🌞 மதி 32 🌛

தங்களின் உரிமைகளைக் கேட்டுப்பெறாதது பெண்களின் தவறு தானே தவிர ஆண்கள் பெண்களின் உணர்வுகளை மதிப்பதில்லை என்று பொதுப்படையாகக் கூற இயலாது. ஒவ்வொரு பெண்ணும் தங்களின் இயல்பான சம உரிமைகளைக் கேட்டுப் பெற தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் கே. லக்ஷ்மி ரகுராமையா (அனைத்திந்திய பெண்களுக்கான மாநாட்டின் தலைவர்)

சேகர் வில்லா…

வினாயகமூர்த்தி சந்திரசேகரிடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறப் போகிற மீட்டிங்கில் பேச வேண்டிய விஷயங்களைப் பற்றி கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார். அவர்களுக்கு எதிர்புறம் சோபாவில் அமர்ந்திருந்த மந்தாகினி தாங்கள் மூவரும் ஆஸ்திரேலியா சென்றுவிட்டால் வீட்டையும் அர்ஜூனையும் ருத்ரா பார்த்துக்கொள்வான் என்று நிம்மதியடைந்தவர் அலுவலகத்தின் பொறுப்பைத் தான் யாரை நம்பி ஒப்படைப்பது என்று புரியாது விழித்தார்.

இதை கணவரிடமும் தமையனிடமும் கேட்டவர் அவர்களுக்கும் இது குறித்த குழப்பம் இருக்கவே மூவருமாய் ஒரு சேர யோசித்ததில் ருத்ரா ஒருவனே அவர்கள் கண் முன் வந்தான். சந்திரசேகருக்கு அவன் வசம் பொறுப்புகளை ஒப்படைப்பதில் துளி கூட தயக்கம் கிடையாது. பணம், பதவி, வசதி என்றெலாம் ஆசைப்படத் தெரியாதவன், அதே நேரம் கொடுத்த பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் நிறைவேற்றுபவன். இது எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அவன் மீது வைத்துள்ள நம்பிக்கையும் அதிகம்.

அதே நேரம் மந்தாகினிக்கும் தன் தம்பியின் குணம் நன்றாகவே தெரியும். அவனால் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால் பாதியில் தட்டிக் கழிக்கமுடியாது. இப்போது ஆஸ்திரேலியா செல்வதை சாக்காக வைத்துக் கொண்டு அவனை கம்பெனியின் இயக்குநர் பதவியில் அமர்த்திவிட்டு சில காலத்துக்குப் பின்னர் அப்பதவியை அவனிடமே ஒப்படைத்துவிடலாம் என்ற எண்ணம் அவருக்கு.

வினாயகமூர்த்தியைப் பொறுத்தவரைக்கும் அவரது தம்பி ருத்ரா பிழைக்கத் தெரியாதவன் தான். ஆனால் புத்திசாலி, கூடவே திறமைசாலியுமாகவும் இருக்கிறான். என்ன ஒன்று, நேர்மை, நியாயம், தர்மம் என்று பேசி தன்னை எரிச்சலூட்டுவான். ஆனால் அவனது அக்கொள்கைகளுமே இப்போது அவருக்கு வசதியாய் தான் போய்விட்டது. இந்த குறுகியகாலத்துக்கு அவனை இயக்குனராக்கி விட்டு மூவரும் ஆஸ்திரேலியா சென்றாலும் அவன் மற்றவர்களைப் போல தங்களை ஏமாற்றவோ நிர்வாகத்தில் குளறுபடி செய்யவோ மாட்டான். அதுமட்டுமன்றி அவர்கள் இல்லாத நேரத்தில் அவனது புத்திசாலிதனத்தால் நிறுமத்தை நல்லமுறையில் நிர்வகிப்பான் என்ற நம்பிக்கை அவருக்கு.

ஆனால் மூவருக்கும் இருக்கும் ஒரே ஒரு சங்கடம் ருத்ரா இதற்கு கட்டாயமாக ஒத்துக்கொள்ள மாட்டான் என்பது தான். வினாயகமூர்த்தி வாய் விட்டே கூறினார் “அவன் கிட்ட கேக்குறதும் குட்டிச்சுவத்துல முட்டிக்கிறதும் ஒன்னு தான் சேகர்… நீ வேணும்னா பாரு மந்தா, இதுக்கும் அந்தப் பையன் எதாவது வியாக்கியானம் பேசுவான்… வீணா நமக்கு டென்சன் தான் ஆகும்” என்றார் எரிச்சலுடன்.

“அண்ணா! நம்ம இன்னும் அவன் கிட்ட கேக்கவே இல்லையே! அதுக்குள்ள நீங்களா ஏன் கற்பனை பண்ணிக்கிறிங்க? அவன் வரட்டும்.. பொறுமையா எடுத்துச் சொல்லுவோம்”

“நீ குடுக்கிற இடம் தான் மந்தா அவன் இப்பிடி பிடிவாதக்காரனா வளர காரணம்”

“அவன் சின்னப்பையன் தானே! போக போக சரியாயிடுவான்… நீங்க அவன் கிட்ட நம்மளோட நிலமையை எக்ஸ்ப்ளெயின் பண்ணுங்க சேகர்… எனக்கென்னமோ அவன் புரிஞ்சிப்பான்னு தோணுது”

மந்தாகினி தம்பிக்காக கணவரிடமும் தமையனிடமும் வாதாடிக் கொண்டிருக்கும் போதே வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்தான் ருத்ரா. அவன் முகத்தின் ஜொலிப்பைக் கண்டதும் மந்தாகினிக்கு அவன் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பது தெரிந்துவிட்டது. இப்போது அவனிடம் பேச்சு கொடுத்தால் கண்டிப்பாக தங்கள் ஏற்பாட்டுக்கு அவன் ஒத்துக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் அவனை அழைத்தார்.

ருத்ரா மூவரையும் கேள்விக்குறியுடன் பார்த்துவிட்டு அவர்கள் வந்தவன் “எதுக்கு என்னை கூப்பிட்ட மந்தாக்கா?” என்று கேட்க

மந்தாகினி “கொஞ்சம் உக்காருடா ருத்ரா… நின்னுட்டே பேசணுமா என்ன?” என்று வாஞ்சையுடன் கூற உடன்பிறந்தவளின் பாசத்தை அவமதிக்கும் எண்ணமின்றி அவரருகில் அமர்ந்தான் அவன்.

மந்தாகினி சந்திரசேகரையும் வினாயகமூர்த்தியையும் அமைதி காக்குமாறு சைகை செய்தவர் தான் பேசுவதாக குறிப்பால் உணர்த்திவிட்டு ருத்ராவிடம் ஆஸ்திரேலியா செல்லும் விசயத்தை விளக்க ஆரம்பித்தார். ருத்ரா முழுவதுமாகக் கேட்டவன் “எல்லாம் சரி தான்! இதை எதுக்கு நீ என் கிட்ட சொல்லுறனு புரியலக்கா” என்று சொல்லவும்

“நாங்க மூனு பேரும் ஆஸ்திரேலியா போயிட்டா நீ தான் வீட்டையும் அர்ஜூனையும் பொறுப்பா பார்த்துக்கணும் ருத்ரா” என்று சொல்லிவிட்டு அடுத்த வேண்டுகோளுக்காக இடைவெளி விட்ட சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டான் அவரது சகோதரன்.

“இப்போவும் நான் தான் வீட்டையும் அர்ஜூனையும் பார்த்துக்கிறேன்… உங்க மூனு பேருக்கும் பிசினஸ்னு வந்தா எதுவுமே கண்ணுக்குத் தெரியாதே! நீ என்னவோ புதுசா சொல்லுவேனு நினைச்சு வந்தேன்… ஐ அம் டோட்டலி டிஸ்ஸப்பாயிண்டட்” என்று சொல்லிவிட்டு எழப்போனவனை வினாயகமூர்த்தியின் “சின்னவனே” என்ற வார்த்தை மீண்டும் சோபாவில் அமரவைத்தது.

என்ன வேண்டும் உனக்கு என்ற ரீதியில் பார்த்தவனிடம் “நீ வீட்டையும் அஜ்ஜூவையும் பார்த்துக்கிறதை வச்சு தான் நாங்க மூனுபேரும் ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.. நாங்க ஆஸ்திரேலியா போயிட்டு வர்ற வரைக்கும் நம்ம கம்பெனி போர்ட்ல நீ ஆல்டர்னேட் டைரக்டரா இருக்கணும்.. கம்பெனியோட டே டு டே ஆக்டிவிட்டிசை மேனேஜ் பண்ணனும்… எல்லாம் நாங்க ஆஸ்திரேலியா போயிட்டு வர்ற வரைக்கும் தான்… எங்களால வேற யாரையும் நம்ப முடியாதுடா ருத்ரா… எல்லாரும் அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ காலியாகும்னு நினைக்கிறவங்க… நீ ஒருத்தன் தான் நம்பிக்கையானவன்… அதனால வழக்கம் போல அடம்பிடிக்காம நிலமையைப் புரிஞ்சுகிட்டு ஒத்துக்கோடா” என்று அவரது இயல்புக்குச் சற்றும் பொருந்தாத சாந்தமானக் குரலில் பொறுமையாக அவனிடம் வேண்டுகோள் விடுத்தார் வினாயகமூர்த்தி.

ருத்ரா சட்டென்று மறுப்பான் என்று மூவரும் எண்ணியிருக்க அவனோ “இதை பத்தி யோசிக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்று கேட்க

“எவ்ளோ நாள் வேணும்னு சொல்லு… ஏன்னா நீ ஓகே சொல்லிட்டா போர்ட் மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இந்த விசயத்தை போர்டோட மெம்பர்சுக்கு தெரியப்படுத்தணும்” என்று மறுக்க முடியாத குரலில் கட்டளை போல அவனிடம் கேட்டார் சந்திரசேகர்.

மூவரையும் யோசனையுடன் பார்த்தவன் “நாளைக்கு மார்னிங் என் டிசிசனை சொல்லுறேன்… ஆனா ஒரு விசயம் இது எல்லாமே நீங்க ஆஸ்திரேலியால இருந்து திரும்பி வர்ற வரைக்கும் தானே?” என்று உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டான்.

மூவரும் ஒரே குரலில் “நாங்க திரும்புற வரைக்கும் தான் ருத்ரா” என்று கூற அவன் “மார்னிங் சொல்லுறேன்” என்ற ஒற்றை வார்த்தையுடன் மாடிப்படிகளில் ஏறி தனது அறையை நோக்கிச் சென்றான்.

அவன் சென்றதும் மந்தாகினிக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. வழக்கம் போல மறுக்காமல் அவன் யோசித்து முடிவெடுப்பதாகச் சொன்னதே அவருக்கு பெரும் நிம்மதி. சந்திரசேகரும் வினாயகமூர்த்தியும் கூட அவ்வாறே உணர்ந்தனர். 

**********

சஞ்சீவினி பவனம்….

இரவின் அமைதியான அழகை ரசித்தபடி தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் அஸ்மிதா. கைகளை முகத்துக்கு முட்டுக் கொடுத்து முழங்கால்களை கட்டிகொண்டு அமர்ந்திருந்தவளின் மனம் நிறைந்திருந்தது. மனமெல்லாம் சற்று முன்னர் நடந்த இனிய நிகழ்வுகளின் நினைவுகளே.

பிரதோச வழிபாடுக்குச் சென்று திரும்பிய சஞ்சீவினியும் அவரது பெற்றோரும் ஹாலில் இளையவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும் இந்நேரத்தில் இவர்கள் ஒன்று கூடி அரட்டை அடித்து இதுவரை பார்த்தறியாததால் திகைத்தப் பார்வையுடன் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

அவர்களைக் கண்டதும் ஜெய் மரியாதைநிமித்தமாக எழுந்தவன் “ஹலோ மேடம்! எப்பிடி இருக்கிங்க?” என்று எப்போதும் விசாரிப்பது போல நலம் விசாரிக்க சஞ்சீவினி அவனுக்குப் பதிலளித்தபடி அமர்ந்தார்.

பின்னர் ருத்ராவிடம் பார்வையைத் திருப்ப அவனோ “நான் சண்டே வர முடியறதில்லக்கா… அதான் உங்களையும் பெரியம்மா பெரியப்பாவையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று சொல்ல சஞ்சீவினி தான் கேட்காகமலே இவன் ஏன் காரணத்தை அடுக்கினான் என்ற எண்ணத்துடன் அவனை ஏறிட்டார்.

பின்னர் கண்ணம்மாவை அழைக்க அஸ்மிதா “கண்ணம்மா வீட்டுக்குப் போய் ரொம்ப நேரமாச்சும்மா” என்று சொன்னவள் என்றைக்குமில்லாத அதிசயமாய் தானே உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்தாள்.

“கோயிலுக்குப் போயிட்டு வந்ததுல டயர்டா இருப்பிங்க” என்ற காரணம் வேறு. ஜெய்யை தவிர அனைவருக்கும் அவளது திடீர் கவனிப்பு புரிபட அலமேலு “உனக்கு உடம்புக்கும் ஒன்னுமில்லயே? ஏன்னா இந்த மாதிரி வேலையை நீ பண்ணி இது வரைக்கும் நான் பார்த்தது இல்ல” என்று சந்தேகமாய் நோக்க

அஸ்மிதா கண்ணைச் சுருக்கியவள் “நல்லதுக்கே காலமில்லப்பா.. இந்தப் பாட்டி ஏன் இப்பிடி சந்தேகப்பிராணியா இருக்கு ஆர்.கே?” என்று பொய்யாய் சலித்துக் கொண்டாள். அவளருகில் நின்ற இஷானி 

“நீ ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணுற அஸ்மி… சட்டுப்புட்டுனு விசயத்தைச் சொல்லுடி… ஜெய் பாவம்… மனுசன் பி.பி இன்கிரீஸ் ஆகி மயக்கம் போட்டு விழுந்துடப் போறாரு” என்று அவசரப்படுத்தினாள்.

அஸ்மிதா தொண்டையைச் செருமியவள் அனைவரின் பார்வையும் அவள் புறம் திரும்பியதும் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டபடி “நான் ஜெய்யை லவ் பண்ணுறேன்” என்று சொன்னதும் பெரியவர்களின் பார்வையில் ஆச்சரியம், திகைப்பு எல்லாம் கலந்த கலவை உணர்வு.

சஞ்சீவினிக்கு இத்தகவல் அதிர்ச்சியை மட்டுமே கொடுத்தது. ஏனெனில் சந்திரசேகரின் செய்கை அஸ்மிதாவின் மனதில் ஆண்களைப் பற்றி உருவாக்கியிருந்த எண்ணம் அப்படிப்பட்டது. பலமுறை அவள் வாய்விட்டே “நான் இந்த ஜென்மத்துல ஒரு ஆம்பளைய நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்க மாட்டேன்… எல்லா ஆண்களுமே சந்தர்ப்பவாதிகள்… வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் நல்லவங்க வேசம் போடுவாங்க” என்று கசப்புணர்வுடன் கூறியிருக்க அப்படிப்பட்டவள் இன்று காதலிக்கிறேன் என்று வந்து நிற்பது அவருக்கு அதிர்ச்சியைத் தானே கொடுக்கும்.

அவரது கவனம் மகளிடமிருந்து ஜெய்யின் பக்கம் திரும்பியது. முதல் தடவை சந்தித்த போது இருந்த அதே சாந்தம், அதே அமைதி. அவனுடன் இரண்டு நிமிடம் பேசினாலே அவன் அப்பாவி என்று கண்டறிந்துவிடலாம். அப்படிப்பட்டவனால் அஸ்மிதா போன்ற ஒரு கோபக்காரியை எவ்வாறு வாழ்க்கை முழுக்க சமாளிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது அவருள்.

அலமேலுவுக்கும் ராஜகோபாலனுக்கும் இந்தக் காதல் விவகாரம் ஒன்றும் புதிது அல்ல. இதே போல தான் ஒரு காலத்தில் சந்திரசேகர் திருமணம் செய்தால் சஞ்சீவினியைத் தான் திருமணம் செய்வேன் என்று இதே கூடத்தில் வைத்து சொன்னது அவர்களின் நினைவலைகளில் வந்து சென்றது.

அன்று தந்தை, இன்று மகள். வித்தியாசம் அவ்வளவே. ஆனால் பேத்தி குணத்தில் அவளது தந்தைவழி பாட்டனார் ராமமூர்த்தியை ஒத்திருப்பதால் கோபக்காரியாயினும் அவளது முடிவு சரியாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. அந்த ஈசனிடம் போய் சேர்வதற்குள் இரு பேத்திகளின் திருமணத்தைக் கண்ணாற கண்டுவிட்டால் போதுமென்ற மனநிலை அவர்களுக்கு.

அங்கே சில நிமிடம் அமைதி ஆட்சி செய்ய ஜெய் தன் குரலால் அந்த ஆட்சியைக் கலைத்தான்.

“மேடம் எனக்கு புரியுது… சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லாத என்னை மாதிரி ஒருத்தனுக்கு பொண்ணைக் குடுக்க உங்களுக்கு மனசு வராது தான். ஆனா நான் அஸ்மியை உண்மையா காதலிக்கிறேன்… வாழ்க்கையை அவங்களோட சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறேன்… எல்லாத்துக்கும் மேல அவங்க என் மேல எடுத்துக்கிட்ட அக்கறைய வாழ்நாள் முழுக்க அனுபவிக்கணும்னு நினைக்கிறேன்… எல்லாமே உங்க சம்மதத்தோட தான் மேடம்… உங்களுக்கு இஷ்டமில்லனா நாங்க உங்களை வற்புறுத்த மாட்டோம்… ஆனா நானோ அஸ்மியோ வாழ்க்கையில இன்னொரு ஆளை எங்களோட லைப் பார்ட்னரா நினைச்சுக் கூட பார்க்க மாட்டோம்” என்று இதுவரைக்கும் அஸ்மிதாவிடம் கூட தனது காதலை வெளிப்படுத்தாதவன் தன் மன எண்ணத்தை மறைக்காது சஞ்சீவினியிடம் கூறிவிட்டான்.

கூடவே தாங்கள் என்றுமே வேறு ஒருவரை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற ஒரு வார்த்தையில் அஸ்மிதாவைப் போல தானும் காதலில் உறுதியாக இருப்பதை மறைமுகமாக அவர்களுக்குத் தெரிவித்துவிட்டான்.

சஞ்சீவினிக்கும் ஜெய்யின் முகத்தைக் காணும் போது மறுப்பதற்கு தோணவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இஷானி, ருத்ரா கூட அவனுக்கு நற்சான்றிதழ் அளிக்கவே அவரால் மகளின் விருப்பத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியவில்லை.

அதோடு கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவராவது நிதானமும் பொறுமையும் உடையவராக இருந்தால் மட்டுமே திருமணவாழ்க்கை நிலைக்கும் என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டிருந்தவருக்கு கோபக்காரியான அஸ்மிதாவை ஜெய்யின் பொறுமையான குணம் மாற்றிவிடும் என்றும், அப்பாவியான ஜெய்கு சாமர்த்தியசாலியான அஸ்மிதா உற்றத்துணையாக இருப்பாள் என்றும் தோண அவர்களின் காதலுக்குத் தனது பெற்றோர் சம்மதத்துடன் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

அதை எண்ணியபடி தோட்டத்தில் அமர்ந்திருந்த அஸ்மிதாவின் அருகில் வந்து அமர்ந்தாள் இஷானி. அவளைக் குறும்புடன் பார்த்தபடி “என்ன அஸ்மி கல்யாணக்கனவுகளா?” என்று கேட்டுவைக்க, அஸ்மிதா எப்போதும் பதிலுக்குப் பதில் பேசி கேலி செய்பவள் அன்றைக்கு மகிழ்ச்சியில் மிதந்த மனதுடன் புன்னகையை மட்டும் பதிலாக அளித்தாள் இஷானிக்கு.

இஷானிக்கு அவளது அமைதி ஒரு ஆச்சரியம் என்றால் இப்போது தன்னால் சிரித்துக் கொண்டிருக்கும் அவளது குணம் மற்றொரு ஆச்சரியம். கிண்டலாக நாடியில் கைவைத்து ஆச்சரியப்பட்டவள்

“அம்மாடி! இதுக்கு பேரு தான் வெக்கமா? ஜெய் சார் மட்டும் இதைப் பார்த்திருக்கணும்.. இந்தச் சண்டைக்காரிக்கு வெக்கப்படக் கூட தெரியுமானு ஆச்சரியப்பட்டு போவாரு” என்று மேலும் கேலி செய்ய

“யூ ஆர் சோ மீன் இஷி… இதுக்குலாம் சேர்த்து வச்சு ருத்ரா மாமாவை வச்சு உன்னை கலாய்க்கல என் பேரு அஸ்மிதா இல்லடி” என்று தனது மௌனம் கலைந்து சூளுரைத்தாள் அஸ்மிதா.

“ஐயோ உன் மாமாவைப் பார்த்து நான் அப்பிடியே பயந்து நடுங்கிட்டேன் போ… வேணும்னா இப்போ கூட கூப்பிடு… நான் ஒன்னும் அவருக்கு பயப்படமாட்டேன்” என்று அமர்த்தலாக மொழிந்தாள் இஷானி. ஆனால் உள்ளுக்குள்ளே அஸ்மிதா ஒருவேளை ருத்ராவை அழைத்துவிட்டால் என்ன செய்வது என்ற யோசனை எழுந்தது உண்மை.

அஸ்மிதா அவள் முகத்திலிருந்தே மனதைப் படித்தவளாக “இஸிண்ட்? அப்போ மாமாக்கு போனை போட்டுட வேண்டியது தான்” என்றபடி அவளது மொபைலை எடுக்கவும் இஷானி பதறிப் போய் அதைப் பிடுங்கினாள்.

“ஒன்னும் தேவை இல்ல… உங்க மாமா வந்து தேவையில்லாம பேசி என்னை இரிட்டேட் பண்ணுவாரு… ஆ ஊனா ஹவ் டு வின் இஷி’ஸ் ஹார்ட்னு ஆரம்பிச்சிடுவாரு…  வேண்டாம் தெய்வமே… இப்போதைக்கு அதைக் கேக்குற மனதைரியம் எனக்கு இல்ல” என்று அஸ்மிதாவைக் கையெடுத்துக் கும்பிட அஸ்மிதா “ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்… இனிமே நீ என்னை கிண்டல் பண்ணுவ?” என்று பொய்யாய் மிரட்ட அதற்கு இஷானியும் பொய்யாய் பயப்பட இரு சகோதரிகளின் பேச்சுச்சத்தம் அந்த இரவின் அமைதியை அழகாக கலைத்தது.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛