🌊 அலை 30 🌊

உன் உதிரம் கண்டு

இதயம் பதறிய அக்கணம்

நீ தான் என்னவள் என்று

கண்டுகொண்டேனடி!

ஸ்ரீதர் வழக்கம் போல கிளம்பியதும் ஓய்ந்திருந்த ரேவதி தனது காதில் அணிந்திருந்த பழைய தோடுகளை இன்று மாற்றிவிடலாம் என்று எண்ணியவர் தனியே செல்ல தயங்கியவராய் ஸ்ரீரஞ்சனியின் அன்னை பார்வதியை போனில் அழைத்தார்.

மதுரவாணியின் நிச்சயத்துக்குப் பின்னர் ரேவதிக்கும் பார்வதிக்கும் இடையே அழகிய நட்பு மலர்ந்து விட்டது. தங்களின் புத்திரச் செல்வங்களுக்கு மணமுடிக்கும் எண்ணத்தில் இருந்த இருவருமே அது பற்றி அவர்களிடம் இன்று வரை மூச்சு கூட விடவில்லை என்பது வேறு விசயம்!

ரேவதி அழைத்ததும் அழைப்பை ஏற்றவர் “சொல்லுங்க அண்ணி! என்ன விசயம்? ஸ்ரீ தம்பி வேலைக்குப் போயாச்சா?” என்று உரையாட ஆரம்பிக்க

“ஆமா அண்ணி! இப்போ தான் கிளம்புனான்… நான் காதுல போட்டிருந்த தோடு ரொம்ப பழசாயிடுச்சு அண்ணி! அதான் இன்னைக்குக் கடைக்குப் போய் மாத்திக்கலாம்னு நினைச்சேன்… தனியா போக சங்கடமா இருக்கு… நீங்களும் வந்திங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்” என்றார் ரேவதி தயக்கத்துடன்.

கணவரின் மறைவுக்குப் பின்னர் தனியே எங்கேயும் செல்லும் பழக்கம் அவருக்கு இல்லை. அன்றும் சரி; இன்றும் சரி அவரது மைந்தனின் துணையோடு தான் அவர் எங்கும் செல்வது வழக்கம்! அதனால் தான் இம்முறை பார்வதியைத் துணைக்கு அழைத்தார் ரேவதி.

“நீங்க வானு சொன்னா வரப்போறேன்… அட அண்ணி இப்போ தான் எனக்கும் நினைவு வருது! நான் ரஞ்சிக்கு ஒரு ஆரம் வாங்கிருந்தேன்… அவளைக் கேக்காம வாங்கிட்டேன்… அந்த டிசைன் அவளுக்குப் பிடிக்கலனு சொல்லி இன்னைக்கு வரைக்கும் அதைத் தொட்டுக் கூட பாக்க மாட்றா இந்தப் பொண்ணு! பேசாம அவளையும் கடைக்கு வரச் சொல்லிடுறேன்… உங்களோட தோடை மாத்திட்டு அப்பிடியே அவளுக்குப் பிடிச்ச ஆரத்தை வாங்கிடலாம்… என்ன சொல்லுறிங்க?”

“நீங்க சொன்னா அப்பீலே கிடையாது அண்ணி… ரஞ்சியும் வரட்டும்… அவளைப் பாத்து நாளாச்சுல்ல”

இருவரும் பேசி முடிவு செய்துவிட்டு ஸ்ரீரஞ்சனிக்கு அழைத்தவர் அன்று சனி கிழமை என்பதால் அவள் வீட்டில் தானே இருப்பாள் என்ற எண்ணத்துடன் அவளை கோவைக்கு வரச் சொல்ல அவளோ தயங்கினாள்.

“அப்போ சரி! இனிமே நான் வாங்குற நகைய தான் நீ போட்டுக்கணும்… அப்போ வந்து இந்த டிசைன் பிடிக்கலனு ஆரம்பி… நான் மனுசியாவே இருக்க மாட்டேன்”

“மா! கோச்சிக்காத ப்ளீஸ்! நான் வர்றேன்… இல்லனா நீ பாட்டிக் காலத்து பாடாவதி டிசைன்ல வாங்குவ… நானும் மதுவும் வர்றோம்” என்று அவரிடம் வருவதாக ஒப்புக்கொண்டாள்.

அதன் பின்னர் பார்வதி நகைக்கடைக்குச் செல்லத் தயாரானவர் ஸ்ரீரஞ்சனிக்கு வாங்கியிருந்த ஆரத்தைத் தனது கைப்பையில் பத்திரப்படுத்தினார்.

அதே நேரம் அன்று விடுப்பு எடுத்திருந்த மதுரவாணி ஸ்ரீரஞ்சனியை கோவைக்குச் செல்ல வேண்டாமென தடுத்துக் கொண்டிருந்தாள்.

“சொன்னா கேளுடி ரஞ்சி! நம்ம நிலமை சரியானதும் போய்க்கலாம்”

“மது! இன்னும் எத்தனை நாளுக்குடி பயந்துகிட்டே இருக்கணும்? அத விடு… நான் என்ன தனியாவா போறேன்? அதான் நீ என்னோட வர்றேல்ல… அப்புறம் என்னவாம்!”

“ஏய்! சப்போஸ் ஸ்ரீதர் சார் சொல்லுற மாதிரி மறுபடியும் உன்னை அட்டாக் பண்ண டிரை பண்ணுனாங்கனா அவங்க கிட்ட இருந்து உன்னைக் காப்பாத்த நான் என்ன தேவசேனாவா? இங்க பாருடி செல்லம்! உனக்கு என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க? இப்போ நகையை மாத்தணும்னு என்னடி அவசியம்?”

“இன்னைக்கு தங்கத்தோட விலை குறைஞ்சிருக்குதாம்… அதான் அம்மாவும் ரேவதி ஆன்ட்டியும் ஜூவல்லரிக்குப் போறாங்க… மறுபடி இப்பிடி குறையுமானு தெரியாதுடி… சோ நம்ம ரெண்டு பேரும் போயிட்டுச் சத்தம் காட்டாம திரும்பி வந்துடுவோம்”

மதுரவாணியால் ஸ்ரீரஞ்சனியைத் தடுக்க முடியவில்லை. அதே நேரம் எத்தனை நாளுக்குத் தான் புலி வருது கதையாக பயந்து கொண்டே இருப்பது! எனவே அவளும் இம்முறை துணிந்தவளாய் ஸ்ரீரஞ்சனியுடன் கோயம்புத்தூருக்குச் செல்லத் தயாரானாள்.

இருவரும் சங்கவியிடம் சொல்லிக் கொண்டு அவளது காரில் கோவை செல்ல முடிவெடுத்தனர். யாழினி ஆயிரம் முறை பத்திரம் கவனம் என அறிவுரை சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தாள்!

ஏனெனில் செல்பவளில் ஒருத்திக்கு நிச்சயம் முடிந்துவிட்டது! இன்னொருத்திக்கு மறைமுகமாகத் திருமணப்பேச்சு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது! இந்நிலையில் இவர்கள் வேறு ஏதேனும் வம்பை விலைக்கு வாங்கி வந்துவிட்டால் போன நெஞ்சுவலி தனக்கும் தோழிக்கும் திரும்ப வந்தாலும் வந்துவிடும்!

அதோடு மதுரவாணியின் நிச்சயத்துக்கு வந்தவர்கள் வேறு இரு பெண்களின் அழகிலும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டு வைக்க ஊர்க்கண் அனைத்துமே மதுரவாணி மற்றும் ஸ்ரீரஞ்சனியின் மீது தான்! அழகம்மை கூட திருஷ்டி கழித்து விட்டு “எல்லாரும் கண்ணும் நம்ம வீட்டு பொண்ணுங்க மேல தான்! மூக்கும் முழியுமா இருக்கிறதோட சூட்டிகையா வேற இருக்கிறதால இன்னைக்கு என் பேத்திங்களுக்கு கோடிக் கண்ணு பட்டிருக்கும்” என்று பெருமிதமாய் சொன்னார் தான்!

யாழினிக்கு எப்போதுமே திருஷ்டி விசயத்தில் நம்பிக்கை உண்டு. எனவே தான் அவர்களில் யாருடைய கண்ணாவது பலித்து இந்தப் பெண்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்துவிடுமோ என்று தயங்கினாள் அவள். எனவே தான் பக்கம் பக்கமாக அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தாள்.

அவர்களும் சில மணி நேர பிரயாணத்துக்குப் பிறகு கோவை ஒப்பனக்கார வீதியை அடைந்தனர். அங்கே உள்ள நகைக்கடையில் தான் ஸ்ரீரஞ்சனியின் வீட்டினர் காலம் காலமாக நகை வாங்குவது வழக்கம்!

அங்கே காரை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு அந்த நான்கு மாடிகள் கொண்ட நகைமாளிகைக்குள் நுழைந்த போது மதுரவாணிக்கு மதுசூதனனிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது.

“ஹலோ” என்றபடி ஸ்ரீரஞ்சனியுடன் கடைக்குள் நுழைந்தவள் அவனுடன் பேசியபடியே ஒவ்வொரு ஆபரணப்பிரிவையும் பார்வையிட்டபடி நடந்தாள்.

“உன்னோட பேக்ரவுண்ட்ல ஏன் சத்தமா இருக்கு வாணி? நீ வீட்டுல தானே இருக்க?”

“இல்ல மது! நானும் ரஞ்சியும் ஜூவல்லரிக்கு வந்திருக்கோம்”

“ஓ! இப்போவே நகை வாங்குறதுக்கு என்ன அவசரம்? கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வருசம் இருக்கே?”

“அஹான்! நகைக்கடைக்கு வந்திருக்கேனு தான் சொன்னேன்… ஏனக்கு நகை வாங்க வந்திருக்கேனு சொல்லவே இல்லயே!”

“என்னடி குழப்புற? நகைக்கடைக்கு நகை வாங்க வராம புடவை வாங்கவா வருவ? ரொம்ப புத்திசாலினு நினைப்பு”

அவன் கேலி செய்யவும் சத்தமாகச் சிரிப்பது போல நடித்தவள் “நீ சொன்ன ஜோக்குக்கு நிஜமாவே சிரிக்கணும்னு ஆசையா தான் இருக்கு… ஆனா என்ன பண்ணுறது? உன் ஜோக் அவ்ளோ மொக்கை! சிரிப்பே வரல” என்று சொல்லவும் மதுசூதனன் அவளது வார்த்தைஜாலத்தையும் கேலியையும் ரசித்தவன்

“சரிம்மா! நீங்க யாருக்கு வேணும்னாலும் வாங்கிக்கோங்க… ரொம்ப சந்தோசம்! சீக்கிரமா வந்த வேலைய முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பிப் போ… அண்ணியும் பசங்களும் வந்திருக்காங்களா என்ன?” என்று கேட்டான்.

“இன்னைக்கு குட்டீசுக்கு ஸ்கூல்… சோ அவங்க வரல… யாழிக்காவும் கவிக்காவும் கடைய போட்டுட்டு கோயம்புத்தூர் வரைக்கும் வர முடியாதுல்ல! அதான் நானும் ரஞ்சியும் மட்டும் வந்திருக்கோம்”

அவள் சொல்லி முடிக்கவும் மறுமுனையில் நிசப்தம் நிலவியது. பின்னர் மதுசூதனன் “என்னது? கோயம்புத்தூரா? மது உண்மைய சொல்லு! நீயும் ரஞ்சியும் எங்க இருக்கிங்க?” என்று பரபரப்பாக கேட்க

“நானும் ரஞ்சியும் ஒப்பனக்காரவீதில இருக்கிற எஸ்.வீ.கே ஜூவல்லரில இருக்கோம்” என்ற மதுரவாணி அங்கே தங்களுக்காக காத்திருந்த ரேவதியையும் பார்வதியையும் கண்டுவிட்டாள்.

ஸ்ரீரஞ்சனியிடம் அவர்களைச் சுட்டிக் காட்டியவள் போனில் மதுசூதனனிடம் “என்னாச்சு மது? ஏன் சைலண்ட் ஆயிட்ட?” என்று கேட்டது தான் தாமதம் அவன் வெடிக்க ஆரம்பித்தான்.

“ஏய் உனக்கு அறிவு இருக்காடி? யாரைக் கேட்டு நீ கோயம்புத்தூருக்கு ரஞ்சிய கூட்டிட்டு வந்த? நீ இப்போ இருக்கிறது யாரோட கடை தெரியுமா? அது அந்தாளு ஸ்ரீவத்சனோட கடை… அவளை வச்சு ஸ்ரீதர் சாரை பழி வாங்கணும்னு அந்தாளு பிளான் பண்ணுறாரு… நீங்களாவே போய் எங்களை கொன்னுடுங்கனு அவரு முன்னாடி போய் நின்னுட்டிருக்கிங்க… ஒழுங்கா இப்போவே ரஞ்சிய கூட்டிட்டு இங்க இருந்து கிளம்பிடு”

மதுரவாணி அவன் சொன்ன அனைத்தையும் கேட்டு முதலில் அதிர்ந்தாலும் பின்னர் சுதாரித்தவள் “மது ஜஸ்ட் அரை மணி நேரம் தான்! ஜூவல்ஸ் வாங்கிட்டுக் கிளம்பிடுவோம்” என்று அவனிடம் பொறுமையாய் பேசவும் அவன் இன்னும் அதிகமாக கோபம் கொண்டான்.

“வாட்? ஆர் யூ மேட்? உயிர் முக்கியமா? நகை முக்கியமாடி? ஒழுங்கா கிளம்புங்க”

அவன் கட்டளையிட்ட தொனி பிடிக்காது போகவே “டோண்ட் ஆர்டர் மீ மிஸ்டர் மதுசூதனன்… உன் லிமிட் என்னவோ அதுல இருந்துக்கோ… நானும் என் ஃப்ரெண்டும் எங்க வரணும், எங்க போகணும், என்ன பண்ணனும் இதெல்லாம் நீ எனக்குச் சொல்லிக் குடுக்க வேண்டாம்… ஜஸ்ட் ஷட்டப்” என்று பதிலுக்குச் சீறிவிட்டுத் தூரத்தில் ரேவதியுடனும் பார்வதியுடனும் நகைத்தேர்வில் பிசியாய் இருந்த ஸ்ரீரஞ்சனியை நோக்கி நடைபோட்டாள்.

இந்தப் பிரச்சனை எதுவும் இது வரை பெரியவர்களுக்குத் தெரியாது. இப்போது மதுசூதனன் சொல்வது போல உடனடியாக இங்கிருந்து கிளம்பினால் கட்டாயம் இரு அன்னையருக்கும் சந்தேகம் வரும்; இதனால் வீணாக அவர்கள் கவலைப்படுவர். எதற்கு இவ்வளவு சிரமம்? அரைமணி நேரத்தில் நகை எடுத்துவிட்டுக் கிளம்பினால் போயிற்று!

மதுரவாணி இவ்வாறு எண்ணமிட்டவள் மதுசூதனனின் பேச்சுத்தொனியில் எரிச்சலுற்றவளாய் பெரியவர்களிடம் சென்றாள்.

ரேவதி தோடு மாற்றியவர் மதுரவாணியைக் கண்டதும் “மதுராவுக்கு எதாச்சும் வாங்குவோமா? உனக்கு என்ன வேணும்னு சொல்லு” என்று கேட்க

“ஆன்ட்டி என்னமோ கடைக்குக் கூட்டிட்டு வந்து சாக்லேட்ட காட்டி என்ன வேணும்னு கேளுனு சொல்லுற மாதிரி கேக்குறிங்க? இது ஜூவல்லரி… இங்க இருக்கிறதுலாம் தங்கம்… இன்னைக்கு கிராம் என்ன விலை விக்குது? எனக்குலாம் தங்கம் போடுறதுல இஷ்டமில்ல ஆன்ட்டி” என்று கேலி பேச அதைக் கேட்ட பார்வதி அவளைக் கண்டித்தார்.

“தங்கம் மகாலெட்சுமியோட அம்சம்… வயசுப்பொண்ணு அதை வேண்டாம்னு சொல்லக் கூடாது… வந்ததுக்கு ஒரு மூக்குத்தியாச்சும் வாங்கிட்டுப் போ”

“என்னது? மூக்குத்தியா? அத வச்சு நான் என்ன பண்ணுறது?”

“கல்யாணத்துக்கு முன்னாடி மூக்குத்தி போடணும்ல… அப்போவாச்சும் மூக்கு மேல வர்ற கோவம் கொஞ்சம் குறையுதானு பாப்போம்”

“ஐயே! நான் மூக்கு குத்திக்கவே மாட்டேன்… பாக்குறதுக்கு ஆன்ட்டி மாதிரி இருக்கும்… வேணும்னா உங்க பொண்ணுக்குக் குத்தி அழகு பாருங்க அத்த”

ஆரத்தைக் கழுத்தில் வைத்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீரஞ்சனி சட்டென்று திரும்பி அவளை முறைத்தாள்.

“ஏன்டி என்னை மாட்டி விடுற?” என்ற கேள்வி தொக்கிய பார்வையுடன் அவள் மீண்டும் ஆரத்தில் கண் பதிக்க விற்பனைப்பெண் வெவ்வேறு டிசைன்களை அவளுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்.

இப்படியே நேரம் கழிய ஒரு வழியாக மதுரவாணி சொன்னது போல அரைமணி நேரத்தில் எல்லாவற்றுக்கும் பில் போட்டுவிட்டுப் பணம் செலுத்தி பெரியவர்களுடன் வெளியேறினர் இருவரும்.

அன்னையையும் ரேவதியையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு டாட்டா காட்டிய ஸ்ரீரஞ்சனி மதுரவாணியை நோக்கி வந்த நேரம் எங்கிருந்தோ வந்த தடியன்கள் இருவர் ஸ்ரீரஞ்சனியின் முன்னே நிற்க அவள் திகைத்துப் போய் பின்னடைந்தாள்.

மதுரவாணி ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று சுதாரித்து காரை விட்டு இறங்கிய அந்நொடி அந்த இருவரில் ஒருவன் வைத்திருந்த கட்டையால் ஸ்ரீரஞ்சனியைத் தாக்கச் செல்ல அவள் பதறிப் போய் திரும்பியதில் அவளின் பக்கவாட்டு நெற்றியில் அந்தக் கட்டை பலமாய் தாக்கவும் உதிரம் கொட்டத் தொடங்கியது.

அவன் அடுத்து கட்டையை ஓங்கிய நிமிடம் ஸ்ரீரஞ்சனி சரியத் தொடங்கவும் மதுரவாணி பதறிப் போய் அவளருகில் ஓடி வர அதற்குள் எங்கிருந்தோ வந்த ஸ்ரீதர் “ரஞ்சனி” என்ற கூவலுடன் அவள் தரையில் விழுவதற்குள் தன் கரத்தில் தாங்கிக் கொண்டான்.

அவன் வருவதைக் கண்டதுமே அந்த குண்டர்கள் ஓடிவிட தன் கரங்களில் குருதி வழியும் முகத்துடன் கண் மூடியிருந்தவளை

“ரஞ்சனி! ரஞ்சனி கண்ணைத் திறந்து பாரு” என்று அவள் கன்னத்தில் தொட்டு உலுக்க அவளோ விழி திறவாமல் ஆழ்ந்த மயக்கத்துக்குப் போய்விட்டாள்!

மதுரவாணி கண்ணீரும் கம்பலையுமாக அவளருகே வர எப்போது தான் வந்தானோ தெரியவில்லை; ஆனால் அவளை எரிக்கும் கோபத்துடன் கண்ணில் எரிமலையுடன் நின்றிருந்தான் மதுசூதனன்.

மதுரவாணியுடன் பேசிய அடுத்த நொடியே ஸ்ரீதரைத் தொடர்பு கொள்ள முயன்றான் மதுசூதனன். அவன் உயரதிகாரிகளுடன் மீட்டிங்கில் இருக்க நேரே அவன் அலுவலகத்துக்குச் சென்றவன் மீட்டிங் முடியும் வரை காத்திருந்து ஸ்ரீதரைச் சந்தித்து விசயத்தைச் சொல்லிவிட்டான்.

இருவரும் கிளம்பி இங்கே வந்து பார்த்தால் ஸ்ரீரஞ்சனியை யாரோ இரு தடியர்கள் தடுத்து நிறுத்தி கட்டையால் தாக்க ஸ்ரீதர் உயிரே பிரிவது போல உணர்ந்தவன் அவள் கீழே விழும் முன்னர் கையில் தாங்கினான்.

மதுரவாணி அழுகையுடன் ஓடிவர இவளிடம் எச்சரித்தும் இவள் தன் பேச்சைக் கண்டுகொள்ளாமல் விட்டதன் பலன் தானே இப்போது ஸ்ரீரஞ்சனி உதிரம் கொட்ட விழுந்து கிடப்பதற்கு காரணம் என்ற கோபம் அவனது மூன்றாவது கண்ணைத் திறந்துவிட்டது.

அவளை உஷ்ணம் கக்கும் விழிகளாய் சுட்டுப் பொசுக்கியபடியே ஸ்ரீதரிடம் குனிந்தவன் “சார்! உடனே ரஞ்சிய ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போவோம்.. இது எமோசனல் ஆகுறதுக்கான நேரம் இல்ல” என்று பதற்றமாய் உரைக்க அவர்கள் வந்த காரை காட்டிய மதுரவாணியுடன் ஸ்ரீரஞ்சனியைத் தூக்கிக் கொண்டு ஸ்ரீதரும் மதுசூதனனும் விரைந்தனர்.

மதுசூதனன் காரின் சாவியைக் கேட்க மதுரவாணி மௌனமாய் நீட்டியவள் அவனுடன் முன்னே அமர்ந்து கொள்ள ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனியுடன் பின்னே அமர்ந்து கொண்டான்.

மதுசூதனன் வேகமாய் நகரின் போக்குவரத்து நெரிச்சலைச் சமாளித்து ஓட்டியவன் காரை மருத்துவமனை வாயிலில் நிறுத்தினான். ஸ்ரீதர் வேகமாக ஸ்ரீரஞ்சனியைக் கையில் தாங்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.

அதே நேரம் மதுரவாணியிடம் கார் சாவியைக் கொடுத்தவன் “இனிமே நான் என்னோட லிமிட்ல இருக்க டிரை பண்ணுறேன்” என்று இறுகிப் போன குரலில் உரைத்துவிட்டு உள்ளே சென்றான்.

அவனது குரலில் இருந்த விலகலில் கலங்கி போனவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.

உள்ளே ஸ்ரீரஞ்சனிக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. மதுரவாணி தலை குனிந்தபடி நிற்க ஸ்ரீதர் தவித்த குரலில்

“நான் இங்க வர வேண்டாம்னு ஏன் சொன்னேனு இப்போ புரியுதா? அந்தாளோட ஊருக்குள்ள நுழையுறதே தப்புனு சொன்னேன்… ஆனா நீங்க அந்தாளோட ஜூவல்லரிக்குள்ளவே போயிருக்கிங்க… ஏன் சொன்னா புரிஞ்சுக்கவே மாட்றிங்க?” என்று கேட்ட போதே மதுசூதனன் அவனை அணைத்துக் கொண்டான்.

“ஒன்னும் ஆகாது ஸ்ரீதர் சார்… நீங்க வொரி பண்ணிக்காதிங்க… இனியாச்சும் சிலருக்கு பொறுப்புனா என்னனு புரியட்டும்” என்று சொன்னபடி மதுரவாணியை உறுத்து விழித்தான்.

மதுரவாணியால் அவனது கேள்விக்குப் பதிலளிக்க இயலவில்லை. அவளது எண்ணம் முழுவதும் ஸ்ரீரஞ்சனிக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயம் மட்டுமே நிறைந்திருந்தது.

ஒரு வழியாக மருத்துவர் வெளியே வந்து “அவங்களுக்குப் பயப்படுற மாதிரி எதுவும் இல்ல… கொஞ்சம் ப்ளட் லாஸ் ஆயிருக்கு… வேற ஒன்னும் இல்ல” என்று சொல்லவும் மூவருக்கும் பயம் தெளிந்தது.

உள்ளே சென்றவர்களுக்கு ஸ்ரீரஞ்சனியை அப்படி சோர்ந்து போனவளாய் காண வருத்தமாய் இருந்தது.

ஸ்ரீதர் வேகமாக அவளருகில் சென்றவன் அவளது நெற்றியில் போட்டிருந்த பேண்டேஜூடன் கூடிய கட்டை தடவிக் கொடுத்தான். அதற்குள் அவள் முகம் சுளிக்க கரத்தை விலக்கிக் கொண்டான்.

ஸ்ரீரஞ்சனி மெதுவாய் விழி திறந்தவள் தன்னெதிரே அமர்ந்திருந்த ஸ்ரீதரைப் பார்த்தவள் திடீரென தன்னைத் தாக்கியவர்களின் முகம் நினைவுக்கு வர பயந்தவளாய் அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளின் உடல் மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் வெடவெடவென நடுங்க ஸ்ரீதர் அவளது சிகையைக் கோதி கொடுத்தபடி

“ஒன்னுமில்ல ரஞ்சனி! யூ ஆர் சேஃப் நவ்… நான் தான் இருக்கேன்ல… யாரும் உன்னை எதுவுமே பண்ணமுடியாது… என்னைத் தாண்டி தான் யாரும் உன்னை இனிமே உன் கிட்ட வரணும்…” என்றபடி அவளை அணைத்துக்  கொண்டான்.

“எல்லா தப்பும் என் மேல் தான் ஸ்ரீதர்.. நீங்களும் மதுவும் சொன்னப்போ எனக்கு எதுவும் புரியல… நான் உங்கள எதிர்த்துப் பேசுனேன்ல… அதுக்கு எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்.. அவங்க முன்னாடி வந்து நின்னதும் இனிமே நான் உயிரோட இருக்கவே முடியாதுனு பயந்துட்டேன் ஸ்ரீ.. ஐ அம் சாரி” என்று விசும்பலுடன் அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் பெருக்கினாள் அவள்.

அவளை பார்த்தபடி நின்றிருந்த மதுரவாணியும் கிட்டத்தட்ட அதிர்ந்திருக்க மதுசூதனனின் பேச்சு வேறு அவளை பாதித்திருந்தது.

அவளின் நீர் நிறைந்த விழிகளில் ஸ்ரீதரின் தோளின் சாய்ந்தபடி இருந்த ஸ்ரீரஞ்சனியின் முகமும் மதுசூதனனின் இறுகிப் போன முகமும் விழுந்தது.

தங்களுக்குள் என்ன நடக்கிறது? தங்கள் உறவில் அடுத்து என்ன என்ற கேள்விக்கெல்லாம் இத்தனை நாட்கள் பதில் தெரிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்களாய் இருந்த ஒரு ஜோடிக்கு ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் அக்கறையோடு கூடிய நேசத்தை இச்சம்பவம் புரிய வைத்துவிட்டது.

அதே சமயம் கண்மூடித்தனமான காதலைக் கொட்டிய ஒருவனைத் தனது வார்த்தைகளால் விலக்கி நிறுத்தியவளின் செய்கைக்கும் அதனால் உண்டாகப் போகும் பிரச்சனைகளுக்கும் இச்சம்பவம் ஒரு காரணமாய் அமைந்தது!

அலை வீசும்🌊🌊🌊