1 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 1

அதிகாலை ஐந்து மணி.

அந்தக் காம்பவுண்டு வீடுகள் நான்கிலும் இன்னும் யாரும் எழுந்து கொள்ளாமல் அமைதியைத் தத்தெடுத்திருக்க, ஐந்தாவதாக இருந்த ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

அவ்வீட்டின் கதவு லேசாகத் திறந்து வைக்கப்பட்டிருக்க, அவ்வீட்டின் வெளியே குழாய் அருகில் இருந்த துவைக்கும் கல்லில் துணிகளுக்குச் சோப் போட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

சின்னச் சின்னப் பூக்கள் போட்ட சேலை கட்டியிருந்தாள். சேலையில் ஈரம் படாமலிருக்க, சேலையை லேசாகத் தூக்கி இடுப்பில் சொருகியிருந்தாள். ஆனாலும் கணுக்காலுக்கு மேல் அவளின் புடவை உயரவில்லை.

கைகளுக்கு ஒன்றாகக் கவரிங் வளையல் அணிந்திருந்தாள்.

கழுத்தில் ஒரு மெல்லிய செயின். அவளின் நெற்றி வெறுமையாக இருந்தது. அவளின் கண்களிலும் கூட அதே வெறுமை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

தூங்கி எழுந்து அப்படியே வேலை பார்க்க வந்துவிட்டதால் முன் தலைமுடிகள் ஒழுங்கில்லாமல் லேசாகக் கலைந்து அவ்வப்போது முகத்தை உரசிக் கொண்டிருக்க, அதை ஒதுக்கிவிட்டுக் கொண்டாள்.

கூந்தலைத் தொங்கவிடாமல் இழுத்துக் கூட்டிக் கொண்டையிட்டிருந்தாள்

வெளியே வேலை செய்து கொண்டிருந்தாலும் வீட்டிற்குள்ளும் அவளின் கவனம் இருந்தது.

உள்ளே கேட்ட நடை சத்தத்தை வைத்து, ‘அப்பா எழுந்து விட்டார்’ என்று நினைத்துக் கொண்டாள்.

அவள் நினைத்தது சரியே என்பது போல் ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தார் அவளின் தந்தை சபரிநாதன்.

“என்னமா துணி துவைக்க ஆரம்பிச்சுட்டியா?”

“ஆமாப்பா…”

“சரிமா…” என்றவர் காம்பவுண்டு வீடுகளுக்கு எனப் பொதுவாகக் கட்டப்பட்டிருந்த கழிவறைக்குள் சென்று கதவை அடைத்தார்.

அவள் துணிகளை அலச ஆரம்பித்த போது வீட்டிற்குள் இருந்து ஒரு மழலையின் சிணுங்கல் ஒலி கேட்க, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் ஓடினாள்.

“இதோ அம்மா வந்துட்டேன் கண்ணும்மா…” என்று சொல்லிக் கொண்டே தன் ஈரக்கையைச் சேலையில் துடைத்துக் கொண்டு அங்கிருந்த படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

சிறிய அறை தான். ஒற்றை ஆள் படுக்கும் அளவில் ஒரு இரும்பு கட்டில். அதிலும் மெத்தை இல்லாமல் ஒரு போர்வையை விரித்து அதில் குழந்தையைப் படுக்க வைத்திருந்தாள்.

குழந்தை விழாமல் இருக்க ஓரத்தில் இரண்டு தலையணைகள் இருந்தன.

அதை ஒதுக்கி வைத்துவிட்டு, தூக்கத்திலேயே சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகில் அமர்ந்து மெல்ல தட்டிக் கொடுத்தாள்.

லேசாகச் சிணுங்கிய குழந்தை அன்னை தட்டிக் கொடுக்கவும் மீண்டும் கண்களை மூடிக் கொண்டு நித்திரையைத் தழுவ ஆரம்பித்தது.

“என்னமா பாப்பா எழுந்துட்டாளா?” அறை வாசலில் நின்று மெதுவான குரலில் கேட்டார் சபரிநாதன்.

மீண்டும் குழந்தைக்கு அணைவாகத் தலையணையை வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தவள், “சிணுங்கினாள்பா. தட்டிக் கொடுக்கவும் தூங்கிட்டாள். ஆனா இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்துடுவாள்னு நினைக்கிறேன்…” என்றாள் மகள்.

“சரிமா, அப்போ நான் போய்ச் சீக்கிரம் பால் வாங்கிட்டு வந்துடுறேன்…”

“அப்படியே சீனியும் வாங்கிட்டு வந்துடுங்கப்பா. காலியாகிடுச்சு…”

“சரிமா…” என்றவர் பால் வாங்க காசையும், பையையும் எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

தந்தை சென்றதும் மீண்டும் குழந்தையைப் பார்த்தாள். குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் எழும் முன் துணிகளைத் துவைத்துப் போட்டு வந்துவிடலாம் என்று நினைத்து வேகமாக வெளியே சென்று துணிகளை அலச ஆரம்பித்தாள்.

துவைத்த துணிகளை வீட்டின் முன் இருந்த கயிற்றில் காய வைத்துக் கொண்டிருந்த போதே அவளின் தந்தை பால் வாங்கி வந்திருந்தார்.

வெளி வேலைகளை முடித்துவிட்டு, வீட்டிற்குள் சென்று பாலை காய்ச்சினாள். அது காய்ந்து கொண்டிருக்கும் போதே ஒரு பக்கம் துவரம்பருப்பை எடுத்துக் கழுவி குக்கரில் வேகவைத்தாள்.

பால் தயாரானதும் சீனியைப் போட்டு ஆற்றினாள். பாதிச் சூடு ஆறியதும் மூடி வைத்தவள், தந்தைக்குத் தேயிலையைப் போட்டு தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். தனக்கும் அரை டம்ளர் ஊற்றிக் கொண்டாள்.

அதைக் குடிக்க வாயில் வைக்கும் போதே குழந்தை சத்தமாக அழ ஆரம்பிக்க, தன் தேநீர் டம்ளரை அப்படியே வைத்துவிட்டு, குழந்தைக்கு ஆற்றிய பாலை எடுத்துப் பால்டப்பாவில் ஊற்றிக் கொண்டு உள்ளே ஓடினாள்.

குழந்தை புரண்டு படுத்து, அணைவாக வைத்திருந்த ஒரு தலையணையைக் கீழே உதைத்து தள்ளிவிட்டு அழுது கொண்டிருக்க, “அம்மா இதோ பால் கொண்டு வந்துட்டேன்டா கண்ணும்மா. அழாதீங்க…” என்று தூக்கிச் சமாதானம் செய்து குழந்தைக்குப் பாலைப் புகட்ட,

குழந்தையும் பாலைக் குடித்து முடித்து விட்டு அன்னையைப் பார்த்துப் பால்பற்கள் தெரிய சிரித்தாள்.

“அச்சோ! என்னோட வருணா குட்டி என்ன அழகா சிரிக்கிறா… சமத்துக்குட்டி…” என்று குழந்தையைக் கொஞ்ச, ஒரு வயதை நிறைவு செய்திருந்த வருணா அன்னையின் முகம் பார்த்து இன்னும் அழகாகச் சிரித்தாள்.

“சரிடா கண்ணும்மா, நீங்க தாத்தாக்கிட்ட இருங்க. அம்மா போய்ச் சமைக்கிறேன்…” அறையை விட்டு வெளியே வந்து மகளைத் தந்தையிடம் கொடுத்துவிட்டுச் சமைக்கச் சென்றாள்.

குழந்தையை வாங்கிய சபரிநாதன் கூடத்தில் கிடந்த அவரின் ஒற்றை இரும்பு கட்டிலில் வருணாவை அமர வைத்து விளையாட்டுக் காட்டினார்.

அதற்குள் விடிந்து வெளியே ஆட்கள் நடமாட ஆரம்பித்திருந்தனர்.

அவள் சமையல் வேலையை முடிக்கப் போகும் போது, “துர்கா…” என்று அழைத்துக் கொண்டு ஒரு பெண்மணி அங்கே வந்தாள்.

“சொல்லுங்க வித்யாக்கா…” என்று துர்கா கேட்க,

“கொஞ்சம் சீனி இருந்தா தாயேன். பால் வாங்க போகும் போது அவர்கிட்ட சொல்லிவிட மறந்துட்டேன். இப்ப போகச் சொன்னா மனுஷன் கடிக்கிறார்…” என்றாள் அந்தக் காம்பவுண்டிலேயே எதிர்வீட்டில் இருக்கும் வித்யா. அவள் கையிலிருந்த டம்ளரை துர்காவின் புறம் நீட்டினாள்.

“சரிக்கா, இந்தாங்க…” என்று டம்ளரில் சீனியை அள்ளிக் கொடுத்தாள் துர்கா.

“அப்புறமா கடைக்குப் போகும் போது வாங்கிட்டு வந்து திருப்பிக் கொடுத்துறேன் துர்கா…” என்று அனைத்துப் பற்களையும் காட்டிச் சிரித்துக் கொண்டே டம்ளரை வாங்கிக் கொண்டாள் வித்யா.

அவளுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், எட்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.

அவளின் கணவன் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது திரும்பத் தந்து விடுகிறேன் என்று சொன்ன வித்யா தரமாட்டாள் என்று துர்காவிற்கு நன்றாகத் தெரியும்.

அவள் அப்படித்தான். ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் பல்லைக் காட்டிச் சிரித்துச் சிரித்துப் பேசி வாங்கிக் கொண்டு போவாள்.

பின் துர்காவை நேரில் பார்த்தாலும் கூட ஏதோ தெரியாதவர்களைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டுப் போவாள்.

அது தெரிந்தாலும் அவள் எதுவும் கேட்டு வந்தால் துர்கா மறுப்பதில்லை.

அப்படி மறுத்துவிட்டால் வித்யாவின் நடவடிக்கையே வேறு மாதிரியாக இருக்கும். அக்கம்பக்கம் வீடுகளில் தப்பும், தவறுமாக ஏதாவது புரணி பேச ஆரம்பித்துவிடுவாள்.

தேவையில்லாமல் அவள் வாயில் விழ விருப்பமில்லாமல் கேட்டதைக் கொடுத்துவிட்டு விலகிக் கொள்வாள் துர்கா.

சீனியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்ற வித்யா, காஃபியைப் போட்டுக் கணவனிடம் நீட்டினாள்.

“என்னடி, அந்தப் புருஷனை முழுங்கியவகிட்ட சீனி வாங்கினயாக்கும்?” நக்கலாகக் கேட்டான் வித்யாவின் கணவன்.

“ஆமா, பின்ன நீங்க தான் திரும்பக் கடைக்குப் போக முடியாதுன்னு சொல்லிட்டீங்களே…” நொடித்துக் கொண்டாள்.

“கடைக்குப் போகும் போதே நீ ஒழுங்கா சொல்லிவிடணும். அதை விட்டு நீ மறந்துட்டு என் மேல பழி போடுறீயா? சரி, அதை விடு. நீ தான் அந்தத் தாலி அறுத்தவ முகத்துல முழிச்சாலே சகுனம் சரியில்லைன்னு சொல்லுவியே. இப்ப என்ன காலங்காத்தலேயே அவ வீட்டுக்கே போய் அவ கையாலேயே சீனி வாங்கிட்டு வந்துருக்க?”

“வேற என்ன பண்றது? துர்கா வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருப்பவன் பேச்சுலர். அவனே ஒழுங்கா வீட்டுல சோறு பொங்கி திங்காம கடையில் வாங்கித் திங்கிறவன். நம்ம வீட்டு பக்கத்து வீட்டுக்காரிகிட்டயும், நடு வீட்டுக்காரிகிட்டயும் எதுவும் வாங்கினா மூஞ்சில அடிச்ச மாதிரி எப்ப திருப்பித் தருவன்னு பார்க்கிறப்ப எல்லாம் கேட்பாளுக.

துர்கானா என் வாயிக்குப் பயந்து திருப்பிக் கேட்கமாட்டா. அதுக்குத்தான் சகுனத்தை எல்லாம் தள்ளி வச்சுட்டு அவகிட்ட வாங்கிட்டு வர்றேன். ஆனாலும் எதுக்கும் தலைக்கு ஊத்திட்டு இன்னைக்கு நைட் படுக்கும் போது சூடம் கொளுத்தி திருஷ்டி சுத்தி முச்சந்தியில் போட்டு வரணும்…” என்று சொல்லிக் கொண்டே வேலையைப் பார்க்க சென்றாள் வித்யா.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மகளுக்கு உணவை ஊட்டி விட்டு, தந்தையையும் சாப்பிட வைத்துவிட்டுக் குளிக்கத் துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்தாள் துர்கா.

அங்கே இருந்த ஐந்து வீடுகளுக்கும் பொதுவான கழிப்பறை, குளியலறை தான். இரண்டு கழிப்பறைகளும், இரண்டு குளியலறைகளும் இருந்தன. அதில் ஒரு குளியலறையில் யாரோ குளித்துக் கொண்டிருந்தனர்.

இன்னொரு குளியலறை கதவில் ஒரு துண்டு தொங்கியது. ஆனால் கதவு திறந்து தான் இருந்தது.

யாரோ குளித்துவிட்டுத் துண்டை விட்டுவிட்டு போய்விட்டார்களோ? என்ற யோசனையுடன் குளியலறை வாசலில் நின்றிருந்தாள் துர்கா.

“ஸாரிங்க, நான் தான் குளிக்க வந்தேன். அதுக்குள்ள வீட்டுக்குள்ள என் போன் அடிக்கவும் போயிட்டேன். நீங்க வேணும்னா முதலில் குளிச்சுட்டு வாங்க. நான் அப்புறம் குளிச்சிக்கிறேன்…” என்று அவளின் பின்னால் குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள்.

அவள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் பேச்சுலர் அவன்.

அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விலகிப் போவாள் துர்கா. அவனும் கூட அவளிடம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டான்.

இன்று தான் என்னவோ அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“பரவாயில்லைங்க. நீங்க குளிங்க…” என்ற துர்கா, அதற்கு மேல் அங்கே நிற்காமல் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் தானே முதலில் குளிக்கச் சென்றான் அவன்.

அவன் நித்திலன்!

ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கே அவன் குடிவந்து ஆறுமாதங்கள் ஆகின்றன.

அங்கே யாரோடும் அவனுக்கு அவ்வளவாகப் பழக்கமில்லை. யாராவது அவனிடம் பேசினால் பதில் சொல்வான். அவனின் அமைதியான குணத்தைப் பார்த்து பேச்சுலர் எப்படி இந்தக் காம்பவுண்டில் இருக்கலாம் என்ற எந்தக் கேள்வியோ, எதிர்ப்போ வரவில்லை.

அவன் குளித்து விட்டுச் சென்றதும் தான் குளித்துவிட்டு வேலைக்குக் கிளம்பினாள் துர்கா.

அதே ஏரியாவில் இருந்த ஒரு குழந்தைகள் நர்சரியில் ஆசிரியையாக இருந்தாள்.

அவளின் குழந்தையை அவள் தந்தையே பார்த்துக் கொள்வார். அவள் ஒருவேளை அழுது கொண்டே இருந்து சமாளிக்க முடியாத போது, மகளிடம் கொண்டுவந்து விட்டுவிடுவார்.

அங்கே சிறு குழந்தையை வைத்துக் கொள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் துர்காவிற்கு நிம்மதியாக இருந்தது.

அன்று மதியத்திற்கு மேல் வருணா அழுது கொண்டே இருக்க, சபரிநாதன் மகளிடம் கொண்டு போய்க் குழந்தையை விட்டுவிட்டு வந்தார்.

மற்ற குழந்தைகளைப் பார்த்துக் குதூகலித்து அழுகையை நிறுத்தினாள் வருணா.

அன்று வேலை முடிந்து குழந்தையுடன் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்த துர்காவின் முன் வந்து ஒருவன் வழி மறைத்தான்.

அவன் அவள் வேலை பார்க்கும் நர்சரிக்கு எதிரே செராக்ஸ் கடை வைத்திருப்பவன்.

அவனை நிமிர்ந்து பார்த்த துர்கா, நிற்காமல் அவனைச் சுற்றி செல்ல முயல, “டீச்சர், ஒரு நிமிஷம் நில்லுங்க. உங்ககிட்ட பேசணும்…” என்றான் அவன்.

அவள் கேள்வியாகப் பார்க்க, “என் பேரு குணா. இங்கே தான் செராக்ஸ் கடை வச்சுருக்கேன். உங்க காம்பவுண்டு வீட்டுக்குப் பின்னாடி தெருவில் தான் என் வீடு. உங்களைக் கொஞ்ச நாளா பார்த்துட்டு இருக்கேன். உங்க விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன்.

கல்யாணமான இரண்டு மாசத்திலேயே புருஷனை இழந்துட்டு, குழந்தையோட தனியா இருக்கீங்க. உங்களுக்கும் சின்ன வயசு. வேற கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாமே? குழந்தைக்கும் அப்பா தேவை தானே?” என்று குணா கேட்டதும், துர்காவின் முகம் கோபத்தில் சிவந்தது.

“உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க…” என்று கோபமாகச் சொன்னாள்.

“என் வேலையைத் தான் பார்க்கிறேன் டீச்சர். என்ன அப்படிப் பார்க்கிறீங்க? உங்க குழந்தைக்கு அப்பாவா வர நான் தயாரா இருக்கேன். உங்களுக்கு ஓகேனா சீக்கிரமே கல்யாணத்தை வச்சுக்கலாம்…” என்றவன் கண்கள் துர்காவின் மேனியை மேய்ந்தன.

அவனின் பார்வையில் அருவருப்பாக உணர்ந்தவள், “ச்சீ… என் குழந்தைக்கு அப்பா, அம்மா எல்லாமே நான் தான். வழியை விடு…” என்ற துர்கா வேகமாக அவனைத் தாண்டி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள்.

அவளின் மனம் குமிறிக் கொண்டிருந்தது.

அவனின் பார்வையில் இருந்தது வக்கிரம் மட்டுமே என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

கணவனை இழந்தவள் என்று அவளைப் பற்றித் தெரிந்த பல ஆண்களும் அவளைப் பார்க்கும் பார்வை அதுதான்.

ஆரம்பத்தில் அந்தப் பார்வையைத் தாங்காமல் தனக்குள்ளேயே வெந்து புலம்பியிருக்கிறாள்.

இரவில் கண்ணீரால் தலையணையை நனைத்திருக்கிறாள். அவளின் அம்மா உயிரோடு இருந்தாலாவது அவரிடம் மனம் விட்டு பேசியிருப்பாள்.

ஆனால் தந்தையிடம் அவளால் அப்படிப் பேச முடியவில்லை.

அன்பும், பாசம் நிறைந்த தந்தையே ஆகிணும் பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை ஆண் மகனான தந்தையிடம் அவளால் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே குமைந்து போவாள்.

ஆரம்பத்தில் அப்படி அவளைச் சீண்டும் போது பயந்திருக்கிறாள். ஆனால் இப்போதோ பார்வையிலேயே ஆண்களைத் தள்ளி வைக்கப் பழகிக் கொண்டாள்.

வார்த்தையில் வெறுப்பையும் உமிழ பழகிக் கொண்டாள்.

குணாவின் முன் தன் மெல்லிய உணர்வுகளைக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவளின் மெல்லிய மனம் கலங்கித்தான் போனது.

தனியாக இருந்தால் ஒரு பெண் வாழவே முடியாதா என்ன? என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் துர்கா.

அவளின் தந்தை வீட்டிற்கு வெளியே இருந்த ஒரு திண்டில் அமர்ந்திருந்தார்.

அவரிடம் மகளைக் கொடுத்துவிட்டுக் குளியலறை சென்றவள் தன் கலக்கத்தை மறைக்கும் வண்ணம் முகத்தில் தண்ணீர் அடித்துக் கழுவித் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

அப்போது அவளின் எதிரே வந்தான் நித்திலன். அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் துர்கா தன் வீட்டிற்குச் சென்றாள்.

தானும் அவளைக் கண்டு கொள்ளாமல் குளியலறைக்குச் சென்று வந்த நித்திலன், சபரிநாதன் குழந்தையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, தன் வீட்டிற்குள் செல்லாமல், வாசல் நிலைபடியில் நின்று குழந்தை வருணாவையே வெறித்த பார்வை பார்த்தான்.

அப்போது வருணா அவனின் பக்கம் பார்த்துச் சிரித்தாள்.

அவளின் சிரிப்பில் அவனின் உள்ளம் கனிந்தது. அவனும் பதிலுக்கு அவளைப் பார்த்துச் சிரிக்க, குழந்தை அவனின் பக்கம் கை நீட்டியது.

தன்னைத் தூக்க சொல்கிறாளோ என்று நினைத்தவனுக்கு உள்ளம் படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

அவனின் மனம் கனிந்து இனித்துத் தித்திப்பாக உணர்ந்தது.

குழந்தையை அள்ளிக் கொஞ்ச அவனின் கைகளும், மனமும் பரபரத்தன.

ஆனால்… என்று நினைத்தவனுக்கு வேதனை நெஞ்சை அடைத்தது.

அதற்கு மேல் குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் வேகமாக வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான் நித்திலன்.