🖊️துளி 1👑

இரவு நேரத்தில் நியான் விளக்குகளின் ஒளியில் “கோல்டன் கிரவுன் பப்” என்ற வார்த்தை மிளிர அந்தக் கட்டிடத்தின் தரிப்பிடத்தில் நிற்கும் விலையுயர்ந்த கார்களே அதனுடைய தரத்தைக் காட்டியது. கிழக்கு கடற்கரை சாலையின் எத்தனையோ பப்களில் அது மட்டும் தனித்து நின்றதற்கானக் காரணம் தமிழகத்தின் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்கட்சியினரின் வாரிசுகள், பெரும் பணமுதலைகள் மட்டுமே அங்கே வந்து செல்ல முடியும் என்பது மட்டுமே!

அதன் வாயிலில் வந்து நின்ற ஊபர் டாக்சியிலிருந்து இறங்கினாள் அவள். கறுப்புநிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ஸ்கர்ட் அவளின் அழகை தூக்கி காட்ட கர்லிங் செய்யப்பட்ட கூந்தலை காதின் பின் புறம் ஒதுக்கியபடி தன் ஐந்தரையடி உயரத்துக்கு சிறிதும் தேவையற்ற ஹைஹீல்ஸ் அணிந்த கால்களை மடித்தபடி நின்றாள். அவளின் பின்னே இறங்கிய இன்னொருத்தி கால்முட்டியை தொட்ட ஸ்கர்ட்டை இழுத்துவிட அவளை முறைத்தாள் முந்தையவள்.

“கம் ஆன் மேகி! இந்த ஸ்கர்ட்டோட லெங்த்தே இவ்ளோ தான். இதுக்கு மேல இழுத்தாலும் அது நீளமாகாது” என்று சொல்லிவிட்டு தோளை குலுக்கியவளை திகைப்புடன் பார்த்தாள் அந்த ஐந்தடி உயர மேனகா.

அதே திகைப்புடன் “வனி உன்னை மாதிரி என்னால சாதாரணமா இருக்க முடியலடி! எனக்கு வேற எதுவும் டென்சன் இல்ல. இந்த காஸ்டியூம் தான் பிரச்சனை” என்று மீண்டும் இழுத்துவிட அதைக் கேட்ட வனிக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது.

“மேகி! நம்ம பாட்டி ஒரு பழமொழி சொல்லுவாங்க. நாய் வேஷம் போட்டா குலைச்சு தான் ஆகணும்னு. இப்போ நாம போட்ட வேஷத்துக்கு இந்த காஸ்டியூம் தான் கரெக்ட். பேசாம என் கூட வா. நான் இருக்கேன்டி” என்று அவளுக்குத் தைரியமூட்டியபடி உள்ளே அழைத்துச் செல்ல வாயிலை நோக்கி நடைப்போட்டாள்.

அவள் எதிர்பார்த்தபடியே பப்பின் பவுன்சர்கள் அவளைத் தடுத்து நிறுத்த “ஆர் யூ கிரேசி? நான் அபியோட குளோஸ் ஃப்ரெண்ட். ஐயாம் நான்ஸி ஃப்ரம் லண்டன். போய் அவன் கிட்டவே கேளுங்க” என்று தைரியமாகச் சொல்ல அவளை தடுத்து நிறுத்திய பவுன்சர்ஸ் அந்தப் பார்ட்டிக்கான அழைப்பிதழை கேட்டனர்.

அவள் தன்னுடைய பெயரை கெஸ்ட் லிஸ்டில் சரிபார்க்குமாறு கூறினாள்.

அவள் பின்னே நின்ற மேனகாவின் கண்ணுக்கு அந்த பவுன்சர்ஸ் எமகிங்கரர்கள் போல தோன்ற அவளுக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டதில் பேச்சு வரவில்லை. “எல்லா விஷயத்தையும் வனி பார்த்துப்பா” என்று எண்ணி தைரியத்தை வரவழைத்து கொண்டாள் அவள்.

அந்த வனி என்பவளோ இதற்கெல்லாம் பயப்படவே இல்லை. ஆடையிலிருந்த படாடோபம் முகத்திலும் பிரதிபலிக்க பவுன்சர்களின் கண்ணுக்கு அவள் லண்டன் ரிட்டர்ன் நான்சியாகவே தோற்றமளித்தாள்.

இதற்கு மேல் அவளை காக்க வைக்காமல் உள்ளே அனுப்பினர் அந்த பவுன்சர்கள். பப்பின் இண்டீரியரை ரசித்தபடியே உள்ளே நுழைந்தவர்களுக்கு அங்கே மிதந்து கொண்டிருந்த மெல்லிய இசை மனதுக்கு இதமூட்ட கூட்டத்தில் நகர்ந்தனர் இருவரும்.

அந்த வனி மேனகாவின் கையை இறுக்கமாகப் பிடித்தபடி நடந்தவள் இருட்டில் கண் தெரியாமல் ஒரு ஆடவனின் மேல் மோதிவிட்டாள்.

உடனே பதறி “சாரி டியூட்!” என்று சொன்னபடி துள்ளி விழுந்த கூந்தலை சரிசெய்தபடி சொன்னவளை அவனும் ஒரு புன்னகையுடன் மன்னித்துவிட்டான் அக்கணமே.

ஆறடி உயரத்தில் புன்னகை நிரந்தரமாக உறைந்த அவனது உதடுகள் என்னோடு சிரிக்க வாருங்கள் என்று பார்ப்பவர் அனைவரையும் அழைப்பது போல வனியின் பின்னே மறைந்து நின்ற மேனகாவுக்கு ஒரு கணம் மனதில் தோன்ற அவளது விழிகள் அவனது கூர்விழியைச் சந்திக்க தயங்கி தரையைப் பார்த்தது.

ஆனால் அவனின் பார்வை வட்டத்தில் அடுத்து விழுந்தது வனியின் முதுகின் பின்னே பம்மிக் கொண்டிருந்த மேனகா தான். அந்த மாடர்ன் டிரஸ்ஸுக்கு கொஞ்சமும் பொருந்தாத அவளின் மூக்குக்கண்ணாடி அவளை அப்பாவியாகக் காட்ட சற்றுக் குள்ளமாக ஆனால் பார்ப்பவரை அடியோடு சாய்க்கும் அழகோடு இருந்தவளைப் பார்த்து  அவன் ஏதோ சொல்வதற்கு முன் அவளுடன் அந்த இடத்தை விட்டு நீங்கினாள் வனி.  இருவருக்கும் ரெட் ஒயின் ஆர்டர் செய்ய மேனகா மீண்டும் பதறினாள்.

“மேகி! டோன்ட் கெட் டென்சன். இங்க நம்ம கையில கிளாஸ் இல்லாம நின்னா எல்லாரும் சந்தேகமா பார்ப்பாங்கடி. நீ இப்பிடி பதறுறதை கொஞ்சம் நிறுத்து” என்று அவளுக்குக் காரணத்தை விளக்கினாள் வனி.

அவள் தேடியவன் கண்ணில் சிக்குவானா என்று சுற்றிமுற்றி பார்த்தவளின் கண்ணில் அவன் பட்டே விட்டான்.

ஆறடி உயரத்தில் நெற்றியில் புரண்ட கூந்தலை சிலுப்பியபடி கையில் மதுக்கிண்ணத்துடன் கூடவே ஒரு பெண்ணுடன் நடனமாடிக் கொண்டிருந்தான் அவன். ஒரு முறை பார்த்த எந்தப் பெண்ணும் அவனை மறுமுறை பார்க்காமல் சென்றதில்லை. அவன் தான் அபிமன்யூ. இது அவன் கொடுத்த பார்ட்டி தான்.

இளம்பெண்கள் சூழ நின்றவனைக் கண்டவள் இலக்கை அடைந்துவிட்ட திருப்தியில் மகிழும் போது தான் அது நடந்தது. சற்று போதையில் இருந்த ஒருவன் அவளின் இடையில் கை வைக்கவும் வனிக்கு எங்கிருந்து தான் வந்ததோ கோபம், பளாரென்று ஒரு அறை விட அவளிடம் அடிபட்டவனுக்குக் காதில் ஏதோ வண்டு குடைவது போல வலியுடன் சத்தம்.

அவளின் அறை மெல்லிய இசையை தாண்டி அங்கிருந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க அவளின் இலக்காக கருதப்பட்ட அந்த ஆறடி அழகனும் திரும்பிப் பார்த்தான். அவனுடன் நெருக்கமாக ஆடிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை விலக்கியவன் கூட்டத்தைக் கடந்து அவளிடம் சென்றான். அவன் இருந்த உயரத்துக்கு அவள் நிற்கும் இடம் தெளிவாகத் தெரிய அவளை நெருங்கினான் அவன்.

அதற்குள் வனியிடம் அடி பட்டவன் “ஏய் பப்புக்கு வந்தா நாலு பேரு கை வைக்கத் தான் செய்வாங்க. இந்த மாதிரி டிரஸ்ஸைப் போட்டுட்டு பப்புக்கு வர வேண்டியது, அப்புறம் நாங்க தொட்டா கண்ணகி மாதிரி நடிக்க வேண்டியது” என்றவனின் குரலில் அடிவாங்கிய அவமானம் தெளிவாக தெரிந்தது.

அதற்குள் அவளை நெருங்கிய மேனகா “வனி வந்த இடத்துல பிரச்சனை வேண்டாம்டி” என்று அவளை விலக்க முயற்சிக்க அவளோ வந்த சண்டையை விடுபவள் அல்ல.

சண்டைகோழியாக முறைத்து நின்றவள் “வாட்? பப்புக்கு வந்தா நீ இப்பிடி தான் பிஹேவ் பண்ணுவியா? அப்புறம் என்ன சொன்ன, இந்த டிரஸ் போட்டுகிட்டு கண்ணகி மாதிரி பிஹேவ் பண்ணுறோம்னு சொன்னல்ல, இப்பிடி டிரஸ் பண்ணுறவங்க எல்லாரும் நீ இழுக்குற இழுப்புக்கு வருவாங்கன்னு உனக்கு யாரு சொன்னாங்கடா? பொண்ணுங்களோட கேரக்டர் அவங்க போடுற டிரஸ்ல இல்ல. அவங்க நடந்துக்கிற விதத்துல, மரியாதை குடுக்கிற முறையில இருக்கு. அதை விட்டுட்டு இன்னும் எத்தனை நாளுக்கு உங்க மனசோட வக்கிரபுத்திக்கு பொண்ணுங்களோட டிரஸ்ஸை குறை சொல்லுவிங்க?” என்று கண்ணில் கோபம் மின்ன பேசியவளின் வார்த்தையிலிருந்த நிதர்சனம் அவனைச் சுட தலை குனிந்தான்.

அதற்குள் அவளை நெருங்கிவிட்டான் அவளின் இலக்கு என்று அவளால் வர்ணிக்கப்பட்டவன்.

“என்ன நடக்குது இங்கே?” என்று தனது கம்பீரமானக் குரலில் கேட்டவனின் பார்வை வனியின் முகத்தை ரசனையுடன் அளவிடத் தவறவில்லை.

கறுப்பு ஸ்கர்ட், குதிகால் உயர்ந்த காலணி, சுருண்ட கூந்தல், மிதமான உதட்டுச்சாயத்துடன் பேரழகி என்றுச் சொல்லமுடியாவிட்டாலும் அவளிடம் ஏதோ ஒன்று தன்னைக் கவர்வது அவனுக்குப் புரிபட அவளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நிதானமாக அளவிட்டு முடித்தான் அபிமன்யூ.

அதன் பின் அவளிடம் அடிவாங்கியவனிடம் விஷயத்தைக் கேட்டவன் வனியிடம் திரும்பினான். அவளோ கறுப்பு நிற டிசர்ட்டில் டிரிம் செய்யப்பட்ட தாடியுடன் தன் அருகில் நிற்பது அபிமன்யூவா என்று மனதில் அதிசயித்தவள் அதை வெளிக்காட்டவில்லை.

அவனுக்கே உரித்தான ப்ளூ டே பெர்ஃபியூமின் மணம் அவளின் நாசியை நிறைக்க இத்தனை நாட்கள் புகைப்படத்தில் மட்டும் பார்த்தவன் இன்று அவளுக்கு அருகில் அதுவும் மூச்சுக்காற்று மோதும் தூரத்தில் நின்றும் அவளால் அவனை மற்றப் பெண்களைப் போல இயல்பாக ரசிக்க முடியவில்லை.

ஆனால் அபிமன்யூவோ அவளின் இந்த நிலையை அறியாமல் நடந்த விஷயத்துக்கு இன்னும் அவள் கோபமாக இருக்கிறாள் என்று  எண்ணி “ஐயாம் ரியலி சாரி! அவனோட இந்த பிஹேவியருக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று மன்னிப்பு கேட்க அதன் பிறகு தான் அவளும் சமாதானமானாள்.

அவளது மனசாட்சி “இந்த இன்சிடென்ட் மோசம் தான் வனி. பட் உன்னோட டார்கெட் உன் கண்ணு முன்னாடி நிக்குது. அது போதும்” என அவளைத் தட்டிக் கொடுக்கத் தவறவில்லை.

அபிமன்யூ ஒரு கணம் அவளைக் கூர்ந்து கவனித்தவன் “உங்களை நான் இது வரைக்கும் பார்த்ததே இல்லயே” என்று சந்தேகத்துடன் அவளை ஊடுருவிப் பார்க்க அவனின் அந்த பார்வை எப்பேர்ப்பட்ட தைரியசாலியையும் உறைய வைக்கும் வல்லமை வாய்ந்ததாக இருந்தாலும் ஸ்ராவணி அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை.

சமாளித்தவளாய் “ஐயாம் வனி! நான்ஸியோட ஃப்ரெண்ட்” என்றுச் சொல்ல நான்ஸி என்ற ஒரு வார்த்தையில் அவன் முகம் புன்னகையைத் தத்தெடுத்தது.

“இஸிட்? ஹவ் இஸ் நான்ஸி? நான் இன்விடேஷன் அனுப்புனதுக்கு அவ வருவான்னு ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணுனேன். இப்பிடி அவளோட ஃப்ரெண்டை அனுப்பி என்னை ஏமாத்திட்டாளே” என்றான் அவன் குறும்பு மின்னும் குரலில்.

அதே பார்வையுடன் அவளை அளவிட்டவனின் ரசனை பார்வையைக் கண்டும் காணாதவளாய் டிஜேவின் இசையை கவனிக்க தொடங்கினாள் வனி.

அவன் அவளிடம் கையை நீட்டி “ஸால் வீ டான்ஸ்?” என்று சொல்ல அவள் மறுப்பின்றி சிறு புன்னகையை மட்டும் சிந்திவிட்டுக் கையிலிருக்கும் வாட்சை அழுத்தினாள். பின்னர் புன்னகையுடன் அவனுடன் இணைந்து அந்த பாப் இசைக்கேற்ப ஆட ஆரம்பிக்க மேனகாவுக்கு அவள் கூறிய விஷயம் நினைவுக்கு வந்தது.

“லேகா ஐ.டியில வொர்க் பண்ணுறப்போ வீக் எண்ட் பார்ட்டிக்கு தனியா போக பயந்துட்டு என்னை பாடிகார்டா கூட்டிட்டுப் போவாடி. அதனால எனக்கு பப், டான்ஸ்லாம் புதுசு இல்ல. ஆல்ரெடி பார்த்துருக்கேன்” என்றவளின் பார்வையில் தப்பாத இன்னொரு விஷயம் வனியுடன் ஆடிக் கொண்டிருந்தவனின் பார்வை.

அதில் இருந்தது தவறான எண்ணம் என்று கண் இல்லாதவன் கூட சொல்ல மாட்டான். அவன் பார்வையில் இருந்தது ரசனை மட்டுமே. தாஜ்மஹாலை முதலில் கண்டவர்களும், புல்லின் மீது இருக்கும் பனித்துளியை ரசிப்பவர்களும், சிறு குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பில் மயங்கியவர்களும் மட்டுமே உணரக் கூடியதான ரசனை அது.

ஆனால் மேனகாவுக்கு இன்னொரு விஷயமும் நன்றாக தெரியும். அவனின் இந்த பார்வை தங்களை பற்றிய உண்மை தெரியவந்தால் சத்தியமாக மறைந்துவிடும் என்பது தான் அது.

இருவரும் ஆடிக் கொண்டிருக்கையிலேயே வனியின் கண்கள் பார்ட்டி நடந்த இடத்தை அளவிட தன் கையிலிருக்கும் வாட்சை அடிக்கடி சரி செய்து கொண்டாள்.

பின்னர் அவனிடம் தான் களைத்துவிட்டதாக கூறி மேனகாவிடம் நெருங்கியவள் வேறு ஒரு பெண்ணுடன் ஆடிக் கொண்டிருக்கும் அபிமன்யூவை நோக்கி கையை காட்டி “மேகி வந்த வேலை முடிஞ்சு போச்சுடி, ஸால் வீ கோ?” என்று புன்னகைக்க மேனகாவும் சரியென்று தலையாட்டினாள்.

ஆனால் எங்கிருந்து வந்தானோ தெரியவில்லை அங்கிருந்து நகர முயன்றவர்களை தடுத்தான் வனி முதலில் சென்று மோதிய அந்த ஆடவன்.

“என்னங்க அபியோட பார்ட்டிக்கு வந்துட்டு முடியுறதுக்குள்ள கெளம்புறிங்க?” என்று சினேகமாக சொன்னவனின் தோளில் ஒரு பெண் கை போட்டிருக்க மேனகாவின் கண்களுக்கு அது தப்பவில்லை.

அவனிடம் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் “ஆக்சுவலி எங்களுக்கு கொஞ்சம் எமர்ஜென்சி. நாங்க ஆல்ரெடி அபி கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டோம். பை” என்ற மேனகா வனியுடைய கையைப் பிடித்து இழுத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

இருவரும் வெளியே வந்தவுடன் சில நிமிடங்களில் டாக்சி வர அதில் ஏறிக் கொண்டவர்கள் ஒரு அப்பார்ட்மெண்ட் வாசலில் இறங்கினர். இருவரும் செக்யூரிட்டிக்கு ஒரு வணக்கம் போட்டபடி உள்ளே சென்றவர்கள் முதலில் செய்த காரியம் அந்த உடையை மாற்றியது தான்.

இது அவர்கள் தினந்தோறும் அணியும் உடை அல்லவே! வனி சொன்னபடி போட்ட வேஷத்துக்கு ஏற்ற உடை, அவ்வளவு தான். வனி உடைமாற்றி விட்டு அவளின் வழக்கமான குர்தாவுக்கு மாறினாலும் அந்த அபியின் புளூ டே பெர்ஃபியூமின் வாசனை அவளை விட்டு நீங்கவில்லை.

இரவுக்கு பாலை மட்டும் அருந்தியவளை ஓரக்கண்ணால் பார்த்த மேனகா “வனி! டூ யூ நோ ஒன் திங்? உன் கூட டான்ஸ் ஆடுறப்போ அந்த அபி கண்ணுல ஏதோ வித்தியாசமான ஒரு ஃபீலிங் தெரிஞ்சுதுடி. சம் திங் ராங்” என்று சொல்ல வனி அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

“நல்ல வேளை இதை நீ அவன் முன்னாடி சொல்லலை! அடியே அவன் எந்தப் பொண்ணை பார்த்தாலும் அப்பிடி தான் பார்ப்பான். அவன் வளர்ந்த விதம் அப்பிடி மேகி. நமக்கு அது எதுவும் தேவை இல்ல. நமக்கு தேவையானது எல்லாம் அவனோட லைஃப் ஸ்டைல் பத்தின டீடெய்ல்ஸ். அது நமக்கு கெடைச்சாச்சு. இது போதும் அந்த மினிஸ்டர் பார்த்திபனோட பையன் அபிமன்யூ எம்.எல்.ஏ எலக்சன்ல நிக்காம தடுக்கிறதுக்கு” என்று அர்த்தத்துடன் சொல்லிவிட்டுச் சிரித்தாள் ஜஸ்டிஸ் டூடேவின் ஸ்டார் ரிப்போர்ட்டரான ஸ்ராவணி சுப்பிரமணியம். நண்பர்களுக்கு மட்டும் அவள் வனி.

பெருமூச்சுடன் எழுந்தவள் “அந்த மினிஸ்டர் ஒரு ஊழல் குற்றத்துல மாட்டுனதும் தந்திரமா லண்டன்ல பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்த இந்த அபிமன்யூவை அவருக்கு பதிலா எலெக்சன்ல நிக்க வச்சாரு. கேட்டா இளைய தலைமுறைக்கு அரசியல்ல வழிவிடுறோம்னு டயலாக் வேற” என்று நக்கலாக உரைத்தவண்ணம் கழுத்தை அப்படியும் இப்படியுமாக திருப்பி சோம்பலைப் போக்கிக் கொண்டாள்.

 அவளையே பார்த்த மேனகா “ஏன்டி உனக்கு அவனை பிடிக்கல?” என்று நேரடியாக கேட்க

“மிஸ் மேனகா ரங்கநாதன் அவர்களே! எனக்கும் அவனுக்கும் வாய்க்கால் தகராறு ஒன்னும் இல்ல. என்னோட பிரச்சனை அவனோட அப்பா பண்ணுன ஊழல். அதை மறைக்க மகனை அரசியல்ல இறக்கி விடுற அவரோட ராஜதந்திரம். அது மட்டுமில்லாம இந்த அபிமன்யூ அவன் அப்பாவோட பேச்சை தட்டாத பிள்ளைனு வேற பேசிக்கிறாங்க” என்றாள் அவள் தீவிரக்குரலில்.

மேனகா அவளை குழப்பத்துடன் பார்க்க “மேகி! மினிஸ்டர் பார்த்திபனோட ரத்தம் தான் அவன் உடம்புலயும் ஓடுதுடி. அவன் அப்பாவை மாதிரி தானே அவனும் ஊழல் பேர்வழியா இருப்பான்.  நீயே பார்த்தல்ல, இன்னைக்கு இந்த பார்ட்டி நடந்த இடம், அதோட ஒரு நாள் பேமென்ட், அந்த அபிமன்யூ போட்டு இருந்த டிரஸ் இது எல்லாமே ரொம்ப காஸ்ட்லி. இவ்ளோ ஆடம்பரமா வாழுற ஒருத்தன் எப்பிடி சாதாரண மக்களோட பிரதிநிதியா அவங்களுக்காக குரல் குடுக்க முடியும்? இன் ஃபேக்ட் அவங்களோட கஷ்டம் எதையும் இவனால புரிஞ்சிக்க முடியாது” என்றாள் தீர்மானமான குரலில்.

மேனகா அவளை கட்டிக் கொண்டவள் “நமக்கு ஏன் பொலிடிசியன்ஸ்னாலே ஆக மாட்டிக்குதுடி?” என்று கேலியாய் கேட்க ஸ்ராவணி சிரித்தபடியே “ஏன்னா என்னைக்குமே பேனாவுக்கும் நாற்காலிக்கும் ஒத்துப் போகாதுடி” என்றாள் மேனகாவின் தலையில் செல்லமாக முட்டியபடி.