💞அத்தியாயம் 7💞

இன்னைக்கு கபேல ஒரு கஸ்டமர் அவரோட கேர்ள் ஃப்ரெண்டோட வந்துருந்தாருகேர்ள் ஃப்ரெண்டுக்கு ப்ரபோஸ் பண்ணுறதுக்கு சர்ப்ரைஸா எல்லாத்தையும் ப்ரிப்பேர் பண்ணிருக்கச் சொல்லிருக்காரு போலசர்விங்ல இருக்கிறவங்க இதை பத்தியே பேசவும் எனக்கு கியூரியாசிட்டி தாங்க முடியாம தூரமா நின்னு வேடிக்கை பார்த்தேன்வாவ்! அந்தப் பையன் முட்டிக்கால் போட்டு மோதிரத்தை நீட்டுனப்போ அந்தப் பொண்ணோட ஃபேஸ்ல எவ்ளோ சந்தோசம் தெரியுமா! இதுல்லாம் வாழ்க்கைல கோல்டன் மொமண்ட்ஸ்…”

                                                               –ஷான்வி

சென்னை..

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த F2 ஃப்ளாட்வாசிகள் சில தினங்களாக சோகவடிவாய் அழுது வடிந்து கொண்டிருந்தனர். அந்தக் குடும்பத்தின் தலைவரான சந்தானமூர்த்தியும் அவரது மனைவி சந்திரகலாவும் கடுகடுத்த முகத்தினராய் அமர்ந்திருந்தனர்.

“எங்க தான் போய் தொலைஞ்சிருப்பாங்க ரெண்டு பேரும்? பொட்டைக்கழுதைங்க இப்பிடி சொல்லாம கொள்ளாம ஓடிப்போகும்னு நம்ம என்ன கனவா கண்டோம்? சனியனுங்க திரும்பி வரட்டும்… காலை உடைச்சு வீட்டோட போடுறேன்”

இதைச் சொன்ன போது சந்திரகலாவின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம்! அவர் அருகில் இருந்த அவரது கணவரும் மனைவியின் கூற்றை ஆமோதித்தார்.

அவர் எதிரில் அமர்ந்திருந்த இன்னொரு நடுத்தர வயது தம்பதியினரும் அதையே சரியென எண்ணினர் போலும். அவர்கள் அனைவரின் பார்வையும் வீட்டின் சுவரில் புகைப்படமாய் தொங்கிய மணிகண்டனையும் பூர்ணாவையும் வெறுப்பாய் நோக்கியது.

“நீ சொல்லுறது நூறு சதவீதம் சரி தான் அக்கா… எல்லாம் இந்த மனுசனால வந்தது… இருந்தப்போவும் நம்மள அனுபவிக்க விடல… இப்போ செத்தும் பொண்ணுங்களை வச்சு நம்மளை எதையும் அனுபவிக்க விடாம பண்ணிட்டான்”

இதைச் சொன்னது மணிகண்டனின் இளையச் சகோதரரான சச்சிதானந்தம் தான். அவரும் சந்திரகலாவும் மணிகண்டனின் உடன் பிறந்தவர்கள். அவரது பெண்களான தன்வியும் ஷான்வியும் இவர்கள் சுவாமி தரிசனத்துக்காகத் திருப்பதிக்குப் போன இடைவெளியில் வீட்டை விட்டுச் சென்றிருந்தனர். வந்தவர்களுக்கு அதிர்ச்சி!

இன்னும் ஒரு வாரத்தில் சந்திரகலாவின் மகன் தாரகேஷுடன் தன்விக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்க தன்வி மறுத்த போது அவளை அதட்டி உருட்டி, பட்டினி போட்டு சம்மதிக்க வைத்தது எல்லாம் வீணாய் போனதே! கூடவே திருமணம் நடக்காவிடில் தன்வி உயிருடன் இருக்க மாட்டாள் என ஷான்வியைப் பணியவைத்த ராஜதந்திரம், இரு பெண்களுக்கும் வெளியாட்கள் அறியாவண்ணம் செய்த கொடுமைகள் என அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் போன ஆத்திரம் அவர்களுக்கு!

குறித்த தேதிக்குத் திருமணம் நடந்திருந்தால் இந்நேரம் தாங்கள் அடைந்திருக்க வேண்டிய இலாபங்கள் அவர்கள் கண் முன் வந்து சென்றது.

திருப்பூரில் அவரது மூத்தமகளின் பெயரில் வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் தங்கள் வசம் வந்திருக்கும். அவர்கள் ஒன்றும் மணிகண்டனைப் போல அதில் விவசாயம் செய்ய வேண்டுமென எண்ணுமளவுக்கு பைத்தியக்காரர்கள் இல்லையே! அதை துணி நிறுவன அதிபருக்குக் கைமாற்றியிருந்தால் இன்று தாங்கள் கோடீஸ்வரர்களாக இல்லாவிடினும் இலட்சாதிபதிகளாக இருந்திருப்போமே என்ற ஆதங்கம். கூடவே இப்போது டேரா போட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின்  F2 ஃப்ளாட்டும் அவர்களுக்குச் சொந்தமாகியிருக்கும்.

அவ்வளவு கோபமும் இப்போது மணிகண்டனின் மகள்கள் மீது திரும்பியிருந்தது. இத்தனைக்கும் அவர் உயிருடன் இருந்தவரை அண்ணா அண்ணா என அவரது காலைச் சுற்றி வந்தவர்கள் தான்! எப்படி அவரது மகள்கள் இருவரும் வீட்டை விட்டுச் சென்றிருப்பார்கள் என்ற யோசனையுடன் சுத்தியவர்களுக்கு ஷான்வியின் தோழி தேஜஸ்வினியின் நினைவு வந்தது.

அவளது வீட்டு முகவரியைச் சச்சிதானந்தத்தின் மனைவி வதனா குறித்துக் கொடுக்க சந்தானமூர்த்தியும் சச்சிதானந்தமும் தேஜஸ்வினியின் வீட்டை நோக்கிப் படையெடுத்தனர்.

தேஜஸ்வினியின் அம்மா கமலா அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தவர் என்ன விசயம் என விசாரிக்க இரு ஆண்களும் தன்வி மற்றும் ஷான்வி பற்றி கேட்க தேஜஸ்வினி தனக்கு எதுவும் தெரியாது என்று இலகுவாகத் தோளைக் குலுக்கினாள்.

“உன் கூட தான்மா அவங்க ரெண்டு பேரும் குளோஸா இருந்தாங்க… நீ தான் கல்யாணப்பேச்சு நடந்தப்போ அவங்களுக்குப் புத்தி சொன்ன… அதான் விசாரிச்சோம்… நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்காத… அதுங்களுக்கு வளர்ப்பு சரியில்ல… வேற என்ன சொல்ல?” என்று சலித்துக் கொண்டு எழுந்தனர்.

அவர்கள் சென்றதும் கமலா தேஜஸ்வினியை சந்தேகமாய் நோக்கியவர்

“ஏய்! உண்மைய சொல்லுடி… அதுங்க ரெண்டும் ஊரை விட்டுப் போனதுக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கா?” என்று கேட்க அவள் இல்லவே இல்லையென கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்துவிட்டுத் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

உள்ளே வந்ததும் பெருமூச்சு விட்டவள் எக்காரணத்தைக் கொண்டதும் பெற்றோரிடம் மட்டும் ஷான்வியும் தன்வியும் அமெரிக்கா சென்ற விசயத்தைச் சொல்லிவிடக் கூடாதென உறுதியாய் இருந்தாள்.

இது முன்னரே அஸ்வினி எச்சரித்தது தான்! ஏனெனில் தங்களின் பெற்றோரும் ஷான்வி மற்றும் தன்வியின் அத்தை மாமாவுக்குச் சளைத்தவர்கள் இல்லையே!

தங்களின் கேடு கெட்ட மகனை வைத்து தன்வியுடன் திருமணம் எனும் நாடகத்தை நடத்த தயாராய் இருந்தவர்கள் மீது தேஜஸ்வினிக்குக் கொலைவெறியே வந்தது. அந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளாததற்கு அவர்கள் தன்வியைக் கொடுமை செய்தது கூட நினைவிலாடியது.

கூடவே அவர்களிடம் தான் ஆடிய நாடகமும், இரு பெண்களுக்கும் புத்தி சொல்லி திருமணத்துக்குச் சம்மதிக்க வைக்கிறேன் என்று அவர்களை நம்ப வைத்ததும் நினைவுக்கு வந்தது.

“பொண்ணுங்களுக்கு அப்பா அம்மா இல்லைனா அவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்கங்கிறதுக்கு நானும் ஷானுவும் தான் உதாரணம் தேஜூ… அடுத்தவங்க ஆதரவுல வாழுற நிலமை மட்டும் நம்ம எதிரிக்குக் கூட வரக் கூடாதுடா… இப்பிடி என்னையும் ஷானுவையும் தனியா விட்டுட்டுப் போனதுக்கு அவங்களோட எங்களையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே” என்று சொல்லிவிட்டு அழுத தன்வியின் கண்ணீர் நிரம்பிய தோற்றம் இப்போது நினைத்தாலும் அவள் மனதை உலுக்கியது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தன்னாலான உதவியைச் செய்தாள் அவள். அவர்களும் அக்கா வீட்டில் வசிக்க ஆரம்பித்துவிட்டனர். இனியாவது அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாகத் தங்கள் வாழ்வை வாழட்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் தேஜஸ்வினி.

**********

ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூ, ரிவர் ஓக்ஸ்

அன்று கால தாமதமாக விழித்தனர் ஷான்வியும் தன்வியும். தன்வியைக் குளிக்கச் சொன்ன ஷான்வி வீட்டை விட்டு வெளியேறி புல்வெளியில் கால் பதிய நடந்தாள்.

வீட்டில் நிலவும் அமைதி அஸ்வினியும் அனிகாவும் இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதை உணர்த்தியது. காலைவெயில் அழகாய் பூமியைத் தழுவ ஆரம்பித்தது. மஞ்சள் வெயிலில் நனைந்தவளை வீட்டுக்குள் இருந்து தன்வியின் குரல் அழைத்தது.

“ஷானு! வந்து குளிடி… நேரம் ஆகுது பாரு” என்று கத்தவும் ஷான்வி வீட்டுக்குள் நுழைந்தாள்.

வேகமாக குளியலறைக்குள் நுழைந்து விறுவிறுவென குளித்துவிட்டு வெளியேறியவள் முழங்கை அளவுள்ள வெள்ளை நிற டீசர்ட்டையும் நீலநிற ஜீன்சையும் அணிந்து ஹேர் ட்ரையரில் காய வைத்தக் கூந்தலை போனி டெயிலாக போட்டுக் கொண்டாள். தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டாள்.

அப்போது தான் திடீரென்று கண்ணாடியில் அவள் பிம்பத்துக்குப் பின்னர் அந்த சித்துவின் பிம்பம் தோன்றி கண் சிமிட்டிவிட்டு “கியூட் டால்” என்று அவளது காதில் முணுமுணுக்கவும் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் ஷான்வி.

ஆனால் அவள் பின்னே யாரும் இல்லை. மீண்டும் திரும்பி கண்ணாடியில் பார்த்தவளுக்கு அங்கே அவளது பிம்பம் மட்டுமே கண்ணை விரித்து யாரையோ தேடுவது போல நின்றிருந்தது.

இரு கரங்களாலும் முகத்தை மூடிக் கொண்டவள் “ஐயோ அவன் மூஞ்சியே எல்லா இடத்துலயும் தெரியுதே… என் எதிர்ல மட்டும் வரட்டும்.. அவன் சட்னி தான்” என்று சொல்லிவிட்டுக் காலையுணவை எடுத்துவரச் சென்றாள்.

அங்கே அஸ்வினி மௌனமாய் உணவுமேஜையில் அமர்ந்திருக்க அவள் அருகே அனிகா குனிந்த தலை நிமிராது தட்டில் உள்ள தோசையைப் பிய்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்களின் எதிரே அமர்ந்திருந்த தன்வி கண்களால் தங்கையை அழைத்தவள் வந்து சாப்பிடுமாறு சைகை காட்ட அவள் மறுப்பாய் தலையசைத்துவிட்டு

“நான் கிளம்புறேன் தனு… இன்னைக்குத் தனா அண்ணாக்கு கொஞ்சம் ஒர்க் நிறைய இருக்குதாம்… அண்ணா கால் பண்ணுனாங்க… இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவாங்க” என்று தன் அக்காவிடம் மட்டும் சொல்லிவிட்டு ஷோல்டர் பேக்குடன் கிளம்பினாள்.

போனில் அழைப்பு வரவே அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவள் “அண்ணா நான் ரெடியாயிட்டேன்… நீங்க எப்போ வருவிங்க?” என்று கேட்டபடியே வீட்டை விட்டு வெளியேறி புல்வெளியின் நடுவே கிடந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.

உள்ளே அஸ்வினி எதுவும் பேசாமல் காலையுணவை முடித்தவள் மகளை அழைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.

அதற்குள் வெளியே கார் வரும் சத்தம் கேட்கவும் தனஞ்செயன் வந்துவிட்டான் போல என அஸ்வினியும் தன்வியும் மனதுக்குள் நினைத்துக் கொண்டனர்.

அஸ்வினி மகளுடன் தயாரானவள் மெதுவாக தன்வியிடம் “நாங்க கிளம்புறோம்… உன்னை யூனிவர்சிட்டில டிராப் பண்ணிடவா?” என்று கேட்க அதைப் புன்னகையுடன் மறுத்த தன்வி

“நானே போய்ப்பேன்கா… நீங்க கிளம்புங்க” என்று பட்டும் படாமலும் பேசிவிட்டுத் தனது ஷோல்டர் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டாள். நீண்ட கூந்தலை கேட்ச் கிளிப்பில் அடக்கியவள் அனிகாவுக்கு டாட்டா காட்டிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

அவளுக்கும் அவள் தங்கையிடம் அஸ்வினி நடந்து கொண்ட முறையில் வருத்தம் தான். ஆனால் வாய் திறந்து அவளால் பேச முடியாதே!

“பெகர்ஸ் கெனாட் பி சூசர்ஸ்” என்று அவளது உதடுகள் முணுமுணுக்க கண்ணிலிருந்து சூடான கண்ணீர் வழிந்து கன்னங்களில் கோடு போட்டது. அதைச் சுண்டிவிட்டபடி பேருந்து வரவும் அதில் ஏறிக்கொண்டாள் தன்வி.

************

ஹோட்டல் ராயல் கிராண்டே, வாஷிங்டன் அவென்யூ, ஹூஸ்டன்

கபே சமையலறையில் வேலை விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்தது. இன்று ஒரு திருமண நிகழ்வுக்குக் கேக்கை அனுப்ப வேண்டிய நாள். அதற்காக தான் தனஞ்செயனும் ஷான்வியும் சீக்கிரமே வந்து வேலையில் இறங்கியது.

கோட் அணிந்த மணமகனும் வெண்ணிற கவுன் அணிந்த மணமகளும் நின்று கொண்டிருக்க ஐந்தடுக்கில் வெண்ணிறத்தில் பட்டர் க்ரீமால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேக்கில் ஆங்காங்கே ஃபாண்டெண்டால் உருவாக்கப்பட்ட ரோஜா மலர்கள் சின்னஞ்சிறு இலைகளுடன் அழகாய் சிரித்தன.

அதை முடித்தப் பிறகு தான் இருவருக்கும் நிம்மதி பெருமூச்சே வந்தது. அதைச் செய்து முடித்ததும் ஷான்வி, தான் காலையுணவு அருந்தவில்லை என்று சொல்லவும் தனஞ்செயனுக்கு உள்ளுக்குள் வருத்தம் மிகுந்தது.

“ஏன்டா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடாம வந்த?” என்றவனிடம்

“இன்னைக்கு எமர்ஜென்சினு சாப்பிடாம வந்துட்டேன் அண்ணா… மத்தபடி நான் சாப்பாடு விசயத்துல குறை வைக்காத பொண்ணு” என்று கேலி போல சொன்னாலும் அவளுக்கு உண்மையில் அஸ்வினியின் கையால் சமைத்தச் சாப்பாட்டை அருந்தும் எண்ணமில்லை. அதனால் தான் காலையுணவு வேண்டாமென மறுத்துவிட்டு வந்தாள்.

ஹோட்டலின் ரெஸ்ட்ராண்ட் பகுதியில் சென்று தனஞ்செயனுடன் அமர்ந்தவள் அங்கே கிடைக்கும் வட இந்திய உணவுவகைகளை ஆர்டர் செய்துவிட்டுக் கை கழுவச் சென்றாள்.

அப்போது போன் அடிக்கவும் தயக்கத்துடன் எடுத்த தனஞ்செயன் தன்வி அழைத்திருந்ததால் சரளமாகப் பேச ஆரம்பித்தான்.

“தனு உனக்குக் காலேஜ் பிடிச்சிருக்காடா?” என்றவனின் கேள்விக்கு உம் கொட்டிய தன்வி

“அண்ணா! ஷானு சாப்பிடாம வந்துட்டாண்ணா… அவ அங்க சாப்பிட்டுப்பானு நினைச்சு நான் ஒன்னும் சொல்லல… அவ நார்மலா தான இருக்கா?” என்று வினவ

“அவ அப்நார்மல் ஆகுற அளவுக்கு என்ன நடந்துச்சு தனும்மா?” என்று பதிலுக்கு தன்வியிடம் வினவினான் தனஞ்செயன்.

தன்வி நேற்று இரவில் நடந்ததை விளக்கவும் தனஞ்செயனுக்கு அஸ்வினியின் மீது ஆத்திரம் வந்தது. குழந்தை ஆசைப்படுகிறாள் என்று நேற்று எவ்வளவு ஆர்வமாக ஷான்வி ஆப்பிள் பையை தயார் செய்தாள் என்பதை அவன் அறிவான்.

எவ்வளவு இரக்கமற்ற மனுசி இவள்! குழந்தைக்கு அவள் இஷ்டப்பட்டதை வாங்கிக் கொடுத்தது ஒரு குற்றமா? இதற்கு போய் ஒரு சின்னப்பெண்ணின் மனதைக் காயப்படுத்தி இருக்கிறாளே!

அவன் ஷான்வியைத் தான் கவனித்துக் கொள்கிறேன் என தன்விக்கு உறுதியளித்துவிட்டுப் போனை வைக்கவும் ஷான்வி வந்து சேர்ந்தாள். அவளிடம் தன்வி அழைத்த விவரத்தை மட்டும் தெரிவித்தான் தனஞ்செயன்.

அப்போது தான் அந்நிகழ்வு நடந்தது. அவர்களுக்கு அடுத்த மேஜையில் இருந்த ஒரு பெண்மணியிடம் அவரது மகன் மோமோ வேண்டுமென்று கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது இருக்கலாம்.

பார்த்ததுமே ஷான்விக்கு அவனைத் தூக்கிக் கொஞ்சவேண்டும் போல இருந்தது. அப்பெண்மணி வட இந்தியர் என்பது அவர் பேசிய இந்தியில் தெரிய ஷான்வி தனது நாணை ஒதுக்கிவைத்துவிட்டு அவனிடம் சென்றாள்.

“பேட்டா ஆப் கோ க்யா சாஹியே? (உனக்கு என்னடா வேணும்?)” என்று சரளமாகப் பேசியவளிடம் புன்முறுவல் பூத்த அச்சிறுவனின் அன்னை அவனுக்கு மோமோ என்றால் உயிர் என்று சொல்லிவிட்டு ஹோட்டலில் அது காலை நேர மெனுவில் இல்லையா என்ற கேள்வியுடன் முடித்தார்.

ஷான்வி சர்விங் பெண்ணைப் பார்க்க அவளோ இல்லையென தலையாட்டினாள். அச்சிறுவனோ மோமோ கிடைக்காத ஏக்கத்தில் உதடு பிதுக்கி அழுகைக்குத் தயாரானான்.

ஷான்வி அவனருகில் முழங்காலிட்டு அமர்ந்தவள் “லிட்டில் மாஸ்டருக்கு இன்னும் கொஞ்சநேரத்துல மோமோ கொண்டு வர்றேன்… அது வரைக்கும் மம்மி கூட அமைதியா உக்காந்திருப்பிங்களா?” என்று கொஞ்சலாய் கேட்க அவன் ஆசையாய் சரியென்றான்.

ஷான்வி தனது நாண் ரொட்டியை எடுத்துக் கொண்டவள் தனஞ்செயனுடன் சமையலறையை நோக்கி நடந்தாள்.

அவளிடம் என்ன செய்யப் போகிறாய் என்று கேட்ட தனஞ்செயனிடம் “நீங்க தானே அண்ணா சொன்னிங்க இக்கட்டான நேரத்துல சமயோஜிதமா நடந்துக்கணும்னு… இப்போ அதை தான் நான் செய்யப் போறேன்… எனக்கு பெர்மிசன் மட்டும் குடுங்கண்ணா” என்று தலையைச் சரித்துக் கேட்க அவளது சிகையைச் செல்லமாக களைத்துவிட்டவன்

“இதுக்குலாம் என் கிட்ட பெர்மிசன் கேக்கணுமா குட்டிம்மா? நீ இந்த கபேயோட அசிஸ்டெண்ட் பேஸ்ட்ரி செப்… எனக்கு இருக்கிற எல்லா அதிகாரமும் உனக்கும் இருக்கு… கேரி ஆன்” என்று சொல்லவே அவள் அவனுக்கு நன்றி கூறிவிட்டுச் சமையலறைக்குள் புகுந்தாள்.