🌞 மதி 29 🌛

பெண்மை என்பது என்ன? வெறுமெனே அலங்காரப்பொம்மைகளாகக் காட்சியளிப்பதும், சுயசார்பின்றி இருப்பதுமே பெண்மை என்றால் அது பெண்மையை இழிவு படுத்துவதற்கு சமம். பெண் என்பவள் புத்திசாலியாகவும், சுதந்திரத்துடனும் இருக்கும் அதே சமயத்தில் ஒரு நல்ல குடும்பத்தலைவியாகவும் யாரையும் சாராமலும் இருக்க முடியும். எனவே பெண்கள் தங்களை இரண்டாம் தரக்குடிமக்களாக எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும் பிரமீளா கல்ஹான் (Special correspondent of The Hindustan Times)

தன்னெதிரே நின்றபடி சுடிதார் துப்பட்டாவின் நுனியைப் பிடித்துத் திருகிக் கொண்டிருந்த அஸ்மிதாவை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய். எப்போதும் ஞாயிறன்று அவன் ஓவியப்பயிற்சி கொடுக்க வரும் போது அவனை கேலி செய்துவிட்டு இடத்தைக் காலி செய்பவள் அன்றைக்கு அவனிடம் பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு வகுப்புக்கு வந்திருந்த சிறுமிகளை அனுப்பி வைக்கவுமே அவனுக்கு ஏதோ சரியில்லை என்று புத்தியில் உறைத்தது.

வாண்டுகளும் அவள் சொன்னது தான் தாமதம் வகுப்பை விட்டு வெளியே சிதறியோட ஜெய் தான் என்ன அவ்வளவு கொடுமைக்கார வாத்தியாரா என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான் மனதிற்குள். பின்னர் தன்னையே விழியகலாது நோக்கிக் கொண்டிருக்கும் அஸ்மிதாவின் பார்வையை எதிர்கொள்ளத் தயங்கியவனாக அங்கிருந்த கரும்பலகையின் மீது கண் பதித்தான் அவன்.

அஸ்மிதாவுக்கு நெடுநேரம் இப்படியே நின்று பொழுதைப் போக்கும் எண்ணமில்லை. தொண்டையைச் செருமி அவனது கவனத்தைக் கடன் கேட்டவள் அவன் திரும்பவும் அவனை நோக்கிப் புன்னகைத்தாள். ஜெய்யும் பதிலுக்குப் புன்னகைத்தவன் அவள் என்ன தான் பேசப்போகிறாள் என்பது புரியாமல் குழம்பிப் போய் நின்றான். அவனை மேலும் குழப்ப விரும்பாதவள் மனதிலுள்ள காதலை உலக வழக்கப்படி மூன்றே வார்த்தைகளில் மொழிந்தாள்.

“ஐ லவ் யூ ஜெய்”

அவள் அப்படி சொன்னதும் ஜெய்யின் முகத்தில் சந்தோசமா துக்கமா என்று வரையறுக்கப்படாத ஒரு உணர்வு தோன்றியது. சத்தியமாக அது அஸ்மிதாவுக்குமே புரியவில்லை. அவன் வயதுக்காரனிடம் ஒரு பெண் காதலைச் சொன்னால் ஒன்று அவன் முகம் மகிழ்ச்சியில் ஜொலிக்கவேண்டும், இல்லையென்றால் விருப்பமில்லை என்பதை முகத்தில் காட்டவேண்டும். ஆனால் அஸ்மிதாவின் எதிரில் நிற்பவன் இது இரண்டையும் செய்யாது ஏதோ ஒரு குழப்பத்துடன் அவளை வெறிக்க ஆரம்பிக்கவும் அஸ்மிதாவுக்கே தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்ற சந்தேகம் மனதில் உதயமானது.

“என்னாச்சு ஜெய்? உனக்கு என்னைப் பிடிக்கலையா? பிடிக்கலைனா ஓப்பனா சொல்லிடு… ஐ கேன் டிரை டு ஃபர்கெட் யூ” என்று சொல்லும் போதே தொண்டை அடைத்து, நாசி விடைத்து குரல் உள்ளே போய்விட்டது.

ஜெய் அவளது முகம் மற்றும் குரல் மாற்றத்திலிருந்தே அவளது மனநிலையை ஊகித்தவன் “அப்பிடிலாம் இல்லங்க… எனக்கு நீங்க சொல்லுறத நம்பவே முடியல… அதான் சைலண்டா நின்னேன்” என்று சாந்தமான குரலில் பதிலளிக்க அஸ்மிதா விலுக்கென்று நிமிர்ந்தவள்

“உன்னால எதை நம்ப முடியல ஜெய்?” என்று நேருக்கு நேராக அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

ஜெய் சங்கடத்துடன் “நீங்க சின்ன வயசுல இருந்தே அம்மா, தாத்தா, பாட்டி, சிஸ்டர்னு உறவுகளோட வளர்ந்திருக்கிங்க… உங்களுக்கு வரப் போற ஹஸ்பெண்டும் அப்பிடி இருக்கணும்னு தான் சஞ்சீவினி மேடம் எதிர்பார்ப்பாங்க… ஆனா எனக்குனு யாருமே கிடையாது மேடம்… என்னோட இத்தனை வருச வாழ்க்கையில எனக்குனு ஃப்ரெண்ட்சோ வெல்விஷர்சோ யாருமே கிடையாது… உறவுகளோட வாழ்ந்திட்டிருக்கிற நீங்க தன்னந்தனியா நிக்கிறவனை லவ் பண்ணுறேனு சொல்லுறதை என்னால சத்தியமா நம்ப முடியல” என்று உண்மைக்காரணத்தைச் சற்று தயங்கி தயங்கியே கூறினான்.

அஸ்மிதா அவன் சொன்ன அனைத்தையும் கேட்டவள் “நீ சொல்லுற காரணத்தை நான் யோசிச்சிருக்க மாட்டேனு நினைக்கிறியா ஜெய்? ஒரு மனுசன் சொந்தங்களோட இருக்கானா, இல்ல தனியாளானு யோசிச்சுலாம் லவ் வராது… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்… நீ நடந்துக்கிற விதம், மரியாதையா பேசுறது, குட்டிப்பசங்க கிட்ட அன்பா நடந்துக்கிறது இதைலாம் யோசிச்சப்போ எனக்கு மத்த விஷயங்கள் பெருசா தோணல ஜெய்” என்று தன்னிலையை விளக்க

“இப்போ உங்களுக்குப் பெருசா தோணாம இருக்கலாம்… ஆனா என்னைக்காச்சும் ஒரு நாள் இப்பிடி ஒருத்தனைப் போய் நம்ம லவ் பண்ணுனோமேனு நீங்க நினைச்சு வருத்தப்பட்டுட்டா இந்தக் காதலுக்கு அர்த்தமே இல்லாம போயிடும் அஸ்மி” என்று நிதர்சனத்தை உரைத்தான் ஜெய்.

அவன் சொன்னதும் வாஸ்தவம் தான். ஆனால் அஸ்மிதா தான் அதைக் காதில் போட்டுக்கொள்ளும் எண்ணமற்றவளாய்

“அப்பிடி ஒரு நாளும் நான் யோசிக்கிற நிலமைக்கு நீ என்னைக் கொண்டு போக மாட்டே ஜெய்… ஏன் தெரியுமா? எந்த ஒரு பொருளோட மதிப்பும் அதை வச்சிருக்கிறவங்களை விட, இல்லாதவங்களுக்குத் தான் சரியா தெரியும்… உறவுகள் யாருமில்லனு சொல்லுற உனக்குத் தான் உறவுகளோட மதிப்பு நல்லா தெரியும்… உன்னால எந்த உறவையும் கேலிப்பொருளாக்க முடியாது ஜெய்… நீ அன்புக்கு ஏங்குறவன்…. உன்னால அடுத்தவங்களைக் கஷ்டப்படுத்தவோ வருத்தப்படவைக்கவோ முடியாது… ஐ பிலீவ் யூ அண்ட் ஐ லவ் யூ” என்று ஆத்மார்த்தமாகக் கூறியவள் சற்றும் யோசிக்காது அவனை அணைத்துக் கொண்டாள்.

ஜெய் என்பவனோ அவள் இன்றைக்கு ஒன்று மாற்றி ஒன்றாகக் கொடுத்த அதிர்ச்சிகளின் தாக்கத்துடன் மூச்சு விட மறந்து நிற்க, ஆனால் அவனது கரங்கள் தன்னைக் அணைத்தபடி இதயத்துடிப்பைக் கேட்டுக்கொண்டிருந்தவளை ஆதரவாகத் தழுவிக் கொண்டது. அஸ்மிதா தான் காதலைச் சொன்னதற்கு அவன் பதில் பேசாதிருந்தாலும் இந்தச் சின்ன செய்கை ஒன்றே அவனது மனவிருப்பத்தைப் பறைசாற்றுவதாக எண்ணிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

இக்காட்சி ருத்ராவின் கண்ணில் படவே அவனால் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை. ருத்ராவுக்கும் அஸ்மிதா காதலிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைத்துமே வெகுசீக்கிரத்தில் நடப்பது போன்ற உணர்வு அவனுக்கு. சில நாட்களுக்கு முன்னர் தான் இதே ஜெய்யை அவள் இந்த வளாகத்திற்குள்ளேயே காலடி எடுத்துவைக்கக் கூடாது என்று மிரட்டினாள்.

அதிலிருந்து சில நாட்களில் அவனைக் காணும் போதெல்லாம் நம்பிக்கையின்மையைப் பார்வையிலும் வார்த்தையிலும் வஞ்சனையின்றி கொட்டினாள். பின்னர் அவனுடன் சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தவள் இன்று காதல் என்று சொன்னபடி அவனை அணைத்துக் கொண்டு நிற்கிறாள். இவையனைத்துமே குறுகியக்காலத்தில் நடந்து விட்டதை நினைத்து தான் ருத்ராவுக்குத் தயக்கம்.

ஆனால் தனது நிலமையே கிட்டத்தட்ட அப்படி தானே என்று யோசிக்க ஆரம்பித்தான் அவன். அவனுமே சிறுவயதிலிருந்தே அதாவது இஷானியைச் சட்டப்படி சஞ்சீவினி தத்தெடுத்ததிலிருந்தே அறிவான். ஆனால் அப்போதெல்லாம் அவன் மனதில் இஷானியைக் குறித்து எந்த எண்ணமும் வந்ததில்லை.

சில முறை ஆண்டுப்பொதுக்கூட்டத்துக்கு அஸ்மிதாவுடன் இஷானியையும் சஞ்சீவினி அழைத்து வந்ததுண்டு. அதையும் தாண்டி அவன் வழக்கமாகச் செல்லும் கோவிலில் சஞ்சீவினியுடன் அடிக்கடி இஷானியைக் கண்டிருக்கிறான். அப்போதெல்லாம் அவள் மீது தோன்றாத காதலும் நேசமும் அவனுக்கே இப்போது தானே இஷானியின் மீது தோன்றியது. இந்தக் கோணத்தில் யோசித்தவனுக்கு அஸ்மிதாவின் முடிவு அவசரத்தில் எடுத்ததாக இருக்காது என்ற நம்பிக்கை இப்போது கண்ட காட்சியில் உறுதிபெற்றது.

ஏனெனில் ஜெய் அவளை அணைத்திருந்த விதம் அவளைத் தன்னிடமிருந்து விலகவிட மாட்டேன் என்று உறுதியளிப்பது போல இருந்தது ருத்ராவின் பார்வைக்கு. எனவே அவசரக்கோலத்தில் அவர்களின் காதலில் கருத்து சொல்கிறேன் பேர்வழியாகப் புகுந்து குட்டையைக் குழப்பவேண்டாம் என்று எண்ணியவன் தொண்டையைச் செருமிக் கொண்டான்.

“க்கும்! போதும்பா! நான் ரொம்ப நேரமா திரும்பியே நிக்கிறேன்” என்று கேலியுடன் சொன்னவனின் குரலில் ஜெய் பதறிப் போய் அஸ்மிதாவை அவனது அணைப்பிலிருந்து விடுவிக்க அவளுமே கூந்தலைக் காதோரமாக ஒதுக்கிவிட்டபடி வாயிலில் அவர்களுக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்தவனை நோக்கினாள்.

ருத்ரா அவர்கள் புறம் திரும்பியவன் அவர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதே ஜெய்யின் முகம் பலவித உணர்வுக்கலவைக்கு உட்படுத்தப்படுவதை நன்றாக கவனித்துவிட்டான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அஸ்மிதாவை நோக்கியவன் அவள் காதைப் பிடித்துத் திருக ஆரம்பிக்கவும் “ஐயோ மாமா! காது வலிக்குது” என்று அவள் முகம் சுளிக்க

“இஸிண்ட்? இப்போ நீ பண்ணுன வேலைக்கு அக்கா மட்டும் இங்க இருந்துருக்கணும்… நீ காலி அஸ்மி” என்று குறும்பாகச் சொல்லி அவளைச் சீண்டிவிட்டுக் காதை விடுவித்தான்.

அதே குறும்புடன் ஜெய்யை நோக்கியவன் “கை குடுங்க பாஸ்! இன்னையோட உங்க வாழ்க்கையை இந்த மேடம்கு சாசனம் எழுதிக் குடுத்திட்டிங்க… சோ அடிக்கடி விழுப்புண்கள், வீரத்தழும்புகள்லாம் கிடைக்கும்… அதை அசராம ஏத்துக்க ரெடியாகிக்கோங்க” என்று சொல்ல ஜெய் அவன் சொன்னவிதத்தில் இவ்வளவு நேரம் இருந்த குழப்பவுணர்வு அகல வாய் விட்டு நகைக்க ஆரம்பிக்கவும் அஸ்மிதாவைக் கேலி செய்யும் விதமாக ருத்ராவும் அச்சிரிப்பில் கலந்துகொண்டான்.

அஸ்மிதா இருவரையும் முறைத்தவள் “போதும்! நீங்க ரெண்டு பேரும் சிரிக்கிறதைப் பார்க்க சகிக்கல… இனாஃப்” என்று மூக்கைச் சுருக்கிக் கொண்டு கூறவும் இருவரும் சிரிப்பை அடக்கியபடி அவளை நோக்கினர். அவளது முறைப்பில் உஷ்ணம் ஏறத்தொடங்கியதும் தானாகச் சிரிப்பு விடைபெற அந்நேரத்தில் இஷானி வெகுநேரமாகியும் ஜெய்யிடம் பேசிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற அஸ்மிதா திரும்பாததால் அவள் ஓவியப்பயிற்சி அளிக்கும் இடத்தில் தான் இருப்பாள் என்று ஊகித்து அங்கே வந்து சேர்ந்தாள்.

வந்தவளின் பார்வையில் ஜெய்யும் ருத்ராவும் சிரிப்பை அடக்கியபடி நின்றதும், அஸ்மிதா இருவரையும் முறைத்ததும் விழுந்துவிட தான் நினைத்தபடி இங்கே அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை என்று நிம்மதியடைந்தாள் அவள்.

ஏனெனில் தனக்கும் ருத்ராவிற்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை மனதில் வைத்து அங்கே ஒரு சண்டைக்காட்சியை எதிர்பார்த்து வந்திருக்க அதற்கு மாறாக சிரிப்பு மழை பொழிந்து கொண்டிருக்க இஷானி உள்ளே காலடி எடுத்து வைக்கவும் ருத்ராவின் விழிகள் அவளைக் கண்டதும் படபடத்ததை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

நேரே அஸ்மிதாவிடம் சென்றவள் “பிரபோஸ் பண்ணுறப்போவும் ஆங்ரி பேர்ட் ரியாக்சன் தானா? பாவம் ஜெய் சார்… உன்னை எப்பிடி தான் சமாளிக்கப் போறாரோ?” என்று கேலியாகப் பேச இதைக் கேட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர் ஜெய்யும் ருத்ராவும்.

அஸ்மிதா அலட்சியத்துடன் “இது அவ்ளோ பெரிய ஜோக் இல்லையே! ஏன் இப்போ கெக்கேபிக்கேனு சிரிக்கிறிங்க? ரொம்ப சிரிக்காதிங்க மாமா! பல்லு சுளுக்கிக்க போகுது… ஏய் நீயும் சிரிக்காம சைலண்ட் ஆகுடா” என்று இருவரையும் மிரட்ட

ருத்ரா “பார்றா! இன்னைக்குத் தான் பிரபோஸ் பண்ணிருக்க… இப்போவே பையன் கிட்ட இந்தக் கத்து கத்துற… பாவம்ல” என்று ஜெய்கு பரிந்து பேச

இவ்வளவு நேரம் அவனைக் கண்டும் காணாது இருந்த இஷானி கடுப்புடன் அவன் புறம் திரும்பியவள் “அவளாச்சும் பிரபோஸ் பண்ணிட்டுத் தான் உரிமையா திட்டுறா… ஆனா இங்க ஒருத்தர் சம்பந்தமே இல்லாம என் கிட்ட கத்திட்டு வந்து நல்ல பையனாட்டம் நடிக்கிறத பாரு” என்று அவனைத் திட்ட ஆரம்பிக்க ஜெய்யும் அஸ்மிதாவும் இது எப்போது என்று ருத்ராவை நோக்க அவனோ காதில் ஆட்காட்டிவிரலை வைத்துக் கொண்டு ஒற்றைக்கண்ணை மூடிக் கொண்டான்.

“ஏன் இவ்ளோ சத்தமா கத்துற? நான் உன் பக்கத்துல தானே இருக்கேன் இஷி!” என்று சொன்னவனின் அலட்சியப்பாவத்திலும் அவன் சற்று முன்னர் பேசிய பேச்சிலும் இஷானிக்குக் கோபத்தில் முகம் மிளகாய்ப்பழமாய்ச் சிவந்தது.

ருத்ரா அதை ஓரக்கண்ணால் கவனித்தபடி “பட் நீ சொல்லுறதுல இருந்து ஒரு விஷயம் புரியுது… சப்போஸ் நானும் உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டு உன் கிட்ட கத்தியிருந்தா நீ இவ்ளோ கோவப்பட்டிருக்க மாட்ட போல” என்று சொன்னதும் இஷானி அங்கே கிடந்த சாக்பீஸ், டஸ்டர் என்று அனைத்தையும் எடுத்து அவன் மீது எறிய அதை அழகாக கேட்ச் பிடித்தவன்

“போதும் போதும்… இனிமே மிச்சமிருக்கிறது டேபிளும் ஸேரும் தான்… அதை முடிஞ்சா தூக்கி வீசு பார்ப்போம்” என்று அவளை இன்னும் சீண்டிவிட்டுப் பார்க்க இஷானி உண்மையாகவே நாற்காலியைத் தூக்க அஸ்மிதா பதறிப் போய் அவளைத் தடுத்தாள்.

“இஷி! நீ இவ்ளோ காண்டாகுற அளவுக்கா மாமா திட்டுனாரு?” என்று அவளது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டபடி ருத்ராவை முறைக்க அவனோ அறியாப்பையனாக தோளைக் குலுக்க இஷானி முகம் மாறியவள் அங்கிருந்து வெளியேறவும் ருத்ரா பிரச்சனை தீவிரமாகி விட்டதைப் புரிந்துகொண்டவன் அவள் பின்னே வேகமாகச் சென்றான்.

அந்த வகுப்பறையில் மிச்சமிருந்தவர்கள் அஸ்மிதாவும் ஜெய்யும் மட்டுமே. அஸ்மிதா ஜெய்யின் புறம் திரும்பியவள்

“இங்க பாருங்க மிஸ்டர் டேமேஜர்! என்னடா இந்தப் பொண்ணே இறங்கி வந்து ப்ரபோஸ் பண்ணிடுச்சு… சோ நம்ம கொஞ்சம் கெத்து காட்டுவோம்னு என் ப்ரபோசலை லேசா நினைச்சேனு வையேன்” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்ட ஜெய் வழக்கம் போல பதறாமல் கண்ணில் பொறுமையைக் காட்டிப் புன்னகைத்தான்.

அஸ்மிதா அவனது புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று விளங்காமல் “ஹலோ சிரிச்சா என்ன அர்த்தம்? ஒருவேளை உனக்குனு காதலி யாரும் காத்திருக்காங்களா? இல்லனா எதுவும் அத்தைப்பொண்ணு மாமா பொண்ணுனு எதுவும் கொசுறு வெயிட்டிங்கா?” என்று தீவிரக்குரலில் படபடக்க

“கொஞ்சம் உங்க இமேஜினேசனைக் கண்ட்ரோல் பண்ணுங்க அஸ்மி! அப்பிடி எனக்குனு யாரும் காத்திருக்கல… ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன், என் வாழ்க்கையில என்னைத் தேடி வந்து ஒரு பொண்ணு ப்ரபோஸ் பண்ணும்னு நான் கனவுல கூட நினைச்சதில்ல… அதான் ரெஸ்பாண்ட் பண்ண கொஞ்சம் டைம் எடுத்துக்கிறேன்” என்று சொல்லவே அவளாலும் அவனது மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

தனக்கு அவனைப் பிடித்தது போலவே அவனுக்கும் தன்னைப் பிடிக்கும் காலம் வந்த பிறகு அவன் வாயால் தன்னைக் காதலிப்பதாக ஜெய் சொல்லப் போகும் வார்த்தைக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்க அவள் தயாராக இருந்தாள். அதே போல தன் எதிரே நின்று தன்னைக் கனிவுடன் காணும் இந்தக் கண்களில் காதல் மின்னும் நாளும், அதே காதலுடன் அவன் கரம் பற்றும் நாளும் சீக்கிரத்தில் வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் அஸ்மிதா. ஆனால் இது எதுவுமே நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பதையும் இன்று அவளெதிரே நிற்பவன் இன்னும் சில நாட்களில் அவள் வாழ்க்கையில் வந்த சுவடின்றி போய்விடுவான் என்பதை அவள் அறியவில்லை.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛