🖊️துளி 36👑

மருத்துவர் ஸ்ராவணியைப் பரிசோதித்துவிட்டு “உங்களுக்கு இந்த சில் கிளைமேட் ஒத்துக்கல. அதான் ஹை ஃபீவர். மெடிசின்ஸ் எழுதி தர்றேன். ஒரு இன்ஜெக்ஸனும் போடணும்” என்றபடி சிரிஞ்சை எடுக்க மேனகாவின் கண்கள் அதைக் கண்டதும் பீதியடைந்தன. ஸ்ராவணியின் காதில் “வனி உனக்குப் பயமாவே இல்லயா?” என்று கேட்க

அவளை முறைத்த ஸ்ராவணி “நீ இங்கே இருந்தா நீயும் டென்சன் ஆகி என்னையும் டென்சன் ஆக்குவ. வெளியே போய் வெயிட் பண்ணு. நான் வர்றேன்” என்று சொல்ல அவள் விட்டால் போதுமென்று வெளியேறிவிட்டாள்.

அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவளுக்கு அவளை அறியாமல் தும்மல் வர “வனிக்கு மட்டுமில்ல எனக்குமே இந்த கிளைமேட் ஒத்துக்கல. எப்பிடி தான் இந்த ஊர்ல இருக்காங்களோ?” என்று தன்னுள் எண்ணிக் கொண்டபடி ஸ்ராவணிக்காகக் காத்திருந்தாள்.

அப்படியே வேடிக்கைப் பார்த்தபடி திரும்பியவளின் கண்ணில் அவளை நோக்கிப் பதற்றத்துடன் வந்து கொண்டிருந்த அபிமன்யூவும், அஸ்வினும் படவே “வந்துட்டாங்கடா மாற்றான் படத்துல வர்ற சூரியா மாதிரி” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

அதற்குள் அவள் அருகில் வந்துவிட்டவன் “வனி எங்கே?” என்று மேனகாவைப் பார்த்துக் கேட்க அவள் வேகமாக அவளுடைய டாப்பின் பாக்கெட்டுகளைத் தடவி விட்டு உதட்டைப் பிதுக்கியபடியே “இவ்ளோ நேரம் என் பாக்கெட்டுல தான் இருந்தா எம்.எல்.ஏ சார். எப்போ இறங்கிப் போனானு தெரியலயே” என்று பொய்யாக வருத்தப்பட அபிமன்யூ அவளது செய்கையில் ஆயாசம் அடைந்தான்.

மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டவனைக் கவனித்த அஸ்வின் “லிசன் உன்னோட மொக்கை ஜோக்கை நாங்க அப்புறமா கேட்டுக்கிறோம். இப்போ ரிப்போர்ட்டர் எங்கேனு சொல்லு. அவனைப் பார்த்தல்ல எவ்ளோ டென்சனா இருக்கானு” என்று நண்பனுக்காகப் பரிந்து கொண்டு வர மேனகா அவனை புருவம் உயர்த்திப் பார்க்க அவன் அமைதியானான்.

அபிமன்யூவின் நிலையும் பார்க்க பரிதாபமாக இருக்க மேனகா “வனிக்கு கா…” என்று ஆரம்பிக்கவும் வெளியே வந்த ஸ்ராவணி வேகமாக அவள் அருகில் சென்று அவளது கையை அழுத்த அவள் சொல்ல வந்ததைப் பாதியிலே நிறுத்திவிட்டு என்ன என்பதைப் போல் ஸ்ராவணியைப் பார்க்க அவள் தானே சொல்லுவதாக கண்ணால் கூறினாள்.

அவளைக் கண்டதும் அபிமன்யூ “ஆர் யூ ஓகே? உனக்கு என்னாச்சு வனி?” என்று பதைபதைத்த குரலில் கேட்க அவள் பதில் கூறாமல் கையைக் கட்டிக்கொண்டு அவனது பதற்றத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவளது இந்தச் செய்கை அவனுக்கு எரிச்சலூட்ட “கம் ஆன் இடியட். ஐயாம் ஆஸ்கிங் யூ. என்னாச்சு உனக்கு?” என்று சொல்ல அதற்கு அவள் கூறிய பதிலில் அபிமன்யூ மட்டுமல்ல அஸ்வினும், மேனகாவும் கூட அதிர்ந்தனர்.

ஸ்ராவணி பொறுமையாக அபிமன்யூவைப் பார்த்தபடி “ஐயாம் பிரெக்னெண்ட்” என்க அஸ்வின் கடுங்கோபத்துடன் அபிமன்யூவை முறைக்க ஆரம்பித்தான். மேனகா குழப்பத்துடன் “வனி என்னடி சொல்லுற?” என்றபடி தலையில் கைவைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.

அபிமன்யூவோ நண்பனின் தீப்பார்வையைக் கண்டதும் “டேய் அச்சு! என்னடா இப்பிடி பாக்குற? நான் ஒன்னுமே பண்ணலைடா! வனி இங்க பாரு. விளையாடாம உண்மையைச் சொல்லு” என்று கடகடவென்று கேட்க

ஸ்ராவணி அமர்த்தலாக “நான் உண்மையை தானே சொல்லுறேன் அபி. ஐயாம் பிரெக்னெண்ட்” என்று அழுத்தமாகக் கூற அஸ்வின் விட்டால் அபிமன்யூவைப் பார்வையாலே எரித்துவிடுவான் போல முறைக்க அபிமன்யூ தலையில் கைவைத்தபடி “ஹே பகவான்! அது எப்பிடி பாஸிபிள்?” என்று குழம்பியவன் தவறியும் அஸ்வினின் புறம் திரும்பாமல் ஸ்ராவணியிடம் பேச ஆரம்பித்தான்.

“இங்கே பாரு வனி! சீரியஸா பேசு. முதல்ல இவங்க கிட்ட சொல்லுடி நீ சொன்னது உண்மையில்லனு. ஏதோ வில்லனைப் பார்க்குற மாதிரி பார்க்குதுங்க ரெண்டும்”

ஸ்ராவணி பொறுமையாக “உன் நெஞ்சுல கையை வச்சு பாரு. எவ்ளோ வேகமா துடிக்குதுனு. ம்ம்ம்..பாருடா” என்க அபிமன்யூ அவனது மார்பில கைவைத்துப் பார்க்க அவனது இதயம் பதற்றத்தில் பந்தயக்குதிரை ஓடுவது போலத் துடிப்பதை உணர்ந்தான்.

ஸ்ராவணி அவனைப் பார்த்தபடியே “ஒருத்தவங்க எதிர்பார்க்காம எதையாச்சும் சொன்னாலோ செஞ்சாலோ ஹார்ட் இப்பிடி தான் ஸ்பீடா துடிக்கும். அப்போ பிரைன் ஸ்தம்பிச்சுப் போயிடும். அந்த டைம்ல எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் என்ன செய்யனு புரியாம குழம்பிப் போய் நிப்பான். அந்த மாதிரி நேரத்துல ஒருத்தன் அட்வாண்டேஜ் எடுத்துக்கிறான்னா அவன் எவ்ளோ பெரிய கேடியா இருப்பான்?” என்று நிதானமான குரலில் சொல்ல அபிமன்யூவுக்கு எதுவோ புரிந்தது போல இருக்க நெற்றியை விரலால் தேய்த்துவிட்டான்.

ஸ்ராவணி அஸ்வினையும் மேனகாவையும் பார்த்து “நான் பிரெக்னெண்ட்லாம் இல்ல, சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க” என்க அவள் சொன்னபடி இருவருக்கும் அப்போது தான் மூச்சே வந்தது. அஸ்வின் ஒரு மன்னிப்பு வேண்டும் பார்வையுடன் அபிமன்யூவைப் பார்க்க அவனோ குறும்புப் புன்னகையை அவனை நோக்கி வீசினான்.

அவன் மெதுவாக ஸ்ராவணியின் அருகில் வந்தவன் “அப்போ உனக்கு உடம்புக்கு என்னாச்சு?” என்க அவள் ” ஃபீவர்” என்று ஒற்றைவார்த்தையில் பதிலளித்தாள்.

அவன் “ஃபீவரா?” என்றபடி அவள் நெற்றியில் கைவைக்க வர சட்டென்று விலகிய ஸ்ராவணி முறைத்தபடி விரலை நீட்டி மிரட்ட அவன் கையைச் வேகமாக விலக்கியபடி “ஓகே ஓகே! நோ மோர் டச்சிங். ஒன்லி ஸ்பீக்கிங்” என்று சமாதானக்கொடியைப் பறக்கவிட்டான்.

சில அடிகள் தள்ளி நின்றபடி “ஆமா திடீர்னு என்ன ஃபீவர்?” என்று யோசனையுடன் கேட்க ஸ்ராவணி தன்னைக் குளிரில் வெளியே அழைத்துச் சென்று காய்ச்சல் வரக் காரணமாக இருந்துவிட்டு இப்போது இந்த பேச்சு பேசுகிறான் என்ற எரிச்சலில் “எல்லாம் உன்னால தான்டா” என்றாள் கடுகடுவென்று.

அதைக் கேட்டவன் குறும்பாக “அதை இப்பிடியா பப்ளிக்ல சொல்லுவ வனி? இருந்தாலும் ஒரு கிஸ் பண்ணுனதுக்குலாம் ஃபீவர் வர்றதை நான் இப்போ தான் கேள்விப்படுறேன்” என்று சொல்ல அதைக் கேட்ட ஸ்ராவணி மேனகாவின் கையிலிருந்தை பேக்கை வாங்கியவள் “அட வீணா போனவனே! உன் புத்தி ஏன் இப்பிடி போகுது?” என்று திட்டியபடி அவனை அந்த பேக்காலேயே சாத்த தொடங்க அபிமன்யூவுக்கு அவை எதுவுமே வலிக்கவில்லை.

அவள் கை ஓய்ந்துப் போய் நிற்க அபிமன்யூ தீவிரமான குரலில் “ஐயாம் ரியலி சாரி வனி. உனக்கு ஃபீவர் வரும்னு எனக்கு தெரியாது. நான் பண்ணுனது தப்பு தான். வேணும்னா நீ ஒன்னு பண்ணு” என்றவனைப் பார்த்து என்ன  என்று கேட்டாள் ஸ்ராவணி.

அபிமன்யூ “இப்போ நான் உன்னைத் திட்டுனா பதிலுக்கு நீ என்னைத் திட்டிருப்ப. அடிச்சிருந்தா பதிலுக்கு கன்னத்துல பளார்னு நீயும் அடிச்சிருப்ப. அதே மாதிரி நான் கிஸ் பண்ணுனேன்ல, சோ நீயும் பதிலுக்கு கிஸ் பண்ணிட்டுப் போயிடு. பிராப்ளம் சால்வ்ட்” என்று கண்ணில் குறும்பு மின்னக் கூற ஸ்ராவணி பொறுமை இழந்தவளாய் “மேகி இதுக்கு மேல இவன் கூடபேசுனா என் மைண்ட் கரப்ட் ஆயிடும். வா போலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு கிளம்ப அதற்குள் வழியை மறித்தான் அவன்.

“எனக்கு உன் கிட்ட பேசணும் வனி” என்று கேட்க ஸ்ராவணி கடுப்புடன் “நேத்து மாதிரியா சார்?” என்க அபிமன்யூ கன்னத்தில் போட்டுக்கொண்டபடி “ஐயையோ! இல்லம்மா! நான் நெஜமாவே உன் கிட்ட பேசணும்” என்று சொல்லிவிட்டு அவளை கெஞ்சுதலாகப் பார்க்க அவள் பேசுவதற்கு சம்மதித்தாள்.

அபிமன்யூ ஸ்ராவணியை அழைத்துக் கொண்டு தனியே பேசக் கிளம்ப மேனகா அங்கே போட்டிருந்த நாற்காலியில் பேக்கை வைத்துவிட்டு அவளும் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். அவளுக்கு அடுத்து அஸ்வினும் அமர மேனகாவுக்குத் தும்மல் வர “அச்சு அம்மா” என்று அவள் சொன்னதும் திரும்பி பார்த்தான் அவன்.

“ஹலோ என்னை எதுக்கு இப்போ கூப்பிட்டம்மா?”

“நான் எங்கயா உன்னைக் கூப்பிட்டேன்?”

அவள் குழப்பத்துடன் பார்க்க அவனோ கடுப்புடன் திரும்பிக் கொண்டான். அவள் மீண்டும் தும்ம அவனுக்கு அப்போது தான் புரிந்தது. உடனே கர்சீப்பை நீட்ட அவள் சிரிப்பை அடக்கியபடியே வாங்கிக் கொண்டாள்.

அவன் “ஹலோ பாவப்பட்டு உனக்கு ஹேண்கி குடுத்தா நக்கலு? குடு அதை” என்று வாங்க முயல மேனகா “ஐயோ வச்சுக்கோப்பா உன் ஹேண்கியை” என்று அவன் புறம் தூக்கிவீச அது கீழே போய் விழுந்தது. அவன் அதை எடுக்காமல் கையைக் கட்டிக் கொண்டான்.

அதே நேரம் ஸ்ராவணியின் எதிரில் நின்ற அபிமன்யூ “லிசன் வனி! நேத்தே நான் சொல்லிருக்கணும். மிஸ் ஆனதால இப்போ சொல்லுறேன். எனக்கு உன்னை ஃபர்ஸ்ட் பார்ட்டில பார்த்தப்போவே பிடிச்சுப் போச்சு வனி. காரணம் கேட்டா எனக்குச் சத்தியமா சொல்லத் தெரியாது. அதே மாதிரி ஒரு நாளும் நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுவேனு நான் நெனைச்சது கெடயாது.

இன்னொரு விஷயமும் நான் சொல்லிக்கிறேன். என் லைஃப்ல வந்த ஃபர்ஸ்ட் கேர்ள் நீ தானு நான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். பட் நான் லவ் பண்ணுன முதல் கேர்ள் நீ தான், ஆப்வியஸ்லி கடைசியும் நீ தான். இதுக்கு அப்புறமும் நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுவேன்னா அது நமக்குப் பிறக்கப் போற பொண்ணா மட்டும் தான் இருக்க முடியும். உனக்கு எவ்ளோ நாள் யோசிக்கணும்னாலும் ஓகே. ஐ வில் பி வெயிட்டிங். பட் ஐ வாண்ட் பாஸிடிவ் ரிப்ளை” என்று முடிக்க ஸ்ராவணி அதை ஏதோ கதை கேட்பது போல கேட்டாலும் அவனது வார்த்தைகளில் பொய் எதுவும் இல்லை என்பது மட்டும் அவளுக்கு உறுதியாகப் புரிய அவன் பேசி முடிக்கவும் தலையாட்டினாள்.

இருந்தாலும் தன்னுடைய மனநிலையை அவனுக்குப் புரியவைக்க வேண்டிய கடமை அவளுக்கு இருக்கவே “எனக்கு லைஃப் பார்ட்னர் இப்பிடி இருக்கணும்,அப்பிடி இருக்கணும்னு எந்த எதிர்ப்பார்ப்பும் கெடயாது. இன் ஃபேக்ட் என்னோட புரஃபசனை தவிர வேற எதையும் நான் லவ் பண்ணுனது இல்ல. எனக்கு அதுக்கு டைமும் இல்ல, அது தான் உண்மை. இதுக்கும் மேலயும் எனக்கு லவ் வரும்னு என்னால கேரண்டி எதுவும் குடுக்க முடியாது.

ஆனா நீ கொஞ்சம் யோசிக்கிறது நல்லது. விக்ரம் என்னோட ஃப்ரெண்ட்.  என் கெரியரை நான் எவ்ளோ லவ் பண்ணுறேனு அவனுக்கு நல்லாவே தெரியும். கல்யாணத்துக்காக நீ உன்னோட புரஃபசனை விட வேண்டாம்னு அவன் சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நான் அவனை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்சேன். அப்பிடிப்பட்டவனே ஒரு கட்டத்துல என்னை ஜாபை ரிசைன் பண்ண சொன்னான். உனக்கே தெரியும் நீயும் நானும் இருக்கிறது வேற வேற  அதே சமயம் எதிரும் புதிருமான இடங்கள்ல. அந்த விஷயம் என்னைக்கும் நம்ம பெர்சனல் லைஃபை பாதிச்சா நீ என்ன பண்ணுவ?” என்று கேட்டு விட்டு அவனைப் பார்க்க அவனும் யோசனையுடன் நெற்றியைக் கீறிக் கொண்டான்.

அவனது முகத்தைப் பார்த்தவள் “நல்லா யோசி. நாங்க இன்னைக்கு ஈவினிங் சென்னை கெளம்புறோம். நீ யோசிச்சு முடிவு பண்ணிட்டு எனக்குச் சொல்லு. ஆனா ஒரு விஷயம் நியாபகம் வச்சுக்கோ! சப்போஸ் வருங்காலத்துல நான் உன்னை காதலிச்சா கூட உனக்காக என்னோட புரஃபசனை விட்டுக்குடுக்க மாட்டேன். அதே மாதிரி உன்னோட பொலிட்டிக்கல் லைன்ல நான் தலையிட மாட்டேன். ஆனா ஒரு ரிப்போர்ட்டரா என்னைக்குமே அரசியல்வாதியான உன்னை நான் கேள்வி கேப்பேன்” என்று தீர்மானமாக உரைக்க அபிமன்யூ யோசனையுடனே தலையாட்டினான்.

ஸ்ராவணி அவனிடம் “போலாமா?” என்று கேட்க அவன் சரியென்று அவளுடன் நடக்கத் தொடங்கினான்.

வராண்டா நாற்காலியில் அமர்ந்திருந்த அஸ்வினும் மேனகாவும் அவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்துவிட்டு அதில் தெரிந்த உணர்வுகளை அறிந்து கொண்டனர். இனி அவர்கள் வாழ்வில் குழப்பம் எதுவும் வராது என்ற நம்பிக்கையில் எழுந்தவர்கள் அவர்கள் இருவருடனும் இணைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

வாசலில் மேனகா அவர்கள் வந்த காரின் டிரைவரை கை ஆட்டி அழைக்கவும் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது. மேனகா உள்ளே சென்று அமர ஸ்ராவணி அமருவதற்கு முன் அபிமன்யூவை நோக்கி “ஹலோ” என்க அவன் காரின் அருகில் வந்தான்.

அவளை என்ன என்பதைப் போல பார்க்க ஸ்ராவணி அவளது கையை கை குலுக்குவதற்காக  நீட்ட அபிமன்யூ யோசனையுடன் அவளது கையையே பார்த்தான். ஸ்ராவணி சிரிப்புடன் “ஹேண்ட் ஷேக் பண்ணுறதுக்குலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்க அவனும் ஒரு புன்னகயுடனே அவளது கையைப் பற்றினான் இனி இந்த கையை என்றும் விடமாட்டேன் என்ற உறுதியோடு.