🌞 மதி 49🌛

கடற்கரை மணல் கனிமங்கள் மற்றும் வண்டல் கனிமப்படிவுகளில் 0.75 சதவிகித அளவுக்குக் குறைவாக மோனசைட் இருந்தால் அதை தனியார் நிறுமங்கள் அள்ளிக்கொள்ளலாம் எனவும் அதற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அரசு நிறுமங்கள் மட்டுமே மணலை அள்ளவேண்டும் எனவும் அணுகனிமங்கள் சலுகை விதியில் இருந்த மதிப்பீடுகள் மத்தியச்சுரங்க அமைச்சகத்தின் பிப்ரவரி 20ஆம் தேதி அறிவிப்பாணை மூலம் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அதன் படி கடற்கரை மணலில் மோனசைட் இருந்தாலும் இல்லையென்றாலும் அதை தனியார் நிறுமங்கள் அள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஹலோ! எங்க வீட்டுல என்ன மேன் பண்ணுற நீ? முதல்ல எழுந்திரி” என்று மானசா ஜெயதேவை ஏகவசனத்தில் பேச ஆரம்பிக்க அவனோ அதைக் கண்டுகொள்ளாதவனாய் அலட்சியப்படுத்திவிட்டு ஜீவானந்தத்திடம் பேச முனைய அவர் தனது மகள் ஏற்கெனவே ஜெயதேவை அறிவாளா என்ற குழப்பத்தில் விழித்தார்.

“அப்பா நேத்து நான் புரட்டஸ்ட் பண்ணுன கம்பெனியோட எம்.டி என்னை இரிட்டேட் பண்ணி அனுப்புனான்னு சொன்னேன்ல அவன் இந்த ஜெயதேவ் தான்… நான் அமைதியா சொன்னா ஒத்துக்க மாட்டேனு நம்ம வீட்டுக்கே வந்துட்டான்”

“தேவிம்மா! இவன் ஜெய்… என்னோட பெஸ்ட் ஸ்டூடண்ட்ல ஒருத்தன்மா… சமீபமா அவனோட கம்பெனியில உள்ள பிரச்சனைக்கு என்னோட சஜசன் கேட்டு வந்திருக்கான்… நீ ஏதோ தப்பா நினைச்சுட்டுப் பேசுற”

ஜீவானந்தம் மகளுக்கு விளக்கிய பிறகு ஜெயதேவிடம் அவள் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்டார். அவன் பெரிய மனது பண்ணி அவளை மன்னித்துவிட மானசாவும் ரிஷியும் ஒருவரை ஒருவர்  சந்தேகமாகப் பார்த்துக் கொண்டனர். பின்னர் இருவரும் ஏதோ ரகசியம் பேசியபடி சமையலறைக்குள் சென்றுவிட்டனர்.

ஜெயதேவ் தாது மணல் ஆலையின் பிரச்சனைகளை விளக்கிவிட்டு “இதுக்காக கம்பெனி பெரியளவுல செலவு பண்ணனும் சார்… இதால இந்த ஃபினான்ஷியல் இயரோட ஃப்ராபிட் கணிசமா குறையும்… நான் என்ன பண்ணுறது? ஷேர்ஹோல்டரை எப்பிடி சமாளிக்கிறது?” என்று தனது பிரச்சனையை அவரிடம் கொட்டிவிட்டான்.

ஜீவானந்தம் சிறிது நேரம் யோசித்தவர் “உனக்கு இந்த ஃபினான்ஷியல் இயரோட ஃப்ராபிட் முக்கியமா? உன் கம்பெனியோட குட்வில் முக்கியமா?” என்று அவனிடம் கேட்க

“கண்டிப்பா கம்பெனியோட குட்வில் தான் எனக்கு முக்கியம் சார்… அதுல என்னால காம்ப்ரமைஸ் ஆக முடியாது” என்றான் ஜெயதேவ் இதில் யோசிக்க என்ன இருக்கிறது என்ற எண்ணத்தில்.

“அப்போ பணம் செலவளியுறத பத்தி யோசிக்காத ஜெய்… எல்லா விசயத்தையும் லாபநோக்குல பார்க்கக் கூடாது… நீ நல்லா யோசி… இந்தப் பிரச்சனையை தீர்க்கிறதால உனக்கும் எதாவது லாபம் இருக்கும்… அது பணமா தான் இருக்கணும்னு இல்லையே”

ஜெயதேவ் ஜீவானந்தத்தின் பேச்சின் உட்பொருளை மனதில் பதியவைத்துக் கொண்டான். தாது மணல் பிரச்சனை அவனுடைய நிறுமத்தைப் போன்றே தங்களுக்கும் பெரிய தலைவலி தான். ஆனால் இதை அவர்களைப் போல அலட்சியப்படுத்தாமல் முறைப்படி அணுகினால் தன் நிறுமத்தின் நற்பெயர் காப்பாற்றப்படுமே என்ற கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினான் அவன்.

ஜீவானந்தம் முடிவாக “ஒரு பிசினஸ்மேனுக்கு அவனோட பிசினஸ்ல எப்பேர்ப்பட்ட பிரச்சனை வேணும்னாலும் வரலாம் ஆனா அவன் பிசினஸ் எதிக்சை மறந்துடக் கூடாதுங்கிறது என்னோட கருத்து” என்று சொல்லிவிட ஜெயதேவ்வுக்கு அடுத்துத் தான் செய்ய வேண்டியது என்ன என்பது புரிந்துவிட்டது.

எப்போதும் போல தனது பிரச்சனைக்குத் தீர்வு கூறிய ஆசானை நன்றியுடன் நோக்கிப் புன்னகைத்தவன் “உங்க கைடன்ஸ் இல்லனா இந்நேரம் இம்மெச்சூர்டா எதாவது செஞ்சு வச்சிருப்பேன் சார்… எனக்கு உங்களோட ஆலோசனை எப்போவுமே தேவை” என்று உளப்பூர்வமாக கூற

“அதுக்கு நீங்க அவரை மேனேஜ்மெண்ட் அட்வைசரா அப்பாயிண்ட் பண்ணி சேலரி குடுக்கணும்… இப்பிடி ஓசியில ஐடியா கேக்க கூடாது” என்றபடி சமையலறையிலிருந்து வந்தாள் மானசா.

“தேவிம்மா! நான் வெறும் சஜெசன் மட்டும் தானே குடுக்கிறேன்”

“சஜெசன் கூட சும்மா குடுக்க முடியாதுப்பா… நீங்க உங்களோட மூளையைக் கசக்கிப் பிழிஞ்சு கண்டுபிடிக்கிற சஜெசனை இவரு நோகாம கேட்டுட்டு இம்ப்ளிமெண்ட் பண்ணுவாரா?”

ஜெயதேவ் புருவம் உயர்த்திக் கேலியாக அவளைப் பார்த்தவன் “சப்போஸ் உங்களுக்கு எதாவது ஒரு விசயத்துல குழப்பம்னா சார் கிட்ட கேப்பிங்களா மிஸ் மானசா?” என்று கேட்க மானசா ஆமென்று தலையசைத்தாள்.

“அதுக்கு ஃபீஸ் பே பண்ணுவிங்களா?” என்று கேட்டதும் இல்லையென்று மறுத்தாள் அவள்.

“அவர் என்னோட அப்பா… ஆனா உங்களுக்கு குரு… குருதட்சணை குடுக்காக கத்துக்கிட்ட வித்யை தேவையான சமயத்துல மறந்துபோயிடுமாம்” என்று அவனுக்குப் பதிலடி கொடுத்தவளை ஏறிட்டவன்

“எனக்கும் சாருக்குமான உறவு டீச்சர் அண்ட் ஸ்டூடண்ட்ங்கிறதை தாண்டி அவரை நான் என்னோட மென்ட்டாரா ஏத்துக்கிட்டேன்” என்று பெருமை கலந்த முகபாவத்துடன் மனதாற கூற ஜீவானந்தத்தின் முகத்திலும் அதே பாவனை மிளிர்ந்தது.

“வாழ்க்கை முழுக்க உங்களோட வழிகாட்டுதல் எனக்கு வேணும் சார்… நான் எந்தப் பிரச்சனையையும் அடுத்தவங்க கோணத்துல இருந்து பார்க்கிறவன் இல்ல.. ஏன்னா அதை நீங்க எனக்கு இண்டிகேட் பண்ணுவிங்கங்கிற நம்பிக்கையில தான்”

அவனும் தந்தையும் பேசிக்கொண்டதிலிருந்து இருவருக்கும் உள்ள பிணைப்பு மானசாவுக்கும் ரிஷிக்கும் புரிபட்டது. பின்னர் சமையல் தயாராகி விட்டதால் ஜீவானந்தம் ஜெயதேவைச் சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டு விட அவனும் அதை மறுக்காதவனாய் அவர்களுடன் மதியவுணவில் கலந்துகொண்டான்.

“தேவிம்மா! ஜெய்கு இன்னும் கொஞ்சம் எரிசேரி வை” என்று உபசரித்த தந்தையை பொய்யாக முறைத்தவள் “அப்பா ப்ளீஸ்! தேவினு சொல்லாதிங்க” என்று உரைத்தவாறு ஜெயதேவுக்கு எரிசேரியை வைத்துவிட்டுத் தன் தட்டில் கண் பதித்தாள்.

“அது எப்பிடி சொல்லாம இருக்க முடியும்? ஆசை ஆசையா மானசாதேவினு நேம் வச்சா நீ அதை மானசானு சுருக்கிட்டு எங்களையும் அப்பிடி தான் சொல்லணும்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று அவளுக்குப் போட்டியாக முறைத்தபடி சாப்பாட்டில் கண்பதித்தார்.

ஜெயதேவ் இந்த உரையாடல்களை நமட்டுச்சிரிப்புடன் கேட்டபடி “அந்த கிளாஸை இங்க நகர்த்துறிங்களா தேவி மேடம்?” என்று சொல்ல மானசாதேவி கொஞ்சம் கொஞ்சமாக ருத்திரதேவியாக மாறிக்கொண்டிருந்தாள்.

அவன் அவளைச் சீண்டியவாறு மதியவுணவை முடித்தவன் கிளம்ப எத்தனிக்கையில் ரிஷியின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டான். ஜீவானந்தம் சொன்னதற்கு இணங்கி மானசாதேவி ஜெயதேவை வழியனுப்ப கதவு வரை வரவே ஜெயதேவ் சும்மா செல்ல விருப்பமின்றி

“மிஸ் தேவி! நான் சாரோட சஜெசன் படி செய்ய வேண்டியதை செஞ்சுட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுறேன்… பை” என்று கூறிவிட்டு நகர மானசாவுக்கு வந்த கோபத்துக்கு இன்னும் சிறிது நேரம் அவன் இங்கே நின்றிருந்தால் கோபத்தாலே அவனைச் சுட்டுப் பொசுக்கியிருப்பாள். கூடவே இவன் ஒன்றும் செய்து கிழிக்கப்போவதில்லை என்ற அலட்சிய எண்ணமும் ஒரு சேர அவள் மனதில் உதித்தது.

ஆனால் ஜீவானந்தம் நம்பிக்கையுடன் “உனக்கு ஜெய் பத்தி தெரியாது மோளே! அவன் சொன்னதை செய்வான்… அதோட அவன் கணக்கு போட்டு காய் நகர்த்துவான்… நீ வேணும்னா பாரு இந்தப் பிராப்ளமை அவன் சரி பண்ணுவான்.. அதைப் பார்த்துட்டு நீயே அவனைப் பெருமையா சொல்லுவ” என்று மாணவனுக்காகப் பரிந்து பேசினார்.

அவர் சொன்னபடி ஜெயதேவ் வி.என் மினரல்ஸின் நிர்வாகத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தான். அவன் செய்த முதல் காரியமே பொது மேலாளரைப் வேலையை விட்டு அனுப்பியது தான். அதன் பின்னர் தங்கள் நிறுமத்தில் இது வரை ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க அனுபவமிக்க ஊழியர்கள் கொண்ட குழுவை வைத்து விசாரிக்கச் செய்தவன் தொழிற்சாலை கழிவுகள் மாசுபாட்டை ஏற்படுத்தா வண்ணம் மாசுக்கட்டுப்பாட்டு கருவிகள் நிறுவவும் பங்குதாரர்களைக் கலந்தாலோசித்து முடிவெடுத்தான்.

கூடவே ஆலை இருக்கும் இடத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து செலவளிக்கும் எண்ணத்தையும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்தான்.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் மானசாதேவியை மீண்டும் சந்தித்தான் அவன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து அவனைச் சந்தித்தவளுக்கும் ஊரிலிருந்து பாலா மூலம் தகவல் வந்திருந்தது.

ஜெயதேவ் இச்செய்தியை முதலில் பகிர்ந்துகொள்ள விரும்பியது ஜீவானந்தத்திடம் தான். எனவே அவரது ஃப்ளாட்டிற்குச் சென்றவன் அங்கே மானசா மட்டும் இருக்கவே இவளிடமே சொல்லிவிடலாம் என்று தனது வி.என் மினரல்ஸில் அவள் சொன்ன பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு கண்டுவிட்டதை விளக்கிய பின்னர் தான் மூச்சு விட்டான்.

மானசாவுக்கு அவன் மீது பெயரளவுக்குக் கூட நம்பிக்கை இல்லை. ஆனால் பாலா சொன்ன விவரங்களுடன் ஜெயதேவ் கூறிய விசயங்கள் ஒத்திருக்கவும் எப்படியோ தங்கள் சுற்றுவட்டார மக்களுக்கு பாதி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

தன் எதிரே இருந்தவனுக்கு மனதாற நன்றி கூறினாள் அவள். ஆனால் ஜெயதேவ் அவள் கூறும் நன்றிக்குத் தான் தகுதியானவன் இல்லையென்று மறுக்கவும் அவளுக்கு ஆச்சரியம். அதற்கான விளக்கத்தையும் அவனே கொடுத்தான்.

“லுக் மிஸ் தேவி! நான் காரணம் இல்லாம இது எதையும் செய்யல… இந்தப் பிரச்சனை எங்க கம்பெனிக்கும் ஆர்.எஸ் குரூப்புக்கும் ஒரே நேரத்துல வந்த தலைவலி… அவங்க இதை அலட்சியப்படுத்துனது எனக்குத் தெரியும்… அவங்க அலட்சியப்படுத்துனதுல நாங்க கவனம் செலுத்துனா எங்களால அவங்களை விட ஒரு அடி முன்னாடி போக முடியும்ங்கிறது என்னோட கால்குலேசன்..

இப்போ நான் செஞ்ச காரியத்தால கண்டிப்பா உங்க ஏரியால எங்க ஃபேக்டரி மேல இருந்தா நெகடிவ் ரிமார்க் சரியாகியிருக்கும்… இந்த நியூஸ்ஸ ஆல்ரெடி நான் பிரஸ் மீட்டிங்ல சொல்லிட்டேன்… சோ இது எங்க கம்பெனிக்கு நல்ல விளம்பரம்… வி.என் குரூப் எப்போவுமே பொதுமக்களோட உயிருக்கு ஆபத்து வர்ற தொழிலை செய்யமாட்டாங்கனு எங்களுக்கு மக்கள் மத்தியில ஒரு குட்நேம் கிரியேட் ஆகும்… சோ இதுல சேவை, இடியாப்பம்னு எதுவும் இல்ல… எல்லாமே என்னோட கால்குலேசன் மட்டும் தான்… இது ஆர்.எஸ் க்ரூப்பை பின்னுக்குத் தள்ள எனக்குக் கிடைச்ச சான்ஸ்… இந்த சான்ஸை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்”

ஜெயதேவ்வின் விளக்கம் முடிந்ததும் இவ்வளவு நேரம் கண் இமைக்காமல் இருந்தவள் இமைகளைக் கொட்டிக் கொண்டாள்.

“எல்லா விசயத்திலயும் இப்பிடி தான் கால்குலேட் பண்ணி காய் நகர்த்துவிங்களா மிஸ்டர் ஜெயதேவ்?”

“இதுல தப்பு எதுவும் இருக்குதா மிஸ் மானசாதேவி?”

“அப்போ நீங்க பொல்யூசன், டிசீஸ் பரவுறது, சுற்றுச்சூழல்ல உண்டாகுற பாதிப்பைப் பத்தி கவலைப்படல… இது ஆர்.எஸ் க்ரூப்பை விட வி.என் க்ரூப் ஒரு ஸ்டெப் மேலனு எல்லார் முன்னாடியும் சீன் கிரியேட் பண்ண உங்களுக்குக் கிடைச்ச சான்ஸ்… அப்பிடி தானே?”

“அஃப் கோர்ஸ்… எனக்கு சார் குடுத்த அட்வைசும் இது தான்… இதால எங்க கம்பெனிக்குப் பெருசா லாபம் எதுவும் இல்ல… ஆனா லாபம்கிறது வெறும் பணம் மட்டும் இல்லைனு சார் சொன்னதுக்கு அப்புறம் தான் புரிஞ்சுது… இப்பிடி ஒரு சான்ஸை எனக்கு கிரியேட் பண்ணிக் குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மிஸ் மானசாதேவி… அப்புறம் இன்னொரு சஜெசன் இருக்கு சொல்லலாமா?”

“வேண்டாம்னு சொன்னா விடவா போறிங்க? சொல்லுங்க. கேப்போம்”

“சந்திரசேகர் கிட்ட தேவையில்லாம பிரச்சனை பண்ணாதிங்க… அவர் ஒரு முட்டாள்… அவரோட வலது கையா இருக்கிற வினாயகமூர்த்தி மூளை முழுக்க விஷம் வச்சிருக்கிற ஆளு… ரெண்டு பேரும் ரொம்ப டேஞ்சரானவங்க… ஜீவா சாரோட பொண்ணு மேல எனக்கும் அக்கறை இருக்கு”

“உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி மிஸ்டர் ஜெயதேவ்.. உங்களோட அக்கறையும் எச்சரிக்கையும் இல்லாமலே இருபத்து மூனு வருசம் நான் பாதுக்காப்பா தான் இருந்திருக்கேன்… அட்வைசுக்கு தேங்க்ஸ்”

“சோ உங்களோட போராளி அவதாரத்தை அவங்க கிட்ட காட்டியே தீருவேனு சொல்லுறிங்க… ஓகே அப்போ இன்னொரு அட்வைசையும் கேட்டுக்கோங்க… உங்களை மாதிரி சமூகப்போராளிங்களுக்குக் கிடைக்கிற அதிகபட்ச வெகுமதி மரணம் மட்டும் தான்… சின்னவயசுலயே மேல போய் சேர்ந்து ஜீவா சாருக்குப் புத்திரி சோகத்தை உண்டாக்கிறாதிங்க மிஸ் மானசா தேவி”

அவனால் எரிச்சலை அடக்க முடியாததால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டான் ஜெயதேவ். மானசாவின் மீது அவனுக்கு மரியாதை கலந்த அக்கறை இருந்தது. அவள் ஜீவானந்தத்தின் மகள் என்பதால் உண்டான அக்கறை என்று அவனே அதற்கு காரணம் கற்பித்துக் கொண்டான். ஆனால் அதில் இலைமறை காயாக இருந்த காதலை அவனால் அவளிடம் வெளிப்படுத்த இயலவில்லை. அது காதல் என்றே புரியாதபோது அவனால் எப்படி சொல்ல முடியும்?

அதே நேரம் மானசாதேவியோ இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவள் சென்னைக்குக் காலடி எடுத்துவைத்ததே ஆழியூரின் கருப்புப்பிசாசிடமிருந்து ஊர் மக்களைக் காப்பாற்ற தான். அதில் பாதி கிணறும் தாண்டிவிட்டாள். மீதி கிணறையும் தாண்டிவிட்டால் இவன் சொல்வது போல மரணம் வெகுமதியாகக் கிடைத்தாலும் அவள் உளமாற அதை ஏற்றுக்கொள்வாள். இதை வெளிப்படையாக ஜெயதேவிடம் சொல்லிவிட அவன் தலையிலடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.

அவன் சென்ற சில நிமிடங்களில் ஆர்.எஸ் கெமிக்கல்ஸிலிருந்து அவளுக்குப் போன் வந்தது. சந்திரசேகர் அவளுடன் பேச விரும்புவதாக அவரது உதவியாளர் கூறவும் மீதி கிணறையும் கூடிய விரைவில் தாண்டி விடுவோம் என்ற உற்சாகத்துடன் ஆர்.எஸ் குழுமத்தின் தலைமை அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள். தனது மரணத்துக்கான சாசனத்தின் முதல் வரி அங்கே உள்ளவரால் தான் எழுதப்படப் போகிறது என்பதை அவள் அப்போது அறியவில்லை.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛