🌞 மதி 37🌛

தென் தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடற்கரைப்பகுதிகளில் கனிமவளம் நிறைந்துள்ள கடற்கரை மணலில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனாசைட், தோரியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. இந்தக் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் நிறைய தனியார் நிறுமங்கள் கடற்கரைமணலை அங்கீகரிக்கப்பட்ட அளவைத் தாண்டியும் தோண்டியெடுப்பது, சுற்றியுள்ள நிலங்களை ஆக்கிரமிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டனசே.வாஞ்சிநாதன், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை செப்டம்பர் 2013.

இஷானி ஹாலில் அமர்ந்து குடும்பத்தினருடன் திருமணத்துக்கான உடைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். கடையில் எடுக்கும் போதே பார்த்தது தான். ஆனால் அலமேலுவின் “கடை லைட் வெளிச்சத்துல பார்த்ததுலாம் சரியா இருக்காது” என்று புலம்ப வேறு வழியின்றி மீண்டும் ஒரு முறை புத்தாடைகளை விரித்துப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர் அஸ்மிதாவும் அலமேலுவும்.

இஷானி ராஜகோபாலனுடன் சோபாவில் அமர்ந்திருக்க அலமேலுவும் அஸ்மிதாவும் தரையில் போர்வையை விரித்துப் போட்டு அமர்ந்தபடி பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

அஸ்மிதா திருமணப்பட்டுக்கு பிளவுஸ் தைக்க எடுத்துவைத்தவள் இஷானியிடம் “இஷி உனக்கு அந்த கோல்டன் கலர் பிளவுஸ் கரெக்டா இருக்கும்ல” என்று கேட்டுவிட்டு அவளது பதிலை எதிர்பாராது அவர்களின் அறையை நோக்கிச் சென்றவள் வரும் போது இருவரின் அளவுச்சட்டைகளுடன் திரும்பினாள்.

“பாட்டி! நான் நாளைக்கு டெய்லரக்கா கிட்ட குடுத்துட்டு வந்துடுறேன்.. இந்த உம்மணாமூஞ்சி ஒன்னும் என் கூட வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு இஷானியைப் பொய்யாய் முறைத்துவைத்தாள்.

அவள் அதற்கும் பெரிதாய் எதிர்வினையாற்றாது போய்விடவே அஸ்மிதாவுக்கு ஏன் இவள் இப்படி இருக்கிறாள் என்ற அங்கலாப்பு தோன்றாமல் இல்லை. திருமணப்பேச்சு ஆரம்பித்து அன்றோடு ஒரு வாரம் முடிந்துவிட்டது. இன்னும் முகத்தில் சுரத்தின்றி உலா வருபவளை என்ன தான் செய்வது என்று அஸ்மிதாவுக்குப் புரியவில்லை.

“இஷி! அட்லீஸ்ட் இந்த டிரஸ், ஜூவெல்ஸ் பார்த்துமா உன்னோட மனசுக்குள்ள கல்யாணக்கனவு வரல?” என்று கேலி போலக் கேட்டவளுக்கு

“ஒரு வேளை நான் பொண்ணா இருந்திருந்தா வந்திருக்குமோ என்னவோ.. ஆனா நான் பொண்ணு இல்லையே” என்று துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டாவைப் போல பதில் வந்தது இஷானியிடமிருந்து.

அந்தப் பதில் அங்கிருந்த அனைவரின் மனதையும் ஒரு நிமிடம் திடுக்கிடச் செய்தாலும் அஸ்மிதா அந்த திடுக்கிடும் உணர்விலிருந்து வெகு விரைவில் சுதாரித்துக் கொண்டாள். முகத்தைச் சீர்படுத்திக் கொண்டவள் அலமேலுவின் கையிலிருந்த முகூர்த்தப்புடவையை வெடுக்கென்று பிடுங்கியவள் அதை மீண்டும் அட்டைப்பெட்டிக்குள் வைத்து விட்டு

“இதெல்லாம் எதாச்சும் ஆசிரம் இருந்தா அங்கே கொண்டு போய் குடுத்துடுங்க பாட்டி” என்றவள் ஜீன்ஸின் பாக்கெட்டிலிருந்து மொபலை எடுத்து யாருக்கோ அழைக்க ஆரம்பித்தாள்.

அதே நேரம் அவளது ‘ஆசிரமத்தில் கொடுத்துவிடுங்கள்’ என்ற வார்த்தை அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்ததென்றால் அவள் அடுத்துப் பேசிய வார்த்தைகள் அவளது கோபத்தின் வீரியத்தைச் சொல்லாமல் சொன்னது.

“ஹலோ ஜெய்! நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் நடக்காதுடா… நான் கேன்சல் பண்ணிட்டேன்… நான் இனிமே கல்யாணம் பண்ணிக்கிறதாவே இல்ல… நான் உன்னை மறந்துடுவேன், நீ என்னை மறந்துடு… இனிமே நீ என்னைப் பார்க்கவோ பேசவோ டிரை பண்ணாத… குட் பை”

அவளது வார்த்தைகள் வீட்டிலிருந்த மூவரையும் திகைக்கவைத்தது. இஷானி அஸ்மிதாவின் வார்த்தைகள் ஜெய்யின் மனதை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்ற கவலையுடன் இவ்வளவு நாட்களிருந்த சோகபாவம் மாற முகம் நிறையக் கோபத்தைப் பூசிக்கொண்டு

“என்ன பேசுற அஸ்மி? எதுக்கு நீ இந்த மாதிரி நடந்துக்கிறடி? கொஞ்சம் கூட யோசிக்காம கல்யாணம் நடக்காதுங்கிற, உன்னை மறக்கச் சொல்லுற… அந்த அப்பாவி மனுசன் மனசு எந்தளவுக்குக் கஷ்டப்படும்னு யோசிக்கவே மாட்டியாடி?” என்று வெகுண்டெழ அஸ்மிதா அதைக் காதில் போட்டுக்கொள்ளாதவளாய் தனது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள்.

இஷானியோ தான் பேசிக்கொண்டிருக்கும் போதே தன்னையோ பெரியவர்களையோ சட்டை செய்யாமல் இஷ்டத்துக்கு பேசி ஜெய்யின் மனதை வருத்திவிட்டு இவள் பாட்டுக்கு அறைக்குள் சென்று அடைப்பட்டுக்கொண்டால் என்ன அர்த்தம் என்று கடுகடுப்புடன் அவர்களின் அறைக்கு வெளியே நின்று கதவை படபடவென்று தட்டி

“ஒழுங்கா டோரை ஓப்பன் பண்ணு அஸ்மி… இல்லனா கடுப்புல எதுவும் சொல்லிடப் போறேன்… உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க? ஒரு மனுசன் மனசுல காதலை வளர்த்துட்டு அவனை வேண்டானு சொல்ல எப்பிடி மனசு வருது உனக்கு? கொஞ்சமாச்சும் ஜெய்யோட நிலமையை யோசிச்சியா நீ?” என்று கத்த உள்ளே அஸ்மிதாவோ ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவள் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு நீ என்ன கத்தினாலும் எனக்குக் கேட்காது என்பது போல பாடல் கேட்க ஆரம்பித்தாள்.

அவளுக்கும் கல்யாணநேரத்தில் இப்படியெல்லாம் செய்து ஜெய்யின் மனதையும் வீட்டினரின் மனதையும் வருத்துவதில் இஷ்டமில்லை தான். ஆனால் இஷானியின் சோக கீதம் அவளை எரிச்சல் படுத்தியது.

இவள் இவ்வளவு வருந்துமளவுக்கு ருத்ரா என்ன அவ்வளவு பயங்கரமானவனா? இல்லை இவளைத் திருமணம் முடித்துக்கொடுத்து பாழுங்கிணற்றிலோ, படுகுழியிலோ அல்லது அதளபாதாளத்திலோ தள்ளப் போகிறோமா?

ருத்ராவைப் போல ஒரு மணாளன் கிடைக்க அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது இஷானி மேல் அவன் வைத்திருக்கும் காதலை ஒரு வெளியாளாய் பார்த்தாலே புரியும் எனும் போது சம்பந்தப்பட்டவளுக்கு ஏன் அந்தக் காதல் இன்னும் அடுத்த அடியை சந்தோசத்துடன் எடுத்து வைப்பதற்கான தைரியத்தை தரவில்லை?

இன்னும் எத்தனை நாள் இவள் இப்படி சோகசித்திரமாக வலம் வந்து ருத்ராவின் மனதில் நிம்மதியின்மையைத் தோற்றிவிப்பாள்? ஒரு வேளை திருமணத்துக்குப் பின்னரும் இதே நிலை தொடருமாயின் அது ருத்ராவின் மனதை வெகுவாகக் காயப்படுத்தும் என்பதில் துளி கூட ஐயமில்லை.

இதை எல்லாம் யோசித்த அஸ்மிதா வேறு வழியின்றி இஷானிக்கு ஒரு அதிர்ச்சிவைத்தியம் அளிக்க வேண்டுமென்று எண்ணியவள் அனைவரும் திடுக்கிடும் வகையில் திருமணம் நடக்காது என்று ஜெய்யிடமே தெரிவித்துவிட்டாள். இதற்கு மேல் அங்கிருந்தால் இஷானி கேள்வி கேட்டே அவளைப் பாடாய்ப்படுத்துவாள் என்பதால் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டாள்.

இஷானியும் நீண்டநேரம் தொண்டை வறள கத்தியவள் அதற்கு மேல் கத்துவதற்குத் தெம்பின்றி போகவும் ஆதங்கத்துடன் ஹாலுக்குத் திரும்பினாள். அங்கே செய்வதறியாது கலங்கிப் போயிருந்த ராஜகோபாலன், அலமேலுவின் முகங்கள் அவளுக்கு அஸ்மிதாவின் மேல் இருந்த கடுப்பை அதிகரிக்க அதை வெளிக்காட்ட இது சரியான நேரமில்லை என்று முகத்தைச் சீராக்கிக் கொண்டாள்.

அலமேலுவிடம் சென்று அமர்ந்தவள் “பாட்டி! அவ ஏதோ விளையாட்டுக்குச் சொல்லிருப்பா…. நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்காதிங்க” என்று அவர்களை இயல்பாக்க முயல அவர்களோ பேத்தியின் முடிவில் இடிந்து போனவர்களாய் தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டனர்.

இப்போது இஷானியின் மனம் இந்த விசயத்தை ருத்ராவிடம் சொல்லுமாறு அவளைத் தூண்டி விட அவளுக்குமே அவன் ஒருவனால் தான் அஸ்மிதாவின் அர்த்தமற்ற பிடிவாதத்தையும் கோபத்தையும் இப்போதைக்குக் கட்டுப்படுத்த முடியும் என்ற யோசனையுடன் அவனுக்கு அழைத்தாள்.

“ஹலோ மாமா! உடனே வீட்டுக்கு வர்றிங்களா? அஸ்மி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா”

முடிக்கும் போது குரல் அழுகைக்குத் தயாரானதில் கம்மிப் போய்விட மறுமுனையில் இருந்தவன் மனம் கவர்ந்தவளின் கவலை தோய்ந்த குரலில் பதறியவனாய் இன்னும் சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்துவிடுவதாகச் சொன்னவன் அஸ்மிதாவுக்கு திடீரென்று என்னவாயிற்று என்ற திகைப்புடன் வெங்கட்டிடம் சொல்லிவிட்டு சஞ்சீவினிபவனத்துக்குச் செல்ல காரை எடுத்தான்.

சில நிமிடங்கள் நகரத்தின் போக்குவரத்து நெரிச்சலால் பல நிமிடங்களாக நீளவும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தவன் விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்றான். ஹாலில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த மூவரையும் கண்டவன் ராஜகோபாலனிடம் “அஸ்மி எங்கே பெரியப்பா?” என்று கேட்க அவரோ அவள் அறைக்குள் சென்று அடைபட்டு இதோடு ஒருமணி நேரம் கடந்த பின்னரும் அவளிடமிருந்து தகவல் வரவில்லை என்று மட்டும் கூறியவர் பேத்தி கொடுத்த அதிர்ச்சி இன்னும் விலகாமல் இறுகிப் போய் அமர்ந்துவிட்டார்.

ருத்ரா விசயத்தைக் கேட்டவன் இஷானியுடன் அவர்களின் அறைக்கதவைத் தட்டினான்.

“அஸ்மி! எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்… வெளியே வா”

அவனது பேச்சுக்கும் அவளிடம் மதிப்பில்லை என்பது அவனது பதினைந்து நிமிடங்களை அஸ்மிதா அடைபட்ட அறைவாயிலில் நின்று விதவிதமாய் அவன் செய்த சமாதானத்திலிருந்தே தெரிந்து கொண்ட ருத்ரா வேறு வழியின்றி ஜெய்யைப் போனில் அழைத்தான். அவன் பேச்சுக்காவது அவளிடம் எதிர்வினை இருக்குமா என்று அறிந்து கொள்ளும் நோக்கில் அழைத்தவனின் அழைப்பை ஒரே ரிங்கில் எடுத்தான் ஜெய்.

“ஹலோ! சொல்லுங்க ருத்ரா”

“என்ன சொல்லுங்க ருத்ரா? தெய்வமே இங்க அவ கல்யாணத்தைக் கேன்சல் பண்ணுங்கனு சொல்லி எல்லாரையும் டென்சன் பண்ணுறா… நீங்க இன்னும் என்ன வெட்டி முறிக்கிறிங்க?”

ருத்ரா போட்ட அதட்டலில் அடுத்த முப்பதியைந்தாவது நிமிடம் ஜெய்யும் அவனுடன் சேர்ந்து அஸ்மிதாவின் அறைவாயிலில் நின்று கதவைத் திறக்குமாறு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவனருகில் ருத்ரா பதற்றம் நிறைந்த முகத்துடனும், இஷானி இதோ அழப்போகிறேன் என்ற அறிவிப்புடனும் நின்றிருந்தனர்.

அப்போது சொர்க்கவாசல் திறப்பதை போல அந்த அறைக்கதவு திறக்க வெளியே வந்த அஸ்மிதா ஜெய்யை நேரடியாகப் பார்த்து “நீ இங்க என்ன பண்ணுற ஜெய்? நான் தான் மேரேஜை கேன்சல் பண்ணிடுனு சொன்னேனே” என்று சாவகாசமாக உரைக்க ஜெய் எதுவும் பேசாது அவளை வெறித்தபடி மௌனமாய் நின்றான். அந்த முகத்தில் தெரிந்தது வருத்தமா, ஏமாற்றமா, கோபமா என்று அங்கிருந்த யாருக்குமே புரியவில்லை.

ருத்ரா கடுப்புடன் “ஷட் அப் அஸ்மி! சின்னப்பிள்ளைத்தனமா எதுவும் உளறாத… அவரா வந்து உன்னை லவ் பண்ணுறேனு சொன்னாரா? நீயா தேடி போய் அவரைக் காதலிக்கிறேனு சொல்லிட்டு இப்போ இந்த மாதிரி பேசுனா என்ன அர்த்தம்?” என்று கேட்க அவன் பேசியளவுக்குக் கூட ஜெய் பேசாது அமைதி காத்தான். அஸ்மிதா அவனை ஓரக்கண்ணால் கவனித்தவள் இஷானியை உணர்வற்ற விழிகளால் வெறித்தாள்.

இஷானி கண்கள் கலங்க “நான் பேசுனதுல உனக்கு கோவம் இருந்துச்சுனா அதை என் மேல காட்டு அஸ்மி… ஏன் கல்யாணத்தை நிறுத்தணும்னு சொல்லுற? அம்மா எவ்ளோ ஆசையா அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணிருக்காங்க தெரியுமா?” என்று சஞ்சீவினியின் நிலை என்னவாகுமோ என்று அழத் துவங்கினாள்.

“நான் என்ன பண்ணுறது? எனக்கும் இப்பிடிலாம் நடந்துக்கணும்னு ஆசையா என்ன? ஆனா நீ என்னை இப்பிடி பிஹேவ் பண்ண வைக்கிற இஷி” – அஸ்மிதா.

“நான் என்ன பண்ணுனேன்?” – இஷானி.

“இன்னும் என்ன பண்ணனும்? என்னைக்குக் கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சுதோ அப்போ இருந்தே யாருக்கோ வந்த வாழ்வுனு இருக்க நீ… உன்னை நாங்க கையைக் காலைக் கட்டி ஒரு ராட்சசன் கிட்டவா ஒப்படைக்க போறோம்? இல்ல மாமாவை உனக்குப் பிடிக்கலயா? அவரைப் பிடிக்கும், அவர் பேசுறது பிடிக்கும், அதை தனிமைல நினைச்சு சிரிக்கப் பிடிக்கும்… ஆனா கல்யாணம் பண்ணிக்கோனு முறைப்படி கேட்டா நான் பொண்ணு இல்ல, புடலங்கா இல்லனு டயலாக் பேசுற… காதலைப் புரிஞ்சுக்க நீ பொண்ணா இருக்கணும்னு அவசியம் இல்ல இஷி… ஏன் மனுசியா இருக்கணும்னு கூட அவசியமில்ல… இந்தப் பூமியில பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் காதலிக்கிறது உன் கண்ணுல படலையா?” – அஸ்மிதா.

அதற்கு பதிலேதும் கூறாது இஷானி அமைதி காக்க ருத்ரா எதுவும் பேச இயலாதவனாய் நின்றான் கிட்டத்தட்ட ஜெய்யைப் போலவே.

“நான் ஜெய்யைக் கஷ்டபடுத்துறேனு சொல்லுறியே, நீ மட்டும் என்ன பண்ணுற? உன் மேல உயிரையே வச்சிருக்கிற மாமாவைக் கஷ்டப்படுத்துற.. ஒரு மனுசனை உடல்ரீதியா கஷ்டப்படுத்துறது மட்டுமில்ல மனரீதியா துன்புறுத்துறதும் தப்பு தான் இஷி… நீ வேண்டாவெறுப்பா மேரேஜுக்கு சம்மதிச்சு உங்க லைப் அமைதியில்லாம கழியுறப்போ நான் மட்டும் என் மனசுக்குப் பிடிச்சவனோட எப்பிடி சந்தோசமா இருக்க முடியும்? எனக்கு உன்னை மாதிரி கடனேனு மூஞ்சியைத் தூக்கிவச்சிட்டு ஜெய்யை கஷ்டப்படுத்தப் பிடிக்கல… அதான் ஒரே வார்த்தையில கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன்”

இனி நீங்கள் என்ன கூறினாலும் நான் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்கப் போவதில்லை என்று சொல்லாமல் சொன்னவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாது மூவரும் விழித்தனர்.

இஷானி கண்ணீரைத் துடைத்தவண்ணம் “ஓகே! இனிமே நான் முகத்தைத் தூக்கிவைக்காம இந்தக் கல்யாண நிகழ்வுகள்ல கலந்துகிட்டா நீயும் மேரேஜுக்குச் சம்மதிப்பியா?” என்று இறங்கிவர

அஸ்மிதா திட்டம் வெற்றியடையப் போகும் மகிழ்ச்சியில் உள்ளுக்குள் துள்ளிக் குதித்தவள் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் “க்கும்! உன் பேச்சைக் காத்துல தான் எழுதணும்… நீ இப்போ சரி சரினு மண்டையை ஆட்டிட்டு மேரேஜுக்கு அப்புறமா மறுபடியும் இடிச்சப்புளி இஷியா மாறிடுவ… யாரை ஏமாத்தப் பார்க்கிற?” என்று சொல்லி உதட்டைச் சுழித்தாள்.

இஷானி தலையாட்டி மறுத்தவள் அவளது கரத்தைப் பற்றிக்கொண்டு “இல்லவே இல்ல… சத்தியமா நான் இனிமே இப்பிடி பிஹேவ் பண்ண மாட்டேன்… இந்தக் கல்யாணத்துலயும் சரி, எங்களோட வருங்கால வாழ்க்கையிலயும் சரி நான் முழு மனசோட என் கடமையைச் செய்வேன் இஷி” என்று உறுதியாய்க் கூறிய பிறகு தான் அஸ்மிதா மலையிறங்குவது போல காட்டிக்கொண்டாள்.

ஒரு வழியாக அவளது பிடிவாதத்தை விட்டு அவள் இறங்கி வந்ததே மற்ற மூவரின் முகத்திலும் புன்னகையைப் பூக்கச் செய்ய, இஷானியின் வாக்கில் மகிழ்ந்த ருத்ரா “ஓகே! அழுகாச்சி சீன் முடிஞ்சு போச்சு… இனிமே கல்யாண வேலைகளைக் கவனிப்போமா? டிரஸ்லாம் எங்க? நான் பார்க்கவே இல்லையே” என்று இஷானியிடம் பொய்யாய் குறைபட்டவன் கையோடு அவளை ஹாலுக்கு இழுத்துச் சென்றான்.

அங்கே பதபதைப்புடன் இருக்கும் அந்த வயோதிகத் தம்பதியினருக்கு இனி திருமணம் நடப்பதில் எந்தக் குழப்பமும் வராது என்ற நம்பிக்கையை அளிக்க அவர்கள் சென்றுவிட ஜெய்யும் அஸ்மிதாவும் தனித்துவிடப்பட்டனர்.

அஸ்மிதாவால் ஜெய்யை ஏறிட்டுப் பார்க்க இயலவில்லை. இஷானிக்கு நல்லது செய்வதற்காகத் தான் இந்த நாடகம் என்றாலும் அது ஜெய்யைக் காயப்படுத்தியிருக்கும் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படி இருக்க அவளால் எப்படி அவனைத் தைரியமாக நோக்க இயலும்?

ஆனால் ஜெய் அவளது நிலையைப் புரிந்து கொண்டவன் “நீங்க நல்லா பொய் சொல்லுவிங்க போல.. பாவம் உங்க சிஸ்டர் ரொம்பவே பயந்துட்டாங்க” என்று சொல்லவும் அஸ்மிதாவுக்கு ஆச்சரியம்.

“நான் பொய் சொல்லுறேனு உனக்கு எப்பிடி தெரியும் ஜெய்?”

“என்னை ஒவ்வொரு தடவை பார்க்கிறப்போவும் உங்க கண்ணுல மின்னுற காதல் உண்மையானது… உண்மையா காதலிக்கிறவங்களால அவங்க மனசுக்குப் பிடிச்சவங்களை அவ்ளோ ஈசியா விட்டுக்குடுக்க முடியாதுங்க… இந்த ஒரு காரணம் தான் இவ்ளோ டிராமா நடந்ததுக்கு அப்புறமும் நான் அமைதியா இருந்ததுக்குக் காரணம் அஸ்மி”

அவன் சொல்லி முடித்ததும் தன் மீதும் தன் காதல் மீதும் அவன் வைத்துள்ள நம்பிக்கையில் மனம் மகிழ்ந்தவள் அவனை அணைத்துக் கொண்டாள். விழிகளை மூடி அவன் இதயத்துடிப்பின் லப்டப்பைக் கேட்டவாறு “ஐ லவ் யூ ஜெய்” என்றவளின் குரலில் இருந்தது நூறு சதவிகித காதல் மட்டுமே. அதை உணர்ந்தவனாய் இனி இத்திருமணத்தில் எவ்விதக்குழப்பமும் நேராது என்ற நிம்மதியுடன் ஜெய்யின் கரங்கள் அவளது கூந்தலை வருடிக்கொடுக்க ஆரம்பித்தது.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛