💗அத்தியாயம் 5💗

ஆர்.கே பவனத்தின் முன் நின்ற டாடா நானோவில் இருந்து ஹாரனை அழுத்தினாள் துளசி. காவலாளி ஹாரன் சத்தத்தில் எட்டிப் பார்த்தவர் காரின் அருகே சென்று அவளிடம் விவரத்தைக் கேட்க சுகன்யா நிச்சயதார்த்தத்துக்கான உடைகளைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறவும் அவர் சாரதாவிடம் கேட்டுவிட்டு வருவதாகச் சொல்லி இண்டர்காமில் சாரதாவை அழைத்தார்.

சாரதா அவர்களை உள்ளே அனுப்புமாறு கூறிவிடவே காவலாளி கதவைத் திறந்துவிட்டு காரை நிறுத்துமிடத்தைக் காட்ட, துளசி பார்க்கிங்கில் சென்று நிறுத்திவிட்டுச் சுகன்யாவோடு இறங்கினாள்.

சுகன்யா உடைகள் அடங்கிய பேக்கைத் தூக்கிக்கொள்ள, இருவரின் ஹேண்ட்பேக் மற்றும் செல்போன் இத்தியாதிகளைக் கையோடு எடுத்துக் கொண்டு டிசைன்கள் அடங்கிய பேக்கையும் தூக்கிக் கொண்டு தோழியுடன் புல்வெளியில் நடக்கத் தொடங்கினாள் துளசி.

இருவரும் உயரத்தில் மாளிகை போன்ற தோற்றத்துடன் இருக்கும் வீட்டை அண்ணாந்து பார்த்துவிட்டு அதற்கு மேலே செல்வதற்கான கருங்கற்படிகளில் நடக்கத் தொடங்கினர்.

சுகன்யா துளசியிடம் “துளசி, இந்த வீட்டைக் கட்டுன மனுசன் கலாரசிகன்டி… எவ்ளோ அழகா கட்டியிருக்காரு பாரேன்… இந்தப் படிக்கட்டுக்கே இவ்ளோ மெனக்கெட்டிருக்காரே! இது வீடு இல்லடி… பேலஸ்” என்று ரசனையுடன் சிலாகித்தபடி நடந்தாள்.

மேலே சென்றவர்களை அழகிய நீரூற்று வரவேற்க அதில் பீச்சியடிக்கும் நீர் கீழே போடப்பட்ட கருங்கல் தளத்தில் சலசலவென்று ஓடுவதைக் கண்டு அதிசயித்த இருவரும் அது போய்ச் சேர்ந்த குளத்தையும் பார்வையிட்டவாறே மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில் நடைபோட்டனர்.

ஒரு பக்கம் நீச்சல்குளமும் மறுபக்கம் நவீனபாணியில் கட்டப்பட்டிருந்த சிறு கட்டிடங்களும் அந்தச் சூழலோடு பொருந்திக் கொள்ள எல்லாவற்றையும் ரசித்தபடி வீட்டின் முன்பகுதியை அடைந்தனர் இருவரும். காலைநேரம் என்பதால் பணியாட்கள் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருக்க வீட்டின் எஜமானியான சாரதா இரு பெண்களையும் புன்னகை பூத்த முகத்தினராய் வரவேற்றார்.

“வாங்கம்மா! காலையிலேயே உங்களைக் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? கல்யாணப்பொண்ணுக்கு இப்போ தான் அவளோட பிரைடல்வேர்ஸ் பார்க்க டைம் கிடைச்சிருக்கும்மா… அவ பார்த்து ஓகே சொல்லிட்டா நானும் கொஞ்சம் நிம்மதியாயிடுவேன்” என்று சாதாரணமாகப் பேசியபடி அவர்களை அழைத்துச் சென்றார்.

சுகன்யாவும் துளசியும் அந்தப் பெரிய ஹாலின் கார்பெட்டிலிருந்து உத்தரத்தில் இருந்து தொங்கும் அழகிய சரவிளக்கு வரை ரசித்தபடியே தூய வெண்ணிறத்தாலான சோபாவில் அமர சாரதாவும் அவர்களுடன் அமர்ந்தார்.

அவர்கள் அமரவும் பணியாள் வரவே துளசியிடமும் சுகன்யாவிடமும் காலையில் அவ்வளவு தூரத்திலிருந்து காரில் வந்திருப்பதால் கட்டாயம் எதாவது பானம் அருந்தி தொண்டையை நனைத்துக் கொள்ளுமாறு வேண்டிவிட்டு பணியாளிடம் “மெர்சிம்மா! இவங்களுக்கு காபி கொண்டு வாங்க” என்று அமைதியாகக் கூற

சுகன்யா “பாருடி! வீட்டோட மகாராணி இவ்ளோ டவுன் டு எர்த்தா இருக்காங்க…. நிறைகுடம் ததும்பாதுங்கிறதுக்கு இவங்க தான் உதாரணம்” என்று சொல்ல துளசியும் அதை மனதாற ஆமோதித்தாள். சாரதாவுடன் அவர்கள் மேற்கொள்ளும் மூன்றாவது சந்திப்பு இது.

மற்ற இரண்டு சந்திப்புகள் ஆர்.கே குழுமத்தின் நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்திருக்க, இப்போதைய சந்திப்பை நேற்று மாலையில் தான் சுகன்யாவுக்குப் போன் செய்து உறுதிப்படுத்தினார் சாரதா.

நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்க மணமகள் தனக்கான உடைகளைப் பார்த்து நிறைகுறைகளைக் கூறிவிட்டால் நன்றாக இருக்கும் என்று அவர் எண்ணவே ஆடை வடிவமைப்பாளர்களான அந்த இளம்பெண்களைத் தனது வீட்டுக்கே நேரடியாக வந்துவிடுமாறு கூறிவிட்டார்.

துளசியும் கோயம்புத்தூர் முந்தையநாள் கொடுத்த அதிர்ச்சியைப் புறம் தள்ளிவிட்டு தைரியமாக மீண்டும் அந்நகரத்துக்குள் நுழைந்துவிட்டாள். ஆனால் இந்த ஆர்.கே பவனத்துக்குள் நுழைந்ததிலிருந்து அவளுக்கு ஏனோ மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. அவளது மனம் முழுவதும் கல்யாணப்பெண்ணுக்கு தாங்கள் வடிவமைத்திருந்த உடைகள் பிடிக்கவேண்டுமே என்ற பதற்றம் தான் இப்போது நிறைந்திருந்தது.

அதற்குள் அவளது போன் சிணுங்கவே இருவரிடமும் “எக்ஸ்கியூஸ் மீ” என்று சொல்லிவிட்டுப் போனுடன் மாடிப்படியை நோக்கி நகர்ந்தாள் துளசி.

அவள் அங்கே செல்லவும் சஹானா மாடியிலிருந்து இறங்கவும் சரியாக இருந்தது. மாடிப்படியில் இறங்கிவந்தவள் ஆலிவ் பச்சைநிறத்தில் இளம்மஞ்சள் பூக்கள் நிறைந்த நீளமான டாப் அணிந்து கழுத்து வரை உள்ளக் கூந்தலை நீவிக்கொடுத்துக்கொண்டு தனக்கு முதுகு காட்டியபடி போனில் பேசிக்கொண்டிருந்த துளசியைக் கண்டதும் யாராக இருக்கக் கூடுமென்ற யோசனையுடன் அவளைக் கடந்துச் செல்ல முயல, துளசி பேசிய வார்த்தைகள் அவளைத் தடுத்து நிறுத்தியது.

“மித்தி என் செல்லகுட்டி தானே! நீ அடம்பிடிக்காம குட்கேர்ளா இருப்பேனு அம்முக்கு பிராமிஸ் பண்ணிட்டு இப்போ மீனா பாட்டி கிட்ட சண்டை போட்டா என்ன அர்த்தம்? நூடுல்ஸ் இஸ் நாட் குட் ஃபார் ஹெல்த்…” என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தவளின் குரலில் இருந்த அக்கறையும் தாய்ப்பாசமும் தான் சஹானாவை அங்கேயே நிற்கவைத்தது.

மறுமுனையில் மித்ரா ஏதோ சொல்ல துளசி நகைத்துவிட்டு “ஓ! என் பொண்ணு இவ்ளோ புத்திசாலியா ஆயிட்டாளே! பட் மித்தி அதுக்கு பேரு ஒயிட் நூடுல்ஸ் இல்ல… அது இடியாப்பம்.. இன்னைக்கு மித்தி அடம்பிடிக்காம நல்லப் பொண்ணா மீனா பாட்டி அவளுக்காகச் செஞ்ச சப்பாத்தி ரோலைச் சாப்பிட்டு முடிச்சா அம்மு அவளுக்கு ஈவினிங் வந்து அவளோட பேவரைட் ஒயிட் நூடுல்ஸை செஞ்சு தருவேனாம்” என்று மகளைத் தாஜா பண்ணிச் சாப்பிட வைக்க முயன்று கொண்டிருந்தாள்.

சஹானாவுக்கு இந்த உரையாடலில் இருந்தே அவள் தனது பெண்குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது புரியவர, துளசியின் குரலில் வெளிப்பட்ட குழந்தை மீதான பாசம் சஹானாவுக்குச் சிறிது பொறாமையைக் கூடக் கொடுத்தது.

யார் சொன்னது வேலைக்குச் செல்லும் பெண்களால் குழந்தைவளர்ப்பில் கவனம் செலுத்த முடியாது என்று? இதோ அவள் கண்ணெதிரே அதைச் சாத்தியமாக்கிக் கொண்டிருப்பவளைக் கண்டு சாந்தமான முகத்துடன் சஹானா நிற்க, துளசி மகளிடம் பேசிவிட்டுத் திரும்பியவள் டிசர்ட்டும் யோகா பேண்டுமாக போனிடெயிலில் நின்ற இளம்பெண்ணைக் கண்டதும் எப்போதும் புதியமனிதர்களைக் கண்டால் இதழில் தோன்றும் சினேகப்புன்னகையைச் சிந்தினாள்.

சஹானா எவ்வித தயக்கமுமின்றி பதிலுக்குப் புன்னகைத்தபடி கையை போன் வடிவத்தில் காட்டி காதில் வைத்துவிட்டு “போன்ல யாரு? உங்க மகளா?” என்று கேட்க துளசி பெருமிதத்துடன் ஆமென்று தலையாட்டினாள்.

சஹானா குறும்புடன் தலையைச் சரித்தபடி “ரொம்ப அடம்பிடிப்பாங்களோ? பட் நீங்களும் ரொம்பவே டேலண்டட்… நூடுல்ஸ் கேட்டு அடம்பிடிக்கிற குழந்தையை இடியாப்பத்தைக் காட்டி ஏமாத்திட்டிங்களே” என்று கூற

துளசி “சில நேரங்கள்ல ஒரு அம்மா குழந்தைகளை ஏமாத்தவும் வேண்டியிருக்கே” என்று சொன்னபடி சஹானாவுடன் ஹாலின் சோபாவை நோக்கி நடைபோட்டாள்.

சுகன்யா சாரதாவிடம் அவரது நிச்சயதார்த்தச்சேலைக்கான பிளவுசைக் காட்டிக் கொண்டிருந்தவள் யாரோ வரும் அரவம் கேட்கவும் நிமிர்ந்துப் பார்க்க அங்கே துளசியும் சஹானாவும் சிரித்துப் பேசியபடி வந்துகொண்டிருந்தனர்.

சுகன்யாவின் பார்வை போகும் திசையைக் கண்ட சாரதா அவளிடம் “அவ தான் என்னோட பொண்ணு சஹானா, அவளுக்கு தான் நிச்சயதார்த்தம் ஆகப் போகுது” என்று கூற துளசியுடன் வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை விழியால் அளவிடத் தொடங்கினாள் அவள்.

துளசியை விட உயரம் கம்மியாக, செல்வச்செழிப்பில் பிறந்து வளர்ந்த செழுமையும் வயதிற்கேற்ற முதிர்ச்சியும் முகத்தில் தெரிய, அந்த வீட்டின் இளவரசிக்கான கம்பீரப்புன்னகையுடன் நடந்துவந்தவளைக் கண்டதும் சுகன்யாவுக்கு காரணமே இல்லாமல் அவளைப் பிடித்துப் போனது.

இருவரும் அங்கே வந்துவிட சாரதா சஹானாவிடம் “சஹாம்மா! உன்னோட பிளவுஸ் டிசைன், லெஹங்கா டிசைன்லாம் பாரு…” என்று ஆளுயர ஸ்டாண்டில் பார்ப்பதற்கு ஏதுவாகத் தொங்கவிடப்பட்ட அவளது நிச்சயத்துக்கான உடைகள், திருமண உடைகள் மற்றும் வரவேற்புக்கான லெஹங்காவைக் காட்ட சஹானா முன்பு போல் இல்லாமல் நேற்றைய இரவு எடுத்த தீர்மானத்தை மனதில் வைத்துக்கொண்டு நிச்சயத்துக்கான உடைகளை ஆவலுடன் பார்வையிடத் தொடங்கினாள்.

நிச்சயத்துக்கானப் புடவையின் முந்தானையிலும், அதற்கான பிளவுசிலும் செய்யப்பட்டிருந்த அலங்காரவேலைபாடுகள் பட்டுப்புடவையின் இயற்கையான அழகைக் கெடுத்துவிடாமல் பாந்தமாய்ப் பொருந்திக் கண்ணைப் பறித்தது.

முகூர்த்தப்பட்டு என்று ராகுலின் தாயார் எடுத்திருந்த அடர்சிவப்புநிறப்பட்டிலும் அழகான வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்க, வரவேற்புக்கான லெஹங்காவை முழுக்க முழுக்க துளசியும், சுகன்யாவும் வடிவமைத்திருந்தனர்.

இளஞ்சிவப்பு வண்ணத்தில் அடுக்கடுக்கான துணிகளுடன் அடிப்பகுதியில் ஜரிவேலைப்பாடு செய்யப்பட்டு அதற்கு பொருத்தமாக க்ரீம் வண்ணத்தில் அதன் மேற்சட்டை தைக்கப்பட்டிருந்தது, அணிவதற்கு உடலை உறுத்தாமல் மென்மையாக அதே சமயம் அவர்களின் பணச்செழுமையைப் பறைசாற்றும் வண்ணம் இரு தோழிகளும் அந்த லெஹங்காவை வடிவமைத்திருந்தனர்.

சஹானா இந்த வேலைப்பாடுகள் அனைத்தையும் ஆச்சரியம் கலந்த ஆர்வத்துடன் பார்வையிட்டவள் சாரதாவிடம் “மாம்! எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு… தேங்க்யூ சோ மச் துளசி அண்ட் சுகன்யா.. எஸ்பெஷலி இந்த லெஹங்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்று திருப்தி நிறைந்தக் குரலில் கூறிவிடத் துளசியும் சுகன்யாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

சாரதாவுடைய உடைகளுக்கு அவரது வயதுக்கேற்றவாறு அலங்கார வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்க அவருக்குமே எல்லாம் சிறப்பாக வந்துவிட்ட மகிழ்ச்சி. இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் பேசிய நாளிலிருந்து கண்ணில் உயிர்ப்பின்றி நடமாடிய மகள் அன்று மிகவும் உற்சாகத்துடன் அவளது திருமண உடைகளைப் பார்வையிட்டது அவருக்கு பெருத்த நிம்மதியை அளித்தது.

அந்த நிம்மதி மனதுக்குத் திடத்தை அளிக்க மகள் இரு பெண்களிடமும் ஆர்வமாக உரையாடுவதைக் கண்டவர் தானும் அந்த உரையாடலில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.

நால்வரும் பேசிக்கொண்டிருக்கையில் வாயிலை நோக்கிய சோபாவில் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்த சஹானா திடீரென்று “அண்ணா! ஒர்க் அவுட் முடிச்சிட்டியாடா? இங்கே வா… என்னோட பிரைடல்வேர்ஸ் வந்துருக்கு பாரு!” என்று உற்சாகக்குரலில் யாரையோ அழைக்க அவளுக்கு எதிர்புறமாய் வாயிலுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருந்த துளசி யாரென்று திரும்பிப் பார்க்கவும்

வாயிலில் உடற்பயிற்சி முடித்து வியர்வையை டவலால் துடைத்தவண்ணம் கறுப்புநிற பனியன், ஷார்ட்ஸ் சகிதம் வந்து சேர்ந்த கிருஷ்ணா துளசியின் பார்வையில் விழவே அதிர்ச்சியில் கண்கள் விரிய சோபாவிலிருந்து எழுந்தாள் அவள்.

கிருஷ்ணாவின் நிலையும் கிட்டத்தட்ட அது தான். ஆனால் அவனது அதிர்ச்சி ஆனந்த அதிர்ச்சி… எனவே அதிர்ச்சியுடன் சேர்ந்த அவனது அக்மார்க் காந்தப்புன்னகையுடன் அவர்களை நெருங்கினான் அவன்.

தன்னை விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் புருவம் உயர்த்தி என்னவென்று மவுனமாக வினவவும் துளசி அவ்வளவு நேரம் இருந்த அதிர்ச்சி பரிபூரணமாய் விலக எரிச்சலுடன் தலையைச் சிலுப்பிக்கொள்ளவே, அவளது கழுத்தளவு குட்டைக்கூந்தல் ஒரு முறை துள்ளி அடங்கிய அழகில் கிருஷ்ணா தான் இப்போது தடுமாறிப் போனான்.

சஹானா அவன் வாயிலில் வரும்போது இருக்கையிலிருந்து துளசி எழுந்ததையும் பின்னர் கிருஷ்ணா புருவம் உயர்த்தி சைகையால் ஏதோ கேட்டதற்கு அவள் தலையைச் சிலுப்பியதையும் மனதில் குறித்துக் கொண்டபடி தொண்டையைச் செருமி

“க்கும்… கிரிஷ் இவங்க தான் துளசி.. இது அவங்க ஃப்ரெண்ட் சுகன்யா.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் என்னோட பிரைடல்வேர்சை டிசைன் பண்ணிருக்காங்க” என்று அறிமுகப்படுத்திவைத்தாள்.

கிருஷ்ணா ரசனையுடன் துளசியை அளவிட்டபடி “பிரைடல்வேர்ஸ்லாம் சூப்பரா இருக்கு.. அதை டிசைன் பண்ணுன டிசைனரை மாதிரியே” என்று இழுத்தபடி அர்த்தபுஷ்டியுடன் கூறவும் துளசியின் கண்ணிலிருந்து புறப்பட்ட அக்னிக்குழம்பு அவன் கண்ணுக்கு மட்டும் குளிர்ச்சியாக இருந்தது.

அவளது கோபத்தை முகம் கண்ணாடி போலக் காட்டிவிட சுகன்யா “துளசி முகத்தை உர்ருனு வச்சுக்காதேடி… கல்யாணப்பொண்ணு உன்னையும் அவனையும் தான் மாத்தி மாத்தி பார்த்துட்டிருக்கா” என்று கூற துளசி முகப்பாவத்தைக் கட்டுப்படுத்தியவளாய் இதழில் பொய்யாய் ஒரு புன்னகையை ஒட்டவைத்தபடி கிருஷ்ணாவிடம்
“தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமெண்ட்ஸ் சார்” என்று கூற

கிருஷ்ணா “யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் மேடம்” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினான். இதுவும் சஹானாவின் பார்வையில் தப்பாமல் விழுந்தது, இதைத் தொடர்ந்து துளசி பல்லைக் கடித்தவாறு வாய்க்குள் முணுமுணுத்ததும் விழுந்தது.

சாரதா என்ற பெரியமனுசி இது எதுவும் அறியாதவராய் குழந்தைக்குரிய குதூகலத்துடன் உடைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்க மெர்சி காபியுடன் வரவே இருவருக்கும் கோப்பையை எடுத்துக் கொடுத்தார்.

துளசி காபியின் நறுமணத்தில் மனம் தொலைந்தவளாய் மிடறு மிடறாய் சுவைத்து அருந்திவிட்டு கோப்பையை வைத்தவள் “அப்போ நாங்க கிளம்புறோம் மேடம்” என்று சுகன்யாவுடன் சேர்ந்து எழ

சாரதா அவசரமாக “என்ன கிளம்புறிங்களா? நோ வே! பிரேக்பாஸ்ட் ரெடியாயிட்டே இருக்கு… சாப்பிட்டிட்டுத் தான் போகணும்” என்று அன்புக்கட்டளையிட சுகன்யாவுக்கும் துளசிக்கும் தர்மசங்கடமாக இருந்தது.

கிருஷ்ணாவுக்கு சித்தியின் அந்த அன்புக்கட்டளை பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கவே அவனும் “சித்தி கரெக்டா சொல்லுறாங்க.. இது வரைக்கும் இந்த ஆர்.கே பவனுக்கு வந்த யாரும் வெறும் வயித்தோட போனது இல்லை..” என்று பெருமிதமாகக் கூறிவிட்டு சஹானாவுடன் சேர்ந்து அவளது உடைகள் அடங்கியை பெரிய பையைத் தூக்கிக் கொண்டான்.

“சித்தி நீங்க இவங்களை சாப்பிடக் கூட்டிட்டு போங்க! நான் சஹாவோட ரூம்ல இந்த டிரஸ்ஸை வச்சுட்டு வந்துடுறேன்” என்றபடி தங்கையுடன் சேர்ந்து பேசியபடி அவளது அறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.

சாரதாவும் அவன் சொன்னபடி இருவரையும் உணவுமேஜைக்கு அழைத்துச் சென்றவர் அங்கே அமர்ந்து அவர்களிடம் இயல்பாக உரையாடவே துளசிக்கும் சுகன்யாவுக்கும் இவரைப் போன்ற ஒருவரின் மகன் உறவான கிருஷ்ணா மட்டும் ஏன் பொய்யனாகிப் போனான் என்ற ஆதங்கம்.

சாரதாவின் பேச்சிலேயே அவர் ஒரு வெகுளிப்பெண்மணி என்பதைப் புரிந்து கொண்டவர்கள் அவருக்கு ஈடுகொடுத்தபடி கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்கையில் வீட்டின் எஜமானர்களான ராகவேந்திரனும், விஜயேந்திரனும் வந்துச் சேர்ந்தனர்.

துளசியும் சுகன்யாவும் ஆளுமையுடன் கூடிய இரு பெரியவர்களையும் பார்த்து மரியாதையுடன் எழுந்து நிற்க சாரதா புன்னகையுடன் இருவரையும் அந்தத் தோழியருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்

“இவர் எங்க மாமா ராகவன், இப்போ வந்தானே கிருஷ்ணா அவனோட அப்பா. இவர் என்னோட ஹஸ்பெண்ட் விஜய்” என்று அறிமுகப்படுத்தத் துளசியும் சுகன்யாவும் அவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

ராகவேந்திரன் இரு பெண்களையும் புன்னகையுடன் பார்த்தபடி “உக்காருங்கமா! சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்” என்று இயல்பாகப் பேச ஆரம்பிக்கவும் துளசியும் சுகன்யாவும் மூவரிடமும் தங்களின் வேலை குறித்த விவரங்களை ஆர்வத்துடன் விவரிக்க ஆரம்பித்தனர்.

பேச்சுவாக்கில் துளசி போனைத் தேட அப்போது தான் ஹாலின் டீபாய் மீது போனை வைத்துவிட்ட நினைவு வர அவர்களிடம் “என்னோட போனை ஹால்லயே வச்சிட்டேனு நினைக்கிறேன்.. என் பொண்ணு ஸ்கூலுக்குக் கிளம்பிட்டாளானு கேட்டுட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஹாலை நோக்கிச் சென்றாள்.

ஆனால் அங்கே அவள் போன் இருந்ததற்கான அறிகுறி கூட இல்லை. சுற்றும் முற்றும் தேடத் தொடங்கியவள் மெதுவாக நகர்ந்து தேடியபடியே சஹானாவின் அறைப்பக்கம் வரை வந்துவிட்டாள். உள்ளே கிருஷ்ணாவும் சஹானாவும் பேசுவது அவள் காதில் விழவே சட்டென்று நகரப் போனவளைத் தடுத்து நிறுத்தியது சஹானாவின் “டிசைனர் மேடம்” என்ற வார்த்தை.

பேச்சு தன்னைப் பற்றியது தானோ என்ற சந்தேகத்துடன் காதைக் கூர்த்தீட்டியவள் ஒட்டுக்கேட்பது தவறு என்று தனக்கு தானே அறிவுரை கூறிக்கொண்டபடி மறைந்து நின்று அவர்கள் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள்.

“டேய் அண்ணா! உனக்கு அந்த டிசைனர் மேடமை ஆல்ரெடி தெரியுமோ? உங்க ரெண்டு பேரோட கண்ணும் சந்திக்கிறப்போ ஸ்பார்க் அடிக்குதே! சம்திங் ராங்” – சஹானா.

“சஹா! தயவு பண்ணி இதை அந்த டிசைனர் மேடம் கிட்ட கேட்டுடாதே… மேடம் காளி அவதாரம் எடுத்துடப் போறாங்க” – கிருஷ்ணா…

“அஹான்! இன்னைக்கு தானே பார்த்தே! அதுக்குள்ள இவ்வளவு தூரம் நீ அவங்களை அனலைஸ் பண்ணிட்டியா?” –சஹானா…

“நான் யாரு? தி கிரேட் கிருஷ்ணா… என்னால ஒரு பொண்ணைப் பார்த்ததுமே அவ எப்போ எப்பிடி ரியாக்ட் பண்ணுவானு ஈசியா கண்டுபிடிக்க முடியும்” என்று துளசி கேட்டுக் கொண்டிருப்பதை அறியாதவனாய் வாய்விட்டு உளறிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

அவன் சொன்ன வார்த்தை இப்போதும் அவளுக்குள் எரிச்சலை மூட்டிவிட மேற்கொண்டு என்ன தான் பேசுகிறான் என்று கவனிக்க ஆரம்பித்தாள் துளசி.

“சோ கிரிஷ் டிசைனர் மேடமை கரெக்ட் பண்ண ரெடியாயிட்டான்… பட் அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குது.. சோ பார்த்து சூதானமா நடந்துக்கோ அண்ணா” – சஹானா

கிருஷ்ணா இல்லாத காலரைத் தூக்கிவிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டவன் “உனக்கு உன் அண்ணனோட அருமை தெரியலை சஹா! எண்ணி ஒரே மாசத்துல நீ சொல்லுற அதே டிசைனர் மேடமை என் பின்னாடி வரவைக்கலை, என் பேரு கிருஷ்ணா இல்லை” என்று சவால் வேறு விட்டு தனக்குத் தானே சொந்தச்செலவில் சூனியம் வைத்துக் கொண்டான்.

அண்ணனும் தங்கையும் பேசியபடி அறையை விட்டு வெளியே வர துளசி கையைக் கட்டிக்கொண்டு நிற்கவும் திகைப்பூண்டை மிதித்தாற்போன்று இருவரும் நின்றுவிட்டனர்.

சஹானா தாங்கள் பேசியதை துளசி கேட்டிருப்பாளோ என்ற சந்தேகத்தில் ஏதோ பூசி மெழுக வரவும் அதற்குள் முந்திக்கொண்ட துளசி “என்னோட போனை டீபாய் மேல வச்சேன்… அதைக் காணும்னு தேடிட்டிருக்கேன்” என்று அங்கே வந்ததற்கான காரணத்தை விளக்கிவிட்டு நிற்க

கிருஷ்ணா உள்ளுக்குள் தயங்கியபடி தனது கையிலிருக்கும் துளசியின் போனை அவள் முன்னே நீட்டியவன் “டிரஸ் வச்சிருந்த பேக்கோட சேர்ந்து வந்துடுச்சு போல” என்று சொல்லிவிட்டு அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டான்.

துளசி போனை அவனிடம் இருந்து வாங்கியவள் சஹானாவிடம் “உங்களை சாரதா மேம் ஏதோ அவசரவேலைனு வரச் சொன்னாங்க” என்று கூற அவள் விட்டால் போதுமென்று வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவள் சென்றதும் கிருஷ்ணாவிடம் திரும்பிய துளசி “நீ மாறவே மாட்டியா கிரிஷ்? எப்பிடி எப்பிடி எண்ணி ஒரு மாசத்துல நீ என்னை கரெக்ட் பண்ணுவியா?” என்று ஆவேசக்குரலில் கேட்க

கிருஷ்ணா தனது வாயில் பட்டென்று அடித்துவிட்டு “துளசி நான் முன்ன மாதிரி இல்லை! ஆக்சுவலி நான் விளையாட்டுக்குத் தான் சஹானா கிட்ட அப்பிடி பேசிட்டிருந்தேன்” என்று கூறிவிட்டு மீண்டும் முகத்தை அப்பாவி போல வைத்துக்கொள்ள

துளசி “நடிக்காதேடா! நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன்… பொண்ணுங்க எப்போ எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கனு உனக்கு நல்லா தெரியுமா? ஆறு வருசம் ஆகியும் துளி கூட மாறாம அதே குணத்தோட இருக்குற உனக்கு எப்பிடி இவ்ளோ அழகான பேமிலி கிடைச்சது? அவங்க எல்லாரும் எவ்ளோ நல்லவங்களா, டவுன் டூ எர்த்தா பிஹேவ் பண்ணுறாங்க… ஆனா நீ.. சை” என்று கையை எரிச்சலுடன் உதறிக்கொண்டாள்.

கிருஷ்ணாவோ தான் விளையாட்டாய் பேசியது ஏன் எப்போதும் வினையாகிறது என்று மனதிற்குள் புலம்பியபடி “அட்லீஸ்ட் என் குடும்பத்தையாச்சும் நீ நல்ல மாதிரி புரிஞ்சுக்கிட்டியே.. அது போதும் எனக்கு… லீவ் இட்.. ஹவ் இஸ் மித்ரா? குழந்தையைத் தனியா விட்டுட்டா நீ இவ்ளோ தூரம் வந்த? அவளுக்கு சாப்பாடு குடுக்க, கவனிக்க யாரு இருக்காங்க?” என்று விசாரிக்க ஆரம்பிக்க

“அது உனக்குத் தேவையில்லாதது கிரிஷ்.. அவ என்னோட பொண்ணு, அவளை நான் ஒன்னும் தவிக்கவிட்டுட மாட்டேன்.. சோ அக்கறை இருக்கிற மாதிரி நடிச்சு என்னை இரிட்டேட் பண்ணாதே” என்று முகத்தில் அடித்தாற்போன்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்று உணவுமேஜையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

கிருஷ்ணா பெருமூச்சு விட்டபடி மாடியில் தன் அறைக்குச் சென்றவன் அவனது விரக்தியை ஷவரிலிருந்து சிதறிய தண்ணீரில் கரைக்க முயன்றான். அவன் உணவுமேஜையை அடைந்தபோது துளசியிடம் பேசிக்கொண்டிருந்தார் ராகவேந்திரன்.

துளசியும் “அவ இப்பொ தான் பர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் போயிருக்கா.. வெரி ஸ்மார்ட் கேர்ள்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ள கிருஷ்ணா பேச்சு மித்ராவைப் பற்றிச் செல்கிறது என்பதைப் புரிந்துகொண்டபடி தந்தைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

தவறியும் துளசியின் பக்கம் பார்வையைத் திருப்பவில்லை அவன். அந்தச் சுட்டெரிக்கும் பார்வையில் பஸ்மமாக அவன் அப்போதைக்கு விரும்பவில்லை.

சாரதா “மித்ராவோட அப்பா எங்க ஒர்க் பண்ணுறாங்கமா?” என்று கேட்க

துளசி “மித்ராவுக்கு அப்பா இல்லை மேடம்… நான் ஒரு சிங்கிள் மதர்” என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சிரிக்க முயல, சுகன்யா அவளது கரத்தை அழுத்தி ஆறுதல் படுத்தினாள். சஹானாவும், கிருஷ்ணாவும் அவளது சிங்கிள் மதர் என்ற வார்த்தையில் திடுக்கிட்டனர்.

சஹானா தான் பேச்சு விபரீதமாகிவிடக் கூடாதே என்ற எண்ணத்துடன் “வாவ்! அப்போ உங்க பொண்ணுக்கு நீங்க தான் பர்ஸ்ட் இன்ஸ்பிரேசனா இருப்பிங்க” என்று துளசியை உற்சாகப்படுத்தும் விதத்தில் கூற அனைவரின் முகமும் தெளிவடைந்தது, கிருஷ்ணா ஒருவனைத் தவிர.

சாப்பாட்டைக் கடனே என்று விழிங்கியவன் மனதிற்குள் “நான் கல் மாதிரி அவ முன்னாடி தான் இருக்கேன்… பட் மித்ராக்கு அப்பா இல்லைனு சொல்லுறாளே! இந்த துளசி எப்போ தான் என்னைப் புரிஞ்சுப்பா கடவுளே? இப்போவே எல்லார் முன்னாடியும் நான் தான் மித்ராவோட அப்பானு கத்தணும் போல இருக்கு… ஆனா அதால எந்த பிரயோஜனமும் இல்லை… எனக்கு அதுக்கான சந்தர்ப்பம் வரட்டும்… அப்போ இதே துளசி மித்ராவோட அம்மாவா, என் மனைவியா இந்த ஆர்.கே பவனுக்கு வருவா” என்று கூறிக்கொண்டான். அதன் பின்னர் துளசியும் சுகன்யாவும் அந்தக் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெற்றுவிட்டவர்கள் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட துளசியின் ‘சிங்கிள் மதர்’ என்ற வார்த்தை கிருஷ்ணாவுக்குள்ளும், சஹானாவுக்குள்ளும் ஒரு வித்தியாசமான இன்னதென்று புரியாத உணர்வை ஏற்படுத்திவிட்டது.