💘கண்மணி 13💘

மறுநாள் விடியல் பவானிக்கு இயல்பாய் அமைந்தது. அவள் எழுந்திருக்கும் போது சிவசங்கர் அங்கில்லை. மெதுவாக எழுந்தவள் அமைதியாக சில நிமிடங்கள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்து பால்கனியை அடைந்தவள் வீட்டைச் சூழ்ந்திருந்த மரங்களையும் தோட்டத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றாள்.

அந்த வீட்டின் வயது தான் அந்தத் தோட்டத்துக்கும். அதனாலேயே விருட்சங்கள் வீட்டின் உயரத்தைத் தொட்டிருந்தன. வெயிலின் சூடு சிறிது கூட அந்தப் பங்களாவின் மீது படாது தடுத்துக் கொண்டிருந்த அம்மரங்களைத் தங்களது வீடுகளாய் மாற்றிக் கொண்டிருந்த பறவைகளின் ரீங்காரம் கேட்பதற்கு இனிமையாக இருந்தது.

அப்போது தான் அந்தச் சிரிப்புச்சத்தம் கேட்டது. அது சுவாமிநாதனின் சிரிப்பே தான். இத்தனை நாட்களுக்குப் பின்னர் மனம் விட்டுச் சிரிக்கிறார் போல என்று எண்ணியவளாய் தோட்டத்தில் அவரைத் தேடியவளின் பார்வையில் சுவாமிநாதனோடு அவளது கணவனும் பட்டுவிட்டான்.

தாத்தாவும் பேரனும் தோட்டத்தைச் சுற்றி நடந்தபடி என்னவோ வேடிக்கை கதைகள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர் போல. அதைக் காணும் போது இத்தனை வருடங்களில் தனக்கும் தன் அண்ணனுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லையே என்ற ஏக்கம் மெதுவாய் அவள் மனதைச் சூழ அங்கிருந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.

பின்னர் குளித்து உடை மாற்றிவிட்டு வந்தவள் உடமைகளை எடுத்து அவளுக்கென சிவசங்கர் ஒதுக்கிய வார்ட்ரோபில் அடுக்கிய போது அவளது ஆல்பம் ஒன்று கையில் சிக்கியது.

அதில் பவானியுடன் பெரும்பாலான புகைப்படங்களில் சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவர் ஜெகத்ரட்சகனே. மகளை விட்டுக்கொடுக்க விரும்பாத தந்தையின் பிடிவாதக்காரப் பாசம் அந்தப் புகைப்படத்திலேயே தெள்ளத்தெளிவாய் தெரிந்தது.

தந்தையின் நினைவில் இரு சொட்டுக் கண்ணீர் விட்டவள் அவரிடம் பேசிப் பார்க்கலாமா என தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் அடுத்த நொடி அவரது நேற்றைய கோபத்தை மறந்து விட்டு மொபைலில் அழைத்தாள்.

முதலில் முழு ரிங்க் போய் கட் ஆனது. பின்னர் மீண்டும் முயற்சிக்கையில் அழைப்பு ஏற்கப்பட்டு மறுமுனையில் ஜெகத்ரட்சகனின் குரல் கரகரப்பாக ஒலித்தது.

“ஹலோ”

பவானி சந்தோசத்தில் மனம் நிறைய “அப்பா நான் பவானி… ஏன்பா எனக்குக் கால் பண்ணல? எனக்கு உங்கள ரொம்ப தேடுதுப்பா… ப்ளீஸ்பா.. நான் வீட்டுக்கு வரவா?” என்று குழந்தை போல கேட்க மறுமுனையில் ஒரு நிமிடம் அமைதி நீடித்தது.

பின்னர் “எனக்கு பவானினு யாரையும் தெரியாதும்மா… நீங்க எதோ ராங் நம்பருக்குக் கால் பண்ணிருக்கிங்க… போனை வைங்க… இனிமே இந்த நம்பர்ல இருந்து எனக்குக் கால் வராதுனு நம்புறேன்” என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்துவிட்டுப் போனை வைத்துவிட்டார்.

ஆனால் பவானியோ மனம் பொறுக்காதவளாய் “அப்பா ப்ளீஸ்பா என் கூட பேசுங்க… அப்பா” என்று அவர் இணைப்பைத் துண்டித்ததைக் கூட அறியாதவளாய் இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.

அப்போது யாரோ அவள் தோளில் கை வைக்க திரும்பாமலே அது யாரென அறிந்தவள் வேகமாய் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்க அவளது கரத்தைப் பற்றிக் கொண்டபடி முன்னே வந்தான் சிவசங்கர்.

அழுது சிவந்திருந்த அவளின் வதனத்தைத் தன் கூரியவிழிகளால் ஆராய்ந்தபடி உச்சுக் கொட்டியவன் “ரொம்ப திட்டிட்டாரோ?” என்று கேட்க பவானியின் முகத்தில் அழுகையும் அவமானக்குன்றலும் சேர்ந்து உதயமானது.

அதை அடக்கிக் கொண்டபடியே “அத பத்தி உங்களுக்கு என்னவாம்? உங்க வேலை எதுவோ அத மட்டும் பாருங்க சிவா” என்று அலட்சியமாய் பேசிவிட்டு நகர முயல அடுத்த நொடி அவள் அவனது கரவளையத்துக்குள் அடைக்கலமாகியிருந்தாள்.

“வாட் த ஹெல் ஆர் யூ டூயிங்? லீவ் மீ… இப்போ என்னை விடலனா நான் பெரியத்தைய கூப்பிடுவேன் சிவா”

கண்ணை உருட்டி குரலில் உஷ்ணத்துடன் மிரட்டியவளைப் பார்த்து அவன் இதழில் குறுநகை ஒன்று எட்டிப் பார்த்தது.

“தாராளமா கூப்பிட்டுக்கோ மேடம்… ஹூ கேர்ஸ்? உனக்குத் தெரியாத நாசூக்கு நாகரிகம்லாம் எங்கம்மாவுக்கு நல்லாவே தெரியும்… சோ நீ கூப்பிட்டாலும் அவங்க இங்க வர மாட்டாங்க”

“தேவையில்லாம பேசாம முதல்ல என்னை விடுங்க”

“அப்போ நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு”

என்னவென விழிகளால் வினவியவளை ஆழ்ந்து நோக்கியவன் “இனிமே நீ மிஸ்டர் ஜெகத்ரட்சகனுக்குக் கால் பண்ணி ‘ஐ மிஸ் யூ டாடி’னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டேனு சத்தியம் பண்ணு” என்று அழுத்தம் திருத்தமாய் உரைக்க பவானி எதுவும் சொல்லாது அவனது இறுக்கமான கரங்களை பிரிப்பதிலேயே கவனமாய் இருந்தாள்.

அவள் பதிலளிக்கவில்லை என்றதும் அவன் இன்னும் இறுக்கமாய் அணைக்கவும் அவனது தாடையில் மோதி நின்ற தலையை உயர்த்தி

“யூ ஆர் கிராசிங் யுவர் லிமிட் சிவா… நான் எந்தப் பிராமிசும் பண்ணுறதா இல்ல… எங்கப்பா கிட்ட நான் பேச எவனோட பெர்மிசனும் எனக்குத் தேவையில்ல… சோ இந்த ஆர்டர் போடுற வேலையை நீங்க வேற யாரு கிட்டவாச்சும் வச்சுக்கிட்டா நல்லது” என்று எரிச்சலுடன் மொழிந்துவிட்டு அவனை விட்டு விலக முயல

“எவனோட பெர்மிசனுமா… ம்ம்… மரியாதை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு எப்போ வாடா போடானு பேசுறதா ஐடியா மேடம்? என்ன சொன்ன? ஆர்டர் போடுற வேலைய வேற யாரு கிட்டவாச்சும் வச்சுக்கணுமா? கம் ஆன் பவா! இனிமே ஆர்டர் போடுறதோ மிரட்டுறதோ சண்டை போடுறதோ எதுவா இருந்தாலும் அது நம்ம ரெண்டு பேருக்குள்ள தான்” என்று சொல்லவும் பவானி அவனை உறுத்து விழித்தாள்.

“யாரோ காதலிக்கிறதுக்கு நேரமே இல்லனு சொன்னாங்க… அதைச் சொன்ன மனுசனுக்கு இப்போ டெம்ப்ரரி மெமரி லாஸ் வந்துடுச்சு போல” என்று எகத்தாளமாய் சொன்னவளை அழுத்தமாய் நோக்கிவிட்டுத் தன்னை விட்டு விலக்கி நிறுத்தினான்.

“இப்போவும் அதயே தான் சொல்லுறேன்… எனக்கு இருக்கிற வேலைல உன்னை லவ் பண்ணவோ, அழுறப்போ சமாதானப்படுத்தவோ நேரம் இல்ல.. அதான் அவர் கிட்ட பேசவே வேண்டாம்னு சொல்லுறேன்.. உனக்குக் செல்ப் ரெஸ்பெக்ட் கொஞ்சமாச்சும் இருந்தா இனிமே அவர் கிட்ட பேச மாட்டேனு நம்புறேன்”

சொல்லிவிட்டு அவன் நகர்ந்துவிட தந்தையின் பாசம், கணவனின் காதல் இரண்டுமே கிட்டாமல் போன வருத்தத்தில் கலங்கிப் போனாள் பவானி.

மெதுவாய் கீழே இறங்கி வந்தவளை ஆவலுடன் எதிர்கொண்டனர் அவளது பாட்டியும் தாத்தாவும். அவர்களின் கடல் போன்ற அன்பு அவள் முன்னே விரிந்திருக்கையில் தந்தை மற்றும் கணவனின் புறக்கணிப்பு கூட இப்போது மறந்து போனது.

ஓடிச் சென்று அவர்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டவள் இருவர் கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட அதைக் கண்டு சிரித்தபடி அவர்களுக்கு எதிரே அமர்ந்தார் ஞானதேசிகன்.

“அடேங்கப்பா பேத்தியோட செல்லம் கொஞ்சுறப்போ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முகத்துல தவுசண்ட் வாட்ஸ் பல்ப் தான் எரியுது” என்று கேலியாய் உரைத்தவரின் மனம் நிறைந்திருந்தது.

பவானி இருவரையும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள் “அவங்க சந்தோசத்தோட சுவிட்ச் என் கிட்ட தான் இருக்கு மாமா” என்று கண்ணைச் சிமிட்டியபடி சொல்ல அவளின் வாயரட்டையில் வானதியும் இணைந்து கொண்டாள்.

“அடியே அப்போ எங்க கிட்ட என்ன இருக்குதாம்?” என்று பொய்யாய் முறைத்தவளைக் கேலியாய் நோக்கிய பவானி

“ஹான் உங்க கிட்ட இருக்கிற அன்பு இன்வெர்ட்டர் கனெக்சன்ல இருக்கிற சுவிட்ச் மாதிரி” என்று சொல்ல

“அதாவது உன்னோட அன்பு கிடைக்காதப்போ அவசரத்துக்கு உதவுறது தான் எங்களோட அன்புனு சொல்ல வர்றியா பவா?” என்றபடி வந்த பாகீரதியும் அவர்களின் கலகலப்பில் மெதுவாய் இயல்புக்குத் திரும்ப சுவாமிநாதனும் அன்னபூரணியும் மூன்று பேத்தியரின் செல்லச் சண்டையைக் கண்ணாற ரசித்துக் கொண்டிருந்தனர்.

வேலையாட்கள் காலையுணவைச் சமைக்கும் நறுமணம் நாசியைத் தாக்க வானதி வாசம் பிடித்தவள் “வாவ்! இன்னைக்கு பூரியும் கிழங்குமா? என்னோட ஃபேவரைட்” என்று உற்சாகமாய் சொல்ல

பவானியும் பாகீரதியும் ஆவலாய் கண்களை உருட்டி அது தங்களுக்கும் பிடித்தமான உணவு என்பதைச் சொல்லாமல் சொல்ல இளையவர்களின் கலகலப்பு அந்த வீட்டின் பெரியவர்களோடு செண்பகாதேவி மற்றும் லோகநாயகிக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

இதில் ஒட்டாமல் விலகி நின்றது அரிஞ்சயன் மட்டுமே. காலையில் என்ன இப்படி நடு ஹாலில் கூப்பாடு போடுகின்றனர் என்று எரிச்சலுடன் எண்ணியபடி மனைவியிடம் வழக்கம் போல அதட்டி உருட்டி காபியைத் தனது அறைக்கே வருவித்துக் கொண்டார்.

சிவசங்கர் கீழே நடந்த களேபரங்களைக் கவனித்தபடியே அலுவலகம் செல்லத் தயாரானான். வெள்ளைச் சட்டையும் கருப்பு பேண்ட்டுமாய் வழக்கறிஞர் தோற்றத்துக்கு மாறி உணவுமேஜையை அடைந்தவனை விழியகலாது நோக்கினாள் பவானி.

அவளது மனசாட்சியோ “அடியே காதலிக்க நேரமில்லைனு பாட்டு பாடாத குறையா உன்னை இக்னோர் பண்ணுறவனை ஏன்டி வெக்கமே இல்லாம சைட் அடிக்கிற?” என்று இடித்துரைக்க

“இக்னோர் பண்ணுறப்போ நானும் பதிலுக்குப் பேசுவேனே… இது சைட்டிங்… வேற டிப்பார்ட்மெண்ட்… நீ சும்மா நொய் நொய்னு என் காதுக்குள்ள வந்து பேசாம போய் ரெஸ்ட் எடு” என்று அதை அமைதிப்படுத்தியவள் ஓரக்கண்ணால் அவனைக் கவனிக்கும் பணியைச் செவ்வனே தொடரலானாள்.

இடையிடையே வானதியும் பாகீரதியும் அவளை வேண்டுமென்றே கேள்வி கேட்டு அவள் கவனம் இங்கில்லாததைக் கேலி செய்ய சிவசங்கர் அதற்கு நமட்டுச்சிரிப்பு சிரித்து வைத்தான்.

பவானி அவர்கள் இருவரையும் கண்ணால் மிரட்டிவிட்டு அவனையும் நோக்க அவனோ அவள் பார்வையை எல்லாம் பொருட்படுத்தும் நிலையில் இல்லை. என்னவோ இனி இந்த வீட்டில் பூரியும் கிழங்கும் செய்யவே மாட்டார்கள் என்பது போல அதை ரசித்து ருசித்து உண்ணுவதில் கவனமானான்.

“சரியான தின்னி” என்று மனதுக்குள் அவனை வறுத்தெடுத்துவிட்டுத் தானும் உப்பலாய் பொன்னிறத்தில் ஆவி பறக்க சிரித்த பூரிகளை கிழங்கில் தொட்டு வாயில் திணித்தவள் அதன் ருசியில் வழக்கத்தை விட அதிகமாக உண்டுவிட்டாள்.

போதாக்குறைக்கு தாத்தா பாட்டியின் “இன்னும் ஒரு பூரி” என்ற கவனிப்பு பூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சிவசங்கர் கேலியாக

“தாத்தா மத்தவங்களும் சாப்பிடணும்… இப்பிடி உங்க பேத்தி மகாராணிக்கு மட்டும் எடுத்துக் குடுத்துட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேலி செய்ய

“குழந்தை சாப்பிடுறத கண்ணு வைக்காத சிவா” என்று மருமகளுக்காக பரிந்து பேசினார் ஞானதேசிகன். கூடவே லோகநாயகியும் தான். ஆனால் சிவசங்கரின் ஏளன உதட்டுவளைவு இவ்வளவு நேரம் பவானிக்குள் இருந்த உற்சாகத்தைச் சுத்தமாகத் துடைத்து எறிந்தது.

இருவரும் கை கழுவிக்கொள்ள சென்ற போது கூட கிண்டலாய்

“நீ குழந்தையாம்… இந்தக் குழந்தை எப்பிடிலாம் கால்குலேட் பண்ணி காய் நகர்த்தும்னு தெரியாதவங்க என்னோட பேரண்ட்ஸ்… போகப் போகப் புரிஞ்சுப்பாங்க… பை த வே, இனியும் மிஸ்டர் ஜெகத்ரட்சகன் பத்தி யோசிக்காம உன் மேல அன்பைக் கொட்டுற என்னோட ஃபேமிலிய பத்தி மட்டும் யோசி” என்று அமர்த்தலாய் கட்டளையிட

“எக்ஸ்யூஸ் மீ! அவங்க எனக்கும் ஃபேமிலி தான்” என்றாள் பவானி எரிச்சலுடன்.

சிவசங்கர் பொறுமையுடன் அவளை ஏறிட்டவன் இழுத்துச் செருகியிருந்த அவளின் முந்தானையை இழுத்துத் தனது கையைத் துடைத்துக் கொண்டவன்

“அது உனக்கு நியாபகம் இருந்தா ஒரு பிரச்சனையும் இல்ல மை டியர் ஒய்ப்” என்று சொல்லிவிட்டு நகர பவானி அவனது செய்கையில் பல்லைக் கடித்தவள் கடுப்புடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.

ஞானதேசிகனும் தயாராகி விட அரிஞ்சயனும் வரவும் அவர்களுடன் அலுவலகம் கிளம்பத் தயாரானவன் அத்தை மற்றும் அன்னையிடம்

“மா! இன்னைக்கு லஞ்ச் இப்போவே குக் பண்ண வேண்டாம்…. அஞ்சு அத்தையும் அருணும் வர்றேனு சொல்லிருக்காங்க… ஏதோ மறுவீட்டு விருந்தாம்… நியாயப்படி இது அவங்க வீட்டுல தான் நடக்கணுமாம்… ஆனா மிஸ்டர் ஜெகத்ரட்சகன் அதுக்கு ஒத்துக்க மாட்டாரே! அவங்க வந்தப்புறம் அவங்களே சமைச்சுப் போட்டு நாங்க சாப்பிடணுமாம்… சோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்ல பவானியோ அன்னை தன்னிடம் சொல்லாது இவனிடம் எதற்கு சொல்ல வேண்டும் என பொறும ஆரம்பித்தாள்.

அந்தக் குடும்பத்தினர் அத்தகவலில் மகிழ்ந்தாலும் அரிஞ்சயனுக்கு இது நற்செய்தியாகத் தோணவில்லை. ஒருவேளை மனைவியை அனுப்பி மாமனாரை தன் வழிக்குக் கொண்டுவரவும் இந்த வீட்டில் தனது அதிகாரத்தை நிலை நாட்டவும் ஜெகத்ரட்சகன் திட்டமிடுகிறாரோ என சந்தேகித்தார் அவர்.

ஞானதேசிகனும் அரிஞ்சயனும் அவரவர் இல்லாளிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப சிவசங்கர் பவானியை ஏறிட்டுக் கூட பார்க்காது விறுவிறுவென வெளியேறியது பெரியவர்களுக்கு வித்தியாசமாகத் தோணியது. அத்தோடு செல்பவனின் முதுகை உணர்ச்சியற்று வெறித்த பவானியின் முகபாவமும் அவர்களை யோசிக்க வைத்தது.

இருவரும் ஒருவர் மற்றொருவரைப் பற்றி தவறாய் எண்ணமிட்டு இப்படி விட்டேற்றியாய் நடந்து கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வருவதற்கான தருணத்துக்காக விதியும் காத்திருந்தது.

தொடரும்💘💘💘