🌞 மதி 28🌛

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுப்படி இந்தியாவில் டைட்டானியம் டை ஆக்சைட் உற்பத்தியின் போது வெளியாகும் டயாக்சினின் அளவு ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் வெளியேற்றும் அளவை விட அதிகம்வி.டி பத்மநாபன் (Society of Science Environment and Ethics).

அன்றைய தினம் முழுவதும் இஷானி அஸ்மிதாவிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. ருத்ராவைப் போனில் அழைத்தால் அவனது முழுவதுமாக அழைப்பு சென்று கட் ஆகும் வரை அவன் போனை எடுக்கவில்லை. இப்படியே நாள் முழுவதும் செல்ல சஞ்சீவினி அலமேலுவிடம் என்னவென்று விசாரிக்க அவருக்கும் விவரம் என்னவென்று புரிந்தால் தானே சொல்ல முடியும்.

மதியம் முழுவதும் இஷானி துளி நிறுவனத்திலேயே நேரத்தைச் செலவளித்துவிட அஸ்மிதா அவளிடம் விஷயத்தைச் சொல்ல இயலாதவளாக வீட்டுக்குள்ளேயே உலாவினாள். மாலையில் வீடு திரும்பிய இஷானி அலமேலு ராஜகோபாலனுடன் அவள் ஒட்டிக்கொள்ள அவர்கள் முன்னிலையில் ஜெய்யைப் பற்றி பேச தயங்கினாள் அஸ்மிதா.

இரவு சஞ்சீவினி வீடு திரும்பியதும் அவர் இருக்கும் போது இஷானியிடம் இதைப் பத்தி பேச சத்தியமாக அவளுக்குத் தைரியமில்லை. எனவே அனைவரும் உறங்கச் சென்றதும் மாடிவராண்டாவில் நின்று கொண்டிருந்தவளிடம் மெதுவாகச் சென்றவள்

“என் மேல கோவமா இருக்கியா இஷி? நான் உன் கிட்ட பொய் சொல்லிட்டுப் போனது தப்பு தான்… சாரிடி” என்று அவள் கரத்தைப் பற்றிக்கொள்ள

“எனக்குக் கோவம்லாம் இல்ல அஸ்மி… நீ பொய் சொன்னது எனக்குக் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு… அவ்ளோ தான்” என்று ஒட்டாமல் பதிலளித்தவளை வருத்தத்துடன் ஏறிட்டாள் அஸ்மிதா.

“இப்போவும் நீ என் மேல கோவமா தான் இருக்க இஷி… நான் வேணும்னே ஒன்னும் பொய் சொல்லல… எனக்கு உங்க கிட்ட ஜெய்யை தான் பார்க்கப் போறேனு சொல்ல சங்கடமா இருந்துச்சு… அதனால தான்..” என்று முடிப்பதற்குள் அவள் கண்களில் கண்ணீர் பளபளக்க ஆரம்பிக்கவும் இஷானிக்குத் தனது இந்தக் கோபம் மிகவும் அதிகப்படியாகி விட்டது என்பது புரிந்தது.

ஏனெனில் அஸ்மிதா எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்கும் பெண்ணில்லை. அவளே கண் கலங்குகிறாள் என்றால் தன் கோபம் அவளை அவ்வளவு தூரம் காயப்படுத்திவிட்டது என்பதை புரிந்து கொண்டவள்

“அஸ்மி! நான் உன் மேல கோவப்படலடி” என்று சொன்னபடி அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்த இஷானி

“அம்மா நம்ம காலேஜ் போறப்போ சொன்ன விஷயம் ஒன்னு நியாபகம் இருக்கா? வெளியாட்களுக்காக என்னைக்குமே வீட்டுல உள்ளவங்க கிட்ட பொய் சொல்லக் கூடாதுனு சொன்னாங்க… நீ ஜெய்யை தான் பார்க்கப் போனேனு சொல்லிருந்தா நானோ மாமாவோ ஏன் வருத்தப்படப்போறோம்?” என்று அமைதியாகக் கூற

அஸ்மிதா அவளது வெளியாட்கள் என்ற சொல்லில் திடுக்கிட்டவள் மறுப்பாய் தலையசைத்து “ஜெய் ஒன்னும் வெளியாள் இல்ல இஷி” என்றாள் சட்டென்று.

இஷானி அவளை புருவம் சுருக்கி ஏறிடவும் சுதாரித்தவள் இனி மறைத்தும் பயனில்லை என்று புரிந்து கொண்டவளாய் இது வரை அவளது மனம் மட்டுமே உணர்ந்த உண்மையை உரியவனிடம் சொல்லும் முன்னரே சகோதரியிடம் சொல்லும் முடிவுக்கு வந்துவிட்டாள். ஆனாலும் சொல்வதற்குச் சற்று தயக்கமாக இருக்கவே நொடிக்கொரு முறை நாவினால் உதட்டை ஈரப்படுத்திப் பதற்றத்தைக் குறைத்துக் கொள்ள முயன்றாள். இஷானியிடமே இப்படி பதறினால் சம்பந்தப்பட்டவனிடம் எப்படி சொல்லப்போகிறேனோ என்று எண்ணமிட்டபடி கண்களை இறுக மூடி

“ஐ லவ் ஜெய்… எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு இஷி” என்று சொல்லிவிட்டு விழி திறந்தவளின் இமைகள் இன்னும் பரபரப்பு அடங்காமல் கொட்டிக் கொண்டன.

ஆனால் இஷானி இதற்கு பெரிதாக அதிர்ச்சியடையவோ அஸ்மிதாவைத் திட்டவோ செய்யாமல் கையைக் கட்டிக்கொண்டு நிற்கவும் அஸ்மிதாவுக்கு இப்போது பரபரப்பு போய் ஆச்சரியம் அவளுக்குள் குடிகொண்டது.

“உனக்கு என் மேல கோவம் இல்லையா இஷி?”

“எதுக்கு கோவப்படணும் அஸ்மி? லவ் பண்ணுறது ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பு இல்லையே”

“இன்னைக்கு ஜெய்யைப் பார்க்கப் போனதுக்கே நீயும் மாமாவும் கோவப்பட்டிங்களே! இப்போ லவ் பண்ணுறேனு வேற சொல்லுறேன்… நியாயப்படி கோவம் இப்போ டபுள் மடங்கு ஆகணுமே”

“ஐயோ கடவுளே! உனக்கு இன்னும் புரியலையா அஸ்மி? நீ பொய் சொன்னதுல தான் எங்களுக்கு வருத்தமே தவிர நீ ஜெய்யைப் போய் பார்த்ததுல இல்ல… அதுவுமில்லாம அம்மா நம்மளை பொய் சொல்லக்கூடாதுனு தான் சொல்லிருக்காங்க… லவ் பண்ணக்கூடாதுனு சொல்லலையே”

“ஆமால்ல! பட் இப்போ நான் அம்மா கிட்ட ஜெய்யைப் பத்தி சொல்லுறப்போ அவங்க அவனை என்னோட லைஃப் பார்ட்னரா ஏத்துக்கலைனா நான் என்ன பண்ணுறது?”

இஷானிக்கு அவளை நினைத்தால் திகைப்பாகத் தான் இருந்தது. எப்படிப்பட்ட தைரியசாலியையும் காதல் கோழையாக மாற்றிவிடும் போல என்று நினைத்தபடி

“அம்மாவுக்கு அவரை பிடிக்கலைனா எனக்கும் அவரைப் பிடிக்காது… சப்போஸ் அம்மா ஜெய்யை உனக்கானவரா அக்செப்ட் பண்ணிட்டாங்கனா ஐ டோன்ட் ஹேவ் எனி பிராப்ளம்” என்று மனதிலுள்ளதை மறைக்காமல் உரைத்துவிட்டாள் இஷானி.

அஸ்மிதாவின் திகைத்தப்பார்வையைச் சந்திக்க அவளுக்கும் சங்கடமாக இருந்தாலும் சஞ்சீவினிக்குப் பிடிக்காத எதுவும் தனக்கும் பிடிக்கத் தேவையில்லை என்று சிறுவயதிலிருந்தே மனதில் உருப்போட்டபடி வளர்ந்தவள் அவள். பெற்றத் தகப்பனே அவளுக்கு மருத்துவச்செலவு செய்ய மறுத்து அவளை அருவருத்து ஒதுக்கிய நிலையில் அவளை அரவணைத்து அன்பு காட்டி, சொந்தமகளாக எண்ணி அவளது நலனுக்காக அவர் செலவளித்தது எல்லாமே இஷானிக்கு நன்றாகவே தெரியும்.

இந்த ஒன்பது வருடங்களில் சஞ்சீவினி அஸ்மிதாவுக்கும் தனக்கும் பெயரளவுக்குக் கூட பாகுபாடு பார்த்ததில்லை என்பதை அவள் எப்போதுமே மறுக்கவும் மறக்கவும் முடியாது. அவளுக்குச் சஞ்சீவினியின் மீது உள்ளது கண்மூடித்தனமான பாசம். அதற்கு முன்னே யாருடைய கருத்தும் அவளுக்கு முக்கியமில்லை. அதைத் தான் எவ்வித பூச்சுமின்றி அஸ்மிதாவிடம் மறையாது கூறிவிட்டாள்.

அதே நேரம் அஸ்மிதாவுக்கும் இவள் அப்படி சொன்னதில் திகைப்பு தான் என்றாலும் அடுத்தக் கணமே சஞ்சீவினிக்குப் பிடிக்காது என்பதற்காகவே அவள் இன்றைக்கும் மந்தாகினி, சந்திரசேகரிடமிருந்து ஒதுங்கியிருப்பவள். அப்படிப்பட்டவள் எப்போதுமே சஞ்சீவினிக்குப் பிடிக்காத ஒன்றை தான் செய்தால் தனக்கு ஆதரவு அளிக்க மாட்டாள் என்பதை புரிந்துகொண்டாள்.

இருந்தாலும் எப்படியாவது ஜெய்யைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை இஷானியின் மனதில் உண்டுபண்ணிவிட எண்ணியவளாய்

“இஷி! அம்மாக்கு ஜெய்யை கண்டிப்பா பிடிக்கும்டி… அவன் மத்த ஆம்பளைங்க மாதிரி இல்ல… பொண்ணுங்களுக்கு மரியாதை குடுக்கிறான், வீணா கெத்துங்கில பேருல சீன் போடல… குழந்தைங்க கிட்ட பாசமா இருக்கிறான்… நம்ம பேசுறப்போ கண்ணைப் பார்த்து பேசுறான்… நான் கோவப்பட்டா கூட ஆம்பளைனு ஈகோ பார்க்காம என் கிட்ட பொறுமையா நடந்துக்கிறான்… எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு இஷி… உனக்கு ஒன்னு தெரியுமா? இது வரைக்கும் நான் அவன் கிட்ட கூட இன்னும் என் லவ் மேட்டரை ஓப்பன் பண்ணலை… முதல் தடவை நான் இதை ஷேர் பண்ணிக்கிட்ட ஆளே நீ தான் இஷி… ப்ளீஸ் அம்மா கிட்ட நான் சொல்லுறப்போ எனக்காகச் சப்போர்ட் பண்ணுடி” என்று அவளது தோளைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள்,.

இஷானியோ “நீ சொல்லுறது எனக்கும் புரியுது அஸ்மி… ஜெய் ரொம்ப அப்பாவியான ஆளுடி… அவரு உண்டு அவரோட வேலை உண்டுனு இருக்கிற மனுசன்… அவரை யாருக்கும் பிடிக்காம போகாது… ஆனா அம்மாவோட டிசிசன் தான் இதுல ஃபைனல்… அவங்களுக்கு அவரை பிடிச்சிருந்தா உன்னை விட நான் தான் சந்தோசப்படுவேன்” என முடிவாகச் சொல்லிவிட்டாள்.

தனது தோளில் சாய்ந்திருக்கும் சகோதரியின் முகம் வாட அவளைத் தட்டியெழுப்பியவள் “உடனே முகத்தைத் தூக்கி வச்சிக்காதே! ஃபர்ஸ்ட் இந்த விசயத்தை அம்மா கிட்ட சொல்லு… ஆனா அதுக்கு முன்னாடி ஜெய் கிட்ட பேசி அவர் மனசுல யாரும் இருக்காங்களானு கேட்டுத் தெளிவுபடுத்திக்கோ” என்று சொல்லவும் அஸ்மிதாவுக்கு இஷானி கூறுவது சரியென்று பட்டது.

அவனிடம் தன் மனதிலுள்ள உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படுத்தினால் தானே மற்ற விசயங்களை வீட்டில் பேச முடியும் என்பது புத்தியில் உறைக்க அடுத்த நொடி அவன் இதற்கு என்ன பதில் சொல்லுவான் என்ற கவலை மனதில் தோன்றியது. ஆனால் இஷானி கொடுத்த தைரியத்தில் மறுநாள் அவனுக்குப் போன் செய்து எப்போது அவன் வீட்டிலிருப்பான் என்று விசாரித்தாள் அஸ்மிதா.

அவன் மாலை ஆறு மணிக்கு மேலாகிவிடும் என்று சொல்லவே இருந்தாலும் பரவாயில்லை தான் இன்று அவனிடம் சொல்லியே ஆகவேண்டும் என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டவள் தான் ஏழு மணிக்குள் அவன் வீட்டிற்கு வருவதாகக் கூறிவிட்டுப் போனை வைத்துவிட்டாள்.

ஆனால் மறுமுனையில் ஜெய் பதறியது புலம்பியது எதையும் அவள் அறியவில்லை. அவனுக்கு அவன் கஷ்டம் என்பது போல அவள் மறுபடி அவனது அழைப்பு எதையுமே ஏற்கவில்லை. சொன்னது போல ஏழு மணிக்கு ஜெய்யின் ஃப்ளாட்டுக்குச் சென்று அவனிடம் பேசப் போவதாக அஸ்மிதா சொல்லவும் இஷானிக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை.

“அறிவிருக்கா அஸ்மி உனக்கு? நான் ஒத்துக்கிறேன் உனக்கு கராத்தே தெரியும். உன்னால உன்னைப் பாதுகாத்துக்க முடியும்னு… ஆனா இந்நேரத்துல நீ இப்பிடி ஒரு பையனோட ஃப்ளாட்டுக்குப் போறதை யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க? ஜெய்யோட பக்கத்து ஃப்ளாட்காரங்க உன்னையும் அவரையும் மோசமா நினைக்க மாட்டாங்களா? அதை விடு… அம்மா கிட்ட என்ன பதில் சொல்லுவ நீ?” என்று படபடத்தவளை ஒற்றைப்பார்வையில் அடக்கினாள் அஸ்மிதா.

“அப்போ நான் என்ன பண்ணுறது இஷி? என்னால போன்ல சத்தியமா இந்த விஷயத்தைச் சொல்ல முடியாது… நான் என்னோட காதலை சொல்லுறப்போ அவன் முகத்துல, கண்ணுல என்னென்ன மாதிரியான உணர்வுகள் வெளிப்படுதுனு நான் பார்க்கணும் இஷி!” என்று சிறுகுழந்தை போல அடம்பிடித்தவளைச் சமாளிக்கும் வழியறியாது விழித்த இஷானி ஞாயிற்றுகிழமை எப்படியும் துளி நிறுவனத்துக்கு அவன் வருவான் அல்லவா, அப்போது சொல்லிவிடு என என்னென்னவோ பேசி அஸ்மிதா இப்படி நேரங்கெட்ட நேரத்தில் அவனைச் சந்திக்கப்போவதைத் தடுத்துவிட்டாள்.

சொன்னது போலவே அஸ்மிதா ஞாயிறு வரை காத்திருந்தவள் அன்றைக்கு வழக்கத்துக்கு மாறாக அதிகாலையில் விழித்து நல்ல பெண்ணாக நடனப்பயிற்சியையும் முடித்துவிட்டுச் சீக்கிரமாகவே துளி நிறுவன வளாகத்தை நோக்கி சென்றுவிட்டாள்.

சஞ்சீவிக்கும் அலமேலுவுக்கும் அவளது நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தெரிந்தாலும் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதே நேரம் ருத்ரா அர்ஜூனுடன் வந்தவன் அஸ்மிதாவை எங்கே என்று தேட இஷானி அவனிடம் முழுவிவரத்தையும் கூறினாள்.

“வாட்? இவ்ளோ நடந்திருக்கு… நீ ஏன் என் கிட்ட சொல்லலை? எனக்கும் வெங்கட்டுக்கும் ஒரு மீட்டிங் விஜயவாடால இருந்துச்சுனு போயிட்டேன்… போறவன் திரும்பியே வர மாட்டேனு நினைச்சியோ? அவன் யாரு என்னனு தெரியாம அஸ்மி சின்னப்பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டா நீ பொறுப்பானவளா அவளுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்கவேண்டாமா இஷி?” என்று படபடத்தவன் தேவையே இல்லாமல் இஷானியின் கோபத்தைத் தூண்டிவிட்டான்.

அவள் கடுப்புடன் “ஷட் அப் மிஸ்டர் ருத்ரா… என்னமோ நான் அவளைக் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துன மாதிரி கத்தாதிங்க… அவ என்னோட சிஸ்டர் தான்… ஆனா அவளோட காதல்ல தலையிடுற அதிகாரம் எனக்கு இல்லை…. ஒரு சிஸ்டரா அவளை நான் என்னோட கன்ட்ரோல்ல தான் வச்சிருக்கேன்… இப்போ அவ போனது அவ மனசுல உள்ளதை ஜெய்க்கு புரியவைக்க… அதுக்கு ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறிங்க? இந்த விசயத்துல நீங்க ஓவர் ரியாக்ட் பண்ணுறிங்க” என்று திட்டித்தீர்த்துவிட்டு முகத்தைத் தூக்கிக் கொண்டவள் அவனை ஏறிட்டும் பார்க்காமல் துளி நிறுவனத்துக்குச் செல்ல ஆயத்தமானாள்.

ருத்ரா இதற்கு முன்னர் ஜெய்யை எங்கே சந்தித்தோம் என்று யோசித்தவனுக்கு மூளையில் பொறி தட்டியது. இப்போதே அவனைச் சந்தித்து தனது சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என அவனும் துளி நிறுவனத்துக்குச் செல்ல எத்தனித்தவன் “பெரியம்மா அஜ்ஜூவை பார்த்துக்கோங்க… நான் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்” என்று அலமேலுவிடம் சொல்லிவிட்டு அங்கே செல்ல கிளம்பினான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛