🌞 மதி 4 🌛

கருவில் குழந்தை உருவாகும் போது ஆணின் குரோமோசோம்களான XY, பெண்ணின் குரோமோசோமான XX இரண்டும் அக்கருவிற்கு பரம்பரைப்பண்புகளைக் கடத்துக்கின்றன. இவற்றில் ஆண்களின் XY குரோமோசோமே பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தீர்மானிக்கிறது.

சஞ்சீவினி பவனம்

தோட்டத்தின் ஒரு ஓரமாக இருந்த நாட்டியாலயாவின் படியில் அமர்ந்திருந்தார் சஞ்சீவினி. கண்களில் கலக்கம் கொட்டிக் கிடக்க எண்ணங்களோ அன்றைக்கு மதியம் நடந்த நிகழ்வையே சுற்றி வந்தது.

அன்றைய தினம் இரு பெண்களுக்கும் நகரத்தின் பிரபலமான நிறுவனம் ஒன்றில் நேர்க்காணல் இருந்தது. காலையில் நடந்த கலவரத்திற்கிடையே சஞ்சீவினி இருவரையும் அதற்கு தயாராகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட அஸ்மிதாவும் இஷானியும் அவரவர் சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் பிரதிகளோடு கோப்புகளை எடுத்து வைத்துக் கொண்டவர்கள் தாத்தா பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு மறக்காமல் நாட்டியாலயாவில் குடிகொண்டிருக்கும் முக்கண்ணனை வணங்கிவிட்டு ஸ்கூட்டியில் கிளம்பினர்.

ஸ்வரூபா கட்டுமான நிறுவனம் சென்னையின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்று. அதன் கணினிப்பிரிவிலும், நிதிப்பிரிவிலும் பணியாளர்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற நேர்க்காணலுக்காகத் தான் அஸ்மிதாவும் இஷானியும் அங்கே வந்திருந்தனர். இருவருக்கும் இது முதல் நேர்க்காணல் என்பதால் சற்று படபடப்பாகத் தான் இருந்தது. அதிலும் இருவரும் வெவ்வேறு துறைக்கு விண்ணப்பித்திருந்தனர். எனவே நேர்க்காணல் இருவருக்கும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை என்ற பதற்றம் வேறு.

அஸ்மிதா தனக்கான பகுதிக்குச் செல்லும் முன்னர் இஷானிக்குக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டியவள் “நீ கண்டிப்பா செலக்ட் ஆயிடுவ இஷி… என் நிலமை தான் சந்தேகத்துக்கு இடமா இருக்கு… ஆல் த பெஸ்ட்… நல்லா பண்ணு” என்று தைரியம் கொடுத்துவிட்டு அவள் செல்ல வேண்டிய பிரிவை நோக்கி நடைபோட்டாள்.

இஷானி சென்ற பிரிவில் முதலில் எழுத்துத்தேர்வு போல வைத்து அதில் ஆட்களை வடிக்கட்டினர். இஷானி எழுத்துத் தேர்வு அதைத் தொடர்ந்த குழுக்கலந்துரையாடல் என்று அனைத்திலும் திறமையாகத் தேர்வானவள் கடைசிக்கட்டமான நேர்முகத்தேர்வுக்குக் காத்திருந்தாள்.

அதே நேரம் அஸ்மிதா நேர்முகத்தேர்வில் மூன்று நபர்களின் கேள்விக்கணைகளுக்காகக் படபடப்புடன் காத்திருந்தாள்.

“உங்களைப் பத்தி ஒரு ஸ்மால் இன்ட்ரோ குடுங்க” என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்த்திருந்தனர் நேர்முகத்தேர்வு எடுக்கவிருந்த மூவரும்.

அவர்களின் எதிரே உள்ள இருக்கையில் இருந்தவள் “ஐ அம் அஸ்மிதா சஞ்சீவினி” என்று ஆரம்பித்து தனது கல்வித்தகுதி, கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்பு, குடும்பத்தைப் பற்றிய சிறுவிபரத்தையும் கூறிவிட்டு வேறு என்ன கேள்வி என்று அவர்களை நேரிடையாகப் பார்த்தாள்.

அவர்களில் ஒருவர் “ஓகே சஞ்சீவினி” என்று ஆரம்பிக்கவும்

“ஐ அம் அஸ்மிதா சார்… சஞ்சீவினி இஸ் மை மாம்” என்று புன்னகையுடன் இடைவெட்டினாள் அவள்.

அதைக் கேட்டதும் மூவரின் நெற்றியிலும் யோசனைக்கோடுகள். அவளிடம் கேள்வி கேட்டவரே மீண்டும் “வாட்? அம்மாவோட நேமை சேர்த்து யூஸ் பண்ணுறதை நாங்க இப்போ தான் கேள்விப்படுறோம்… இட்ஸ் ரியலி வியர்ட்” என்று சொல்ல அவருடன் சேர்ந்து ஆமோதித்தனர் மற்ற மூவரும்.

அவர்களைப் பார்த்து மரியாதையுடன் புன்னகைத்த அஸ்மிதா “இதுல விசித்திரமாவோ வினோதமாவோ நினைக்கிறதுக்கு என்ன இருக்கு சார்? இன்கம்டாக்ஸ் பான் கார்ட்லயே அப்பா நேமுக்குப் பதிலா அம்மா நேமை யூஸ் பண்ணிக்கலாம்னு ரூல் வந்தாச்சு… இதுல நான் ஜஸ்ட் என் நேமோட அவங்க நேமை ஆட் பண்ணிக்கிட்டேன்.. அவங்களோட நேமை சேர்த்துச் சொல்லுறது என் கூட அவங்களே இருக்கிற மாதிரி ஃபீல் ஆகும்” என்று சொல்ல மூவருக்கும் அவள் கொடுத்த விளக்கத்தில் திருப்தியே.

அதன் பின்னர் அவளது துறையான கணக்கியல் மற்றும் நிதி பற்றிய கேள்விகளுக்கு தட்டுத்தடுமாறாமல் அவள் பதில் சொன்ன பாங்கு அவர்களுக்குப் பிடித்துப் போனது.

மூவரும் அவளுக்குக் கை கொடுத்துவிட்டு நேர்க்காணல் முடிவுகள் மின்னணு அஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும் என்று சொல்லவும் அஸ்மிதா நம்பிக்கையுடன் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அவளும் இஷானியும் சற்று முன்னர் நின்றிருந்த ஹாலுக்கு வந்தவளின் மீது வேகமாக ஓடிவந்து மோதினாள் இஷானி. ஏன் இவள் இப்படி யாரோ துரத்துவது போல ஓடிவருகிறாள் என்ற கேள்வியுடன் அவளை விழாமல் தாங்கியவள்

“என்னாச்சு இஷி? ஏன் ஒரு மாதிரி இருக்க? ஓ மை காட்! நீ அழுறியா? என்னடி ஆச்சு?” என்று பொரிந்து தள்ளினாள் அஸ்மிதா.

இஷானி நேர்முகத்தேர்வு எடுத்தவனின் நடவடிக்கைகளைப் பற்றி அழுகையுடன் விளக்க ஆரம்பித்தாள். தன்னை உள்ளே அழைத்ததிலிருந்து அவனது நடவடிக்கைகளும் அவனது அலைபாயும் கண்களும் இஷானிக்குக் கழுகை நினைவூட்டியது.

பார்வையில் கூட இங்கிதம் எதிர்பார்க்கும் பெண்ணை அவன் அவ்வளவு கேவலமான எண்ணத்துடன் இரையை நோட்டமிடும் கழுகைப் போல வெறிக்க வெறிக்கப் பார்த்தபடி நேர்க்காணலுக்குச் சற்றும் சம்பந்தமில்லாதக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.

அவன் கேட்பதற்கு இஷானி தயங்கித் தயங்கிப் பதிலளிக்கவே, இந்தப் பெண் பயந்த சுபாவம் போல; இனி தான் என்ன சொன்னாலும் இவள் அதற்கு பெரிதாக ஒன்றும் தன்னை எதிர்த்துவிடமாட்டாள் என்ற எண்ணத்துடன் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இஷானி சஞ்சீவினி…ம்ம்ம்… நேம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு… உங்களை இஷானினு கூப்பிடுவாங்களா? இல்லை சஞ்சீவினினு கூப்பிடுவாங்களா?” என்று கேட்டவனின் பார்வை அவளைத் தீண்டிய விதம் உள்ளுக்குள் அருவருப்பை மூட்ட தனது துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கொண்டபடி சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.

தயக்கத்துடன் “ஐ அம் இஷானி… சஞ்சீவினி இஸ் மை மாம்… அவங்க நேமை என் நேமோட சேர்த்துச் சொல்லுறப்போ எனக்குள்ள ஒரு கான்ஃபிடெண்ட் வரும் சார்… அதனால தான் அம்மா நேமை சேர்த்துப்பேன்” என்று உச்சரித்த வார்த்தைகளுக்கு வலித்துவிடுமோ என்னுமளவுக்கு மென்மையுடன் அவற்றை வெளியிட்டாள்.

ஆனால் அவள் எதிரில் இருந்தவனின் கவனம் அவள் வார்த்தையில் பதியாமல் அவள் மேனியில் மொய்க்க இஷானிக்கு உடல் கூசிப் போய்விட்டது. அவளது அமைதியும் தயக்கமும் அவனது கேவலமான எண்ணத்துக்கு வலுவூட்ட மேஜையின் மீதிருந்த அவளது கரங்களில் அழுத்தத்துடன் தனது கையை வைத்தான் அக்கயவன்.

இஷானி தீச்சுட்டாற்போல கரத்தை வெடுக்கென்று எடுத்துக் கொள்ள அவனுக்குப் பெருத்த ஏமாற்றம் அவளது கரத்தை மட்டும் தீண்டியதில். அவளால் அதற்கு மேல் பொறுத்திருக்க முடியாமல் நாற்காலியிலிருந்து எழுந்தவள் “நான் கிளம்புறேன் சார்” என்று சொல்ல அவனும் கூடவே எழுந்து

“இண்டர்வியூ இன்னும் முடியலை மிஸ் இஷானி… எனி ஹவ் உன்னை மாதிரி அழகானப் பொண்ணுக்கு இண்டர்வியூ தேவையே இல்லைங்கிறது என்னோட ஒபீனியன்” என்று சொன்னபடி அவளைத் தலையிலிருந்து கால் வரை அளவிட்டவனைப் பார்க்கவும் விருப்பமின்றி விருட்டென்று கதவைத் திறந்து கொண்டு வெளியேறியவளின் கண்ணில் கண்ணீர்த்திரை.

எதிரில் வந்தவர் அதில் தெரியாமல் போக அவள் கிட்டத்தட்ட மோதியேவிட்டாள். நடந்ததைக் கூறிவிட்டு இஷானி கேவ ஆரம்பிக்க அஸ்மிதாவுக்கு சுருசுருவென்று ஏறிய கோபத்தில் முகம் சிவக்க இஷானியை இண்டர்வியூ எடுத்தவனின் அறைக்குள் சென்று பத்திரக்காளியாக நின்றாள் அவள்.

அவளை ஏறிட்டவனின் அருகில் சென்றவள் அவனது சட்டைக்காலரைப் பிடித்து “ஏன்டா பொறுக்கி ராஸ்கல்! இண்டர்வியூவுக்கு வர்ற பொண்ணு கிட்ட இப்பிடியா அசிங்கமா நடந்துப்ப?” என்று சொல்லிவிட்டு பளார் பளாரென்று இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைய ஆரம்பிக்கவும் அந்த நேர்க்காணல் செய்தவனுக்கு அதிர்ச்சியில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

அந்தப் பயந்தாங்கொள்ளியால் தன்னை என்ன செய்துவிடமுடியும் என்ற இறுமாப்புடன் இருந்தவனின் கன்னங்கள் அஸ்மிதாவின் கைவண்ணத்தால் கன்றிப்போகவே “ஏய் ஆபீஸ்ல வந்து ரவுடியிசம் பண்ணுறியா? ஐ வில் கால் தி போலிஸ்” என்று அவமானத்தில் அவன் கத்தவும்

“போலிஸை நீ ஏன் கூப்பிடுற? இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண வந்த என் சிஸ்டர் கிட்ட நீ கேடுக்கெட்டத்தனமா பிஹேவ் பண்ணுனனு நானே உன் மேல கம்ப்ளைண்ட் குடுப்பேன்” என்று பதிலடி கொடுத்தாள் அஸ்மிதா.

காவல் துறை என்றதும் இந்தப்பெண் மான அவமானம் பார்த்து அடங்கிவிடுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அஸ்மிதாவின் இந்தப் பதில் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்க அவன் அமைதியாகிவிட்டான். பெரும்பாலும் இம்மாதிரியான கேவலமான நடத்தையுள்ள ஜந்துக்கள் கோழைகளாகத் தானே இருப்பர்.

“இனிமே நீ எந்தப் பொண்ணையும் கேவலமா பார்க்கக் கூடாது.. அப்பிடி பார்க்கிறப்போ உனக்கு இந்த அறை தான் நியாபகம் வரணும்” என்று விரலை நீட்டி பத்திரம் காட்டிவிட்டு வெளியேறினாள்.

வெளியே இஷானி என்னவாயிற்றோ என்று கலக்கத்துடன் அமர்ந்திருந்தவள் அஸ்மிதா வந்ததும் அவளைக் கட்டிக் கொண்டாள்.

“நான் பயந்துட்டேன் அஸ்மி! அவன் பேசுனதைக் கேட்டு ரொம்ப பயந்துட்டேன்” என்று தேம்பியவளை ஆறுதலுடன் அணைத்துக் கொண்டாள் அவளது சகோதரி அஸ்மிதா.

“நீ ஏன் பயப்படுற இஷி? பொண்ணுங்களோட பயம் தான் இவனை மாதிரி கேவலமான ஜென்மங்களுக்கு பலமே… நீ பயப்படுறேனு தெரிஞ்சா அவனுக்குக் கொண்டாட்டமா தான் இருக்கும்… இவனை மாதிரி கேடுக்கெட்டப் பொறுக்கிங்க எல்லாரும் எதிர்த்து நின்னு ரெண்டு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தைரியம் இல்லாத கோழையா தான் இருப்பாங்க… அதனால உன்னோட தங்கமான குணத்துல ரெண்டு ஸ்பூன் தைரியத்தையும் கலந்துக்கோ… இவனை மாதிரி ஆள்களைச் சமாளிக்க அது உனக்கு ஹெல்பா இருக்கும்” என்று தேற்றியவள் கையோடு அவளை வீட்டுக்கு அழைத்துவந்து விட்டாள்.

படியேறும் போதே ராஜகோபாலனின் குரல் வெளியே கேட்டது.

சஞ்சீவினி மீட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்திருந்தவரிடம் “அனுராதா கொய்ராலாவோட மைதி நேபாள்ல ரெஸ்க்யூ பண்ணுன பொண்ணுங்களுக்கு புரஃபசனல் டிரெயினிங் குடுக்கிறாங்கனு கேள்விப்பட்டேன் சஞ்சும்மா… நம்மளும் அதை டிரை பண்ணலாமே” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே வாடிப்போன முகத்துடன் உள்ளே நுழைந்தனர் அஸ்மிதாவும் இஷானியும்.

அலமேலு பேத்திகளிடம் “என்னாச்சு ரெண்டு பேருக்கும்?” என்று கேட்டது தான் தாமதம் இஷானி அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அவர் வேலை கிடைக்காததால் தான் பேத்தி இப்படி அழுகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.

அஸ்மிதா அவளைக் கலக்கத்துடன் பார்த்தவள் வீட்டிலுள்ளவர்களிடம் அனைத்தையும் தான் அப்புறம் விளக்குவதாகச் சைகை காட்டிவிட்டு இஷானியை உள்ளே அழைத்துச் செல்லும்படி அலுமேலுவைக் கண்ணால் ஏவினாள்.

அலமேலு முதுகு குலுங்க அழுபவளைத் தட்டிக்கொடுத்தவர் “என் ராஜாத்தி ஏன்டிமா அழுற? பாட்டி கூட வா” என்று சொன்னபடி அவளை அவரது அறைக்கு அழைத்துச் சென்ற பின்னர் இருவரும் முதுகும் அங்கிருந்து மறைந்ததும் கோபத்தில் வெடிக்க ஆரம்பித்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் சஞ்சீவினிக்கும் ராஜகோபாலனுக்கும் கலக்கமாகி விட்டது. இஷானி எப்போது இந்த உலகின் நன்மை தீமைகளை எதிர்த்து நிற்கப் பழகிக் கொள்வாள் என்ற வருத்தம் அப்பாவுக்கும் மகளுக்கும் சூழ அன்றைய நாளும் கடந்து இரவு வந்துவிட்டது.

அந்நிகழ்வைப் பற்றிச் சிந்தித்தவண்ணம் நாட்டியாலயாவில் அமர்ந்திருந்தவரிடம் வந்து நின்றாள் அஸ்மிதா. மஞ்சள் வண்ண முழங்கால் அளவிலான குட்டை டாப்பும், வெள்ளை நிற பட்டியாலாவுமாய் இரவு உறங்குவதற்கேற்ற உடையுடன் வந்து நின்றவளின் பக்கவாட்டுப் போனிடெயிலுக்கு அடங்காமல் அவள் கன்னத்தை உரசின சில கூந்தல் கற்றைகள்.

அவளைக் கண்டதும் பெருமூச்சு விட்ட சஞ்சீவினி “என்ன மேடம்? என் கிட்ட எதுவும் சொல்லணுமா?” என்று கேட்க

“ஆமா! நம்ம இஷானிக்கு மறுபடியும் கவுன்சலிங் குடுத்தா என்ன? ஐ மீன் அவளோட அடிமனசுல இன்னும் பழைய பயம், இறுக்கம் உறைஞ்சிருக்குமா… அதை முழுசா துடைச்சு எறியுற வரைக்கும் அவளுக்குக் கவுன்சலிங்கை நிறுத்த வேண்டாம்மா… மறுபடியும் செழியன் அங்கிள் கிட்ட பேசுறிங்களா?” என்று கவலையுடன் அன்னையிடம் முறையிட்டாள் அஸ்மிதா.

அவள் சொல்வதும் சரியென்றே பட்டது சஞ்சீவினிக்கு. ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது. இன்னும் இஷானிக்குப் பழைய நிகழ்வுகளின் பாதிப்பு மனதை விட்டு முழுவதுமாக அகலவில்லையென்றால் கட்டாயம் அவளுக்கு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை அவசியம் என்று எண்ணியவர் அஸ்மிதாவிடம் தான் இதைப் பற்றி செழியனிடம் பேசுவதாகச் சொல்லவும் அவளது முகம் சற்று தெளிவானது.

இருவரும் அங்கிருந்து எழுந்து வீட்டினுள் செல்ல இஷானி அலமேலுவிடம் வாயடித்துக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

“நாளைக்கு என்னோட ஸ்டூடண்ட்ஸெல்லாம் சீக்கிரமாவே வரச் சொல்லிட்டேன் பாட்டி… கிளாசை சீக்கிரமா முடிச்சிட்டு நானும் அஸ்மியும் ஒன்னா போய் வெஜிடபிள்ஸ் வாங்கிட்டு வந்துடுறோம்” என்று சொன்னவளின் வாயில் சாப்பாட்டை அவர் அடைத்து கொண்டிருக்க

சஞ்சீவினியுடன் வந்த அஸ்மிதா “ஆமா! இவ அஞ்சு வயசு பாப்பா.. இன்னும் நீ அவளுக்கு ஊட்டி விடு பாட்டி… உனக்கு ஒன்னு தெரியுமா அல்லு? ஊட்டிவிட்டுச் சாப்பிடுற குழந்தைகளுக்கு செல்ஃப் கான்ஃபிடென்ஸ் கம்மியா இருக்குமாம்” என்று சொல்லிவிட்டுக் கண் சிமிட்டி அலமேலுவையும் இஷானியையும் கேலி செய்ய

“ஏன்டி சொல்ல மாட்டே? உனக்கு ஆறு வயசு வரைக்கும் நான் தானே ஊட்டி விட்டேன்… உனக்கு தன்னம்பிக்கை குறைஞ்சா போயிடுச்சு? உன் கிட்ட யாராச்சும் பேசித் தான் ஜெயிக்க முடியுமா இல்லை சண்டை போட்டுத் தான் ஜெயிக்க முடியுமா? எல்லாம் நான் ஊட்டுன பருப்புச்சாதமும், கீரைச்சாதமும் குடுத்த உரம் தான்” என்று சரிக்குச் சரி அவளுக்குப் பதிலளித்தபடி இஷானிக்கு அலமேலு ஊட்டிவிட அவரிடம் ஒரு வாய் சாதத்தை வாங்கிவிட்டு அஸ்மிதாவிடம் நாக்கைத் துருத்திக் காட்டினாள் இஷானி.

“ஓகே பாட்டி! நான் ஒத்துக்கிறேன்… ஆனா நான் உன் கையால ஊட்டிவிட்டுச் சாப்பிட்டது ஆறு வயசுல, அது அறியாப்பருவம்… ஆனா இந்த இஷிக்கு ட்வென்ட்டி ஒன் ஆகுது… இன்னும் நீ ஊட்டுனா தான் டின்னர் இறங்குமா மேடத்துக்கு?” என்று இருவருக்கும் பழிப்பு காட்டினாள் அஸ்மிதா.

“பாட்டி நீ அவளைக் கவனிக்காதே! அவளுக்கு உன்னையும் என்னையும் பார்த்து பொறாமை பாட்டி” என்று சொன்னபடி அலமேலுவைத் தோளோடு அணைத்துக்கொள்ள

“ஆமா! இந்த அல்லு சில்லு எலிசபெத் மகாராணி, நீ குயின் டயானா… உங்களைப் பார்த்து நான் பொறாமை படுறேனாக்கும்? போடி” என்று ஜம்பமாக உரைத்துவிட்டுத் தங்களது அறையை நோக்கிச் சென்றவளைப் பார்த்து நமட்டுச்சிரிப்புடன் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர் இஷானியும் அலமேலுவும்.

அவர்கள் இருவருமே அங்கே நின்ற சஞ்சீவினியின் பார்வை இஷானியை ஒரு வித யோசனையுடன் அளவிடுவதைக் கவனிக்கவில்லை.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛