🖊️துளி 4👑

தேர்தலுக்கான பரபரப்பு அபிமன்யூவுக்கு இருந்ததோ இல்லையோ அவனது தந்தை தன்னுடைய மகனின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கையை கட்சித்தலைமையிடம் ஏற்கெனவே வைத்திருந்தவர் உட்கட்சி கோஷ்டி சண்டைகளையும் சமாளித்தவராய் மகனுக்காக வெற்றிப்பாதையை போட்டுவிட்டு அதில் அவன் நடைபோடப் போகும் நாளை எதிர்நோக்கியிருந்தார்.

அந்நிலையில் தான் அபிமன்யூ அவருடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றவன் காதில் விழுந்த தகவல் ஒன்றை கேட்டு அமைதியற்று திரிந்தான். அந்தக் கட்சியில் அவனது தந்தைக்கு சமமான செல்வாக்கு படைத்தவர் கல்வித்துறை அமைச்சரான ஜெகதீசன்.

அவருக்கு பார்த்திபன் அவருடைய மகனை அரசியலில் இறக்குவதைக் கண்டு ஏற்கெனவே புகைச்சல்.  கட்சி ஆட்களை அவ்வபோது தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவரால் ஏனோ பார்த்திபனை வெல்ல இயலவில்லை.

அப்போது அபிமன்யூவின் அரசியல் வருகை பற்றி பார்த்திபன் ஜஸ்டிஸ் டுடேவிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் வாரிசு அரசியல் ஒன்றும் அவ்வளவு மோசமான விஷயம் இல்லையென்று சொல்லி வார்த்தையை விட அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அன்றைய கூட்டத்தில் ஜெகதீசன் இதை குறிப்பிட்டு பார்த்திபனை கேலி செய்ய அபிமன்யூவிற்கு உள்ளே புகைந்ததை வெளியே காட்டிக் கொள்ள முடியாநிலை.

கோபத்துடனே வீட்டுக்கு வந்தவன் தந்தையிடம் “அப்பா! உங்களுக்காக தான் நான் இந்த எலக்சன்ல நிக்குறதே!  அந்த ஆள் சொல்லுற மாதிரி அப்பிடி இண்டர்வியூல என்ன நடந்துச்சு?” என்று கேட்க

பார்த்திபன் பெருமூச்சு விட்டபடி “அந்தச் சேனல்ல யாருமே எதுக்கும் வளைஞ்சு குடுக்க மாட்டாங்க அபி. அதுல நியூஸ் ஆங்கரா இருக்கிற பொண்ணு நம்ம கட்சியோட திருநெல்வேலி டிஸ்டிரிக்ட் செகரட்டரியோட பொண்ணு சுலைகா தான்.  அவ இண்டர்வியூல பேசுற விதம் புதுசா பாக்குறவங்களுக்கு ரொம்ப பணிவா பேசுற மாதிரி தோணும். ஆனா நம்ம வாய்ல இருந்தே விஷயத்தை கறக்கிறதுல கில்லாடி. அதுல நான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுட்டேன்பா. அதை தான் ஜெகதீசன் குத்திக்காட்டி கேலி பண்ணுறான்” என்று சொல்லி முடித்துவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

“சுபிம்மா! கொஞ்சம் தண்ணி கொண்டுவா” என்று அவரின் குரல் கேட்டு தண்ணீருடன் வந்தார் சுபத்ரா.

“போன வேலை நல்லபடியா முடிஞ்சுதாங்க?”  என்று தந்தையிடம் அன்னை வினவியதைப் பார்த்த அபிமன்யூ “நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்பா” என்று சொல்லிவிட்டு அவனது அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தான்.

“ஏதாச்சும் பண்ணு அபி! இனிமே பார்ட்டிகாரன் யாரும் அப்பாவை கேலி பண்ணக் கூடாது” என்று அவனின் மனசாட்சி கூக்குரலிட அஸ்வினுக்கு போன் செய்து அவன் செய்ய வேண்டிய விஷயத்தை கூறினான் அபிமன்யூ .

அதே நேரம் நாராயணன் ஜஸ்டிஸ் டுடேவில் விஷ்ணுவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“இது நல்ல விஷயம் தானே விச்சு. கண்டிப்பா அவரோட இண்டர்வியூ நமக்கு தேவை. அவங்க அப்பாவை இண்டர்வியூ எடுத்ததால பெரிய கான்ட்ரோவெர்சி வந்துச்சு தான். பட் அது மிஸ்டர் பார்த்திபனோட லூஸ் டாக்கால தானே தவிர சேனல் மேல யாரும் குத்தம் சொல்ல முடியாதே” என்றவரை கூர்மையுடன் பார்த்தான் விஷ்ணு.

“அப்போ அபிமன்யூவியோட இண்டர்வியூவால எந்தப் பிரச்சனையும் வராதுனு சொல்ல வர்றிங்களா சார்?” என்று கேட்டபடி அவன் எழ

அவனுடன் சேர்ந்து எழுந்த நாராயணன் “தப்பே இல்ல விச்சு.  நம்ம கிட்ட சுலைகா இருக்காங்க. அவங்க ரொம்ப மெச்சூர்டா இந்த இண்டர்வியூவ பிரச்சனை இல்லாம பண்ணி முடிச்சுடுவாங்க” என்றார் நம்பிக்கையுடன்.

அவர் சொன்னதை ஒப்புக்கொண்ட விஷ்ணு அடுத்த ஒருமணி நேரத்தில் தனது டீமிடம் விஷயத்தை விளக்கிவிட்டு சுலைகாவிடம் தயாராக இருக்குமாறு கூறிவிட்டான்.

அதன்படி சுலைகா அபிமன்யூவை பேட்டி எடுக்க தயாரானாள். பூர்வி அதற்கான ஸ்கிரிப்ட், சுலைகா கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாவற்றையும் தயார் செய்ய தொடங்க இன்னும் ஒரு வாரத்தில் அவனுடைய நேரலை பேட்டியை ஒளிபரப்பலாம் என்று முடிவு செய்தனர்.

அபிமன்யூவுக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்ததும் “என்னோட அப்பாவை ஒருத்தன் கிண்டல் பண்ணுற நிலமைக்கு கொண்டு வந்துட்டிங்கல்ல,  இதுக்கு நான் குடுக்கப் போற பதிலடிக்கு வெயிட் பண்ணுங்க” என்று உறுதியோடு எண்ணிக் கொண்டான்.

நாட்கள் கடக்க அந்த நாளும் வந்தது. ஆனால் விஷ்ணுவும் நாராயணனும் கோயம்புத்தூர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. எனவே அனைத்தையும் பூர்வியின் வசம் ஒப்படைத்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

எப்போதும் போல அலுவலகத்துக்கு வந்த ஸ்ராவணிக்கு சுலைகாவின் எண்ணிலிருந்து அழைப்பு வர அதை எடுத்து “ஏய் சுகா! இங்க எல்லாரும் உனக்காக வெயிட்டிங். நீ எங்கே இருக்க?” என்று வினவியவள் மறுமுனையில் கேட்டக் குரலில் திகைத்தாள்.

நேரே பூர்வியின் கேபினுக்கு சென்று “மேம்! சுகாவுக்கு ஆக்சிடெண்டாம். இப்போ தான் ரஹ்மான் அண்ணா போன் பண்ணுனாங்க.  கால்ல ஃப்ராக்சர். சோ அவளால இங்க வர முடியாதுனு அண்ணா சொன்னாங்க” என்று சொல்லவும் பூர்விக்குப் பதற்றமானது.

இன்னும் அரை மணி நேரத்தில் அபிமன்யூ ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவான். இந்நிலையில் அவனை பேட்டி எடுக்க யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வேறு.  ஸ்ராவணி “மேம்! நீங்களே பேசாம இண்டர்வியூ பண்ணிடுங்க, அதான் கரெக்டா இருக்கும்” என்று சொல்ல

பூர்வி “எனக்கு கண்டென்ட் பிரிபரேஷன் தான் வரும்னு உனக்கு நல்லாவே தெரிஞ்சும் என்னை போய் இண்டர்வியூ எடுக்க சொல்லுறியே வனி?” என்றாள் அவள் கவலையாக. தீவிரமாக யோசித்தவளின் முகம் தன்னெதிரே அமர்ந்திருக்கும் ஸ்ராவணியை கண்டதும் பிரகாசமானது.

“இண்டர்வியூ எடுக்க ஆள் கிடைச்சிட்டாங்க” என்று சந்தோசமாக கூவியவளை வினோதமாக பார்த்தாள் ஸ்ராவணி.

அவளைப் பார்த்தவாறே “அந்த அபிமன்யூவ நீ தான் இண்டர்வியூ பண்ணனும் வனி. போய் காஸ்டியூம் சேஞ்ச் பண்ணு” என்று பூர்வி சொல்ல

“மேம் நான் ஆல்ரெடி அவனை பாத்துருக்கேன், இப்போ நான் போயி இண்டர்வியூ பண்ணுனா அது சரியா வருமா? அவன் எதாச்சும் ஏடாகூடமா பேசி வச்சா என்ன பண்ணுறது?” என்றாள் ஸ்ராவணி யோசனையுடன்.

பூர்வி அவளது தோளில் கை வைத்து “இங்க பாரு வனிம்மா!  அப்பிடி பிரச்சனை வந்தா அதை நான் பாத்துக்கிறேன். நீ இப்போ போய் காஸ்டியூம் சேன்ஜ் பண்ணு” என்று சொல்லிவிட்டு அவளுக்கு உதவ மேனகாவை அனுப்பிவைத்தாள். பத்து நிமிடங்களில் கண்ணை உறுத்தாத காட்டன் சல்வாரில் அளவான மேக்கப்புடன் தயாரானவளை கண்டதும் பூர்வியின் முகம் தெளிவானது.

“நியூஸ் ஆங்கருக்கு பொருத்தமான ஆள் நீ தான் போ” என்று கேலி செய்தபடி ஸ்ராவணியின் கையில் டேபை கொடுத்தவள்

“இதுல நீ கேக்க வேண்டிய கொஸ்டீன்ஸ் இருக்கு. உன்னால கண்டிப்பா சுகாவோட ஸ்டைல ஃபாலோ பண்ண முடியாது. சோ யூ ஹேவ் டு மேக் யுவர் ஓன் ஸ்டைல் ஆஃப் பிரசண்டேசன்” என்று சொல்லி அவளுக்கு கை கொடுக்க ஸ்ராவணி நம்பிக்கையுடன் கைகுலுக்கினாள்.

பின்னர் புரொடக்சன் டீமிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லிவிட்டு ஸ்ராவணியை ரிலாக்சாக கெஸ்ட் அறையில் அமர சொன்னவள் ரகுவிடம் பிராட்காஷ்டிங் டீம் தயாராக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னாள் பூர்வி.

டைரக்டர் எல்லாம் தயார் என்று சொல்லவும் பெருமூச்சுவிட்டவள் தன்னுடைய கேபினுக்குள் சென்றாள். கெஸ்ட் அறையில் ரகுவும் மேனகாவும் ஸ்ராவணியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

“வனி! இன்னைக்கு தான் நீ பார்க்க பொண்ணு மாதிரி இருக்க” என்று ரகு கிண்டல் செய்ய ஸ்ராவணி நறநறவென்று பற்களை கடித்தாள்.

“பார்த்து கடிம்மா! அப்புறம் பொக்கைவாயோட போய் தான் கேண்டிடேட்டை இண்டர்வியூ பண்ணனும்” என்று மேலும் கேலி செய்து சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான் ரகு.

ஸ்ராவணி யோசனையுடன் இருக்கும் போதே யாரோ வரும் அரவம் கேட்க மூவரும் வாயிலை நோக்க அங்கே வாசல் நிலையை இடித்தபடி நின்றான் அபிமன்யூ.  பூர்வியுடன் பேசிக் கொண்டிருந்தவன் இன்னும் உள்ளே பார்வையைத் திருப்பவில்லை. அவனுடன் நின்று அந்த அலுவலகத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அஸ்வின்.

“பிளீஸ் கம் இன்” என்று புன்னகையுடன் பூர்வி உள்ளே வர கை காட்ட குனிந்தபடி உள்ளே வந்தவன் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த ஸ்ராவணியை கண்டதும் ஒரு நிமிடம் திகைத்தான்.

அஸ்வின் அவன் காதில் “டேய் அபி இவ எங்கடா இங்கே?” என்று ஆச்சரியத்துடன் கேட்க

அவன் “எனக்கும் அதே கன்ஃபியூசன் தான் அச்சு, வெயிட் பண்ணி பாப்போம்” என்று சொல்லிவிட்டுப் பூர்வியைப் பார்க்க அவள் ரகுவிடம் ஏதோ சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

இப்போது அறையில் அவர்கள் மூவர் மட்டும் அபிமன்யூ மற்றும் அஸ்வினுடன் இருக்க அபிமன்யூவின் விழிகள் ஸ்ராவணியை அளவிட்டது.

அவள் மனதுக்குள் “இந்த இடியட் இப்பிடி பாப்பான்னு தெரிஞ்சு தான் நான் இவனை இண்டர்வியூ பண்ணமாட்டேனு சொன்னேன்” என்று மனதிற்குள் பொருமினாள்.

அதற்குள் ரகு வந்த இருவரிடமும் கைகுலுக்க அவர்களும் புன்னகையுடன் கைகொடுத்தனர். ரகு மேனகாயிடமும் ஸ்ராவணியிடமும் சொல்லிவிட்டு வெளியேறியதும் இப்போது நால்வர் மட்டுமே தனித்திருக்க அபிமன்யூவின் குரல் அமைதியை உடைத்தது.

“ஹலோ வனி மேடம்! எப்பிடி இருக்கிங்க?” என்று கேலியாக வினவ

அஸ்வின் அவசரமாக “டேய் இவங்க பேரு வனி இல்லடா,  இது நம்ம நான்ஸிடா, மறந்து போச்சா?” என்று அவனுடன் சேர்ந்து கொள்ள ஸ்ராவணி ஒரு கணம் இருவரையும் உறுத்து விழித்தாள்.

பின்னர் கஷ்டப்பட்டு உதடுகளை இழுத்து புன்னகைத்தபடி “ஹலோ சார்! ஐ அம் ஸ்ராவணி சுப்பிரமணியம்” என்று அவனுக்கு கை கொடுக்க

அபிமன்யூ கிண்டலாக “இதாச்சும் உண்மையான பேரா? இல்ல இதுவும் டூப்ளிகேட் நேமா?” என்றதும் அவள் கொடுத்த கையை இழுக்க முயல அதற்குள் அவன் அவளின் கையைப் பற்றிக் கொண்டான்.

“ஜஸ்ட் கிட்டிங்! உடனே கோவம் வந்துடுச்சு மேடத்துக்கு!” என்று சொல்லி கையை குலுக்கியவன் அவள் கையை விட மறந்தவனாக பேச ஆரம்பிக்க ஸ்ராவணி கையை உருவ முயன்றாள்.

அவளின் முயற்சியை கள்ளச்சிரிப்புடன் பார்த்தபடியே “உங்களுக்கு எதாச்சும் கிஃப்ட் குடுக்கணுமே” என்று சொல்ல 

ஸ்ராவணி பல்லை கடித்தபடி “அதுக்கு ஒரு அவசியமும் இல்ல” என்று சொன்னவள் அவன் கையில் பட்டென்று ஒரு அடி வைக்க அவன் திகைத்தவனாய் அவளின் கையை விடுவித்தான்.

ஸ்ராவணி தன்னுடைய கையை  தடவி கொடுத்துவிட்டு “வெல்கம் டு அவர் சேனல்” என்றாள் முறைத்தபடி.

அவளின் வாழ்த்தை தலையசைத்து ஏற்றுக்கொண்டவன் சட்டை பாக்கெட்டில் கைவைத்து எதையோ எடுக்க முயல மேனகா குழப்பத்துடன் “அடியே இவன் கிட்ட இருந்து எதையும் வாங்காதடி. அப்புறம் அதை வச்சு எதாச்சும் சீன் கிரியேட் பண்ணப்போறான்” என்று தோழிக்கு அறிவுறுத்தினாள்.

ஸ்ராவணி அவனை பார்த்து கொண்டிருக்கும் போதே பாக்கெட்டிலிருந்து அவளின் செயினை எடுத்தவன் அதை கையில் வைத்து ஆட்டிக் காட்ட இரு பெண்களும் கண்களை விரித்துச் செயினைப் பார்த்தனர்.

ஸ்ராவணி ஒரு வழியாக தந்தை பரிசளித்த செயின் கிடைத்த சந்தோசத்தில் அவனிடம் இருந்து வாங்க முயல அவன் அதை மீண்டும் பாக்கெட்டில் போட்டு கொண்டான்.

ஸ்ராவணி அதைக் கண்டு கடுப்புடன் “எக்ஸ்யூஸ்மீ! அது என்னோட செயின். எதுக்கு உங்க பாக்கெட்ல போட்டுக்கிட்டிங்க சார்?” என்று கேட்க

அபிமன்யூ பொய்யான ஆச்சரியத்துடன் “உங்களை இப்போ தான் ஃபர்ஸ்ட் டைமா பாக்குறேன் நானு” என்றபடி அருகிலிருந்த அஸ்வினிடம் “அச்சு! இவங்களை நம்ம முன்ன பின்ன பாத்திருக்கோம்?” என்று கேட்டு வைக்க

அவன் “எனக்கு தெரிஞ்சு ஸ்ராவணிங்கிற பேருல கடந்தகாலத்துலயோ, நிகழ்காலத்துலயோ உனக்கு எந்த கேர்ள் ஃப்ரெண்டும் இல்லடா.  பட் வருங்காலத்துல வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு” என்று கேலி பேசி ஸ்ராவணியின் பொறுமையைச் சோதித்தான்.

அவள் கோபத்தை அடக்கியவளாய் “இப்போ என்னோட செயினை குடுக்க முடியுமா? முடியாதா?” என்று கேட்க

அபிமன்யூ “இது உங்க செயின் தான்னு எதாச்சும் ப்ருஃப் காட்டுங்க. அதுக்கு அப்புறமா நான் இத குடுக்கலாமா வேண்டாமானு முடிவு பண்ணுறேன்” என்றான்  அமர்த்தலாக.

“இங்க பாருங்க! அன்னைக்கு நைட் டான்ஸ் பண்ணுறப்போ என்னோட செயின் கழண்டு எப்படியோ உங்க டிரஸ்ல விழுந்துருக்கு. அதை குடுத்துடுங்க” என்றாள் அமைதியான குரலில்.

அவளின் எந்த பொருளும் அவனிடம் இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது அவளின் அந்த கசந்த குரலில் தெளிவாக தெரிய அபிமன்யூ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

சாதாரணமாக “யூஸ்வலா எனக்கு நைட் மீட் பண்ணுன பொண்ணோட ஃபேஸ் மார்னிங் நியாபகம் இருக்காது மேடம்.  நீங்க என்னைக்கு என்னை பாத்திங்கன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா? இல்ல உங்களுக்கும் என்னை மாதிரியே நைட் மீட் பண்ணுனவங்களை மறந்து போற பழக்கம் இருக்கா?” என்று கேட்க அவன் கேட்ட அர்த்தத்தில் ஸ்ராவணி கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டாள்.

கடுப்புடன் “அட சீ!  எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க, நம்ம எப்பிடி  இருக்கோமோ அதை வச்சு தான் மத்தவங்களை நம்ம கெஸ் பண்ணுவோம்னு.  அது சரியா தான் இருக்கு. என்னை பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுதுடா?” என்று அவள் ஒருமைக்குத் தாவ அபிமன்யூவுக்கு அந்த கோபம் மனதுக்கு இதமாக இருக்கவே அவன் சிரித்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.

இரண்டு கைகளையும் வாகாக வைத்தபடி “நீ சொல்லுற மாதிரி இது உன்னோட செயினாவே இருக்கட்டுமே!  நான் திருப்பித் தரப் போறது இல்ல. என் கிட்ட வந்த எந்தப் பொருளையும் திருப்பி குடுக்கிற பழக்கம் எனக்கு இல்ல” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க

ஸ்ராவணி “அடுத்தவங்க பொருளை சொந்தம் கொண்டாட வெக்கமா இல்ல? இனி நீயே குடுத்தாலும் எனக்கு அது வேண்டாம். நான் அதை திருப்பதி பெருமாளோட உண்டியல்ல போட்டதா நினைச்சிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அறையின் கதவை அறைந்து சாத்தியபடி வெளியேறினாள்.

மேனகா என்ன செய்யவென்று தெரியாமல் விழிப்பதை கண்ட அஸ்வின் “ஹலோ கண்ணாடி போட்ட மேடம்! உங்களுக்கு எதாவது பேர் இருக்கா? இல்ல நீங்களும் அந்த சண்டைகோழி மாதிரி டூப்ளிகேட் நேமோட தான் சுத்துறீங்களா?” என்று கேலி செய்துவிட்டு அபிமன்யூவுடன் சேர்ந்து சிரிக்க

மேனகா கடுப்புடன் “என் பேரை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க மிஸ்டர்?” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற நடை போட்டாள்.

“சரி பேர் வேண்டாம். ஊரையாச்சும் சொல்லிட்டு போமா” என்ற அஸ்வினை முறைத்தபடி “ஹான்!  திருநெல்வேலி” என்று பல்லை கடித்துச் சொன்னவள் கதவை அறைந்துச் சாத்திவிட்டு சென்றாள்.

அபிமன்யூ “டேய் அச்சு! இந்த ரெண்டு பேரும் இப்போ எதுக்கு டோரை இப்படி படார்னு சாத்திட்டு போறாங்களாம்?” என்று அஸ்வினின் தோளில் கையைப் போட்டபடி வினவ அவன் கேலியாக “அவளுங்க கோவமா இருக்காளுங்களாம்மா!  எல்.கே.ஜி பாப்பாஸ்” என்று சொல்லவும் இருவரும்  சத்தமாக சிரித்தபடி ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.