🌞 மதி 50🌛

2018 ஏப்ரலில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாஹூ அறிக்கையில் ‘தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கிவரும் தாதுமணல் நிறுவனங்கள் மொத்தம் 1,55,48,680 டன் அளவு கன கனிமங்களைக் கொண்ட தாது மணலை இருப்பு வைத்திருக்கின்றன. ஆனால் அந்நிறுவனங்கள் தங்களிடம் 85,58,734 டன் அளவு தாதுமணல் தான் உள்ளது என அறிவித்திருக்கின்றன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

வினாயகமூர்த்தியின் எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் வழக்கமான நிமிர்வுடன் அமர்ந்திருந்தாள் மானசாதேவி. அவரது கழுகுக்கண்களும், குயுக்தி நிறைந்த பேச்சும் இந்த மனிதம் அபாயகரமானவன் என்பதை அவளுக்குத் தெரிவிக்க மானசா அதை பெரிதுபடுத்தாமல் அவரிடம் தங்கள் கிராமத்து மக்கள் இத்தனை வருடங்கள் அவர்களின் தொழிற்சாலையால் அனுபவித்துவரும் துன்பங்களை பட்டியலிடத் தொடங்கினாள்.

வினாயகமூர்த்தி அவளது பேச்சை ஏதோ கதை கேட்பது போல சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் அவள் முடித்ததும் “அதுக்கு இப்போ என்ன செய்யலாம்னு சொல்லுறம்மா?” என்று கேட்டார் அலட்சியம் தெறிக்கும் குரலில்.

“உங்க ஃபேக்டரி தனியாருக்குச் சொந்தமான இடத்துல மண் அள்ளுறதை நிறுத்தச் சொல்லி ஒரு ஆர்டர் பாஸ் பண்ணுங்க… அதோட சேஃப்டி மெசர்சை ரெகுலேட் பண்ணுங்க… முக்கியமா உங்களை எதிர்த்துக் குரல் குடுக்கிறவங்களோட குரல்வளையை நெறிக்கிற வேலையை தயவுபண்ணி செய்யாதிங்க”

கிட்டத்தட்ட கட்டளை போல சொல்லிமுடித்துவிட்டு அவரை ஏறிட்டாள் மானசா. வினாயகமூர்த்தி எரிச்சலுடன் “நீ சொல்லுறதலாம் செய்யுறதுக்கு எவ்ளோ செலவு ஆகும்னு தெரியுமா? இந்தக் கம்பெனியை இத்தனை வருசமா கட்டிக் காப்பாத்திட்டு வர்றது இப்பிடி தெண்டச்செலவு செய்யுறதுக்கு இல்ல… ஒவ்வொரு காசுக்கும் ஷேர்ஹோல்டருக்குக் கணக்கு சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அவளது வேண்டுகோள்கள் மறுக்கப்பட்டது என சொல்லாமல் சொல்லிவிட்டார்.

மானசா அதற்காக மனம் தளரவில்லை. அவள் கைவசம் இருந்த ஆயுதம் அப்படி. முகத்தில் புன்னகையைப் பூசிக்கொண்டவள்

“ஓகே! அப்போ உங்க ஃபேக்டரியில மோனசைட்டை எக்ஸ்ட்ராக்ட் பண்ணுறது, தோரியத்தை இல்லீகலா வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட்…ப்ச்… கடத்துறது, ஹார்பர்ல உங்களை எதிர்த்த நேர்மையான ஆபிசர்களை மிரட்டுறது இதைலாம் செய்யுறதுக்கு உங்களுக்கு ஷேர்ஹோல்டர்ஸோட பெர்மிஷன் தேவையில்லையா மிஸ்டர் வினாயகமூர்த்தி?” என்று கேட்டுவிட்டுப் புருவத்தை ஏற்றி இறக்கவும் வினாயமூர்த்திக்கு தூக்கி வாரிப்போட்டது.

இத்தனை வருடங்களாகச் சந்திரசேகருக்குக் கூட தெரியாது கட்டிக் காட்டி வந்த இரகசியத்தை இப்பெண் எப்படி அறிந்துகொண்டாள் என்ற அதிர்ச்சியுடன் மானசாவை நோக்கினார்.

“என் கிட்ட இது எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு வினாயகமூர்த்தி சார்… என்னை எதுவும் பண்ண நினைச்சிங்கனா என்னோட டீம் உங்களுக்கு எதிரா அந்த ஆதாரங்களை யூஸ் பண்ணுவாங்க… எது எப்பிடியோ கம்பி எண்ண தயாராகிக்கோங்க” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியவளை கொலை செய்யும் அளவுக்கு வினாயகமூர்த்திக்கு ஆத்திரம்.

ஆனால் முடியாதே! திருடனுக்குத் தேள் கொட்டினால் அவனால் கத்தவும் முடியாது, அழவும் முடியாது. இந்த விசயம் சந்திரசேகருக்குத் தெரியவந்தால் என்னாவது என்று பதறியவர் அதற்குள் இவளை சரிகட்ட வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டார்.

எவ்வளவு கஷ்டப்பட்டு தாதுமணல் ஆலைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தன்னை எதிர்ப்பவர்களை பரலோகம் அனுப்ப ஆட்களைத் தயார்ப்படுத்தியிருந்தார். துறைமுக அதிகாரிகளைச் சமாளிக்க எவ்வளவு பணத்தைத் தண்ணீராகச் செலவளித்திருந்தார். எல்லாமே மோனசைட் ஏற்றுமதியிலிருந்து கொட்டும் பணத்துக்காகத் தான். சட்டப்படி மோனசைட் 0.75 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கும் தாது மணலைத் தனியார் நிறுமங்கள் வெட்டி எடுக்க கூடாது. ஆனால் அதற்கென நடந்த பரிசோதனைமுயற்சிகளை எப்படியெல்லாம் தடுத்து நிறுத்தி மோனசைட் பற்றிய விவரம் வெளிவராதவாறு பார்த்துக் கொண்டார்.

மோனசைட்டில் அடங்கியிருக்கும் தோரியத்துக்கு அணு உலைகளில் தேவை அதிகம். எனவே வெளிநாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்து சந்திரசேகர் அறியாவண்ணம் ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்தவர் இன்று ஒரு சிறு பெண்ணின் முன்னே அதிர்ந்து போய் நிற்கிறார்.

இனி அவளைச் சமாளிப்பது மட்டுமே அவர் எதிரே உள்ள சவால். அதற்கான வேலைகளில் இறங்கத் தொடங்கினார் வினாயகமூர்த்தி.

மானசா இதை அறியாது வீட்டுக்கு வந்தவள் ஜீவானந்தத்திடம் விசயத்தைக் கூற அவரோ எப்போதும் அவளது வேலையில் தலையிடாதவர் இன்று மாற்றுக்கருத்து சொல்லவும் மானசா அதிர்ந்தாள்.

“தேவிம்மா நீ இந்த தடவை ஆழம் தெரியாம கால விடுறியோனு அப்பாக்குத் தோணுதும்மா… எல்லாரும் ஜெய் மாதிரி யோசிக்க மாட்டாங்க… அதுலயும் ஆர்.எஸ் க்ரூப் எம்.டியோட கன்ட்ரோல் அதோட ஜி.எம் வினாயகமூர்த்தி கையில தான் இருக்குனு ஜெய் சொல்லுறான்… அவன் சொல்லுறதை வச்சு பார்த்தா அவங்க எந்த எல்லைக்கும் போகத் தயங்காதவங்கனு புரியுது… அவங்களால உனக்கு எதுவும் ஆகிடுமோனு எனக்குப் பயமா இருக்குடா.. நீ, ரிஷி, பிஜூ மூனு பேரும் நாளைக்கு ட்ரெயினுக்கு ஊருக்குக் கிளம்புற வழிய பாருங்க”

அவர் சொன்னவை அனைத்தும் தன் மீதுள்ள அக்கறையினால் தான் என்று மானசாவுக்குப் புரிந்தாலும் அவளால் இப்படி போராட்டத்தைப் பாதியிலேயே விட்டுச் செல்ல முடியாதே! அப்படி சென்றால் அவளது போராட்டத்துக்கு அர்த்தமின்றி போய்விடும். எனவே தன்னால் ஊருக்குக் கிளம்ப முடியாது என்பதை வெளிப்படையாகத் தந்தையிடம் கூறியவள் தான் ஆர்.எஸ் க்ரூப் அலுவலகத்துக்குச் சென்றது அவருக்கு எப்படி தெரியவந்தது என்று கேட்டுவைக்க அவர் அதற்கு பதிலளிக்காது நகர்ந்துவிட்டார்.

ரிஷியும் பிஜூவும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க அவர்களிடம் “யாருடா அப்பா கிட்ட இப்பிடி இல்லாதது, பொல்லாததை சொன்னது?” என்று முறைக்க ரிஷி எதுவும் சொல்லாமல் அமைதி காத்தான்.

ஆனால் அவளது இளம்வயது தோழன் பிஜூ “எல்லாம் அந்த ஜெயதேவ்வோட வேலை தான் மானசா… அந்தாளு கிட்ட இருந்து தான் சாருக்குக் கொஞ்சநேரம் முன்னாடி கால் வந்துச்சு” என்று எடுத்துக் கொடுத்தான். அதைக் கேட்டதும் மானசாவின் முகம் கோபத்தில் சிவப்பதைக் கண்டவன் மனதுக்குள் இனி ஜெயதேவை அவள் உண்டு இல்லை என்றாக்கிவிடுவாள் என உள்ளுக்குள் குதூகலித்தான்.

அவனுக்கு ஜெயதேவை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. ஜீவானந்தத்தைச் சந்திக்க வந்தவனின் விழிகள் அடிக்கடி மானசாவின் மீது பட்டு மீள்வதை ஒருவித அசூயையுடன் கண்டிருந்தவன் மானசாவுக்கு இன்றைய தினம் வழங்கிய அறிவுரைகளையும் ஒட்டுக்கேட்டுவிட்டான்.

எங்கே ஜெயதேவ் மானசாவை நேசித்துவிடுவானோ என்ற அச்சம் உள்ளுக்குள் அவனுக்கு அமைதியின்மையைத் தோற்றுவித்திருந்தது. அதோடு அவனது நேசத்துக்கு மானசாவும் தலை சாய்த்துவிட்டால் விவரம் தெரிந்த வயதிலிருந்து அவளை நேசிக்கும் தனது மனம் சுக்குநூறாகிவிடுமே என்ற உதறல் அவனுக்கு.

அதை எப்படி தடுப்பது என்று யோசித்தவனுக்கு இன்றைய தினம் ஜெயதேவ் ஜீவானந்தத்துக்குப் போன் செய்து மானசாதேவியின் பாதுகாப்பு குறித்து எச்சரித்தது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. மானசாவுக்குத் தனது வேலையில் மூன்றாவது நபர் குறுக்கிட்டால் பிடிக்காது என்பதால் கட்டாயம் அவள் ஜெயதேவின் மீது கோபமுறுவாள் என்று எதிர்பார்த்தான் பிஜூ.

அவன் எதிர்பார்த்தபடியே அன்று முழுவதும் மானசதேவி ஜெயதேவ் மீது கோபத்துடன் தான் உலாவினாள். ரிஷியிடமும் பிஜூவிடமும் அவனைப் பற்றி வறுத்தெடுத்தவள்

“போறப்போ அவன் என்ன சொல்லிட்டுப் போனான் தெரியுமா? நம்மளை மாதிரி போராளிங்களுக்குக் கிடைக்கிற பெரிய வெகுமதி மரணம் தானாம்… அதனால நான் சீக்கிரம் போய் சேர்ந்து அப்பாவுக்குப் புத்திரிசோகத்தை ஏற்படுத்திடக் கூடாதாம்… சரியான இடியட்… நான் எப்பிடி போனா அவனுக்கு என்ன? அப்பாவுக்குப் போன் பண்ணி அவரை பிரெயின் வாஷ் பண்ணிருக்கான் பாரு ரிஷி! இவன் மட்டும் சொல்லலைனா அந்த தேவ் தான் இதுக்குலாம் காரணம்னு எனக்குத் தெரியாமலயே போயிருக்கும்” என்று பிஜூவைப் பார்க்க வழக்கம் போல அவளது பார்வையில் அவன் உடலில் ஆயிரம் வாட்ச் மின்சாரம் இதமாய் தாக்கியது போன்ற உணர்வு எழுந்தது.

ஆனால் இதற்கு எதிர்மறையாக ரிஷி பேச ஆரம்பித்தான்.

“தப்பு தேவி! அவரு உன் மேல உள்ள அக்கறையில தான் கோவப்படுறாருனு உனக்கு இன்னுமா புரியல?”

ரிஷியின் வாதம் பிஜூவுக்கு எட்டிக்காய் போலிருக்க அவனை முறைத்தவன் “தேவி மேல நமக்கு இல்லாத அக்கறையா ஒரு மூனாவது மனுசனுக்கு இருக்கப் போகுது ரிஷி? நம்ம தான் அவ கூட எப்போவுமே இருக்க போறோம்… புதுசா வந்தவங்களுக்குச் சப்போர்ட் பண்ணுறேனு தேவி மனசை கஷ்டப்படுத்தாதே” என்று அழுத்தம் திருத்தமாக அவனது பேச்சை மறுத்தான் அவன்.

ரிஷி புருவம் சுருக்கியவன் “உங்க ரெண்டு பேரையும் விட தேவ் சாரை எனக்கு நல்லாவே தெரியும்… என்ன பார்க்கிறிங்க? இந்த ரெண்டு மாசமா நம்ம ஊர்ல இருக்கிற அவரோட ஃபேக்டரியில அவர் கொண்டு வந்த சேஞ்சஸ் எல்லாமே தேவியோட ஆலோசனைப்படி பண்ணுனது தான்… அதுக்கு அவருக்கு அப்பப்போ வந்த டவுட்டை கிளியர் பண்ண நான் அவரை அடிக்கடி மீட் பண்ணிருக்கேன்… அவர் பிசினஸ் மேன் தான்… தன்னோட லாபத்துக்காக தான் அவர் இவ்ளோ தூரம் மெனக்கெடுறாருனு புரியுது… ஆனா எல்லா முடிஞ்சதுக்கு அப்புறம் தேவி எக்கேடு கெட்டா என்னனு போகாம நம்ம இப்போ மோதுற ஆளுங்களைப் பத்தி நம்மளை வார்ன் பண்ணுனா அது உங்க கண்ணுக்குக் குத்தமா தெரியுதா?” என்று படபடவென்று பொரிந்து தள்ளினான்.

அதன் பின்னர் தான் பிஜூவும் வாயை மூடினான். ஆனால் மனதுக்குள் ஜெயதேவ்வின் மேல் உண்டான கசப்புணர்வு மாறவில்லை. அதற்கு மாறாக மானசாதேவியோ ரிஷி என்ன தான் சமாதானம் சொன்னாலும் தனது வேலையில் தலையிடும் அதிகாரத்தை ஜெயதேவுக்கு யார் கொடுத்தது என்று கொதித்துப் போயிருந்தாள்.

அதே நேரம் ஜெயதேவும் ஜீவானந்தத்தின் போன் காலுக்குப் பின்னர் அதே கொதிநிலையில் தான் இருந்தான். வீட்டுக்கு வந்ததில் இருந்து அவன் முகம் சரியில்லாததைக் கண்ட அவனது பெற்றோரும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் கண்ஜாடையில் பார்த்துப் பேசிக் கொண்டனர்.

விஸ்வநாதன் தொண்டையைச் செறுமியவர் “என்னாச்சு தேவ்? எதுவும் பிரச்சனையா என்ன? நீ தான் ஆழியூர் யூனிட் ப்ராப்ளமை சரி பண்ணிட்டியேடா… இன்னும் ஏன் டென்சனா இருக்க?” என்று வினவ

“ப்ராப்ளம் ஆழியூர் யூனிட்டால இல்ல டாட்… ஆழியூர் பொண்ணால…” என்று சொல்லிவிட்டுக் கடமைக்கு உணவை உள்ளே தள்ளினான் தேவ். அவன் அவ்வாறு சொன்னதும் சாந்தினி கணவரையும் மாமனாரையும் பார்த்தவர்

“கடைசியில நான் சொன்னது தான் நடந்துருக்கு பாருங்க… இவன் டென்சனுக்கு மானசா தான் காரணமா இருப்பானு சொன்னேனா இல்லயா? நான் சொன்னபடி தான் நடந்திருக்கு” என்று தன் கணிப்பு சரியானதைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.

“சரி விடு தேவ்! நீ பார்க்காத பிரச்சனையா? சங்கரராமனோட பேரனுக்கு இதுலாம் தூசி மாதிரிடா” என்று பேரனைத் தட்டிக்கொடுத்தார் அவனது தாத்தா.

இவ்வாறான உரையாடல்களுடன் இரவுணவு முடிய சாந்தினியும் விஸ்வநாதனும் உறங்கச் சென்றுவிட ஜெயதேவுக்கு உறக்கம் வரவில்லை. தோட்டத்தில் நிலைகொள்ளாமல் உலாவியவன் அவனது தாத்தாவின் கண்ணில் பட்டுவிடவே பேரனது பிரச்சனைக்குத் தீர்வு சொல்ல அவனை நெருங்கினார் அவர்.

தாத்தாவைக் கண்டதும் நடப்பதை நிறுத்தியவன் தோட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அவரை அமரச் சொல்லிவிட்டுத் தானும் அமர்ந்தான்.

சங்கரராமனுக்கு அவனது நிலைகொள்ளாத்தன்மைக்குக் காரணமானவள் மானசாதேவி என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஏனெனில் இந்த இரண்டு மாதங்களில் அவளைப் பற்றியும் அவளது செயல்பாடுகள் பற்றியும் ஜீவானந்தம் வாயிலாகக் கேட்டவற்றை வீட்டில் வந்து கொட்டும் பணியை அவன் செவ்வனே செய்து கொண்டிருந்தான். அவன் வயது வாலிபன் காரணமின்றி ஒரு பெண்ணின் குணநலனைப் பற்றி சிலாகிப்பதில்லை என்பது புரியாதவர்கள் அல்ல அவனது குடும்பத்தினர்.

எனவே தான் அவனது இன்றைய பதற்றத்துக்கும் மானசாதேவி தான் காரணமாக இருக்க முடியுமென ஊகித்துக் கொண்டனர். ஜெயதேவ் தாத்தாவிடம் இன்றைய தினம் தனக்கும் மானசாவுக்கும் நடந்த உரையாடலையும் அதன் பின்னர் தான் ஜீவானந்தத்திடம் எச்சரிக்கை விடுத்ததற்கு அவள் கொடுத்த பதில்மொழியையும் ஒப்பித்தான்.

சங்கரராமன் பேரனின் தோளில் ஆதரவாகத் தட்டிக்கொடுத்தபடியே “அவ ஒன்னும் சின்னக்குழந்தை இல்லயே தேவ்! இந்தச் சின்ன வயசுல இவ்ளோ தெளிவா பேசி, ஒரு நல்ல விசயத்துக்காகப் போராடுற பொண்ணுக்கு உயிர்பயம் இருக்கும்னு நீ நினைக்கிறியா? அவ தைரியமானவ தேவ்.. அவளைப் பாதுக்காக்க யாரும் அவளும் தேவையில்லனு நான் நினைக்கிறேன்… இத்தனை வருசமா தன்னோட பிரச்சனையை தானே தீர்த்துக்க தெரிஞ்ச பொண்ணுக்கு இந்தப் பிரச்சனையையும் தீர்த்துக்கத் தெரிஞ்சிருக்கும் தேவ்… நீ வீணா டென்சன் ஆகாத” என்று மானசாவின் நிலை இது தான் என்ற ஊகத்தை வெளியிட்டார்.

“இல்ல தாத்தா! என்னால அவளை யாரோ ஒருத்தினு நினைக்க முடியல… அவளுக்கு ஏதோ ஆகப்போற மாதிரி உள்ளுக்குள்ள ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு தாத்தா! இது வரைக்கும் நான் எந்தப் பொண்ணுக்காகவும் இப்பிடி ஃபீல் பண்ணுனது இல்ல… மானசா தைரியமானப்பொண்ணுனு எனக்குத் தெரியும்… ஜீவா சாரும் கதை கதையா சொல்லிருக்காரு.. ஆனா எச்சரிக்கை இல்லாத தைரியம் என்னைக்குமே ஆபத்தானதுனு நீங்க தானே அடிக்கடி சொல்லுவிங்க… மானசாவும் இப்போ இதே நிலமையில தான் இருக்கா” என்று வருந்திய குரலில் சொல்லி முடித்தான் ஜெயதேவ்.

“எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு தாத்தா… அவளோட தைரியம், போராடுற குணம் ரெண்டுமே எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு… நீங்க சொல்லுவிங்களே வாழ்க்கைத்துணையா வரப் போற பொண்ணு ஆமா சாமி போடுறவளாவோ, வெறும் அலங்காரப்பொம்மையாவோ இருந்துட்டா வாழ்க்கை அர்த்தமில்லாம நகரும்னு… எனக்கு மானசா மாதிரி ஒரு பொண்ணு என் வாழ்க்கைத்துணையா வந்தா நல்லா இருக்கும்னு தோணுது தாத்தா… அதனால தான் அவளுக்கு எதுவும் ஆகிடுமோனு நான் பயப்படுறேன்” என்றவனின் குரலில் இருந்த பரிதவிப்புடன் கூடிய காதலை உணர்ந்து கொண்ட சங்கரராமன் இதை மானசாவிடமே தெரிவித்து விடுமாறு சொல்லவும் முதலில் ஜெயதேவிற்கு திகைப்பு தான் உண்டாயிற்று.

பின்னர் என்றைக்காவது ஒரு நாள் தனது காதலை அவளிடம் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை இப்போது தெரிவித்தால் என்ன என்று அவன் மனம் கேட்க அதற்கு அவனும் ஒப்புதல் அளித்துவிட்டான். மானசாதேவியிடம் மனதை திறந்து காதலை உரைக்கும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான் ஜெயதேவ்.

அவன் காத்திருப்பின் பலன் ஒரு வாரம் கழித்து ஒரு பொன்மாலை நேரம் மானசாதேவி அவனைச் சந்திக்க வேண்டுமென கூறி கடற்கரைக்கு வரச் சொன்னாள். படபடக்கும் இதயத்துடன் மானசாதேவியைச் சந்திக்கத் தயாரானான் ஜெயதேவ்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛