🖊️துளி 35👑

ஸ்ராவணி மேனகாவுடன் வீட்டுக்கு வந்தவள் “வனி ஏன் சைலண்டா இருக்க?” என்றபடி அவளுடன் பேசிக் கொண்டே வந்த மேனகாவைக் கவனிக்காமல் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கிச் சென்றாள். மேனகா அவளை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுப் பின்தொடர்ந்து சென்று அங்கே அறையில் அமர்ந்திருந்தவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க உடல் நலத்தில் ஒரு குறைபாடும் இல்லை என்பதை அறிந்து கொண்டாள்.

“வனி என்ன தான் ஆச்சுடி?” என்று அவளை உலுக்கிச் சுயநினைவுக்குக் கொண்டு வர ஸ்ராவணி “ஒன்னும் இல்ல மேகி. எனக்கு தூக்கம் வருது” என்று தூங்கச் செல்ல அவளைத் தடுத்தவள் அவள் நின்ற கோலத்தைக் காட்டி “இப்பிடியேவா தூங்கப் போற?” என்க ஸ்ராவணி ஆமென்று தலையாட்டினாள்.

மேனகா அவளை முறைத்தபடி “முதல்ல அந்த கோட்டைக் கழட்டுடி. அதோட தூங்கப் போறியா?” என்று சொல்ல அவள் அவசரமாக அதைக் கழற்றியபடியே “மறந்துட்டேன் மேகி” என்றவள் அந்தக் கோட்டைத் தூக்கி பக்கத்தில் இருந்த மேஜையில் வீசினாள்.

“மேகி எனக்கு மைண்ட் டிஸ்டர்ப்பா இருக்கு. நான் தூங்கப் போறேன். குட் நைட்” என்று சொன்னபடி படுக்கையில் விழுந்தவள் அடுத்த பத்து நிமிடத்தில் தூங்கவும் ஆரம்பிக்க மேனகா அவளது அறையின் விளக்கை அணைத்துவிட்டு கதவை தாழிட்டுச் சென்றாள்.

சோஃபாவில் உட்கார்ந்தபடி உறங்கிப் போனவள் வீட்டினர் வரும் அரவம் கேட்டதும் விழித்துவிட்டாள். பூர்வி கணவன் குழந்தையுடன் உள்ளே வரும் போதே “வனி  எங்கே? அவளுக்கு என்னாச்சு?” என்றபடி வர மேனகா “அவ தூங்கிட்டா மேம்”  என்று பதிலளித்தாள்.

அவள் சாப்பிடாமல் தூங்கிவிட்டாளா என்று கேட்ட விஷ்ணுவின் சித்தி எழுப்பிச் சாப்பிடச் சொல்லுமாறு கூற மேனகா “இல்ல ஆன்ட்டி. வனி தூங்குனா காலையில தான் முழிப்பா. அவளை எழுப்புறது ரொம்ப கஷ்டம்” என்று சொல்லிவிட்டு அவர்களுடன் சேர்ந்து இரவுணவுக்கு உதவியாக இருக்க கிச்சனுக்குள் நுழைந்தாள்.

மானஸ்வி இதைச் சந்தேகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள் “கேக் கட் பண்ணுற வரைக்கும் நல்லா இருந்த பொண்ணுக்கு திடீர்னு என்னாச்சு? ஒரு வேளை நான் பார்த்த அந்த இன்சிடெண்ட் தான் இதுக்குக் காரணமா இருக்குமோ?” என்று தனக்குள்ளேயே எண்ணியவள் சிபுவின் “மனு” என்ற அழைப்பில் அப்போதைக்கு அந்த சிந்தனையிலிருந்து விலகி காலையில் அவளிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணிவிட்டு அவர்களின் அறையை நோக்கிச் சென்றாள்.

பூர்வி விஷ்ணுவிடம் “விச்சு! நீங்க வனி கிட்ட அந்த மேரேஜ் பத்தி பேசுனிங்களா?” என்று கேட்க விஷ்ணு “இதுல முடிவு எடுக்க வேண்டியவங்க அவங்க ரெண்டு பேரும் தான். அதுக்காக நாம அப்பிடியே ஒதுங்கிடணும்னு சொல்ல வரலை. நீ வனி விஷயத்தைப் பத்தி சொன்னதுமே நான் அபிமன்யூவைப் பத்தி விசாரிச்சேன். அவனோட பிஹேவியர்ல நிறைய பாஸிட்டிவான மாற்றம் இருக்குனு எனக்கு தெரிய வந்துச்சு. அதனால தான் நான் இதுல சைலண்டா இருக்கேன். வனி ரொம்ப தெளிவான பொண்ணு. அவளால இதைப் பார்த்துக்க முடியும்” என்றான் நம்பிக்கையுடன்.

அதற்குள் இரவுணவு தயாராகிவிட மேனகாவும் சுலைகாவும் விஷ்ணுவின் அன்னை மற்றும் சித்திகளை அமரச் சொல்லிவிட்டு அவர்களே பரிமாறினர். கலகலப்பான இரவுணவுக்குப் பிறகு கொஞ்சம் பழைய கதைகளைச் சிபு எடுத்துவிட மேனகா அவளின் நண்பர்களுடன் சேர்ந்து அதை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நேரம் நள்ளிரவைத் தாண்ட குழந்தைகளை அழைக்க வந்த மானஸ்வி சிபுவின் தலையில் தட்டிவிட்டு “டைம் என்ன ஆகுதுனு பாருடா ஏலியன். அவங்க ஒன்னும் ஓடிப் போயிட மாட்டாங்க. நாளைக்கு மிச்ச மீதியைச் சொல்லி மொக்கையைப் போடு. நீங்கள்லாம் ஆல்ரெடி டயர்டா இருப்பிங்க. இவன் இப்பிடி தான் பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டான். நீங்க தூங்கப் போங்க. டைம் ஆச்சு” என்று அனைவரையும் உறங்கச் சொல்லி அனுப்பிவிட்டு சிபுவையும் கையோடு அழைத்துச் சென்றாள்.

இவ்வாறு இருக்க ரிசார்ட்டில் சாப்பாட்டுத் தட்டில் கோலம் போட்டபடி சிரித்தமுகமாக இருந்த அபிமன்யூவை கன்னத்தில் கைவைத்தபடி வேடிக்கை பார்த்தான் அஸ்வின். அவனுடன் சாப்பிட ஆரம்பித்தவன் சாப்பிட்டு தட்டையும் கழுவி வைத்துவிட அபிமன்யூ மட்டும் இன்னும் அதே நிலையில் இருக்க அவனது தோளை உலுக்கியவன் “போதும்டா எப்பா! டிரீம்ல இருந்து வெளியே வாடா! உன்னோட ரியாக்சன் எதுவுமே சரியில்லடா. நாளைக்கு ஏதோ பெரிய சம்பவம் நடக்கப் போகுதுனு நினைக்கிறேன்” என்று அவனை எச்சரித்தான்.

அபிமன்யூ அதே சிரிப்புடன் அவனைப் பார்த்தவன் “என்ன நடந்தாலும் அதை ஃபேஸ் பண்ண நான் ரெடி தான்டா. மனசுல இருக்கிற விஷயத்தை அவ கிட்டச் சொன்னதும் மனசு அப்பிடியே லேசான மாதிரி ஒரு ஃபீலிங்” என்று ரசனை நிரம்பிய குரலில் சொல்ல

அஸ்வின் அவனை முறைத்தபடி “டேய் நீ சொல்லுற மாடுலேசனே சரியில்ல. உண்மையைச் சொல்லு, நீ அந்த பொண்ணு கிட்ட பிரபோஸ் மட்டும் தான் பண்ணுனியா? இல்ல மேகி கிட்ட சொன்ன மாதிரி…” என்று வார்த்தையை முடிக்காமல் இழுக்க

அபிமன்யூ தட்டுடன் எழுந்தவன் அதை சிங்கில்  அலம்பி வைத்துவிட்டு  வந்தவன் அஸ்வினிடம்  “அச்சு தெரிஞ்சுகிட்டே கேட்டா என்னடா அர்த்தம்? ” என்று சொல்லிவிட்டு நகம் கடிக்க அஸ்வினுக்கு அதிர்ச்சி.

“அப்போ மேகியை கலாய்க்க நீ சொல்லலையா? நீ சொன்னது எல்லாமே நிஜமாடா?”

“இதுல போய் யாராச்சும் விளையாடுவாங்களா? உன் மேல சத்தியமா நான்….” என்று அவன் சொல்ல வர அஸ்வின் அவன் வாயைப் பொத்தியவன் “சரி சரி! மறுபடி மறுபடி ஏதோ ஒலிம்பிக்ல மெடல் வாங்குன மாதிரி சொல்லிக் காட்டாதடா” என்றான் கிண்டலாக.

பின்னர் “டேய் நெக்ஸ்ட் டைம் ரிப்போர்ட்டரை மீட் பண்ணப் போகுறப்போ கொஞ்சம் கவனமா போடா. நீ செஞ்சு வச்ச காரியத்துக்கு அந்தப் பொண்ணு சைலண்டா போற ஆளே இல்ல” என்று ஒரு நல்ல நண்பனாக எச்சரிக்கவும் தவறவில்லை அபிமன்யூவை.

அபிமன்யூ அலட்சியமாக “அவ என்ன பண்ணுவா? ரெண்டு நிமிசம் மூச்சுப் பிடிக்க கத்துவாளா? என் காது அவ கத்துறதை கேக்க ரெடியா இருக்கு. இல்ல பளார்னு அறைவாளா? ஐயாம் ரெடி மேன். இது எதையும் தாங்கும் இதயம் அச்சு” என்று சொன்னபடி தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டிலை ஃபிரிட்ஜுக்குள் வைத்தான்.

அஸ்வின் தயக்கத்துடன் “டேய் என்ன தான் இருந்தாலும் பிரபோஸ் பண்ணுறப்போவே கிஸ்லாம் ரொம்ப ஓவர்டா. அவங்க இதை எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டாங்க” என்க

அபிமன்யூ கேலியாக “பிரபோஸ் பண்ணுறப்போ கிஸ் பண்ணாம உங்களை மாதிரி கவுந்து படுத்துத் தூங்கணுமா சார்? பேசுறான் பாரு பேச்சு” என்று அவனைப் பதிலுக்குக் கலாய்த்தான்.

அதைக் கேட்டுத் திடுக்கிட்ட அஸ்வின் “டேய் நீயா எதுவும் இமேஜின் பண்ணாதடா. அப்பிடி எதுவும் இல்ல. நீயும் ரிப்போர்ட்டரும் டிஸ்டர்ப் இல்லாம பேசிக்கணும்னு தான்……..” என்று விளக்க முயல அவனை நிறுத்துமாறு கையமர்த்தினான் அபிமன்யூ.

“உன் கண்ணு ஒரு இடத்துல நிக்காம டான்ஸ் ஆடுறதுல இருந்தே தெரியுது, நீ யாரு என்னனு. கம் ஆன் அச்சு! நமக்குலாம் லவ் வரும்னு நம்ம கனவுலயாச்சும் நெனைச்சிருப்போமா? ஆனா பாரு வந்துடுச்சு. சோ இதுக்கு மேல லேட் பண்ணாம அந்த பொண்ணு கிட்ட விஷயத்தைச் சொல்லுடா”

“அபி அவ பாக்க அப்பாவியா இருக்கானு நினைச்சிட்டு அவளை அண்டர் எஸ்டிமேட் பண்ணாதடா. பக்கா கேடி அவ. ரிப்போர்ட்டர் மேடம் எதையும் முகத்துக்கு நேரா பண்ணுவாங்கன்னா இவ கமுக்கமா செஞ்சு முடிச்சுட்டு இந்த பூனையும் பால் குடிக்குமானு ஒரு அப்பாவி முகத்தோட நின்னுக்குவா. அந்த கண்ணாடியை வச்சு அவளை எடை போடாதடா. அதுவும்  இல்லாம அவளுக்கு கல்யாணம்னாலே வேப்பங்காயா இருக்கு. இதுல என்னத்த நான் பிரபோஸ் பண்ண?”

அவன் இவ்வாறு சொல்லவும் அவன்  கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்ட அபிமன்யூ “டேய் திருடா! அப்போ அந்த பொண்ணுக்கு ஓகேனா உனக்கும் ஓகேவா?” என்று கேலி செய்ய அவனிடமிருந்து விடுபட்டு அஸ்வின் நகர முயல இவ்வாறு கேலியும் கிண்டலுமாக அந்த இரவு ஓடிவிட்டது.

***********

விஷ்ணுபிரகாஷின் இல்லம்….

காலையில் வழக்கம் போல கண் விழித்த மானஸ்வி சிபு ஜாக்கிங் சென்று விட்டதை அறிந்து குளித்துவிட்டு எப்போதும் போல கீழே வர வீட்டில் யாரும் இன்னும் விழிக்கவில்லை. அவளுக்கு நேற்று இரவு அவள் கண்ட காட்சி நினைவில் வர ஸ்ராவணியின் அறையை நோக்கி சென்றாள்.

கதவைத் தட்டிப் பார்த்தவள் சத்தம் எதும் இல்லாததால் அவள் விழிக்கவில்லை போல என்று எண்ணியபடி உள்ளே செல்ல ஸ்ராவணி இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

விலகியிருந்த அவளது போர்வையை மானஸ்வி சரி போது விழித்தவள் மானஸ்விக்கு ஒரு புன்சிரிப்பை பரிசாக அளித்தபடி எழுந்தாள்.

“குட் மார்னிங் அக்கா” என்றவளுக்கு மானஸ்வி  ஒரு சிரிப்பை பதிலாக அளித்துவிட்டு “உடம்பு ஏன் கொதிக்குது வனி? உனக்கு குளிர்ல நின்னது ஒத்துக்கலையா?” என்று பதற்றமாக கேட்க ஸ்ராவணி அதிர்ந்தாள்.

“அக்கா நான் குளிர்ல நின்னது உங்களுக்கு எப்பிடி?….” என்று வார்த்தைகளை விழுங்க மானஸ்வி சங்கடத்துடன் “நான் பார்த்தேன் வனி. நீயும், அந்தப் பையனும் பேசிட்டு….பேசிட்டு இருந்ததை” என்று தயங்கி தயங்கிக் கூறிவிட்டு ஸ்ராவணியின் முகத்தைப் பார்க்க அவளது முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல இருந்தது.

மானஸ்வியின் கையைப் பிடித்துக் கொண்டவள் “அக்கா எனக்கு என்ன பண்ணனு புரியலக்கா. நான் அவன் இப்பிடி பண்ணுவானு எதிர்ப்பார்க்கவே இல்ல. சரியான இடியட்” என்று அவனைத் திட்டித் தீர்க்க

அவளை வாஞ்சையுடன் பார்த்த மானஸ்வி “வனி! லவ் வந்தா எப்பிடிப் பட்ட அறிவாளியும் இடியட் மாதிரி தான் நடந்துப்பாங்க” என்றாள் அமைதியான குரலில்.

ஸ்ராவணி அதை ஏற்க மறுத்தவளாய் “இல்லக்கா! உங்களுக்கு அவனைப் பத்தி தெரியல. சீஃப் அவனைப் பத்தி டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணச் சொன்னப்போ அவனைப் பத்தி ஒரு விவரம் விடாம கலெக்ட் பண்ணுனது நான் தான். அவனோட லைஃப் ஸ்டைல், பழக்க வழக்கம் எல்லாமே எனக்கு ஓரளவுக்குத் தெரியும்கா! அவனோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் எவ்ளோ பெருசு தெரியுமா? அதை விடுங்க, நான் அவனை ஃபர்ஸ்ட் டைம் நேர்ல பாத்தப்போ அவனைச் சுத்தி கொறஞ்சது ஒரு ஆறு ஏழு பொண்ணுங்களாச்சும் இருந்திருப்பாங்க. அது எப்பிடி அவங்க யாரு மேலயும் வராத லவ் என் மேல அவனுக்கு வந்துச்சு? என்னால இதை நம்ப முடியலக்கா” என்றாள் முகத்தைச் சுருக்கியபடி.

அவள் சொன்ன காரணங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளாகவே இருக்க மானஸ்வி “எல்லாம் கரெக்ட் தான். பட் லவ் வர்றதுக்குப் பெருசா காரணம் தேவையில்ல வனி. நீ சொன்னபடி அந்தப் பையனுக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்துருக்கலாம். பட் அவங்களை விட ஏனோ அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்குனா அதுல காரணம் இல்லாமலா இருக்கும்?

நம்ம அம்மா, அப்பா கூடப்பிறந்தவங்க இவங்க நம்ம மேல வச்ச அன்புக்கு ஒரு காரணம் இருக்கு வனி. நம்ம அவங்களோட இரத்தச்சொந்தம். ஆனா எந்தச் சம்பந்தமும் இல்லாம எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பு நமக்கு கிடைக்கிறது ரெண்டே ரெண்டு வழி மூலமா தான். ஒன்னு ஃப்ரெண்ட்ஷிப் இன்னொன்னு லவ். இந்த ரெண்டுலயுமே நமக்கு சம்பந்தமில்லாத மூனாவது மனுஷங்க தான் நம்ம மேல அன்பும், அக்கறையும் கொண்டவங்களா இருப்பாங்க. சம்பந்தமில்லங்கிறதுக்காக நட்பை எப்பிடி சந்தேகப்பட முடியாதோ அதே மாதிரி தான் காதலும்” என்று முத்தாய்ப்பாய் முடிக்க ஸ்ராவணி அவள் கூறிய கோணத்திலும் யோசிக்க ஆரம்பித்தாள்.

அவளது யோசனையுடன் கூடிய முகத்தைப் பார்த்துவிட்டு எழுந்த மானஸ்வி “நீ பிரஷ் பண்ணு. நான் உனக்கு காபி கொண்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்புகையில் அந்த அறையினுள் நுழைந்தாள் மேனகா.

மானஸ்வியைப்  பார்த்து புன்னகைத்தவள் ஸ்ராவணியை பிரஷ் செய்யச் சொல்லிவிட்டு  அவளுடன் கிச்சனுக்கு சென்றாள் காபி போட. இருவரும் காபி கப்புகளுடன் வருகையில் ஸ்ராவணியும் முகம் கழுவி விட்டு வர மூவரும் தோட்டத்தில் அமர்ந்து காபியை அருந்த ஆரம்பித்தனர்.

மானஸ்வி, சிபுவின் காதல்கதையை ஏற்கெனவே பூர்வி வாயிலாக அறிந்திருந்த இருவரும் அதை வைத்து அவளைக் கேலி செய்ய மானஸ்வி “நீங்க ரெண்டு பேரும் அந்த ஏலியனுக்கு மேல இருக்கிங்க” என்ற சிணுங்கலுடன் உள்ளே சென்றாள். அவள் சென்று சில நிமிடங்களில் பூர்வியும் விஷ்ணுவும் வர அடுத்த ரவுண்ட் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

ஆனால் நேரம் செல்ல செல்ல ஸ்ராவணிக்கு உடம்பு கொதிக்க ஆரம்பிக்க மேனகா அவளை மருத்துவரிடம் செல்லலாம் என்று அழைத்தாள். மானஸ்வி அவர்களின் குடும்ப மருத்துவரிடம் செல்லுமாறு இருவரையும் கூறியவள் டிரைவரை அழைத்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தாள்.

ஸ்ராவணியின் போன் மேனகாவின் கையில் இருக்க அவள் காரில் அமர்ந்ததும் மேனகாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். மேனகா “உனக்கு ஒத்துக்காதுனு தெரிஞ்சும் ஏன் வனி குளிர்ல நின்ன? இப்போ பாரு அனல் அடிக்குது” என்று சோகமாக சொன்னபடி அவளது தலையை தடவி கொடுத்தாள்.

அந்நேரம் பார்த்து ஸ்ராவணியின் போன் அடிக்க “அதை அட்டெண்ட் பண்ணு மேகி” என்றாள் ஸ்ராவணி கண் மூடியவளாய். மேனகா திரையில் அபிமன்யூவின் எண்ணைக் கண்டதும் “வனி அபிமன்யூ தான்டி” என்றபடி அழைப்பை ஏற்று காதில்  வைத்து “ஹலோ” என்று பேச ஆரம்பிக்க மறுமுனையில் அபிமன்யூ ஸ்ராவணியின் குரல் அல்ல என்பதை கண்டு கொண்டான்.

“வனி கிட்ட போனை குடும்மா”

“சாரி சார்! அவளுக்கு உடம்பு முடியல. நாங்க ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டிருக்கோம். இப்போ அவளால பேச முடியாது”

அவளுக்கு உடல்நலம் இல்லை என்றதும் பதறிய அபிமன்யூ “என்னாச்சு? எந்த ஹாஸ்பிட்டல்?” என்று படபடக்க மேனகா ஸ்ராவணியிடம் “வனி எந்த  ஹாஸ்பிட்டல்னு கேக்குறான்டி” என்று சொல்லிவிட்டு என்ன செய்ய என்று கேட்டாள்.

ஸ்ராவணி கண்ணை மூடிக்கொண்டவளாய் “ஹாஸ்பிட்டல் எதுனு சொல்லிடு மேகி. இல்லனா அவன் அகெய்ன் கால் பண்ணி இரிட்டேட் பண்ணுவான். எனக்கும் அவன் கிட்ட பேச வேண்டியிருக்கு” என்றாள் இறுக்கமான குரலில்.

அவள் சொன்னபடி மருத்துவமனையை அவனிடம் தெரிவித்துவிட்டுப் போனை வைத்தாள் மேனகா. மனதிற்குள் “வனி அவன் கிட்ட என்ன பேசப் போறா? ஒரு வேளை நேத்து நடந்துகிட்ட விதத்துக்கு அவன் கூட சண்டை போடுவாளோ?” என்று சிந்தனைவயப்பட்டவளாய் தன் தோளில் விழிமூடிச் சாய்ந்திருக்கும் தோழியை ஒரு பெருமூச்சுடன் பார்த்தாள் மேனகா.