.
“அத்தான் வேண்டாம். நானும் வருவேன். பொண்ணு எப்படி இருக்காங்கன்னு நான் பார்க்கணும்…” என்றாள் சிணுங்கலாக.
“அப்போ வாயை அடக்கிப் பேசு…” என்றான் தன் கண்டிப்பை விடாமல்.
“வாத்தி! நான் வாத்தின்னு சொல்றது சரியாத்தான் இருக்கு. வீட்டிலும் வாத்தி மாதிரியே ரூல்ஸ் போட்டு அதட்டிகிட்டே இருக்க வேண்டியது…” சலித்துக் கொண்டாள்.
“ரூல்ஸ் போட்டுமே நீயெல்லாம் அடங்க மாட்டீங்கிற…” என்றான்.
“ரூல்ஸ் போட போடத்தான் அதை மீறணும்னு தோனுது அத்தான்…”
“தோனும்… தோனும்… பிரம்பாலயே இரண்டு அடிப்போட்டால் அப்போ தெரியும்…” என்றான்.
“ஸ்கூல் வாத்தி புத்தி போகுதா பார்…” என்றவள் அவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு அவன் திட்டும் முன் விரைந்து அறையை விட்டு வெளியே ஓடினாள்.
“அடிக்கழுதை…” என்று கத்தியவன் தன் கன்னத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.
‘தொட்டு பேசாதேன்னு சொன்னால் இந்த ராக்கம்மா அடங்கவே மாட்டிங்கிறாள். ஆ… ஊன்னா கிள்ளி வைக்கிற வேலை பார்க்கிறாள்…’ என்று முணுமுணுத்துக் கொண்டவன் கண்ணாடி முன் நின்று தன் கன்னத்தைப் பார்த்தான்.
அவளின் நகம் எதுவும் பட்டுவிடவில்லை என்றாலும் கன்னம் எரிச்சலை கொடுத்தது.
பிரபஞ்சன்! சுபேசன், கஸ்தூரி தம்பதியின் ஒரே மகன். பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாட ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தான்.
பிரபஞ்சன் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த போதே கீழே அவனின் அத்தை, மாமாவின் குரல் கேட்டது.
இன்று அவனுக்குப் பெண் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தனர்.
ராகவர்தினி அவனின் தாய் மாமா மாதவனின் ஒரே பெண்.
முதுகலை வகுப்பில் இறுதியாண்டில் இருந்தாள்.
ராகவர்தினி கலகலப்பான பெண்.
அதே ஏரியாவில் வேறு ஒரு தெருவில் அவர்களின் வீடு இருந்தது.
விடுமுறை நாட்களில் இங்கே வந்து செல்வாள். இன்று பிரபஞ்சனுக்குப் பெண் பார்க்க செல்வதால் இன்று குடும்பத்துடன் வந்திருந்தனர்.
அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்த போது கீழே இறங்கி வந்தான் பிரபஞ்சன்.
அத்தை மகனே அத்தானே
உன் அழகை கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லை கொத்தானேன்
அவன் டிப்டாப்பாகக் கிளம்பி வந்ததைப் பார்த்து ராகவர்தனி கிண்டலாகப் பாட, முறைத்துப் பார்த்தான்.
அதை எல்லாம் அவள் கண்டு கொண்டால் தானே?
அவளுக்கு எதிராக இருந்த இருக்கையில் அமர்ந்தவன், “இவள் ஏன் அத்தை இவ்வளவு வாய் அடிக்கிறாள்? உங்களைத் தகரடப்பான்னு வேற என்கிட்டயே கேலியா சொல்றாள். அவளை என்னன்னு கேளுங்க…” தன் அத்தை மீராவிடம் புகார் வாசித்தான்.
தன் அருகில் அமர்ந்திருந்த மகளை முறைத்த மீரா, “என்ன செய்வது பிரபா, உன் மாமாவுக்கும் சேர்த்து இவள் பேசுறாள். அவர் அமைதியா இருந்தே சாதிக்கிறார்னா, அவர் மகள் பேசியே ஆர்ப்பாட்டம் செய்றாள். என்கிட்டயே என்னைத் தகரடப்பான்னு தான் சொல்றாள். சொல்லாதேன்னு சொல்லி பார்க்கிறேன் கேட்க மாட்டீங்கிறாள். என்ன பிள்ளையோ…” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
“அந்த அடியை அவளுக்குக் கொடுங்க அத்தை. எல்லாம் சரியாப் போயிடும்…” என்று சொன்னவனைப் பார்த்து வக்கணை காட்டினாள் ராகவர்தினி.
அவர்கள் பேசிக் கொள்ளவே இல்லை என்பது போல் அவனின் தாய்மாமா மாதவன் குனிந்து சாப்பிடும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.
மாதவன் அமைதியானவர். அனாவசிய பேச்சுக்களோ அலட்டலோ இருக்காது. ஆனால் பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய விஷயத்தைச் சரியாகப் பேசுவார்.
“நாம பத்து மணிக்கு பொண்ணு வீட்டில் இருக்கணும்…” சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவிய மாதவன் குறிப்பாகச் சொல்லிவிட்டு எழ, சிறியவர்கள் தங்கள் அரட்டையை விட்டுவிட்டு வேகமாக உண்ண ஆரம்பித்தனர்.
“இவள் அங்கே வரணுமா? இங்கேயே விட்டுவிட்டு போகலாமே?” என்று மகளைக் காட்டி கேட்டார் மீரா.
‘வயது பெண்ணைப் பெண் பார்க்கும் வைபவத்திற்கு அழைத்துச் செல்வதா?’ என்ற தயக்கம் அவரிடம்.
“அம்மா, நான் அத்தானுக்குப் பார்க்க போற பொண்ணை நேரில் பார்க்கணும். நானும் வருவேன்…” என்று சிணுங்கினாள் ராகவர்தினி.
“அவளும் வரட்டும் அத்தை. அவள் தனியா வீட்டில் இருந்து என்ன செய்யப் போறாள்?” என்றான் பிரபஞ்சன்.
“இல்லப்பா…” என்று மீரா தயங்க,
“அவள் நம்ம வீட்டுப் பொண்ணு அத்தை. அதை மட்டும் நினைங்க. ஆளுங்க என்ன சொல்லுவாங்களோ… ஏது சொல்வாங்களோனு யோசிக்காதீங்க…” அவரின் நினைப்பு என்னவாக இருக்கும் என்று புரிந்து கொண்டவன் அழுத்தமாகவே சொன்னான்.
இருவருக்கும் முறை என்பதால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்களோ… உங்க வீட்டை பொண்ணையே பிரபஞ்சனுக்கு ஏன் கொடுக்கவில்லை என்பது போல் கேள்வி எழுமோ என்பது அவரின் எண்ணம்.
உறவுக்குள் திருமணம் செய்வதில் எல்லாம் பிரபஞ்சனுக்கு விருப்பமிருக்கவில்லை.
ராகவர்தினியும் அப்படி எல்லாம் அவனைப் பற்றி யோசித்ததே இல்லை. அதனால் அவனின் திருமண விஷயத்தில் உற்சாகமாகவே கலந்து கொள்ள நினைத்தாள்.
“அவள் வரட்டும் மீரா…” என்று கஸ்தூரியும் சொல்ல, அதன் பிறகு மீரா அதைப் பற்றிப் பேசவில்லை.
இரண்டு குடும்பமும் அவரவர் காரில் பெண் வீட்டிற்குக் கிளம்பினர்.
பெண் வீட்டிற்குச் செல்ல அரைமணி நேரம் ஆகியது.
வந்தவர்களைப் பெண்ணின் தாயும், தந்தையும் வரவேற்றனர்.
சிறிது நேரம் விசாரிப்பும், உபசரிப்புமாகச் செல்ல, பெண்ணான நந்திதா அழைத்து வரப்பட்டாள்.
“ஹாய், இப்படி உட்காருங்க…” என்று தன் அருகில் அமர அழைத்தாள் ராகவர்தினி.
அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, ராகவர்தினியைப் பார்த்து மென்மையாகச் சிரித்து அவளின் அருகில் அமர்ந்து கொண்டாள் நந்திதா.
பிரபஞ்சன் பெண்ணைப் பார்த்ததும் அவனின் முகம் மென்மையானது.
ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்தவள் தான். நேரில் பார்க்க இன்னும் மனதிற்குத் திருப்தியாக உணர்ந்தான்.
‘ஓகே தானே?’ என்று மகனை பார்த்துக் கொண்டார் கஸ்தூரி.
அவனும் சம்மதமாகத் தலையை அசைக்க, அவர் கணவனுக்குக் கண்சாடை காட்டினார்.
“நாம ஏற்கனவே போனில் பேசிக்கிட்டது தான். நேரில் பார்த்து ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்து விட்டால் மேல பேசுவோம்னு சொல்லியிருந்தோம். என் பையனுக்கு உங்க பொண்ணைப் பிடிச்சுருக்கு. உங்க பொண்ணுக்கும் சம்மதம்னா மேல பேசலாம்…” என்றார் சுபேசன்.
நந்திதாவின் பெற்றோரும் அவளிடம் கேட்க, அவளும் சம்மதம் தெரிவித்தாள்.
அவளின் பார்வை பிரபஞ்சன் மீது தழுவி மீள, அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான்.
இருவரும் சம்மதம் தெரிவிக்க, மேலும் பேச வேண்டிய விஷயங்களைப் பெரியவர்கள் பேச ஆரம்பிக்க, ராகவர்தினி நந்திதாவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.
“எங்க அத்தானை உங்களுக்குப் பிடித்ததில் ஐ’யாம் சோ ஹேப்பி அக்கா. அவர் ரொம்ப நல்லவர். எங்க அத்தானுக்கு ஏற்ற ஜோடியா நீங்க இருக்கீங்க…” என்றாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்தவள், “நீங்க அவருக்கு என்ன வேணும்?” என்று விசாரித்தாள்.
தங்கள் உறவு முறையைச் சொன்னவள், “நீங்க பேங்கில் தானே வேலை பார்க்கிறீங்க?” என்று கேட்டாள்.
“ஆமாம். நீங்க?”
“நான் உங்களை விடச் சின்னவள் தான் அக்கா. என்னைப் பேர் சொல்லியே கூப்பிடுங்க. நான் காலேஜ் லாஸ்ட் இயர் படிக்கிறேன்…” என்றவள், “உங்களுக்கு அத்தான்கிட்ட தனியா பேசணுமா? பேசணும்னா சொல்லுங்க. நான் அத்தைகிட்ட சொல்றேன்…” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
‘இவள் அப்படி என்ன பெண்ணிடம் ரகசியமாகப் பேசி வைக்கிறாளோ’ என்பது போல் இருவரையும் பார்த்து வைத்தான் பிரபஞ்சன்.
“அப்படி எல்லாம் எதுவுமில்லை ராகவர்தினி. நான் அப்புறம் பேசிக்கிறேன்…” என்றாள் நந்திதா.
“சரி விடுங்க. உங்க போன் நம்பர் கொடுங்க…” என்று கேட்டு வாங்கிக் கொண்டாள்.
பெரியவர்கள் பேசி முடித்து விட்டு, முகூர்த்த தேதியை குறித்து விட்டுப் பின் போனில் பேசலாம் என்று விடைப்பெற்றுக் கொண்டனர்.
கிளம்பும் போது நந்திதாவை பார்த்துச் சிரித்துத் தலையை அசைத்து பிரபஞ்சன் விடைப்பெற்றுக் கொண்டதை கேலியாகப் பார்த்தாள் ராகவர்தினி.
“அப்புறம் அத்தான்… ஒரே கண்ணும் கண்ணும் நோக்கியாவா?” வீட்டிற்கு வந்ததும் கேலியாகக் கேட்டாள் ராகவர்தினி.
“கண்ணும் கண்ணும் நோக்காம… காதும் காதுமா நோக்க முடியும்?” என்று பதிலுக்குக் கிண்டலாகக் கேட்டு வைத்தான் பிரபஞ்சன்.
“அட பார்டா! கல்யாணம் முடிவானதும் அத்தானுக்குக் கிண்டல் துள்ளி விளையாடுது…” என்றாள்.
“அத்தை சொன்ன மாதிரி உன்னை வீட்டில் விட்டுட்டு போயிருக்கணும். உனக்குப் போய்ச் சப்போர்ட் செய்தேன் பார்…” என்றான் கடுப்பாக.
“ம்க்கும்… ரொம்பத்தான் சலிச்சுக்கிறீங்க? என்னைக் கூட்டிட்டு போனதால் தான் உங்களுக்கு உதவி பண்ணிருக்கேன்…” என்றாள்.
“உதவியா? என்ன உதவி?”
“அதான் என்னைப் பார்த்துக் கடுப்படிக்கிறீங்களே? உங்ககிட்ட ஏன் சொல்லணும்? நானே பேசிக்கிறேன்…” என்றாள் அலட்டலாக.
“யார்கிட்ட பேசப் போற?” யோசனையுடன் கேட்டான்.
“என்னோட புது அக்கா தான். நந்திதா அக்கா…” என்று சொன்னவள் தன் போனை ஆட்டிக் காட்டி… “அக்காகிட்ட பேசணும் போல் இருக்கு. இப்ப பேசலாமா? நைட் பேசலாமா?” என்று யோசனையுடன் தனக்குள் பேசுவது போல் பேசிக் கொண்டே அவனைக் கெத்தாகப் பார்த்து வைத்தாள்.
அவனின் கண்கள் ஆர்வமாக மின்னின.
ஆனால் அவளிடம் கேட்க சங்கடப்பட்டு விறைப்பாக அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
“வாத்தியார் கெத்தை காட்டுவதைப் பார். வாய் விட்டு கேட்டால் குறைந்தா போய் விடுவீங்க?” என்றாள்.
அவள் கொடுக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஆர்வம் இருந்தும் அவன் அப்படியே நிற்க, “ஹய்யோ! நீங்க எல்லாம் தேறாத கேஸ்…” என்று தலையில் அடித்துக் கொண்டவள், “நானே தர்றேன். உங்க வொய்ப் நம்பர் வச்சு நான் என்ன செய்யப் போறேன்?” என்று சலிப்பாகச் சொல்லிக் கொண்டே நந்திதாவின் அலைபேசி எண்ணை அவனுக்கு வாட்ச்அப்பில் அனுப்பி வைத்தாள்.
“பார்த்துக் கொஞ்சமா கடலை போடுங்க அத்தான். கடலை தீஞ்சி போயிடாம…” என்று சொன்னவள் அவன் வாத்தியாராக மாறி அறிவுரை சொல்லும் முன் அங்கிருந்து சிட்டாகப் பறந்தாள் ராகவர்தினி.
ஆனால் அவள் பேச்சில் வழக்கமாக வாத்தியாராக மாற வேண்டியவனோ அதையே மறந்தவனாகத் தன் கைபேசியில் இருந்த நந்திதாவின் அலைபேசி எண்ணை ஆசையாக வருடிக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.