🖊️துளி 33👑

ஸ்ராவணி காரிலிருந்துப் போனை எடுத்துவிட்டு வந்தவள் மீண்டும் பார்ட்டி ஹாலுக்குள் நுழையும் போது அவளின் பார்வையில் பட்ட அபிமன்யூவையும் அஸ்வினையும் கண்ட போது தான் அவர்கள் எப்படி இந்த பார்ட்டிக்கு வர முடியும் என்ற கேள்வியே அவள் மூளையில் உதித்தது. அவர்களை நோக்கிச் சென்றவள் “இந்த பார்ட்டிக்கு நீங்க எப்பிடி வந்திங்க? இன்விடேசன் இருக்கா?” என்று கையைக் கட்டிக்கொண்டு கேட்க

அபிமன்யூ சாதாரணமாக “நாங்க மிஸ்டர் சிவபிரகாஷ் இன்வைட் பண்ணுனதால வந்தோம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல ரிப்போர்ட்டர் மேடம்” என்க

அவள் “யாரு கிட்ட உங்க டகால்டி வேலையைக் காட்டுறிங்க? மரியாதையா வெளியே போகலனு வைங்க, நானே வெளியே நிக்கிற செக்யூரிட்டியைக் கூப்பிட்டு உங்களை அனுப்பி வைக்க வேண்டியிருக்கும். ஏன் சார் இதல்லாம் உங்க ஃப்ரெண்டுக்குச் சொல்ல மாட்டிங்களா?” என்றபடி அஸ்வினை முறைத்தாள்.

அவன் மலங்க மலங்க விழித்து “நான் சொன்னேன். இவன் தான் கேக்கல மேடம்” என்று அவளை கேலி செய்ய இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.

அபிமன்யூ அஸ்வினின் தோளில் கைப்போட்டபடி “டேய் அச்சு! பார்ட்டிக்கு யாரும் இன்வைட் பண்ணாம வர்றது, ஆள்மாறாட்டம் பண்ணுறது இதெல்லாம் பண்ணுறதுக்கு நம்ம என்ன ஸ்ராவணி சுப்பிரமணியமா?” என்று சொல்ல அவன் “என்ன மச்சி அவங்களை இப்பிடி சாதாரணமா சொல்லிட்ட? அவங்க கோவத்துல உன்னை டிவோர்ஸ் பண்ணிடப் போறாங்கடா” பதிலுக்கு கிண்டல் செய்தான்.

ஸ்ராவணி முறைத்தபடி “ஏய் உங்க ரெண்டு பேருக்கும் இது தான் லாஸ்ட் வார்னிங். இப்போ வெளியே போகலனு வையேன்…” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “நீங்க சிபுவோட ஃப்ரெண்ட் தானே” என்றபடி வந்தாள் மானஸ்வி.

ஸ்ராவணி “ஐயோ அக்கா இவங்க…” என்று அவசரமாக மறுப்பதற்குள் இடைமறித்த அபிமன்யூ “ஆமா சிஸ்டர். நான் காலையில கூட ப்ரோ கிட்ட பேசிட்டு இருந்தேன். நீங்க கூட பார்த்திங்களே!” என்று நினைவூட்ட மானஸ்வி புன்னகையுடன் “நல்லாவே நியாபகம் இருக்கு ப்ரோ. பிளீஸ் உள்ளே வாங்க. நீயும் வா வனி” என்று கையோடு அவளை அழைத்துச் செல்ல ஸ்ராவணி அவளுடன் சென்றவள் திரும்பி இருவரையும் முறைக்க அபிமன்யூ கண் சிமிட்டவும் வாய்க்குள் திட்டியபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அங்கே ஹாலுக்குள் கேக் வெட்டுவதற்காக ஷிவானியை தாஜா செய்து சம்மதிக்க வைத்திருந்தான் சிபு. அவள் “இந்த சம்மருக்கு டாடி கூட என்னை அனுப்புனா மட்டும் தான் நான் கேக் வெட்டுவேன்” என்ற நிபந்தனையுடன் சம்மதித்தாள்.

அவள் கேக்கை வெட்டி வீட்டின் மூத்தவரான விஷ்ணுவின் பாட்டியான சுந்தரிக்கு ஊட்டிவிட்டாள். கொள்ளுப்பேத்திக்கு அதை ஊட்டிவிட்டு அவளை ஆசிர்வதிக்க அதன் பின் அவள் தாத்தா பாட்டிகளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

சிபு விஷ்ணுவிடம் கிண்டலாக “இந்த கேக் நம்ம குடும்பத்துக்கு மட்டும் தான் விச்சு பத்தும். இப்போ தானே சூரியபிரகாஷ் தம்பதியினருக்கு ஊட்டிவிட்டுருக்கா. இன்னும் ஜெயபிரகாஷ் அண்ட் ராம்பிரகாஷ் வெயிட் பண்ணுறாங்க. கடைசியில தான் உனக்கும் மொளகாப்பொடிக்கும் கேக் வரும். கேக் வருமோ இல்ல கொஞ்சமா கிரீம் மட்டும் தான் வருமோ தெரியல. பட் உன் பொண்டாட்டி வாயில இப்போவே வாட்டர் ஃபால்ஸ் வந்துடுச்சு” என்று பூர்வியைக் கலாய்க்க

அவள் கடுப்புடன் “அடேய்! இன்னைக்கு ஷிவானி பிறந்தநாளாச்சேனு பார்க்கிறேன். இல்லைனா..” என்று ஏதோ சொல்ல வர சிபு கேலியாக “இல்லனா மட்டும் என்ன செய்வ மொளகாப்பொடி? அப்பிடியே என்னைக் கலாய்ச்சு தள்ளிருவ பாரு? அதுக்குலாம் தனி டேலண்ட் வேணும் அண்ணியாரே” என்று சொல்ல

பூர்வி ஒரு முறைப்புடன் மானஸ்வியை முறைத்தவாறு “மனு உன் புருசனை கொஞ்சம் அமைதியா இருக்கச் சொல்லுடி. வீணா என் பி.பியை ஏத்துறான். வயசாச்சே தவிர கொஞ்சமாச்சும் மெச்சூர் ஆயிராக்கானானு பாரு, ஏலியன்” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.

மானஸ்வி சிபுவின் கையைக் கிள்ளிவிட்டு “ஏன்டா சும்மா சும்மா அவளையே கலாய்க்கிற?” என்று கேட்க அவன் வலித்த கையைத் தடவிக்கொடுத்தபடி “நீ தானே சோடாபுட்டி சொன்ன, பூர்வி வேலை வேலைனு அலைஞ்சு டென்சனா இருக்கா. நீ அவளை எதாச்சும் கலாய்ச்சன்னா உனக்கு ரிப்ளை பண்ணுற சாக்குல கொஞ்சம் அந்த டென்சன்ல இருந்து வெளியே வருவானு. இப்போ ஒன்னும் தெரியாதவ மாதிரி பேசுற” சொல்லிவிட்டு கண்ணைச் சிமிட்ட

மானஸ்வி “பொய்யா சொல்லுற? பொய் சொல்லி என்னை மாட்டி விடுற பழக்கத்தை என்னைக்கு ஒழிக்கிறியோ அன்னைக்கு தான்டா நீ உருப்படுவ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

விஷ்ணு இந்த கலவரத்தை வேடிக்கைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருக்க அவன் கண்ணில் விழுந்தனர் அபிமன்யூவும் அஸ்வினும். சிபு அவன் பார்வை போகும் திசையைக் கண்டுகொண்டவன் காலையில் நடந்த நிகழ்வுகளை அவனிடம் சொல்ல ஏற்கெனவே பூர்வி அபிமன்யூ மற்றும் ஸ்ராவணிக்கு நடந்த திருமணப்பதிவு விவகாரத்தை விஷ்ணுவிடம் கூறியிருந்ததால் அவனுக்குமே இருவரும் பேசினால் மட்டுமே இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என்று மனதில் தோன்றியது.

அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில் மேனகாவுடன் உரையாடிக் கொண்டிருந்த ஸ்ராவணியிடம் வந்த அபிமன்யூ அவளிடம் “வனி! நான் உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று சொல்ல மேனகா புரிந்து கொண்டவளாய் விலக முயன்றாள். அவளது கையைப் பிடித்து நிறுத்திய ஸ்ராவணி “அவ இங்கே தான் இருப்பா. நீ சும்மா சொல்லு. கேட்டு வைப்போம்” என்க அபிமன்யூ பொறுமை இழந்தவனாய் சிகையைக் கோதிக் கொண்டு அவளை முறைக்க அஸ்வின் இவர்கள் மூவரும் இருக்குமிடத்துக்கு வந்துச் சேர்ந்தான்.

அவன் மேனகாவைப் பார்த்து “மேகி நான் உன் கூட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல அது மூவருக்குமே அதிர்ச்சி. அபிமன்யூ வாயில் கைவைத்து அதிர்ச்சியை காண்பித்தவன் “டேய் அச்சு..” என்று ஏதோ சொல்ல வர அஸ்வின் அதற்குள் மேனகாவின் கையைப் பற்றி அந்த ஹாலை விட்டு வெளியேறிவிட்டான்.

அபிமன்யூ “இப்போ பேசலாமா மேடம்?” என்க ஸ்ராவணி புருவத்தைச் சுளித்து “இது எல்லாமே உன்னோட பிளானா?” என்று நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.

அபிமன்யூ “அவன் அந்தப் பொண்ணை கையைப் பிடிச்சு இழுத்துப் போனாலும் அதுக்கும் நீ என்னை தான் திட்டுவியா?” என்க ஸ்ராவணி நிறுத்து என்று சைகை காட்டியவள் “என்ன பேசணுமோ பேசிட்டுக் கிளம்பு. ஆல்ரெடி நேத்து நைட் எனக்கு தூக்கம் இல்ல. இன்னைக்குச் சீக்கிரமா போய் தூங்கணும்” என்று கண்ணைக் கசக்கியபடி கூறினாள்.

அபிமன்யூ சரியென்று தலையாட்டியவன் “கொஞ்சம் வெளியே போய் பேசலாமா? பிளீஸ். இங்க ஓவர் நாய்ஸா இருக்கு” என்று சொல்ல சரியென்று தலையசைத்து அவனுடன் அந்த ஹாலை விட்டு வெளியேறினாள்.

வெளியே வந்தவளுக்கு ஊட்டியின் குளிர் புதிதென்பதால் அவனுடன் வரும் போதே உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பிக்க அந்த நேரத்திலும் அவளது கண்கள் அஸ்வினுடன் சென்ற மேனகாவை தேடின. ஆனால் அவர்கள் வெளியே இல்லை.

அவளது கண்கள் அவனைத் தவிர அனைத்துப் பொருட்களின் மீதும் படிய அவனோ அலங்கார விளக்குகளின் ஒளியில் ஜொலித்த தன்னவளை மட்டுமே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்ராவணிக்கு குளிர் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்க நாடி நடுங்கிப் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்தன. கையைக் கட்டிக் கொண்டுத் தேய்த்தபடியே மவுனமாக தன் முகத்தைப் பார்த்தபடி சிலையாய் நின்றவனிடம் “நீ சொல்ல வேண்டியதை சீக்கிரமா சொல்லு. எனக்கு குளிர் ஒத்துக்காது” என்றாள் சிரமத்துடன்.

அபிமன்யூ அதைக் கேட்டதும் வேகமாக தன்னுடைய கோட்டைக் கழற்றியபடி அவள் அருகில் வர அவள் பதறியவளாய் “ஏய் மிஸ்டர் என்னயா பண்ணுற? அங்கேயே நில்லு” என்றாள் மிரட்டும் தொனியில். அவள் சொன்ன விதத்தில் சிரித்தவன் மனதிற்குள் “இந்தப் பொண்ணுங்க சிந்தனை ஏன் இப்பிடி வினோதமா இருக்கு கடவுளே” என்று எண்ணிக் கொண்டான்.

பின்னர் கேலியாக “ஹலோ மேடம் நான் வேற எந்த இண்டென்சனோடவும் உன் பக்கத்துல வரல. குளிருதுனு சொன்னல்ல, அதான் கோட்டை உனக்குக் குடுக்கலானு வந்தேன்” என்று விளக்கம் சொல்ல ஸ்ராவணி நாக்கைக் கடித்தபடி “ஏன் வனி உன் மூளை இப்பிடிலாம் யோசிக்குது?” என்று அவளையே நொந்து கொண்டபடி “அது எனக்கும் தெரியும். உன் கோட் ஒன்னும் எனக்கு தேவை இல்ல மேன். நீ விஷயத்தைச் சொல்லிட்டு கிளம்பு” என்று எப்படியோ சமாளித்து வைத்தாள்.

அபிமன்யூ நம்பாத பாவனையுடன் தலையாட்டிவிட்டு “இந்தக் கோட்டைப் போட்டுக்கோ வனி. உனக்கு குளிராது” என்று மீண்டும் சொல்ல அவள் விட்டேற்றியாக “நான் போட்டுக்க மாட்டேன்டா” என்று சொல்லிவிட்டு கையைக் கட்டிக்கொண்டாள்.

அவளது நாடி நடுங்குவதைக் கண்டவன் பெரூமுச்சு விட்டபடி “சரி! நானும் எவ்ளோ நேரம் தான் நல்லப் பையனா நடிக்குறது? இப்போ நீ கோட்டை வாங்கிப் போட்டுகலனு வையேன், நானே என் கையாலே போட்டுவிட வேண்டியதா இருக்கும். எப்பிடி வசதி?” என்று புருவம் தூக்கிப் பார்த்தபடி அவள் அருகில் வர

அவள் திகைத்தவளாய் சில அடிகள் பின்னோக்கி நகர்ந்துவிட்டு அவன் கையிலிருந்த கோட்டை வெடுக்கெனப் பிடுங்கிப் போட்டுக் கொண்டாள். அதைப் போட்டதும் அவனுக்கே உரித்தான புளூடே பெர்ஃபியூமின் மணம் நாசியைத் தாக்குவதை உணர்ந்தவள் அவனை முறைத்தவாறு “இப்போ சந்தோசமா?” என்று கேட்க

அபிமன்யூ இரண்டு கைகளையும் விரித்தவனாய் “ரொம்ப சந்தோசம் ரிப்போர்ட்டர் மேடம். உங்க பிடிவாதத்தைச் சமாளிக்க இந்த டெக்னிக் எனக்கு ஃபியூச்சர்ல உதவியா இருக்கும் போல” என்றான் குறும்பாக. அதைக் கேட்ட ஸ்ராவணி பதில் சொல்ல முடியாமல்  மலங்க மலங்க விழிக்க முதல் முறையாக அவளை வாய்ப்பேச்சில் வென்ற மகிழ்ச்சியுடன் நின்றான் அபிமன்யூ.