🌞 மதி 7 🌛

மனித செல்லின் உட்கருவுக்குள் அமைந்திருக்கும் குரோமோசோம்கள் மரபியல் பண்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் புரதத்தினாலான கட்டமைப்புகள் ஆகும். இவை பரம்பரை பண்புகளைப் பெற்றோரிடமிருந்து அடுத்தச் சந்ததிக்குக் கடத்துகின்றன. மனித செல்லானது 23 ஜோடி குரோமோசோம்களைக் கொண்டது. இதில் உள்ள XX மற்றும் XY குரோமோசோம்களே குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கின்றன.

மாடி வராண்டாவில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அஸ்மிதா. சற்றுநேரத்துக்கு முன்னர் நடந்த கலவரத்துக்குச் சாட்சியாக சஞ்சீவினியின் கரங்களின் தடம் அவள் கன்னத்தில் செவ்வரியாய்ப் பதிந்திருக்க அவளது மனம் முழுவதும் சந்திரசேகரும் மந்தாகினியுமே வலம் வந்தனர்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் அஸ்மிதாவுக்கு நினைவிருக்கிறது.

“ஏதோ ஒரு நிமிச தடுமாற்றம் தான் சஞ்சு இது எல்லாத்துக்கும் காரணம்… நீயில்லாம வீடு வீடா இல்லை… ப்ளீஸ் என் கூட வந்துடு”

அந்த நிமிடத்தில் அவர் சொன்ன ‘ஒரு நிமிட தடுமாற்றத்தின்’ அர்த்தம் புரியும் வயதில்லை அவளுக்கு. ஆனால் இத்தனை நாட்கள் அவர்கள் வீட்டில் அடைக்கலமாகியிருந்த பவ்வியமான அவளது மந்தாகினி சித்தி அவளை அவளது தந்தையிடமிருந்து பிரித்துவிட்டாள் என்பது அவள் மனதில் ஒன்பது வயதிலேயே பதிந்து போனது.

பின்னர் பதினைந்து வயதில் இஷானியை மந்தாகினி ஏதோ கோபத்துடன் திட்ட அதற்காக அவள் நெற்றியில் தான் ஏற்படுத்தியக் காயம் கூட நினைவிருக்கிறது.

“இனிமே நீ இஷியைப் பத்தி பேசுனேனா நான் இதை விட மோசமா கூட நடந்துப்பேன்” என்று எச்சரித்ததும் கண்ணாடி டம்ளர் விழுந்த வேகத்தில் மந்தாகினியின் நெற்றியில் வழிந்த இரத்தமும் அவளுக்கு இன்னுமே நினைவிருக்கிறது.

அதன் பின்னர் தனது இந்தக் கண்மூடித்தனமான வெறுப்பு நல்லதல்ல என்ற தாயின் அறிவுரையும், தாத்தா பாட்டியின் அரவணைப்பும் இது எல்லாவற்றிற்கும் மேலாக

“நீ கோவப்படுறப்போ உன்னைப் பார்க்க பயமா இருக்கு அஸ்மி… நீ எனக்காகத் தான் கோவப்பட்டேனு புரியுது… ஆனா யாரையும் காயப்படுத்துற உரிமை நமக்கு இல்லை… கோவத்தால உண்டாகுற காயங்கள் ஆற நிறைய நாள் ஆகும் அஸ்மி… காயம் ஆறுனாலும் தழும்பு மறையாது… அதனால கோவப்படாதே” என்ற இஷானியின் வேண்டுகோளும் தான் இத்தனை நாட்கள் மந்தாகினியைச் சந்திக்கும் சமயங்களில் அவளைப் பல்லைக் கடித்துக்கொண்டு கடக்க வைத்தது.

பெரும்பாலும் ஆண்டுக்கு ஒரு முறை அவர்களின் குடும்ப நிறுமமான ஆர்.எஸ்.கெமிக்கல்ஸில் நடைபெறும் ஆண்டு பொதுக்கூட்டதுக்கு பங்குதாரர் என்ற முறையில் மட்டுமே சஞ்சீவினியுடன் அவள் செல்வது வழக்கம். அதுவும் சமீபகாலங்களில் சஞ்சீவினி அவளுடைய பிராக்ஸியாகக் கலந்து கொள்ள ஆரம்பிக்கவும் அதற்கும் அவள் செல்வதில்லை.

அதனால் மந்தாகினியையும் சந்திரசேகரையும் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு அதிகமாகக் கிடைத்ததில்லை. இன்றைய நிகழ்வு அவளின் அடக்கப்பட்டக் கோபத்தின் அடையாளமே.

இச்சிந்தனைகளுடன் அமர்ந்திருந்தவளின் அருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தவளுக்கு இஷானியும் சஞ்சீவினியும் அவளருகே நிற்பது அப்போது தான் உறைத்தது. எப்போதும் படபடவென்று பேசித் தள்ளும் மகள் இன்று அமைதியாய் இருப்பது வீட்டின் உயிர்ப்பைக் குறைத்துவிட்டதைப் போல இருந்தது சஞ்சீவினிக்கு.

இஷானியுடன் சேர்ந்து அஸ்மிதாவின் அருகில் அமர்ந்தவர் அவளது கூந்தலை வருடிக் கொடுத்தபடி

“அம்மா அடிச்சிட்டேனு கோவமா அஸ்மி?” என்று கேட்க அதற்கு மறுப்பாய் இல்லை என்று ஒரு தலையசைப்பு மட்டுமே பதிலாய் வந்தது அவளிடமிருந்து.

“அப்போ ஏன் தனியா வந்து உக்காந்திருக்க?” – இஷானி.

இப்போதும் அவள் அமைதியையே கடைபிடிக்க சஞ்சீவினி ஒரு பெருமூச்சுடன்

“நீ நினைக்கிற மாதிரி என்னால மந்தாவை அவ்ளோ ஈசியா ஹர்ட் பண்ண முடியாது அஸ்மி… அவ என்னோட தங்கச்சி… அவளும் ருத்ராவும் ரொம்பவே நல்லவங்கடா… விநாயகம் அண்ணன் தான் அவளுக்கு இல்லாததை பொல்லாததைச் சொல்லிக் குடுத்து இப்பிடி மாத்துனதே! மந்தாவுக்கு ருத்ரா மாதிரி உலக அறிவு கிடையாது… அவ படிக்க ஆரம்பிச்சதே உங்கப்பா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமா என்னை விட அவ எந்த விதத்துலயும் குறைச்சலா தெரிஞ்சிடக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத் தான்… அவளுக்கு ருத்ராவோட தெளிவும் கிடையாது, விநாயகம் அண்ணனோட குறுக்குப்புத்தியும் கிடையாது… இதைத் தெளிவா புரிஞ்சிக்கோ” என்றதும் அஸ்மிதாவின் முகம் தானாகவே கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

“மா! அந்த லேடிக்குக் குறுக்குப்புத்தி இல்லாமலா நீங்க இல்லாத நேரத்துல அப்பாவை செடியூஸ் பண்ணி கல்யாணத்துக்கு முன்னாடி கன்சீவ் ஆனாங்க?” – அஸ்மிதா.

“இப்போவும் நீ அவளைத் தான் குறை சொல்லுற அஸ்மி… அப்போ அவளுக்கு இருபத்தியேழு வயசு… பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி வாழ்க்கையில வறுமையைத் தவிர எதையும் பார்க்காதவ அவ… ருத்ராவைப் படிக்க வைக்கிறதுக்கு அவ பட்ட கஷ்டம் எவ்ளோனு உனக்குத் தெரியாது… அவளோட ஒரு நிமிச தடுமாற்றம் தப்புனா குடும்பம், பொண்டாட்டி, குழந்தைனு ஆனதுக்கு அப்புறம் வீட்டுக்கு அடைக்கலம் கேட்டு வந்த பொண்ணோட தகாத உறவு வச்சிக்கிட்ட உன் அப்பாவோட தடுமாற்றமும் தப்பு தான்… அதைப் புரிஞ்சிக்கோ” – சஞ்சீவினி.

இன்னுமே அஸ்மிதாவின் கோபம் தணியாமலிருக்கவே “அவ கெட்டவ இல்லை; உங்கப்பாவும் கெட்டவருனு நான் சொல்ல வரலை… ரெண்டு பேருமே சராசரி மனுசங்க… அவங்க பண்ணுன காரியம் பிடிக்காம நான் அவங்க வாழ்க்கையில இருந்து விலகி வந்து இன்னைக்கு எனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கிட்டேன்… எனக்கு ஒன்னுனா துடிச்சு போற பாசமான பேரண்ட்ஸ், என்னோட வாழ்க்கையை வண்ணமயமாக்குற ரெண்டு பொண்ணுங்க இதை விட எனக்கு வேற என்னம்மா வேணும்? அவங்க ரெண்டு பேரும் அவங்களோட வாழ்க்கையை வாழட்டும் அஸ்மி… நம்ம நமக்கான வாழ்க்கையை வாழ்ந்துட்டுப் போவோம்… இனிமே அவங்க மேலேயோ ருத்ரா மேலேயோ உனக்குக் கோவம் வந்தாக் கூட அதை வெளிக்காட்டிக்காதே.. உன் மனசுல வெறுப்புக்கோ, கோவத்துக்கோ இடம் குடுக்காதேடா” என்று பொறுமையாக எடுத்துரைக்கவும் அஸ்மிதாவுக்கு ஏதோ புரிந்தது போல தலையாட்டி வைத்தாள்.

இஷானி எப்படியோ சஞ்சீவினி சொன்ன விஷயம் அவளது மனதில் முழுவதுமாகப் பதியாவிட்டாலும் இனி அவள் தேவையில்லாது சந்திரசேகரையும் மந்தாகினியையும் வார்த்தைகளால் வதைப்பதாக எண்ணி அஸ்மிதா அவளையே வருத்திக்கொள்ள மாட்டாள் என்று நிம்மதியுற்றாள்.

இருந்தாலும் அவள் தலையாட்டும் விதத்தைப் பார்த்து “இவ தலையாட்டுற மாடுலேசனே சரியில்லைம்மா” என்று கேலியாய்க் கூற

“அதெல்லாம் இல்லையே! எனக்கு நல்லா புரிஞ்சுது… துஷ்டனைக் கண்டா தூர விலகணுமே தவிர வம்புச்சண்டைக்குப் போகக்கூடாது… கிட்டத்தட்ட உன்னை மாதிரி… அதானே?” என்று இவ்வளவு நேரம் இருந்த அமைதியைத் தூக்கியெறிந்து விட்டு பழைய அஸ்மிதாவாக உருமாற ஆரம்பித்திருந்தாள் அவளது சகோதரி.

“ஐ காண்ட் பிலீவ் திஸ்மா… வம்புச்சண்டைக்குப் போகலைனா நீ அஸ்மியே இல்லை… நான் சொல்லுறேன், நீங்க எழுதி வச்சுக்கோங்கம்மா! இவ நாளைக்கே சுடிதார் ஸ்லீவை மடிச்சுவிட்டுட்டுச் சண்டைக்குப் போகலையாக்கும் நான் என் பேரை மாத்திக்கிறேன்” என்று விடாமல் அவளைச் சீண்டிய இஷானியை நோக்கியவள்

“நானே திருந்தணும்னு நினைச்சாலும் இந்த மாதிரி சில்வண்டுகள் என்னைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்குதும்மா… போடி! நான் இனிமே அமைதியின் திருவுருவமா மாறப்போறேன்… இது அஸ்மிதாவோட சபதம்” என்று உணர்ச்சிப்பெருக்குடன் அவள் கூறவும் அவளது பாவனையில் கலகலவென்று நகைக்க ஆரம்பித்தனர் சஞ்சீவினியும் இஷானியும்.

சஞ்சீவினி அஸ்மிதாவின் கன்னத்தை வருடியவர் “வலிக்குதாடா?” என்று கேட்க இல்லையென்று மறுத்தவள் “என்னை மாதிரி சிங்கப்பெண்ணுக்கு இந்த மாதிரி விழுப்புண்ணெல்லாம் மெடல் மாதிரிம்மா” என்று சொல்லவே மீண்டும் அங்கே மூவரின் சிரிப்புச்சத்தம் கலகலவென்று ஒலிக்க ஆரம்பித்தது.

ஆனால் இந்த உலகில் சபதங்கள் எடுக்கப்படுவதே உடைக்கப்படத் தான் என்பதை மறுநாள் காலையிலே உணர்ந்து கொண்டாள் அஸ்மிதா. அதற்குக் காரணமானவனுடன் தனது வாழ்க்கையே பிணைக்கப்படப் போகிறது என்பதை அறியாது அன்றைய நாள் ஆரம்பித்தது அஸ்மிதாவுக்கு.

எப்போதும் போல இஷானியின் கானம் அவளை எழுப்ப வழக்கம் போலத் தாமதமாக நடனப்பயிற்சிக்குச் சென்றவளின் மனம் அன்று நிலையாக இல்லை. தப்பும் தவறுமாக ஆடிக் கொண்டிருந்தவளிடம்

“அஸ்மி அகெய்ன் அண்ட் அகெய்ன் நீ தப்பா அபிநயம் பிடிக்கிற… அப்பிடி இல்லை இப்பிடி” என்று ஆயிரம் முறை சொல்லிக் களைத்துப் போய்விட்டாள் இஷானி.

ஒரு கட்டத்தில் அஸ்மிதா முடியாமல் ஆடுவதை நிறுத்தியவள் “என்னை விட்டுடு இஷி! வராத டான்ஸை வா வானு சொன்னா எப்பிடிடி வரும்? எனக்கும் பரதத்துக்கும் எட்டாம் பொருத்தம்டி” என்று சலித்துவிட்டு வியர்வையைத் துடைத்துக் கொள்ள இஷானி அதற்கெல்லாம் அசரவில்லை.

“ஒழுங்கு மரியாதையா நான் சொல்லிக் குடுத்த மாதிரி ஆடு” என்று மிரட்டி ஆட வைத்தவள் பயிற்சியின் முடிவில் “இன்னைக்கு உன்னோட கவனம் டான்ஸ்ல இல்ல அஸ்மி… என்னாச்சு உனக்கு?” என்று அவளிடம் வினவியபடியே வீட்டை நோக்கி நடைபோட்டாள்.

அஸ்மிதா ஒன்றுமில்லை என தோளைக் குலுக்கியவள் இஷானியுடன் சேர்ந்து வீட்டினுள் நுழைகையில் அலமேலு தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.

“இல்ல மேரி! சஞ்சு காலங்காத்தாலே செழியன் எதுக்கோ கூப்பிடுறாருனு அவசரமா கிளம்பிப் போயிட்டாளே” என்று அங்கலாய்த்த அலமேலுவிடம் யாரிடம் பேசுகிறீர்கள் என்று சைகையால் வினவினாள் இஷானி.

அலமேலு பேசிக்கொண்டிருந்தபடியே வீட்டின் வடக்குப்பக்கத்தைக் கையால் சுட்டிக்காட்ட அவர் துளி நிறுவனத்தைத் தான் சொல்கிறார் என்று புரிந்து போனது இருவருக்கும். விறுவிறுவென அவரிடம் சென்ற அஸ்மிதா தான் பேசுவதாகச் சொல்லிவிட்டு அவரிடமிருந்து தொலைபேசியை வாங்கிக் கொண்டவள் “என்னாச்சு மேரிக்கா? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்க துளியின் தலைமை அலுவலரான மேரி அவளிடம் அனைத்தையும் ஒன்று விடாது ஒப்பித்துவிட்டார்.

வி.என்.குழுமத்தின் பொதுமேலாளர் துளி நிறுவனத்துக்கு வந்திருப்பதாகவும் கட்டிடம் அமைந்துள்ள இடத்தைத் தங்கள் குழுமத்துக்குக் கொடுப்பதால் அவர்களுக்குக் கிடைக்கப்போகிற நன்மைகளை விலாவரியாக விளக்கிக் கொண்டிருப்பதைத் தான் தெரிவித்தார் மேரி.

துளியைப் பொறுத்தவரைக்கும் அந்த இடத்தைத் தாங்கள் யாருக்கும் கொடுக்கத் தயாராக இல்லையென்று எப்போதோ வி.என்.குழுமத்தின் தலைமை அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டார்கள். இருப்பினும் மீண்டும் மீண்டும் ஒருவர் மாற்றி ஒருவர் வி.என் குழுமத்திலிருந்து வந்து ஆசைக்காட்டிக் கொண்டே இருந்தனர். இன்றும் அப்படி பொதுமேலாளர் என்று ஒரு ஆள் வந்திருப்பதாகத் தெரிந்ததும் அஸ்மிதா இஷானியை அழைத்துக்கொண்டு நேரே அங்கேயே சென்றுவிட்டாள்.

துளி தொண்டு நிறுவனம்என்ற பெயர்ப்பலகையைத் தாங்கிய பிரம்மாண்டமானத் தூண்களுடன் அவர்களை வரவேற்றது நான்கு மாடிக் கட்டிடங்களும் பரந்த தோட்டமும், சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடன் இருந்த அந்நிறுவனம். குழந்தைகள் அனைவரும் காலையுணவை முடித்துவிட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் பள்ளிக்குச் சென்றுவிட இளம்பெண்கள் கல்லூரிக்கும் இன்னும் சிலர் அந்த வளாகத்தினுள் அமைந்திருக்கும் துளியின் அலுவலகத்துக்கும் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

தோட்டத்தில் செடிகளுக்கு நீர் பாய்ந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் சமையலறையில் மதியத்துக்குத் தேவையான சமையலுக்குக் காய்கறி நறுக்கும் வேலை ஜரூராக நடந்துகொண்டிருந்தது. அப்படியே அதன் மையத்தில் இருக்கும் அலுவலகக் கட்டிடத்தினுள் நுழைந்தனர் இருவரும்.

அங்கே மேரி தர்மச்சங்கடத்துடன் நிலமையை விளக்கிக் கொண்டிருக்க அவர் எதிரே இந்த இருவருக்கும் முதுகு காட்டியபடி அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன்.

இஷானிக்கும் அஸ்மிதாவுக்கும் அவனது முகம் தெரியாது போகவே இருவரும் விறுவிறுவென்று உள்ளே நுழைய அவன் யாரோ வருகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தான்.

இஷானி அவனைக் கேள்வியாய் நோக்க அஸ்மிதா அப்படி ஒருவன் இருப்பதையே கவனியாதது போல “என்னாச்சு மேரிக்கா? இவருக்கு என்ன வேணுமாம்?” என்று கேட்டுவிட்டு அந்த மனிதனை நோக்க அவளது பார்வைவீச்சில் தடுமாறிப் போனான் அந்த வாலிபன்.

அஸ்மிதாவும் அவனது தடுமாற்றத்தைக் கவனித்தாள். அவன் முகத்தில் அப்பாவிக்களை சொட்டியது. அலுவலகத்துக்குச் செல்வது போல ஃபார்மலாக உடை அணிந்து கழுத்தில் ஐ.டி.கார்டுடன் அமர்ந்திருந்தவன் பார்ப்பதற்குப் பொறுமைசாலியாகத் தெரிந்தான். தெளிந்த முகத்துடன் இருந்தவன் மூவரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தான்.

“மேடம் எங்களோட இங்க ஒரு ஷாப்பிங் மால் கட்டுறதா இருக்கோம்… அதுக்கு இந்த இடம் சூட்டபிளா இருக்கும்னு எங்க எம்.டி யோசிக்கிறாரு… இதுக்கு எவ்ளோ வேல்யூ நீங்கச் சொன்னாலும் எங்க கம்பெனி குடுக்கிறதுக்கு ரெடியா இருக்கு மேடம்” என்றவனின் வார்த்தைகள் கடைந்தெடுத்த கார்பரேட் ஊழியனின் வார்த்தைகளாகவே அஸ்மிதாவுக்கும் இஷானிக்கும் தோணியது.

“வெல்! வெறும் பணத்தை மட்டும் வச்சு என்ன பண்ணுறது சார்?” என்று கையைக் கட்டிக்கொண்டு வினவினாள் அஸ்மிதா.

“மேடம் உங்களோட டிரஸ்டுக்கு இயர்லி ஒரு பெரிய அமவுண்டை எங்க கம்பெனி டொனேசனா குடுக்கும்… அப்புறம் நீங்க புதுசா ஆரம்பிக்கிற புராஜெக்டை எங்களோட சி.எஸ்.ஆர்.கமிட்டியை வைச்சு அப்ரூவ் பண்ணி நாங்களே ஃபண்டிங் பண்ணுவோம்” என்று அதன் சாதகங்களை அடுக்கிக் கொண்டே சென்றான் அவன்.

அஸ்மிதா நிறுத்து என்பதைப் போல சைகை காட்டியவள் “நான் சொன்னதோட அர்த்தத்தை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க மிஸ்டர்… வாட் எவர் மே பி… எங்களுக்கு இந்த லேண்டை உங்க குரூப்புக்குக் குடுக்கிற ஐடியா கிடையாது… இது எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிறது தான் எங்களுக்கு வசதி… அதோட நீங்க சொல்லுற டொனேசன், சி.எஸ்.ஆர் ஃபண்ட் எல்லாமே இன்கம்டாக்ஸ் பர்பஸ்கு தானே… நானும் காமர்ஸ் கிராஜூவேட் தான் சார்… சோ உங்களோட சுகர் கோட்டட் வேர்ட்ஸ்ல மயங்கி இடத்தைக் குடுத்துடுவோம்னு நினைச்சிங்கனா வீ ஆர் வெரி வெரி சாரி… யூ மே கோ நவ்” என்று சிரமத்துடன் கோபத்தை அடக்கிக்கொண்டு தனது சபதத்தை நினைவு கூர்ந்தபடி வாசலை நோக்கிக் கை காட்டினாள் அவள்.

ஆனால் அந்த இளைஞன் கல்லுளிமங்கனாக “இல்ல மேடம் நீங்க எமோசனலா யோசிக்கிறிங்க… கொஞ்சம் பொறுமையா யோசிங்க” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தவே

“சார் எங்களோட டிசிசன் இது தான்! எப்போவுமே மாறாது” என்று இஷானி தன்னால் முயன்றளவுக்கு அவனுக்குத் தெளிவுபடுத்தத் தொடங்கினாள்.

ஆனால் வந்திருந்தவனோ “மேடம் நீங்க எல்லாருமே புரியாம பேசுறிங்க… ஐ வான்ட் டு ஸ்பீக் வித் மிஸ் சஞ்சீவினி ராஜகோபாலன்… ஒரு மேனேஜிங் டிரஸ்டியா அவங்களால இதோட சாதக, பாதங்கங்களைப் புரிஞ்சுக்க முடியும்” என்று பிடிவாதம் பிடிக்க அஸ்மிதா அவனது பேசும் பாணியில் எரிச்சலுற்றாள்.

“அவங்க எடுப்பு, துடுப்பு கிட்டலாம் பேச மாட்டாங்க மிஸ்டர்” என்றாள் வெடுக்கென்று.

“மேடம் ப்ளீஸ் கொஞ்சம் மரியாதையா பேசுங்க” என்று சொன்னவனின் குரல் அமைதியாக இருந்தாலும் அவன் முகம் அஸ்மிதாவின் எடுப்பு துடுப்பு என்ற வார்த்தையில் கலங்கிப் போயிருந்தது.

ஆனால் அஸ்மிதா அவன் சொன்ன வார்த்தையில் எரிச்சலுற்றவள் “ஹலோ முதல்ல நீ எழுந்திரி… எழுந்திரி மேன்” என்று அதட்ட, அவளது குரலில் திடுக்கிட்டவன் பதறிக்கொண்டு எழுந்தான்.

முந்தைய நாள் இஷானி சொன்னது போல சுடிதாரின் முக்கால் நீள ஸ்லீவை மடக்கிவிட்டபடி “உனக்கு, உன்னோட சோ கால்ட் எம்.டிக்குலாம் ஒரு தடவை சொன்னா புரியாதா? நானும் பார்த்துட்டே இருக்கேன் வந்ததுல இருந்து ஒரே டயலாக்கைக் கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிக்கிற” என்று அவனை நோக்கி முன்னேற அந்த வாலிபன் வெடவெடத்துப் போனான்.

“இ..இங்க பாருங்க… நீ…ங்க இப்பிடிலாம் என்னைத் திட்டுறது கொஞ்சம் கூடச் சரியில்ல” என்று திக்கித் திக்கிச் சொன்னவன் விட்டால் அழுதுவிடுவான் போல.

“ஓ! நீங்க எனக்கே நல்லது கெட்டது சொல்லித் தர்றிங்களோ?” என்று அதற்கும் எகிறிய அஸ்மிதா அப்போது அவன் போன் அடிக்கவே அவன் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்கும் முன்னர் போனை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்.

இதை மேரியுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இஷானி இந்த நிமிடத்தோடு அஸ்மிதாவின் சபதம் முடிந்துவிட்டது என்று புரிந்து கொண்டவள் அவளைத் தடுக்க முயல, அவளை விழியால் அடக்கிவிட்டு அந்த வாலிபனின் போனை நோக்கினாள்.

தொடுதிரையில் எம்.டி என்று பெயர் வரவே போனைக் காதில் வைத்தவள் மறுமுனையிலிருப்பவன் பேசுகிறானா இல்லையா என்று கூட கவனிக்கவில்லை. எடுத்ததும் பாப்கார்ன் போல வெடிக்க ஆரம்பித்தாள்.

“ஹலோ மிஸ்டர் எங்களுக்கு இந்த லேண்டை உங்க கன்சர்னுக்குக் குடுக்கிற ஐடியா இல்லை… அதனால இனிமே கஜினிமுகமது மாதிரி எங்க டிரஸ்டுக்கு படை எடுக்காதிங்க.. முக்கியமா உங்க ஜி.எம் மிஸ்டர்…” என்று சொன்னவள் அவனது ஐ.டி கார்டைப் பற்றி இழுக்கவும் அந்த வாலிபனும் சேர்ந்து அவளருகில் வர அதில் ‘ஜெய், ஜெனரல் மேனேஜர்’ என்று எழுதப்பட்டிருப்பதை வாசித்துவிட்டு

“ஆங்… ஜெய்… உங்க ஜி.எம் மிஸ்டர் ஜெய் இங்க வரவே கூடாது… அப்பிடி வந்தான்னு வைங்க, நெக்ஸ்ட் டைம் அவனுக்கு உள்காயம் கொஞ்சம் அதிகமா இருக்கும்… பீ கேர்ஃபுல்” என்று எச்சரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துப் போனை அவனிடம் நீட்டினாள்.

ஐ.டி.கார்டைப் பற்றியபடியே “இங்க பாருப்பா ஜெய்! இனிமே உன் நிழல் கூட இந்தக் காம்பவுண்டுக்குள்ள வரக்கூடாது… தப்பி வந்துச்சு….” என்று இழுத்தபடி அவனது ஐ.டி.கார்டின் கயிறைப் பிடித்து இறுக்கவும் ஜெய்கு கழுத்து இறுகியதில் இருமல் வர ஆரம்பித்தது.

“ஐயோ மே…டம் இனிமே வர…மா…ட்டேன்… என்னை விட்…டுருங்க” என்று சொல்லிமுடிக்கும் முன்னர் அவன் தொண்டையிலிருந்து இருமல் சத்தம் மட்டுமே வெளிவந்தது.

இஷானி அவசரமாக அஸ்மிதாவின் கையைப் பற்றி இழுத்தவள் “விடுடி அஸ்மி! இவரு என்ன செய்வாரு பாவம்.. அவருக்குக் குடுத்த வேலையைச் செய்யுறாரு” என்று ஜெய்கு பரிந்து பேசவும் இன்னும் இருமிக் கொண்டிருந்தவனின் முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு ஐ.டி.கார்டை விடுவித்தாள் அஸ்மிதா.

“திரும்பிப் பார்க்காம கிளம்பு” என்று அவனை மிரட்டவும் ஜெய் பயத்துடன் போனைத் தடுமாறியபடியே பாக்கெட்டில் வைக்கிறேன் பேர்வழியாகத் தவறவிடவே போன் கீழே விழுந்தது.

பதற்றத்துடன் அதை எடுத்துக்கொண்டவன் “வ..வ..வர்றேன் மேடம்” என்று வாயில் தந்தியடிக்க

“அடிங்க! உன்னை இங்கே வரக்கூடாதுனு சொல்லிட்டிருக்கேன், நீ மறுபடியும் வர்றேனா சொல்லுற?” என்று சிலிர்த்துக் கொண்டு மீண்டும் அவன் அருகில் வர, ஜெய் விட்டால் போதுமென்று வேகமாய்ப் பாய்ந்து வெளியே ஓடியவன் அலுவலகத்தை விட்டு வெளியேறி அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவனது காரின் அருகில் சென்று மூச்சு வாங்க நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“பொண்ணா இது! ராட்சசி… விட்டா என்னைக் கழுத்தை நெறிச்சுக் கொன்னுருக்கும்” என்று சொல்லி முடிக்கும் முன்னர் இருமல் வரவே கழுத்தைத் தடவிவிட்டபடி இருமியவன் அலுவலக வாயிலில் அஸ்மிதா கையைக் கட்டிக்கொண்டு முறைப்பதைப் பார்த்ததும் வேகமாக காரில் அமர்ந்தவன் அடுத்த நொடி அங்கிருந்து சிட்டாய்ப் பறந்தான்.

அவன் கார் வெளியேறியதும் அஸ்மிதா தோளைக் குலுக்கியவள் “ஹப்பாடா! இன்னைக்குக் கோட்டா முடிஞ்சுது” என்று சாதாரணமாகச் சொல்லவும்

“அடிப்பாவி! சண்டை போடுறதுல கூட கோட்டாவா உனக்கு?” என்று இஷானியுடன் சேர்ந்து மேரியும் கேலி செய்ய

“ஒய் நாட்? சண்டை போடும் பழக்கம் ஒவ்வொரு பொண்ணுக்குள்ளவும் ஒளிஞ்சிருக்கும்… நம்மலாம் புலியை முறத்தால அடிச்சு விரட்டுன வீரமங்கையோட வம்சம்மா… இந்தக் கொசுவை அடிச்சுத் தூக்கிப் போட எவ்ளோ நேரம் ஆகும்?” என்று அமர்த்தலாகச் சொன்னபடி இருவரின் தோளில் கை போட்டபடி அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛