💗அத்தியாயம் 23💗

கருங்கடலில் மிதக்கும் வெள்ளைப்பாய்மரப்படகைப் போல நிலவு இரவு வானில் மிதந்தபடி இருக்கும் காட்சியை அண்ணாந்து பார்த்தபடி வீட்டின் வெளிப்புற வராண்டாவில் உள்ள இருக்கையில் முழங்கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்தாள் துளசி. வீட்டினுள் ராமமூர்த்தி மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சத்தமும் மீராவுடன் மீனா எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது.

அந்த எதுவோ ஒன்று அவளுக்கும் கிருஷ்ணாவுக்குமான திருமணம் தான் என்பதைத் துளசியும் அறிவாள். அந்தப் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல் தான் வராண்டாவில் வந்து அமர்ந்து கொண்டாள் துளசி. அவளால் இப்போதும் நம்ப முடியவில்லை, ராமமூர்த்தியும் மீராவும் கூட இத்திருமணம் நடந்தால் தான் துளசிக்கும் மித்ராவுக்கும் பாதுகாப்பு என்று வலியுறுத்துவதை.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே இருவருமே ஓரிரு முறை வீடியோ கால்களின் போது கிருஷ்ணாவைப் பார்த்திருக்கிறார்கள் தான். ஆனால் நேரில் சந்தித்தது இப்போது தான். ராமமூர்த்திக்கு மித்ராவின் முகத்தைப் பார்த்ததிலேயே கிருஷ்ணாவின் மீதிருந்த அதிருப்தி பாதி அகன்று விட்டது.

மீதியும் ஆறு ஆண்டுகள் ஆகியும் நான் துளசிக்காகத் தான் காத்திருக்கிறேன் என்று கூறிய வார்த்தையைக் கேட்ட கணமே மறைந்துவிட்டது. இந்த விஷயத்தில் மீராவும் கூட கணவரின் கட்சியே.

ஆனால் அவனது செய்கைக்கு அவர் காரணம் கேட்டதற்கு இன்னும் அவன் பதிலளிக்கவில்லை என்பது ராமமூர்த்திக்கு இன்னும் அவன் மீது நம்பிக்கையை வரவழைக்கவில்லை.

துளசிக்கு இவ்வளவு தூரம் நடந்தப் பின்னர் கிருஷ்ணாவுடன் நடக்கும் திருமணம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இது தேவை தானா என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகில் யாரோ வரும் அரவம் கேட்கவும் துளசி திரும்பிப் பார்க்க, அங்கே நின்று கொண்டிருந்தாள் சுகன்யா.

“என்ன யோசனை துளசி?” என்றபடி அவளருகே வந்து அமர்ந்தாள் சுகன்யா.

துளசி இலக்கின்றி வெறித்தபடி அமர்ந்திருந்தவள் “எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை சுகி” என்றாள் மெதுவாக.

சுகன்யாவாலும் தோழியின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவளது கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒருவனை அவளால் எப்படி வாழ்க்கைத்துணையாக ஏற்க இயலும் என்று எண்ணியவள், துளசிக்கு இந்தத் திருமணத்தின் அவசியத்தை விளக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள்.

“துளசி! மித்ராவைப் பத்தி கொஞ்சம் யோசி. அவளைப் பொறுத்தவரைக்கும் அவளோட அப்பா ஒரு ஹீரோ… இன்னும் கொஞ்சநாள்ல அப்பாவோட சேர்ந்துடுவோம்கிற நம்பிக்கையில அவ எவ்ளோ சந்தோசமா இருக்கிறா தெரியுமா? அதை எல்லாம் உன்னோட முடிவு அழிச்சிடும்னு தெரிஞ்சும் உன்னால எப்பிடி கல்யாணம் வேண்டாம்னு சொல்ல முடியுது?

இப்போ நீ உன்னையும் கிருஷ்ணாவையும் பத்தி யோசிக்கிறதை விட்டுட்டு மித்ராவைப் பத்தி யோசி… மித்ராவைக் கடத்துனது கிருஷ்ணாவைப் பழிவாங்குற முயற்சி தான்னு உனக்கு இன்னுமா புரியலை? உலகத்தைப் பொறுத்தவரைக்கும் மித்ரா கிருஷ்ணாவோட பொண்ணு… சோ அவனோட எதிரிகள் கிட்ட இருந்து மித்ராவைப் பாதுகாக்கணும்னா உனக்குப் பக்கபலமா கண்டிப்பா கிருஷ்ணா இருக்கணும் துளசி. புரிஞ்சுக்கோடி” என்று கூறவும் துளசி சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அதன் பின்னர் மீனாவும் சுகன்யாவும் அவர்களின் வீட்டுக்குச் சென்றதும் ராமமூர்த்தியும் மீராவும் நெடுநேரமாகிவிட்டதால் உறங்கச் சென்றுவிட்டனர்.

மித்ரா துளசியின் மடியில் உறங்கிவிட அவளது கூந்தலைக் கோதிவிட்டன துளசியின் விரல்கள். நீண்டநேர அலைக்கழிப்புக்குப் பிறகு உறக்கம் அவள் விழிகளைத் தழுவ ஆரம்பிக்க மகளைத் தன் அருகே கிடத்திவிட்டு அவளை அணைத்தபடி உறங்கிவிட்டாள் துளசி.

மறுநாள் விடியலில் மனம் தெளிந்திருக்க தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த மகளை விழிகளால் வருடிக்கொடுத்தபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் அவள்.

குளித்து முடித்துவரும் போது மித்ரா விழித்து விட்டாள். துளசியின் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவளின் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்த பிறகு தான் அவள் கிருஷ்ணாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதையே புரிந்து கொண்டாள் துளசி.

“இல்லப்பா! அம்மு குளிக்கப் போயிட்டாங்க… நான் அவங்களுக்குத் தெரியாம போனை எடுத்து உங்க கிட்ட பேசுறேன்…” என்று கொஞ்சியவள் மறுமுனையில் அவன் என்ன சொன்னானோ தெரியவில்லை, திடீரென்று “நான் குட் கேர்ள் தான்பா… ஆனா அம்முக்கு உங்க கூட நான் பேசுனா கோவம் வருமே… அதான் தெரியாம பேசுறேன்” என்று இரகசியக்குரலில் கிசுகிசுத்தது கூட துளசியின் காதில் தெளிவாக விழுந்தது.

மித்ராவா இப்படி என்று ஆச்சரியத்துடன் அவள் முன்னே சென்று நின்ற துளசியைக் கண்டதும் மித்ரா தயக்கத்துடன் போனைப் பார்க்க மறுமுனையில் கிருஷ்ணா “மித்தி என்னாச்சுடா?” என்று பேசுவது தெளிவாகக் கேட்டது.

மித்ராவின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிவிட்டு அவளைப் பாட்டி தேடுவதாகக் கூறவும், மித்ரா அவளது அம்மு இப்போதைக்கு அவளைத் திட்டாததால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பாட்டியிடம் ஓடிவிட்டாள்.

துளசி போனை காதில் வைத்தவள் “கடைசியில உன்னோட கிரிமினல் தனத்தை என் பொண்ணுக்கும் சொல்லிக் குடுத்தியாடா? ஒரு நாள் உன்னோட இருந்ததுக்கே இவ்ளோ டிரிக்கா எனக்குத் தெரியாம உன் கிட்ட பேசுற அளவுக்கு டிரெயின் பண்ணிட்டியே கிரிஷ்! உன் திறமையைப் பாராட்டியே ஆகணும்…” என்று எள்ளலுடன் ஆரம்பிக்கவும்

“இப்பிடி தெரியாம பேசுறது தப்புனு எனக்கும் தெரியும் துளசி… அதுக்குத் தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுறேன்” என்றான் கிருஷ்ணா அமர்த்தலாக.

துளசி எரிச்சலுடன் “ஷட் அப் கிரிஷ்! உன்னோட பேச்சுத்திறமையைக் காட்டி அப்பா, அம்மா, சுகினு எல்லாரோட மனசையும் நீ மாத்திருக்கலாம்.. பட் நான் ஏமாற மாட்டேன்” என்று எகிற

“அப்புறம் உன் இஷ்டம்… நானும் மித்ராவும் இனிமே அடிக்கடி பேசுவோம்… நாளைக்கு அவளோட ஸ்கூலுக்குப் போய் அவளை அழைச்சுட்டு ஊர் சுத்துறதா பிளான் போட்டிருக்கோம் தெரியுமா?” என்றான் அவன் சாதாராணமாக.

“கிரிஷ்! வேண்டாம்டா… என் கோபத்தைக் கிளறாதே”

“அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கோ பேபி”

“முதல்ல அந்த பேபியை நிறுத்து… அதைக் கேட்டாலே இரிட்டேட் ஆகுதுடா… முப்பது வயசு ஆகுது, இன்னும் டீனேஜ் பாய் மாதிரி பிஹேவ் பண்ணுற”

“உனக்கும் தான் இருபத்து நாலு வயசாகுது… நீ நாலு வயசு குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறியே… அது மட்டும் சரியா?”

“உனக்கு என்ன தான் வேணும் கிரிஷ்?”

“உன்னை மீட் பண்ணனும் துளசி…. உன் கிட்ட நிறைய பேசணும் எனக்கு”

“ஓகே! இன்னைக்கு சன்டே… சோ வீட்டுக்கு வா.. இங்கே எல்லாரும் இருப்பாங்க… ஆசை தீர பேசிட்டுப் போ”

“இம்பாஸிபிள் பேபி.. பிகாஸ் நான் உன் கூட மட்டும் தான் பேசணும்னு ஆசைப்படுறேன்… உன் வீட்டுக்கு வந்தேனு வையேன், உங்கப்பா விருமாண்டி சந்தனம் இருப்பாரு.. அவர் முகத்தைப் பார்த்தா மனுசனுக்கு லவ் ஃபீல் வராது… ஏதோ நான் அவரு பொண்ணை கொலை பண்ண வந்த மாதிரி பார்ப்பாரு… சிக்ஸ் இயர்ஸ் ஆயிடுச்சு… பட் அவரோட நம்பியார் லுக் இன்னும் மாறலை… சோ நீ இன்னைக்கு உன்னோட பொட்டிக்குக்கு வந்துடு… நம்ம அங்கே பேசிக்கலாம்” என்று கேலியாகச் சொல்லிவிட்டு துளசி அதற்கு ஒப்புக்கொண்டாளா இல்லையா என்று கூட யோசிக்காது போனை வைத்துவிட்டான்.     

துளசி போனை படுக்கையில் வீசியெறிந்தவள் “ராஸ்கல்! நான் என்ன பதில் சொல்லுவேனு கூட எதிர்பார்க்காம போனைக் கட் பண்ணுறான்… இருடா இன்னைக்கு நீ பொட்டிக்குக்கு வா, அங்கே இருக்கு உனக்கு” என்று கறுவியபடி பொட்டிக்குக்குச் செல்ல தயாரானாள்.

தன் அறையை விட்டு வெளியே வந்தவளைக் கண்டதும் ராமமூர்த்தி ஞாயிறன்று மகள் எங்கே செல்கிறாள் என்ற திகைப்புடன் அவளைப் பார்க்கவே, துளசி தட்டுத்தடுமாறியபடி “நான் பொட்டிக் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்பா… இத்தனை நாள் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்கலை… சோ போய் ஒரு பார்வை பார்த்துட்டுச் சீக்கிரமா திரும்பிடுவேன்” என்று ஒருவாறாகச் சொல்லி முடித்தாள். 

ராமமூர்த்தியின் மடியில் அமர்ந்து கொண்டிருந்த மித்ரா “நானும் வரவா அம்மு?” என்று ஆர்வத்துடன் கேட்கவும் துளசி அவசரமாக மறுத்தாள்.

“நோ மித்தி.. நீ தாத்தா, பாட்டி கூட விளையாடு.. டைம் பாஸ் ஆகலைனா மீனா பாட்டிக்கு பிஸ்கெட் செய்ய ஹெல்ப் பண்ணு… சுகி ஆன்ட்டி கூட வீடியோ கேம் விளையாடு… அம்மு போயிட்டு உடனே திரும்பிடுவேன்” என்றவள் தந்தையிடம் திரும்பி

“பா! இவளைப் பார்த்துக்கோங்க… நான் இப்போ வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

ராமமூர்த்தி அதற்கு மேல் துளசியைத் தடுக்க விரும்பாதவர் பேத்தியிடம் திரும்பி “மித்திகுட்டியோட ஸ்னோ ஒயிட் டிராமால அடுத்து என்னாச்சு?” என்று பேச ஆரம்பித்தார்.

துளசி வீட்டை விட்டு வெளியேறி தனது டாட்டா நானோவை எடுத்துக் கொண்டவள் பொட்டிக்கை நோக்கி விரைந்தாள்.

********

கிருஷ்ணா உற்சாகமாக எஸ்டேட் பங்களாவிலிருந்து கிளம்பி காரில் அமர்ந்தான். காரை ஸ்டார்ட் செய்யப் போகையில் போன் அடிக்கவும் ப்ளூடூத்தை ஆன் செய்துவிட்டு பேசியபடியே ஸ்டீயரிங் வீலை வளைத்தபடி காரை ஓட்ட ஆரம்பித்தான். போனில் வேறு யாராக இருக்க முடியும்! சஹானாவும் ராகுலும் தான்.

“என்னடா அண்ணா! ரொம்ப குஷியோ? ஊட்டி போனதுல இருந்து ஆளையும் காணும், காலையும்(CALL) காணும்..”

“எல்லாத்துக்கும் துளசியோட டாடி அந்த நம்பியார் தான் காரணம் சஹாம்மா.. நேத்தைக்கு அவர் கிட்டப் பேசுனதுல இருந்து நான் மந்திரிச்சு விட்ட மாதிரியே பிஹேவ் பண்ணுறேனு விஷ்வா கூடச் சொன்னான்… ஒரு வேளை அவர் எனக்கு பிளாக் மேஜிக் எதுவும் பண்ணியிருப்பாரோ?”

அவன் இவ்வாறு கூறவும் மறுமுனையில் சிரிப்பலை.

“டேய்! வருங்கால மாமனார்னு கூடப் பார்க்காம அவரை மந்திரவாதி ரேஞ்சுக்குக் கலாய்க்கிறியேடா? இட்ஸ் டூ பேட் கிரிஷ்”

“பின்னே என்னடா ராகுல்? பொண்ணைப் பெத்த எல்லா அப்பாக்களுக்குமே மருமகன்னா வேப்பங்காயா இருக்கு.. அதுலயும் மிஸ்டர் ராமமூர்த்தி எல்லா அப்பாக்களையும் மிஞ்சிடுவாரு போல… நேத்தைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் போராடி அவரைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிருக்கேன்… துளசி கிட்டக் கூட நான் இவ்ளோ நேரம் பேசுனது இல்லைடா… இப்போவே இவரை என்னால சமாளிக்க முடியலை… கல்யாணத்துக்கு அப்புறம் எப்பிடித் தான் சமாளிக்கப் போறேனோ” என்றான் கிருஷ்ணா அலுத்துப் போனக் குரலில்.

ராகுலும் சஹானாவும் விழுந்து விழுந்து சிரிப்பது கிருஷ்ணாவின் காதில் விழ, அவர்களையும் இரண்டு வார்த்தை கேலி செய்து விட்டு இணைப்பைத் துண்டித்தான்.

சிறிது நேரத்தில் துளசியின் பொட்டிக் இருந்த இடத்தில் சென்று நின்றது அவனது கார். காரை பார்க்கிங்கில் விட்டவன் துளசியைத் தேடிப் பொட்டிக்கினுள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவனின் பார்வையில் விழுந்தாள் அங்கே கிடந்த மேஜையில் அமர்ந்து பேப்பரில் எதையோ வரைந்தபடி இருந்த துளசி. பென்சிலைப் பிடித்திருந்த தளிர்விரல்கள் அடிக்கடி அதைச் சுழற்றியபடி இருக்க பேப்பரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்து நின்றவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பென்சிலைக் கீழே வைத்தாள்.

எதுவும் பேசாமல் தனக்கு எதிரே கிடந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டியவளின் சைகையைப் புரிந்துகொண்டவன் அதில் அமர்ந்து கொண்டான். துளசி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தாள்.

“மித்ராவுக்கு ட்வென்ட்டி ஃபோர் ஹவர்சும் உன்னோட நியாபகம் தான் கிரிஷ்… இதுக்கு மேலே அவளைத் தடுத்து நிறுத்த என்னால முடியலை.. இன்னைக்கு காலையிலே எனக்குத் தெரியாம உன் கிட்ட அவ பேசுனப்போவே எனக்கு இந்த விஷயம் புரிஞ்சுடுச்சு… என்னோட தயக்கம் ஒன்னே ஒன்னு தான்” என்று சொல்லி நிறுத்திவிட்டு கிருஷ்ணாவைப் பார்க்க அவனோ கையை மார்பின் குறுக்கே கட்டியபடி அவளது பேச்சை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

தொண்டையைச் செருமியவள் “மித்ராவை நான் என்னோட பொண்ணா தான் பார்க்கிறேன்… நான் அவளைப் பெத்த அம்மா இல்லை… ஆனா அவ தான் நான் வாழுற வாழ்க்கைக்கு அர்த்தமே… அவளை யாரும் வெறுத்துட்டா என்னால அதைத் தாங்கிக்க முடியாது கிரிஷ்… உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்கிறேனு வச்சுக்கோ, கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட குடும்பத்து மனுசங்களுக்கு மித்ரா உன்னோட இரத்தம் இல்லைனு தெரிஞ்சா அவங்க அவளை வெறுக்க ஆரம்பிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன்?

மத்தவங்களை விடு, நீயே அவளை வெறுக்க ஆரம்பிச்சிட்டா அதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் கிரிஷ்.. நான் யாருக்காகவும் எதுக்காகவும் மித்ராவை விட்டுக்குடுக்கவே மாட்டேன்… உனக்காகவும் கூட” என்று மனதை உறுத்திக்கொண்டிருந்த பாரத்தை இறக்கிவிட்டாள் கிருஷ்ணாவிடம்.

கிருஷ்ணா சலனமின்றி துளசியை ஏறிட்டவன் “ம்ம்.. மேலே சொல்லு” என்று கூறவே

துளசி தயக்கத்துடன் “எனக்கு காதல், கல்யாணம், இதைப் பத்தி நான் கண்ட கனவு எதுலயுமே நம்பிக்கை இல்லை… என்னால எப்போவும் உன்னை என்னோட ஹஸ்பெண்டா ஏத்துக்க முடியாது கிரிஷ்… எங்க பாட்டி சொல்லி வளர்த்த சில விஷயங்களை என்னால அவ்ளோ சீக்கிரமா மறக்க முடியாது… அதைப் பொருட்டா கூட மதிக்காதவனை என்னால எப்பிடி ஹஸ்பெண்டா ஏத்துகிட்டு ஒரு நார்மலான வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்?” என்று கூறும் போதே கிருஷ்ணாவின் முகத்தில் இறுக்கம் படர்ந்தது.

ஆறு ஆண்டுகள் இவளுக்காக நான் காத்திருக்கிறேன், இன்னும் என்னை இவள் நம்பவில்லையா என்ற ஆதங்கம் உள்ளுக்குள் வேதனையை உண்டாக்கவும் அதைச் சமாளித்தபடி கல் போல அமர்ந்திருந்தான் கிருஷ்ணா.

துளசி அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்காமலே “இது வரைக்கும் நீ எப்பிடி எப்பிடியோ வாழ்ந்திருக்கலாம்.. ஆனா இந்தக் கல்யாணத்துக்கு அப்புறம் அதே மாதிரி தான் இருப்பேனு அடம்பிடிச்சா, உன்னைப் பிரிஞ்சுப் போறதுக்கு நான் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் கிரிஷ்” என்று கூற கிருஷ்ணா இவ்வளவு நேரம் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தவன் மேஜையில் மீது இருந்த துளசியின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

அவளது வாள் வீசும் விழிகளை நேரடியாக எதிர்கொண்டபடி “நீ சொன்ன எல்லா கண்டிசனும் எனக்கு ஒகே.. இப்போ நான் பேசலாமா?” என்ரு கேட்க துளசி தனது கரத்தை அவனிடமிருந்து உருவ முயன்று தோற்றவள் அவனது பேச்சைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானாள்.

“கண்டிசன் நம்பர் ஒன், மித்ரா எனக்குப் பிறந்த பொண்ணுனு தான் நான் என் ஃபேமிலியில சொல்லிருக்கேன்… அவங்க கிட்ட எப்போவுமே நான் மித்ராவைப் பத்தின உண்மையைச் சொல்லப்போறது இல்லை.. அதே நேரம்  என்னோட ஃபேமிலியில எல்லாரும் நம்ம இன்னும் காதலிக்கிறதா நம்புறாங்க… சோ நீ இப்பிடி எவனோ ஒருத்தனை மாதிரி என்னையும் டிரீட் பண்ணி அவங்களுக்குச் சந்தேகம் வர வைக்கக் கூடாது…

கண்டிசன் நம்பர் டூ, நீ சொல்லுற படி இனிமே நான் ‘ஒழுக்கமானவனா’ நடந்துக்கிறேன்.. பட் நீயும் ஒரு நல்ல மனைவியா எனக்கு நடந்துக்கணும்… இதை ஏத்துக்க உனக்கு டைம் தேவைப்படலாம்.. பட் ஹாஸ்பிட்டல் பெட்ல என்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ உன் மனசுல தோணுன உணர்வை அப்பப்போ நினைச்சுக்கோ… நீ சரியாயிடுவ…

கண்டிசன் நம்பர் த்ரீ, நான் உன்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடியும் சரி, அதுக்கு அப்புறமும் சரி எந்த மோசமானப் பழக்கத்தையும் அமெரிக்கால கத்துக்கல… பட் நீ இதை நம்ப மாட்ட.. சோ நானும் உனக்கு இது பத்தி விளக்கம் குடுக்க மாட்டேன்… நீயும் அமெரிக்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதையும் என் கிட்ட தூண்டித் துருவி இனிமே கேக்கவோ எனக்கு நியாபகப்படுத்த்தவோ டிரை பண்ணக் கூடாது… அப்பிடி டிரை பண்ணுனாலும் என் கிட்ட இருந்து அதுக்குப் பதில் கிடைக்காது… பிகாஸ் ஒவ்வொருத்தருக்கா நான் நல்லவன் தானு ப்ரூவ் பண்ணியே நான் களைச்சுப் போயிட்டேன்” என்று இறுகியக்குரலில் சொல்லி முடித்தான்.

துளசி அவன் சொன்ன அனைத்துக்கும் சரியென்று தலையாட்டி வைக்க, கிருஷ்ணா அவளது கரத்தை விடுவித்தான். துளசி இப்போதாவது கையை விட்டானே என்ற நிம்மதியுடன் எழுந்து பென்சிலை அவளது அறைக்குள் வைக்கச் செல்லவும் அவளது இடையைப் பற்றி இழுத்தவன் தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.

துளசி கண் இமைக்கும் நேரத்துக்குள்ளாக நடந்த அச்சம்பவத்தைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“ஹவ் டேர் யூ கிரிஷ்? லீவ் மீ”

“இவ்ளோ நேரம் போலீஸ்காரம்மா மாதிரி விரைப்பா நீ பேசுனதை நான் கேட்டேன்ல… இப்போ நீயும் கேளு..”

“நீ பேசுறதை நான் கேட்டு முடிச்சுட்டு தானே எழுந்தேன்டா…”

“நான் இன்னும் பேசி முடிக்கவே இல்லையே… ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், நீ இப்பிடி ஓவரா ஆட்டிட்டியூட் காட்டுறதை நிறுத்து… இது உனக்கு செட் ஆகலை… இதுவும் கண்டிசன்ல ஒன்னு”

“ஷட் அப் இடியட்… நீ இப்பிடி லூசுத்தனமா நடந்துக்கிறதை நிறுத்துடா… முப்பது வயசாகுது… இன்னும் சின்னப் பையன்னு நினைப்பு..” என்று அவனது கரத்தைத் தட்டிவிட்டு எழுந்தாள்.

கிருஷ்ணா அவள் சொல்லிவிட்டுச் சென்ற பாவனையில் சிரித்தவன் அவளது அறைக்குள் சென்றவள் சாவியுடன் வந்து “சரி பேசியாச்சுல்ல, கிளம்பு.. நான் பொட்டிக்கை லாக் பண்ணப் போறேன்” என்று கூறவும் கிருஷ்ணா எழுந்து கொண்டான்.

இருவரும் சேர்ந்து பொட்டிக்கைப் பூட்டிவிட்டு வெளியே வரவும் கிருஷ்ணா தனது காரை நோக்கி முன்னேற துளசி அவளது நானோவை நோக்கிச் சென்றாள். கிருஷ்ணா அவள் தன்னுடன் தான் வருகிறாள் என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டே சென்றவன் திரும்பிப் பார்க்கையில் துளசி நானோவில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள்.

கிருஷ்ணா இடுப்பில் கையூன்றி முறைத்தவன் நானோவின் முன்னே சென்று நிற்கவும் துளசி வெளியே தலையை நீட்டியவள் “வழியை விடு கிரிஷ்.. இல்லைனா இடிச்சுட்டுப் போயிட்டே இருப்பேன்” என்று எரிச்சலில் மிரட்டினாள்.

கிருஷ்ணாவோ “இந்தச் சின்னப்பிள்ளைத்தனமா பூச்சாண்டி காட்டுற பழக்கத்தை இன்னும் விடலையா நீ? நான் நகரவே மாட்டேன் உன்னால செய்ய முடிஞ்சதைச் செஞ்சுக்கோ” என்று பிடிவாதமாக நிற்க, துளசி காரின் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.         

“என்னோட கார்ல போலாம் துளசி… உன்னோட இந்த எல்லோ பென்ஸை யாரும் திருடிட்டுப் போயிடமாட்டாங்க… உன் ஃப்ரெண்ட் ஜிஞ்சர் பிரெட்டுக்கு போன் பண்ணு… அவ வந்து எடுத்துட்டுப் போவா” என்றவன் அவளது கரத்தைப் பற்றி அவனது காரை நோக்கி இழுத்துச் சென்றான்.

“ஏய்! எங்கேடா கூட்டிட்டுப் போற? நான் அப்பா கிட்ட சீக்கிரமா திரும்பிடுவேனு சொல்லிட்டு வந்துருக்கேன்… நான் போக லேட் ஆச்சுனா அவரு டென்சன் ஆயிடுவாரு..”

“ஆமா, இல்லைனா மட்டும் அவரு அப்பிடியே பொறுமையின் சிகரம் மாதிரி சாந்தசொரூபியா இருப்பாரு பாரு… அந்த நம்பியாரை எப்பிடி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும்.. நீ வா” என்று அவளை இழுத்துச் சென்று காரினுள் தள்ளினாள் கிருஷ்ணா.

துளசி அவனை முறைத்தபடி போனை எடுத்தவள் சுகன்யாவிடம் காரை எடுத்துக்கொண்டு செல்லுமாறு கூறிவிட்டு தனதருகில் அமர்ந்தவனை முறைத்துவிட்டு சீட்பெல்ட்டை மாட்டிக்கொண்டாள்.

விசிலடித்தபடி காரை ஸ்டார்ட் செய்தவனிடம் “இப்போ எங்கே தான் கூட்டிட்டுப் போற கிரிஷ்? அட்லீஸ்ட் அப்பாக்கு இன்ஃபார்ம் பண்ணுறதுக்காச்சும் சொல்லுடா” என்று கேட்டவளை பார்த்தபடியே காரை வெளியே கொண்டு வந்தான்.

சாலையில் கண் பதித்துவிட்டு “உன் கூட ஊர் சுத்தி நாளாச்சுல்ல… சோ இன்னைக்கு ஃபுல்லா நம்ம ரெண்டு பேரும் நல்லா ஊர் சுத்தப் போறோம்… நீ இன்னும் பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிருக்க மாட்டே.. சோ உன்னோட ஃபேவரைட் ரெஸ்ட்ராண்டுக்குப் போவோம்” என்று சொல்லவும் கார் சாலையில் வேகமெடுத்தது.