🌞 மதி 1🌛

பெண் என்பவள் ஆதிசக்தி, தியாகத்தின் திருவுரு, தாய்மைத்திலகம் என்று இத்துணை அலங்கார வார்த்தைகளால் பெண்ணைப் புகழ்ந்து தள்ளும் நம் சமுதாயம் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்குத் தான் முதலிடம் என்பதே.

(தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேசன் 2018ஆம் ஆண்டு எடுத்த உலகளாவிய சர்வேயின் தரவுகள் படி)

சென்னையின் புறநகர்ப்பகுதியின் அமைதியானச் சூழலுக்கு நடுவே அமைந்திருந்தது பழைய கேரளா பாணியில் கட்டப்பட்ட வீடு. சஞ்சீவினி பவனம் என்ற பெயர் பித்தளை எழுத்துக்களால் அதன் வாயில்புறத்தூண்களில் பொறிக்கப்பட்டிருந்தது. உயர்ந்த மதில்களும் ஆளுயர கேட்டும் அரணாய் இருக்க மரங்கள் சூழந்த சோலையின் நடுவே கம்பீரமாய் நின்ற அவ்வீட்டைச் சுற்றிலும் பசும்புல்வெளி படுக்கை மெத்தென விரிந்து கிடந்தது.

ஆங்காங்கே செம்பருத்தி மலர்களும், செவ்வரளிப்பூக்களும் இதழ் விரிக்கவா என்று கேட்டவாறு காலை இளங்காற்றில் அசைந்தாடிக்  கொண்டிருந்தன. வாயில் கேட்டிலிருந்து வீட்டை நோக்கி சென்ற சிமெண்டால் கோடிழுத்தது போன்ற நடைபாதையின் இருபுறத்திலும் ஆரம்பித்த புல்வெளி வீட்டைச் சுற்றிப் பரந்திருக்க, பூச்செடிகள் வலதுகோடியில் வரிசையாக நின்றன.

இடது கோடியில் மரத்தினால் கட்டப்பட்ட மேலே கேரளாபாணி ஓடும், அதன் பக்கவாட்டில் மரத்தடுப்பும் அதிலிருந்து இறங்க நான்கு கருங்கற்படிகளுமாய் இருக்கும் திறந்தவெளி அமைப்பு. அதற்கு கதவுகளோ ஜன்னலோ ஏதுமின்றி குறைந்தது நாற்பது நபர்கள் ஒரே நேரத்தில் சவுகரியமாக அமர்ந்து வெளிப்புற தோட்டத்து அழகை ரசிக்கும் வண்ணமாய் அமைந்திருந்தது. அதன் மேலே மரப்பலகையில் ‘நாட்டியாலயா’ என்ற எழுத்து இடம்பெற்றிருந்தது.

அதன் நடுநாயகமாய் ஒரு திண்டு கட்டப்பட்டு அதன் மீது வீற்றிருந்தார் நடராஜர். அந்த ஆடல்வல்லானின் முன்னே அமர்ந்திருந்தாள் இளம்பெண்ணொருத்தி. வெள்ளை நிற சுடிதாரும், மஞ்சள் வண்ணத்துப்பட்டாவும் மேனியை தழுவியிருக்க அப்போது தான் குளித்திருந்ததால் கூந்தலில் இருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.

கரிய அருவியாய் ஓடிய கூந்தலும், வானத்துப் பிறைநிலவை எடுத்து ஒட்டினாற்போன்ற நெற்றியும், கருநிறவில்லாய் வளைந்த புருவங்களும், கூரியநாசியும், சிறிய செவ்விதழுமாய் அழகின் ஸ்வரூபமாய் தனது கயல்விழிகளை மூடிக் கடவுளை வேண்டியபடி அமர்ந்திருந்தாள் அவள். முகத்தில் அப்பாவித்தனம் டன் கணக்கில் இடம்பெற்றிருக்க குழந்தை முகம் மாறாதவளாய் இருகரம் குவித்தபடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்தாள்.

அவளது நாசியின் மீது கர்வமாய் அமர்ந்திருக்கும் ஒற்றைக்கல் வைரமூக்குத்தி, காற்றிலாடிய தென்னைமரக்கீற்றின் இடைவெளியில் கசியும் காலை கதிரவனின் இளம்மஞ்சள் வெளிச்சத்தில் வெட்டி மின்னியது.

மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதேஈச னெந்தை யிணையடி நீழலே

தனது இனியக் குரலில் அவள் நடராஜப்பெருமானை நினைத்து உருகிப் பாடும் தேவாரகானம் மெதுவாக அந்த இடம் முழுவதும் கேட்கத் தொடங்கியது. அந்த இளங்குரலின் இனிமை மெதுவாய் வீட்டை அடைந்து அதன் மாடியில் உள்ள அறையில் தன் கண்களை மூடித் துயிலில் ஆழ்ந்திருந்த ஒரு பாவையின் செவியை மெதுவாய் நனைக்கத் தொடங்கியது.

தினந்தோறும் அந்தக் கானத்தைக் கேட்டே எழுந்து பழகியவளுக்கு அன்றும் அதைக் கேட்டதும் ஊற்றெடுத்த உற்சாகத்தோடு, நேரம் கழித்துக் கண் விழித்த பரபரப்பும் தோன்ற விருட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள் அவள்.

இரவுடையில் கலைந்த போனிடெயிலும், இன்னும் உறக்கம் விலகாத விழிகளுமாய் இருந்தவள் தனது உள்ளங்கையால் முகத்தை அழுந்தத் தேய்த்துக் கொண்டாள். அவளது செவி இன்னும் கீழே கேட்கும் தெய்வீகக் கானத்தை ரசித்துக் கொண்டிருக்க வேகமாய் குளியலறையை நோக்கி ஓடினாள். காலைக்கடனை முடித்து விறுவிறுவென்று குளித்து முடித்தவள் வெள்ளை சுடிதாருக்குள் தன்னைத் திணித்துக் கொண்டாள்.

கண்ணாடியின் முன் வந்தவள் தனது நீண்டக் கூந்தலை ஹேர்டிரையரில் உலர்த்திவிட்டபடி காதுகளில் சிறிய ஸ்டட்டை மாட்டிவிட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டாள். லேயர்கட்டில் சரிந்த கூந்தலை தனது பெரிய நெற்றியை மறைக்குமாறு கோணல் வகிடு எடுத்துச் சீவி போனிடெயிலாகப் போட்டுக்கொண்டவள் போனிடெயிலுக்குள் அடங்காமல் வெட்டிவிடப்பட்ட முன்பக்க கூந்தல் கன்னத்தைத் தழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அப்படியே விட்டுவிட்டாள்.

முகத்தில் துடுக்குத்தனமும், நிமிர்வும் கலந்திருக்க அந்த இரண்டுமே அவள் முகத்துக்குத் தனி அழகைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. தன்னைக் கண்ணாடியில் ரசிக்கும் போதே கீழே குழந்தைகளின் சத்தம் கேட்க ஆரம்பிக்க நுனிநாக்கைக் கடித்துக் கொண்டவள் வெள்ளைநிறத்துப்பட்டாவை தோளில் போட்டுக் கொண்டு வேகமாய் அங்கிருந்து ஓடினாள் அவள்.

படிகளில் அவள் ஓடிவர அவளது தோளில் கிடந்த துப்பட்டா படிக்கட்டுகளில் புரண்டு அவளோடு ஓடிவந்தது. ஹாலில் நல்லவேளையாக யாரும் இல்லை. தப்பித்தோம் என்று எண்ணியபடி வீட்டின் கதவைத் திறந்தவள் தோட்டத்தின் இடதுகோடியிலிருந்த நாட்டியாலயாவை நோக்கிப் புள்ளிமானாய் ஓடிச் சென்றாள்.

அதற்குள் அங்கே குழந்தைகள் வரிசையாய் நின்று கொண்டிருக்க அவர்களின் முன்னே தனது மஞ்சள் துப்பட்டாவை இடையில் கட்டிக்கொண்டபடி நின்று அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் அந்தக் கானக்குயில். அங்கே ஓடிவந்தவளைக் கண்டதும் முந்தியவளின் கண்ணில் ஒரு சிறிய கண்டிப்பான பார்வை வரவே அவளைப் பார்த்துப் புன்னகைத்து சமாளித்துவைத்தாள் அந்த ஓடிவந்த இளம்பெண்.

இரு காது மடல்களின் நுனியையும் பிடித்து மன்னித்துவிடுமாறு கேட்டவளைக் கண்டதும் அந்தக் கானக்குயிலுக்கும் இரக்கம் வந்துவிட, தங்களுடன் இணைந்து கொள்ள அனுமதித்தாள்.

அவள் சொன்னதும் சதங்கையைக் காலில் கட்டிக்கொண்டவள், தனது வெள்ளைநிறத்துப்பட்டாவை உடலின் குறுக்காகப் போட்டு இடையில் கட்டிக் கொண்டவள் அந்தப் பெண் சொன்னபடி அபிநயம் பிடித்து நடனம் பயிலத் தொடங்கினாள்.

ஒரு மணி நேரம் இப்படியே கழிய நாட்டியப்பயிற்சி முடிந்து குழந்தைகள் வெளியேறிய பின்னர், தனது மஞ்சள் துப்பட்டாவால் முகத்தில் துளிர்த்த வியர்வை முத்துக்களை ஒற்றியெடுத்தபடி

“ஏன் அஸ்மி டெய்லி லேட்டா வர்ற? நீ ஒரு நாளாச்சும் சீக்கிரமா முழிக்கிறியா?” என்று சொன்னவளின் குரலில் கோபத்தைக் காட்ட முயன்றாலும் அது அவள் இயல்பில்லை என்பதால் சிணுங்கலாகத் தான் முடிந்தது அவளது வார்த்தை.

அதைக் கேட்டதும் அஸ்மி என்ற அந்த வெள்ளைத் துப்பட்டாக்காரி “நான் என்ன பண்ணுறது இஷி? எனக்கு தூக்கம் லேட் நைட்டில தான் வருது… அதான் டெய்லி லேட் ஆகுது… அம்மா கிட்ட சொல்லிடாதடி… அப்புறம் சஞ்சீவினி அவர்களின் கோபாக்கினியில் நான் பொசுங்கி விடுவேன்” என்று பொய்யான பயத்துடன் செந்தமிழில் மிழற்றி கேலி செய்ய

“அம்மா இவ்ளோ டெரரா இருக்கப்பவே நீ இப்பிடி வாலுத்தனம் பண்ணுறியே, உன்னை அவங்க கண்டிக்கலைனா அவ்ளோ தான்” என்றாள் அந்த இஷி.

இருவரும் இப்படி கேலி பேசியபடி வீட்டுக்குள் நுழைய ஹாலின் சோபாவில் காபி அருந்தியபடி அமர்ந்திருந்தனர் மூவர். அதில் ஒரு நடுத்தரவயதுப்பெண், ஒரு முதியப் பெண்மணி மற்றும் ஒரு முதியவர் அடக்கம்.

அந்த முதியப்பெண்மணி “இன்னைக்கு ஏதோ மீட்டிங் இருக்குனு சொன்னியே சஞ்சு? எப்போ கிளம்புற? டைம் சொன்னேனா கண்ணம்மா சீக்கிரமா டிபன் செஞ்சிடுவா” என்று மகளிடம் கேட்டார். அவர் தான் அலமேலு. அவரது எதிரில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற முகபாவத்துடன் அமர்ந்து மூக்குக்கண்ணாடி வழியே செய்தித்தாளைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவரது கணவர் ராஜகோபாலன்.

“வீட்டுல இருந்து எட்டு மணிக்குக் கிளம்பணும்மா… நான் போனதும் இது தான் சாக்குனு அஸ்மி கூட சேர்ந்து கலாட்டா பண்ணாதிங்க… அப்பா நீங்களும் தான்” என்று தனது பெற்றோரிடம் கண்டிப்புக் குரலில் சொல்லிக் கொண்டிருந்தவர் தான் சஞ்சீவினி. அலமேலு, ராஜகோபாலனின் ஒரே மகள். கண்டிப்பும், தைரியமும் கலந்த பெண்மணி. அவரது முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை குடிக்கொண்டிருக்கும். கம்பீரமும் நிமிர்வும் கொண்டவரின் கண்ணில் கனிவும் அமைதியும் நிரந்தரமாய் குடிகொண்டிருந்தது.

சஞ்சீவினி தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தனர் அஸ்மியும், இஷியும்.

வரும்போதே கிசுகிசுத்தபடி வந்தவர்களை அப்படியே சிலையாய் நிற்க வைத்தது சஞ்சீவினியின் குரல்.

“அங்கேயே நில்லுங்க ரெண்டு பேரும்”

இஷி பரிதாபமாய் விழிக்க, அஸ்மியோ என்ன சொல்லி இவரிடமிருந்து தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள். இருவரது முகபாவத்திலிருந்தே அவர்களின் சிந்தனை எத்திசையில் செல்கிறது என்பதைப் புரிந்துகொண்ட சஞ்சீவினி

“நேத்து உங்க காலேஜ்மேட் அஞ்சலியைப் பார்த்தேன்… லாஸ்ட் வீக் கெட் டு கெதர்னு போன இடத்துல நீ ராஜானு ஒரு பையனைப் போட்டு அந்த அடி அடிச்சிருக்க… ஏன் இப்பிடி இருக்க அஸ்மிதா? உன்னால ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் நான் போலிஸ் ஸ்டேசன் வாசலைக் கட்டாயமா மிதிச்சாகணும் போல… உனக்கோ இஷானிக்கோ எதுவும் பிரச்னைனா அதைத் தீர்த்துவைக்க உங்களோட அம்மாவா நான் இன்னும் உயிரோட தானே இருக்கேன்… நீ ஏன் இப்பிடி தான்தோன்றித்தனமா நடந்துக்கிற?” என்றவரின் குரலில் இருந்த பரிதவிப்பு அங்கிருந்த அனைவருக்குமே புரிந்தது.

சஞ்சீவினி இருவரையும் முழுப்பெயரைச் சொல்லி அழைத்தால் அவர் மிகுந்த கோபத்தில் உள்ளார் என்று அர்த்தம். அதைக் கேட்டு கலங்கிப் போய் நின்றனர் இஷானியும் அஸ்மிதாவும். ஆனால் அஸ்மிதா சீக்கிரமாகச் சுதாரித்தவள்

“ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்களை எதிர்பார்க்க நாங்க ரெண்டு பேரும் சின்னக் குழந்தை இல்லைம்மா… அந்த ராஜா சரியான பொறுக்கி… இஷி கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணப் பார்த்தான்… அதான் அடிச்சேன்… இதுல என்ன தப்பு இருக்கு?” என்று நிமிர்வாகவே கேட்டாள்.

அது தான் அவள். அவளால் கண் எதிரே அநியாயம் நடந்தால் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அதுவும் இஷானி அவளது அன்பான சகோதரி வேறு. அவளது அமைதியான சுபாவத்தை அந்த ராஜா என்றவன் பயன்படுத்திக்கொண்டு தவறாக நடக்க முயலவே அஸ்மிதாவால் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

தனக்குத் தெரிந்த கராத்தேவை பிரயோகிக்க வாய்ப்பு கிடைத்ததென அவனைப் போட்டுப் புரட்டி எடுத்ததில் பையனுக்கு உள்காயம் கொஞ்சம் அதிகம் தான்.

“என்ன தப்பு இருக்கா? தப்பு பண்ணுனவங்களைத் தண்டிக்க போலீஸ், கோர்ட் இருக்கு… நீ யாரு சட்டத்தை உன் கையில எடுக்கிறதுக்கு?” – சஞ்சீவினி.

“ஓ! அந்த ராஜா மேல கம்ப்ளைண்ட் குடுத்து அவனைக் கோர்ட்டுக்கு இழுக்கணும்னு சொல்ல வர்றிங்க? அதானே! ப்ளீஸ்… நீங்க ஒரு சோஷியல் ஒர்க்கர்… பன்னிரெண்டு வருசமா டிரஸ்ட் நடத்திட்டு வர்றிங்க… உங்களுக்கு நம்ம சட்டத்தைப் பத்தி தெரியாதா என்ன?” – அஸ்மிதா.

“போலீஸுக்குப் போக வேண்டாம்டி… நான் என்ன செத்தா போயிட்டேன்? இஷானி உனக்கு மட்டும் அக்கா இல்லை… அவ எனக்கும் பொண்ணு தான்… என் பொண்ணு மேல எனக்கு அக்கறை இருக்காதா?” என்று வெடித்தவரை எப்படி சமாளிப்பது என்பது தான் அப்போதைக்கு அலமேலுவுக்கும் ராஜகோபாலனுக்கும் முக்கியப்பிரச்சனை.

இஷானி தாத்தா பாட்டியின் முகத்திலிருந்து விஷயத்தைப் புரிந்துகொண்டவள் சட்டென்று அன்னையிடம் சென்றாள்.

“மா! கோவப்படாதிங்க… அஸ்மி என் மேல உள்ள பாசத்துல அப்பிடி நடந்துக்கிட்டானு நான் சமாளிக்க விரும்பலை… அந்த இடத்துல யாரு இருந்தாலும் அவ அதைத் தான் பண்ணிருப்பா… அவ ராஜாவை அடிச்சிருக்கக் கூடாது தான்… ஆனா அந்த நேரத்துல நீங்க அங்கே இருந்தாலும் அப்பிடித் தான் நடந்திருப்பிங்க” என்று சாந்தமானக்குரலில் சொன்ன இஷானியை நடுங்கும் கரங்களால் அணைத்துக் கொண்டார் சஞ்சீவினி.

“என்னோட பயம் உங்க ரெண்டு பேருக்கும் புரியமாட்டேங்குதும்மா… வெளியுலகத்துக்கு நான் தைரியமான நேர்மையான சமூகசேவகி தான்… ஆனா அதே நேரம் இந்தச் சமூகத்துல பெண்களுக்கு எதிரா என்னென்ன குற்றம் நடக்குதுனு டெய்லியும் பார்க்கிறேன்… என் பொண்ணுங்க அதுல மாட்டிக்கக் கூடாதுனு நினைக்கிறேன்… உன்னோட இத்தனை வருசம் இருந்தும் இவளுக்கு ஏன் உன்னை மாதிரி அமைதியா பிரச்சனையைக் கடந்து போகத் தெரியலை? அவளுக்கு இருக்கிறது தைரியம் இல்லை… அது குருட்டு அலட்சியம் இஷி” என்று சொன்னவரைப் பார்த்து அஸ்மிதாவுக்கும் சங்கடமாகத் தான் இருந்தது.

ஆனால் அவளது பிடிவாதத்திலிருந்து இறங்கிவர விரும்பாதவள் அவள். அதனால் எதுவும் கூறாமல் கல் போல நின்று கொண்டிருந்தாள்.

“இப்போவும் அமைதியா நிக்கிறா பாரு… இது எல்லாத்துக்கும் நீங்க தான்பா காரணம்… இஷி மாதிரி இவளையும் டான்ஸ் கிளாஸ் அனுப்பிருக்கணும்.. அவ ஆசைப்படுறானு கராத்தே கிளாஸுக்கு அனுப்பி, சும்மா இருக்கிற பொண்ணை சிங்கக்குட்டினு சொல்லி ஏத்திவிட்டு, இப்போ அவ இப்பிடி ரூடா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிட்டா” என்று சொல்ல ராஜகோபாலன் மகளிடமிருந்து தப்பிக்க எண்ணியவர் அப்படியே பேத்தியையும் காப்பாற்றுவோம் என்று நினைத்து

“கோவப்படாத சஞ்சும்மா! அஸ்மி சின்னப்பொண்ணு தானே! போகப் போக எல்லாம் சரியாயிடும்” என்று சொல்ல அஸ்மிதா ஓடிவந்து தாத்தாவை அணைத்துக் கொண்டாள்.

“தேங்க்யூ ஆர்.கே” என்று அவருக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தவளையும் தன் தந்தையையும் பார்த்து தலையிலடித்துக் கொண்டார் சஞ்சீவினி.

“தாத்தாவும் பேத்தியுமா சேர்ந்து நல்லா சமாளிக்கிறிங்க… இவ சின்னப் பொண்ணா? இவளுக்கும் இஷிக்கும் ஒரே வயசு தானே… அவளுக்கு இருக்கிற பொறுமையில துளி இவளுக்கு இருந்தாலும் நான் சந்தோசப்படுவேனே” என்று ஆயாசப்பட்டுக் கொண்டார். அவரை அனைவரும் சேர்ந்து சமாதானப்படுத்த ஆரம்பித்தனர்.    

இவர்கள் தான் சஞ்சீவினி பவனவாசிகள். ராஜகோபாலன், அலமேலுவின் புதல்வியான சஞ்சீவினியும் அவர்களின் பேத்திகளான இஷானி, அஸ்மிதாவும் தான் அந்த வீட்டின் ஜீவநாடி என்று சொல்லலாம்.

சஞ்சீவினி இயல்பிலேயே தைரியமான பெண்மணி. சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பன்னிரெண்டு வருடங்களாக துளி என்ற தொண்டு நிறுவனைத்தை நடத்திவருபவர் அவர். அதில் அவரோடு சேர்ந்து இருபது நபர்கள் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர் மகள்களையும் தைரியமாக வளர்க்கத் தான் விரும்பினார். இஷானியின் குணமே பொறுமை என்றாகிவிட்டப் பிற்பாடு அவரால் அவளை மாற்ற இயலவில்லை.

ஆனால் அஸ்மிதா அவளுக்கும் சேர்த்து பிரச்சனைகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வருவாள். பதினொன்றாம் வகுப்பில் அவளுக்குக் காதல் கடிதம் கொடுத்த மாணவனை நடு கிரவுண்டில் அறைந்ததில் இருந்து தற்போது ராஜாவை புரட்டி எடுத்தது வரை ஏகப்பட்ட உதாரணங்களைக் காட்டலாம்.

கேட்டால் “இந்த ஆம்பிளைப்பசங்க பொண்ணுங்க கிட்ட ஏன் அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்கிறாங்க? ஏதோ பொண்ணுங்க பிறந்ததே இவங்களை அட்ராக்ட் பண்ணத் தான்னு நினைச்சிட்டு மாடர்னா டிரஸ் போட்டா கமெண்ட் பண்ணுறாங்க, மேக்கப் போட்டா கமெண்ட் பண்ணுறாங்க… எனக்கு அதெல்லாம் கேட்டா இரிட்டேட் ஆகுதும்மா.. டேய் நாங்க டிரஸ் பண்ணுறது, மேக்கப் போடுறது, ஹீல்ஸ் போடுறது எல்லாமே எங்களுக்காகத் தான்; உங்களை மயக்கிறதுக்கு இல்லைனு சொல்லி கன்னத்துல சப்புனு அறையணும் போல இருக்கு.. அது என்ன பொண்ணுங்களைப் பத்தி அப்பிடி பேசுற பொதுபுத்தி அவனுங்களுக்கு?” என்று வெடிக்க ஆரம்பித்துவிடுவாள்.

ஆனால் இஷானியோ இவளுக்கு அப்படியே எதிர்மறை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதே அவளது கொள்கை. அவளால் யாரிடமும் மனம் கோண பேசமுடியாது. சஞ்சீவினியே சற்று அதட்டலாக ஏதேனும் கூறினால் பொலபொலவென்று அவள் கண்ணிலிருந்து அருவி விழ ஆரம்பித்துவிடும்.

இந்த இரண்டு எதிரெதிர் துருவங்களையும் கட்டிவைக்கும் கயிறு தான் அன்பு. இருவருமே வெவ்வேறு குணத்தினராய் இருந்தாலும் ராஜகோபாலனுக்கும், அலமேலுவுக்கும் இரு பேத்திகளும் சமம் தான்.

சஞ்சீவினி சமாதானம் அடைந்து முடிந்தபோது வீட்டின் தொலைபேசி சிணுங்கி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. துளி அலுவலகத்திலிருந்து தான் அழைத்திருந்தார்கள். அது எங்கேயோ தூரத்தில் இல்லை. இவர்கள் வீட்டுக்கு அடுத்து உள்ள பரந்த இடத்தில் நான்கு கட்டிடங்களை உள்ளடக்கியபடி அமைதியானச் சூழலில் கம்பீரமாய் நின்றது ‘துளி தொண்டு நிறுவனம்’.

சஞ்சீவினி தான் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாய்ச் சொல்லிவிட்டு மகள்களை அவர்களின் நேர்முகத்தேர்வுக்குச் செல்லத் தயாராகும்படி சொல்லிவிட்டு அவரது அறையை நோக்கிச் சென்றார் அவர்.

ராஜகோபாலன் மகள் சென்றதைக் கவனித்துவிட்டு பேத்தியிடம் திரும்பியவர் “அஸ்மி உன்னை நினைச்சாலே தாத்தாவுக்குக் கர்வமா இருக்கு” என்று பெருமிதத்தோடு உரைக்க

அலமேலு “க்கும்! அதை இவ்ளோ நேரம் இங்கே நின்னிட்டிருந்தாளே உங்கப் பொண்ணு, அவ முன்னாடி சொல்லியிருக்கலாமே” என்று கணவரை நக்கலடித்துவிட்டு கண்ணம்மாவைக் காலையுணவைத் தயார் செய்யும் படி கட்டளையிடச் சென்றார்.

“பாட்டி தானே! சொன்னா சொல்லிட்டுப் போகுது ஆர்.கே… பட் இதுக்காகல்லாம் நானும் மாறமாட்டேன்… நீங்களும் மாறக்கூடாது” என்று சொன்ன அஸ்மிதா

“இஷி! இன்னைக்கு வீட்டுக்கு வர்றப்போ ஆர்.கேக்கு பிடிச்ச பாதுஷாவை வாங்கிட்டு வர்றோம்… சரியா?” என்று இஷானியிடம் கேட்க

“டன் அஸ்மி” என்று பெருவிரல் உயர்த்திக் காட்டினாள் இஷானி.

அப்போது “இன்னும் ரெடியாகலையா ரெண்டு பேரும்?” என்ற சஞ்சீவினியின் சத்தம் கேட்கவும்

“இதோ கிளம்பிட்டோம்மா” என்று பதறிய இஷானி அஸ்மிதாவை இழுத்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினாள்.

பேத்திகள் இருவரும் புள்ளிமானாய்த் துள்ளி ஓடுவதைக் கண்டு புன்னகைத்த ராஜகோபாலன் மீண்டும் விட்ட இடத்திலிருந்து செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தார்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛