💞அத்தியாயம் 24💞

“காதல் ஒரு விசித்திரமான ஃபீல் தான்… அது மனசுக்குள்ள நுழைஞ்சிடுச்சுனா கிறுக்குத்தனமா நிறைய தாட்ஸ் தோணுது… ஆபிஸ் சிஸ்டம்ல ஒர்க் பண்ணிட்டிருக்கிறப்போ திடீர்னு ஆங்ரி பேர்ட பாக்கணும்னு தோணுது… ஈவினிங் கிளாஸ் நடந்துக்கிட்டிருப்போ புரபசருக்குப் பதிலா அவளே நின்னு கிளாஸ் எடுக்கிற மாதிரி ஹலூசினேசனை உண்டாக்குது… உண்மையாவே காதல் நோய் வந்துடுச்சுனா உலகமே எடக்கு மடக்கா தான்டா தெரியுது”

                                                                       -சித்தார்த்

ஷான்வி எண்ணெய் வாணலி இல்லாது வெறும் பார்வையில் சித்தார்த்தை வறுத்துக் கொண்டிருந்தாள். உள்ளே அஸ்வினி அனிகாவுக்குச் சாப்பாடு ஊட்டுவது தெரிந்து அவனது கரம் பற்றி வெளியே அழைத்துச் சென்றவள் கண்ணில் தீயுடன் அவனைப் பார்க்க சித்தார்த்தோ அவளது கரம் தன் கரத்தைப் பற்றியிருந்ததில் ஒன்பதாவது சொர்க்கத்தில் இருந்தான்.

அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து கரத்தை உதறியவள் படபடவென பொறியத் தொடங்கினாள்.

“யாரை கேட்டு நீ நம்ம ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணுவோம்னு அவங்க கிட்ட சொன்னடா?”

“யாரை கேக்கணும் ஆங்ரி பேர்ட்? உனக்குத் தான் என்னை பிடிக்குமே!”

தோளை அலட்சியமாய் குலுக்கி கைகளை விரித்து அமர்த்தலாய் உரைத்தவனை வெட்டவா குத்தவா என பார்த்துவைத்தாள் ஷான்வி. இவன் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை தன்வி எப்படி எடுத்துக் கொண்டாளோ என்ற கவலை அவளுக்கு.

“எக்ஸ்கியூஸ் மீ! பிடிச்சவன் கூடலாம் ரொமான்ஸ் பண்ண முடியாதுய்யா… சோ இப்பிடி கன்னாபின்னானு பேசி என் மானத்த வாங்காத தெய்வமே!”

“சரி! அப்போ மேடம் யாரு கூட ரொமான்ஸ் பண்ணுறதா ஐடியா?”

“எனக்குனு ஒரு இளிச்சவாயன் இந்த உலகத்துல பிறந்திருப்பான்… நான் எப்பிடிப்பட்ட முசுடா இருந்தாலும் அவனுக்கு என்னை பிடிக்கும்… நான் சண்டை போட்டாலும் அவன் என்னை புரிஞ்சிப்பான்… என்னை யாருக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டான்… அப்பிடி ஒருத்தனுக்கு நான் காத்திருக்கேன்… அதை விட்டுட்டு உன் கூட…” என்றவளின் இதழில் ஆட்காட்டிவிரலை அவன் வைத்து அமைதிப்படுத்தவும் ஷான்வியின் பேச்சு தடைபட்டது.

அவளது விரிந்த கண்களின் அழகைப் பார்த்தபடியே “அந்த ஒருத்தன் நானா இருக்கணும்ங்கிறது என்னோட ஆசை… என்னோட கனவுனு கூட சொல்லலாம்! நீ பெரிய அழகி, உன் அழகைப் பாத்து நான் மயங்கிட்டேனு ரீல் சுத்துற ஐடியா எனக்கு இல்ல… ஏன்னா காதலிக்கிறதுக்கு அழகா இருக்கணும்னு அவசியம் இல்ல… எனக்கு உன்னோட படபடனு வெடிக்கிற பட்டாசு குணம் பிடிச்சிருக்கு… அக்கா மேல வச்சிருக்கிற கேர், சுயமரியாதைய விட்டுக்குடுக்காத பிடிவாதம், ஸ்மார்ட்டா எல்லா சிச்சுவேசனையும் ஹேண்டில் பண்ணுற நேர்த்தினு உன்னை அடிச்சுக்க ஆளே கிடயாது ஷானு பேபி! தட்ஸ் ஒய் ஐ லவ் யூ” என்றவன் இறுதியில் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியும் விட்டான்.

ஷான்வி எப்படி அவனது முதல் அணைப்பில் உறைந்து போய் சிலையாய் நின்றாளோ அதே போல அவனது காதலைச் சொன்ன இக்கணத்திலும் சிலையாய் உறைந்தாள். இத்தனை நாட்கள் அவனது பூடகமான பேச்சுக்கள் எல்லாம் விளையாட்டு என எண்ணியிருந்தவளுக்கு அவன் மனதில் காதலை வைத்துக்கொண்டு தான் பழகியிருக்கிறான் என்பது தெரிந்ததும் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியவில்லை.

அவள் புரியாது விழிப்பதைப் பார்த்தவன் ஒரு புன்சிரிப்புடன் அவளை நெருங்கி அவள் காதில் “அமைதியா யோசிச்சு பாரு… நீ எதிர்பாக்குற அந்த யாரோ ஒருத்தன் நானா இருந்தா எப்பிடி இருக்கும்னு” என்று இரகசியம் பேசும் பாவனையுடன் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அவன் கிளம்பி வெகுநேரம் கழித்தும் அவனது இரகசியக்குரல் காதில் ஒலிப்பது போன்ற பிரமை அவளுக்கு. அன்றைய இரவில் உணவும் சரியாக உண்ணவில்லை. உறக்கமும் வரவில்லை.

அஸ்வினியின் நிலையும் அவ்வாறே! மகளது அப்பா என்ற ஒரு அழைப்பு அவளுக்குள் உண்டாக்கிய குட்டி பிரளயம் அவளை உறங்கவிடவில்லை.

இவ்வாறிருக்க தனஞ்செயனோ தன்னை அனிகா ‘அப்பா’ என்று அழைத்தக் கணம் சிலிர்த்துப் போனவன் அக்காரணத்தால் அஸ்வினி தன்னை தவறாக எண்ணிக் கொள்வாளோ என்று நினைத்து மருகிப் போனான்.

இந்த மூன்று இதயங்கள் குழப்பத்தில் உறக்கமின்றி தவிக்க மற்றொரு மூன்று இதயங்களோ சந்தோசத்தில் துள்ளின. திருமணம் உறுதியான மகிழ்ச்சியில் தன்வி, விஸ்வஜித்தும் வள்ளியுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டனர். காதலைச் சொல்லிவிட்ட மகிழ்ச்சியில் சித்தார்த்தும் விழி மூடாமல் வருங்கால கனவுகளைக் கண்ட வண்ணம் இருந்தான்.

சொன்னபடி வள்ளியும் கார்த்திக்கேயனும் குடும்ப ஜோதிடரிடம் திருமணநாளை குறித்து வாங்கினர். அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு அதை தெரிவிக்க ஹோட்டலில் விடுமுறை சொல்லிவிட்டுக் கிளம்பினர் நால்வரும்.

அனிகா முதல்முறையாக இந்தியா செல்லப் போவதால் குதித்துக் கொண்டிருந்தாள். கூடவே தனஞ்செயன் வருவானா என்ற கேள்வி வேறு! இப்போதெல்லாம் அவள் அவனை அப்பா என்று விளித்துவைக்க முதலில் வினோதமாய் நோக்கிய சித்தார்த்தும் ஷான்வியும் பின்னர் அதை ஏற்றுக்கொண்டனர். தனஞ்செயனும் அவ்வாறே!

அஸ்வினி தான் மகளின் இந்த அழைப்பால் சங்கடப்பட்டுப் போனாள். தயக்கத்துடன் அவனிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டாள்.

“எதுக்கு மன்னிப்பு கேக்குறிங்க மேடம்? அவ சின்னப்பொண்ணு தானே… விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறம் மாத்திப்பா”

“இல்ல தனா! எனக்கு சங்கடமா இருக்கு” என்று சொல்லிவிட்டுத் தலை குனிந்து கொண்டாள். அதைக் கண்ட தனஞ்செயன் தன் சிகையைக் கோதிக் கொண்டான்.

“உங்களுக்கு அவ என்னை அப்பானு கூப்பிட்டது சங்கடமா இருக்குதா? இல்ல என்னைப் போய் அப்பானு கூப்பிட்டாளேனு சங்கடமா இருக்குதா? கரெக்டா சொல்லுங்க” என்றவனின் குரலில் சற்று காரம் ஏறியிருந்தது.

அஸ்வினி இது வரை அவன் அப்படி பேசி அறியாததால் பதில் சொல்ல தெரியாது திணற அவனே தொடர்ந்தான்.

“இதுல சங்கடப்பட தேவையில்லனு நான் சொல்லுவேன்… சின்ன குழந்தையோட பேச்சுக்கு இவ்ளோ தூரம் நம்ம யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல மேடம்… நீங்க இந்தியா கிளம்புறதுக்கு ரெடியாகுங்க”

அதன் பின்னர் அஸ்வினி அதை பற்றி பெரிதாய் எண்ணவில்லை. தானும் மகளும் இந்தியாவுக்குக் கிளம்ப பெட்டி அடுக்க ஆரம்பித்தாள் அவள்.

அதே நேரம் ஷான்வி மீண்டும் சென்னையில் தங்கள் வீட்டில் கால் பதிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாகத் தயாரானாள். கூடவே சித்தார்த்தின் அன்புத்தொல்லை வேறு நினைவுக்கு வரவும் கொஞ்சம் அலைக்கழிப்புமாக பயணத்துக்குத் தயாரானாள்.

விமானநிலையம் வரை கிளாராவின் காரில் வந்து இறங்கினர் ஐவரும். கிளாரா தனது பணி காரணமாக இந்தியா வர முடியாமல் போனதற்கு இன்னும் வருத்தமாக இருக்க ஷான்வி தான் அவளை சமாதானப்படுத்தினாள்.

இடையிடையே தன்னைத் தழுவிய சித்தார்த்தின் காதல் பார்வைகளைக் கவனியாதது போல இருந்தவளுக்கு விமானத்தில் அவனுக்கு அருகில் தான் இருக்கை கிடைத்தது. அதே நிலை தான் தனஞ்செயனுக்கும் அஸ்வினிக்கும். தங்களுக்கு நடுவே அனிகாவை அமர்த்திக் கொண்டவர்கள் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தனர்.

ஆனால் சித்தார்த்தால் சும்மா இருக்க முடியவில்லை. ஷான்வியிடம் அவன் பேச்சு கொடுக்க முயல, எவ்வளவு நேரம் தான் அவளும் அமைதி காப்பாள்!

“நீ கொஞ்சம் சைலண்டா வர்றியா சித்து? ஏன் இவ்ளோ பேசுற நீ? அதிகமா பேசுறவங்களாம் வெத்துவேட்டுனு எங்கப்பா சொல்லுவாரு… அது உனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு”

“என்னால சாப்பிடாம கூட இருக்க முடியும்… ஆனா பேசாமலோ சிரிக்காமலோ இருக்கவே முடியாது… யூ நோ ஒன் திங்க்? உன் கிட்ட மனசு விட்டுப் பேசுறதுக்கு சான்ஸ் கிடைக்காதானு எவ்ளோ நாள் வெயிட் பண்ணுனேன் தெரியுமா? இன்னைக்குத் தான் சான்ஸ் கிடைச்சிருக்கு… சோ நான் பேசியே ஆகணும்… ப்ளீஸ்! காது குடுத்துக் கேளு ஷானு”

“முடியாது முடியாது முடியாது! நீ சொல்லுற எதையும் கேக்க முடியாது” என்றவள் தனது விரல்களால் காதைப் பொத்திக் கொண்டாள்.

அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கை அவனுக்குச் சிரிப்பை மூட்ட பேசுவதை விடுத்து இப்போது அவளை விழியெடுக்காமல் பார்க்க ஆரம்பித்தான் அவன்.

எப்போதும் போல ஜீன்சும், டீசர்ட்டும் தான் அணிந்திருந்தாள். போனிடெயிலில் கூந்தலை அடக்கியிருந்தவள் வழக்கம் போல முகப்பூச்சு ஏதுமின்றி எளிமையின் திருவுருவாக தோற்றம் பற்றி அக்கறை எதுவும் எடுத்துக்கொள்ளாது இருந்தாள்.

காதுகளை இறுக்கமாக மூடியிருந்தவள் திரும்பி அவனை என்னவென்று ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவ பதிலுக்கு கண் சிமிட்டவும் அவள் பட்டென்று அவனை அடித்தாள்.

“அது என்ன? எப்போ பாத்தாலும் கண் அடிச்சிட்டே இருக்க? உனக்கு நார்மலா இருக்கவே தெரியாதா?”

“அது என்னோட மேனரிசம்… தொட்டில் பழக்கம் மாதிரி கூடவே பிறந்ததும்மா”

“அஹான்! யாராச்சும் ஒரு பொண்ணு கிட்ட இதுக்காகவே நீ அடி வாங்க போற”

“நோ சான்ஸ்! நான் இப்போதைக்கு உன்னைப் பாத்து மட்டும் தான் கண் அடிக்கிறேன்… அது என்னனு தெரியல, நான் கண் அடிச்சா நீ ஒரு செகண்ட் உன்னோட கோழிமுட்டை கண்ணை விரிச்சு பாத்துட்டு டக்குனு முகத்தைத் திருப்புவ… ஐ லைட் தட் மொமண்ட்.. அதை அடிக்கடி பாக்கணும்னு தான் நான் கண் அடிக்கிறேன்… அதுவும் உன்னைப் பாத்து மட்டும் தான்”

“செலக்டிவ் அம்னீசியா மாதிரி இது செலக்டிவ் விங்கிங்னு சொல்ல வர்றே… அதானே! போதும்டா… இந்த மாதிரி பேசணும்னு ரூம் போட்டு யோசிப்பியோ?”

“உன்னை பாத்தாலே இந்த மாதிரி டயலாக் அருவியா கொட்டுது ஷானு”

“பாத்து கொட்டச் சொல்லு… இல்லனா உன் மண்டை வீங்கிட போகுது”

இதைச் சொல்லிவிட்டு ஷான்வி தன் தலையில் அடித்துக் கொண்டாள். இப்படி எல்லாம் வாதிடும் பழக்கமே அவளுக்குக் கிடையாது. முகத்தைச் சுருக்கி தன்னருகில் அமர்ந்திருப்பவனைப் பார்த்தவள் அவனது உதடு குறும்புச்சிரிப்பு ஒன்றை வெளியிடத் தயாராவதை அறிந்தவளாய் வழக்கம் போல அவனிடம் வாதிட இயலாது சலித்துக் கொண்டாள்.

இவனுடன் சேர்ந்து தான் தனது இயல்பு மாறிவிட்டது போல! இனி இவனை பார்க்கவே கூடாது! கண்ணை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

ஆனால் அதற்கெல்லாம் அசருபவன் சித்தார்த் இல்லையே! அவள் விழி மூடிய சில நிமிடங்களில் மீண்டும் அவளிடம் பேச்சு கொடுத்து, வாதம் செய்து ஒரு வழி ஆக்கிவிட்டான். அவர்களுக்குப் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த தனஞ்செயனும் அஸ்வினியும் அவர்களின் பேச்சைக் கேட்டு மனதிற்குள் நகைத்துக் கொண்டனர்.

இருவரின் வாதமும் சென்னை வந்து இறங்கிய பிறகும் முடியவில்லை. இப்போதைய வாதத்தின் தலைப்பு தனஞ்செயன் சென்னையில் தங்க வேண்டியது எங்கே? சித்தார்த்தின் வீட்டிலா? ஷான்வியின் வீட்டிலா?

இருவரும் தத்தம் இல்லத்துக்கு அவனை அழைக்க அவனோ இருவரையும் மறுக்கும் வழியறியாதவனாய் எங்கே செல்வது என்ற குழப்பத்துடன் நின்றான்.

சித்தார்த் தனஞ்செயனின் கையைப் பற்றியவன் “ப்ரோ! நீங்க என்னோட கிளம்புங்க… இவ கிடக்குறா” என்று தன்னுடன் இழுக்க, ஷான்வி அவனது மற்றொரு கையைப் பற்றிக் கொண்டாள்.

“நீங்க இவனோட போக கூடாதுண்ணா… நான் தானே உங்க குட்டிம்மா… என் கூட நம்ம வீட்டுக்கு வாங்க” என்று தன்னுடன் இழுத்தாள் அவனை.

தனஞ்செயன் இருவருக்குமிடையே மாட்டிக்கொண்டு விழிக்க அஸ்வினி சிரிப்பை அடக்கிக் கொண்டு “ஷானு! சித்து தான் ஆசையா அவர கூப்பிடுறான்ல… தனா அங்க போகட்டும்! விடுடா” என்று சொல்ல

“இதுக்குத் தான் ஒரு பெரியமனுசி வேணுங்கிறது.. வாங்க ப்ரோ,.. நம்ம போவோம்” என்று தனஞ்செயனை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றான் சித்தார்த்.

“அதுல்லாம் முடியாதுக்கா… இவன் வீட்டுல ஆல்ரெடி கூட்டம் ஜாஸ்தி… தனா அண்ணா போனா அங்க இடம் இருக்காது” என்றாள் ஷான்வி சட்டென்று.

“என்னது கூட்டமா? அடியே நாலு பேரு உனக்கு கூட்டமா? போடி… ப்ரோ என் கூட தான் வருவாரு”

“ஏய்! ‘டி’ போட்டுக் கூப்பிட்டேனா பல்ல உடைச்சு கையில குடுத்துடுவேன்… அண்ணா என் கூட தான் வருவாருடா… உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ”

“என்னைய சொல்லிட்டு நீ மட்டும் ‘டா’ போடுவியா? ப்ரோ என் கூட தான் வருவாரு… அஸுக்கா என்ன பாத்துட்டே இருக்க? இவளை கூட்டிட்டுப் போ”

அஸ்வினி காலில் விழாத குறையாக கெஞ்சி தனஞ்செயன் சித்தார்த்துடன் செல்வதற்கு ஷான்வியைச் சம்மதிக்க வைத்தாள்.

அவன் கிளம்பும் முன்னர் அனிகா தனஞ்செயனின் கையைப் பற்றிக் கொண்டவள் “எங்க கூட வர மாட்டிங்களாப்பா?” என்று ஏக்கமாய் கேட்க

“இல்லடா அனிகுட்டி… இப்போ ஷானுக்காவோட வீட்டுல நீ, அம்மா, சித்தி, தனுக்கா எல்லாரும் இருக்கணும்னா ஸ்பேஸ் பத்தாதுல்ல… அப்போ அப்பா எங்க தூங்க முடியும்?” என தனஞ்செயன் ராகம் பாட அனிகா யோசிக்க ஆரம்பித்தாள்.

“ஆமாப்பா… நீங்க வேற ரொம்ப ஹைட்டா இருக்கிங்க… நீங்க தூங்குறப்போ கால் இடிக்கும்… அப்போ நீங்க அங்கிள் கூடவே போங்க… நானும் மம்மியும் ஷானுக்கா வீட்டுக்குப் போறோம்” என்று தீர்ப்பு வழங்கியதும் ஷான்வி இறங்கிவந்தாள்.

சித்தார்த் அனிகாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டவன் “செல்லம்டா நீ! உன் வயசுக்கு நீ மத்தவங்க பிரச்சனைய புரிஞ்சுக்கிற… கொஞ்சம் உன் ஷானுக்காவுக்கு அட்வைஸ் பண்ணுடா… அப்போவாச்சும் அவளுக்குப் புரியுதானு பாப்போம்” என்று போகிற போக்கில் ஷான்வியைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தான்.

அதன் பின்னர் அஸ்வினியையும் அனிகாவையும் ஷான்வியுடன் கால்டாக்சியில் ஏற்றிவிட்ட பின்னர் இரு ஆடவர்களும் கிளம்பினர்.