💘கண்மணி 7💘

ஹோட்டல் டெய்சி கிராண்டே

  நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஒன்று. மேல்தட்டு மக்கள் மட்டுமே வந்து செல்லக் கூடிய இடமும் கூட. ஆறடுக்குகளில் கண்ணாடியாய் மின்னிய கட்டிடமும், பரந்த வாகன தரிப்பிடமும், பிரமிக்க வைக்கும் அதன் உள்கட்டமைப்பும் காண்போரைத் திகைக்க வைக்கும்.

அங்கே தான் பவானி மற்றும் நவீனின் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது. அமைச்சர் செழியனின் தரப்பில் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அவர்களைத் திருமணத்துக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் அவர். எனவே அவரது உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

ஜெகத்ரட்சகன் தனது தொழில் நண்பர்களையும் அஞ்சனாதேவியின் குடும்பத்தையும் மட்டுமே அழைத்திருந்தார். அது போக அருண் தனது நண்பர்களுக்கு அழைப்பு வைத்திருந்தான். அமைச்சரின் மகனது நிச்சயவிழா என்பதால் ஊடகத்துறையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பிடத்தக்கவர்களே அழைக்கப்பட்டிருந்தாலும் ஹோட்டலின் மேரேஜ் ஹால் அமைந்திருந்த இரண்டாவது தளம் நிரம்பி வழிந்தது. எங்கு நோக்கினும் பட்டும் பகட்டும் மட்டுமே ஜொலித்தது.

ஜெகத்ரட்சகன் புன்முறுவலுடன் வந்தாரை வரவேற்றவர் சுவாமிநாதனும் அன்னபூரணியும் குடும்பத்தோடு வரவும் கர்வத்துடன் அவர்களை வரவேற்றார்.

அவரது பார்வையிலேயே “வெறுங்கையோட பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி வந்த நான் இப்போ எந்த உயரத்துல இருக்கேன்னு பாருங்க” என்று நிரூபிக்கும் வெறி தொக்கி நின்றது. ஆனால் மகளின் நிச்சயம் என்பதால் உண்டான மகிழ்ச்சி அதனோடு கலந்திருந்ததால் வெளிப்பார்வைக்கு வித்தியாசம் தெரியவில்லை.

சுவாமிநாதனுக்கு அமைச்சர் செழியன் மீது அப்படி ஒன்றும் நல்லெண்ணம் இல்லை. ஏனெனில் பெற்றப்பிள்ளையாய் வீட்டில் உரிமையாய் வலம் வந்த மூத்த மருமகன் இன்று எதிராளியாய் நிற்பது அவரால் தானே என்ற ஆதங்கம் சுவாமிநாதனுக்கு.

இருப்பினும் பேத்தியை விரும்பி மணக்க கேட்ட நவீன் மீது அவருக்குத் தப்பெண்ணம் எதுவுமில்லை. தங்களது கணக்கு தான் தப்பாகப் போய் விட்டது; பேத்தியாவது அவளை விரும்புபவனுடன் மகிழ்ச்சியாய் வாழட்டுமென எண்ணியராய் மனைவி மக்கள் மற்றும் பேத்திகளோடு அங்கே வருகை தந்திருந்தார்.

வழக்கம் போல அரிஞ்சயன் வரவில்லை. சிவசங்கரும் வரப் பிரியப்படவில்லை. எனவே லோகநாயகியும் ஞானதேசிகனும் செண்பகாதேவியுடன் வானதி மற்றும் பாகீரதியை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.

தங்களை இரு கரம் கூப்பி வரவேற்ற ஜெகத்ரட்சகனுக்கு மரியாதைக்கு வணக்கம் செலுத்தினார் ஞானதேசிகன். லோகநாயகியோ “நான் போய் அண்ணியையும் பவாகுட்டியையும் பாத்துட்டு வந்துடவா?” என்று கேட்க

“என்னம்மா தங்கச்சி இதுக்குலாம் கேக்கணுமா? இதே ஃப்ளோர்ல லாஸ்டா இருக்கிற ரூம்ஸ்ல லெப்ட் ஹேண்ட் சைட்ல தான் பவா ரெடியாயிட்டிருக்கா… செண்பா, அத்தை நீங்களும் போய் பாருங்க… உங்கள பாத்தா பவாகுட்டி சந்தோசப்படுவா” என்று புன்னகையுடன் அவர்களை அனுப்பிவைத்தவர் அங்கே நின்றிருந்த ஞானதேசிகனையும் சுவாமிநாதனையும் நோக்கினார்.

“வாழ்க்கை எனக்குக் குடுத்த வாய்ப்பை நான் பயன்படுத்தி எப்பிடி வளந்திருக்கேனு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே… மாமா, தேசிகானு உங்க காலைச் சுத்தி வந்த ஜெகன் இல்ல… தி கிரேட் லாயர் ஜெகத்ரட்சகன்” என்று பெருமிதமும் கர்வமுமாய் உரைத்தவரை அதே பெருமிதத்துடன் எதிர்கொண்டனர் தந்தையும் மகனும்.

“ரொம்ப சந்தோசம் ஜெகா… இது நியாயமான முறைல நீ அடைஞ்ச வளர்ச்சினா அதுல அதிகமா சந்தோசப்படுறது நாங்களா தான் இருப்போம்” என்று பொடி வைத்துப் பேசிவிட்டுச் சுவாமிநாதன் நகர்ந்துவிட ஞானதேசிகன் ஒரு நொடி நின்றவர்

“இந்தச் செழியனோட கேரக்டரைப் பத்தி பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடியே உனக்குத் தெரிஞ்சும் பவாகுட்டிய அவரோட மகனுக்கு மேரேஜ் பண்ணி வைக்க எப்பிடி ஒத்துக்கிட்டனு எனக்குப் புரியல… உன்னோட தொழில் தர்மம் வேற மாதிரி… ஆனா இது பொண்ணோட வாழ்க்கை… கொஞ்சம் கூட யோசிக்கலயா நீ?” என்று ஆதங்கத்துடன் கேட்டுவிட்டுத் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டார்.

அவர் சொன்னது ஜெகத்ரட்சகனின் நெஞ்சில் சுருக்கென தைத்தது. அவருக்கும் அவரது தாய்மாமன் குடும்பத்துக்கும் ஆகாது தான். அவர்கள் நீதி நியாயம் நேர்மை என பேசும் வசனங்களில் அவருக்குச் சிறிதும் உடன்பாடு கிடையாது. ஆனால் தன் பெண்ணின் வாழ்க்கை குறித்து தான் ஏன் அந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை என சிந்தித்தவரின் நெற்றியில் யோசனைக்கோடுகள்.

ஆனால் அவரது மைந்தன் அருண் அந்தக் குழப்பத்தைத் தீர்த்துவிட்டான். தான் நவீனைப் பற்றி விசாரித்துவிட்டதாக அவன் சொன்னதும் தான் ஜெகத்ரட்சகனுக்கு மூச்சே வந்தது.

அதன் பின் நல்லநேரத்தில் லக்னப் பத்திரிக்கை வாசிக்கவும் தட்டு மாற்றிக் கொள்ளவும் மணப்பெண்ணையும் மணமகனையும் வரச் சொல்லவும் முதலில் நவீன் நண்பர்கள் புடை சூழ வந்தவன் மணமேடையில் அவன் குடும்பத்தார் அருகில் அமர்ந்தான்.

அப்போது உறவுப்பெண்களுடன் வந்து கொண்டிருந்த பவானியை ஆர்வத்துடன் நோக்கிய அவனது விழிகள் அவளருகில் வந்த பாகீரதியைக் கண்டதும் அதிர்ந்து போய் நிலைகொள்ளாது தவிக்க அவளும் நவீனை வெட்டுவது போல நோக்கி பவானியிடம் ஏதோ சொன்னபடி நடந்து வர பவானியின் முகத்தில் குழப்பரேகைகள் உதயமானது.

அவர்களும் அமர்ந்துவிட சரியாய் நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கும் நேரத்தில் மேரேஜ் ஹாலில் சளசளப்பு உண்டானது. அனைவரின் பார்வையும் வாயிலை நோக்க அங்கே சிவசங்கர் காவல்துறை அதிகாரிகளுடன் வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் ஜெகத்ரட்சகனின் முகம் மாறிவிட காவல்துறை அதிகாரிகள் நேரே அமைச்சர் செழியனிடம் சென்றவர்கள் நவீனின் முன்னாள் காதலி அவன் மீது புகார் கொடுத்திருப்பதாக கூற அங்கிருந்த விருந்தினர்கள் மத்தியில் சளசளப்பு எழுந்தது.

அதற்கு சாட்சி என்ன என்று சீறியபடி கேட்ட செழியனின் முன்னே தானே சாட்சி என வந்து நின்றாள் பாகீரதி.

“என்னோட ஃப்ரெண்ட் மோனிகாவ தான் இந்த நவீன் லவ் பண்ணுனான்… அவங்களுக்குப் பிரேக்கப் ஆனப்போ மனசளவுல உடைஞ்சு அவ கொஞ்சநாள் வெளியூர் போயிட்டா… அப்போ தான் இவன் என் கூட பழக ஆரம்பிச்சான்… மோனிகா மேல தான் தப்புனு என்னை நம்ப வச்சான்… ஒரு நாள் அவனோட போன் கேலரிய நான் பாத்தப்போ அதுல மோனிகாவோட பிரைவேட் வீடியோஸ் இருந்துச்சு… அதைக் காட்டி கேட்டதுக்கு காதலிக்கிறப்போ இதுல்லாம் தப்பில்லனு என் கிட்ட ஆர்கியூ பண்ணுனான்… அதனால தான் நான் இவனைப் பிரேக்கப் பண்ணுனேன்… இருந்தாலும் இவனை மாதிரி ஒரு கேவலமான ஜந்துவ காதலிச்சோமேனு ஒவ்வொரு நாளும் அசிங்கப்பட்டுட்டே வாழுறேன்”

அவளின் கண்ணீரைக் கண்டதும் சுவாமிநாதனும் அன்னபூரணியும் அதிர்ந்து போய் நின்றனர். இத்தனை நாளும் பேத்தி வெறித்தப் பார்வையுடன் கடனே என வாழ்ந்தது இவனால் தானா என்ற அதிர்ச்சி அவர்களுக்கு.

அதே நேரம் ஜெகத்ரட்சகன் அமைச்சர் செழியனைச் சீற்றத்துடன் பார்த்தவர் அருணிடம் “நீ விசாரிச்சது கூட பொய் ஆயிடுச்சேடா” என்று வெதும்ப நவீன் தான் செய்தது தவறே இல்லை என வாதிட்டான்.

“அங்கிள் நீங்க இவங்க சொல்லுற எதையும் நம்பாதிங்க… இந்த பாகிக்கு எப்போவுமே அவ தான் பேரழகினு நினைப்பு… அவளோட பிஹேவியர் பிடிக்காம நான் பிரேக்கப் பண்ணுனேன்… அதுக்குப் பழி வாங்க என்னென்னமோ பொய் சொல்லுறா”

சிவசங்கர் இவ்வளவு நேரம் பொறுமையாய் நின்றவன் “வாயை மூடுங்க மிஸ்டர் நவீன்.. உங்களுக்கு எதிரா வீடியோ எவிடென்ஸ் இருக்கு… பாகியும், மோனிகாவும் நேர்ல சாட்சி சொல்ல ரெடியா இருக்காங்க… இவ்ளோ ஏன்? இங்க பேசுற எல்லாமே ஃபேஸ்புக்ல லைவா போயிட்டிருக்கு” என்று கர்ஜிக்கவும் அமைச்சரும் அவரது மைந்தனும் திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல விழித்தனர்.

ஜெகத்ரட்சகனிடம் பார்வையைத் திருப்ப அவரோ விட்டால் நவீனைக் கொலை செய்யுமளவுக்கு ஆத்திரத்துடன் இருந்தார். இப்போது ஏமாறவிருந்தவள் அவரது மகள் அல்லவா! அந்த ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தவர் தன் சார்பில் பேச மாட்டார் என உணர்ந்தனர் செழியனும் நவீனும்.

காவல்துறை அதிகாரிகளிடம் தன் அதிகாரத்தைக் காட்டினால் முகப்புத்தக நேரலையில் தன் முகத்திரை கிழிந்துவிடுமே என்று பயந்தவர் வெஞ்சினத்துடன் சிவசங்கரையும் ஜெகத்ரட்சகனையும் நோக்கினார்.

காவல்துறை அதிகாரிகள் நவீனைக் கைது செய்ய சிவசங்கர் நவீனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என பாகீரதியிடம் வாக்களிப்பதைப் பார்த்த செழியன் மனதுக்குள் “இதுக்குலாம் நீ ரொம்ப வருத்தப்படுவ சிவா” என்று கறுவிக் கொண்டார்.

உறவினர் முன்னே பெருத்த அவமானத்துடன் அங்கிருந்து அவர் வெளியேற அனைவரின் பார்வையும் ஜெகத்ரட்சகனை நோக்கியது. அவர் அமைச்சரின் மகனால் அடைந்த ஏமாற்றத்தையும் சபை முன்னே மகளைக் காட்சிப்பொருளாக்கி விட்ட வேதனையையும் ஒருங்கே அனுபவித்தவராய் நின்றிருந்தார்.

அஞ்சனாதேவி அழ ஆரம்பிக்கவும் வெறி கொண்டவராய் மனைவியை நோக்கியவர்

“கடைசில உன் குடும்பத்து ஆளுங்க அவங்க புத்திய காட்டிட்டாங்க பாத்தியா? இவங்களுக்கு நான் யாருனு புரிய வைக்கணும்னு நினைச்சேன்… ஆனா இவங்க யாருமே இன்னும் மாறலனு நான் தான் இப்போ புரிஞ்சுக்கிட்டேன் அஞ்சு” என்றார் வெறுப்புடன்.

அவரது குற்றச்சாட்டில் சுவாமிநாதனின் குடும்பத்தினர் அதிர்ந்தனர். இவ்வளவு நேரம் சபை நடுவே தான் ஒரு காட்சிப்பொருள் ஆனதால் வெட்கிப் போய் நின்ற பவானியே திடுக்கிட்டாள்.

வானதி இப்பிரச்சனையை வேடிக்கை பார்க்கும் விருந்தினரிடம் கை கூப்பி அவர்களுக்கு வாயிலைக் காட்ட கூட்டம் மெதுவாய் கலைந்தது.

தந்தையிடம் வந்த பவானி “அப்பா அந்த நவீன் பண்ணுனதுக்கு இவங்க என்ன செய்வாங்க? பாகியோ சிவாவோ வரலனா எனக்கும் அவனுக்கும் இன்னைக்கு என்கேஜ்மெண்ட் முடிஞ்சுருக்குமே… அவங்க நமக்கு நல்லது தான் பண்ணிருக்காங்க” என்று சொல்ல அருணும் அதையே ஆமோதிக்க

“உங்க ரெண்டு பேருக்கும் விவரம் பத்தல… இதோ நிக்கிறானே சிவா… இவன் நான் பாத்து வளந்தவன்… இவன் சபை முன்னாடி சொன்ன பொய்யால தான் பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி நம்ம சாந்திவனத்தை விட்டு வெளிய வந்தோம்… இப்போவும் இவனால தான் உன் நிச்சயம் நின்னு நம்ம குடும்பமே அவமானப்பட்டு நிக்கிறோம்… இந்த விசயம் தெரிஞ்ச உடனே இவன் போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்திருந்தா இப்பிடி எல்லார் முன்னாடியும் நம்ம அசிங்கப்பட்டிருப்போமா? எல்லாமே இவனோட பிளான் தான்… நம்ம அசிங்கப்படணும்னே இன்னைக்கு நவீனை அரெஸ்ட் பண்ண வச்சிருக்கான்” என்றார் ஜெகத்ரட்சகன்.

சிவசங்கர் அவரை உறுத்து விழித்தவன் “எண்ணம் போல தான் வாழ்க்கை அமையும் ஜெகத்ரட்சகன் சார்… நீங்க பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்குச் செஞ்ச பாவத்தால தான் உங்கப் பொண்ணு இன்னைக்கு அசிங்கப்பட்டு நிக்கிறா! பணக்காரன்னதும் விசாரிக்காம பொண்ணை கல்யாணம் பண்ணிக் குடுக்க ரெடியான உங்க அவசரபுத்தியும், பேராசையும் தான் இது எல்லாத்துக்கும் காரணம்” என்று வெகுண்டெழ அவனை ஞானதேசிகனும் லோகநாயகியும் சமாதானப்படுத்தினர்.

அருண் சிவசங்கரிடம் “நான் விசாரிச்சேன்… ஆனா எல்லாருமே அவனைப் பத்தி நல்லவிதமா தான் சொன்னாங்க… அதனால எங்கப்பாவ குறை சொல்லாத சிவா” என்றான் இறுகிப் போன குரலில்.

ஜெகத்ரட்சகனின் கோபம் எல்லையைக் கடக்க “அவனுக்கும் அவன் குடும்பத்து ஆட்களுக்கும் நம்ம அழிவுல தான் நிம்மதி அருண்… அவங்கள எதிர்த்து வந்து இன்னைக்கு நான் பேர் சொல்லுற அளவுக்கு வளந்ததுல உண்டான பொறாமைய தீர்த்துக்க இது அவங்களுக்குக் கிடைச்ச வாய்ப்பு… இதால என் பொண்ணு பேர் தான் கெட்டுப் போகும்… அப்பிடி கெட்டுப் போகணும்னு தான் இந்தப் பெரிய மனுசன் பேரன் கிட்ட சொல்லி கூட்டிட்டு வந்தாரோ என்னவோ” என்று சுவாமிநாதனை நோக்கி விரலை நீட்ட மொத்தக் குடும்பமுமே அதிர்ந்தனர்.

சுவாமிநாதனோ தமக்கை மகனின் நியாயமற்ற குற்றச்சாட்டு கோபத்தினாலும் அறியாமையாலும் உண்டான ஒன்று என்பதை புரிந்து கொண்டாலும் அவமானத்தில் சுருங்கி போன முகத்துடன் நின்ற பவானியையும் பாகீரதியையும் நோக்கும் போது நெஞ்சுக்குள் சுருக் சுருக்கென வலி உண்டாக மார்பை பிடித்தவர் அப்படியே சரியத் தொடங்க

“தாத்தா” என்ற கூவலுடன் பேரன்கள் அவரைத் தாங்கிக் கொள்ள “என்னாச்சுங்க” என்ற அழுகையுடன் அன்னபூரணி வேதனையில் நிற்க அஞ்சனாதேவியும் செண்பகாதேவியும் பதறிப்போயினர்.

“ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிடுவோம்ணா” என்று வானதி சகோதரனிடம் சொல்ல, பவானி கொண்டு வந்த தண்ணீரை சுவாமிநாதனின் முகத்தில் தெளித்துக் கொண்டிருந்த அருண் அவரை ஒரு கையால் தூக்கிக் கொண்டான். சிவசங்கர் மற்றொரு கையால் அவரை அணைத்தபடி நிற்க இருவருமாய் சேர்ந்து அவரை கீழ்த்தளத்துக்குக் கொண்டு வந்தனர்.

அதற்குள் கீழே சென்றுவிட்ட பாகீரதியும் பவானியும் காரை கிளப்பித் தயாராய் வைத்திருக்க அவரை காரில் அமர்த்தியவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

கண்ணீரும் கம்பலையுமாக அன்னபூரணி வேதனையில் மூழ்கியிருக்க அவருக்கு ஆறுதல் சொன்னபடியே தங்கை மற்றும் அண்ணியுடனும் வானதியோடும் கிளம்ப எத்தனித்தார் அஞ்சனாதேவி.

ஜெகத்ரட்சகன் “அஞ்சு” என்று உறுமவும் கணவரை வெட்டுவது போல நோக்கியவர் “இன்னைக்கு உங்களோட அஜாக்கிரதையால அகம்பாவத்தால நான் பெத்தப் பொண்ணும் என்னைப் பெத்தவரும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க… இன்னும் உங்களுக்குப் பழிவெறி அடங்கலயா? என் அப்பா, உங்க தாய்மாமா உங்களுக்கும் அண்ணனுக்கும் என்னைக்காச்சும் வித்தியாசம் பாத்திருப்பாரா? உங்க பேராசையால நீங்க பண்ணுன தப்பை கேள்வி கேட்ட எங்க அப்பா, அண்ணன் கிட்ட கோவப்பட்டு வீட்டை விட்டு வந்திங்க… உங்களை காதலிச்ச பாவத்துக்கு நானும் உங்களோட வந்தேன்… ஆனா இன்னைக்கு நீங்க பண்ணுன காரியத்தை நான் மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்” என்று வார்த்தைகளை அனலாய் கக்கியவர் அன்னை மற்றும் அண்ணிகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

தொடரும்💘💘💘