🖊️துளி 39👑

அபிமன்யூவின் கை ஸ்ராவணியின் கூந்தலைச் சரி செய்ய உயர அவள் அவனை முறைத்தவாறே புருவம் உயர்த்தி “என்ன?” என்று கேட்க அந்த ஒரு கேள்வியும், முறைப்புமே உயர்ந்த அவனது கைகளை தானாக இறங்க வைக்க அஸ்வினின் தொண்டை செருமல் அவனை அந்த ஃபிளாட் வாயிலுக்கு மீண்டும் இழுத்துவந்தது.

அவன் கைகளைக் கட்டிக் கொள்ள அஸ்வின் ஸ்ராவணியிடம் “ரிப்போர்ட்டர் மேடம் எங்க கார் ரிப்பேர் ஆயிடுச்சு. நைட் ஃபுல்லா கார்ல இருந்துட்டு மார்னிங் சர்வீஸ் விடலாம்னு நெனைச்சோம். பட் கார் மேல மரக்கிளை உடைஞ்சு விழுந்துடுச்சு. இஃப் யூ டோண்ட் மைண்ட்…”என்று இழுக்க

ஸ்ராவணி அமைதியாக “உள்ளே வாங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு வழிவிட்டு உள்ளே செல்ல அவளைத் தொடர்ந்து நடந்த அஸ்வின் அபிமன்யூ இன்னும் வெளியே நிற்பதைக் கண்டு “இவன் வேற என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறானே” என்று புலம்பியபடி அவன் கையைப் பிடித்து உள்ளே இழுத்து வந்தான்.

அதற்குள் இந்த அரவம் கேட்டு விழித்த மேனகா அவளது அறையிலிருந்து ஹாலுக்குள் வந்தவள் “வனி! என்ன சத்தம்? யாரோ ரெண்டு உருவம் நிக்கிற மாதிரி இருக்கு? யாரு வந்திருக்காங்க?” என்று கண்ணைக் கசக்கியபடி கேட்க

அஸ்வின் வாய்க்குள் “க்கும்..இவளுக்கு பகல்லயே பசு மாடு தெரியாது. இருட்டுல மட்டும் அப்பிடியே யாருனு தெரிஞ்சுடப் போகுது பாரு” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி அவளிடம் “எதுக்கும் கண்ணாடியைப் போட்டுட்டு பாரும்மா. தெளிவா தெரிய வாய்ப்பு இருக்கு” என்க அவனது குரலில் யார் வந்திருப்பது அறிந்தவள் அவர்களின் அறைக்கு ஓடிச் சென்று கண்ணாடியை அணிந்துவிட்டு வெளியே வந்தாள்.

அதற்குள் ஸ்ராவணி மெழுகுவர்த்தியை தேடி கண்டுபிடித்து ஹாலில் ஏற்றி வைத்தவள் இருவரும் தொப்பலாக நனைந்திருப்பதை பார்த்ததும் மூலையில் இருந்த ஒரு அறையைக் காட்டி “நீங்க விட்டுட்டுப் போன உங்களோட டிரஸ் சிலது அந்த ரூம்குள்ள இருக்கு. இதை சேன்ஜ் பண்ணிக்கோங்க” என்க இருவரும் சரியென்று தலையாட்டிவிட்டு உள்ளே சென்றனர். மேனகா அவர்கள் சென்றதும் ஸ்ராவணியைக் கடிந்து கொண்டாள்.

“நீ ஏன் வனி அவங்களை அலோ பண்ணுன? பெரிய இவனாட்டம் ஊட்டியில அந்த பேச்சு பேசிட்டுச் சென்னை வந்ததுக்கு அப்புறம் மூச்சு காட்டாம இருந்தவன் தானே! சாருக்கு ஹெல்ப் பண்ண மட்டும் நம்ம வேணுமா?”

“ப்ச் மேகி! மெதுவா பேசு. இந்த மாதிரி டைம்ல வீட்டுக்குள்ள வராதேனா சொல்ல முடியும்? ஹியூமானிட்டியை மறந்துட்டுப் பேசாத” என்று அவளை கண்டித்துவிட்டு அவர்களுக்காக காத்திருக்க இருவரும் பத்து நிமிடத்தில் உடை மாற்றிவிட்டுத் திரும்பினர்.

அபிமன்யூ “வனி! தேங்க்…” என்று ஏதோ சொல்ல வர அவனை இடைமறித்த ஸ்ராவணி “அம்மா அப்பாவோட ரூம் காலியா தான் இருக்கு. வேணும்னா அங்கே தூங்கிக்கோங்க. வேற எதாச்சும் வேணுமா?” என்று கேட்க அவன் வேண்டாமென்று தலையை மட்டும் இடவலமாக ஆட்ட ஸ்ராவணி மேனகாவுடம் அவர்களின் அறைக்குச் சேன்று தாளிட்டுக் கொண்டாள்.

அவர்கள் இருவரும் சென்றபிறகு இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டவன் “அச்சு! எல்லாம் உன்னால தான்டா. நான் இதுக்கு தான் வர மாட்டேனு சொன்னேன்” என்றவனை அஸ்வின் புரியாதப் பார்வை பார்த்துவிட்டு ஸ்ராவணி சுட்டிக்காட்டிய அறைக்குச் செல்ல அபிமன்யூவும் பின்தொடர்ந்தான் அவனை.

உள்ளே வந்ததும் அஸ்வின் “இப்பிடி அவங்களைக் கண்டா ஒதுங்கிப் போறதை நீ முன்னாடியே செஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதுல்ல அபி” என்றான் நிதானமாக.

அபிமன்யூ அவன் பேசும் வார்த்தையின் பொருள் புரிபட “இல்ல அச்சு! நான் என்ன சொல்ல வர்றேனு உனக்குப் புரியலை” என்று விளக்க முற்பட அவனை கையுயர்த்தி தடுத்தவன் “நீ சொல்லவே வேண்டாம்டா. ஆனா உனக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். நம்ம பழகுன பொண்ணுங்களுக்கும், இவங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இவங்களோட ஃபீலிங்ஸோட விளையாடுறது ரொம்ப தப்பு அபி. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்” என்று உரைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான் அஸ்வின்.

அபிமன்யூ யோசனையில் மூழ்கியவனாய் இருக்க அவனது போன் அடித்தது. சுபத்ரா தான் நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாமல் மழையில் சிக்கிக் கொண்டார்களோ என்று பதறிப்போய் போன் செய்திருந்தார். அவரிடம் தானும் அஸ்வினும் ஸ்ராவணியின் ஃபிளாட்டில் தான் உள்ளோம் என்பதை சொன்னவன் தங்களை நினைத்து பதற வேண்டாம், விடிந்ததும் வந்துவிடுவதாகச் சொல்லி போனை வைத்தான். போனை வைத்துவிட்டு ஹாலுக்கு வந்தவன் மெழுகுவர்த்தி ஒளியில் வரிவடிமாக தெரிந்த அந்த அறையை அளவிட்டபடி யோசனையில் ஆழ்ந்தவன் சீக்கிரமாக உறங்கியும் போய் விட்டான்.

மறுநாள் காலையில் ஸ்ராவணி சீக்கிரமாக கண் விழித்தவள் பால்கனிக்குச் சென்று வெளியே எட்டிப் பார்க்க இன்னும் வானம் கருமேகக்கூட்டத்துடனே இருக்க “இன்னைக்கு மழை விடாது போலயே. இந்த பவரும் சேர்ந்து சதி பண்ணிடுச்சே வனி” என்று புலம்பியபடியே அங்கிருந்து நகர்ந்து ஹாலுக்கு வந்தவள் சோஃபாவில் காலைக் குறுக்கியபடி படுத்திருந்த அபிமன்யூவைப் பார்த்துவிட்டாள்.

“இவன் ஏன் ரூம்ல தூங்காம ஹால்ல ஏன் படுத்திருக்கான்?” என்ற யோசனையுடன் அவனைக் கடக்கும் போதே அவளது குர்தாவின் நுனி சோஃபாக்களுக்கு நடுவில் போடப்பட்டிருந்த டேபிளிலிருந்த ஃபிளவர் வாஸில் சிக்கிக் கொள்ள அதை அறியாமல் விருட்டென்று ஸ்ராவணி நடக்க அது டேபிளில் இருந்து கீழே விழுந்தது.அது எழுப்பியச் சத்தத்தைக் கேட்டு ஸ்ராவணி காதைப் பொத்திக் கொள்ள அபிமன்யூ திடுக்கிட்டுப் போய் பதறி எழுந்தான்.

எழுந்தவனின் கண்ணில் காதைப் பொத்தியபடி நிற்கும் ஸ்ராவணி விழ தூக்கம் கலைந்த எரிச்சலில் “ஒரு மனுசனை நிம்மதியா தூங்க கூட விடமாட்டியா நீ?” என்று கத்த அவனது செய்கையில் ஸ்ராவணி வாயடைத்துப் போனாள்.

ஆனால் சீக்கிரமாகவே சுதாரித்தபடி “ஹலோ! என்ன வாய்ஸ் ரெய்ஸ் ஆகுது? நான் என்னமோ வேணும்னு அதை தள்ளிவிட்ட மாதிரி பேசுற? முதல்ல நீ இங்கே படுத்துத் தூங்குனதே தப்பு. இதுல என் கிட்டவே கத்துறியா?” என்று அவளும் பதிலுக்குக் கத்தித் தீர்க்க இருவரின் சத்தத்தில் அஸ்வினும் மேனகாவும் விழித்துக் கொண்டனர்.

பதறியடித்து ஹாலுக்கு வந்தவர்கள் எரிச்சலுடன் சோஃபாவில் அமர்ந்திருக்கும் அபிமன்யூவையும், கோபத்துடன் நிற்கும் ஸ்ராவணியையும் பார்த்துவிட்டு தரையில் கிடந்த ஃபிளவர் வாஸையும் நோட்டம் விட்டபடி நின்றனர்.

ஸ்ராவணி தரையைப் பார்த்தவள் உடைந்த ஃபிளவர் வாஸின் உடைந்த துண்டுகள் யார் காலையும் பதம் பார்க்கும் முன் அதை அங்கிருந்து சுத்தம் செய்ய முனைய அந்த சீனாக்களிமண்ணாலான துண்டுகளில் ஒன்றின் கூரியமுனை அவளது கையைப் பதம் பார்த்துவிட்டது. ஸ்ராவணி வலியில் முகம் சுருக்கியவள் இரத்தம் வருவதற்குள் கையை வாஸ்பேசினில் காட்ட குளிர்ந்த நீர் அந்த கீறலின் எரிச்சலைக் குறைத்தது. மேனகா “ரொம்ப வலிக்குதா வனி?” என்றபடி டிஞ்சரோடு வர ஸ்ராவணி “சின்ன கீறல் தான். லைட்டா எரியுது” என்றபடி அவளிடம் கையை நீட்டினாள்.

மேனகா பஞ்சில் டிஞ்சரைத் தோய்த்து கீறலில் வைக்க டிஞ்சர் அளவு அதிகமானதாலோ என்னவோ ஸ்ராவணி வலியில் கத்திவிட்டாள். இவ்வளவு நேரம் பிடித்து வைத்த பிள்ளையார் போல அமர்ந்திருந்த அபிமன்யூ அவளின் சத்தத்தில் அவர்களிடம் ஓடிச் சென்றவன் மேனகாவிடமிருந்து டிஞ்சர் பாட்டில் மற்றும் பஞ்சை வாங்கிக் கொண்டு அவள் கையில் மெதுவாக பஞ்சை வைத்து காயத்தைத் துடைக்க ஸ்ராவணி கையை விருட்டென்று இழுத்துக் கொண்டாள். அவன் கத்திய எரிச்சலில் இருந்தவளுக்கு அவனது உதவி தேவையில்லை என்ற எண்ணம்.

“நானே போட்டுக்கிறேன்” என்றபடி டிஞ்சருக்காக இன்னொரு கையை நீட்ட அபிமன்யூ அவளை முறைத்தபடி அவளின் காயம் பட்ட கையைப் பற்ற முயல அவள் அதற்கு இடமளிக்காது கையை மடக்கிக் கொண்டாள். அவன் அதை சட்டைச் செய்யாமல் அவளது கையைப் பற்றியவன் முழுவதுமாக காயத்துக்கு மருந்திட்டுவிட்டு தான் அவள் கையை விடுவித்தான்.

இங்கே நடந்த நிகழ்வுகளை மேனகாவும், அஸ்வினும் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை மட்டும் பார்க்க ஸ்ராவணி அவர்களை நோக்கி “இங்கே சினிமாவா ஓடுது? இப்பிடி பார்த்துட்டே நிக்கிறிங்க. வழி விடுங்க” என்று சொல்லி அவர்களை விலக்கிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் வாய்க்குள் முணுமுணுத்தபடிச் சென்றதைப் பார்த்த அபிமன்யூ தோளை குலுக்கிவிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றவன் கார் சர்வீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்ய அவர்களோ மழையில் வருவது கடினம் என்று கூறிவிட்டனர். வீட்டுக்குப் போன் செய்து இன்னொரு காரை அனுப்பச் சொல்லுவோமா என்ற எண்ணத்துடன் பால்கனியில் இருந்து வீதியை எட்டிப்பார்த்தவன் திகைத்துப் போனான்.

இரவு முழுவதும் நிற்காத மழையால் வீதியில் நடைபாதை என்ற ஒன்று காணாமல் போய் அதற்குப் பதிலாக மழைநீர் நதி போல ஓடிக் கொண்டிருந்தது. இந்த தண்ணீரில் கார் வருவது கடினம் என்பது அவன் புத்தியில் உரைக்க தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான் அவன்.

ஸ்ராவணி தங்களின் அறைக்குச் சென்றவள் அலுவலகத்திலிருந்து மழை விடும்வரை அலுவலகம் வரத் தேவையில்லை என்ற தகவல் வர பெருமூச்சு விட்டபடி குளிக்கச் சென்றாள். குளித்துவிட்டு வந்தவளுக்கு பசி வயிற்றுக்குள் எலி போல் ஓட கிச்சனுக்கு சென்றாள். அவள் கிச்சனில் உருட்டிக் கொண்டிருக்கும் போதே மேனகா வந்துச் சேர்ந்தாள்.

ஸ்ராவணி பசிக்கிறது என்று சொல்ல ஃபிரிஜை திறந்தவள் நீண்டநேர மின் தடையால் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போயிருக்க அவசரத்துக்கு என்று வாங்கி வைத்திருந்த நூடுல்ஸை கிண்டத் தொடங்கினாள். ஸ்ராவணியும் அவளும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க அஸ்வின் கிச்சனை எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தான்.

“ஹலோ லேடிஸ்! வேற ஒன்னும் இல்ல. ரொம்ப பசிக்குது. அதான் வந்தேன். என்ன பண்ணிட்டு இருக்கிங்க?” என்று  கடாயினுள் எட்டிப் பார்க்க அதில் நூடுல்ஸ் அவனைப் பார்த்து சிரித்ததும்

அதைக் கிண்டிக் கொண்டிருந்த மேனகாவை நக்கலாகப் பார்த்தவன் “ஒரு மேகியே மேகியை கிண்டுகிறதே அடடா ஆச்சரியக்குறி” என்று கேலி செய்ய மேனகா “ஓவரா பேசுனா அது கூட கிடைக்காதுனு சொல்லு வனி” என்று மறைமுகமாக மிரட்டிவிட்டு அதில் அவள் இஷ்டத்துக்கு பொருட்களைச் சேர்க்க ஆரம்பித்தாள்.

“சரி! ஏதோ பண்ணி எங்களை காலி பண்ணனும்னு நீ முடிவு பண்ணிட்ட. கேரி ஆன். தயாரானதும் சொல்லுங்க. பயங்கர பசி. இது எவ்ளோ கேவலமா இருந்தாலும் வேற வழியில்ல” என்றபடி ஹாலுக்குச் சென்றான்.

ஸ்ராவணியும் கிச்சனிலிருந்து ஈரத்தலையைத் துவட்டியபடி ஹாலுக்கு வந்தவள் கூந்தலை உதறிவிட்டுச் செல்ல அங்கே அமர்ந்திருந்த அபிமன்யூவின் முகத்தில் நீர்த்துளிகள் தெறித்தது. அபிமன்யூ திரும்பி அவளைப் பார்த்தபடி “அந்த டவலை கொஞ்சம் குடுத்துட்டுப் போம்மா. உன் தலையில உள்ள தண்ணி ஃபுல்லா என் முகத்துல தான்” என்று சொல்ல அவள் ஹாலில் மற்றொரு மூலையில் நின்றபடி டவலை அவன் முகத்தில் வீசிவிட்டுச் சென்றாள்.

அஸ்வின் அவனிடம் கேலியாக “ஏன் வேற டவல்ல துடைச்சா ஆகாதா?” என்க அவன் எதுவும் சொல்லாமல் சிரித்தவன் அவளது அறையை நோக்கிச் செல்ல அஸ்வினின் மூளைக்குள் அபாயச்சங்கு ஒலிக்க ஆரம்பித்தது.

“டேய் அபி எங்கேடா போற?” என்றபடி எழும்பியவனை உதட்டில் கைவைத்து அமைதி என்று சைகை காட்டியபடி அவளது அறையில் காலடி எடுத்து வைத்தான் அவன். சுற்றி முற்றி பார்த்தவன் எல்லாம் சரியான இடத்தில் சரியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை வேடிக்கை பார்த்தபடி நிற்க ஸ்ராவணி மேனகா தான் வந்துவிட்டாள் என்று எண்ணி அவனிடம் “மேகி அந்த கப்போர்ட்ல என்னோட ஸ்கார்ஃப் இருக்கும். கொஞ்சம் எடு” என்றபடி லேப்டாப்பில் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் கப்போர்ட்டை திறந்த போது அதில் ஹேங்கரில் தொங்கவிடப்பட்டிருந்த அவளது உடைகளுக்கு நடுவில் ஒரு ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த அவனுடைய கோட்டைக் கண்டதும் இனம் புரியாத சந்தோசம் அவன் உள்ளத்தில் தோன்ற ஸ்ராவணியை திரும்பிப் பார்க்க அவளோ இன்னும் லேப்டாப்பையே நோண்டிக் கொண்டிருந்தாள்.

கண்கள் லேப்டாப்பின் திரையை நோக்கியிருக்க உதட்டைக் கடித்தபடி கூந்தலை ஒதுக்கியபடி எதையோ தேடிக் கொண்டிருந்தாள் அவள். அவள் தேடியது கிடைத்ததும் சந்தோசத்தில் சிரிக்க கன்னம் குழிய இதழ்கள் விரிந்த அந்தச் சிரிப்பில் மயங்கிப் போனவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னுடைய கோட்டை இவ்வளவு பத்திரமாக வைத்திருக்கிறாள் என்றால் தான் ஏதோ விதத்தில் அவள் மனதைப் பாதித்து தான் இருக்கிறோம் என்ற எண்ணம் அவன் மனதை இதமாக வருடியது.

“இன்னுமா மேகி ஸ்கார்ஃப் கெடைக்கல?” என்ற அவளின் குரலில் மூளையில் மணி அடிக்க ஸ்கார்ஃபைத் தேடி அவளிடம் நீட்ட அவள் திரும்பாமலே அவன் கரம் பற்றி வாங்கிக் கொண்டாள். ஆனால் அவன் கரத்தின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டுத் திரும்பியவள் அவளிடமிருந்து சில அடி தூரத்தில் நின்றவனை கண்டு விழிவிரித்தாள்.

“நீ இங்கே என்ன பண்ணுறடா? முதல்ல வெளியே போ” என்று வாசலை நோக்கிக் கையைக் காட்ட அவனோ அதை அலட்சியம் செய்துவிட்டு அங்கேயே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“அப்பிடிலாம் போக முடியாது மேடம். நான் உன்னை ஒன்னுமே பண்ணலையே! நான் பாட்டுக்கு ஒரு ஓரமா உக்காந்து உன்னைப் பார்த்திட்டிருக்கப் போறேன். இதுல உனக்கு என்ன கஷ்டம்?”

“வாட்? உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. இப்போ நீயா வெளியே போறியா இல்ல கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளணுமா?”

அவள் அவ்வாறு சொல்ல எழுந்தவன் அவள் அருகில் வந்தபடியே “கழுத்தைத் தானே பிடிக்கணும். இந்தா பிடிச்சுக்கோ” என்று கேலியாகச் சொல்ல அவள் பின்னோக்கி நகர்ந்தாள்.

“இப்போ என்னடா வேணும் உனக்கு?” என்று அவள் நிதானமாக கேட்க அவளைத் தன் கைகளால் சிறை செய்தபடியே “நீ என்னை யோசிக்க சொன்னல்ல, நான் தெளிவா யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்துருக்கேன்” என்று சொல்ல ஸ்ராவணி அதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எப்படியும் இது சரிப்படாது என்று தான் கூறப்போகிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு.

அபிமன்யூ அலட்சியம் தெறிக்கும் அவளின் கண்களுடன் தனது கண்களை கலக்க விட்டபடி “ஐ லவ் யூ வனி. எனக்கு லைஃப் லாங் உன் கூட வாழணும்னு ஆசையா இருக்கு” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல அந்த குரலில் அவனது அருகாமையில் மூழ்கத் தொடங்கியவளின் ஆறாம் அறிவு விழித்துக் கொள்ள அவனது மார்பில் கை வைத்துத் தள்ளிவிட்டாள் ஸ்ராவணி.

“ஒரு மாசமா இந்த லவ் கோமாவுல இருந்துச்சோ?” என்ற அவளின் கேலியை ரசித்தவன் “நீ போட்ட கண்டிசன் அப்பிடிம்மா. காதல் வரும்னு கேரண்டிலாம் குடுக்க மாட்டேனு சொன்னா எனக்கும் கொஞ்சம் பதறும்லா. பட் இப்ப எனக்கு முழு நம்பிக்கை வந்துடுச்சு. உனக்கு என்னைக் கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிடுச்சு ஸ்ராவணி!” என்று காதலுடன் கூற அவள் குழம்பிவிட்டாள்.

பின்னர் நக்கலாக “அஹான்! திடீர்னு எப்பிடி சாருக்கு இந்த நம்பிக்கை வந்துச்சு?” என்று கேட்டுவிட்டு புருவத்தை உயர்த்த

அவன் “அதோ அந்த கப்போர்ட்ல இருந்த என்னோட கோட்டைப் பார்த்த பிறகு தான் வந்துச்சு” என்று வார்ட்ரோபை கை காட்ட ஸ்ராவணி ஓடிச் சென்று அதைத் திறந்துப் பார்க்க அதில் அவளது உடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருந்த கோட்டைப் பார்த்ததும் திகைத்தாள்.

சட்டென்று அவன் புறம் திரும்பி “இங்க பாரு! இதை வச்சு நீ எந்த முடிவுக்கும் வராத. நான் ஏதோ அவசரத்துல அதை அங்கே வச்சிட்டேன்” என்று விளக்கம் கொடுக்க அவளது விளக்கத்தை கேட்காமல் காதில் விரலை வைத்துக் கொண்டவன் “நீ என்ன சொன்னாலும் இந்த காதுல விழாது. என் மூளைக்கும் எட்டாது. பிகாஸ் என் ஹார்ட்டை தவிர மத்த எல்லா ஆர்கனையும் நான் ஆஃப் பண்ணி வச்சிட்டேன்” என்று அவன் வசனம் பேச அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

தலையிலடித்தபடி குனிந்தவளின் முகத்தை அவள் உயரத்துக்கு குனிந்து பார்த்தபடி “வெக்கப்படுறியா வனி? கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து வெக்கப்பட்டா நாங்களும் பார்த்துப்போம்ல” என்க அவள் பதற்றத்துடன் நிமிர்ந்தவள் அவன் நெற்றியில் மோதி நின்றாள். தனது நெற்றியைத் தடவியபடி அவனைப் பார்த்தவள் அங்கிருந்து செல்ல முயல அவள் செல்லும் பகுதியிலெல்லாம் வந்து அவளை மறித்தான் அபிமன்யூ. அவனைச் சுற்றிக் கொண்டு செல்ல முயன்றவளின் கைப்பற்றி நிறுத்தியவன் “எப்போ என் கிட்ட உன் லவ்வ சொல்லுவ வனி?” என்று குறும்புடன் கேட்க ஸ்ராவணி திரும்பி அவனைப் பார்க்க அந்த காட்சியை அறைவாயிலில் நின்று கொண்டிருந்த அஸ்வினும் மேனகாவும் பார்த்துவிட்டு திகைத்து நின்றனர்.