💗அத்தியாயம் 16💗

தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது போல பாரமாக இருக்க இன்னும் வலி முணுக் முணுக்கென்று தெறித்தது கிருஷ்ணாவுக்கு. சிரமத்துடன் கண் திறந்தவனுக்கு சில நொடிகளில் தான் மருத்துவமனையில் இருப்பது புரிந்தது.

அடி பட்டது முன்நெற்றியில் தான் என்பதால் கை கால்களை அசைப்பதில் அவனுக்கு எச்சிரமமும் இல்லை. மெதுவாக எழுந்தவன் இடதுகையை யாரோ பிடித்திருப்பது போலத் தோன்றவும் அவன் படுத்திருந்த பெட்டின் மறுபுறம் திரும்பிப் பார்த்தவன் உண்மையிலேயே ஸ்தம்பித்துப் போனான்.

அவனது கரத்துடன் தனது தளிர்க்கரத்தைக் கோர்த்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் பூமுகத்துக்குச் சொந்தக்காரியான காரிகை ஒருத்தி. அவளது அலையான கூந்தல் பரந்து இடையைத் தீண்ட அவற்றில் சில அத்துமீறி அவளது முகத்தில் உரசிக் கொண்டிருந்தன.

பார்த்த உடன் தூக்கிக் கொஞ்சத் தூண்டும் குழந்தையின் அமைதியும், கள்ளமற்ற முகமுமாய் தன் கரத்தைப் பற்றியிருந்தவளின் முகத்தில் விளையாடியக் கூந்தல் கற்றைகளை அவளது துயில் கலையாவண்ணம் ஒதுக்க முற்பட்டான் கிருஷ்ணா.

ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிய அவளது விழிகளை மலர்த்தினாள் அவள். கண் விழித்தவள் தன் அருகில் தெரிந்த முகத்தைக் கண்டதும் திடுக்கிட்டாள். அதிர்ச்சியில் விரிந்த அவளது விழிகள் தன்னருகே இருப்பவனைப் படம் பிடிக்கத் தொடங்கியது.

கூர்நாசியும், தீட்சண்யமான விழிகளுடன், அவன் எவ்வளவு அழுத்தமானவன் என்பதை பறைச்சாற்றும் உதடுகளுமாய் அவளுக்கு வெகு அருகில் இருந்த அம்முகத்துக்குச் சொந்தக்காரன் அவளது அனுமதியின்றி துளசியின் குட்டி இதயத்துக்குள் அந்நொடியே நுழைந்தான்.

விபத்து ஏற்படுத்தியக் காயத்துக்காகப் போடப்பட்ட கட்டினை மீறி அவனது கேசம் நெற்றியின் மீது புரள அவளை ரசனையுடன் பார்த்த அவனது விழிகளில் இருந்த ஏதோ ஒன்று அவளது உள்ளத்தில் தைக்க, துளசியின் இதழ்கள் அவள் அறியாமல் ‘பிரின்ஸ்’ என்ற வார்த்தையை உச்சரித்தது.

கிருஷ்ணா அவள் கண் விழித்தது, தன்னைக் கண்டு திடுக்கிட்டது, பின்னர் தன்னைப் பார்வையால் அலசி ஆராய்ந்தது, இதோ இப்போது செவ்விதழ்களுக்குள் ஏதோ முணுமுணுத்தது என்று அவளின் அசைவு ஒவ்வொன்றையும் இதழில் குறும்புப் புன்னகை மின்ன ரசித்துக் கொண்டிருந்தான்.

துளசியின் கண்கள் அவன் முகத்திலிருந்து விலக மறுத்து சத்தியாக்கிரகம் செய்தாலும் அவளது மனம் “இப்பிடி நீ வெறிச்சு வெறிச்சுப் பார்த்தேனா அவன் பயந்துடப் போறான்… முன்னப் பின்னத் தெரியாதவனை இப்பிடியா வச்சக் கண் வாங்காம பார்ப்ப துளசி?” என்று அவளது தலையில் குட்டவும் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு எழுந்தாள் துளசி.

தான் அமர்ந்திருந்த முக்காலியை நகர்த்தி ஓரமாய்ப் போட்டவள் கிருஷ்ணாவின் முகத்தைப் பார்க்கச் சங்கடப்பட்டு அங்கிருந்த ஜன்னலை நோக்கியபடி “உங்களுக்கு இப்போ பரவால்லையா? நான் நர்ஸைக் கூப்பிடுறேன்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றபடி நகரப் போகவும், அவளது கரத்தைப் பற்றி அங்கிருந்து அகலவிடாமல் நிறுத்தினான் கிருஷ்ணா.

துளசிக்கு முதன் முதலில் ஒரு அன்னிய ஆடவனின் தொடுகையில் இதயம் படபடக்க இவனுக்கு என் கரத்தைப் பிடிக்க எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும் என்று கடுப்புடன் திரும்பியவள் அங்கே குறும்புப்பார்வையுடன் அமர்ந்திருந்தவனைக் கண்டதும், அவளது முகத்திலிருந்த கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

“ஐ அம் ஆல்ரைட் பேபி… நீ கொஞ்சம் உக்காந்து நேத்து நான் மயக்கமானதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுனு எக்ஸ்பிளெயின் பண்ணு…” என்று கூற

துளசி மறுவார்த்தை பேசாமல் அமர்ந்தவள் கிருஷ்ணாவிடம் “பெருசா ஒன்னும் நடக்கலை… நீங்க மயக்கம் போட்டு விழுந்திட்டிங்க.. நானும் வேலு அண்ணாவும் சேர்ந்து உங்களை ஒரு கார்ல ஏத்தி இங்கே கூட்டிட்டு வந்தோம்.. உங்களோட திங்க்ஸ் எல்லாமே வேலு அண்ணா கிட்டத் தான் இருக்கு.. ஃபைனலி நான் ஒன்னும் பேபி கிடையாது.. எனக்கு என் பேரண்ட்ஸ் அழகா துளசினு நேம் வச்சிருக்காங்க… சோ கால் மீ துளசி” என்று ஒப்பித்து முடிக்கவும் கிருஷ்ணா புருவங்களை ஏற்றி இறக்கினான்.

அவளைக் குறும்பாகப் பார்த்தபடி “ஐ அம் இம்ப்ரெஸ்ட்” என்று சொல்லி இரு கரங்களையும் நெஞ்சில் வைத்துக் கண் சிமிட்ட, அவனது கண் சிமிட்டலில் துளசியின் இதயம் சப்தஸ்வரங்களையும் பாடி அடங்கியது.

ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் மருத்துவரை அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியேறியள் தன் தலையில் தானே அடித்துக்கொண்டு “அவனோட கண்ணுல ஏதோ மேஜிக் இருக்கு… அதைப் பார்த்தா உலகமே மறந்துப் போயிடுதே… ஒரு பார்வை, ஒரு சிரிப்பு இனாஃப்… மனசு அப்பிடியே ராக்கெட் மாதிரி பறக்க ஆரம்பிச்சிடுது… இது நல்லதுக்கு இல்லை துளசி” என்று இனம்புரியா உணர்வுடன் சொல்லிக்கொண்டபடி மருத்துவரின் அறையை நோக்கி நடையைக் கட்டினாள் அவள்.

அதே நேரம் கிருஷ்ணா “காட்! தேவதையைக் கண்டேனு பாட்டு கேட்டுட்டு வந்தவனுக்கு நிஜ தேவதையைவே கண்ணுல காட்டிட்டிங்க… தேங்க்யூ சோ மச் காட்… இந்தப் பொண்ணு கிட்ட ஏதோ ஒரு மேஜிக் இருக்கு… இவ குரல் எனக்கு அம்மாவை நியாபகப்படுத்துனப்போவே நான் யோசிச்சிருக்கணும்… கொஞ்சம் லேட்டா யோசிக்கிறேன்… இட்ஸ் ஓகே! இனிமே ஊட்டியில தானே இருக்கப் போறேன்… இந்த தேவதையை அடிக்கடி பார்க்கிற சான்ஸ் கிடைக்காமலா போயிடும்! அப்பிடி கிடைக்கலைனா நானே சான்ஸை உருவாக்கிக்கிறேன்” என்று எண்ணியவனாய் பெட்டில் சவுகரியமாய்ச் சாய்ந்து கொண்டான்.

துளசி மருத்துவருடன் திரும்பி வரவும் கிருஷ்ணா எழுந்து அமர்ந்து கொள்ள மருத்துவர் அவனைப் பரிசோதித்துவிட்டு “நாட் பேட் யங் மேன்… நீங்க சீக்கிரமா ரெகவர் ஆகிடுவிங்க… துளசி டூ டேய்ஸ் அப்சர்வேசன்ல வச்சிட்டு இவரை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்மா..” என்று சொல்லிவிட்டு அகன்றார்.

அவர் வெளியேறியதும் துளசி கிருஷ்ணாவிடம் “ஓகே! நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் வீட்டுக்குப் போயிட்டு உங்களுக்கு பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணிக் கொண்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனிக்க

கிருஷ்ணா “ஹேய் ஒன் செகண்ட்…” என்று அவசரமாய் தடுக்க துளசி என்ன என்பதைப் போலக் கையைக் கட்டிக்கொண்டு அவனை வேடிக்கை பார்த்தாள்.

“உன் நம்பர் குடுத்துட்டுப் போ” என்றவனைப் பார்த்து திகைப்பில் வாயைப் பிளந்தவள் அடுத்த நொடி ஆவேசத்துடன் ஏதோ சொல்ல வர

கிருஷ்ணா கையுயர்த்தி தடுத்தவன் “ஐ னோ என் கிட்ட மொபைல் இல்லை… பட் நீ யாரோ ஒரு அண்ணா சொன்னியே, அவர் கிட்ட இருந்து வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறமா உன்னை கான்டாக்ட் பண்ணனும்னா எனக்கு உன்னோட நம்பர் வேணும்ல” என்று சாவகாசமாய்க் கூறி முடித்தான்.

துளசியோ “ஹலோ! ஹவ் டேர் யூ டு ஆஸ்க் மை நம்பர்? நீங்க ஏன் சார் என்னை கான்டாக்ட் பண்ணனும்?” என்று சீறவும் கிருஷ்ணா அலட்டிக் கொள்ளாமல் கைகளைத் தலைக்குப் பின்னே கட்டிக் கொண்டு சாய்ந்தான்.

“பிகாஸ் எனக்கு உன் கூட பேசணும், உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு… தட்ஸ் ஆல்”

“எக்ஸ்யூஸ் மீ! என்னைப் பார்த்தா முன்னப்பின்ன தெரியாதவன் கிட்ட பேசிப் பழகுற பொண்ணு மாதிரியா உனக்குத் தெரியுது” என்று ஒருமையில் திட்டத் தொடங்கியவளுக்கு இவன் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்ற ஆவேசம் அவளது பாட்டியின் வளர்ப்பு காரணமாக எழுவதை அவளால் தடுக்க இயலவில்லை.

“இல்லையே! உன்னைப் பார்த்ததும் ஒரு தேவதையைப் பார்த்த ஃபீலிங்… நீ என்னை மடியில தாங்குனப்போ என் அம்மாவே வந்து தாங்குன மாதிரி தோணுச்சு… நீ என் கையைப் பிடிச்சுட்டுத் தூங்கிட்டிருந்தப்போ அவங்க எனக்காக அனுப்பி வச்ச தேவதை மாதிரி தோணுச்சு… அதான் இந்த தேவதையைப் பத்தி தெரிஞ்சுக்கலாமேனு ஒரு ஆர்வத்துல நம்பர்ல கேக்கிறேன்” என்று தனது மனதில் இருப்பதை மறைக்காது கூறினான் கிருஷ்ணா.

தனது பேச்சுக்கு எவ்வித மறுமொழியும் கூறாது நின்ற துளசியைப் புன்னகையுடன் பார்க்க துளசியோ “ஐயோ! கஷ்டப்பட்டு பாட்டியோட அட்வைஸ் எல்லாத்தையும் மனசுல நினைச்சுட்டுப் பேச ஆரம்பிச்சா இவன் இப்பிடி சிரிச்சே அதை மறக்கடிச்சிடுவான் போலேயே துளசி” என்று எண்ணிக்கொண்டாள்.

கிருஷ்ணா “ஓகே! லெட் மீ இன்ட்ரடியூஸ் மை செல்ஃப்… ஐ அம் கிருஷ்ணா ஃப்ரம் கோயம்புத்தூர்… இங்கே எஸ்டேட் வேலையா வந்தப்போ ஆக்சிடெண்ட்ல மாட்டிகிட்டேன்… ஆனா கண் முழிச்சதுக்கு அப்புறமா தான் தெரிஞ்சுது மாட்டிகிட்டது ஆக்சிடெண்ட்ல இல்லை, ஒரு தேவதை கிட்டனு” என்று ஏற்ற இரக்கங்களுடன் சொல்லும் போதே துளசிக்கு உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது.

அதன் விளைவாக முகம் சிவந்தவள் அதை மறைக்க பிரயத்தனப்பட அதன் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். பூவிதழ்களில் அரும்பத் தொடங்கிய புன்னகையுடன் நின்றவளின் முகமே அவளது மனதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

அவள் மனம் “துளசி இத்தனை நாள் பிரின்ஸ் பிரின்ஸ்னு கற்பனையில உளறிட்டிருந்தியே, இப்போ பாரு உன்னோட பிரின்ஸ் உன் கண்ணு முன்னாடி இருக்கறான்… அவன் கிட்ட ஏன் பிடிவாதம் பிடிக்கிற? நம்பர் குடுத்தா குறைஞ்சா போயிடுவ நீ?” என்று அவளுக்குப் பழிப்பு காட்டியது.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “நான் வீட்டுக்குக் கிளம்புறேன்.. போய்ட்டு ஜஸ்ட் ஒன் ஹவர்ல திரும்பிடுவேன்… அது வரைக்கும் ரெஸ்ட் எடுங்க” என்றபடி வெளியேற

கிருஷ்ணா “ஒன் ஹவர்ல திரும்பி வந்ததும் நம்பர் குடுப்பியா பேபி?” என்று கேட்டுவிட்டுக் கண்ணைச் சிமிட்டவும்

துளசி “தர மாட்டேன் போடா” என்று கோபமாய்ச் சொல்ல முயன்று அது சிறுபிள்ளைத்தனமாய் ஒலிக்க கிருஷ்ணா அவள் சொன்ன விதத்தில் நகைக்க ஆரம்பிக்கவும், துளசி உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் கிருஷ்ணாவுக்கு அந்த அறையின் வெறுமை கண்ணைக் கட்டியது. இவ்வளவு நேரம் வண்ணமயமாகக் காட்சியளித்த யாவும் இப்போது கருப்பு வெள்ளையாகத் தோன்ற ஒரு மணிநேரத்தை நெட்டித் தள்ளுவது எப்படி என்று யோசித்தடி இருந்தான் கிருஷ்ணா.

நடப்பவை எல்லாம் கனவு போலத் தோன்றியது அவனுக்குத். தானா இப்படி புதிதாகச் சந்தித்த ஒரு பெண்ணிடம் அசட்டுத்தனமாய் உளறிக் கொட்டுகிறோம் என்ற ஆச்சரியம் வேறு. அதே நேரம் அவன் மனதுக்கோ துளசி ஒன்றும் புதிதாகச் சந்தித்த ஏதோ ஒரு பெண்ணாகத் தோன்றவில்லை.

தான் கண்ணும் மூடும் முன் கேட்ட அக்குரலின் சொந்தக்காரி ஏதோ யுக யுகமாய் தனக்காகக் காத்திருந்தவளைப் போல அவன் மனதில் பதிந்துப் போனாள். காலையில் கண்விழிக்கையில் தன் கரத்தைப் பற்றி உறங்கிய அந்தப் பூமுகத்தை வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவனுள் எழுவதைக் கிருஷ்ணாவால் தடுக்க இயலவில்லை.

தனக்கான தேவதை அவள் தான் என்று உறுதி செய்த பிறகு தான், தன்னைப் போல அந்தப் பெண்ணுக்கும் உணர்வுகள் தோன்றினால் மட்டுமே தான் நினைப்பது சாத்தியம் என்று அவனுக்கு உறைத்தது. அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரியாததால் தான் அவளிடம் மொபைல் நம்பரைக் கேட்டதே.

துளசி அதற்குக் கோபப்பட்டதும் இனியும் மறைத்துப் பயனில்லை என்ற எண்ணத்தில் அவளிடம் தனது மனதில் உள்ள எண்ணத்தை மறைக்காமல் எடுத்துரைத்தான். அதற்கு துளசி உடனே சரியென்று சொல்லாவிடினும் அவளது முகபாவத்திலிருந்து அவள் மனதை ஓரளவுக்கு ஊகித்தவன் சற்று தைரியமாகவே பேசிவிட்டான்.

இவ்வாறான சிந்தனை ஓட்டத்துடனே பெட்டில் சாய்ந்தவன் சற்று நேரத்தில் தன்னை மீறி உறங்கியும் போனான்.

*********

அதே நேரம் துளசி ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றவள் உற்சாகத்தில் மிதந்தபடி வீட்டுக்குள் செல்ல அவள் ஆட்டோவிலிருந்து இறங்கியதைப் பார்த்தச் சுகன்யா வேகமாக அவள் வீட்டை நோக்கி ஓடிவந்தாள்.

துளசி ஏதோ சினிமா பாடலை முணுமுணுத்தபடி குளிக்கத் தயாரானவள் அவளது அறைக்குள் திடுதிடுப்பென நுழைந்த சுகன்யாவைக் கண்டதும் “சுகி” என்று சந்தோசக்கூவலுடன் ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

அவள் கையைப் பற்றிக்கோண்டு ராட்டினம் போல சுற்றியவள் சுகன்யா “அடியே தலை சுத்துதுடி! நில்லு” என்று கெஞ்சியபின்னர் தான் தள்ளாடியபடி சுற்றுவதை நிறுத்தினாள்.

மூச்சிரைத்தபடி “சுகி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டி… நாம சாப்பிடணும்னு நினைக்கிற ஐஸ் க்ரீம் நம்ம கண்ணு முன்னாடி கிலோ கணக்குல இருந்தா எவ்ளோ சந்தோசமா இருக்குமோ அதை விடச் சந்தோசமா இருக்கேன்” என்று சந்தோசத்தில் படபடக்க சுகன்யாவுக்கும் தோழியின் உற்சாகத்தில் மகிழ்ச்சியே…

அவள் முழுவதுமாகச் சந்தோசத்துக்கான காரணத்தை வெளியிடட்டும் என்று சுகன்யா காத்திருக்க, துளசி முகம் நிறைந்த புன்னகையுடன் “நான் என்னோட பிரின்ஸைப் பார்த்துட்டேன்டி” என்றாள் வெட்கத்தில் முகம் அழகாய்ச் சிவக்க.

சுகன்யா புரியாமல் விழிக்கவே துளசி “நான் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுனு ஒருத்தனை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுனேனு சொன்னேன்ல அவன் தான் என்னோட பிரின்ஸ்” என்று கூற சுகன்யாவுக்குத் தோழியை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியாத நிலை. சுகன்யாவின் மனநிலையை அறியாத துளசியோ நிறுத்தாமல் பேசிக்கொண்டே சென்றாள்.

“நான் தூங்கி முழிச்சதும் என் கண் முன்னாடி அவன் முகத்தைப் பார்த்தவுடனே ஹார்ட்ல ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு… அதுவும் அவன் சிரிச்சான் பாரு ஒரு சிரிப்பு, அதுல நான் அப்பிடியே ஃப்ளாட் ஆயிட்டேன்… அவ்ளோ அழகான சிரிப்பை நான் பார்த்ததே இல்லை தெரியுமா? அவனோட நேம் கிருஷ்ணா… பேருக்கேத்த மாதிரி சரியான குறும்புக்காரன்னு அவன் கண்ணைப் பார்த்தாலே புரிஞ்சிக்கலாம்..

ரொம்ப தைரியமா என் கிட்டவே என்னோட நம்பரைக் கேட்டான்… நான் குடுக்கலையே! பட் அவன் சொன்ன ஒரு வார்த்தை என்னை அப்பிடியே ஸ்தம்பிக்க வச்சிடுச்சு… அவன் கார்ல இருந்து கீழே விழப்போனப்போ நான் மடியிலத் தாங்குனப்போ அவனுக்கு அவங்க அம்மாவே தாங்குனது போல இருந்துச்சாம்… எனக்கு எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா?  நான் முடிவு பண்ணிட்டேன்… இந்தக் கிருஷ்ணா தான் துளசி தேடுன பிரின்ஸ்… எந்த பிரின்ஸுக்காக நான் பன்னிரெண்டு வயசுல இருந்து கனவு கண்டேனோ அந்த பிரின்ஸ் கிருஷ்ணா தான் சுகி” என்று கண்ணில் கனவு மின்ன பேசிய தோழியைக் கண்டு சுகன்யாவுக்கு ஆயாசமாக இருந்தது.

சிறுவயதோடு மூட்டைக் கட்டிவைக்க வேண்டிய ஃபேரி டேல் கதைகளை இன்னும் கட்டிக்கொண்டு அழும் அவளது குழந்தை மனப்பான்மையைக் கண்டு எப்போதுமே சுகன்யாவுக்கு ஒரு வித வருத்தம் இருக்கும். எத்தனையோ முறை திட்டியும் விட்டாள் இதெல்லாம் நிஜ வாழ்வில் சாத்தியமில்லை என்று.

கதைகளில் வரும் ராஜகுமாரன் போல நிஜவாழ்வில் நூறு சதவிகிதம் குற்றம் குறையற்ற ஒருவன் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சுகன்யா ஒவ்வொரு முறையும் அடித்துக் கூறுவாள். ஆனால் துளசி காது கொடுத்துக் கேட்டால் தானே… போதாக்குறைக்கு ராமமூர்த்தியும் இவளது பிரின்ஸ் என்ற உளறலை உரம் போட்டு வளர்த்துவிட்டார் என்று மீரா அவ்வபோது சுகன்யாவிடம் குறைபடுவதுண்டு.

ஒரு கட்டத்தில் தோழியிடம் சொல்லி அலுத்துப் போன சுகன்யா துளசியின் பிரின்ஸ் என்ற கற்பனை மனிதன் உண்மையில் வரவா போகிறான்! வயது ஏற ஏற துளசியின் மனம் அது வெறும் கற்பனை என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளப் பழகிவிடும் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்வாள் அவள்.

அப்படி எண்ணியிருக்கையில் இன்று துளசி திடுதிடுப்பென்று தனது பிரின்ஸை பார்த்துவிட்டதாகக் கூறவும் சுகன்யாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தோழியின் அந்த பிரின்ஸ் நல்லவனாக இருந்தால் சுகன்யாவுக்கும் சந்தோசமே; மாறாக அவன் துளசியின் கள்ளமற்ற உள்ளத்தை வருத்திவிட்டால் என்ன செய்வது?

அதுவுமின்றி நேற்று மாலையில் பார்த்த ஒருவன், இன்று காலையில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மணிநேரம் அவளுடன் செலவளித்த ஒருவனைத் தன் வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்குத் தைரியம் துளசிக்கு எப்படி வந்தது?

அவளின் இந்த குருட்டுத்தனமான நம்பிக்கையால் அவளுக்கு இன்னல் உண்டாகுமானால் அதை அவளால் தாங்கிக் கொள்ள இயலுமா? ஒரு வேளை அவள் சொல்லும் அந்த பிரின்ஸ் நல்லவனாக இல்லாது போய்விட்டால் என்ன செய்வது?

இவ்வாறான சிந்தனைகள் சுகன்யாவின் மனதை அலைக்கழிக்க இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் நேரடியாகத் துளசியிடமே கேட்டுவிட்டாள் அவள். பதிலுக்குத் துளசி எதுவும் பேசாமல் சிந்தனைவயப்பட்ட முகத்துடன் இருக்கவும், சுகன்யா இப்போதாவது துளசி தனது குருட்டுத்தனமான நம்பிக்கையை விடுத்து யோசிக்க ஆரம்பித்த திருப்தியில் அவளுடன் மருத்துவமனைக்குச் சென்று உணவைக் கொடுத்துவிட்டுக் கல்லூரிக்குச் செல்லத் தயாரானாள்.