💞அத்தியாயம் 27💞

“நான் ஒரு பொண்ணை காதலிப்பேனு கனவுல கூட நினைச்சது இல்ல… உன்னோட சீதா தேவி எந்தக் கன்னிமாடத்துல உன்னைப் பாக்குறதுக்காக காத்திருக்காளோனு சித்து கூட அடிக்கடி கிண்டலா சொல்லுவான்… அப்போ நான் சிரிச்சிட்டே போயிடுவேன்… அது எப்பிடி ஒரு பார்வைல காதல் வரும்னு எனக்கு நானே கேட்டுப்பேன்… என்னோட எல்லா கேள்விக்கும் பதிலா வந்த தன்வி இன்னைக்கு என்னோட சரிபாதியா மாறி என் கையோட கை கோர்த்து நிக்கிறா! இது கனவா நிஜமானு சந்தேகமா இருக்கு”

                                                                    -விஸ்வஜித்

வரவேற்பு முடிந்ததும் தன்வியையும் விஸ்வஜித்தையும் மணிகண்டனின் ஃப்ளாட்டில் விட்டு வரச் சென்றனர் சித்தார்த்தும் ஷான்வியும். வழி நெடுக இவர்கள் வளவளவென பேசிக் கொண்டே வர தன்வியும் விஸ்வஜித்தும் விழிகளால் பேசிக்கொண்டனர்.

அப்பார்ட்மெண்ட் தரிப்பிடத்தில் காரை நிறுத்திய சித்தார்த் அவர்களை மின் தூக்கியில் போகச் சொல்லிவிட்டு ஷான்வியுடன் காரை பூட்டிவிட்டுக் கிளம்பினான்.

ஷான்வி தங்களின் தளத்துக்குச் சென்றவள் புதுமணமக்களை வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, சித்தார்த் தாயார் சொன்னபடி அவர்களுக்குத் திருஷ்டி சுற்றும் வழிமுறைகளை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் முடித்த பின்னர் ஹாலில் அமர்ந்திருந்த தன்வியும் விஸ்வஜித்தும் ஷான்வியின் அறையை நோக்கிச் செல்ல ஷான்வி வேகமாக அவர்களைத் தடுத்தாள்.

“தனு நாங்க உன்னோட ரூமை தான் டெகரேட் பண்ணிருக்கோம்.. வீ.கே சாரை அங்க கூட்டிட்டுப் போ”

தன்வி அவளைக் கிண்டலாகப் பார்த்தவள் “எல்லாம் எனக்கும் தெரியும்… தேஜூ ஆல்ரெடி சொல்லிட்டா… உன் ரூமுக்கு இவரைக் கூட்டிட்டுப் போறதுக்கு காரணமே வேற… நான் விஸ்வா கிட்ட நீ அவரோட பயங்கரமான ஃபேன்னு அடிக்கடி சொல்லிருக்கேன்… ஆனா அவரு நம்ப மாட்றாரு… அதான் உன் ரூம் சுவர் முழுக்க நீ ஒட்டிவச்சிருக்கிற, உன்னோட வார்ட் ரோப்ல இருக்கிற இவரோட போட்டோ எல்லாத்தையும் காட்டப்போறேன்”

ஷான்வி போக கூடாது என்பது போல கைகளை நீட்டி வழி மறிக்க விஸ்வஜித் புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தான்.

“அதை பாத்தா எனக்கும் ஃபேன் இருந்திருக்காளேனு சந்தோசப்படுவேன்… ப்ளீஸ் மூவ் அ லிட்டில்” என்றவன் சித்தார்த்தைப் பார்க்க அவன் ஷான்வியை இழுத்துச் சென்று ஹாலின் நடுவில் நிறுத்தினான்.

அதற்குள் தன்வி விஸ்வஜித்தை தங்கையின் அறைக்குள் அழைத்துச் சென்றவள் ஷான்வி வார்த்தைக்கு வார்த்தை வீ.கே பற்றி பேசிய தருணங்களை அவனிடம் விளக்க ஆரம்பித்திருந்தாள்.

விஸ்வஜித்துக்கே ஒரு சின்னப்பெண்ணுக்கு தன் மீது இவ்வளவு அபிமானமா என்ற ஆச்சரியம். அவன் தான் அவளது ரோல்மாடல் என அடிக்கடி தன்வியும் ஷான்வியும் சொல்லக் கேட்டிருக்கிறான். ஆனால் இன்று தான் நேரில் பார்க்கிறான். பார்த்தவனுக்குத் தானும் வாழ்க்கையில் உருப்படியாக எதையோ செய்திருக்கிறோம் என்ற மனதிருப்தி.

அதே மனதிருப்தியுடன் வெளியே வந்தவன் சித்தார்த்திடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவளை வாஞ்சையுடன் பார்த்தபடி தன்வி அவனை பின் தொடர அவர்களிடம் சென்றான்.

அவனைப் பார்த்ததும் ஷான்வி அமைதியாகி விட அவளிடம் “தேங்க்யூ சோ மச்” என்று அவன் சொன்னதும் தன்வியை முறைத்தாள் அவள்.

விஸ்வஜித் அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன் “உனக்கு உன் அக்கா மேல அன்பு ஜாஸ்தினு எனக்கு தெரியும்டா… ஆனா இன்னைக்கு உன்னால நான் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுறேன்… நான் பெருசா எதுவும் சாதிக்கல… ஆனா என்னையும் ஒரு சின்னப்பொண்ணு ரோல்மாடலா நினைச்சு வாழ்க்கைல முன்னேற நினைக்கிறது எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா?” என்று சொல்ல ஷான்விக்கு அத்தருணம் மிகவும் விலைமதிப்பற்றதாக தோன்றியது.

“எனக்கு இப்போவுமே நீங்க தான் ரோல்மாடல் வீ.கே சார்… நமக்கு பிடிச்சவங்களுக்காக நம்ம என்னெல்லாம் செய்யலாம்னு உங்கள பாத்து கத்துக்கிட்டிருக்கேன்… என் அக்காவுக்காக, அவளோட காதலுக்காக நீங்க நிறைய செஞ்சிருக்கிங்க… இந்த வீடாகட்டும், திருப்பூர் லேண்டாகட்டும், நீங்க தலையிடலானாலும் எங்களுக்குக் கிடைச்சிருக்கும்… ஆனா அதுக்கு நாங்க நிறையவே போராட வேண்டியிருந்துருக்கும்… உங்களால தான் இந்த ரெண்டு பிரச்சனையும் தீர்ந்துச்சு… இன்னும் அப்பாவோட கனவு ஒன்னே ஒன்னு தான்… அது நானும் தனுவும் எங்க சொந்தக்கால்ல நிக்கிறது மட்டும் தான்.. தனுவுக்கு ஸ்டடீஸ் முடிஞ்சதும் ஒரு நல்ல ஜாப்ல செட்டில் ஆகிட்டானு அதுவும் முழுமை அடைஞ்சிடும்… இப்போ உங்களை விட நான் தான் சந்தோசமா இருக்கேன்” என்று முகம் விகசிக்க மனதின் நன்றியுணர்ச்சியை வார்த்தையில் வெளிப்படுத்தினாள் ஷான்வி.

இதைக் கேட்ட மற்ற மூவருமே உணர்ச்சிவசப்பட சித்தார்த் சுதாரித்தவன் “சரி! இப்பிடியே பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்? அவங்களுக்கு ப்ரைவேசி வேண்டாமா ஆங்ரி பேர்ட்? இந்த மொக்கையை நாளைக்குக் கூட போட்டுக்கலாம்… இப்போ நம்ம கிளம்புவோம்” என்று எழுந்து கொள்ள அவனைத் தொடர்ந்து ஷான்வியும் எழுந்தாள்.

இருவரையும் பார்த்து குறும்பாய் கண் சிமிட்டிவிட்டு “ஆல் த பெஸ்ட்” என்று நகைத்தவளோடு சித்தார்த்தும் சேர்ந்துகொண்டான். இருவரும் சொல்லிக் கொண்டு கிளம்பிய பின்னர் தன்வி கதவைத் தாழிட்டு வந்தவள் தனது அறைக்குக் கணவனுடன் சென்றாள்.

அறைக்குள் நுழைந்ததும் லேவண்டர் மணம் கமகமக்க அதை உள்ளிழுத்த விஸ்வஜித் “எனக்குப் பிடிச்ச ஃப்ராகிரன்ஸ்” என்று சொல்ல

“இதுவும் ஷானுவோட வேலையா தான் இருக்கும்” என்றாள் அவனது மனைவி பெருமிதம் கலந்த குரலில்.

“ம்ம்… கோவம் எவ்ளோ அதிகமோ அந்தளவுக்கு அவளுக்குப் பாசமும் அதிகம்… அவளுக்கு ஏத்தவனா ஒரு நல்லவன் கிடைச்சா போதும்… சீக்கிரம் அவளையும் குடும்ப இஸ்திரி ஆக்கிடலாம்” என்றவன் மனைவியைத் தனது அணைப்புக்குள் கொண்டு வந்தான்.

“அதுக்குள்ளவா? அவ சின்னப்பொண்ணு தானே விஸ்வா… இன்னும் கொஞ்சநாள் போகட்டும்” என்று சொன்ன தன்வியிடம்

“நீ சொன்னா சரியா தான் இருக்கும் தனு… இனிமே அவளுக்கு நம்ம தான் எல்லா நல்லதையும் அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து பண்ணணும்… எனக்குத் தெரிஞ்சு ஒரு பையன் இருக்கான்… அவனுக்கும் ஷானுக்கும் ஒத்துவருதானு பாப்போம்” என்றான் தம்பியை மனதில் வைத்து.

தன்வி அது யார் என்று புரியாது மீண்டும் ஏதோ சொல்லவர அவளின் உதட்டில் விரல் வைத்து பேசாது தடுத்தவன் அவளது கணவனோ “போதும் தனு! ரொம்ப அதிகமா பேசிட்டோம்… நம்ம இப்பிடி பேசிட்டே இருந்தா நம்மள இங்க அனுப்பி வச்சவங்களோட மோட்டிவ் நிறைவேறப் போறதில்ல… அப்புறம் அவங்க ஏமாந்துட மாட்டாங்களா?” என்று ஹஸ்கி குரலில் பேச தன்வி அவனது குரலில் தெரிந்த காதலில் உருகி கரைந்தவள் அவனுள் புதைந்து போனாள்.

தன்னுள் புதைந்த அவளைத் தனது காதலால் மூழ்கடித்தவன் தனது அணைப்புக்குள் அவளை இறுக்கிக் கொள்ள அவர்களின் திருமண வாழ்வின் அழகிய அத்தியாயம் அந்த இரவில் அழகாய் எழுதப்பட்டது.

***********

திருமண நாளின் களைப்பில் பெரியவர்கள் உறங்கிவிட சிறியவர்கள் மட்டும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அனிகா தனஞ்செயனின் தோளில் சாய்ந்து உறங்கிவிட அவளை அஸ்வினியிடம் ஒப்படைத்தவன் தூங்கவைக்கச் சொல்லிவிட்டான்.

தேஜஸ்வினி சித்தார்த்திடம் “அமெரிக்கா போனதும் வீடு தேடுற வேலை இருக்கு… எதாச்சும் பாத்து வச்சிருக்கிங்களா?” என்று வினவ

அவனோ தேஜஸ்வினியின் முதுகில் சாய்ந்து அமர்ந்து போனை நோண்டி கொண்டிருந்த ஷான்வியைக் காட்டி “அதான் ஷானுவோட ஃப்ளாட் இருக்கே… அங்க ஸ்டே பண்ணிப்பேன்” என்று சொல்ல தனஞ்செயன் அவன் முதுகில் அடித்துவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தான்.

தேஜஸ்வினியும் நமட்டுச்சிரிப்புடன் இருக்க அனிகாவைத் அறையில் தூங்க வைத்துவிட்டு வந்த அஸ்வினியும் அங்கேயே அமர்ந்திருந்து போனை நோண்டிக் கொண்டிருந்த ஷான்வியும் இது புரியாது விழித்தனர்.

பின்னர் தனஞ்செயன் விசயத்தைச் சொல்ல ஷான்வி சித்தார்த்தை பட்பட்டென்று அடிக்க ஆரம்பித்தாள். அவனோ சிரித்தபடி அவளது அடிகளைச் சமாளித்தவன் “ஏன் கோவப்படுற ஆங்ரி பேர்ட்? உன் வீடு இருக்கப்போ நான் எதுக்கு இன்னொரு வீட்டைத் தேடி கண்டுபிடிக்கணும்?” என்று சாதாரணமாக கேட்க

“அடேய்! இத உங்கம்மா கிட்ட சொல்லிப் பாரு! அவங்க உனக்கு விளக்குமாத்தை வச்சு சாமரம் வீசுவாங்க” என்றவள் கடுப்புடன் அவனை முறைத்துவிட்டு எழுந்தாள்.

“இவன் கூட சேர்ந்து பேசுனிங்கனா இவனை மாதிரியே நீங்களும் லூசுத்தனமா பேச ஆரம்பிச்சிடுவிங்க” என்றவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

அவள் சென்றதும் அஸ்வினி சித்தார்த்திடம் “விளையாடாத சித்து! நீ நிஜமாவா சொல்லுற?” என்று கேட்க அவன் அவள் கேள்விக்குப் பதிலுக்குக் கண்ணை மட்டும் சிமிட்டிவிட்டுத் தனஞ்செயனை அழைத்துக் கொண்டுத் தனது அறைக்குள் சென்றுவிட்டான்.

மிச்சமிருந்தவர்கள் தேஜஸ்வினியும் அஸ்வினியும் மட்டுமே. தேஜஸ்வினி தன் மனதை நெருடிய விசயத்தைக் கேட்க இதுவே சரியான தருணம் என்று எண்ணியவளாய் பேச ஆரம்பித்தாள்.

“அஸு! அனி ஏன் தனா சாரை அப்பானு கூப்பிடுறா? நீயும் அதுக்கு எதுவும் சொன்ன மாதிரி தெரியலையே”

“அவளும் பக்கத்துவீட்டுப்பையனும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்… அவன் இவ கிட்ட அப்பானா சூப்பர் ஹீரோ மாதிரி நம்மள கஷ்டம் வர்றப்போ காப்பாத்துவாங்கனு சொல்லிருக்கான்… இவ ஒருநாள் அவங்க வீட்டு நீச்சல்குளத்துல விழுந்தப்போ தனா தான் காப்பாத்துனாரு… அப்போ இருந்து அவரை அப்பானு சொல்லுறா… முதல்ல எனக்கும் சங்கடமா தான் இருந்துச்சு.. நான் அதுக்கு தனா கிட்ட சாரி கேட்டப்போ அவரு அனிகுட்டிய எதுவும் சொல்லாதிங்கனு சொல்லிட்டாரு.. ஆல்ரெடி ஒரு தடவை அவரை நான் கோவத்துல மனக்கஷ்டப்படுத்திட்டேன்… மறுபடி இந்த விசயத்துலயும் நான் ஏதாவது சொன்னா தனாவோட மனசு கஷ்டப்படுமோனு தயக்கம் எனக்கு… அதனால தான் நான் அவளை ஒன்னும் சொல்லுறது இல்ல”

அவள் சொன்னதும் தேஜஸ்வினியிடம் இருந்து பெருமூச்சு வந்தது. தனஞ்செயனும் சரி, தமக்கையும் சரி முதிர்ச்சியானவர்கள். அவர்கள் இருவருக்கும் இடையே ஒத்துப்போகும் விசயம் என்றால் அது அனிகா மட்டுமே. அவள் அவர்களை வாழ்க்கை முழுவதும் இணைத்து வைத்தால் நன்றாக இருக்குமே என ஒரு சராசரி சகோதரியாக தனது தமக்கையின் வாழ்வை பற்றி யோசித்தாள் அவள்.

ஆனால் அஸ்வினிக்கும் சரி தனஞ்செயனுக்கும் சரி; இப்போதெல்லாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் தருணங்களில் வித்தியாசமான உணர்வு எழுந்தது என்னவோ உண்மை!

**************

மறுநாள் காலையில் புதுமணமக்கள் சேர்ந்து வீடு திரும்பினர். தன்வியின் முகத்தில் வெட்கச்சிவப்பு இன்னும் மிச்சமிருக்க ஷான்வியும் தேஜஸ்வினியும் அவளைக் கேலி செய்தபடி இருக்க காலையுணவு கலகலப்பாக முடிந்தது.

இன்னும் இரு தினங்களில் அமெரிக்கா கிளம்பவேண்டுமே! எனவே தன்வி மாமியாரிடம் விஸ்வஜித்துக்குப் பிடித்தவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். கூடவே அன்றைய தினம் மாமியாருடன் சேர்ந்து அவளே மதியவுணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.

இடையிடையே விஸ்வஜித் அழைத்து வைக்க அவனது வழக்கமான குறும்பும் சீண்டல்களுமாய் அன்றைய தினம் அவளுக்கு இனிமையாய் நகர்ந்தது.

கார்த்திக்கேயனும் வள்ளியும் பெண்பிள்ளை இல்லாத குறைக்கு மருமகளைத் தாங்கினர் என்றே கூறலாம். அவளோடு சேர்த்து ஷான்வியையும் பாசமாகவே நடத்தினர்.

அதிலும் வள்ளி ஷான்வியைக் கண்டிக்கும் போது இருவருக்கும் பூர்ணாவின் நினைவு தான் வந்தது.

“அது என்ன காதுல கழுத்துல எதையும் போடாம சுத்துறது? ஒரு ஸ்டட் மாட்டிக்கோ”

“முடிய இப்பிடி பின்னாம போனிடெயில் போட்டுட்டே சுத்துனா ஹேர்ஃபால் அதிகமாகும்… ஒழுங்கா பின்னிப் போடு”

“கொஞ்சம் அதிகமா தான் காய்கறி போட்டுக்கோயேன் ஷானு… வெறும் சாதமும் குழம்பும் சாப்பிட்டா இப்பிடி தான் ஒட்டடை குச்சி மாதிரி இருப்ப”

அவரது ஒவ்வொரு அன்பான அதட்டலும் ஷான்விக்குத் தன் அம்மாவை நினைவுறுத்தியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் அவரிடம் விளையாட்டாக கேலி பேசினாள் அவள்.

“உங்களுக்கு வந்த மருமகளும், வரப் போற மருமகளும் பாவம் ஆன்ட்டி” என்று சொல்வாள். அதைக் கேட்ட வள்ளியோ அவர் மனதுக்குள் ஷான்வியே சின்னமருமகளாக வந்தால் கூட நலம் தான் என்று எண்ணிக் கொண்டார்.

அதே போல அஸ்வினியும் தனஞ்செயனும் அனிகா அடம்பிடித்தாள் என அவளை அழைத்துக்கொண்டு மெரீனாவுக்குச் சென்றவர்கள் மனம் விட்டுப் பேசிக் கொண்டனர்.

அஸ்வினி அவனிடம் வெளிப்படையாகவே தனது பெற்றோர் மற்றும் சகோதரியின் எண்ணப்போக்கு செல்லும் விதத்தைச் சொல்லிவிட்டாள்.

“அனி உங்கள வார்த்தைக்கு வார்த்தை அப்பானு சொல்லுறது அவங்களுக்குச் சந்தேகமா இருக்குதாம் தனா… நம்ம விரும்புறோமானு எங்கப்பா என் கிட்ட ஜாடைமாடையா கேட்டுட்டாரு”

கடற்கரை மணலில் அமர்ந்தபடி அலையில் விளையாடும் அனிகாவைப் பார்த்தபடியே தன்னருகில் அமர்ந்திருந்த அஸ்வினியின் புறம் திரும்பாமலே “ஆமானு சொல்லிடுங்க” என்றான் தனஞ்செயன்.

அவனது பதிலில் அதிர்ந்தவள் “தனா….” என்று அவள் அதிர்ச்சியடையவும் அவள் புறம் திரும்பினான்.

“ஏன் ஷாக் ஆகுறிங்க? வாழ்க்கைல எல்லா மனுசனுக்கும் இருக்கிற பெரிய ஆசை தன்னை ஒரு குழந்தை அப்பானு கூப்பிடுறது தான்… எப்பிடி தாய்மை பொண்ணுங்களுக்கு ஒரு கிப்டோ, அதே போல தான் தன்னோட குழந்தை வாயால அப்பானு கூப்பிடுறது ஒரு ஆம்பளைக்கு கிடைக்கிற கிப்ட்… என்னை முதல்ல அப்பானு கூப்பிட்டது அனிகுட்டி தான்… வேற யாருக்கும் என்னை அப்பானு கூப்பிடுற உரிமைய குடுக்கவேண்டாம்னு நினைக்கேன் அஸ்வினி… நீங்க யோசிங்க… நான் உங்கள கட்டாயப்படுத்தல” என்று தன் முடிவைச் சொல்லிவிட்டான்.

அஸ்வினி எவ்வளவு பெரிய விசயத்தை இவ்வளவு எளிதில் சொல்லிவிட்டானே என்று அவனை ஆச்சரியமாகப் பார்த்துவைத்தாள்.

“கிளம்புவோமா? நாளைக்கு நைட் தான் ஃப்ளைட்… பட் என்னோட திங்க்ஸ் எதுவும் இன்னும் பேக் பண்ணாம இருக்கு… நீங்க ஹூஸ்டனுக்குப் போனதுக்கு அப்புறம் கூட என்னை வச்சக் கண் வாங்காம பாத்துக்கலாம்” என்று அவனது வழக்கத்துக்கு மாறான கேலியுடன் சொன்னவன் அனிகாவை அழைக்கச் சென்றுவிட்டான்.

அதன் பின்னர் அவனுடன் காரில் ஏறி வீட்டுக்கு வந்ததிலிருந்து மறுநாள் விமான நிலையம் செல்லும் வரை அஸ்வினியின் மனதை அவன் சொன்ன விசயங்களே ஆக்கிரமித்திருந்தது.

இம்முறை கமலாவும் குமரனும் கூட வள்ளி கார்த்திக்கேயனுடன் விமான நிலையத்துக்கு இளையவர்களை வழியனுப்ப வந்திருந்தனர். மகள் எப்போதும் போல கண்டுகொள்ளாதது மனதை வருத்தினாலும் பேத்தியிடம் பேசிக் கொண்டிருந்தனர். இலைமறை காயாக அவர்கள் இருவரையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி அனைவரிடமும் பொதுவாகச் சொல்வது போல தனஞ்செயனிடம் கேட்டுக்கொண்டனர்.

அவன் வேறு எதுவும் சொல்லாது தலையை மட்டும் ஆட்டிவைத்தான்.

தேஜஸ்வினி தமக்கையையும் தோழியரையும் பிரிவதில் கண் கலங்கியவள் “சீக்கிரம் நானும் ஒரு வேலைய தேடிக்கிட்டு அமெரிக்காக்கு வந்துடுறேன்… என்னால இங்க தனியா இருக்க முடியாது” என்று சொல்ல

“டோன்ட் ஒரி… உனக்கு அமெரிக்கா மாப்பிள்ளைய பாக்கச் சொல்லிடுவோம்… என்ன அங்கிள் உங்களுக்கு அமெரிக்கா மாப்பிள்ளை ஓகே தானே?” என்ற சித்தார்த்தின் கேலி அவள் முகத்தில் மீண்டும் புன்சிரிப்பை வரவைத்தது.

விமானத்துக்கான அழைப்பு வந்துவிட அறுவரும் பெரியவர்களிடம் விடைபெற்றனர். சென்ற முறை இந்திய நாட்டை விட்டுக் கிளம்பிய போது இருந்த விரக்தி மனநிலை போலில்லாது இம்முறை விமானம் ஏறும் போது மூன்று பெண்களின் மனமும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.