💘கண்மணி 16💘

சாந்திவனம்…

கரிய வானப்போர்வையில் சிதறிக் கிடந்த நட்சத்திர மூக்குத்திகளில் தனக்குப் பொருத்தமானதை தேர்ந்தெடுக்க நிலாப்பெண் தோன்றிவிட்டாள். வீட்டின் பூஜையறையில் லோகநாயகி விளக்கேற்றிவிட்டுச் சிவபுராணம் படித்துக் கொண்டிருந்தார். இது வழக்கமாய் நடப்பது தான்.

அதே நேரம் வேலையாட்கள் வீட்டுக்குச் சென்றுவிட தங்களுக்கு இரவுணவு தயாரிக்கும் வேலையில் ஆழ்ந்திருந்தார் செண்பகாதேவி. வானதி திருமணத்துக்கு எடுத்திருந்த விடுப்பு முடிந்ததால் மறுநாள் அலுவலகம் செல்லத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

பாகீரதியோ அவளது அறையிலிருந்த பிரெஞ்சு விண்டோவின் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு கண் மூடி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அன்னபூரணியும் சுவாமிநாதனும் தோட்டத்தில் அவர்களுக்காகவே போடப்பட்டிருந்த கல் பெஞ்சுகளில் வேலையாட்கள் தண்ணீர் ஊற்றி குளிர்வித்திருக்க அதில் அமர்ந்து அங்கே வீசிய தென்றலை ரசித்தபடியே பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.

பவானி தனது அன்னையும் அண்ணனும் பரிசாக அளித்தப் பொருட்களை அதன் இடத்தில் வைத்துவிட்டுத் தோட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

மேனியைத் தழுவும் இளந்தென்றலும் கண்ணுக்கு இதமாய் குளிர்நிலவும் நாசியை வருடும் மல்லிகை மலர்களின் நறுமணமும் அவளது இயல்பான ரசிகமனதுக்கு விருந்தாய் அமைந்தது.

கல் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த தாத்தா பாட்டியின் அருகில் அமர்ந்தவள் “ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் பேசுறப்போ டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று கேட்டுக் கண்ணைச் சிமிட்ட

“வாயாடி… இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… இந்த வாயெல்லாம் என் பேரனுக்கு முன்னாடி எடுபடாதுடி” என்று அன்னபூரணி பேரனின் புராணத்தை ஆரம்பிக்கவும் பவானி ஆட்காட்டிவிரலால் செவிமடலைத் தடவிக் கொண்டாள்.

“எனக்கு ஒன்னும் செலக்டிவ் மியூட்டிங் டிசீஸ் இல்ல பாட்டி… உன் பேரன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? அதுவுமில்லாம நான் உன் பேரனை என் முந்தானைல முடிஞ்சு வச்சிருக்கேனாக்கும்” என்று அமர்த்தலாய் உரைக்க சுவாமிநாதனுக்கும் அன்னபூரணிக்கும் அவளது பேச்சு வேடிக்கையாய் இருக்க அவளைப் பேச வைத்து நேரத்தைப் போக்கினர் இருவரும்.

“ரெண்டு பேரும் ஒரு வாரம் பத்து நாள்னு எங்கயாச்சும் வெளியூர் போயிட்டுவரலாமே?” என்ற சுவாமிநாதனின் தேனிலவு யோசனையைக் கேட்டு அன்னபூரணியின் முகம் மலர்ந்தாலும் பவானி உதட்டைப் பிதுக்கினாள்.

“அஹான்… உங்க பேரன் ஹனிமூன் வந்துட்டுத் தான் மறுவேலை பாப்பாரு… ஏன் நாதன் நீங்க வேற காமெடி பண்ணுறிங்க… எனி வே, எனக்கு அப்பிடி ஆளரவம் இல்லாத இடத்துக்கு உங்க சிடுமூஞ்சி பேரன் கூட போய் டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல”

“இங்க நாங்க எல்லாரும் இருக்கோமேடா… உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க கொஞ்சம் தனிமை தேவை பவாகுட்டி”

வாஸ்தவமான பேச்சு தான். ஆனால் பவானிக்கு வாய்த்த கணவனோ காதலிக்கும் நேரத்தில் கூட ‘இந்தக் காதல் ஒத்து வராது’ என்ற வசனத்தைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் அடிக்கடி உபயோகித்தவனில்லை.

இப்போதோ காதலிக்க நேரமில்லை என்று பழைய திரைப்படத்தின் பெயரைச் சொல்லி அவளை எரிச்சலூட்டி ரசிக்கும் வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகிறான்.

இங்காவது தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி என பெரியவர்கள் இருக்கிறார்கள். அரட்டையடித்து கலாய்க்க பாகீரதியும் வானதியும் இருக்கிறார்கள். இவர்கள் சொல்வதைப் போல தேனிலவுக்குச் சென்றால் இருவரும் அங்கே சென்றும் சண்டை தான் போடப் போகிறோம் என சலித்துக் கொண்டாள்.

ஆனால் தாத்தாவும் பாட்டியும் இதை அறியவில்லையே! காலையில் காதல் கணவனைப் போல உரிமையுடன் அவள் முந்தானையில் கை துடைத்தது, மதியம் அவளைக் கேலி செய்தது இதையெல்லாம் வைத்து பேரனும் பேத்தியும் காதலில் கசிந்துருகி இல்லறத்தை ஆரம்பித்து விட்டதாக கனவுக்கோட்டை கட்டும் பெரியவர்களிடம் அது உண்மை இல்லையென மறுக்கும் தைரியம் அவளுக்கு இல்லை.

“தாத்தா நான் உங்க எல்லாரோடவும் இருக்க தான் ஆசைப்படுறேன்… இன் ஃபேக்ட் இதைத் தான் உங்க பேரனும் விரும்புவாரு… நானே இப்போ தான் உங்களோட நிறைய நேரம் ஸ்பெண்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்… உங்கள விட்டுட்டு ரொம்ப நாள் வெளியூர்ல என்னால இருக்க முடியாது தாத்தா” என்றவள் சுவாமிநாதனைக் கட்டிக் கொள்ள அவரும் அன்னபூரணியும் பேத்தியின் பாசத்தில் நெக்குருகிப் போயினர்.

அந்நேரத்தில் சாந்திவனத்துக்குள் நுழைந்த கார் தரிப்பிடத்தில் நிற்க அதிலிருந்து இறங்கிய ஞானதேசிகன் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் தாயாரிடமும் தந்தையிடமும் சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு உள்ளே செல்வது வழக்கம் என்பதால் அன்றும் அவர்களை நோக்கி நடைபோட்டவர் இருவரும் பவானியுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அன்னையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.

அன்னபூரணி மகனின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவர் “வேலை அதிகமா தேசிகா?” என்று வாஞ்சையாய் கேட்க ஞானதேசிகன் ஆமென்று தலையசைக்க இருவரையும் நமட்டுச்சிரிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள் பவானி.

“என்ன மருமகளே சிரிப்பெல்லாம் பலமா இருக்கு?” என்று ஞானதேசிகன் வினவ

“ஒன்னுமில்ல மாமா… உங்களை பாத்ததும் என்னோட சின்னவயசு நியாபகம் வந்துடுச்சு… நான் ஸ்கூல் போயிட்டுத் திரும்புனதும் இப்பிடி தான் அம்மா கிட்ட வந்து உக்காந்துப்பேன்… நான் அப்போ குட்டிப்பொண்ணு… ஆனா மாமா இத்தனை வயசுக்கு அப்புறமும் அம்மா பிள்ளையா இருக்காரே… சரியான மம்மாஸ் பாய்” என்று கேலி செய்ய சத்தம் போட்டுச் சிரித்தார் ஞானதேசிகன்.

கூடவே அன்னையைத் தோளோடு அணைத்துக் கொண்டவர் “எத்தனை வயசு ஆனாலும் எங்கம்மாக்கு நான் பையன் தானே” என்று சொல்ல பவானி அதற்கு போட்டியாக சுவாமிநாதனைக் கட்டிக் கொண்டாள்.

“ஓகே மாமா! பூரணி இஸ் யுவர்ஸ்… அண்ட் நாதன் இஸ் மைன்” என்று சலுகையாய் சொல்லும் போதே சிவசங்கர் வந்துவிட்டான்.

“இப்பிடி மாமனாரும் மருமகளும் தாத்தா பாட்டிய உங்களுக்கே சொந்தமாக்கிட்டா நான் என்ன பண்ணுறது?” என்றான் கேலியாக.

“நீங்க டூ லேட்… சோ உங்க மம்மி கிட்ட போய் செல்லம் கொஞ்சிக்கோங்க சார்” என்று உதட்டைச் சுழித்தவள் சட்டென நிறுத்திவிட்டு

“பட் கொஞ்சநேரம் கழிச்சுப் போங்க… அத்தை லார்ட் சிவா கிட்ட எதோ பாட்டுலாம் பாடி அப்ளிகேசன் போட்டுட்டிருக்காங்க” என்று கண்ணை உருட்டிச் சொன்ன அழகில் ஒரு கணம் தன்னை மீறிச் ரசித்தான் சிவசங்கர்.

கோலிகுண்டு விழிகள் ஆயிரம் கதைகள் பேச அதைத் தொடர்ந்து சிரிப்பில் விரிந்த செவ்விதழ்களில் நிலைத்தன அவனது விழிகள். ஒரு நிமிடம் தான்! அன்றொரு நாள் பார்ட்டியில் மகள் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததாகச் சொன்ன ஜெகத்ரட்சகனின் கூற்று நினைவுக்கு வரவும் தன்னிலை அடைந்தவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டான்.

பவானி அவன் செல்வதைப் பார்த்து உதட்டைச் சுழித்தவள் மீண்டும் தாத்தா பாட்டி மாமாவுடன் வளவளக்க ஆரம்பித்தாள்.

************

அஞ்சனாவிலாசம்

மூக்குக்கண்ணாடியைப் போட்டு தன்னெதிரே விரிந்திருந்த வழக்கின் கோப்பு ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார் ஜெகத்ரட்சகன். அவர் எதிரே சட்டம் பற்றிய பல்வேறு புத்தகங்கள் இறைந்து கிடந்தன. நேரம் செல்வதை அறியாதவராய் அதிலேயே மூழ்கி இருந்தவர் இரு முறை பணியாளிடம் காபி கொண்டு வருமாறு பணித்து அருந்திவிட்டார்.

நேரம் சென்று கொண்டே இருக்க அவர் இரவுணவுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அஞ்சனாதேவி பொறுமை இழந்தார். அத்தோடு அருண் வேறு “ஒருவேளை தாத்தா வீட்டுக்கு நம்ம போனதுல அப்பாக்கு கோவம் இருக்குமோ?” என்று சொல்லிவிட சட்டென்று எழுந்த அஞ்சனா விறுவிறுவென மாடியில் இருக்கும் ஜெகத்ரட்சகனின் அலுவலக அறைக்குள் புயலாய் நுழைந்தார்.

கணவரின் கையிலிருந்த கோப்பை மூடி வைத்தவர் கையைக் கட்டியபடியே கணவரை முறைக்க ஜெகத்ரட்சகனோ மனைவியின் இந்தக் கோபத்துக்கான காரணம் புரியாதவராய் மூக்குக்கண்ணாடியைக் கழற்றியபடி அவரை ஏறிட்டார்.

“உங்களுக்கு இன்னும் எவ்ளோ நேரம் உபவாசம் இருக்கிறதா ஐடியா?”

“உபவாசமா? அஞ்சும்மா நான் கேஸ் ஃபைலை…”

“பேசாதிங்க… இன்னைக்கு நானும் அருணும் அப்பா வீட்டுக்குப் போனதுல உங்களுக்கு ரொம்ப கோவம்… அதானே சாப்பிட வராம இருக்கிங்க?”

“இப்பிடி உன் கிட்ட சொன்ன அறிவாளி யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“வேற யாரு! உங்க மகன் தான்… உங்க இரத்தம்ல… அதான் ஈசியா உங்க மனசுல உள்ளதை கண்டுபிடிச்சிட்டான்… என்னால தான் அன்னைக்கும் உங்களைப் புரிஞ்சிக்க முடியல… இன்னைக்கும் புரிஞ்சிக்க முடியல…”

ஜெகத்ரட்சகன் மனைவியின் பேச்சைக் கேட்டு உதடு பிரிக்காது புன்னகைத்தவர் “எனக்கு யாரு மேலயும் கோவம் இல்ல அஞ்சும்மா… ஒர்க் பிசில நான் டைம் ஆனத கவனிக்கல.. அவ்ளோ தான்… இதுக்கு ஏன் இவ்ளோ தூரம் யோசிக்கிற? இப்போ என்ன டின்னர் ரெடியாயிடுச்சு… நான் சாப்பிடணும்… அவ்ளோ தானே! வா… மூனு பேரும் சேர்ந்தே சாப்பிடுவோம்” என்று இலகு குரலில் சொல்லவும் அஞ்சனாதேவி சற்று அமைதியானார்.

அதன் பின்னர் மூவருமாய் சேர்ந்து உணவருந்தும் போதே “நீங்க வாங்கிட்டுப் போனதுலாம் அவங்களுக்குப் பிடிச்சிருந்துச்சா?” என்று பொத்தாம் பொதுவாக கேட்ட ஜெகத்ரட்சகனை ஏறிட்ட அஞ்சனா

“ம்ம்.. பிடிச்சுதுனு சொன்னா” என்றார் மொட்டையாக.

அருண் தாயாருக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் இந்த இலைமறைக் காயான உரையாடலை கேட்டபடியே சாப்பிட்டவன் கை கழுவ எழுந்திருக்கையில்

“எதுக்குப்பா உங்களுக்குச் சம்பந்தமில்லாதவளை பத்தி விசாரிக்கிறிங்க? கல்யாணம் பண்ணிக் குடுத்ததோட நம்ம கடமை முடிஞ்சுதுனு சொன்னிங்களே” என சொல்லிவிட்டு நகர அதற்கு மேல் ஜெகத்ரட்சகன் பவானியைப் பற்றி அஞ்சனாதேவியிடம் விசாரிக்கவில்லை.

****************

இரவுணவுக்குப் பின்னர் தனது அறைக்குத் திரும்பிய பவானி குளித்து இலகுவான இரவுடைக்கு மாறியவள் தூக்கம் வரும் வரை போனை நோண்ட ஆரம்பித்தாள்.

இப்போதைக்கு சிவசங்கர் வரமாட்டான். அவன் தாத்தாவின் அலுவலக அறையில் தந்தையிடம் ஏதோ வழக்கு விசயமாகச் சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பவானி போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் சிவசங்கர் உள்ளே வரவும் அவனை ஏறிட்டுவிட்டு மீண்டும் கேமில் கவனமானாள்.

சிவசங்கர் அவளைக் கண்டுகொள்ளாதவனாய் குளியலறைக்குள் நுழைந்தவன் தானும் குளித்து உடை மாற்றிவிட்டு வெளியேறும் போது பவானி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.

“நாளைக்கு மானிங் ஃப்ளைட்லயா? ஓகேடா… பொக்கே வேணுமா? என் மேரேஜுக்கு வராதவனுக்கு நான் ஏன்டா பொக்கே குடுத்து வெல்கம் பண்ணணும்? ஓவரா வாய் பேசுனா உனக்கு உருட்டுக்கடை ட்ரீட்மெண்ட் தான் மகனே கிடைக்கும்… சரி… ம்ம்… குட் நைட்”

அவள் பேசிவிட்டு நிமிரும் போது அவளெதிரே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான் சிவசங்கர். வாடா போடா என்று பேசுமளவுக்கு நெருக்கமானவன் யாராக இருக்க கூடுமென்ற கேள்வி அவனது சுழித்தப் புருவங்களின் கீழே இருந்த விழிகளில் தொக்கி நிற்க அதைக் கண்டுகொள்ளாதவளாய் உறங்க ஆயத்தமானாள் பவானி.

“உருட்டுக்கட்டை ட்ரீட்மெண்ட் வாங்க ரெடியா இருக்கிற அந்த அப்பாவி ஜீவன் யாரு?”

இலகுவான குரலில் கேட்டாலும் நீ என் கேள்விக்குப் பதில் அளித்துத் தான் ஆகவேண்டுமென்ற கட்டளை தொனி தான் அதில் பவானிக்குத் தெரிந்தது. அதை அலட்சியப்படுத்தியவள் தலையணையை எடுக்க சிவசங்கர் எரிச்சலுற்றவன் அதைப் பிடுங்கிக் கொண்டான்.

“என்ன பண்ணுறிங்க சிவா? எனக்குத் தூக்கம் வருது… இரிட்டேட் பண்ணாம பில்லோவ குடுங்க… இல்லனா உங்க பில்லோவ நான் எடுத்துப்பேன்”

“பில்லோவ எடுத்துக்கிட்டா மட்டும் உன்னை தூங்க விட்டுருவேனா? ஒழுங்கா நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு”

“உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல சிவா… ஆமா என் கிட்ட இந்தக் கேள்விய கேக்குறதுக்கு நீங்க யாரு?”

“நான் உன்னோட ஹஸ்பெண்ட்… அக்னிசாட்சியா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன்”

“அஹான்! கேட்டதும் எனக்கு புல்லரிச்சு போச்சுங்க.. ஹஸ்பெண்டாம் ஹஸ்பெண்ட்… என்னைக் காதலிக்கவோ சமாதானப்படுத்தவோ நேரம் இல்லாத ஹஸ்பெண்ட்… இந்தப் பேச்சுக்குலாம் ஒரு குறைச்சலும் இல்ல”

பவானி அலட்சியமாய் நொடித்துக் கொண்டவள் அவனது தலையணையை எடுத்துக் கொண்டாள். படுக்க முயன்றவளைக் கரம் பற்றி இழுத்துத் தனது கரவளையத்துக்குள் கொண்டு வந்தவன் அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள பவானி கடுப்புடன் நிமிர்ந்தாள்.

“இப்போ என்ன? அவன் யாருனு தெரியணுமா? அவன் என்னோட ஃப்ரெண்ட்… அவனை நதிக்குக் கூட தெரியும்… அவனோட நேம் ஈஸ்வர்… அவன் யூ.எஸ்ல ஒர்க் பண்ணுறதால நம்ம கிராண்ட் வெட்டிங்கை அட்டெண்ட் பண்ண நேரம் கிடைக்கலையாம்… அதான் இப்போ லீவ் கிடைச்சதும் நம்மள நேர்ல பாத்து விஷ் பண்ண வர்றான்… டீடெய்ல் போதுமா?” என்று கேட்கவும்

“மச் பெட்டர்… இதை நான் ஒழுங்கா கேட்டப்போவே சொல்லிருக்கலாமே” என்று பதிலுக்குக் கேலியாய் கேட்டவனின் விழிகளில் குறும்புத்தனம் நிறைந்திருக்க பவானி அவனது கரங்களை விலக்கித் தள்ளினாள்.

“இனிமே நீங்க அன்வான்டடா என்னை டச் பண்ணக் கூடாது சிவா” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி அவள் சொன்னதைக் கேட்டு சத்தமாக நகைத்தான் அவன்.

“ஏன்? ஐ ஹேட் யூனு சொன்ன வாயால மறுபடியும் ஐ லவ் யூனு சொல்லிடுவோமோனு பயமா இருக்கா பவா?”

“உங்களுக்கு இவ்ளோ ஓவர் கான்பிடென்ஸ் ஆகாது மிஸ்டர் சிவசங்கர்… நான் எதையும் வேண்டானு முடிவு பண்ணிட்டேன்னா வாழ்க்கை முழுக்க வேண்டான்னு தான் அர்த்தம்… உங்களை ஒரு தடவை காதலிச்சு என் சுயமரியாதைய இழந்தது போதும்… மறுபடியும் அதே தப்பைச் செய்வேனு நீங்க எப்பிடி எக்ஸ்பெக்ட் பண்ணுனிங்க?”

சிவசங்கர் கண்ணில் கேலியுடன் உச்சு கொட்டியவன் “வாவ்… உன்னோட டயலாக் டெலிவரி சூப்பரா இருக்கு பவா… லாயரோட பொண்ணுல்ல… எனி ஹவ், நீ பழசை ஈசியா மறந்துட்டு மூவ் ஆன் ஆகுற டைப்னு எனக்கும் நல்லா தெரியும்… சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்… மத்தபடி மறுபடியும் நீ ஐ லவ் யூனு உருகுனா இந்தத் தடவை சத்தியமா நான் மயங்க மாட்டேன்” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காதவனாய் விளக்கை அணைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்.

பவானிக்கோ இந்த முறை மயங்க மாட்டேன் என்றால் முன்னர் இவன் தனது காதலில் மதி மயங்கி இருந்தானா என்ன என்ற கேள்வி உள்ளத்தில் உதயமானது. கூடவே “அப்பிடியே மயங்கிட்டாலும்… இவன் சும்மா எதுகை மோனைக்குப் பேசிருப்பான்” என்று நொடித்துக் கொண்டபடி தூங்க முற்பட்டாள்.

தொடரும்💘💘💘